logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

முனைவர் ரத்னமாலா புரூஸ்

சிறுகதை வரிசை எண் # 290


வள்ளி “வள்ளி!” “என்னம்மா?”, என்றாள் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த வள்ளி. “வேகமா தண்ணிக் குடத்த எடுத்துட்டு வா. செண்பகமும், முத்துலட்சுமியும் கிளம்பிட்டாக” “அம்மா நான் வரல. நீ மட்டும் போம்மா”, என்றபடியே மூன்று நெகிழிக் குடங்களை எடுத்துக்கொண்டு வந்து தன் அம்மாவிடம் கொடுத்தாள் வள்ளி. “ஏன்டி, நீ வரலைன்னா எப்படி தண்ணியக் கோர்றது, கொண்டு வர்றது? இன்னைக்கி சாயங்காலத்தோட தண்ணி தீந்துடும். அப்புறம் குடிக்க சொட்டுத் தண்ணி இருக்காது. புறவாசல் போறதுக்கும் தண்ணி கெடயாது. பத்து ரூபா குடுத்தெல்லாம் என்னால தண்ணி வாங்கமுடியாதுட்டி” “கால் நல்லா வலிக்கும்மா. முந்தாநாள் தண்ணிக்குடம் தூக்கிட்டு வரும்போதே முடியலம்மா” “முடியலன்னா ஸ்கூல் போறத நிறுத்திட்டுப் போறேன். அப்பன் இல்லாத புள்ளன்னு செல்லம் கொடுத்தா ரொம்பதான் பண்ணிகிட்டுருக்கற. தண்ணி தவிக்குது, தாகமா இருக்குன்னு சொல்லிட்டு எங்கிட்ட வந்தே அம்புட்டுதான்”, என்றாள் வள்ளியின் தாய் முத்தழகி. வள்ளியின் கண்கள் கலங்கின. “கோவிச்சுக்காதம்மா. தோ வாரேன்” “அதென்னடி கையில?” “சவ்வு மிட்டாய்” “ஏட்டி, கையத் தண்ணில கழுவிறாத. கொடில தொங்குது பாரு. அந்த அழுக்குத் துணில தொடச்சிட்டு வா” அழுக்குத் துணியைப் பார்த்தாள் வள்ளி. அதில் துடைத்தால் அந்த அழுக்கு முழுவதும் அவளது கையில் ஒட்டிக் கொள்ளுமளவுக்கு அந்தத் துணி இருந்தது. ‘சீ’ என்று சொல்லிக் கொண்டே தன்னுடைய பாவாடையில் துடைத்துக்கொண்டாள் வள்ளி. குடங்களை எடுத்துக் கொண்டு ஓடும் அம்மாவைப் பின் தொடர்ந்து ஓடினாள் அவள். சோழந்தூர் என்னும் அந்தச் சிற்றூரில் இருந்து வள்ளி, முத்தழகி, இன்னும் சில பெண்கள் மற்றும் ஆண்களுமாக குடிநீர் எடுப்பதற்குத் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆற்றுப்படுகைக்குச் சென்றார்கள். சிலர் தள்ளுவண்டிகளிலும் காலிக்குடங்களை எடுத்து வந்திருந்தார்கள். வெயில் நாற்பது டிகிரியில் கொளுத்திக் கொண்டிருந்தது. அங்கே இது சர்வசாதாரணம். கோடைக்காலம், மழைக்காலம், வாடைக் காலம், வசந்த காலம் என்றெல்லாம் அங்கு பாகுபாடே இல்லை. வெயில், கொடுமையான வெயில், கொடூரமான வெயில், இதை மட்டுமே அவ்வூர் மக்கள் அறிந்திருந்தார்கள். சூரியனுடைய சுட்டெரிக்கும் அன்பில் திளைத்துக்கொள்ளப் பழகிவிட்டார்கள். “அம்மா எங்க பள்ளிக்கூடத்துல டீச்சர் சொன்னாங்க நம்ம கிராமம் ஒரு காலத்துல