logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

மாலா மாதவன்

சிறுகதை வரிசை எண் # 298


காலக் கணக்கு "வயசு நூத்தி மூணாச்சு. கிளம்புதா பாரு. எப்பைக்கும் உடல் நோவுன்னு படுக்கும். போகுதாக்கும் போகுதாக்கும்ன்னு போற வழியப் பார்த்துக் கெடந்தா கிழம் வந்தேனே ஆத்தான்னு கண்ண முழிச்சு நம்மப் பார்க்குது.. எந்தக் கடனக் கழிக்க இத்தனை நாள் கணக்கோ தெரியலயே." சின்னப்ப வீட்டு மருமகள் பொன்னி சத்தமாகச் சலித்துக் கொண்ட போது.. "ஏனாத்தா உம் சின்ன மாமனாரை இப்படி வறுத்தெடுக்கற. உனக்குன்னு காலம் வரும் போது இந்தப் பேச்செல்லாம் திருப்பி அடிக்குமாத்தா! இல்லாத போது படத்த மாட்டி பூவை வைச்சு எம் குலசாமின்னு கொண்டாடி என்ன பிரயோசனம்? இருக்கற வரைக்கும் உசுருத்தண்ணி கொடுக்கறியா? அதானுத்தா புண்ணியம்." தாழ்வாரத்தில் தன் போக்கில் வெத்தலைபாக்கை இடித்துக் கொண்டு பேசினாள் சடையாச்சி. சடையாச்சி அந்த வீட்டுக்கு வந்த கதையே வினோதமானது. பொன்னி கரிச்சுக் கொட்டறாளே நூத்திமூணு வயசு உசிரு ஒண்ணை.. அவர் கை கால் திடமா இருக்கும் போது இடுப்பில் அழகான கிருஷ்ணன் பொம்மையுடன் இருக்க இடமின்றி இந்த வீட்டுத் தாழ்வாரத்துக்கு அடைக்கலமாய் வந்தவள் தான் சடையாச்சி. அவள் பெயர் அவளுக்கே தெரியாது. தலைமுடி எல்லாம் பராமரிப்பின்றி சடை சடையாய்த் தொங்குவதால் இவர்களே அவளுக்குச் சடையாச்சி எனப் பெயர் வைத்துக் கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். "இந்தாரு. உனக்கே இங்க ஓசிச் சோறு. இதுல கூடவே அறிவுரை ஆத்தாவுரைன்னு பின்னாடியே நொண நொணங்காத. இன்னிக்கி பாட்டுக்கு வெத்தல கெடச்சுதா! இடிச்சோமான்னு இருக்கணும். சும்மா வந்து போற வழிக்குப் புண்ணியக் கதையை தலையில கட்டின.. அப்புறம் அடுத்த பூசை உனக்குன்னு ஆயிடும் பாத்துக்க!" பொன்னியால் கடும் நெருப்பிலிட்ட அமிலமாய் வார்த்தைகள் வீசப்பட்டதில் சுருண்டு தான் போனாள் சடையாச்சி. "எனக்கென்ன வந்துது? உன் மாமனாச்சு நீயாச்சு. நவ்வாறு வெத்தல கொடேன் சாயரட்சைக்கு ஆகும்." பொங்கிய கோபத்துக்கு சாமரம் வீசினாள் சடையாச்சி. "இந்தா பாரு! இந்த கிருஷ்ணன் பொம்மை.. அதான் நீ கொண்டு வந்தத சொத்தாட்டம் நடுவீட்டுல பதிச்சு வச்சுருக்காரே பெரியவரு. அதான்.. அத்தத் தான் சொல்றேன். என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது. அத பேத்து எடுத்து எங்கேயாவது கொண்டு போய் கொடு. சொல்லிப்புட்டேன். என் மாமனாரு மாமியாருக்குக் கூட நான் இம்புட்டு சேவகம் செய்யல. மகராசிக எப்பயோ போய் சேர்ந்தாக. இதோ இவரு.. என் மாமனாருக்குத் தம்பி. நித்ய பிரம்மச்சாரி. அதுக்காக நான் வச்சுப் பாத்துக்கணும்ன்னு எந்தலையில கட்டியாச்சு. பார்க்க வேண்டியது தான். எத்தனை நாளைக்கு? இல்ல எத்தனை வருஷத்துக்கு? அவரை என்னடான்னா இந்த கண்ணன் வந்து என்னக் கூட்டிட்டுப் போவான்னு இந்தச் சிலையவே பார்த்துக்கிட்டு இருக்காரு. என்னிக்கு