logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

யசோதா பழனிச்சாமி

சிறுகதை வரிசை எண் # 295


சுழலும் முகமூடி. "ஏங்க, என்னங்க, உங்களைத்தான் பாத்து கொஞ்சம் மெதுவா நடந்து போங்களேன். எதுக்கு இப்படி வேகமா ஓடறீங்க? எங்காவது கீழே கிடக்கிற கல்லுல கால் தட்டி, விழுந்துடாதீங்க"என்று வேகமாக தடுமாற்றத்துடன் செல்லும், தன் என்பத்தைந்து வயதுக் கணவர் பரந்தாமன் கையைப் பிடித்துக் கொண்டு, வாக்கிங் போய்க் கொண்டிருந்தார் எழுபத்தெட்டு வயது பத்மினி டீச்சர். அப்போது, அவர்களுக்கு நேர் எதிராக வந்த பெண் ஒருவர் "ஏய் பத்மினி எப்படி இருக்கே? அடேயப்பா! பார்த்து எத்தனை வருஷமாச்சு.." "அட கலாவா? நீ எப்படிமா இருக்கே" "நான் நல்லாதான் இருக்கேன்" " ஆமா பத்மினி உன் வீட்டுக்காரர் என்ன இப்படியாகிட்டார் அவருக்கு என்னாச்சு ?" " ஓ அதுவா," என பத்மினி சொல்லும் போதே அவள் பேச்சில் கணவர் குறித்தான வருத்தம் தெரியாமல் ஒரு எள்ளல் தெரிந்தது. "அவர் வயசு முறுக்கமா இருந்த காலத்தில் என்னை எப்படி நடத்தினாருனு உனக்கே தெரியுமே கலா. அதுக்கு ஆண்டவனாப் பார்த்துக் கொடுத்த தண்டனை தான்" இப்படி என கலகலவென்று ஒரு சிரிப்பு சிரித்தார் பத்மினி. பத்மினி, முகத்தில் தெரிந்த மகிழ்வைப் பார்த்த கலா, "இன்னிக்குத்தாம்மா இப்படி மனம் விட்டு நீ சிரிக்கிறத பார்க்கறேன். அப்பெல்லாம் நீ சிரிக்கிறப்ப, உன்னட முகத்தில் ஒரு மெல்லிய சோகமிருக்கும்.. உன்னைப் பார்த்தாலே, எதையோ சொல்ல முடியாம மென்னு முழுங்குற மாதிரியே இருக்கும். ஆனா இப்ப தெளிவாத் தெரியறே போ." "அப்படியாமா! வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியே இருக்கிறதில்லமா. இப்பதான் நிஜமாலுமே எனக்காக என் வாழ்க்கையை வாழறேன் கலா. சரி வாம்மா நின்னுகிட்டு இருந்தா அவருக்கு கால் வலிக்கும். அதோ, அங்கே பார்க்கிலிருக்கிற பெஞ்சுல உட்கார்ந்து பேசலாம். நாம பார்த்து பேசி எத்தனை வருஷமாச்சு?" "சாரி பத்மினி, நான் இப்போ அவசரமா வெளியே போக வேண்டியிருக்கு மறுபடியும் பார்ப்போம்ப்பா" என விடைபெறும் போது, இருவரும் அலைபேசி எண்ணைப் பரிமாறிக் கொண்டார்கள். பத்மினியின் கணவனைப் பார்த்து, "சார் வரேங்க" என்றாள் கலா. அவள் சொல்வதைக் கேட்டு பரந்தாமன் சிரிப்போடு தலையசைத்தார். பத்மினி கணவரை அழைத்துக் கொண்டு, பார்க்கிலிருந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டாள். அவள் கணவர் பரந்தாமன் அவள் கையைப் பிடித்து அருகே அமர்ந்து கொண்டார். அந்த பார்க்கின் உள்ளே, பச்சைப்பசலென செழித்து இருக்கும் புற்களை சீராக