அசோக்குமார்
சிறுகதை வரிசை எண்
# 293
கொற்றவை
அதிகாலையில் ஏனோ தட்டி விட்டது போல் விழிப்பு வர, அனிச்சையாய் கை நீட்டி சைலண்ட் மோடிலிருந்த போனை எடுத்தேன். பதினோரு முறை அம்மாவிடமிருந்து தவறிய அழைப்புகள் வந்திருக்க பகீரென்றது. அம்மாவே அழைத்தாளா இல்லை அம்மாவுக்கு ஏதுமா என்று உள்ளம் பதற போன் செய்தேன்.
“போனை சைலண்ட்ல போட்ருந்தேன். என்னாச்சுமா?"
“ஏண்டி போனை சைலேண்ட்ல வெச்சா அவசரம்னா எப்படி கூப்புடுறது?"
நாள் பூராவும் போனுடனும், லாப்டாப்புடனும் மாரடிக்கும் வேலையில் இரவு மட்டுமே எனக்கானது. அதையும் இழக்க விரும்பவில்லையென அம்மாவுக்கு புரிய வைக்க முடியாது.
“என்ன விசயம்... அதை சொல்லு”.
“ஜெயந்தி கொளுத்திகிட்டாளாண்டி..”
சிந்தனை ஓர் நொடி ஸ்தம்பித்தது. நடுங்கிய குரலில் "எந்த ஜெயந்திமா?" என்றேன்.
“நம்ம ஜெயந்திதான்டி. மரகதம் அண்ணி போன்லருந்து அவங்க பக்கத்து வீட்டு ஆளுக பேசினாங்க.”
“அய்யோ.. எப்பம்மா? இருக்காளா?.... இல்ல...”
“நைட்டு ஒரு மணிக்காம். வீட்லயே கரிக்கட்டையா போச்சாம். கைக்குள்ளயே பொத்தி பொத்தி வெச்சிருந்தா மகள. அண்ணி தனியா என்ன பண்றாளோ ..... எப்புடித்தான் தாங்குவாளோ. சேதி வந்ததும் அப்பா கிளம்பி போயிருக்கார். என்னை உன்கூட வரச்சொல்லிட்டார். நீ எப்போ கிளம்பி வர்ற? சொல்லு”
“சரிம்மா நான் இவர்ட்ட பிள்ளைகள பார்க்க சொல்லிட்டு ஆஃபீஸ் லீவு சொல்லிட்டுத் தான் கிளம்பனும். பத்து மணிக்குள்ள வந்து உன்னை கூட்டிட்டு போறேன்"
"எனக்கு நெஞ்சே வலிக்குதுடி"
"நம்ம கைல எதுவும் இல்ல. நான் வர்ற வரை கொஞ்சம் அமைதியா இரு"
சொல்லி விட்டேனே தவிர அக்காவின் நினைவுகள், அத்தை அவளோடு பட்ட பாடுகள் முன்பின்னாக மனதுக்குள் தோன்றி சோர்வடைய வைத்தன. என் பள்ளிக் காலத்திலேயே அவள் தட்டச்சு, ஷார்ட் ஹாண்ட்டுடன் கல்லூரி படிப்பை முடித்து அரசு வேலைக்கு பரீட்சைகள் எழுதிக் கொண்டிருந்தாள்.
"ஜெயந்தி பொறந்தபோதே நல்ல நீளம், நல்ல எடை. என்ன, கொஞ்சம் கருப்பா போயிட்டா. வளர வளர செவப்பாயிருவா" என்று மரகதம் அத்தை அடிக்கடி பெருமையடித்துக் கொள்வாள். வளர்ச்சி மட்டும் குறைவில்லாமல் இருக்க நிறம் மாறாமல் போனது. பத்தாவது படிக்கும்போதே காலேஜ் பெண்ணை போலிருந்தவள் நல்ல கருப்பும் அகன்று உயர்ந்த உடலுமாக அய்யனார் பெண்ணுருக் கொண்டது போல ஆகிப் போனாள்.
உயரத்தை ஆணுக்கு கம்பீரமாக பார்க்கும் உலகம் பெண்ணுக்கு இழிவாய் பார்த்தது. கல்லூரிப் படிக்கையில் பெயர் மட்டும் நெட்டச்சியிலிருந்து அராபியன் ஹார்ஸ் ஆனாலும் நக்கல்களுக்கும், நையாண்டிகளுக்கும் குறைவில்லாமல் இருந்தது. எல்லோரும் கிண்டல் செய்கையில் கொற்றவை சாமிடி நீ என அத்தை தேற்றுவாள்.
