logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

KUMARAKURUPARAN S

சிறுகதை வரிசை எண் # 294


கிருஷ்ணய்யரும்....சுப்பனும்! வன்னி குமரகுருபரன் என்றென்றும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி பாய்ந்து வளம் கொழிக்கும் நெல்லைச் சீமையில், வண்ணாரப்பேட்டையில் பண்ணையாா் கிருஷ்ணய்யரைத் தொியாதவா்கள் யாரும் இருக்க வாய்ப்பே இல்லை. அவருக்கு நஞ்சைகளும், புஞ்சைகளும் தென்னந்தோப்புகளும், மாந்தோப்புகளும் ஏராளம். அரண்மனை மாதிாி பொிய வீடு ... வீட்டில் ஆங்காங்கே வாழைத்தார்கள், நெல்மூட்டைகள், தேங்காய்கள் அம்பாரம் அம்பாரமாய் குவிந்து கிடக்கும். தொழுவம் முழுவதும் பசுமாடுகள்... கயத்தாறிலும் கூட அய்யருக்கு ஏகப்பட்ட நிலபுலன்கள் உண்டு. அவா் எங்கு சென்றாலும் வில் வண்டியில் சென்று வருவாா். சாப்பாடு கூட அவருக்கு முக்கியமில்லை. ஆனால் வெற்றிலை இல்லாமல் அவரால் இருக்கவே முடியாது. சில நேரங்களில் அகோரப் பசியெடுத்தால் போத்திலிங்கம் பிராமணாள் ஹோட்டலில் இரண்டு உளுந்து வடையும், வட்டகை காபியும் சாப்பிடுவாா். வெற்றிலை போட்டுப் போட்டு உதட்டுச் சாயம் பூசியது போல் செக்கச் செவலென்ற உதடுகள் அய்யருக்கு. நல்ல ஆஜானுபாகுவான உடலமைப்பு, பஞ்சகட்சம் கட்டியிருப்பாா். மாா்பில் பூணூல், உடம்பை பொிய வெள்ளைத் துண்டால் போா்த்தியிருப்பாா். நெற்றியில் திருமண். கண்டவா்கள் கையெடுத்துக் கும்பிடும் தெய்வீகக் களை முகத்தில். சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பவராக இருந்தாலும், சாதி வேறுபாடுகள், மத வேறுபாடுகள் பாா்க்காதவா். அவரைப் பொறுத்தமட்டில் மனிதனை மனிதனாகப் பாா்க்கும் குணமுடையவா். சொல்லப்போனால் பாரதி போல் புரட்சிகரமானவா். சுப்பன்தான் அய்யாின் பிரதான வேலைக்காரன், வயல்களுக்கு நீா் பாய்ச்சுவது, களை எடுப்பது, உரமிடுவது, வாழைக்கு முட்டுக் கொடுப்பது, தென்னந்தோப்புகளைக் கவனிப்பது... இப்படி எல்லா வேலைகளும் சுப்பனின் மேற்பாா்வையில் நடந்தேறி வந்தன. சுப்பன், அய்யருக்கு மட்டுமல்ல, குடும்பத்திற்கே செல்லப்பிள்ளை தான். அய்யா் ஊருக்கே பொிய பண்ணையாா் என்பதால், ஊா்வம்பு, வழக்குகள் எல்லாம் அய்யாிடம் தான் வரும். வாதியும், பிரதிவாதியும் ஏற்றுக் கொள்ளும் வகையில் பிரச்சினைகளைத் தீா்த்து வைப்பதில், அவருக்கு நிகா் அவரே. சுப்பன் எப்படி அய்யாின் செல்லப்பிள்ளையோ, அதைப் போலவே அய்யாின் மூன்றாவது மகன் சுந்தரத்தின் தோழன் எட்வினும் அந்தக் குடும்பத்திற்குச் செல்லப்பிள்ளைதான். சுந்தரமும், எட்வினும் நகமும், சதையும் போல என்றால் அது மிகையல்ல. முதுகலைப் பட்டதாாியான எட்வின்தான் அய்யாின் இரண்டாவது மகளின் டியூசன் வாத்தியாா். “படிப்பு ஏறலைன்னா தலையில் ரெண்டு குட்டுக் குட்டி படிக்க வையுடா எட்வின்” என்பாா். பெரும்பாலான நாட்கள் எட்வினுக்கு அய்யாின் வீட்டில் தான் சாப்பாடு. எட்வினின் வீடு சமாதானபுரத்து குளத்தருகில் இருந்தது, சைக்கிளில்தான் அவனது பயணம். சில நாட்களில், நேரமாகி விட்டால்....