logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Aishwarya Ravichandran

சிறுகதை வரிசை எண் # 2


வழுவமைதி அன்புள்ள பெரியப்பாவுக்கு, பிரியமுடன் நேத்ரா எழுதிக்கொள்வது. சிறுவயது முதலாக என்னை நீங்கள் பாராட்டி, சீராட்டி பார்த்துப்பார்த்து வளர்த்துள்ளீர்கள். நீங்கள் எனக்குச் செய்தவற்றை நினைவுகூறும்படி இக்கடிதம் அமையும் என நம்புகிறேன். எனக்கு வயது இருபத்து நான்கு ஆகின்றது. என் பால்ய நினைவுகளை அகக்கண்ணால் புரட்டிப் பார்க்கக்கூடிய ஒவ்வொரு நொடியும் உங்கள் வீட்டிலே எந்த எதிர்பார்ப்பும் இன்றி, கள்ளங்கபடமின்றி வட்டமிட்ட நினைவுகள் தான் வருகின்றது. ஒருமுறை நீங்கள் சபரிமலைக்கு மாலை போட்டுச் சென்றுவிட்டீர்கள். என்னை நீங்கள் விட்டுச்சென்றதனால் ஒரே காய்ச்சல். அம்மாவும், அப்பாவும் எப்போதும் போல வேலை முடித்துத் திரும்ப மணி பத்து முப்பது ஆகியிருந்ததாகப் பெரியம்மா சொன்னாள். நான் ‘ பெரியப்பா என்னய விட்டுட்டு போயிட்டாரு’- என அழுதுகொண்டே இருந்தேன். ‘அட கிறுக்குக்கழுத, ஏண்டி அழுவுற ‘ மூணு நாளுல திரும்பி வந்துடுவாங்க எனக் கூறிய போதும் என் மனம் அதை ஏற்கவில்லை. மீண்டும் மீண்டும் ஒரே அழுகை. பெரியம்மா என் அழுகையைத் தாங்க மாட்டாதவளாய் மூக்கையா தாத்தா வீட்டுக் கதவைத்தட்டி குருசாமிக்குப்(சபரிமலை யாத்திரைக்குத் தலைமை தாங்குபவர்) போனைப்போட்டு பேசுனப்போ, ‘நீங்க அம்மாடி வந்துருவேண்டா…அழுகாம தூங்கணும்னு சொன்ன பின்னாடிதான் நான் தூங்கினேன். இப்போது சிரிப்பாக வருகிறது. காய்ச்சல் கூட நீங்கள் வந்தபின்புதான் சரியானதாக ஞாபகம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் என் வீட்டில் மதியம் கறி சாப்பிட்டுவிட்டு, மூணு மணிக்கு உங்களைப் பார்க்க வருவேன். நீங்கள் எனக்காக உங்களுக்கு வைத்த நல்லி எழும்பை எனக்குக் கொடுப்பதற்காகச் சேமித்து வைத்திருப்பீர்கள். எங்க வீட்டுல கூட அண்ணாக்குத் தான் நல்லி எழும்ப வைப்பாங்க. ஆனால் நீங்கதான் எனக்குனு எடுத்து வைப்பீங்க. அப்போயெல்லாம் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும். நம்ம மேல பாசம் வைக்க இப்படி ஒரு உசுரு இருக்குன்னு. ஒருதடவை எனக்கு மீன் முள் மாட்டிக்கிச்சு. அப்போ சிவா அண்ணா சிரிச்சான்-னு, நீங்க அவனை ”புள்ள அழுவுறப்போ சிரிப்பயாடான்னு” அடிச்சுட்டீங்க. எனக்கு எதுவுமே மறக்கல பெரியப்பா. ஒருநாள் ஒரு கனவு பெரியப்பா. நான் பச்சை கலருல ஜாஸ்மின் துணியில பாவாடை சட்டை போட்டுட்டு தூங்கிக்கிட்டு இருந்தேன். ஏழாவது படிக்கும்போதுன்னு ஞாபகம். நடுராத்திரி. என்னமோ ஊருறாப்ல இருந்துச்சு. ஆனால் தூக்கத்துல கண்ணைத்திறக்க முடியல. ஆனா அது ஊறிக்கிட்டே இருந்துச்சு. திடீர்னு தான் புரிஞ்சுச்சு ”இது விரல் மாதிரி இருக்கே அப்டின்னு”. நான் பேயோன்னு பயதோட கண்ணை மூடிக்கிட்டே பாத்தேன், அது என்ன பண்ணுதுன்னு. அந்த விரல் என்னோட நெஞ்சுல மார்புக்காம்பை வட்டம் போட்டு சொரண்டிப்பாத்துட்டு இருந்தது. ஒரே பயமாயிட்டுது. மெதுவா கண்ணைத் தொறந்துபாத்தேன். அது உங்களோட