படிப்பை முடித்ததுமே அரசு அலுவலகத்தில் ஸ்டெனோ கிராபர் வேலை கிடைத்தது. சரவணன் மாமா மனசு கொள்ளாத சந்தோஷமும், வாய் கொள்ளாத சிரிப்புமாக ஊர் முழுதும் சேதி பரப்பினார். பெண்ணின் வாழ்க்கை நிறைவடைய கல்யாணம் செய்வதுதான் ஒரே வழி என்ற சமூகத்தில் அத்தை, மாமா மட்டும் விலக்கா என்ன. இருவரும் நான்கு வருடங்களாக மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.
பெண்மைக்குரிய வளைவுகளும், மடிந்து குழைந்த இடுப்பு சதையும் இல்லாமல் அகன்ற இடுப்பும், உயரத்திற்கேற்ப திரண்ட உடலுமாய் வலம் வந்த ஜெயந்தியை கண்டவுடன் பதிலின்றி புறக்கணித்த கூட்டமே அதிகம். குணத்தை பார்த்து கட்டிக்கொள்ள எவனாவது வர மாட்டானா என அத்தை ஏங்காத நாளில்லை. வேண்டாத தெய்வமில்லை. செய்யாத பரிகாரமில்லை.
ஓரிரு பெண் பார்க்கும் வைபவங்களுக்கு நானும் உடனிருந்திருக்கிறேன். ஆனால் ஒரு முறை நடந்த நிகழ்வு மனதை முற்றிலுமாய் சிதைத்து விட்டிருந்தது. கோடை விடுமுறைக்கு அத்தை வீட்டிற்கு சென்றிருந்த நேரமது. ஒரு குடும்பம் பெண் பார்த்துவிட்டு போகையில்...
"தப்பா நெனச்சிக்காதீங்க. நாங்க கிளம்பறோம். பொண்ணு ரொம்ப உயரம். கருப்பா வேற இருக்கு" என்று கூறிய சொற்களைக் கேட்பது புதிதல்ல என்றாலும் ஜெயந்திக்கு வலித்தது. சொல்லடிக்கு உள்ளம் மறத்து விட்டதாக எண்ணிக் கொண்டிருந்தாள்.
"நீ போயி டிரஸ் மாத்தும்மா. உன்ன கட்டிக்கிறதுக்கு அவனுக்கு கொடுத்து வைக்கல" என்று ஆறுதல் படுத்த முயன்றாள் அத்தை.
தலை குனிந்து அமர்ந்திருந்த ஜெயந்தி மௌனமாக எழுந்து உள்ளறைக்கு சென்றாள். ட்ரெஸ்ஸிங் டேபிளில் மேக்கப் பொருட்கள் இறைந்து கிடந்தன. அவற்றை அடுக்கியவாறு நிலைக்கண்ணாடியைப் பார்த்தாள். கண்ணாடியில் தெரிந்த ஒழுங்கற்ற உடலின் திரட்சியைப்பார்த்து வறட்சிப்புன்னகை எழ, ஹேண்ட்பேக்கை மாட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.
"லீவுன்ன? ஆபீஸ் கிளம்பிட்டியா?"
"ஆமாம். கொஞ்ச வேலை இருக்கு"
"இங்க இருந்து என்ன பண்ண போறா? போயிட்டு வரட்டும்" என்றார் மாமா.
செருப்பை மாட்டிக்கொண்டு ஜெயந்தி வெளியே வர, மனசு கேட்காமல் அத்தையும் கூடவே சென்றாள்.
"எதையும் மனசுல வச்சுக்காதடி. ஜாதகத்துல நேரம் சரியில்ல இப்ப”
சிரித்துக் கொண்டாள் ஜெயந்தி.
"எனக்கு ஒண்ணுமில்லம்மா. நீ வருத்தப்படாம இரு" என்று கூறி விட்டு நடக்க துவங்கினாள். முதல் அடிக்கு தான் மனம் துடித்து பதைபதைக்கிறது. நூறாவது அடியில் எதிர்பார்க்க துவங்குகிறது. மனமென்னும் ராட்சசனை அடக்கிவிட்டு நடந்தாள். உடல் முரட்டுத் தோற்றம் கொண்டிருந்தாலும் ஜெயந்தி உள்ளத்தில் மிக அழகானவள்.
