logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

துரை.தனபாலன்

சிறுகதை வரிசை எண் # 296


அன்பும், அரவணைப்பும் இரவு நேரம். கருமையான வானில் விண்மீன்கள் அங்கங்கே கூட்டமாக இருந்தாலும், வெண்ணிலா மட்டும் தனியாக இருந்தது. தேனி, அரண்மனை மேடு பகுதியில் இருந்த அந்தப் பழைய வீட்டில், ஓய்வு பெற்ற ஆசிரியரான கேசவன், தன் அறையில் இருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறே, கையில் இருந்த தனது கவிதை நூலில் கவனம் செலுத்த முயன்று கொண்டிருந்தார். ஆங்கில ஆசிரியரான அவருக்குச் சிறுவயதில் இருந்தே தமிழிலும் பற்றும், ஆர்வமும் அதிகம். சமையலறையில் இருந்து, கடுகு தாளிக்கும் வாசம் வந்தது. மீனாம்பாள் கை மணமே தனி. சாதாரணமாக வெறும் ரசமும், துவையலும் வைத்தாலும் கூட, அது அமுதமாக இருக்கும். ஆனால், வெறும் நாக்கு ருசி மட்டுமே வாழ்க்கை ஆகி விடுமா? ... அப்போது மாடியில் இருந்து, மருமகள் இந்திரா, பேரக் குழந்தைக்குத் தாலாட்டுப் பாடித் தூங்க வைக்கும் ஒலி கேட்டது. மாமியாரிடம் பேசும் போது மட்டும்தான் அவளது குரல் மாறி விடும். மற்ற நேரங்களில் நல்ல இனிமையான குரல்தான். ஏதோ சினிமாவில் வரும் தாலாட்டுப் பாட்டு அது. அதையும் இந்திரா வெறுமனே ஹம்மிங் மட்டுமே செய்தாள். இப்போது வரும் பாட்டுகளில் பாடல் வரிகள் எங்கே காதில் விழுகிறது? இசை என்ற பெயரில் ஓசைதானே அதிகமாக ஒலிக்கிறது. கேசவனுக்கு, தான் குழந்தையாக இருந்த போது, அம்மா தன் மடியில் வைத்து, அரவணைத்துப் பாடிய தாலாட்டுப் பாடல் வரிகள் இப்போதும் நினைவில் இருந்தன. கண்ணே நீயுறங்கு ... என் கானகத்து வண்டே நீயுறங்கு.. பொன்னே நீயுறங்கு.. என் பூவனத்துச் செண்டே நீயுறங்கு.. ‘உறங்கூ...ஹோய்’ என்று அம்மா ராகமாக இழுத்துப் பாடும் அழகே அழகு. கேட்டுக் கொண்டிருக்கும் போதே விழிகள் சொக்கி, தூக்கம் தன்னைப் போல வந்து விடும். இன்றும் அம்மா பாடிய பல பாடல்கள் அவரது நினைவில் இருக்கின்றன. அந்த எளிய, இனிய தமிழ்ச் சொற்கள், இயல்பாக வந்து விழும் எதுகை, மோனைகள், அம்மாவின் அன்பு வழியும் குரல், தாய் மடியின் கதகதப்பு, தொட்டிலாகப் பயன்படும் அவள் சேலையின் அரவணைப்பு என எவ்வளவு சுகமான காலம் அது..! ஐந்தாம் வகுப்புப் படிக்கும் வரை கூட, ஆசையாகக் கேட்கும் போதெல்லாம் அம்மா அவனைத் தொட்டிலில் படுக்க வைத்துத் தூங்க வைப்பாள். பாயில் படுக்கும் வயதிலும், அம்மாவின் மேல் கையை, காலைப் போட்டுக் கொண்டுதான் தூங்குவான். அந்த அன்பே உருவான அம்மா, கேசவனுக்குத் திருமணமான இரண்டு மாதங்களிலேயே இறந்து விட, சின்னக் குழந்தை போல அவன் தேம்பித் தேம்பி அழுத போது, அவனது புது மனைவி மட்டுமின்றி, கூடியிருந்த சொந்தங்கள் அத்தனையுமே அவனை வியப்புடன் பார்த்தன. தாய்க்குப் பின் தாரம் என்பார்கள். தாயைப் போலவே சுவையாகச் சமைக்கும் கைப் பக்குவம் மட்டுமே மீனாம்பாளிடம் இருந்தது; ஆனால், அந்தச் சுவையான