ம.தாட்சாயனி
சிறுகதை வரிசை எண்
# 292
ஒட்டுச்செடி
- தாட்சாயனி மருதநாயகம்
ஏதேதோ எண்ணங்கள் மனம் முழுவதும் ஆக்ரமித்துக்கொள்ள, மெதுவாக நடைபயின்றன அருள்மொழியின் கால்கள். பேருந்தைவிட்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தவளுக்கு திடீரென அந்த நினைவு வர வழக்கமான அவளது நடையின் வேகம் குறைந்தது. வீட்டிற்குப் போக வேண்டும் என்று நினைக்கும்போதே ஏதோ இனம் புரியாத பயம் சூழ்ந்தததை உணர்ந்தாள். ‘பீக் ஹவரில்’ ஒரு மணி நேரம் பேருந்தில் மூச்சுத்திணற பயணித்தும் இறங்கி நடக்கும்போது இதமான காற்று நாசியில் பட்டதைக்கூட அவளால் அனுபவிக்க முடியவில்லை. மாறாக, அந்த ஒரு நினைவு அவளுக்கு மூச்சுத்திணறலைக் கொடுத்தது.
தூக்கத்தில் கண்ட கனவு கலைந்துவிட்டதா என்பதை முடிவுசெய்ய முடியாத குழப்பமான மனநிலையில் இருந்தது அவளது மனம். “இந்நேரம் வந்திருப்பார்கள்” இதை நினைக்கும்போதே உதறல் எடுத்தது…
அவளைப் பொறுத்தவரை அவர்கள் வந்திருந்தாலும் வராவிட்டாலும் இரண்டுமே ஒன்றுதான். ஆனால் அம்மாதான், அவளது மனநிலைதான் எப்படி வேண்டுமானாலும் மாறக்கூடும்..அற்ப கவலைகளுக்கு இடம் கொடுத்து கொடுத்து மனம் முழுவதும் அவையே நிரம்பியிருப்பதாகத் இப்போது அவளுக்குத் தோன்றியது! சிரிக்கக்கூடாது என்று அவள் முடிவு செய்யவில்லையென்றாலும் கூட சமீப காலமாக அவள் சிரித்தால் அதைச் சுற்றியிருப்பவர்கள் அதிசயமாகத்தான் பார்ப்பார்கள். காரணம் எப்போதும் அவளது மனம் எதையோ சிந்தித்து கலங்குவதை அவளது இறுக்கமான முகம் காட்டிவிடும். அதை அவளும் அறியாதவள் இல்லை.
தயங்கித்தயங்கி நடந்து கொண்டிருந்தவள் திடீரென வேகமாக நடந்தாள்.“என்னதான் நடந்துரும் பாத்திடலாம்” என்று முடிவெடுத்துவிட்டாள். யார்யார் மீதோ இருந்த கோபத்தையெல்லாம் ஒன்று சேர்த்து பூமித்தாயைத் தாக்குபவள்போல நிலமதிர நடந்தாள்… பிறகு தான் சாலையில் நடப்பதை நிதானித்தவளாக மெதுவாக நடந்தாள்.
சாலையோரங்களில் வழக்கமான தள்ளுவண்டி கடைகள்…தினந்தோறும் பார்த்தும் பழகாத மனிதர்கள்.. என்றும் எந்தக் கடையையும் போகிறபோக்கில் பார்ப்பாளே தவிர நின்று பார்த்ததில்லை. அவள் உடலில் இருக்கும் களைப்பிற்கு வீட்டை அடைவது ஒன்றே தீர்வாக கருதுவாள். கடைகளிலோ..வேடிக்கை பார்ப்பதிலோ ஒரு கணமும் தாமதிக்க மாட்டாள். இன்று, உடல் கெஞ்சினாலும் ,உடனே வீட்டிற்குச் செல்ல மனம் ஒப்பவில்லை…பேசாம நேரா கோயிலுக்குப் போயிட்டு நேரம் கழிச்சு வீட்டுக்குப் போனா என்ன?” என்று எண்ணம் வந்தது..ஆனாலும் அதற்கும் மனம் ஒப்பவில்லை.