அலுவலக வாசலில் செக்யூரிட்டி "குட் மார்னிங் மேடம். லேட்டா?" என்றார்.
"ஆமாம் சார்" என்று புன்னகைத்தவாறு உள்ளே நுழைந்தாள்.
செக்ஸன் ஹெட் கிளார்க் அவளைக் கண்டு ஆச்சர்யத்துடன்,
"என்னம்மா ..... லீவு சொன்ன?" என்றார்.
"வந்துட்டேன் சார்"
"பொண்ணு பார்க்க வந்தாங்களே... என்னாச்சி?"
"ப்ச்ச்...எப்பவும் போல தான் சார்"
"சரி விடு. நல்லவனா அமைவான்"
வலியை மறைத்து புன்னகைத்து விட்டு கேபினில் வந்து அமர்ந்தாள். அழகில்லாத பெண்களுக்கான உலகமல்ல இது. கோப்புகளைத் திறந்து, கவலைகளை மறைக்க மனதை வேலைக்குள் செலுத்தினாள். கோப்புகள் அவளை புதைகுழியாய் உள்வாங்கியது. லைட் போட வந்த செக்யூரிட்டி "ஏழரை ஆயிடுச்சு மேடம்" என்று சொன்னவுடன்தான் நினைவே திரும்பியது.
"தோ கிளம்பிட்டேன்"
ரெஜிஸ்டர்களை அடுக்கி விட்டு பேக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். வயிற்றில் மெல்லிய வலி அலைஅலையாய் பரவ, காலையிலிருந்து சாப்பிடாதது நினைவிற்கு வந்தது. இருளும் ஒளியுமாய் ரோடு நெடிந்து கிடக்க, நடக்க தொடங்கினாள். பாலத்தை நெருங்கையில் இரண்டு பைக்குகள் வெளிச்சத்தை வாரியிறைத்துக் கொண்டு செல்ல வேகமாய் நடந்தாள்.
பாலத்தை நெருங்குகையில் சுருட்டை முடியுடன் ஒருவன் அட்ரஸ் கேட்க ஜெயந்தி நின்று பதில் சொன்னாள். திடீரென பின்னாலிருந்து ஒருவன் வாயைப் பொத்தி கட்டிப் பிடிக்க சுருட்டை முடிக்காரன் முழங்காலைப் பற்றி தூக்கிக்கொண்டான். இருவரும் இறக்கத்தில் தூக்கிக் கொண்டு இறங்கினர். ஜெயந்தி ஆவேசத்துடன் உதைத்து காலை விடுவித்து கொண்டு கத்த முயல பளாரென்று ஒருவன் அறைந்தான். ஜெயந்தி அவனைக் கீழே தள்ள மற்றொருவன் முகத்தில் உதைத்தான். ஜெயந்தி கீழே விழ, இன்னும் இருவர் ஓடி வந்து அவள் காலைப் பற்றி பாலத்தடியில் இழுத்து சென்றனர். ஒருவன் சிரிப்பது தெரிந்தது. கைகள் அவள் உடைகளை அவசரம் அவசரமாய் அவிழ்த்தன. அவள் உடலெங்கும் வாய்கள் முளைத்தன. வயிற்றின் வலி கண்களில் நீராய் வடிந்தது. "விட்ருங்க.. விட்ருங்க" என அவளின் முனகல் அவளுக்கே கேட்காமலிருந்தது. அவள் மயங்கி மயங்கி விழிக்கையில் அவளைக் கண்டு கொள்ளாமல் உலகம் தனித்தியங்கியது.
டீவியில் இரவு 8 மணி செய்திகள் தொடங்க "எங்க இன்னும் இவள காணாம்" என்றாள் அத்தை.
"ஏதாவது வேலை இருக்கும். வந்துருவா"
"ஒரு எட்டு போயி கூட்டிட்டு வந்துருங்க. காலைலயே நொந்துபோயி போனா"
சரவணன் அலுவலகத்தை நெருங்குகையில் லைட்டுகள் அணைக்கப்பட்டு வெளி லைட் மட்டும் எரிவது தெரிந்தது. செக்யூரிட்டி அடையாளம் தெரிந்து கொண்டு "என்ன சார்?" என்றான்.