வெட்டி விட்டிருந்தார்கள். அந்த புல்வெளிகளுக்கிடையே குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல் பலகை ஆடிக் கொண்டிருந்தது. அதில் ஏறிக் குதித்தும், சில குழந்தைகள் பயத்தில் கத்தியும் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து குழந்தையாக சிரித்துக் கொண்டிருந்தார் பரந்தாமன். பத்மினியோ, "உன் முகத்தில இப்ப தெளிவு இருக்குனு" கலா சொல்லிய வார்த்தையை மனதுக்குள் மீண்டும் அசைபோட, தூங்கிக் கொண்டிருந்த நினைவுகள் மேலே கிளம்ப ஆரம்பித்தது. "ஏய் பத்மினி இன்னுமா சாப்பாடு ரெடியாகல?ஸ்கூலுக்கு நேரமாச்சில்ல." "இதோ ரெடியாச்சுங்க." "என்ன எழவோ, என்னவோ தெனமும் காலையில உங்கிட்ட கத்தி கத்தி தான் சோறு வாங்க வேண்டியிருக்கு." 'ஆமா, கூடமாட வந்து வேலை செஞ்சா கௌரவம் குறைஞ்சு போயிடும் ஆனா கத்தறக்கு மட்டும் ஒரு குறைச்சலுமில்ல' மனசுக்குள் பத்மினி. "ஏய் பத்மினி, ராகி கூழ் வச்சிட்டியா?" மாமியாரின் அதிகாரம். "வந்துட்டேங்கத்தை." "அம்மா, எனக்கு தலைக்கு ஷாம்பு தேச்சு விடு" ஸ்கூலுக்கு நேரமாச்சு. குளியலறையிலிருந்து ஒன்பதாவது படிக்கும் மகள் சுவேதாவின் குரல். 'ஆண்டவா, நீ எனக்கு நாலு கை கால கொடுத்து, இரண்டு உடம்பையும் கொடுத்து இருந்தாக் கூட இவங்களுக்கு வேலை செய்ய முடியாது' என முனகியபடியே அவர்களின் வேலைகளை முடித்து விட்டு கடிகாரத்தை நிமிர்ந்து பார்க்க, மணி எட்டேகால் ஆகியிருந்தது. அவசரமாக சோற்றை எடுத்து ஒரு டிபன் பாக்ஸில் நிரப்பிக் கொண்டு, காலைச் சாப்பாட்டை அவசரகதியில் நின்று கொண்டே உள்ளே தள்ளி விட்டு, அவள் கிளம்பும் போது மணி எட்டே முக்கால். இதில் ஒரே ஒரு நல்லது நடந்ததுனா பள்ளியிலிருந்து அரைகிலோ மீட்டர் நடந்து செல்லும் தூரத்தில் அவள் வீடு இருந்தது. காலையில் நாலு மணிக்கு எழுந்து எட்டு மணி வரை ஓயாத வேலை.பள்ளிக்குச் சென்ற உடன் மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும். ஓய்வு நேரம் ஒன்று உண்டு என்பதே மறந்து போயிருந்தது. கணித ஆசிரியையாக இருப்பதாலோ என்னவோ கணக்குகளைப் போட்டு, போட்டு வேலைகளையும் கணக்குப் போட்டு குறித்த நேரத்தில் செய்யப் பழகியிருந்தாள் பத்மினி. பள்ளியில் பத்மினி டீச்சர் என்றால் பிடிக்காத குழந்தைகளே கிடையாது. எந்த நேரமும் மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு அவளிடம் விடை கிடைக்கும். அவளின் நகைச்சுவை உணர்வு மாணவர்களுக்கு எப்போதும் பிடித்தமானது. "டேய் கணேசா உங்க வீட்டுல கோழி இருக்காடா" ? "ஆமாங்க டீச்சர்" " தினத்திக்கும் முட்டையிடுமா?" "ஆமாங்க