உணவைப் பரிமாறும் போது வெளிப்பட வேண்டிய பரிவு, பாசம்....? அவையல்லவா முக்கியம். மீனாம்பாள் அவள் பெற்றோருக்கு ஒரே பெண் என்பதால், தானுண்டு, தன் வேலையுண்டு என்றே இருந்து பழகி விட்டாள். சமைத்து, சோறு, குழம்பு, காய்கறிகள் என எல்லாவற்றையும் பாத்திரங்களில் எடுத்து வைத்து, ஒரு வட்டிலையும் முன்னால் வைத்து, ‘வேண்டும் அளவுக்கு போட்டுக் கொள்ளுங்கள்’ என்று கூறி விட்டு, தன் வட்டிலைப் பார்த்துச் சாப்பிடத் தொடங்கி விடுவாள். கேசவனுக்கு வயிற்றில் இருந்த பசி கூட ஆவியாகப் போய் விடும். மேலும் அவனே ஒரு கவிஞனாக வேறு இருந்ததால், ‘உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே’ போன்ற பழைய பாடல் வரிகள் நினைவில் தோன்றி, ஒரு நீங்காத சோகம் அவன் நெஞ்சை அழுத்தும். தன் தாய் சோறு போட்டு, குழம்பு ஊற்றி, நெய் இட்டுப் பிசைந்து வைத்துச் சாப்பிடச் சொல்லும் பாங்கு அவன் கண்முன் தோன்றி மறையும். சாப்பாட்டில் மட்டும் அல்ல, எல்லா விசயத்திலும் மீனாம்பாள் அப்படித்தான். ஜவுளிக் கடைக்குப் போனால், தனக்கு வேண்டியதை எடுக்கும் போதும், அவனிடம் எது நன்றாக இருக்கிறது என்று கேட்க மாட்டாள், அவன் எடுக்கும் போதும், இது உங்களுக்கு நன்றாக இருக்கும், இருக்காது என்று எதுவும் சொல்ல மாட்டாள். அறுபது வயதானாலும், கேசவன் சிறு வயது முதல் உடற்பயிற்சிகள், ஆசனங்கள் எல்லாம் செய்து, உடலைக் கச்சிதமாக வைத்திருப்பதைப் பார்த்து, நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் பாராட்டுவார்கள்; ஆனால், மனைவியிடம் இருந்து ஒரு பெருமிதமான பார்வையோ, ஒரு பாராட்டு வார்த்தையோ வராது. ஆங்கில ஆசிரியராக இருந்தாலும், அவர் எழுதிய தமிழ்க் கவிதைகள் பல போட்டிகளில் பரிசுகள் வாங்கி இருக்கின்றன. பல தமிழ் அறிஞர்களும், உறவினர்களும் பாராட்டி இருக்கிறார்கள். ஆனால், மீனாம்பாளுக்கும், தமிழ் ரசனைக்கும் காத தூரம்..! அதனால் அவரது கவிதைகளை அவள் கண்டு கொள்வதே இல்லை. அவரிடம்தான் இப்படி என்றில்லை, மீனாம்பாளின் தாய் இவளுக்குத் திருமணமான புதிதில் வீட்டிற்கு வரும் போது கூட அப்படித்தான். ஒரு ஒட்டுதல் என்பதே அவளிடம் இருக்காது. இப்படி ஒரு பிறவியா என்று கேசவனுக்கு வியப்பாக இருக்கும்! ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்று பாடிய வள்ளுவரின் வாக்கைப் பொய்யாக்க வேண்டும் என்றே பிறந்தவளா இவள்? இதை எல்லாம் விடப் பெரிய கொடுமை, ‘அந்த’ விசயத்திலும் அவள் அப்படித்தான். கலவிக்கு முன்னும், பின்னும், ஒருவர் மார்பில் ஒருவர் அடைக்கலம் ஆகி, அரவணைக்கும் வேளையில், காமத்துக்கும் முன்பாகத் தோன்றுவது தாய்மை உணர்வு அல்லவா! அந்தக் கனிவுதானே விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் உள்ள வேறுபாடு? இளம் வயதில், கலவியில் அவளிடம் தோன்றும் ஆர்வம், அது முடிந்ததுமே மறைந்து விடும். அதற்குப் பிறகு தள்ளிப் படுத்துக் கொள்வாள். உடனே