"பொண்ணு கிளம்பிட்டாளா?"
"ஏழரை மணிக்கு மேல தான் கிளம்புனாங்க சார். நான் லேட்டாயிருச்சினு சொன்னதும்தான் புறப்பட்டாங்க"
குழப்பத்துடன் திரும்பினார். தூங்காமல் நானும் அத்தையுடன் துணைக்கு அமர்ந்திருந்தேன்.
வாசலில் நுழையும்போதே கண்கள் வீட்டுக்குள் தேட "இன்னும் வரலியா?" என்றார்.
"இல்லையே"
"ஏழரை மணிக்கே கிளம்பிட்டாளாம். செக்யூரிட்டி சொன்னாரு"
"சொல்லாம எங்கேயும் போவ மாட்டாளே. ஸ்டாப் வீட்டுக்கேதும் போயிருப்பாளா?"
மாமா பதட்டத்தை மறைத்துக் கொண்டு சேரில் அமர்ந்தார். மூவரும் வாட்சையும், வாசலையும் பார்த்தவாறு அமர்ந்திருந்தோம். மணி பத்தாகியது. 'என்னாச்சோ. எங்க போனாளோ என்று அத்தை புலம்ப துவங்கினாள். சாமி அறையில் விளக்கை ஏற்றி வைத்து விட்டு அமர்ந்து கொண்டாள். 'எப்படியாவது வீட்டுக்கு வர வச்சிரும்மா' என வேண்டத் துவங்கினாள்.
மாமா சேரை எடுத்து வெளியில் போட்டு அமர, வாசற்படியில் அத்தையும், நானும் அமர்ந்து கொண்டோம். ஒரு மணி வரை கதவை திறந்து வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். அவளை சிறு வயதிலிருந்து வளர்த்த ஞாபகங்களை அசை போட்டது மனம். போலீஸ் ஜீப் ரோந்து செல்ல கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தோம். அத்தையின் விசும்பல் ஓசை நெடுநேரம் கேட்டது.
படபடவென கதவைத் தட்டும் ஓசை கேட்க, மூவரும் பதறியடித்துக்கொண்டு எழுந்தோம். மாமா வேகமாக சென்று கதவை திறக்க ஜெயந்தி தலைவிரி கோலமாய் உள்ளே வந்தாள்.
எனக்கு அழுகை வர, "என்னடி ஆச்சு?" என்று அத்தை பதறினாள். ஜெயந்தியின் உதடு கிழிந்து கன்னங்கள் வீங்கியிருந்தன. ஜாக்கெட்டும், சேலையும் கிழிந்திருக்க, உடல் முழுவதும் மண் ஒட்டியிருந்தது. உள்ளங்கைகளில் ரத்தம் படிந்திருந்தது.
அக்காவின் அழுகையில் விழித்து புரியாமல் பார்த்த என்னை அவசரமாக அறைக்குள் தள்ளி கதவைச் சாத்தி தூங்க சொன்னாள் அத்தை. இருப்பினும் எனக்கு ஓரளவு புரிந்தது.
"என்ன ஆச்சுமா?" என்று சரவணன் கேட்க ஜெயந்தி அடக்கமாட்டாமல் கதறத் துவங்கினாள். மரகதமும் சேர்ந்து அழ, செய்வதறியாது சரவணன் திகைத்து நின்றார்.
ஜெயந்தி சற்று நேரம் அழுதுவிட்டு ஆசுவாசமாக, மீண்டும் "என்னம்மா ஆச்சு?" என்றாள் மரகதம்.
ஜெயந்தியிடமிருந்து மீண்டும் அழுகை வெடித்து புறப்பட திக்கி திணறியவாறு "பாலத்துக்கிட்ட வரும் போது நாலஞ்சு பேரு என்ன அடிச்சு தூக்கிட்டு போயி...” என்று அழுதாள்.
"அய்யோ ஆண்டவா" என்று மரகதம் தலையில் அடித்துக் கொண்டு அழ, சரவணன் இடிந்து போய் சுவற்றில் சாய்ந்தார்.
இருவரும் அழுது களைத்ததும் "அவளைக் கூட்டிட்டு போய் குளிக்க வை. காலைல பேசிக்கலாம்" என்றார்.