நெல்லு விளையற பூமியா இருந்திச்சாம். ஏரி கண்மாய்னு தண்ணி நெறைய இருக்குமாம். உண்மையாம்மா?” “உங்க டீச்சர் சொன்னாகன்னா ஒருவேளை உண்மையா இருக்கலாம். ஆனா எனக்குத் தெரிஞ்சு இந்த பூமி ஒரு நாளும் செழிப்பா இருந்ததில்லட்டி. தண்ணியில்லாத காடுதேம். மழை இல்லாத மண்ணுதேம். என்ன பாவம் செஞ்சோமோ இந்தக் காஞ்ச காட்டுக்குள்ள வந்து பொறந்திருக்கோம். தண்ணிக்காகத் தவங் கெடக்கோம். விக்கினா குடிக்கவும், வெளிக்கி போனா கழுவவும் தண்ணியில்லாத ஊர்லயாட்டி கடவுள் பொறக்க வைப்பான்? கண்ணில்லாத கடவுள். அவன் மட்டும் என் கையில கிடைச்சான், அவன நம்ம ஊருணியில போட்டு முக்கி எடுக்கணும்டி” என்றாள் முத்தழகி. “நம்ம ஊருணிலதான் தண்ணியே கெடயாதே”, என்றாள் வள்ளி சிரித்தபடி. “பெரிய ஜோக்கு சொல்லிட்டா. சிரிச்சுற வேண்டியதுதேம்” வள்ளி மௌனமானாள். பின்னர் ஏதோ யோசித்தவளாய், “அம்மா கடவுள் வந்தா தண்ணி வந்துருமா?” “என்னடி உளறிக்கிட்டு. வாய மூடிட்டு வா” “இல்ல. கடவுளை தண்ணியில முக்கணும்னு சொன்னியே. அப்படின்னா கடவுள் வந்தா தண்ணி வந்துடும்ல?” “போடி லூசு” “அம்மா வெயில் தாங்க முடியலம்மா. தண்ணி தாகமா இருக்கு” “இந்தா புள்ள, இன்னைக்குத்தான் வெயில்ல வர்ரமாரி பேசுறீக! தாகமாம்ல, தண்ணி எடுக்க வரமாட்டேன்னீக?”, என்று நக்கலடித்தாள் அம்மா. வள்ளியின் முகம் சுருங்கிவிட்டது. இவர்களின் பேச்சைக் கவனித்துக் கொண்டே வந்த பக்கத்து வீட்டு செண்பகம், “வள்ளி ஏன்டி முகம் வாடிப்போகுது? உங்கம்மைதானே கிண்டல் செய்யிது” “அம்மா எப்பவும் இப்படித்தான் அத்தே. கிண்டல் செய்யும். எப்பவும் ஏசிட்டே இருக்கும்” “அதெல்லாம் சும்மா. உன்னை பிரிஞ்சி ஒரு நிமிஷம் இருக்கமாட்டா உங்கம்மை தெரியுமா?” ‘ம்க்கும்’ என்ற வள்ளியைப் பார்த்து செண்பகம், “அதென்ன அப்படி போவுது மூஞ்சி? நீ பொறக்கையில மதுரையில இருந்து ஒரு பணக்காரவுக புள்ளை இல்லன்னு சொல்லி உங்க அம்மைகிட்ட வந்து உன்னைய கேட்டாக. அம்புட்டுதான். பணத்துக்காகப் புள்ளைய விக்கிற சாதின்னு நினைச்சீகளான்னு அவுககிட்ட பத்ரகாளி மாதிரி நின்னு ஆடிட்டாள்ல உங்க அம்மை. வந்தவுக வாயடைச்சுப் போயிட்டாக. நம்ம பூமி தண்ணி இல்லாம போயிருக்கலாம்டி... பாசம் இல்லாம போவல”, என்றாள். “அப்பவே அவுகட்ட கொடுத்திருந்தமுன்னா இப்படி தண்ணிக்கு நாயா அலஞ்சிருக்காது எம் புள்ள”, என்று சொல்லித் தன் கண்களில் வழிந்த நீரைத் தன் சேலைத் தலைப்பில் துடைத்துக்கொண்டாள் முத்தழகி. ஓடிச்சென்று தன் தாயைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டாள் வள்ளி. “யக்கோவ். தாயி