அவர்கள் வந்திருப்பார்களா?.. இந்நேரம் என்ன நடக்கும் எனும் ஆவலை அவளால் அடக்கிக் கொள்ள முடியவில்லை. இப்போதும் அவள் அஞ்சுவது அவர்களை எதிர்கொள்வதற்கு அல்ல, அவர்கள் சென்ற பிறகு அம்மாவை எதிர்கொள்வது குறித்துதான்..
“சே..என்ன இது..எதுக்கு நான் தேவையில்லாம பயப்படுறேன்..அம்மாவ சொல்லி சொல்லி என்ன நானே பலவீனப்படுத்திகிட்டேனா..இல்ல எனக்கொன்னும் அவங்கள பார்க்கறதுல பயம் இல்ல..அவங்க போனதுக்கப்பறம் அம்மாவோட பேச்சு, புலம்பல், அறிவுரை இதெல்லாம் நினச்சாத்தான்…” தனக்குத்தானே மனதிற்குள் பேசிக்கொண்டு சென்றாள். பாதை முடிவே இல்லாமல் தொடர்வது போல இருந்தது…கால்கள் முன்னோக்கிச் செல்ல அவளது நினைவோ அவளது அனுமதியில்லாமலே பின்னோக்கி நகர்ந்தது…….
“இப்ப முடிவா என்னதான் சொல்ற…”
“முடிவா சொல்றதில்ல முதல்லேயிருந்து சொல்றதுதான்..என்னோட சம்பள பணத்த எங்க வீட்டுக்குக் குடுக்கணும்னு நான் இன்னைக்குத்தான் உங்ககிட்ட சொல்றேனா..என்ன பொண்ணு பார்க்க வந்தன்னிக்கே சொல்லல..அப்ப எல்லாத்துக்கும் சரிசரின்னிங்க…”
“அப்ப இந்த விஷயம் பெரிசா தோணல..இப்பத்தானே தொழில்ல நஷ்டம் வந்து அத சரிகட்ட கடனவாங்கி அத அடக்க வேண்டிய நிலமைல நான் இருக்கேன்..இப்ப நமக்கே பணத்தேவை இருக்கறப்போ நீ உன்னோட சம்பளத்த எப்பவும் போல அம்மா வீட்டுக்குக் குடுப்பேன்னு அடம்பிடிக்கிற”
“நம்ம கஷ்டத்த சரி பண்ண ஆயிரம் வழி இருக்கு..அவங்களுக்கு என்ன விட்டா யாரு இருக்கா..அப்பாவோட பென்ஸன் பணம் வைத்தியச் செலவுக்கே பத்தாது…”
“உங்கூட வாதாட நான் தயாரில்ல… இது என் வீடு..நீ இங்க இருக்கனும்னா…நான் சொல்றததான் கேக்கணும்.” விறுவிறுவென வெளியேறினான்…வெளியேறியவன் வீட்டிற்கு வருவதற்குள் இவள் வெளியேறி பிறந்தவீட்டிற்கு வந்துவிடத்தான் நினைத்தாள்...ஆனாலும் அந்த அளவிற்கு கணவன் கொடுமைக்காரன் அல்ல…திருமணமாகி இரண்டு ஆண்டுகளில் இந்த ஒரு விஷயத்தைத் தவிர வேறு எதற்கும் இவர்களுக்குள் பிரச்சனை வந்தது இல்லை.. எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம் என்று தோன்றியது….ஆனால், பலன் நினைத்ததற்கு நேர்மாறாக கிடைத்தது…..