அவளை அணைத்தவாறு மரகதம் பாத்ரூமிற்கு அழைத்து சென்று உடைகளை அவிழ்த்தாள். உடல் முழுதும் சிராய்த்து மண் அப்பியிருந்தது. மார்பகங்களில் பற்கள் பதிந்து கன்னிப் போயிருந்தன. நகக்கீறல்கள் பதிந்திருந்தன. முகத்தில் கண்ணீருடன் தண்ணீரை குடம் குடமாய் ஊற்றி குளிக்க வைத்து தலையை துவட்டி நைட்டியை அணியச் செய்து படுக்கையில் படுக்க வைத்தாள். முதுகைத் தேய்த்து, தலையை கோதி தூங்க வைத்தாள். கண்ட கனவில், நடந்த நிகழ்வில் இருந்து விடுபடாத மரகதம் மனதிற்குள் எதிர்காலக் கேள்விக்குறியொன்று பிரம்மாண்டமாய் வளர்ந்து நின்றது.
மறுநாள் பகல் முழுவதும் ஜெயந்தி தூங்கினாள். என்ன செய்வதென்றே தோன்றாமல் இருந்தனர். மனதை தேற்றிக்கொண்டு சரவணன் அவளுக்கு ஒரு வாரம் லீவு சொல்லி விட்டு வந்தார்.
"போலீசில் கம்ப்ளைன்ட் பண்ணுனா வாழ்க்கையே போயிரும்"
"இதை அப்படியே மறந்துருவோம்" என்று பலவாறு பேசி முடிவு செய்தனர்.
நள்ளிரவில் திடீரென்று எழுந்த ஜெயந்தி குமட்டலுடன் வாந்தி எடுத்தாள். சத்தமாய் காறி காறி வீட்டிற்குள் துப்பினாள். அருகில் படுத்திருந்த மரகதம் பதறியெழுந்து "என்னடி என்னடி" என்று துடித்தாள்.
"சாராய வாடைம்மா. பீடி நாத்தம் தாங்க முடில" அவளைக் கட்டிக் கொண்டு 'ஓ'வெனக் கதறிய மரகதம்,
"ஒன்னும் இல்லடிம்மா. பயப்படாத.. வீட்ல இருக்க. கண்ண முழிச்சி பாரு" என உலுக்கினாள். ஜெயந்தி மெதுவாக அமைதியடைய அவளை நெஞ்சில் அழுத்திக்கொண்டு அழுதாள்.
"எனக்கு மட்டும் ஏம்மா இப்படி நடக்குது? யாருமா அவனுங்க?"
"கெட்ட கனவா மறந்துருடி. அதையே நினைச்சுகிட்டு இருக்காத"
ஓரிரு நாட்களில் வீட்டில் அழுகை ஓய்ந்தாலும் ஜெயந்தி சோகமாகவே இருந்தாள். உடல் முழுதும் நரவலை உணர்ந்தாள். அவளருகே அமர்ந்து சிறுபிள்ளையைக் கவனிப்பது போல மரகதம் பார்த்துக் கொண்டாள். அந்த சம்பவம் நடந்து சில நாட்களில் நான் வீட்டிற்கு திரும்பி விட்டாலும் தகவல்கள் வந்தவண்ணமிருந்தன.
பத்து நாட்களுக்கு பின்னர் ஜெயந்தி மீண்டும் தந்தையுடன் ஸ்கூட்டரில் வேலைக்குச் சென்றாள். சரவணனே அவளை விட்டு விட்டு மாலையில் திரும்பவும் அழைத்து சென்றார். பாலத்தைக் கடக்கும் போதெல்லாம் அவளின் உடல் நடுங்கியது. விரல்களை மடக்கி இறுக்கிக் கொள்வாள்.
நிலைமை சிறிது இயல்பாகிக் கொண்டிருக்கையில் ஒரு நாள் காலை அலுவலக வாசலில் ஜெயந்தி ஸ்கூட்டரிலிருந்து இறங்கையில் சுருட்டை முடிக்காரன் ஒருவன் அவளைப் பார்த்து சிரிப்பதைக் கவனித்தாள். உடல் நடுக்கமுற்றது. ஆங்காரம் எரிமலையாய் பொங்க, ஒரே பாய்ச்சலாக பாய்ந்து அவன் தலைமுடியைப் பற்றி இழுத்து கீழே தள்ளினாள். "நீதானடா என்ன கெடுத்த?" என்று காட்டுக்கத்தலாய் கத்தியவாறு அவனை அறைந்தாள். அவன் சமாளித்து எழ முயல பைத்தியம் போல மாறி மாறி அடித்தாள். வண்டியை நிறுத்தி விட்டு ஓடி வந்த சரவணன் அவளை இழுக்க, அதற்குள் கூட்டம் கூடியது.
