Sahithamurugan
சிறுகதை வரிசை எண்
# 3
படைப்பு தமிழ்ச் சங்கம் சிறுகதைப் போட்டி
ஐயனார்
அந்த பண்ணை வீட்டின் தாழ்வாரத்தில் கூடியிருந்தது அந்தக் கூட்டம்... வீரண்ணன் விழிகள் கீழ்வானமாய் சிவந்து கிடந்தது. சுற்றிலும் அவர் அடியாட்கள். வீரண்ணன் அந்த ஊரின் பெரிய தலைக்கட்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை புஞ்சைக்கு அதிபதி. அவர் பேச்சிற்கு ஊரே கட்டுப்படும். கூட்டத்தின் நடுவே அவர் முன் அந்தச் சிறுவன் நின்றிருந்தான். அவனிடம் கேட்டார் வீரண்ணன், “நீ பார்த்தது உண்மையா?”
“ஆமாங்கய்யா கல்யாணி அக்கா ஒரு ஆள் பைக் பின்னாடி உக்கார்ந்து போயிட்டிருந்தாங்க..”
அப்பொழுது வீரண்ணனின் அடியாட்களின் தலைவன் செல்லப்பாண்டி சிறுவன் தோள் பற்றிக் கேட்டான்.
“எலேய் சரியாச் சொல்லு நீ பார்த்தது ஐயாவோட மக கல்யாணி அம்மவைத்தானா?”
“சாமி சத்தியமாண்ணே நான் பார்த்தது கல்யாணி அக்காவைத்தான்… நான் என்ன கல்யாணி அக்காவை புதுசாவா பார்க்கறேன்”
கொதித்து வெடிக்கும் நிலைக்கு வந்திருந்தார் வீரண்ணன், காலையிலிருந்து மகளைக் காணவில்லை. சொல்லாமல் வெளியே செல்லும் பழக்கம் இல்லாதவள் கல்யாணி அதனால் அவரின் அடியாடகள் படையை விட்டு தேடப் பணித்திருந்தார் வீரண்ணன். அந்த நிலையில் தான் ஆடு மேய்க்கும் இந்தச் சிறுவன் தகவலைக் கூறினான் அவனை இழுத்துக் கொண்டு வந்து வீரண்ணன் முன் நிறுத்தியிருந்தது அவர் அடியாள் கும்பல்.
‘ஒற்றை மகள் என்று செல்லம் கொடுத்து வளர்த்தால் கழுதை ஊர் மேயப் போயிட்டுதா’ மனதில் கறுவியவர்,
“லேய் செல்லப்பாண்டி கெளம்பு காதும் காதும் வச்ச மாதிரி இருக்கணும், நான் பெத்த நாய் இன்னும் வீடு வரலை, எப்படியாவது அந்த ஓடு காலியை தூக்கிட்டு, அவளை இழுத்துட்டுப் போனானே அவன் தலையை கொண்டு வா, ஒனக்கு பத்து ஏக்கரை எழுதி வைக்கறேன்..”
“ஐயா எனக்கு எதுவும் தேவை இல்லை, இது நம்ம ஜாதிக்கு வந்த பிரச்சனை, நானும் இந்த ஜாதியில பொறந்தவந்தான். அவன் தலையை கொண்டு வந்து ஒங்க காலுல வைக்கிறேன்..” என்றவன் வெறி தலைக்கேறி அங்கிருந்து கிளம்பினான்..
என்னதான் பொத்தி வைத்தாலும் புகையை வலைக் கூண்டில் அடைக்க முடியுமா? வீரண்ணன் மகள் ஓடிப் போனது ஊர் முழுக்க தெரிந்து போனது.. அவமானத்தில் கூனிக்குறுகி அமர்ந்திருந்தார் வீரண்ணன்.. ஊரில் ஐயனார் கோவில் திருவிழா நேரம்.. ஊர் உற்சாகத்தில் திளைத்திருந்த நேரம் அவர்கள் உற்சாகத்தை வடிய வைத்திருந்தது கல்யாணி ஓடிப்போன சமாச்சாரம்.. ஜாதி வெறியில் ஊறிப் போன கிராமம் முழுவதும் அப்பொழுது ஐயனாரை வேண்டியது இதுதான்.. வேறுஜாதிப் பையனாக இல்லாமல் அவர்கள் ஜாதிப் பையன் விரண்ணன் மகளை இழுத்துக் கொண்டு ஓடியிருக்க வேண்டுமென்று.
கல்யாணி பைக்கில் ஏறிச் சென்றதை பார்த்த சிறுவனை மீண்டும் தனியே விசாரித்துக் கொண்டிருந்தான் செல்லப்பாண்டி..