இது குறித்து பேச ஆரம்பிக்கும் போதெல்லாம் பிரச்சனையில் வந்து முடிந்தது….நிம்மதி தொலைந்தது..அவளுக்கு மட்டும் அல்ல ..அவனுக்கும் தான்…அதற்காக தன் பிடிவாதத்தில் இறங்கி வர அவன் தயாரில்லை…. அப்பா அம்மா எப்படியோ போகட்டும் என்று விட்டுவிட இவளாலும் முடியவில்லை…
வழக்கம் போல அந்த மாத சம்பளத்தில் பாதியை அப்பாவின் பெயரில் வங்கியில் போட்டு விட்டு வீட்டிற்கு வந்தபோது..அவள் எதிர்பார்த்தவாறே அவன் ஹாலில் அமர்ந்திருந்தான்…
”நான் அவ்வளவு சொல்லியும் …நீ பணத்த அனுப்பிட்டு வரன்னா…இவன் என்ன சொல்றது நான் என்ன கேக்குறதுன்ற நினைப்புதான…”
“நான்தான் சொல்றேனே…என் குடும்பம் இருக்குற நிலைமையில என்னால எதுவும் செய்யாம இருக்க முடியாதுங்க…அதுக்காக நம்ம பிரச்சனை பத்தியும் நான் யோசிக்காம இல்ல…ஆபிஸ்ல லோன் போட்டு..”
அவன் முடிக்கவிடவில்லை…… வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கத் தொடங்கினான்….இருவரும் மாறி மாறி பேசிக் கொண்டே போக நிலைமை விபரீதமாய் போவதை உணர்ந்த அவளது அத்தை இடையில் வந்து மகனை அமைதிப்படுத்தியும் பலனில்லை…பேச்சு முற்றி “நான் சொல்றத கேட்க முடியாட்டி நீ இங்க இருக்க வேண்டிய அவசியம் இல்ல ..தாராளமா அம்மா வீட்டுக்கே போயிடு…உன் பணத்த உன் இஷ்டப்படி செலவு பண்ணு…நான் ஏன் கேக்க போறேன்…” என்றான்…
அவள் போக மாட்டாள் என்ற எண்ணத்தில் அவன் சொல்ல அவளோ….அவன் எண்ணத்தைப் பொய்யாக்குவது போல் புறப்பட்டுவிட்டாள்…….அவளது அத்தை அவளை தடுத்துப்பார்த்தார் ..அவள் கேட்பதாக இல்லை... அன்று வீட்டை விட்டு கிளம்பும்போது அவன் தடுக்க வேண்டும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை..ஆனால், சில நாட்களில் தன்னை அழைத்துச் செல்ல வருவான் என்று நினைக்காமல் இல்லை….அது பொய்யாகவும் தான் அவனது கோபத்தின் உச்சம் புரிந்தது….
ஆறு மாதங்கள் ஆகி வி்ட்டது.....அடிக்கடி அம்மாவும் அந்தப்பக்கம் அத்தையும் சமாதானம் செய்விக்க எடுக்கும் முயற்சிகள் இவளுக்குத் தெரியும்..இவளும் அத்தையுடனும் மாமாவிடமும் தொலைபேசியில் பேசத்தான் செய்கிறாள்…. “நீ முதல்ல இங்க வா…எதுனாலும் பேசிக்கலாம்..நான் அவன்கிட்ட பேசறேன்…” என்று அத்தை சொன்னாலும்… இந்த பிரச்சனைக்குத் தீர்வு தெரியாமால் அங்கு செல்ல அவளுக்கு விருப்பம் இல்லை….இன்று அதற்காகத்தான் அத்தையும் மாமாவும் வீட்டிற்கு வருகிறார்கள்..
ஆமாம்..எதிர்பார்த்ததுதான்.. ஏற்கனவே அவர்கள் வந்து அமர்ந்திருந்தார்கள்..