அன்றிரவு கடையை பூட்டி விட்டு வந்த சரவணன் முழு போதையில் தள்ளாட "என்னங்க இது… புதுசா?" என்று மரகதம் அதிர்ந்தாள்.
"என்னால தாங்க முடில. விஷயம் வெளிய தெரிஞ்சிருச்சு. எப்படி வாழப்போறோம்? அவனுங்கள கண்டு புடிச்சு கண்டதுண்டமா வெட்டாம கடைல உட்காந்து மாத்திரை வித்துட்ருக்க கையாலாகாத தகப்பனா போய்ட்டனே" என்று உடைந்து அழுதார். அதன் பின்னர் அடிக்கடி குடித்து விட்டு வந்தார்.
ஒரு நாள் அவள் வேலை செய்து கொண்டிருந்த போது "அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆயிருச்சு. குடிச்சிட்டு வந்து பஸ் டயரில் விழுந்துட்டார், உடல் நசுங்கி ஸ்பாட்டிலேயே காலி” என்று தகவல் வர பதறியடித்துக் கொண்டு அம்மாவுடன் ஆஸ்பத்திரிக்கு சென்றாள். உருக்குலைந்த உடலை போஸ்ட்மார்ட்டம் செய்து அடுத்த நாள் கொடுத்தனர். தேற்றுவதற்கு வார்த்தைகள் இல்லாத இழப்புகள் அடுத்தடுத்து அவர்களை பழி தீர்த்துக் கொண்டிருந்தன.
எண்ணவோட்டத்தை கட்டுப்படுத்திக் கொண்டு கணவனை எழுப்பி செய்தி சொல்லி விட்டு, பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பி விட்டு ஓலோ புக் செய்தேன்.
அம்மா வீட்டு வாசலிலேயே கண்ணீருடன் நின்றாள். பக்கத்தில் அமர்ந்ததும் இருவருக்கும் பேசத் தோன்றவில்லை. அத்தையை நினைத்து இருவருக்கும் கலக்கமாக இருந்தது. துன்பத்தில் நிலவும் அமைதியின் ஓலம் மிகக் கொடூரமானது. அம்மாவின் கை அழுத்திப் பிடித்தது. அவள் மனதிலும் ஓடும் நிகழ்வுகள் புரிந்தன.
ஜெயந்தியிடம் கெஞ்சி கூத்தாடி சைக்யாட்ரிக் டாக்டரிடம் அழைத்து சென்றாள் மரகதம். முதலில் தயங்கி விட்டு மெதுவாக எல்லா விவரங்களையும் கூறினாள். "தப்பு பண்ணிட்டீங்க. போலீசில் சொல்லியிருக்கனும்" என்று மரகதத்தை திட்டிய டாக்டர், ஜெயந்தியிடம் நிறைய பேசினார். மாத்திரைகள் எழுதி தந்தார். மீண்டும் அடுத்த வாரம் வரும்படி கூறினார்.
ஜெயந்தி நாளாக நாளாக அவள் மேலேயே அதிக வெறுப்பை வளர்த்து கொண்டாள். டாக்டர் கொடுத்த மருந்துகளை சாப்பிட மறுத்தாள். ஜெயந்தி வீட்டில் இருக்கையில் அவளுடனேயே பொழுதை கழித்தாள் மரகதம். அவளருகிலேயே படுத்து தூங்கினாள். ஒரு நாள் விழிப்பு வந்து பார்க்கையில் ஜெயந்தி கையில் கத்தியை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க…
"என்னடி பண்ற.. குடு" என்று சத்தம் போட்டு கத்தியைப் பிடுங்கினாள்.
"நான் செத்துட்டன்னா நீயென்ன பண்ணுவ. அதான் யோசிச்சிட்டு இருந்தேன்"
"ஏண்டி இப்படி பேசுற. நாம வேற ஊருக்கு போயிரலாமா?"
"அங்க போயி... தீட்டு கழிக்க போறியா எனக்கு" என்று பேய் பிடித்தது போல சிரித்தாள்.