“எலேய் அந்த ஆளு எப்படி இருந்தான்?”
“எந்த ஆளுண்ணே?”
“அதான்ல கல்யாணி அக்காவை பைக்குல கூட்டிட்டுப் போனவன்?”
“அண்ணே ஆளு கறுப்பா, நல்ல ஒசரமா இருந்தாரு, மீசையை அழகா திருக்கி விட்டுருந்தாரு..”
“எந்தப் பக்கமா போனாங்க?”
பையன் திசையைக் காட்டினான்.. அடியாட்களுடன் அந்த பழைய அம்பாசிடரில் ஏறி சிறுவன் காண்பித்த திசையில் கிளம்பினான் செல்லப்பாண்டி. தூரத்தில் நின்ற ஐயனார் சிலை கிளம்பும் அவர்களைப் பார்த்து உக்கிரமாய் முறைத்தது..
அம்பாசிடர் ஐயனார் சிலை இருந்த இடத்தை நெருங்கியது. ஐயனார் சிலைக்கு சற்று தொலைவில் அம்பாசிடரை நிறுத்தினான் செல்லப்பாண்டி.. திருவிழாவின் சுவாரஸ்யம் வடிந்து போயிருந்தது.. ஐயனாருக்கு வெட்டுப் பட காத்திருந்த கிடாக்கள் தற்காலிகமாக உயிர் பிழைத்து தழைகளை தின்று கொண்டிருந்தது. ஊரின் தலைக்கட்டு வீரண்ணன் வீட்டில் பிரச்சனை என்றதும் திருவிழாவின் உற்சாகம் அங்கே துளியும் காணப்படவில்லை.. தங்கள் ஜாதிக்கு ஒரு பிரச்சனை என்றதும் ஐயனாரை மறந்து விட்டு ஊர்ப் பண்ணையாரை பற்றியே சிந்திக்க ஆரம்பித்திருந்தது அந்த ஊர் ஜனம்.. ஐயனார் ‘தேமே’ என்று நின்றிருந்தார் அருவாளுடன்.
ஐயனார் சிலையின் காலருகே நின்றான் செல்லப்பாண்டி.. கையெடுத்து வணங்கினான் ஐயனாரை.. வாய்விட்டு சூளுரைத்தான்..
“ஐயனாரே ஒம்ம சக்தி உண்மையிலேயே பெருசுன்னா எங்க ஐயா பொண்ணை கறைபடாம எங்ககிட்ட ஒப்படையும், அவனை இழுத்துட்டு போனவன் கழுத்தை ஆட்டுக்குப் பதிலா ஒமக்குப் படைக்கிறேன், அப்புறம் தான் ஒமக்கு ஆடு கோழி எல்லாம் பலி குடுப்போம். நீர் உண்மையிலேயே சக்திவாஞ்ச சாமின்னா இதை செஞ்சு முடியும். இதை செஞ்சு முடிச்சாத்தான் ஒமக்கு இந்த தடவை கொடை சிறப்பா முடியும்..” ஐயனாரை வேண்டி விட்டு.. இல்லை இல்லை ஐயனாரை மிரட்டிவிட்டுக் கிளம்பினான் செல்லப்பாண்டி..
ஒவ்வொரு அங்குலத்தையும் விசாரித்தான் செல்லப்பாண்டி, முக்குரோட்டில் இருந்த பெட்டிக்கடைக்காரரை விசாரித்தான்..
“காளியண்ணே, வீரண்ணன் மொதலாளி பொண்ணு இந்தப் பக்கம் ஒராளோட பைக்குல போதைப் பார்த்தீங்களா?”
“ஆமாண்டே செல்லப்பாண்டி, புல்லட் பைக்குல போச்சுது.. இங்க எறங்கி நம்ம கடையில கலர் குடிச்சிட்டுப் போச்சுதுங்க..”
“கூட இருந்தவனைப் பார்த்தீங்களா?”
“ஆமாம் பார்த்தேன்.. ஆறடிக்கு மேல ஒசரம், கறுப்பா நல்ல மீசை வச்சிட்டு ஒருத்தன் வந்து கலரு வாங்கினான். நானும் பண்ணையாருக்கு ஓறவுப் பையன்னு நெனச்சேன். குடிச்ச கலருக்கு காசு குடுத்துட்டு மிச்ச சில்லரை கூட வாங்கலை அவங்க..”
“நீங்க அவுங்களைப் பத்தி விசாரிச்சீங்களா?”