புள்ள பாசத்தப் பாத்தீகளா?”, என்று நடந்துசென்று கொண்டிருந்தவர்களிடம் செண்பகம் சொன்னபோது எழுந்த சிரிப்பலைகளால் அந்தக் காய்ந்த மண் சற்றே ஈரமாயிற்று. அப்போது கீழ்வானத்தில் சூழ்ந்திருந்த கருமேகங்களைப் பார்த்து, “அம்மா! அங்க பாரு. மழை வரப்போவுது” என்றாள் வள்ளி. “அதெல்லாம் வராதுட்டி. தூரத்துல பாரு. ரோட்டு மேல தண்ணி கெடக்கற மாதிரி இருக்கா?” “ஆமா. அது கானல் நீரு”. “அதுமாதிரிதான். பலமட்டம் நானும் இப்படி ஏமாந்திருக்கேன். அங்கன மேகம் கூடி என்ன பிரயோசனம்? துளித்துளியா மண்ணுக்கு வந்தாதான வறண்ட நாக்குக்கு தண்ணி கிடைக்கும். அரசியல்வாதிக ஓட்டு கேக்கும்போது நம்மகிட்ட அதை இதை சொல்லிட்டு அப்புறம் நம்ம பக்கமே வராம ஏமாத்துவாக பாரு. அதமாதிரிதான் இந்தக் கருமேகமும்... வச்சிக்கிட்டே வஞ்சன பண்றதுக” “முத்தழகு. என்னமா அரசியல் பேசுற! நீ மட்டும் அரசியலுக்கு வந்தன்னு வச்சுக்க...”, என்று செண்பகம் முடிப்பதற்குள், “அத்தே, நான் அரசியல்வாதியானா நம்மூருக்கு தண்ணி வந்துருமா?” “என்னது நீ அரசியல்வாதியாப் போறியா?” “ஏன் நான் ஆவ முடியாதா?” “ஆவலாம். ஆவலாம்” “அப்புறம் ஏன் சிரிக்கீக?” “யார் யாரெல்லாமோ வந்து நடக்கலியே. நீ வந்து நடக்கப் போவுதாக்கும்?”, என்று அவள் சொல்ல எல்லோரும் சிரித்தார்கள். முத்தழகி “வாய மூடிட்டு வாடி”, என்று முணுமுணுத்தாள். அனைவரும் ஊருணிக்கு அருகில் வந்துவிட்டார்கள். வண்டலும் தண்ணீருமாக மிகவும் கலங்கிப் போயிருந்தது. ஒவ்வொருவராக உள்ளிறங்கி தாங்கள் கொண்டு வந்த குடங்களில் சிறிய அகப்பையைக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நீரை அள்ளி நிறைத்தார்கள். வெயிலின் உக்கிரம் இன்னும் அதிகமானதால் வள்ளிக்கு மயக்கமாய் வந்தது. முத்தழகு தான் கொண்டு வந்திருந்த துண்டை வள்ளியின் தலையில் போட்டாள். சிறிது தூரத்தில் கருவேலமரம் ஒன்று இருந்தது. அதற்கடியில் அவளை அமர வைத்துவிட்டு அவளும் அமர்ந்தாள். வெப்பம் தாள முடியவில்லை. வியர்த்துக் கொட்டியது. “அம்மா” “என்னட்டி” “நம்ம மாமா வீட்டுக்கு எப்ப போறோம்?” “எதுக்குட்டி, தசரா பாக்கதுக்கா? “ஆமாம்மா” “அது ஒண்ணுதான் குறைச்சல்” “ஏம்மா?” “மனுஷி இங்க தண்ணிக்குச் செத்துட்டுருக்கா, தசராவாமுல்ல” “அம்மா, ராஜேஸ்வரி அம்மன் கோயில் திருவிழால பூசாரி விடுற அம்ப எடுத்து நம்ம ஊருக்கு கொண்டு வந்துட்டா மழை வருமாம்” “ யாருட்டி சொன்னது?” “புவனாம்மா” “ம்ம்ம். சரிதேம். ஏன் அத இவ்வளவு நாளா அந்த புவனா செய்யலியாம்?” “அவளுக்கும் இப்பதான் தெரியுமாம்” “என்னவோ எனக்கு