logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Anukeerthana P

சிறுகதை வரிசை எண் # 297


வைரஸ் எனக்கு சின்ன வயசுல இருந்து சுத்தமா இருக்க ரொம்ப புடிக்கும். என் அண்ணன் தங்கச்சியெல்லாம் அப்படி இல்ல. நான் அம்மா மாதிரினு நினைக்கிறேன். ஒரு அறைதானாலும் , நிறைய பேர் இருந்தோம், அம்மா சுத்தமா வச்சிருந்தா. இப்ப என் வேலையும் அப்படியே மாறிருச்சு. ஹாஹா.. ஆமா வீடு மட்டுமல்ல ஊரையும் நான் தான் சுத்தமா வச்சிருக்கேன். என்னைக்கும் போல என் அம்மாவ கும்பிட்டு என் வேலைய தொடங்கினேன். அதிசயமா ரோட்டில ஆள காணோம். மூனு தெரு தாண்டியும் ஒரு வீடு கூட திறந்து பார்க்கல. ஆனா உள்ள இருந்து பேச்சு சத்தம் மட்டும் கேட்டுச்சு. எப்பவும் ரோட்டில கொஞ்சற நாய் வந்து நக்கினுச்சு. இரண்டு பிஸ்கட் துண்டு போட்டேன். பாவம்! ரொம்ப பசி போல ஒரே மூச்சில சாப்பிட்டு ஏக்கமா பார்த்தது. “சரி. கொஞ்சம் தரேன்” னு சொல்லி என் மதிய உணவுல ஒரு பங்கை கொடுத்தேன். திடீரென ரோட்டில ஒரு தல தெரிஞ்சது. முகத்துல கவசம் வேற மாட்டிருந்தார். “ஏங்க ஊர்ல என்னாச்சு? யாரையும் காணோம். அதை விடுங்க உங்களுக்கு “னு சொல்லி முடிக்கறதுக்குள்ள அவர் வேகமா ஓடிட்டாரு. ஐந்து தெரு தாண்டினேன். அங்க ஒரு குட்டி பையன் கதவை இறுக்கமா பிடித்து ரோட்ட வெறிச்சு பார்த்துட்டு இருந்தான். பார்க்க என் பையன் மாதிரியே இருந்தான். “தம்பி விளையாட போலயா? பரீட்சை நேரமா?”. “இல்ல ஆன்ட்டி. ஊர்ல ஒரு”னு அவன் ஏதோ சொல்ல வந்தான். அதுக்குள்ள உள்ள வாடா னு அவன தரதர தரனு இழுத்துட்டு படாருனு கதவ சாத்திடாங்க. இதை பார்த்து கலங்கிருவேனு நினைச்சிங்களா? சீச்சீ.. இதெல்லாம் அன்றாட என் வாழ்க்கைல நடக்குறது தானே. நோயாளி மாதிரி பார்க்கறதும், என் கையில குப்பை கவர் கொடுத்ததுக்கே பத்து தடவ கை கழுவறதும் , முகத்த திருப்பிட்டு போறதும், கதவ படாருனு சாத்தரதும் ரொம்ப சாதாரணம் தான். என்ன! இன்னைக்கு ஊர்ல யாரையும் காணோமேனு ஒரு ஆர்வம் தான்.அதோ! நம்ம பக்கத்து வீட்டு அக்கா. அவகிட்ட கேட்போம். அவ வீட்டில டிவியிருக்கு. அவளுக்கு தெரிஞ்சிருக்கும் எல்லாமே. “அக்கா. என்ன தான் ஆச்சு நம்ம ஊருக்கு?”. “நீ கேள்வி படலயாடி!நம்ம ஊர்ல ஆள சாப்பிடற கிருமி வந்திருக்கு. அது பேர் கூட வைரஸ்னு நினைக்கிறேன். அதான் எல்லாருக்கும் லீவு விட்டுட்டாங்க”. “நமக்கு லீவு இல்லையா”. “நம்ம லீவு போட்டா இந்த ஊரு நாறிரும்டி”அக்கா குபீருனு சிரிச்சிட்டு சொன்னா. “அதுவும் இல்லாமா, சுத்தமா இருந்தாதான் நோய் பரவாதாமா”. “அப்படியாக்கா ! அப்ப நம்ம தான் இந்த சாத்தானை விரட்டற போர் வீரர்களா!”. “உனக்கு எப்பவும் காமெடித்தான் போ.வேலைய பார்ப்போம். மூஞ்சிய முந்தானைய எடுத்துக் கட்டிக்கோ”. சரினு அக்காவப் பின்தொடர்ந்தேன். சாயங்காலம் ஐந்து மணிக்கு வீட்டுக்குக் கிளம்பிட்டு இருந்தேன். திடீரென சத்தம். எல்லாரும் குடும்பமா வீட்டு வாசல், மாடினு நின்னு கைத்தட்டினாங்க. பாத்திரம் சலங்கைனு கும்மாளமா கொண்டாடினாங்க. வைரஸ் ஊரவிட்டு போயிருச்சு போல அப்பாடானு நானும் கைத்தட்டினேன். பக்கத்து வீட்டு அக்கா டிவில பார்க்கலாம்னு வேகமா ஓடினேன். “அக்கா. கிருமி ஓடிருச்சா? நானும் கைத்தட்டினேன்”. ”இல்லடி. எல்லோரும் நம்ம சேவைய பாரட்டதான் கை தட்டுனாங்களாம் ”. “நிசமாவாக்கா?”. ” ஆமாண்டி. இங்க வந்து டிவில பாரு. நாடு முழுசா கை தட்டுறாங்க”. ”பரவாலக்கா. சூப்பர் தான்.சரி, போய் சமைக்கனும் குழந்தைங்க பசியில இருப்பாங்க. வரேன் கா”. அடுத்த நாள் வேலைக்கு கிளம்பறப்ப எப்பவும் இல்லாமா ஒரு சின்ன சந்தோஷம் எட்டி பார்த்துச்சு. இனிமேல் எல்லாரும் சிரிச்சுக்கிட்டே குப்பை போடுவாங்க. சாப்பிட்டியானு கேப்பாங்க. அந்த குட்டி பையன் கிட்ட பேசலாம். இந்த வைரஸ் பத்தி கேட்கலாம். டாக்டர் படிப்பு படிக்க போறான்னு நம்ம பையன பத்தி கூட சொல்லுவோம் . இனி என்னை பார்த்து கைக்கழுவ மாட்டாங்க. சுத்தம் பண்றவ சுத்தமாதான் இருப்பானு அவங்களுக்கு புரிஞ்சிருச்சு. இதெல்லாம் யோசிச்சிட்டே பத்து தெருத் தாண்டிட்டேன். எதுவும் நடக்கல. ஒண்ணும் மாறல.எப்பவும் வர நாய் தான் வந்து நக்கினுச்சு. அப்ப நேத்து பார்த்தது கானல் நீர் போல? ஆசையா அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு. இவங்க ஏதோ கூத்து நடத்தி இருக்காங்க. நாமதான் தப்பா புரிஞ்சிகிட்டோம். இன்னிக்கு மாறாதவங்க என்னைக்குமே மாறாமலா போயிடுவாங்க. சரி, நம்ம வேலைய பார்ப்போம்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.