“ஆமாம் பண்ணையார் பொண்ணு கூட இருக்கறதால விசாரிச்சேன், எங்க இருந்து வர்றீங்கன்னு?” கேட்டேன்.. பரபரப்பானான் செல்லப்பாண்டி..
“சொல்லுண்ணே.. சொல்லுண்ணே..”
“டவுனுல ஏதோ காந்தி நகர்ல குடியிருக்கறாராம்..”
“அந்தப் பொண்ணு எதாவது பேசிச்சா?”
“எங்கிட்ட ஒண்ணும் பேசலை, ஆனா அவங்ககிட்ட சிரிச்சு சிரிச்சு பேசிச்சு..”
‘டவுண், காந்தி நகர் இது போதும், இன்னிக்கு வீடு புகுந்து ஒன் கழுத்தை அறுத்து ஐயனாருக்கு படைச்சிடுறேன்’ மனதிற்குள் கறுவியவன் அடியாட்களுடன் கிளம்பினான் அங்கிருந்து..
காந்தி நகர் குடியிருப்பு சற்று வசதியாகவே இருந்தது.. ஆள் அடையாளம் சொல்லிச் சொல்லி விசாரித்து அந்த வீட்டின் முன் நின்று நோட்டம்விட்டான் .. சிறிய பங்களா டைப்பில் இருந்தது அந்த வீடு. அகலமான கேட், உள்ளே நாய் இருக்கும் அறிகுறி எதுவும் இல்லை.. கேட்டைத் தள்ளித் திறந்து முதலில் செல்லப்பாண்டி உள்ளே சென்றான்.. சிறிய புல்தரை கடந்து போர்டிக்கோ.. அதில் கம்பீரமாய் நின்றது அந்த புல்லட், அருகே ஒரு மாருதி சியாஸ். ஆள் வசதியானவந்தான் போலிருக்கு.. சட்டையின் பின்புறம் அருவாளைத் தொட்டுப் பார்த்துக் கொண்டவன், தன் சகாக்களுக்கு கையால் சமிக்ஷை கொடுக்க அவர்களும் உள்ளே வந்தனர்..
காலிங் பெல்லில் கை வைத்துத் தேய்க்க, வீரண்ணன் மகள் கல்யாணி வந்து கதவைத் திறந்து நின்றாள்.. கழுத்தில் புதுத்தாலி, வகிட்டில் குங்குமம்.. நிலைகுலைந்து நிமிர்ந்தவன் கண்கள் நிலைகுத்தியது.. எதிரே அந்த ஐயனாரே நிமிர்ந்து நின்றார்.. கையில் அருவாள் இல்லை, ஆனால் பளபளக்கும் கறுப்பு நிறத்தில் கையில் இருந்தது அந்த பிஸ்டல்.. அது செல்லப்பாண்டியை முறைத்துக் கொண்டிருந்தது.. ஆனால் அந்த ஐயனாரின் முகத்தில் புன்னகை..
“வா நண்பா ஏன் அப்படி தெகைச்சுப் போய் நின்னுட்ட? நீ எப்ப வருவன்னு தான் காத்துக்கிட்டி இருந்தேன். ஊருல எல்லாரும் சவுக்கியமா? ஊருல ஐயனார் கோவில் கொடை எல்லாம் எப்படிப் போகுது?” சிறு புன்னகையுடன் அவன் வினவவும் பேச்செழாமல் நின்றான் செல்லப்பாண்டி. செல்லப்பாண்டி பதில் கூறாததால் அவன் தொடர்ந்தான். “அருவாளோட வந்ததனால, நான் துப்பாக்கியை நீட்ட வேண்டியதாயிடிச்சு.. ஒக்காரு உன் ஃபிரண்ட்ஸ்களையும் கூப்பிடு”.அவன் மெதுவாக ஆனால் சற்று கடுமையுடன் கூறவும்.
“எலே எல்லாரும் உள்ளே வாங்க”
செல்லப்பாண்டி அழைக்கவும் அனைவரையும் உள்ளே வந்தனர். கூடத்தில் கிடந்த சோபாவில் அனைவரையும் அமரச் சொன்னவன் தன்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டான்.
“என் பேரு கருப்பசாமி.. கருப்பசாமி ஐபிஎஸ்.. அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆப் போலீஸ்..” அனைவர் முகங்களும் திகிலி விழுந்தது.
“எனக்கு இன்னொரு பேரும் உண்டு அது என்கவுண்டர் கருப்பசாமி! இப்பத்தான் திருநெல்வேலியில இருந்து ட்ரான்ஸ்பர் ஆகி வந்தேன்..”