நிறைய தடவை பலவிதங்களில் தற்கொலைக்கு ஜெயந்தி முயன்றபோதும் அத்தை எப்படியோ தடுத்து விட்டாள். அத்தனைக்குப் பிறகும் அக்கா சமயங்களில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வதும், ஆண்களைக் குறித்து அசிங்கமாகப் பேசுவதுமென இருந்தாலும் நன்றாக சாப்பிட்டு தூங்கிக் கொண்டிருந்தாள்.
மனதாலும் உடம்பாலும் ஒடுங்கிப் போனது என்னவோ அத்தை தான். சாவை விடக் கொடுமையானது செத்து விடுவாளோ என தினம் தினம் பயந்து தெளிவது. மரகதத்திற்கு கணவர் போனதையே மறக்கடித்தது ஜெயந்தியின் நிலை. அவள் பற்றிக் கொண்டிருக்கும் ஒற்றைக் கொம்பு அவள். அவளுக்கு கல்யாணம் நடந்து வாழா விட்டாலும் பாதகமில்லை. பழைய புன்னகையை அவள் முகத்தில் சேர்த்துவிட இரவு பகல் பாராது அருகிருந்து பார்த்துக் கொண்டாள்.
அக்கா கிட்டத்தட்ட ஒரு பைத்தியமாக மாற, அத்தை கூடவே இருந்து பார்த்துப் பார்த்து அழுது வருந்தி அவளும் அறிவிக்கப்படாத மன நோயாளியாக மாறிவிட்டிருந்தாள் .
கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் உறவினர்கள், நண்பர்களுக்கு கசிய, ஜெயந்தியைப் பார்க்கும் பெண்களின் பார்வையில் கேலியும், ஆண்களின் விழிகளில் ஆர்வமும் கூடிப்போனது.
என் திருமணத்தின் போது அக்காவுக்கு வயது 35. அவளுக்கு திருமணம் ஆகும் என்ற ஆசையெல்லாம் அத்தைக்கு விட்டுப் போயிருந்த நேரம்.
விஷேச வீடுகளுக்கு, உறவினர் சந்திப்புகளுக்கு செல்வதை தவிர்த்தே வந்த நேரத்தில் ,
என் திருமணத்திற்கு அத்தையும், அக்காவும் வந்தே தீர வேண்டுமென நான் அடம் பிடித்ததில் அரை மனதாகத்தான் வந்தார்கள்.
அக்கா இழுத்துப் போட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்ததை அத்தை கொஞ்சம் மகிழ்ச்சியோடும் நிறைய பயத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தாள். எந்த நேரத்தில் வெடிப்பாளோ என்று பயந்து கொண்டிருக்கையில் குமரேசன் மாமாவோடு பேசிக் கொண்டிருந்தவளைத் திடீரென காணவில்லை.
பதற்றத்தை காண்பிக்காமல் அத்தையும், அப்பாவும் தேடிய போது மாடியில் ஒரு அறையில் குமரேசன் மாமா ஜெயந்தி அக்காவை தன்னோடு அணைத்து கைகளை அவள் மீது பரவ விட்டுக் கொண்டிருந்தார்.
அக்கா விலக முயற்சி செய்து கொண்டிருக்க, அத்தை பதறியபடி...
"அடப்பாவி , விடுடா அவளை, அவ உன் பொண்ணு மாதிரி .. நீ நல்லாருப்பியா" என்று தலையிலறைந்து அழுது அக்காவை தன்னோடு இழுத்துக் கொண்டாள்.
அப்பா குமரேசன் மாமாவின் சட்டையைப் பிடித்து தூக்கியதும் உதறி விட்டு நகர்ந்த மாமா..
கொஞ்சமும் பதட்டமின்றி, சும்மா கத்தி ஊரைக் கூட்டாத ”அவளே சத்தம் போடல... தள்ளி விடல, பேசாமத் தானே இருக்கா, நீ எதுக்கு துள்ளுற. மொதல்ல நாலு பேர், அடுத்தடுத்து எத்தனை ஆச்சோ. இதுல நான் கை வெச்சதுக்கு மட்டும் என்னவோ கன்னிப் பொண்ணை தொட்டாப்புல எகிறி கிட்டு வரீங்க. அவளுக்கு தான் கல்யாணம் காட்சி இன்னும் பாக்காம கெடக்கா. அவதான் கூப்ட்டான்னு சொல்லிடுவேன்" என்றவாறு வெளியே நடந்தார். ஜெயந்தி முகத்தில் சலனமில்லை.