தூங்கியும் விடுவாள். இவன்தான் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருப்பான். இப்போதும் கூட, படுக்கையில் கேசவன் அவள் மேல் கை வைத்தாலே போதும், ‘ப்ச், தொந்தரவு பண்ணாதீங்க, பேரப் பிள்ளை எடுத்தாச்சு, இன்னும் சின்ன வயசுன்னு நினைப்பு’ என்று முனகி விட்டு, தள்ளிப் படுத்து, முதுகைக் காட்டிக் கொண்டு தூக்கத்தைத் தொடர்வாள். இவளிடம் எப்படி விளக்குவது? எனக்குத் தேவை உன் உடம்பு இல்லை, உள்ளார்ந்த அன்பும், அரவணைப்பும்தான் என்று..! கையில் இருந்த கவிதை நூலில் தற்செயலாகத் ‘தேவதைக் கனவு’ என்ற கவிதை இருந்த பக்கம் புரண்டு வந்தது. கேசவன் கல்லூரிக் காலத்தில் எழுதிய கவிதை அது. வருங்கால மனைவியுடன் எப்படி எல்லாம் இன்பமாக வாழ வேண்டும் என்ற அவரது கனவு அதில் கவிதையாக விரிந்திருந்தது. ............... ............. ....................... இனிய இரவின் நிறைவாய் இரு(று)க்கும் அணைப்பை விலக்குவ தெக்கணமோ – பின் அழகாய்க் குளிப்பதும் எக்கணமோ! அடியேன் அறியேன் அவையொன்றும் - நான் விழிப்பதெல் லாமவள் எழுப்புகையில்! .................. ............. .............. களிப்புடன் செல்வேன் உணவருந்த - மிகக் கலையழ குடனே உணவிடுவாள்! சமையலின் சுவையுடன் சம்சாரம் - தன் மையலும் சேர்த்து ஊட்டிவிட... ............... .............. ......................... வாஞ்சை தந்த வஞ்சியுடன் - என் வாழ்வின் ஓய்வு நாட்களினைக் கனிவுடன் கழித்துக் காதலுடன் - என் கனவுத் தேவதை வாழவைப்பேன் ! கனவு கனவாகவே போனது. நனவில் அதற்கு நேரெதிராக மீனாம்பாள் வந்து சேர்ந்தாள். கேசவன் தன் உயிர் நண்பன் மாரிச்சாமியிடம் இந்த ஏமாற்றத்தைப் பகிர்ந்து கொண்ட போது, ‘உன் மனைவி வளர்ந்த சூழ்நிலை வேறு; அவளிடம் இல்லாத உணர்வுகளை எதிர்பார்ப்பது உன் தவறுதான்’ என்று பெரிய ஞானியைப் போலத் தீர்ப்புச் சொல்லி விட்டுப் போய்விட்டான். ஆனால், ஒவ்வொரு நாளும் தனிமை உணர்வில் தான் வாடும் வேதனை அவனுக்கு எப்படித் தெரியும்? அதுவும், வயது கூட கூடத்தானே இந்தத் தனிமை உணர்வும் கூடுகிறது.. இதற்கு என்னதான் தீர்வு? திடீரென, ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு அவர் நினைவுக்கு வந்தது. கோடை விடுமுறைக் காலங்களில் ஸ்போக்கன் இங்க்லீஸ் வகுப்புகள் அவர் எடுப்பதுண்டு. ஒருமுறை ஒரு ஜெர்மன் பெண், சுற்றுலா வந்த இடத்தில், இவரிடம் ஆங்கிலம் கற்றுக் கொண்டாள். கோர்ஸ் முடிந்து, விடைபெறும் நாளன்று, ‘கேன் ஐ ஹக் யூ, சார்’ (Can I hug you, sir) என்று அவள் கேட்க, இவர் சம்மதித்தார். அவரை அணைத்துக் கொண்டு, ‘தேங்க் யூ சார்’ என்று சொல்லி அவள் நெகிழ்ச்சியோடு விடைபெற்ற போது, அந்த அணைப்பில்தான் எவ்வளவு அன்பும், மரியாதையும் வெளிப்பட்டன! இங்குள்ளவர்களுக்கு ஓர் ஆணும், பெண்ணும் அணைப்பது என்றால், ஒன்று காதலாக இருக்க வேண்டும் அல்லது காமமாக இருக்க வேண்டும். அவற்றைத் தாண்டி