முதுகுத்தண்டு சில்லிட்டது செல்லப்பாண்டிக்கு.. அவன் தொடர்ந்தான்.. “கல்யாணி என் காலேஜ் மேட். நாங்க காலேஜிலேயே பார்த்து பழகுனதால கல்யாணியை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. இது தெரிஞ்ச ஒடனே அவ அப்பா ஆணவக் கொலை செய்ய ஆள் அனுப்புவாருன்னு எனக்குத் தெரியும்!. நீங்க தேடி வரணுங்கறதுக்காகவே ஊருல இருந்தே தடயங்களை விதைச்சுட்டே வந்தேன்.. வேணும்னுதான் முக்கு ரோட்டுக் கடையில கூல்ட்ரிங்க்ஸ் குடிச்சிட்டு அட்ரசும் குடுத்துட்டு வந்தேன்” கூறியவன் குரல் கொடுத்தான் ..
“கல்யாணி அஞ்சு காஃபி”
சிறிது நேரத்தில் கல்யாணி காஃபிக் கோப்பைகளுடன் வந்தாள்..
“எடுத்துக்கங்க.. ஒண்ணும் தீட்டு ஒட்டிக்காது இது ஒங்க சாதிப் பொண்ணு போட்ட காஃபி தான்.. ஒங்க மொதலாளிட்டச் சொல்லுங்க அவரு பொண்ணு சந்தோஷமா இருப்பான்னு.. அவளை நான் நல்லா வச்சு காப்பாத்துவேன்னு… நீங்க உள்ளே வரணுங்கறதுக்காகத்தான் கேட்டுல இருந்த என் நேம்போர்டை எடுத்துட்டு, செண்ட்ரியை வீட்டுக்கு அனுப்பிட்டேன்” சத்தமில்லாமல் காலியானது காஃபிக் கோப்பைகள்.. புறப்பட எத்தனித்தவர்களை கையமர்த்திக் கூறினான்..
“அந்த அருவாள்களை கீழ வச்சிட்டுப் போங்க ..” சத்தமில்லாமல் தரையில் பணிந்தது அந்த ஐந்து அருவாள்களும்..
வீரண்ணன் வீடு.. அவர்கள் முன் நின்றிருந்தான் செல்லப்பாண்டி கூடவே அவர் அடியாட்களும்.
“என்னலே ஆச்சு.. வெறுங்கையோட வந்திருக்கறீங்க?” சிறிது நேரம் செல்லப்பாண்டியிடமிருந்து எந்த வார்த்தையும் புறப்படவில்லை.. அவன் எதோ பரவச நிலையில் இருப்பவன் போல் நின்றிருந்தான். அவன் தோளைத் தொட்டு உலுக்கினார் வீரண்ணன்.. அப்புறமே சுய நினைவுக்கு வந்தான் செல்லப்பாண்டி.
“என்ன மொதலாளி என்ன கேட்டீங்க?”
“ஆங்.. ஒனக்கு கிறுக்குப் புடிச்சிருச்சான்னு கேட்டேன்.. என் பொன்ணைக் கூட்டிட்டுப் போனவன் தலையை கொண்டு வர்றேன்னு புறப்பட்டியே அவன் தலை எங்க? நான் பெத்த ஓடு காலி எங்கல?”
“மொ த லாளி..” திணறினான் செல்லப்பாண்டி
”ஏலேய் எனக்குப் பதிலைச் சொல்லு இல்ல இப்ப உன் தலையை நான் எடுக்கப் போறேன்”
“மொதலாளி உங்க பொண்ணு அந்த ஐயனார் பாதுகாப்புல இருக்கறா?”
“என்னலே உளறுற?”
“ஆமாம் மொதலாளி ஐயனார் பாதுகாப்புல தான் இருக்கறா! ஐயனார் தலையை எடுக்கற அளவுக்கு எனக்கு திராணி இல்லையா..” என்று கூறி முடித்தவன் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான். தன் அடியாள் கூறுவது புரிந்தும் புரியாமலும் திகைத்து நின்றார் வீரண்ணன்..
முற்றும்.
தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
செல் : 9894415671, 9080479369
வி. சகிதாமுருகன்,
4/203-12, சுந்தரம் நகர்,
முத்தையாபுரம், தூத்துக்குடி-628005
செல் : 9894415671, 9080479369
இந்த கதை என்னுடைய சொந்த கற்பனையில் உருவானது, இதுவரை இந்த கதை எந்த அச்சு ஊடகத்திலோ, சமூக வலைதளத்திலோ வெளியாகவில்லை என்று உறுதி அளிக்கிறேன்.
வி.சகிதாமுருகன்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்