சடங்காக ஒற்றைச்சிரிப்பு..சம்பிரதாயமாக நாலு வார்த்தை..சிரிப்புதான் வந்தது அருள்மொழிக்கு. அதோடு பெண்பார்க்க வந்த அந்த தினத்தின் நினைவும்…
அனுபவசாலிகள் என்று காட்டிக்கொள்ள பெரியவர்கள் உரக்கப் பேசி சிரிக்கவும், ஏதோ வேடிக்கை போல குழந்தைகள் விளையாடவும் என கூடம் நிறைந்திருக்க வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் நிலையில், தனியறையில் அவளும் அவனும் பேசின சொற்கள் இன்று சொப்பனம் போல நினைவுக்கு வந்தன…
இருவரும் பரஸ்பரம் தன் விருப்பத்தைத் தெரிவித்த பிறகு, “கல்யாணத்துக்கப்பறம் எங்கப்பா அம்மா எங்கூடத்தான் இருப்பாங்க..அவங்களுக்கு நான் ஒரே பிள்ளை..அவங்கள முதியோர் இல்லம் அதுஇதுன்னு எங்கயும் என்னால அனுப்ப முடியாது..இதுக்கு உங்களுக்குச் சம்மதமா?”அவன் கேட்கவும்,
“அதுல எனக்கெந்த பிரச்சனையும் இல்ல..நீங்க இப்படி சொன்னதே எனக்கு சந்தோசம்தான்.. அதேமாதிரி நானும் என் வீட்டுக்கு ஒரே பொண்ணு..என்ன படிக்க வச்சு ஆளாக்குன எங்கப்பா அம்மாவுக்கு நான் ஏதாவது செய்யணும்…அதுனால கல்யாணத்துக்கப்பறமும் என்னோட சம்பளத்த எங்க வீட்டுக்குக் குடுக்கணும்..முழுசா இல்லன்னா கூட அவங்க தேவைய பாத்துக்கற அளவுக்கு…ஏன்னா அப்பா ரிடையர் ஆயிட்டாரு..தனியார் கம்பெனிங்கறனால பென்சன் பெரிசா இல்ல..”
தயங்கித்தயங்கித்தான் கூறினாள்..”இதுக்கேன் இவ்வளவு தயக்கம்…அவங்க இனிமே எனக்கும் அப்பா அம்மாதான்..” இப்படிச் சொன்னவர்தான் “இது என் வீடு” என்று இடித்துக்காட்டினார்…… ஆனால், அவளோ…. மாமியார் மாமனார் இருவரும் மருமகளுக்காக மகனிடம் சண்டை போட்டு, அவளை மறுபடி அழைக்க வீடு தேடி வரும் அளவிற்கு நல்ல மருமகளாகத்தான் நடந்து கொண்டிருக்கிறாள்………
”நாங்க கிளம்புறோம்மா…அம்மா அப்பாகிட்ட எல்லாத்தையும் பேசியாச்சு, நாளைக்குத் தயாராயிரு..அவன அனுப்பறேன்..அவன் வந்து உன்ன வீட்டுக்குக் கூட்டிட்டு வருவான்”
அவர்கள் சென்று விட்டனர். ஆனால், “அவரும் நானும் பேசி முடிவு செய்யாமல் இந்த பிரச்சனை எப்படி முடியும்”அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை…
“அம்மா…..”
“இப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு..நாளைக்கு மாப்பிள்ள வருவாரு..அவரோட நீ கிளம்பிப் போற..”
“நான் என்ன சொல்றேன்னு….”
“நீ ஒண்ணும் சொல்ல வேணாம்…மாப்பிள்ள சொன்னார்னா மட்டும் எங்களுக்குப் பணம் குடுத்தா போதும்…உன்ன வளர்த்த எங்களுக்கு எங்க வயித்துப்பாட்டையும் பாத்துக்கத் தெரியும்…இத காரணமா வச்சு நீ வாழாவெட்டியா இருக்கறதுதான் என்னால தாங்க முடியல..”
