Gaja கஜேந்திரன்
சிறுகதை வரிசை எண்
# 291
எண்ணையாகும் வேப்பம் பழங்கள்
——————————
நகரத்தின் விரிவாக்கப் பகுதி அது. அந்தப் பகுதியையும் மைய நகரத்தை இணைக்கும் அந்த சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசலாக இருக்கும். சாலையோரம் சற்று தூரமாக இருந்தது அந்த துணியாலான கூடாரம். ஒற்றை மாட்டு வண்டி நிற்க அதிலே கட்டப்பட்ட மாடு இரைக்காக அங்குமிங்குமாக பரிதாபமாகப் பார்த்தபடி நின்றது
அந்த வண்டியின் அருகே ஒரு சிறு கல்லில் அமர்ந்திருந்தார் அந்தப் பெரியவர். அவர் காலடியில் நாயொன்று அவ்வப்போது எதையோ தேடி ஓடுவதும் திரும்பவும் ஓடிவந்து அவரிடமே படுப்பதுமாக இருந்தது
பெரியவர் சுற்றி நடப்பதெதிலும் ஆர்வமற்றவராக, சிந்தனையால் எங்கோ நிலைகொண்டிருந்தார்.
பரம்பரையாக கலைக்கூத்து நடத்தி வாழ்க்கை நடத்துபவர்கள் அவர்கள். மகனும் மருமகளும் இந்த பெண் குழந்தையை விட்டுவிட்டு சாலையோரத்தில் கூத்து நடத்திக் கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் இறந்து போனார்கள் அன்று முதல் பேத்தியே வாழ்க்கையென வாழ்ந்து வருகிறார்.
சிறுமிக்கு கயிற்றின் மேலே நடக்கவும் சிறுசிறு அசைவுகளோடு ஆடவும் கற்றுக் கொடுத்திருந்தார். அவரும் சாட்டையால் அடித்துக் கொள்வதும் உருமி அழுத்தியபடி நடனம் செய்வதுமாக அன்றைய நாள் பிழைப்புக்கு வழி தேடுவார்கள் இருவரும். மொத்தத்தில் அன்றாடப் பசிக்கு தீர்வு கிடைத்துவிடும் உத்தரவாதம் இருந்தது.
என்ன தாத்தா, என்ன யோசனை என்றபடி அவரருகே வந்தாள் அவரது பேத்தி முத்துரோஜா. சிந்தனை களைய அவளை ஏறிட்டுப் பார்த்தார். அவளென்றால் அவருக்கு அத்தனை பிரியம் வாழ்வது கூட அவளுக்காகவேதான். தமக்கும் வயதாகிக் கொண்டிருப்பதால் தமக்குப் பின்பு அவளின் நிலையை நினைத்து வருத்தப்படுவதோடு தம் ஆயுள் கூட வேண்டுமென வேண்டிக்கொள்வார்.
யோசனையெல்லாம் உன்ன நினைச்சுத்தாண்டா எனக்கு வேறென்ன தெரியும். எனக்கும் வயதாகிக்கிட்டே போகுது யாரோ தெரியாதவங்க இறந்தாலும் எனக்குள்ளொரு பயம் வருகிறது. உன்னோட வாழ்க்கையைப் பற்றிய பயம் கூடுதலாக இருக்கிறதும்மா
ஏதோ எங்க பாட்டன் பூட்டன் காலத்திலிருந்து இந்த கலைக் கூத்து கஞ்சி ஊத்துச்சு, காலம் தள்ளியாச்சு இப்பவெல்லாம் மக்கள் முன்ன மாதிரி இல்லையேப்பா ஏதோ வேண்டா வெறுப்பா எதையாவது எறிஞ்சிட்டுப் போறத நினைச்சா வாழனுமானு கூட தோனுது
என்ன தாத்தா இவ்வளவு வெசனப்படுறீங்க மரம் வச்சவன் தண்ணி ஊத்துவானு அப்பப்பச் சொல்லுவீங்க அதெல்லாம் சும்மாதானா
தாத்தா முன்னேயெல்லாம் வயிற்றுக்கு மட்டும் ஓடுனாங்க இப்ப அந்த ரோட்டப் பாருங்க எல்லோருமே வண்டி வாகனம், பேசுவதற்கு போன் எனத் தேவைகள் நிறைய ஆக ஆக மன ஆசைகளுக்காகவும் ஓடுறாங்க.