டீச்சர்." "எத்தனை முட்டையிடும்" " ஒன்னு டீச்சர்" "கணேசா கோழி கூட தினமும் ஒரு முட்டை தான் இடுது நீ என்னடானா, உன்னோட பேப்பரில நிறைய முட்டையா என்னைப் போட வைக்கிறயேடா கண்ணா. சரி இந்தா இதையும் கொண்டு போயி வறுத்து போடு. என்று நாசுக்காக மனதில் காயம் ஏற்படாமல் அவன் தவறுகளை சுட்டிக் காட்டி விடுவார். அப்புறம் அவன் நிச்சயமாக அடுத்த முறை முட்டை மதிப்பெண் வாங்கவே மாட்டான். வீட்டுக்கு வெளியே இருக்கும் வரை மாணவ, மாணவிகளுடன் உற்சாகமாக தன் பணியை செய்யும் பத்மினி, வீட்டுக்குள் நுழையும் போதே, கனமான இறுக்கமான வேறொரு முகமூடியைப் போட்டுக் கொண்டு, வேலைக்காரி போல் அவர் வீட்டுக்குள்ளேயே நுழைய வேண்டியிருக்கும். பத்மினியின் கணவரும் ஆசிரியர் தான். அவருக்கு இருக்கும் பணிச்சுமை, தன் மனைவிக்கும் இருக்கும் என்பதை எப்போதும் புரிந்து கொண்டதாகவே காட்டிக் கொள்ள மாட்டார். ஆண் என்ற அதிகாரத்தில் மனைவியை உருட்டி மிரட்டி விடுவார். பத்மினி சம்பளத்தை கவரில் போட்டு அங்கேயிருந்து வாங்கி வருவதோடு சரி. வந்ததும் கணவரின் கையில் கொடுத்து விட வேண்டும். திருமணம் நடந்த புதியதில் சம்பள பணத்தை வாங்கிட்டு, வழக்கம் போல அம்மாவுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, புருஷன் வீட்டுக்கு கொஞ்சம் இனிப்பு, காரமெல்லாம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தாள். வீட்டுக்குள் வந்ததும் மாமியார், "பத்மினி சம்பளம் போட்டாச்சா" "போட்டாச்சு அத்தை." "சரிம்மா அதைக் கொண்டு போய் சாமி படத்துக்கு முன்னால வச்சிடுமா." பத்மினி எதுவும் பேசாமல் சம்பளக் கவரை வைத்தாள். கணவர் வந்து பணத்தை எண்ணி விட்டு, "என்ன பணம் குறையுதே" அவர் முகத்தில் கோபம் தாண்டவமாடியது. அவளும் பணம் குறைந்தற்கான காரணத்தைச் சொன்னாள். "உங்கம்மாவுக்கெல்லாம் இனிமேல் நீ பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்ல. அதெல்லாம் உன்னட அண்ணே, தம்பிக கொடுப்பாங்க என கத்தி விட்டு, திங்கிற பண்டமெல்லாம் இத்தனை வாங்க கூடாது. எதுக்கும் ஒரு அளவு இருக்கு அந்த அளவோடு தான் செலவு செய்யணும்" எனச் சொன்ன போதே, நல்ல வருமானமுள்ள அடிமையா என்னைப் பிடித்து விட்டார்கள் என்று பத்மினி மனக் கணக்குப் போட்டு விட்டாள். கால ஓட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளையும் அவர்களும் பெத்து வளர்ந்துட்டு வந்தாங்க. அன்று பத்மினியின் பள்ளியில் ஆண்டு விழா. நிகழ்ச்சியை முடித்து விட்டு வீட்டுக்கு வரும்போது இரவு எட்டு மணி. வீட்டுக்குள் நுழையும் போதே வீடே மயான அமைதியில் இருந்தது. வழக்கம் போல் ஷோபாவில் அமர்ந்து சன் டிவியில் சீரியல் பார்க்கும் மாமியார் அங்கே இல்லாதது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. சமையல் அறையின் மின்ஒளி அவளை அங்கே எட்டிப் பார்க்க வைத்தது. 