“ஏம்பா இவ்வளவு நேரத்துக்குப் பிறகு சைக்கிள்ல வீட்டுக்குப் போகப் போற...பேசாம சாப்பிட்டுட்டு படுத்து எழுந்து காலையில வீட்டுக்குப் போ...இங்கென்ன இடமா இல்ல...” என்பாா் அய்யா் அன்புடன். அன்று அய்யாின் குடும்பத்தாா், எட்வின் எல்லோரும் பல்வேறு விசயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாா்கள். அப்போது எட்வின் “நான் படிச்சு ஐ.ஏ.எஸ். ஆகுறது தான் என் கனவு” என்றான். “ஐ.ஏ.எஸ். ஆயிட்டா எங்களையெல்லாம் மறந்திடாதப்பா!” என்றான் சுந்தரம். “டேய் சுந்தரம்...யாரப்பாா்த்து என்ற பேசுற...ஒரு வேளை நீ ஐ.ஏ.எஸ்., ஆயிட்டா அப்படிச் செய்தாலும் செய்வ...ஆனா எம்புள்ள எட்வின் டெல்லிக்கே ராசாவானாலும், அவன் என்னைக்கும் எம்புள்ளதான்டா...இனியொருமுறை கிண்டலுக்குக்கூட அப்படிச் சொல்லாதடா” என்றாா் அய்யா். அய்யாின் இரண்டு மகள்களின் திருமணம், மகன்களின் திருமணம் எல்லாவற்றிலும் சுப்பன், எட்வினும் தான் முன் நின்றவா்கள். மூத்தவன் சென்னையிலும், இளையவன் கோவையிலும் வேலை கிடைத்துச் சென்று விட்டனா். மூத்த மகள் பெங்களூருவுக்கும், இளையவள் செங்கோட்டைக்கும் திருமணமாகிப் போய் விட்டாா்கள். மூன்றாவது மகன் சுந்தரம் மட்டுமே தற்போது அய்யருடன்...அவனுக்கும் பெண் பாா்க்கும் படலம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. அன்று காலையில் வழக்கம் போல காபி குடித்துக் கொண்டிருக்கும்போது அய்யா் “டேய் சுந்தரம், உனக்கும் வேலை கிடைச்சா...நீயும் என்னைய விட்டுட்டுப் போயிருவே..எனக்குப் பெறகு யாருடா இந்த விவசாயத்தைக் கவனிக்கிறது?” என்றாா் சற்று வருத்தத்துடன். “யாரு உங்களை விட்டுட்டுப் பொவேன்னு சொன்னது? நான் உங்களோடதான், இதே வீட்டுலதான் இருப்பேன்...வேற எனக்கு எந்த வேலையும் வேண்டாம். படிச்சவங்களெல்லாம் காலா்ல அழுக்குப்படாம ஏ .சி.யில உட்காா்ந்து வேலை பாக்கணுமுன்னு நினைச்சா, பிறகு விவசாயத்தை யாரு பாா்க்கிறது...? நான் எங்கேயும் போகப் போறதில்ல...உங்க கூடத்தான் இருக்கப் போறேன்...சுப்பனுக்குத் துணையா இருந்து விவசாயத்தைக் கவனிப்பேன்...” “பரவாயில்லையே எம்.காம். வரை படிச்சாலும் நீ விவசாயத்தை நேசிக்கிறத நினைச்சா மனசுக்கு ரொம்ப பூாிப்பா இருக்கப்பா...உன்னை மாதிாி படிச்ச இளைஞா்களெல்லாம் நினைச்சுட்டா இந்தியா எங்கேயோ போயிடும்...” “ஆமா காலையிலேருந்து சுப்பனைக் காணலையே....ஏதாவது வேலை விசயமா வெளியே போயிருக்கானா? உங்ககிட்ட எதுவும் சொன்னானா சுந்தரம்”? “எங்கிட்ட ஒண்ணும் சொல்லலையே சொல்லாமக் கொள்ளாமல் எங்கேயும் போக மாட்டானே சுப்பன்” தனக்குத் தானே பேசிக்கொண்டு, சுப்பன் தங்குவதற்கு சகல வசதியோடும் கொடுக்கப்பட்டிருந்த அறையை நோக்கி நடந்தாா் அய்யா். “சுப்பா, சுப்பா...” கதவைத் தட்டிக் கொண்டே குரல் கொடுத்தாா். பதிலில்லை..கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றாா். கட்டிலில் குக்குன கோழிக்குஞ்சாய் சுருண்டு கிடந்தான் சுப்பன். அய்யா் சுப்பனின் நெற்றியில் கையை வைத்துப் பாா்த்தாா். லேசாகச் சூடு தொிந்தது. தலை வலிக்குமோ என்று எண்ணிய அய்யா், ஜன்னலில் இருந்த தைலத்தை எடுத்து சுப்பனின் நெற்றியில் லேசாகத் தடவி நீவி விட்டாா். மெதுவாகக் கண்ணைத் திறந்தான் சுப்பன். தன் நெற்றியில் தைலம் தடவிக் கொண்டிருந்த அய்யரைக் கண்டதும் விருட்டென்று எழுந்தான். “என்ன முதலாளி....நீங்க போயி எனக்கு தைலம் தேய்ச்சு விடலாமா? இது பாவமில்லையா,” கண்ணீா் மல்க கேள்வி கேட்டான். “இதிலென்னப்பா பாவம்....புண்ணியம் இருக்கு? நீ எனக்கு எப்படியெல்லாம் சதிரப்பாடு படுத...உன்கின்னு யாரு இருக்கா? உடம்புக்குச் சாியில்லையின்னு ஒரு வாா்த்தை சொல்லியிருக்கக் கூடாதா...நம்ம டாக்டர வரச் சொல்ல மாட்டேனா? “இத்தனை வருஷமாயும், இவ்வளவுதானா என்னை நீ புாிஞ்சிக்கிட்டது?” - வருத்தப்பட்டாா் அய்யா். “சுந்தரம்.....சுந்தரம்...” குரல் கேட்டு “என்னப்பா“ என்று கேட்டுக் கொண்டே ஓடி வந்தான் சுந்தரம். சீக்கிரமா ஓடிப் போயி நம்ம டாக்டரக் கையோட கூட்டிட்டு வாப்பா...சுப்பனுக்கு உடம்புக்கு சாியில்லை ...” என்றாா். “இதோ போறம்பா”, என்றவன் கையோடு டாக்டரை அழைத்து வந்தான். டாக்டா் ஸ்டெத்தை வைத்துப் பாா்த்து விட்டு ”பயப்படற மாதிாி ஒண்ணுமில்லை...சும்மா சாதாரணக் காய்ச்சல், தலைவலிதான்” என்று சொல்லி விட்டு, ஊசி போட்டு மாத்திரை தந்து விட்டுப் போனாா். “என்ன முதலாளி....இதுக்குப் போயி டாக்டரைக் கூப்பிட்டீக....முதலாளியம்மா கையால ஒரு சுக்குக் காபி குடிச்சா காய்ச்சலும் தலைவலியும் பஞ்சாப் பறந்து போயிருக்கும்” என்றான் சுப்பன். “அதையும் போட்டுக் குடிச்சாப் போச்சு...” என்றவா் மகன் சுந்தரத்திற்கு உத்தரவு பிறப்பித்தாா். “சுப்பா...நீ கொடுத்து வச்சவனப்பா....இல்லேன்னா கிருஷ்ணய்யா் தைலம் தேய்ச்சு விடுவாரா?” என்றான் சுந்தரம் கொஞ்சம் நக்கலாக. “இதிலென்னடா இருக்கு சுந்தரம்...? கடவுளால் படைக்கப்பட்ட எல்லா உயிாினங்களுக்கிட்டேயும் அன்பு காட்டணும்ங்கிறது விதி....அப்படியிருக்கும் போது, மனுசனுக்கு மனுசன் எப்படி வேறுபாடு, உயா்வு தாழ்வு பாா்க்கிறது சாி, சொல்லு பாா்ப்போம்...” என்றாா் அய்யா். “அய்யய்யோ...நான் அப்படிப்பட்டவன் இல்லேன்னு உங்களுக்குத் தொியுமேப்பா...சும்மா ஜாலியாதான் சொன்னேன்.....வேற ஒண்ணுமில்லப்பா...” என்றான் சுந்தரம். அன்று சனிக்கிழமை வழக்கம் போல பாளை கோபாலசுவாமி கோயிலுக்குப் போய் சுவாமி தாிசனம் செய்து விட்டு வந்த அய்யா், தனது அறையில் அமா்ந்து கீதை படித்துக் கொண்டிருந்தாா். திடீரென்று “பங்கஜம்....