நீங்க ஏன் அதையெல்லாம் போட்டுக் குழம்புறீங்க தாத்தா
இல்லடா நீ படிக்கனும்னு மனசுக்குள்ள ஆசைப்படுறது தெரியும் உன்ன வச்சுத்தான் அன்றாட கஞ்சின்னு இருக்கிறத நினைச்சா எரியிற கொள்ளிகட்ட எறும்பாட்டமா மனசு அனலா இருக்குதுடா.
அட விடுங்க தாத்தா, எல்லாம் நல்லபடியா நடக்கும் இத்தனை நாளா தொழிலே சரியில்ல ஆனா எப்படியாவது ரெண்டு நேரமாவது சாப்பாடுறோம்ல இன்னைக்கு அதோ அந்த வீட்டுக்காரங்க ரேசன் அரிசி முழுவதும் நமக்குக் கொடுத்துட்டாங்க அதனால எப்படியும் பத்துப் பதினைந்து நாளுக்கு கஞ்சி உறுதி கடலைத் துவயலுக்கு கடவுள் பார்த்துக்கிறுவார் கவலய விடுங்க தாத்தா என்றாள் முத்து
பெரிய மனுசியாட்டம் எனக்கே சொல்றது சரிதான் ஆனா நெசம் வேறடா கண்ணு, என்ற பெருமூச்சில் ஆயிரம் கவலைகள் தெரிந்தன.
அப்போது அங்கு நாலைந்து பேர் வர, தாத்தா ஏதோ குழப்பத்தோடு அவர்களைப் பார்த்தார்
வந்தவர்கள் பேசலானார்கள், பெரியவரே நாங்க நகராட்சி ஆபிஸ்ல இருந்து வருகிறோம் இந்த கூடாரம் நம்மதுங்களா இங்க இந்த எடத்தயெல்லாம் சுத்தப்படுத்தி வேலிகட்டப் போறோம் நீங்க நாளைக்குள்ள இதெல்லாம் காலி பண்ணிட்டு வேற இடத்தப் பாருங்க என்றதும் பெரியவர் நிலைகுலைந்து நின்றார்.
ஐயா இங்க அக்கம் பக்கத்தில கூத்து நடத்திப் பொழப்பு நடக்குது கொஞ்ச நாள்ல நாங்களே போயிறுவோமே என்று முடிப்பதற்குள்
வந்தவர்களில் ஒருவர் சொன்னார் பெரியவரே இன்னும் கூத்து கீத்துனு இருக்கீங்களே வேற பொழப்பத் தேடுங்களே என்றார்
பெரியவர் மனசு வலியைக் காட்டிக்காமல் எங்க முப்பாட்டன் காலத்திலிருந்து தெரிந்த கலை அரசர்கள் காலத்தில மானியமா காடு கரை வாங்கிய வம்சம் இன்னைக்கு இப்படி ஒன்ட இடத்துக்கும் ஒருவேளக் கஞ்சிக்கும் அலையிறோம் ஆனா பாருங்க யாரையும் ஏமாத்தல வஞ்சகம் சூது செய்யாம காலம் ஓடுது சாமி என்றார்
சரி சரி ஒங்ககிட்ட பேச நேரமில்ல பெரியவரே, நீங்களா காலிபண்ணிட்டுப் போறது நல்லது , நாளைக்கு வரும்போது இவ்வளவு பேச மாட்டோம் தெரியுதா என்றபடி நகர்ந்தனர்.சொன்னதுல ஒரு எச்சரிக்கைத் தொனி தெரிந்தது
சரிங்க ஐயா, கூட மாட வேல செய்யிற பையன் வந்ததும் நாங்க கிளம்பிப் போயிருவோம் என்ற பதிலுக்கு அவர்கள் காத்திருக்கவில்லை