வழக்கம் போல அழத் தொடங்கினாள்.. ஒரு வருடமாக இதே பல்லவிதானே…ஆனால், வழக்கத்திற்கு மாறாக அப்பாவும் அம்மாவை ஆதரித்து“அம்மா சொல்றதுதான் எனக்கும் சரின்னு படுது…” என்றது தான் ஆச்சரியமாக இருந்தது…
கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போதே வளாகத் தேர்வில் தேர்வாகி வேலையும் கிடைத்து, முதல் சம்பள நாளில் அம்மாவிற்குப் புடவையும் அப்பாவிற்கு வேட்டி சட்டையும் வாங்கிக்கொண்டு ஆசையாக வீட்டிற்குத் திரும்பிய அந்த நாளில் அம்மா சொன்னாள்..“நாளைக்குச் சீக்கிரம் வீட்டுக்கு வந்துடு..உன்ன பொண்ணு பார்க்க வராங்க..”
“இப்ப என்னம்மா அவசரம்…இப்பதான வேலை கிடச்சிருக்கு..அதுக்குள்ள..”
“வேலை கிடைக்கத்தாண்டி இத்தனநாள் காத்துக்கிட்டு இருந்தோம்..இப்ப வந்திருக்கிற வரன் கூட வேலைக்குப் போற பொண்ணுன்னா பரவாயில்லன்னுதான் சொல்றாங்க..இப்பவே சொந்தக்காரங்க கேட்க ஆரம்பிச்சுட்டாங்க..இன்னும் எத்தனநாள் உன்ன வீட்டுல வச்சுகிட்டு இருக்கறது..”
“ஏம்மா.. இன்னக்கித்தான் முதல்மாச சம்பளமே வாங்கியிருக்கிறேன்..உனக்கும் அப்பாவுக்கும் என்னோட சம்பளத்துல என்ன என்ன செய்யணும்னு ஆசையா இருக்கு தெரியுமா”
“அதுக்காக நல்ல வரன் வர்றப்போ உன்ன கட்டிக்குடுக்காம..அப்பறம் நல்ல இடத்த தேடி அலைய முடியுமா“
“சரி என்ன விடு..என் படிப்புக்கு பேங்க்ல வாங்குன கடன அடைக்கணும்..அப்பா ஆபரேசனுக்காக அடகு வச்ச இந்த வீட்ட மீட்கணும்..இதெல்லாம் மறந்துட்டு கல்யாண ஏற்பாடு பண்றியே…என் சம்பளம் இல்லாம எப்படி இதெல்லாம் சமாளிக்க முடியும்”
“அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம்மா… எங்க கவல உனக்குப் பண்ண வேண்டிய நல்லத பண்ணனும்கிறதுதான்…”
“அப்ப எதுக்குப்பா இவ்வளவு கஷ்டப்பட்டு என்ன படிக்க வச்சிங்க..”
“நீ பொம்பளப் புள்ளமா..நீ வேல பார்த்து எங்களுக்குக் குடுக்கணும்னு நாங்க எதிர்பார்க்க முடியாது..நாளைக்கு நீ போற இடத்துல மரியாதயா இருக்கணும்..அவங்களுக்கு ஒன்னோட சம்பளம் தேவப்படும்..அதுனாலதான் படிக்க வச்சது..நீ பேசிட்டு இருக்கறதில்ல பிரயோஜனம் ஒண்ணும் இல்லம்மா..நாளக்குக் கல்யாணத்துக்கப்பறம் புகுந்த வீட்டுல சம்மதிச்சா நீ எங்களுக்கு என்ன செய்ய நினக்கிறியோ அதச் செய்யி…அவ்வளவுதான்..”
அப்பாவும் முடிவாக சொல்ல, மறுக்க முடியாமல் ஆனால், கணவன் தன் முடிவுக்கு குறுக்கே நிற்க மாட்டான் என்ற நம்பிக்கையோடும் மனநிறைவோடும் திருமணம் நடந்தேறியது….ஆனால்..இன்று…
இதே சிந்தனையில் இருந்தவளை அப்பாவின் வார்த்தைகள் நினைவுக்குக் கொண்டு வந்தன.