கை பெரியப்பா. நீங்க என் நெஞ்சை உத்துப் பாத்து நோண்டிக்கிட்டு இருந்தேங்க. அப்போதான் புரிஞ்சுச்சு. அது கனவும் இல்லைன்னு. ஆனா என்னால அப்போதைக்கு அதைப் புரிஞ்சுக்க முடியல. ஏதோ தப்பா இருக்குன்னு குப்புத்து படுத்தேன். அப்போது கூட நீங்க விடல. என்னய மல்லாக்க திருப்ப முயற்சி பண்ணுனீங்க. நான் மறுநாள் சாந்தி டீச்சர்கிட்ட கேட்டேன் ‘இங்க மத்தவங்க நம்மள தொட்டா என்னா பண்ணனும் டீச்சர்ன்னு?’. அவங்க என்னய பதட்டமா பாத்துட்டு யாருடி தொட்டா?, அப்படி தொட்டா உடனே அம்மாகிட்ட சொல்லனும்னு சொல்லிட்டு, மறுபடியும் என்கிட்ட கேட்டாங்க. பாப்பா, பசங்க யாரும் எதுவும் வம்பு பண்ணாய்ங்களா-ன்னு?. எனக்கு அவங்க கேட்டதுல வேர்த்துருச்சு. இல்லை டீச்சர் –ன்னு சொல்லிட்டு ஓடிட்டேன். ஆனா அழுதேன். எதுக்குன்னு தெரியல. பயம் மட்டும்தான் இருந்துச்சு. முதல் தடவையா இன்னும் ஜாக்கிறதையா இருந்துருக்கணுமோன்னு தொணுச்சு. ஏதோ ஒரு பெரிய அனுபவம் கிடைச்சமாதிரி இருந்துச்சு. அந்த நாளுக்கு அப்பறம் நான் உங்க வீட்டுக்கு வர்றதே இல்ல. ஆனா கவனிச்சேன். வயசு ஆகஆக எல்லாமே தெளிவாப் புரிய ஆரம்பிச்சது. கொஞ்ச கொஞ்சமா உங்கள ஒதுக்குனேன். நம்ம தெருவுல எல்லோரும் திட்டுனாங்க. பார்த்துப் பார்த்து வளத்தவர்கிட்ட பேசுறதுக்குக்கூட நேத்ராவுக்கு நேரமில்லையான்னு. என்னால அவங்ககிட்ட கேக்க முடியல ”ஆமா பாத்துப் பாத்துத் தான் வளர்த்தாரு. ஆனா எதுக்குன்னு உங்களுக்குத் தெரியுமா? அப்பிடின்னு”. கோயில் மணியகாரர் நீங்க; கோயில்ல வரிசையில நிக்காம, இடையில நுழைஞ்சுப் பிரசாதம் வாங்குனா, பசியில நிக்குற அந்த மனுசன, எல்லாருக்கும் முன்னாடி அப்படித் திட்டுவீங்க. அப்போதெல்லாம் நீங்க சரியா இருக்குறதா நினைச்சு ஒரே கர்வம். இப்போ எனக்கு அதுதான் நினைவுல வருது. வெளிப்பகட்டுக்காக பிரச்சாரம் பண்ணுகிற கபடதாரி நீங்க. எந்த கோணத்துல நான் மோகப்பிரயோகமா தெரிஞ்சேன்னு இப்போவரைக்கும் எனக்குப் புரியவே இல்ல. ஆம்பளைங்க பத்தின வித்யாசமான பாடத்தை உங்க மூலமாகத்தான் படிச்சிக்கிட்டேன். ஆனா அதுக்கு அப்பறம் என் அப்பா பாசமாத் தொட்டாக்கூடத் தப்பாகத்தான் யோசிக்கத்தோணுது. சாமிமேல கோவம். தப்பு பண்ணுன பின்னாடியும் நீங்க இன்னும் சுகமா, நிம்மதியாத்தான பொழப்புநடத்திட்டு இருக்கீங்கன்னு, நீங்க செஞ்ச எழவுக்குக் கோயிலுக்குப் போறதையே நிப்பாட்டிட்டேன். பக்தியும் இல்லாதவ! பாசமும் இல்லாதவ! நன்றியும் மறந்தவ-ன்னு எங்க அம்மா திட்டும்போது பெருந்தன்மையா நீங்க “விடும்மான்னு” எங்க அம்மா சேலைக்கு இடையில பாப்பேங்க. காறித்துப்பி, செருப்பால அடிக்கத் தோணும். எங்க அம்மாவைச் சேலைய ஒழுங்காக் கட்டச் சொன்னா’ ஏன்டி….