அவர்களுக்கு அதில் எதுவும் கிடையாது. அணைப்பின் மூலம் அன்பு, பாசம், மரியாதை, நன்றி, நட்பு என்று பல உணர்வுகளை வெளிப்படுத்த முடியும் என்பதை ஏன் இவர்கள் உணர்வதில்லை? அப்போது மணி ஒன்பதாகி விட்டது என்பது, கோடை பண்பலை வானொலியில், இரவின் மடியில் நிகழ்ச்சியில், இனிமையான பழைய பாடல்கள் ஒலிக்கத் தொடங்கியதில் இருந்து தெரிந்தது. ‘முதல் மரியாதை’ படத்தில் இருந்து அந்தப் பாடல் ஒலித்தது. பூங்காற்றுத் திரும்புமா? ஏம் பாட்ட விரும்புமா? தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட எனக்கொரு தாய்மடி கிடைக்குமா? மலேசியா வாசுதேவன் சிவாஜியின் குரலில், ஆண்டாண்டு காலமாய், ஆழ்மனதில் உறைந்து கிடக்கும் ஏக்கத்தை, அழகான சொற்கள் மூலம் வெளிப்படுத்தி, ஊனும் உருக, உயிரும் உருகுமாறு பாடிய அருமையான பாடல், கேசவனின் மனத்துயரைக் கிளர்ந்தெழச் செய்தது. எப்போது கேட்டாலும், இதயத்தைப் பிழியும் பாடல். விழியோரங்களில் ஈரம் கசியச் செய்யும் வரிகள். மனதை இதமாக வருடும் இசை. அந்தப் பாடலைக் கேட்கும் முன்பெல்லாம் அவர் மனதில் ஒரு மயக்கம் தோன்றும், ‘எனக்கு மட்டும்தான் இப்படி ஒரு ஏக்கம் இருக்கிறதோ, வெளியே தெரிந்தால் சிரிப்பார்களோ’ என்று. இதோ.. திரைப்படப் பாடலிலேயே வருகிறதே! நடப்பில் இல்லாததையா படத்தில் காட்டுகிறார்கள். அப்படி என்றால், தன்னைப் போல, பலருக்கும் இந்த ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது என்ற எண்ணம் அவருக்கு ஒரு வகையில் ஆறுதலாக இருந்தது. இவ்வாறு பல விதமான சிந்தனைகள் மனதில் மோதிக் கொண்டிருந்த போது, மீனாம்பாளின் குரல், “ஏங்க, சாப்பிட வரலாம்ல” என்றது. கேசவன் ஏற்கனவே எத்தனையோ முறைகள் சொல்லிச் சொல்லி அலுத்து விட்டார், ‘சாப்பிட வாங்க’ன்னு கூப்பிடு, ‘சாப்பிட வரலாம்ல’ன்னு கூப்பிடுறது நல்லா இல்ல’ என்று. ‘எல்லாம் ஒண்ணுதான.. எனக்கு ஒங்கள மாதிரி இலக்கணச் சுத்தமா எல்லாம் பேச வராது’ என்று சம்பந்தம் இல்லாமல் பதில் சொல்வாள். என்ன சொல்லுகிறார், எதற்காகச் சொல்கிறார் என்று யோசித்துப் புரிந்து கொள்ளும் வழக்கமே அவளிடம் கிடையாது; நான் இப்படித்தான் பேசுவேன் என்று ஒரு பிடிவாதம். திருமணமான புதிதில் ஒருமுறை அவளை வெளியே அழைத்துச் சென்று, திரைப்படம் பார்த்து விட்டு வந்து, ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, பொறுமையாக எடுத்துச் சொன்னார், “இங்க பார் மீனா, உன் மனப்பாங்கையும், பேசும் விதத்தையும், நீ கொஞ்சம், நான் சொல்வது போல மாற்றிக் கொண்டால் போதும், நாம மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும் வாழலாம். அதுக்குத் தேவையான வசதியும், வாய்ப்பும் நமக்கு இருக்கு” என்று. அதற்கு, “இப்ப என்னங்க, உங்களுக்கு மூணு வேளைக்கும் வாய்க்கு ருசியாச் சமைச்சுப் போடுறதில ஏதாவது குறை வைக்கிறேனா. இல்ல, வீட்டு வேலை எதுவும் செய்யாம இருக்கேனா.. இதுக்கு மேல, எப்படித்தான் சரியா இருக்கிறது?” என்று அலட்சியமாகப் பதில் சொல்லி விட்டு, “எனக்கு இன்னும் ஒரு தோசை சொல்லுங்க” என்றாள். அதற்கு மேல் எதுவும் விளக்கம் சொன்னால், ‘இதுக்குத்தான் இன்னிக்கு வெளிய சாப்பிடலாம்னு கூட்டிட்டு வந்திங்களா?’ என்று குரலை உயர்த்துவாள் என்று அவருக்குத் தெரியும் என்பதால் அதற்கு மேல் எதுவும் பேசாமல் விட்டு விட்டார். மீனாம்பாளை நினைக்கும் போதெல்லாம் அவருக்கு ஒரு குறள் நினைவுக்கு வருவதுண்டு. ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய் நல்லதைப் பிறர் சொன்னாலும் கேட்காத, தானாகவும் அறியாத ஓர் உயிர், தான் இறக்கும் வரை பிறருக்கு ஒரு நோய் போலத் துன்பம் தரும் என்று வள்ளுவர், இவளுக்காகவே எழுதியது போல, எவ்வளவு தெளிவாக எழுதி வைத்திருக்கிறார் என்ற வியப்பு அவருக்கு ஏற்படும். அதன்படி, அவள் தரும் மனத்துயர் தன்னை விட்டு எப்போதுமே நீங்காது என்ற புரிதல், அவர் அடிமனதில் இருந்து ஒரு நீண்ட சோகப் பெருமூச்சாக வெளியாகும். ****************************************************** எல்லோரும் சாப்பிட்டு விட்டுப் படுத்த பின், இரவு வெகுநேரம் கழித்து மகன் மூர்த்தி வந்தான். அலுவலகம் ஐந்து மணிக்கெல்லாம் முடிந்து விடுகிறது. ஆனால், நாள்தோறும் தாமதமாகத்தான் வருகிறான். கேட்டால், ஒவ்வொரு நாளும் ஒரு காரணம் சொல்லிச் சமாளிப்பான். அதற்கு மேல் அவனைத் துருவிக் கேட்கவும் முடியாது. தோளுக்கு மேல் வளர்ந்து விட்டான், துணைவி வேறு வந்து விட்டாள். நாளுக்கு நாள் ‘இது என்னடா வாழ்க்கை? பெற்ற மகனே அடுத்த வீட்டு ஆள் போல ஆகி விட்டான், அவனுக்கென வந்தவள், மருமகளும் அளந்துதான் பேசுகிறாள். மனைவி மீனாம்பாள் விசயம், எப்பவுமே சொந்தக் கதை, சோகக் கதை என்றாகி விட்டது... அவரது நண்பர்களில் ஒருவர் கூட அந்தப் பகுதியில் வசிக்கவில்லை. மனம் விட்டு, ஆறுதலாகப் பேச ஒருவரும் இல்லாமல் உயிர் வாழ்வதில் என்ன பொருள் இருக்கிறது’ என்ற எண்ணம் மேலோங்கியது. ஊமை கனவு கண்டால் ஒருவரிடமும் சொல்ல முடியாது என்பது போல, கேசவனின் தவிப்பும் இருந்து வந்தது. எப்போதும் போல், படுக்கையில் சற்றுத் தள்ளி, மீனாம்பாள் அந்தப் பக்கமாகத் திரும்பிப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். இவளுக்கு மட்டும் எப்படி, படுத்தவுடன் தூக்கம் வந்து விடுகிறது? தனக்கு ஏன் அந்தக் கொடுப்பினை இல்லை என்ற கேள்வி அவர் மனதுக்குள் சுற்றிச் சுற்றி வந்தது. அப்போது, கேசவன் மனதில், சிறு வயதில் நடந்த நிகழ்ச்சி ஒன்று நினைவுக்கு வந்தது. தன் அண்ணனுக்குக் காய்ச்சல் வந்த போது, அம்மா அவன் மீது அதிக அக்கறை எடுத்துக் கொண்டு, நன்றாகக் கவனித்து கொண்டதைப் பார்த்து, மனதுக்குள், ‘இரு, இரு, எனக்கும் ஒருநாள் காய்ச்சல் வராமலா போய்விடும்? அப்போது அம்மா என்னைத்தானே நல்லாக் கவனிப்பாங்க’ என்று தான் சிறுபிள்ளைத்தனமாக நினைத்தது நினைவுக்கு வந்தது. ஒருவேளை, தனக்கு அப்படி