கண்ணன் வரது? என்னைக்கு இவரு தேரேறிப் போறது? என்ன நான் சொல்றது புரியுதா இல்லையா? முதல்ல இத கெளப்பு. இல்ல நீயும் சேர்ந்து கிளம்பு!" பொன்னியின் வார்த்தைகளில் சடையாச்சி குழம்பிப் போனாள். தலையை பரபரவென்று சொறிந்து கொண்டவள் 'பரபரன்னு பேசினா ஒண்ணும் புரியல தாயி. இப்ப என்ன அந்த கண்ணன் சிலையை வழக்கம் போல ஒரு துணியைப் போட்டு மூடி வையேன். பேத்து எடுத்துட்டுப் போக நான் என்ன அம்மாம் பலசாலியா? நானே நாதியத்துப் போயி உன் வீட்டுத் திண்ணயேறி கெடக்கறவ!" "இத ஒண்ணு சொல்லிடு. எல்லாம் இந்த மனுஷன் பண்ணின வேல. இதோ வரேன்." ஆவேசமாக உள்ளே சென்றவள் ஒரு பெரிய போர்வையை எடுத்து வந்து அந்த குழலூதும் கண்ணன் சிலையை மூடினாள். மூடலுக்குப் பின் என்னவாகும் என அவளுக்குத் தெரியும். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும். கண்கள் மேல் நோக்கிச் சுழலும். போர்வையை அகற்றேன் எனப் பொன்னியைப் பரிதாபமாய் ஒரு பார்வை பார்க்கும். ம்ஹும்! இந்த வாட்டி எதுக்கும் அசரக் கூடாது. மந்திரவாதிக்கு ஏழுகடல் , ஏழு மலை தாண்டி ஒரு கிளியில் அவனோட உசிர் ஒளிஞ்சுக்கிட்டு இருக்கற மாதிரி இவருக்கு இந்த கண்ணன் சிலை போல. இன்னிக்கு எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரட்டுமே! நினைத்தவள் கிழவரைப் பார்த்தும் பாராதது போல் உள்ளே சென்று மகளுக்குப் போனைப் போட்டாள். மகள் விமலியை சென்னையில் கட்டிக் கொடுத்து வருஷம் நாலாகுது. இன்னும் வயித்துல ஒரு புழு பூச்சி இல்ல. அவளும் வரத்துப் போக்கில்ல. படிச்ச புள்ள. வேலைக்கும் போகுது. அதான் இந்தப் பக்கம் வர முடியலன்னு சப்பக் கட்டு கட்டிக்குவா பொன்னி. இப்பவும் அதே தான். "ஏண்டி விமலி! வேல நெறயக் கெடக்காக்கும். ஒரு போனு பண்ண மாட்டேங்கறியே ஆத்தா. உங்கப்பாரு காலைக்கு போனா ரவைக்குத் தான் எட்டிப் பார்க்கறாரு. நாளு பூரா இந்த தொண்டு கெழத்தோடயும் சடையாச்சி கூடயும் கெடந்து எனக்கும் கெழட்டுத் தனம் கழுத்து முச்சூடு கெடக்குது. பெத்தவ என்னாவான்னு போனு பண்ணினா தான் என்ன?" "ஏம்மா.. எடுத்ததும் நல்லாருக்கியான்னு கேட்க மாட்டியா? எப்பப் பாரு பிலாக்கணம் வைக்கற." "அடியே கண்ணு. உனக்கென்னடி மகராசி. தங்கமா இருப்ப. நான் தான் இருக்கேனே தகரமாட்டம். ரவி மாப்பிள்ள நல்லா இருக்காரா?" அம்மா மாப்பிள்ளையைப் பற்றிக் கேட்டதும் விமலி சுதாரித்துக் கொண்டாள். "அவருக்கென்ன நல்லா இருக்காரு!" சுருக்கமாய்ப் பேச்சை முடிக்க நினைத்தவள் கத்தரிக்க நினைக்க.. எந்த அஸ்திரம் பாயக் கூடாது என நினைத்தாளோ அது பொன்னியிடம் இருந்து பாய்ந்தே விட்டது. "இந்த மாசம் குளிச்சியா விமலி?" " ம்!" ஒரு சொல் , ஒற்றைச் சொல்லில் இருக்கும் கனம். அந்த கனம் இப்போதெல்லாம் இட்டிருக்கும் மெல்லிய திரை, அதனால் கணவன் மனைவியிடை அரங்கேறும் பாராமுகம் இவை எதனையும் அம்மாவிடம் விமலி பகிர்ந்து கொண்டாள் இல்லை. "தாத்தா எப்படி இருக்காரு?" "இருக்காரு