'அப்பாடா இன்னைக்கு ஒரு நாளைக்காவது நமக்கு சமைச்சு தர மாமியாருக்கு மனசு வந்திருக்கே' என்ற மகிழ்வில் , 'ரேகா, ரேகா' என இரண்டாவது மகளை அழைத்துக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தார். அவள் மாமியார் சரோஜா, "ஆடி அசஞ்சு வரதுக்கு இவ்வளவு நேரமாச்சா? ஊட்டுல ஒருத்தி சாப்பாடு இல்லாம இருப்பானு தெரியாத உனக்கு?" "அத்தை இன்னைக்கு நான் வரதுக்கு லேட்டாகுனு சொல்லிட்டுத் தானே போனே! " "நீ சொல்றதை எல்லாம் நெனைப்பு வச்சுகிட்டு இருக்க முடியுமா? வயசாவுதுல்ல. ஒரு உப்புமாவாது கிளறித் திங்கலானு பார்த்தா ரவை எங்கேனு தெரியல தேடித் தேடி காலே ஓஞ்சு போச்சு.". 'ஆமாம் சமையலறைப் பக்கம் எட்டிப் பார்த்தால் தானே எந்தப் பொருள் எங்கே இருக்குனு தெரியும்' என்று மனசுக்குள் முணுமுணுப்பு செய்து கொண்டவள். "சரி விடுங்க நானே பத்து நிமிஷத்தில சமைச்சுடறேன்" என்று வந்த களைப்பை தூர எரிந்து விட்டு ரவையை எடுக்கப் போன சமயத்தில், "அதெல்லாம் ஒன்னும் வேணாம் ஓட்டலுக்கு வாங்கப் போயிட்டாங்க" என்று சொல்லி விட்டு நகர்ந்தார் மாமியார். எப்படியோ சமைக்கிற வேலை மிச்சமாகிடுச்சுனு உள்ளே சென்று புடவையை மாற்றி விட்டு, சமையலறைக்குள் மீண்டும் வந்த போது தான் தெரிந்தது, மாமியார் ரவையை தேடியதில் பல சம்படங்களின் மூடிகள் கழண்டு கீழே கிடந்தது. அதிலிருந்த சோம்பு, சீரகம், கசகசா என எல்லா பொருளும் சிதறி காலில் குத்தி நின்றது. "அடக் கடவுளே" என பத்மினி தலைமேல் கையை வைத்தபடியே சுத்தம் செய்து விட்டு நிமிர்ந்த போது மணி ஒன்பது. " இவன் ஓட்டல் கடைக்கு வாங்கப் போனானா? இல்ல சமையல் செய்யப் போனானா? இன்னும் காணோம்" என முணுமுணுத்துக் கொண்டிருந்தாள் மாமியார். குழந்தைகளை ஓட்டலில் சாப்பிட வைத்து விட்டு, வாங்கிட்டு வருவார் என்று பத்மினியும் காத்திருந்தாள். சற்று நேரத்தில் வந்த கணவன் "அம்மா இந்தா" எனப் பொட்டலத்தை அம்மா கையில் கொடுத்ததும் 'அப்பாடா, வந்துட்டியா? பசி மயக்கத்தில் உயிரே போயிடும் போல இருக்கு' எனச் சொல்லிக் கொண்டே பொட்டலத்தைப் பிரித்து வாயில் போட்ட சரோஜாமா, மருமகளைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. அப்போது தான் பத்மினிக்கு தெரிந்தது கணவன் தனக்கென்று எதுவும் வாங்கவில்லை என்று. பத்மினிக்கு அழுகையாய் வந்தது. மதியம் இரண்டு