மறுநாள் அவர்கள் அங்கிருந்து புதிய பகுதிக்கு மாறியிருந்தார்கள். அந்தப் பகுதி பழக்கத்துக்கு வர ரெண்டு மூனு நாளாகும். முத்து, இப்படியே வெளிய போய் இடங்களப் பார்த்துட்டு வர்றேன் அந்தப் பய வந்தா சாப்பிடுங்க என்றபடி வெளிய கிளம்பினார் பெரியவர்
வழக்கமான புது மனுசங்களோட பல விதமான விசாரிப்பும் கேள்விகளுமா நேரம் கழிந்தது கூத்துக்கு போக வேண்டிய கட்டாயமும் நெருக்கிக் கொண்டிருந்தது
அன்றும் வழமை போல காலை விடிந்தது. தாத்தா, அந்தப் பகுதியில மையமான இடத்தைத் தேர்வு செய்திருந்தார். ஒரு மைதான ஓரமாக அவர்கள் தயாராகிக் கொண்டிருக்க,
இரண்டு நாளாக உடல். நிலை சரியில்லை என்றாலும் ஒருவேளை உணவுக்காக.......
நாங்கள் மட்டும் ஏன் இப்படி.? என பள்ளி செல்லும் சிறுமிகளைப் பார்த்த வண்ணம் தயாராகிக் கொண்டிருந்தாள் முத்து.
என்னம்மா, போகலாமா பக்கத்தில பெரிய கோவிலிருக்கு நல்ல கூட்டம் கூடும், இன்னைக்கு ஒருநாள் கொஞ்சம் கஷ்டத்த பொறுத்துகம்மா என்றபடி தாத்தா முத்துவிடம் சொல்லியபடி கூட இருப்பவனையும் கிளம்ப தயார்படுத்தினார்.
கோயில ஒட்டி கொஞ்சம் மக்கள் கூடிநின்று பார்க்க வசதியான இடத்தை தேடினார் அந்த பெரியவர்.அவர் திருப்திபட இடத்தைப் பார்த்து அதற்கான சாமான்களோடு கூத்துக்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.
அந்தவேளை காவல்துறை வாகனம் ஒன்று வந்ததும் அதிலிருந்த காவலர்கள் வேகமாக இறங்கி பெரியவரை நோக்கி வந்தனர். வந்தவர்களில் பெரிய அதிகாரி பேச ஆரம்பித்தார் “ பெரியவரே இங்க கூட்டம் சேர்க்கக் கூடாது, சாமான்கள எடுத்துட்டு கிளம்புங்க”என்றவர் காவலர்களப் பார்த்து அவர்கள அப்புறப்படுத்த உத்தரவிட்டார்
பெரியவர் பதறிப்போனார் “ ஐயா எங்க பொழப்புய்யா, ரொம்ப கஷ்டத்தில இருக்கிறோம் மழை வேற தொந்தரவு வேறவழியில்லைங்க தயவு செய்து ஒத்தாசை பண்ணுங்கய்யா”என்றார் பௌயமாக
ஐயா “ஒங்க கஷ்டம் பரியுது ஆனா பெரிய தலைவர் பிறந்தநாள் வருது பிரச்சனைகள் வராமலிருக்க
மாவட்டம் முழுவதும் மூனு நாலு பேர் கூட தடைஉத்தரவு போட்டிருக்கு அரசாங்கம்” அதனால நீங்க வேற நாள்ல பண்ணுங்க இப்ப கிளம்புங்க என்றார்” அதிகாரி
“தலைவருக நல்லதுதானய்யா செஞ்சாங்க இப்படி எங்க பொழப்ப கெடுக்கச் சொல்லலியே”என்று தன் ஆதங்கத்த கொட்டினார் பெரியவர்
அதிகாரி சற்று உரக்க “ஐயா காலம் மாறி எங்கேயோ போய்கிட்டிருக்கு இன்னும் இந்த சின்னபிள்ளைய வச்சு பொழக்கனும்னு இருக்கிறது நியாயமா படுதா உங்களுக்கு” என்றார்