இன்னும் போகாம!" அமிலத்தைக் கொட்டினாள் பொன்னி. "ஏம்மா?" "பின்ன.. உன்னய சீராட்ட உன் கூட வந்து பத்து நாள் இருக்க முடியுதா? கோவில் வாச போக முடியுதா? அட! ஒரு கடை கண்ணி, ஒரு கல்யாணம்.. எதுக்குத் தான் போறேங்கற? நடுவீட்டுல கிழவரும், தாழ்வாரத்துல சடையாச்சியுமா எம் பொழுது நகருது. இதுல எம் பேச்சுல எரிச்சலு தொனிக்காம என்ன செய்யும்?" பெண்மை பார்க்கும். பரிதவிக்கும். மிஞ்சிப் போனால் படுத்தவும் செய்யும் என்பதைப் பொன்னியின் பேச்சில் இருந்து புரிந்து கொண்ட விமலி.. "அம்மா! தாத்தா வரம் வாங்கிட்டு வந்தவர் போல. இருக்கட்டும்மா. பார்த்துக்க." "எத்தனை காலத்துக்கு?" வெடித்தாள் பொன்னி. "அம்மா!" "உம் புள்ளைக்கு பாட்டியா செய்யணும்ன்னு தவம் கெடந்தா இன்னும் என்னை மாமனாருக்குச் செய்யற மருமகளாவே வச்சிருக்கே காலம். என்ன செய்யச் சொல்ற?" "கணக்கிருக்கு!" குரல் கேட்டது. "ஏம்மா.. நீ ஏதாவது கணக்குன்னு சொன்ன?" "இல்லையே விமலி! நீ சொன்னியாக்கும்ன்னு நான் நெனச்சேன்!" "அப்ப யாரு? போனை வச்சுட்டு அதப் பாரும்மா முதல்ல!" போனை வைத்த விமலிக்கு ஒருவிதத்தில் பேச்சு திசைமாறியது நல்லதாய் இருந்தது. இல்லையென்றால் ரவியைப் பற்றி மேலும் தூண்டித் துருவுவாள் அம்மா. தொழில் விஷயமா எங்கேயோ போறேன்னு சொன்ன புருஷன் வரவே இல்ல. விமலிட்ட பேசியும் நாளாச்சு. இங்கயும் இதே சலிப்பு. என்னத்த இருக்கோமுன்னு வாழ்க்கை. இப்படி ஓடியதில் நாள் மாதமாக கண்ணனும் போர்வைக்குள் தான் இருந்தான். ஒரு நாள் பொன்னி எழுந்து வெளியில் சென்ற போது போர்வை அகற்றப் பட்டு கண்ணன் பளிச்செனச் சிரித்தான். படுத்திருந்த கிழவர் அவன் பக்கம் கண்ணிமைக்காது பார்த்துக் கொண்டிருந்தார். "இதாரு செஞ்ச வேல?" இறைந்தாள் பொன்னி. "நான் தானாத்தா. இருக்கறத பூசை பண்ணாம வரவை மட்டும் எதிர்பார்த்தா எப்படி? கணக்கிருக்கு இல்ல!" சடையாச்சி வெத்தலை போட்ட காவிப் பற்கள் தெரிய சிரித்தபடி கூறினாள். ஒரு சமயம் ஒண்ணும் தெரியா கிழவியைப் போல பேச்சு. ஒரு சமயம் வேதாந்தியாய் பேச்சு. இவளை என்னவென்று சேர்ப்பது? இப்பப் பாரு.. கணக்கு அது இதுன்னு. "என்ன கணக்கு? யாருக்கு கணக்கு?" பொன்னி கிழவர் மேல் கண்ணை வைத்துக் கொண்டு கேட்டாள். "அதோ அவரு கெடக்காரே அவருக்கு மூச்சுக் கணக்கு. உம் பொண்ணுக்கு புள்ளைக் கணக்கு. உம் புருஷனுக்கு பாவக் கணக்கு. அத ஈடு செய்யற உனக்கு புண்ணியக் கணக்கு. இத்தனையும் எடுத்துச் சொல்ற எனக்கு காலக் கணக்கு. கணக்கில்லாம என்ன! எங்க சுத்தினாலும் ரங்கனைச் சேருன்னு ரங்கனோட இல்ல நான் சுத்திக்கிட்டு இருந்தேன். ரங்கப்பாவ கண்ணனாக்கி இதோ இங்க இருக்க வச்சப்பறம் நானும் கூடவே இருக்க வேண்டியதாச்சில்ல. அது இந்தா இவனோட கணக்கு." சொன்னபடி கண்ணனைக் காட்டி அவனைக் கட்டிக் கொண்டாள் சடையாச்சி. போச்சு. வேதாந்தம் பேச ஆரம்பிச்சிடுச்சி பெரிய மனுஷி. இனி வாய் கொடுக்கக் கூடாது. நகர்ந்தவளைப் பார்த்து "கம..