மணிக்கு அவசரமாக, காலையில் டிபனில் அடைத்த பருப்பு சாம்பாரை அள்ளிப் போட்டது. குழந்தைகள் இரண்டு பேரும், "அம்மா நாங்க பரோட்டா சாப்பிட்டோம் சூப்பரா இருந்துச்சு". "ஓ.. அப்படியாமா! அம்மாவை விட்டுட்டே போயிட்டீங்க அம்மாவுக்கு வாங்கலையாமா?" மனம் பொறுக்காமல் கேட்டாள். "அம்மா நானும் அப்பாகிட்ட கேட்டேன். அப்பத்தாவுக்கு வாங்கற, அம்மாவுக்கு வாங்கலையானு, உனக்கு ஸ்கூல் ஆண்டு விழா முடிந்து, அங்கேயே சாப்பாடு கொடுப்பாங்க. அம்மா சாப்பிட்டு வருவானு அப்பா சொன்னாருமா" . "ஓ..சரிமா நீங்க போய் படுங்க" என்று அவர்களை அனுப்பி விட்டு இரண்டு டம்ளர் தண்ணீரை மோந்து குடித்து விட்டு வந்தவள் முன், மாமியார் சாப்பிட்டு பெரிய ஏப்பமாக விட்டாள். படுக்கையறையில் நுழைந்து குழந்தைகள் தூங்கி விட்டார்களா? எனப் பார்த்து விட்டு தான் எப்போதும் அறைக்குள் நுழைவாள். அவளுக்கு எத்தனை அலுப்பு இருந்தாலும், அவனுக்கு அலுக்கவே அலுக்காத விஷயம் இவளது உடம்பு. ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் படுத்தி எடுத்து விடுவான். எல்லா வேலையைப் போல இதுவும் ஒரு வேலை போல் வைத்திருந்தான்‌. இருவரும் இணைந்து மகிழ்ந்து ஒருவருக்கொருவர் ஸ்பரிசித்து, விரல்களால் தலை கோதி, கை கால்களை உரசி, முத்தம் மிட்டு உணர்வுகளை எழுப்பிக் கொண்டு இணைவது தான் தாம்பத்தியம் அது தான் அவளுக்குப் பிடிக்கும். இங்கே புணர்வது என்பதே அவனுடைய உடல் இச்சைக்கு என்றான போது அவளின் மன ஆசைக்கு எங்கே வழி கிடைக்கும்.பசியால் மயங்கி கிடக்கிறாள் என்பதைக் கூட அறியாதவன் அவன் உடல்பசியை ஆற்றிக் கொண்டிருந்தான். அவள் மௌனமாய் கண்ணீர் உகுத்துக் கொண்டு இருந்தாள். அவளை வளர்த்த பெற்றோர்கள் மீது கோபம் கொப்பளித்தது. ஆண்கள்னா அப்படித்தான் இருப்பாங்க, நாம அடங்கித் தான் போகணும் எனச் சொல்லிச் சொல்லி படம் எடுத்து வைத்திருந்தார்கள். அவள் அம்மாவும் அவள் அப்பாவுக்கு அடங்கியவள் தான். எதிர்த்து ஒரு வார்த்தை பேச இயலாது. அதே மாதிரி பத்மினியும் படித்து டீச்சராக இருந்தாலும் வீட்டுக்குள் தன் முகமூடியை கழட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். கால ஓட்டத்தில் மாமியார் படுத்த படுக்கையான போதும் இவளே பார்க்க வேண்டிய சூழல். மாமியாருக்கு பணிவிடை செய்யும் போதெல்லாம் அவள் விசிறிய சொற்களை கோர்த்தெடுத்து மாலையாக அவளுக்கு போட நினைப்பாள். ஆனால் அவளின் மனிதாபிமானம் இடங் கொடுக்கவில்லை. நல்லபடியாக அவளை வழியனுப்பி விட்டு, புள்ளைகளுக்கு கல்யாணம் செய்து ஓய்வு எடுக்கும் நேரத்தில் மீண்டும் பத்மினியை விதி தொரத்த ஆரம்பித்தது. ஆம், கணவர் பரந்தாமனுக்கு திடீரென ஒரு கை கால்கள் செயலிழந்து மூளை நினைவுகள் குறைந்து போனது. மருத்துவமனையில் இரண்டு மாதங்கள் தங்கி வைத்தியம் பார்த்தார்.