“நாங்க உன்ன பெத்து வளத்தவங்கதான்மா..ஆனா..கட்டிக்குடுத்தாச்சு..இனி எங்களுக்காக உன்னோட வாழ்க்கையைப் பாழாக்கிக்காதே…நாளைக்கு மாப்பிள்ளையோட நீ உன் புகுந்த வீட்டுக்குப் போய்டும்மா..”
அன்றும் சரி, இன்றும் சரி அப்பா அம்மாவின் பேச்சில் எந்த மாற்றமும் இல்லை..பெண்ணைப் பெற்று வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கினாலும்…அவளும்..அவளது உழைப்பின் பயனும் கணவன் வீட்டுக்கே சொந்தம் என்று அப்பா அம்மாவே நினைக்கிறார்கள்…இவர்களை மட்டும் சொல்லி என்ன…எல்லாருமே அப்படித்தான்….” நினைத்துக்கொண்டே தோட்டத்திற்கு வந்தாள்…
சுகமான காற்று நாசியில் பட்டது….கூடவே எலுமிச்சையின் விவரிக்க முடியாத மணமும்..இது எப்போது நட்டது…ஆமாம்..…இது ஒட்டுரகச் செடி..மாமா வீட்டிற்கு விடுமுறைக்கு ஒருமுறை சென்றிருந்தபோது அவர் நட்டுவைத்திருந்த செடியின் கிளையை வளைத்து மண்ணில் செலுத்தி நீர்ஊற்றி வளர்த்து புதிய செடியாக துளிர்விட்டதும் அதை உடைத்து கொண்டுவந்து இங்கு நட்டேன்..இப்போது இங்கு பலன் தருகிறது…ஆகா..பள்ளியில் படிக்கும் காலத்தில் இதை செய்த போதும், பிறகு இந்த செடி காய்ப்புக்கு வந்து பயன் தரத் தொடங்கியபோதும்..சாதிக்க முடியாததைச் சாதித்தது போல எவ்வளவு பெருமையாக இருந்தது..இதைச் சொல்லி மகிழாத ஆளே இல்லை…ஆனால், இப்போது இதை நினைத்தால் ஏன் மனம் பாரமாகிறது…
தினமும் கண்ணில்படும் அந்தச் செடி இன்று ஏதோ புது அர்த்தத்தைக் கொடுப்பதாகப் பட்டது..
சரி..முடிவு எடுக்க வேண்டுமே…யோசிக்காமல் தள்ளிபோடுவதால் தப்ப முடியுமா? என்ன முடிவு அதுதான் என்னைத் தவிர எல்லாராலும் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டதே…
தாங்கள் கஷ்ட ஜீவனம் நடத்தினாலும் மகள் கணவன் வீட்டில் இருந்தால்தான் கடமை நிறைவுறும் என்று பெற்றவர்கள் நினைக்கிறார்கள்…இனியும் இங்கிருந்து இவர்கள் வருத்தத்தை அதிகரிப்பதை விட…………….இப்படியெல்லாம் நினைத்தவள் பிறகு அறைக்குள் சென்றாள்…தன் துணிகளையும் பொருட்களையும் எடுத்து வைக்க….காற்றில் அசைந்த ஒட்டுச்செடி அவளைப் பார்த்து சிரிப்பதாகத் தோன்றியது…
முகவரி
ம.தாட்சாயனி
த/பெ.மருதநாயகம்
3-1-64, செக்கடித் தெரு,
திரு.வி.க.நகர்,
சின்னாளபட்டி 624301
திண்டுக்கல் மாவட்டம்.
தொடர்பு எண் – 9894189272
மின்னஞ்சல் முகவரி – cnpthatchayani1999@gmail.com
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்