கமலன் எங்..க?" கிழவர் திணறி வார்த்தைகளைக் கோத்த போது.. "வருவாரு மாமா! வாயத் திறங்க. கஞ்சி ஆறிப் போய் கெடக்கு. அன்ன ஆகாரம் வேணாவா? அட! போறதுக்கும் தெம்பு வேணுமில்ல!" வாய் சாட்டையாகச் சுழன்றாலும் தாய்மை அதன் பணியைச் செவ்வனே செய்தது. கமலக்கண்ணன் அதான் பொன்னியின் கணவன்.. அவனைத் தான் கேட்கிறார் கிழவர். நாளொரு சீட்டும், வேளைக்கொரு குதிரை ரேஸ்ஸுமாய் களித்தாடுபவன் அவன். அத்தனையும் வீட்டுக்குத் தெரியாமல் வெளியிலேயே நடத்திக் கொள்வான். ஆறிக் கிடந்தவன் விமலியின் கல்யாணம் முடிந்ததும் அறுத்துக் கிளம்பிய மாடாய் சுற்றிக் கொண்டிருக்கிறான். வேளைக்குச் சோறாக்கிப் போடும் மனைவி குடும்பத்தையும் தாங்கிக் கொள்வாள் எனும் போது அவனுக்கேன் பொறுப்பு? அன்றிரவு நன்கு குடித்து விட்டு வந்தவன் நடுவீட்டில் கண்ணசராது கிடந்த கிழவரையே சுற்றி வந்தான். "என் வீட்டுக் காரருக்குத் தான் எத்தன பாசம்? பாரு சடையாச்சி! அர்த்த ராத்திரி வீட்டுக்கு வந்தாலும் அவரை கண்ணெல்லாம் மாமனாரு மேல தான் இருக்கு." "இல்லாம? கணக்கிருக்குல்ல!" "பாவக்கணக்கு? புண்ணியக் கணக்கா? அடப் போ அங்குட்டு!" சலித்துக் கொண்டாள் பொன்னி. "விடியும். தெரியும்!" விடிந்ததும் வாசலில் பெருங்கூட்டம். அதனூடே தெரிந்த போலீஸ் தலையில் மிரண்டு விட்டாள் பொன்னி. "ஊரெல்லாம் கடனு வாங்கி ஒருத்தனுக்கும் தராம இழுத்தடிச்சா போலீஸு வராம புதையலா வரும்?" கடன் கொடுத்தவன் ஒருவன் ஆவேசமாய் கத்த.. "புதையலு! அதான்.. அதத் தானே தேடறேன். கிழவன் அசர மாட்டேங்கறானே!" கமலக் கண்ணன் போலீஸின் பிடியில் மாட்டிக் கொண்டு முணுமுணுத்தான். பொன்னிக்கு சர்வமும் நடுங்கியது. இனி அவள் கதி? இப்படிப் பட்டவனா அவள் கணவன்? ஊரை ஏமாற்றி உள்ளோடு இருக்கும் கிழவரையும் ஏமாற்ற நினைத்து..சே! வயதானவரைப் போய்.. தான் நிந்தித்ததெல்லாம் மறந்து விட்டது அவளுக்கு. போலீஸ் கணவனைக் கூட்டிச் சென்ற பின் படுக்கையில் கிடந்தவரைப் பார்த்துக் கை கூப்பினாள் பொன்னி. "நீ சொல்லும் போதெல்லாம் எனக்கு உன் கணக்கு புரியல சடையாச்சி! என்னை மன்னிச்சுடு!" "இருக்கு. கணக்கு இருக்கு! கண்ணனை நகர்த்து." கிழவர் சொல்ல… பொன்னி கஷ்டப்பட்டு அச்சிலையை கடப்பாரையை வைத்து நெம்பி நகர்த்தினாள். அதன் அடியில் கிழவர் சேர்த்த பணமும், வீட்டுப் பத்திரமும். "பத்திரம்! பத்திரம்! இந்தக் கண்ணன் என் பேத்திக்கு!" என்றவர் இறுதி மூச்சை விட.. பொன்னியைப் பின் தொடர்ந்தாள் சடையாச்சி! போன் ஒலித்தது. "அம்மா! நீ பாட்டி ஆகிட்ட!" "கொண்டு வந்த சொத்த கூடிப் பறிச்ச உன் புகுந்த வீட்டு மனுஷங்க இருந்தவருட்ட கூடுற வயச பறிக்க முடியலயே. நான் சொன்ன கணக்க எல்லாம் அவரக் காப்பாத்திக் கழிச்ச தாயி! இப்ப கை மேல் பலன் கிடைச்சுதா? கண்ணனே வரப் போறானுல்ல!" சடையாச்சி சொல்ல.. கணக்கு நேரானது அறிந்து பொன்னி அழுதாள்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.