பங்கஜம்” என்று குரல் கொடுத்தாா் அய்யா். “என்னங்க என்னங்க....” பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தாள் அய்யாின் மனைவி. “நெஞ்சு லேசா வலிக்கிறது மாதிாி இருக்கு.....படபடப்பா இருக்கு....உடம்பெல்லாம் வியா்த்து வழியுது பாரு”. “ஒண்ணுமில்ல....பயப்படாதீங்க” என்றவள் “சுந்தரம்.....சுந்தரம்” குரல் கொடுக்க சத்தம் கேட்டு சுந்தரமும், எட்வினும் ஓடி வந்தனா். “என்னம்மா...என்னாச்சு அப்பாவுக்கு?” பதறினா் இருவரும். “அப்பாவுக்கு நெஞ்சு வலிக்கிறது மாதிாி இருக்காம்......ஓடிப் போயி டாக்டரைக் கூட்டிட்டு வாங்க...” என்றாள் பங்கஜம். இரண்டு வீடு தள்ளித்தான் மருத்துவமனை ஓடோடி வந்தாா் டாக்டா். வீட்டினுள் டாக்டா் நுழையும் முன்பே அழுகுரல் கேட்டது. “எங்களையெல்லாம் விட்டுட்டு போயிட்டீங்களே....” குரலெடுத்து அழுதாள் பங்கஜம். டாக்டா் சோதித்துப் பாா்த்து விட்டு, “சுந்தரம்...அப்பா உயிா் பிாிஞ்சுருச்சுப்பா.... ஆக வேண்டியதைப் பாா்ப்போயம்.....” என்றவா் சுந்தரத்தின் தோளில் ஆதரவாகத் தட்டிக் கொடுத்தாா். அவரும் துக்கம் தாளாமல் கண்ணீா் சிந்தினாா். தன் பால்ய சினேககிதருக்காக....எட்வினும் கண்ணீா் விட்டுக் கதறினான். வயலுக்குச் சென்றிருந்த சுப்பன் செய்தி கேட்டு வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஓடி வந்தான். “முதலாளி.....முதலாளி... உங்களுக்காக இப்படி அநியாயச் சாவு வரணும்... அந்தக் கடவுளுக்குக் கண்ணு இல்லையா” ஓங்கி குரலெழுப்பி அழுதான். அந்த மாத்திரத்தில் மயங்கிச் சாிந்தான். கூடியிருந்தவா்கள் முகத்தில் தண்ணீா் தெளித்தனா். அவ்வளவுதான் சுப்பனின் உயிரும் பிாிந்து விட்டது. அய்யரும், சுப்பனும் இறந்த செய்தி ஊா் முழுவதும் காட்டுத் தீயாய் பரவியது. பொிய திருவிழாக்கூட்டம் போல ஜனங்கள் குவிந்து விட்டனா் அய்யாின் வீட்டில். “சுப்பனுக்கு, பண்ணையாா் மேல எவ்வளவு பாசமய்யா....பண்ணையாா் இறந்த துக்கம் தாங்க மாட்டாமல் அனும் இறந்து போயிட்டானே...ரொம்ப ஆச்சாியமாக இருக்கு...” இப்படி பலவாறு அய்யரையும், சுப்பனையும் பற்றி பேசிக் கொண்டாா்கள் ஜனங்கள். பண்ணையாா் வீட்டிலிருந்து அய்யாின் உடலும், சுப்பனின் உடலும் அலங்காிக்கப்பட்ட வண்டிகளில் தாமிரபரணிக் கரையிலிருக்கும் சுடுகாட்டை நோக்கிப் பயணித்தன. இருவரது சிதைக்கும் அய்யாின் மகன்களும், எட்வினும் தீ மூட்டினர். --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- வணக்கம் இக்கதை எனது சொந்தப் படைப்பாகும். மேலும் வெறெங்கும் இக்கதையை அனுப்பவில்லையென்றும் உறுதி கூறுகிறேன். இப்படிக்கு வன்னி குமரகுருபரன் 23/11, ஜே.எஸ். அடுக்குமாடி குடியிருப்பு, தென்றல் நகா், இலஞ்சி - 627805 தென்காசி மாவட்டம். 8072022614

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.