நெருப்பை அள்ளிக் கொட்டியது போல துடித்துப் போனாள் அத்தை. சமூகத்துடன் சேர்ந்து உறவுகளும் அசிங்கப்படுத்த இன்னும் உடைந்து போனாள். அக்காவை பார்த்துக் கொள்வது ஒன்றே வாழ்க்கையாகி போக, தனது விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி மரத்துப் போய் வாழ்ந்தாள்.
பழைய நினைவுகளிலிருந்து மீண்டு கண்களைத் திறந்தபோது அத்தை வீடு இருக்கும் தெருவுக்கு வண்டி வந்திருந்தது. நாங்கள் இறங்கும்போது கணிசமாய் கூட்டமிருந்தது. அப்பா ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். கண்கள் கலங்கியிருந்தன. அலுவலக நண்பர்கள் கூடவே இருந்து போலீஸ், போஸ்ட்மார்ட்டம் என எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டனர்.
எங்களிடம் வந்த அப்பா "நேத்து நைட்டு ஜெயந்திய சாப்பிட வச்சி, மாத்திர குடுத்து படுக்க வச்சிட்டு அத்தை தூங்கிருக்கா. திடீர்னு புகைல மூச்சு முட்ட எழுந்து பார்த்தா அவ கண்ணு முன்னாடி துளி கூட கத்தாம நெருப்பில் குளிக்கும் அம்மனாட்டம் ஜெயந்தி சிரிச்ச மாதிரியே எரிஞ்சாலாம். ஜெயந்தீனு அத்தை கத்துனா கத்துலதான் பக்கத்தூட்டுக்காரங்க வந்துருக்காங்க" என்றார்.
அக்காவின் உடல் வெள்ளை மூட்டையாய் கூடத்தில் கிடத்தப் பட்டிருந்தது முக்கால்வாசி எரிந்து போன உடலை பொட்டலமாக கட்டி கொடுத்திருந்தார்கள். உடல் நடுங்கிய அம்மாவை அணைத்தபடி உள்ளே சென்றேன். இத்தனை காலமும் தவம் போல் ஜெயந்தியை பார்த்துக் கொண்ட அத்தையை என்ன சொல்லி தேற்றப் போகிறோம் என தெரியாமல் நெருங்கினோம்.
அம்மா அத்தையை கட்டிக் கொண்டு வெடித்து அழுதாள். "இவ்வளோ வருஷமும் நீ பண்ணினதுக்கெல்லாம் அர்த்தமில்லாம போச்சே மரகதம். கடசியா அவ நினைச்சதை பண்ணிட்டு போயிட்டாளே" என்று அழுத அம்மாவை முதுகில் தட்டி அமைதி படுத்தினாள் கல்லாகச் சமைந்திருந்த அத்தை. ஒரு வார்த்தை கூட வாயிலிருந்து வரவில்லை.
பாடை கட்டி மாலை ஆறு மணிக்கு ஜெயந்தியை தூக்கிச் செல்கையில் கருகிய அவள் பாதங்கள் வெளியே தெரிந்தது அவள் மேல் சொல்லெறிந்தவர்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள் என்பது போலிருந்தது.
அவளைக் கொண்டு போன பாதையையே வெறித்துப் பார்த்து விட்டு தளர்வாக உள்ளே வந்து அமர்ந்தாள் மரகதம்.
“எதாச்சும் பேசுங்க அண்ணி. மனசுக்குள்ள அடக்கி வைக்காதீங்க” என்ற அம்மாவிடம்
“இனி என்னடி மனசுக்குள்ள. எல்லாம் ஆயிருச்சி. அவனுங்க நாசம் பண்ணுனதில ரொம்ப துடிச்சு போயிட்டா. நடைபிணமாத்தான் திரிஞ்சிட்டு இருந்தா. உயிரோட நிம்மதியில்லாம இருக்குறதுக்கு எம்புள்ள செத்து நிம்மதியா இருக்கட்டுமே. இனி அவளுக்கும் கவலையில்ல. எனக்கும் பாரமில்ல. அவ்வளவுதான்" என்ற அத்தை அப்பாவிடம் திரும்பி "நாலு இட்லி மட்டும் வாங்கிட்டு வர்றியா. பசிக்குது" என்றாள்.
************
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்