ஏதும் உடம்புக்கு முடியாமல் போனால், அப்போது மீனா தன் மீது அன்பு காட்டி, அரவணைத்துக் கொள்வாளோ என்ற எண்ணம் கூட அவருக்குத் தோன்றியது. ***************************************** மறுநாள், கேசவன் காலை உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, குளியல் அறைப் பக்கம் இருந்து, ‘அம்மா’ என்று மீனாவின் அலறல் கேட்டது. உடனே பதைபதைத்து, “என்ன, என்ன?” என்று கூவிக் கொண்டே அவர் ஓடிச் சென்றார். அங்கு, குளித்து விட்டு வெளியே வரும் போது, கால் வழுக்கிக் கீழே விழுந்த நிலையில் மீனாம்பாள் கிடந்தாள். “ஐயோ, வலிக்குதே.. வலிக்குதே” என்ற அவள் கதற, கேசவன் அவளை வேகமாகத் தூக்கி நிறுத்த முயன்றார். “ஐயோ, வேண்டாம், விட்ருங்க, என்னால முடியல” என்று அப்படியே சரிந்து மீண்டும் தரையில் சாய்ந்தாள். இதற்குள் சத்தம் கேட்டு, மூர்த்தியும், இந்திராவும், மாடியில் இருந்து இறங்கி ஓடி வந்தார்கள். மூர்த்தி உடனே அவர்களின் குடும்ப மருத்துவர் சரவணனுக்கு அவசரமாகப் போன் செய்ய, இந்திரா தன் அத்தையிடம், “எங்க வலிக்குது அத்தை?” என்று கேட்டவாறே, காலில் ஒவ்வொரு இடமாக லேசாக அமுக்கிப் பார்த்தாள். முழங்காலுக்குக் கீழே அவள் கை பட்டதும், “ஐயோ... அங்கதான் உயிரே போற மாதிரி வலிக்குதும்மா” என்று அலறினாள் மீனாம்பாள். பிறகு, எல்லோரும் சேர்ந்து அவளை அப்படியே தூக்கி, படுக்கையில் படுக்க வைத்தார்கள். பின்பு, மருத்துவர் சரவணன் வந்து அவளைச் சோதித்துப் பார்த்தார். பின்பு, வலியை மறக்கவும், தூங்குவதற்குமாக ஒரு ஊசி போட்டு விட்டு, கேசவனைத் தனியே அழைத்துச் சென்றார். “அனேகமாக, முழங்காலுக்குக் கீழே எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். உடனே காலில் ஒரு எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க வேண்டும். மருத்துவமனையில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்றார். ************************************************ மாலையில் கேசவன், மருத்துவமனைக்கு வெளியே இருந்த கடையில், மீனாம்பாளுக்குப் பழங்கள் வாங்கிக் கொடுத்து விட்டு, மருத்துவர் சரவணனை அவர் அறையில் சென்று பார்த்தார். மருத்துவர் சரவணன், மீனாம்பாளின் கால் எலும்பு எக்ஸ்ரே பதிவைப் பார்த்தவாறே, “கேசவன் சார், வயதான காலத்தில் ஏற்படும் எலும்பு முறிவு குணமாவதற்கு அதிக நாட்கள் ஆகும். அதனால், மருத்துவம் எவ்வளவு முக்கியமோ, அது போலவே, குடும்பத்தாரின் ஒத்துழைப்பும் ரொம்ப முக்கியம். குறிப்பா, அவங்க கணவரான உங்களோட அன்பும், அரவணைப்பும்தான் அவங்களுக்கு இப்போது முதல் தேவை” என்றார். மருத்துவரின் அந்தச் சொற்கள், கேசவனின் மனதின் ஆழத்தில் ‘சுருக்’கெனத் தைத்தன. அவரிடம் என்ன பதில் சொல்வது என்று ஒன்றும் தோன்றாமல் கேசவன் திகைத்து நின்றார்! *********************************************

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.