சீவிச் சிங்காரிச்சு நான் என்ன டீச்சர் வேலைக்கா போவப்போறேன்னு கேக்குது. உங்கள மாதிரி அடுத்தவன் பொண்டாட்டி, புள்ளைகளை வக்கிரமான ஆதரவோட அணுகுகிற மிருகங்களைப் பத்தி யோசிக்கிறதுக்கு, எங்க அம்மா மாதிரி ஏழைகள் வாழ்க்கையில நேரமில்லை. அதான் நீங்க எல்லாரும் பொறுமையா அவங்கள உத்துப்பாத்து பேச முடியுது. நான் அன்னைக்கு நைட்டே சொல்லாத்துனால, யாரும் இத்தன வருஷம் கழிச்சு நம்ப மாட்டாங்களோன்னு சொல்லாமலேயே இருந்துட்டேன். ஆனா நீங்க இன்னமும் ஆசிர்வதிக்குறேன்னு என்னையத் தொடுறப்போ என் உடம்பு எரியுது. ”ஏண்டா நாயே…உன்னால தொடாம வாழமுடியாதா-டான்னு கேக்கணும்னு தோணுது” பெரியப்பா. இந்த இலக்கணத்துல ஒரு மரபு இருக்கு பெரியப்பா. சில நேரத்துல இலக்கண முறையின்றி வருகிற நிலையில கூட அது ”வழுவமைதி”ங்குற பேருல சரின்னு ஏத்துக்கப்படுமாம். நீங்க எனக்கு செஞ்ச கைம்மாறுகளையும் அயோக்கியத்தனத்தையும் என்னோட இருபத்து நாலு வயசு வரைக்கும் அப்படி ஏத்துகிட்டனோ என்னவோ?... ஆனா அதெல்லாம் உதவிங்கற வகைமைக்குள்ளையே வராது. உங்க ஆதாயத்துக்காகத் தேடுன சாக்குபோக்குகள் அது! நான் யார்கிட்டையும் நியாயம் கேக்க விரும்பல. நியாயம் ஒவ்வொரு மனுசனுக்கும் மாறும். தனக்கு ஏத்தாப்ல அது காரணத்தைத் தேர்ந்தெடுக்கும். நீங்க சொல்லுங்க. ஏன் என்னைய அப்படித் தொட்டீங்க?- இந்த கேள்விக்கு பதில் வேண்டாம். இந்த கேள்வி எனக்கு நான் குடுக்குற மரியாதை. ஏன்னா சாக்கடை என்மேல பட்டதுன்னா கழுவிட்டு போகனும்னு கத்துக்கிட்டேன். என் புனிதத்தை நிரூபிக்கனும்னு எந்த அவசியமும் இல்லை. இப்போ என்னையப் பாதுகாப்பாக பாத்துக்க எனக்குத் தெரியும். எனக்கு, நீங்க என்னையத் தொட்டீங்கன்னு எனக்குத் தெரியும்ங்கிறது, உங்களுக்குத் தெரியனும். அவ்வளவுதான். எனக்கு தெளிவாப் புரியுது இப்போ! ஒருவேளை உங்க அம்மா, முடமாகி உங்க வீட்டுல இருந்தாக்கூட நீங்க அவளோட புடவைக்கு இடையிலையும் எதையாச்சும் தேடிருப்பேங்கன்னு தான் நான் நினைக்குறேன். உங்கள மாதிரி அயோக்கியனுங்களைத் திருத்தனும்-னு நினைக்குறது எல்லாம் என்னையப் பொருத்தமட்டும் முட்டாள்தனம். உங்க கிட்டயெல்லாம் நாக்க புடுங்குற மாதிரி கண்ணைப் பாத்து சுருக்குன்னு கேள்வி கேட்டாப் போதும். விளக்க இயலா அருவருப்புடன் இக்கடிதத்தைத் தொடங்கி , துணிவுடன் அதை முடிக்கும், மானமுள்ள மனுஷி நேத்ரா. *******   நாள்: 01.04.2023 இடம்: மதுரை அனுப்புநர்: ஐஸ்வர்யா ரவிச்சந்திரன், த/பெ: சி. ரவிச்சந்திரன், அலைபேசி எண்: 7418624410 மின்னஞ்சல் முகவரி: ravichandranaishwarya3@gmail.com முகவரி : 88/2, எம். ஜி. ஆர் தெரு, பழைய விளாங்குடி, மதுரை – 625 018. பெறுநர், படைப்பு குழுமம், (அம்மையார் ஹைநூன்பீவி நினைவு சிறுகதை பரிசுப்போட்டி) மதிப்பிற்குரிய படைப்பு குழுமத்திற்கு, பொருள் : படைப்பினைப் பற்றிய நம்பகத்தன்மையைப் புலப்படுத்தும் பொருட்டு வணக்கம். நான் ஐஸ்வர்யா ரவிச்சந்திரன். படைப்பு குழுமம் நடத்தக்கூடிய அம்மையார் ஹைநூன்பீவி நினைவு சிறுகதை பரிசுப்போட்டிக்காக அனுப்பப்பெறும் இச்சிறுகதையானது, என்னால் படைக்கப்பெற்றது என்றும், வேறு எந்த வடிவிலும் பிரசுரிக்கப்படவில்லை என்றும், வேறு எந்த போட்டியிலும் பரிசு பெறவில்லை என்றும் இக்கதையின் உரிமையாளராக உளமாற உறுதியளிக்கிறேன். நன்றி. இப்படிக்கு உண்மையுள்ள,

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in