அதன் பிறகு மருத்துவர், வீட்டில் வைத்து பிஸியோதெரபி செய்தால் ஓரளவு நடக்கலாம் என்று சொல்லிய போது பத்மினிக்கு எழுபத்தைந்து வயது. மருத்துவமனையில் நினைவுகள் குறைந்து கிடந்த கணவரைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு அவர் செய்த பழைய நினைவுகள் எட்டி பார்க்கும். அவரையறியாமலே மனசு குரூர திருப்தி அடைந்தது. தினந்தினம் எத்தனை அவமானங்கள், உதாசீனப் படுத்துதல் சம்பளக்கவரைக்கூட பிரித்துப் பார்க்க விடாத அதிகாரத்தனம். உன் மனைவியை ஒரு உயிருள்ள பொம்மையாக வைத்து விளையாடிய விளையாட்டு போதும் போடா, என்று விதியே நொந்து போய் அவரை படுக்கையில் தள்ளி விட்டதால் தான் அடங்கி கிடக்கிறார். படுக்கையில் விழும் வரை அவரின் அதிகாரம் கொடி கட்டிப் பறந்தது. கட்டிலில் இருக்கும் புருஷனைப் பார்க்க முடியாது என்று தூக்கி எரிய முடியவில்லை அவளுக்குள் மனிதாபிமானம் இருந்தது. மூன்று வருடங்கள் படுக்கையில் கிடந்த அவரை இப்போது நடக்க வைத்துக் கொண்டு இருக்கிறார். அவருக்கு முன்பு கலகலப்பாக சிரிக்கிறார். அவர் கணவர் தனக்கு முன்பு செய்த கொடுமைகளை கணவன் முன்பாகவே பிறரிடம் மனம் விட்டுச் சொல்லி சிரித்துக் கொண்டே பேசுகிறார். அவரின் கணவர் பரந்தாமனோ, தன் மனைவி பத்மினி தன்னைக் குறித்த செய்திகளை அடுத்தவர்களிடம் பேசுவதை கேட்கும் சுயநிலைக்கு வந்திருந்தார். நான் பேசறதெல்லாம் அவருக்கு இப்ப புரியறதில்லை எனச் சொல்லி மகிழ்ந்து கொண்டு இருக்கும் தன் மனைவி பத்மினி முன், எதுவும் புரியாதவர் போல், நடித்துக் கொண்டு அமைதியாக நாட்களை நகர்த்துகிறார். பூங்காவில் ஒரு சிறுவன் எறிந்த பந்து பத்மினி மீது பட்டதும் திடுக்கிட்டு நினைவு களைந்து எழுந்தார். பந்தை வீசிய அந்த சிறுவன் கையைப் பிசைந்து கொண்டு, அவர் என்ன திட்டப் போகிறாரோ என்ற பயத்தில் நின்றான். "வாடா கண்ணா" இந்தா பந்து என அவனிடம் பந்தை எடுத்துக் கொடுத்து விட்டு, தன் கணவரை, "ஏங்க நேரமாகிப் போச்சு வாங்க வீட்டுக்குப் போலாம்" என அவரின் கரம் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். இப்போதெல்லாம் பத்மினி வீட்டுக்குள் நுழையும் போது, அவருக்கு முகமூடி தேவையிருப்பதில்லை. அதை அவருடைய கணவர் பரந்தாமன் அணிய ஆரம்பித்திருந்தார். யசோதா பழனிச்சாமி ஈரோடு.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.