பெரியவர் பாவனையோடு என்னங்க பண்ணுறது எங்க தலைவிதி அப்படியிருக்கே என்றார்
“விதி கிதின்னு என்னத்தயாவது சொல்லாதீங்க உழைக்கப்பாருங்க அடுத்தவக கைய எதிர்பார்த்து
வாழுறத விடுங்க”என்றார் அதிகாரி
விடனும்னு தான் நினைக்கிறோம் முடியலேங்கய்யா என்றார் பெரியவர்
சரி காலையில பக்கத்தில இருக்கிற ஸ்டேசனுக்கு வாங்க அந்த பாப்பாவ ஏதாவது விடுதியில சேர்க்க ஏற்பாடு செய்கிறேன் நீங்கள் மரியாதையா வாழ வழிபார்ப்போம் இப்ப இங்கயிருந்து கிளம்புங்க என விரட்ட ஆரம்பித்தார் அதிகாரி.
மறுநாள் காலை காவல் நிலையத்தில் அதிகாரியைச் சந்தித்தனர். உன்னோட பேரென்னம்மா என்ற அதிகாரி
கேட்டதும் முத்து ரோஜா என்றபடி அருகே சென்றாள் முத்து
பள்ளிக்கூடத்தில சேர்த்து விடுறேன் படிக்கிறாயாம்மா என்ற கேள்வி முடிவதற்குள் கண்கள் அகல விரிய கண்ணீர் சிந்தியபடி சரி யென்றாள், குட் அதற்கான ஏற்பாடுகளை செய்றேம்மா அங்கேயே தங்கிப் படிக்கலாம் என்றார்.
உன்னோட தாத்தாவுக்கும் நல்ல ஏற்பாடு செய்றேம்மா என்றார் அதிகாரி
தாத்தா தயங்கிய படி உங்க நல்ல மனசு புரியுது ஆனா எவ்வளவு கஷ்டம் வந்தாலும் மீனவன் கடலவிட்டுப் போறதில்ல விவசாயி விவசாயத்தை விடுறதில்ல அதுபோல காலங்காலமா காத்துவந்த கலைகள் அழிஞ்சுருமய்யா
என்றார்
பெரியவரே எவ்வளவோ மாற்றங்கள் நடந்திருச்சு கலைகள் எவ்வளவோ மாறி வேற வேற வடிவங்களாச்சு இன்னும் இவ்வளவு கஷ்டத்தில இந்தச் சின்ன பிள்ளையோட எதிர்காலத்த வீணாக்க வேண்டாம். உங்களுக்கும் வயசாயிருச்சு உங்களுக்குப் பின்னாடி அந்தப் பிள்ளையோட நிலமைய யோசிங்க,
உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன் நாளைக்கு மாவட்ட ஆட்சியரைப் பார்க்க ஏற்பாடு செய்றேன் நல்லதே நடக்கும் என்றபடி வெளியே கிளம்பத் தயாரானார் அந்த அதிகாரி
கை கூப்பியபடி அவரோட நல்ல மனச மெச்சியபடி வெளியே வந்ந பெரியவர் தனது பேத்தியின் கரங்களைப் பற்றினார்
எது நடக்கப்போகுதோ என குழப்பத்தில வரும் பொழுதுகள்
எப்படியோ என்ற கவலையோடு அங்கிருந்து புறப்பட தயாராகினர் அவர்கள். முத்துரோஜாவின் கண்களில் வெளிச்சம் கூடுதலாயிருந்தது.
ச கஜேந்திரன். (சகா)
99407819981
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்