இதிலல்லாம் நம்பிக்கை இல்லை. கண்ணுக்குத் தெரியற கவர்மெண்ட் செய்யாததையா கண்ணுக்குத் தெரியாத கடவுள் செய்யப் போவுது?” “ ஒரு தடவ செஞ்சுப் பாக்கலாம்மா” “பாப்போம்” என்று முத்தழகி சொல்லி முடிக்கவும் செண்பகம், “முத்தழகி வாட்டி. தண்ணியக் கோரு”, என்றாள். குடங்கள் அனைத்திலும் மண்டி கலந்த நீர் நிறைக்கப்பட்டது. அதைப் பார்த்து முகம் சுளித்த வள்ளி, “அம்மா இந்தத் தண்ணிய குடிச்சா இருமல், காய்ச்சல், கல்லடைப்புன்னு நிறைய சீக்கு வரும்னு டீச்சர் சொல்லிச்சும்மா” “அப்படியாவது செத்துப் போவோம்டி. உயிரோடு இருந்து நித்தமும் செத்துப்போறதுக்கு சீக்கு வந்தா சீக்கிரம் செத்துப் போலாம்” அம்மாவின் இந்தப் பேச்சு வள்ளிக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தாலும் தினமும் நடப்பதுதானே என்று எண்ணி ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டாள். மறுநாள் பள்ளிக்குச் சென்ற வள்ளி, ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலைப் பற்றிய வரலாற்றை அவளது தமிழாசிரியை ஆனந்தியிடம் ஆவலோடு கேட்டறிந்து கொண்டாள். வீட்டுக்கு வந்தவுடன் தன் தாய் முத்தழகியிடம், அனைத்து விஷயங்களையும் கூறினாள். தன் மகளுக்கு இருக்கும் ஆர்வத்தையும், அறிவையும் எண்ணி எண்ணி மனதுக்குள் பெருமைப்பட்டுக் கொண்டாள் முத்தழகி. நிச்சயமாகத் தன் மகளை ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு அழைத்துப் போக வேண்டும் என்று முடிவெடுத்தாள். அதற்கேற்றாற்போல் முத்தழகியின் அண்ணன் பாண்டியும் திருவிழாவிற்கு வருமாறு அவர்களை அழைத்திருந்தான். வள்ளிக்கு இருப்புக் கொள்ளவில்லை. தனது மாமன் மகனுடன் சேர்ந்து அம்பை எடுத்து விடவேண்டும் என்று எண்ணிக் குதூகலித்தாள். அதே மகிழ்ச்சியில் உறங்கிவிட்டாள். பொழுது விடிந்தது. “முத்தழகிக்கா, முத்தழகிக்கா” எதிர்வீட்டு முத்துலட்சுமி ஓடி வந்தாள். “என்னடி முத்துலட்சுமி, விடிஞ்சும் விடியாததுமா ஓடி வந்துருக்க?” “யக்கா, செம்பகக்காவுக்கு வயித்துப்போக்காம். ஆஸ்பத்திரிக்கி கொண்டுபோயிருக்காக” “என்னடி சொல்லுற? நேத்தைக்கு நல்லாத்தானே இருந்தா” “ஆமாக்கா” “சரி வள்ளியைப் பள்ளிக்கொடத்துக்கு அனுப்பிட்டு வாரேம். ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுவோம்” “சரிக்கா, நானும் வேலையை முடிச்சுப்போட்டு வாரேன்” இருவரும் அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்குச் சென்றார்கள். செண்பகம் அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இருவரும் அங்கே ஓடினார்கள். அப்போது அங்கே வந்த நர்சு பார்வதி, “யம்மா இங்கே எல்லாம் வரக்கூடாது. வெளியே வெயிட் பண்ணுங்க”, என்றாள். “நர்சம்மா, செண்பகம்னு...” என்று இழுக்கவும், “செண்பகமா? அந்தக் கேசு இப்பதானே முடிஞ்சுபோச்சுன்னு கொண்டுபோனாங்க” “என்ன சொல்றீக?” “அந்த அம்மா செத்துருச்சும்மா” முத்தழகி அந்த இடத்திலேயே விழுந்தாள். முத்துலட்சுமி “யக்கா” என்று அலற நர்சோ “யம்மா. இங்கே சத்தம் போடக்கூடாது. வெளியில போங்க”, என்றாள். முத்தழகியை மெதுவாகத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள் முத்துலட்சுமி. இருவரும் அழுதுகொண்டே செண்பகத்தின் வீட்டை அடைந்தார்கள். அங்கே செண்பகத்தின் மூன்று வயது குழந்தையை அவளது கணவன் மடியில் வைத்துக்கொண்டு கண்ணீரும் கம்பலையுமாக நின்றது முத்தழகியின் நெஞ்சைப் பிழிந்தது. ‘செண்பகம்... கணவனை இழந்து தவிக்கும் தனக்குத் தேவையான அத்துணை உதவிகளையும் செய்துவந்தவள். கண்ணீர் விட்ட நேரங்களிலெல்லாம் ஆறுதலாக இருந்தவள். நொடிப் பொழுதில் சோகத்தை மறக்க வைத்து சிரிக்கவும் வைப்பாள். தான் எங்கு சென்றாலும் வள்ளியை ஒரு தாயைப் போல கவனித்துக்கொள்பவள். அவள் இறந்துவிட்டாள்” நினைத்து நினைத்து மனம் உடைந்து அழுதாள் முத்தழகி. “ஏ கண்ணில்லாத கடவுளே! இரக்கம்னு ஒன்னு கெடையாதா உனக்கு? பாவி! பச்சை புள்ளைக்காரியைக் கொன்னுட்டியே? ஏ செண்பகம், எங்களையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டியே” அவளது அழுகையை அங்கிருந்தவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. செண்பகத்தின் இறப்புக்குக் காரணம் சுத்தம் இல்லாத தண்ணீரை அவள் குடித்ததுதான் என்று கேள்விப்பட்டதும் முத்தழகியின் மனம் இன்னும் கனமானது. இரண்டு வாரங்கள் கழிந்தன. முத்தழகியும் வள்ளியும் ராமநாதபுரத்திற்குச் செல்லும் பேருந்தில் ஏறிக் கொண்டார்கள். பேருந்து புறப்பட்டதும் வள்ளிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சாரல் மழையில் நனைந்து கொண்டே செல்வது போன்ற பிரமை. அடிக்கடி சிரித்துக் கொண்டே இருந்தாள். “ஏடி வள்ளி! என்னடி சும்மா சிரிச்சிட்டே இருக்க? எல்லாரும் பைத்தியம்னு நினைக்கப் போறாக” உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்ட வள்ளி இப்போது மனதுக்குள் சிரித்தபடியே பயணித்தாள். ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கினார்கள். அங்கே அவர்களுக்காகக் காத்து நின்றான் முத்தழகியின் அண்ணன் பாண்டி. “முத்தழகி! வள்ளிக் குட்டி! வாங்க வாங்க. எப்படி இருக்கீக?” “இருக்கோம்ணா. நீ, அண்ணி, கதிரு எல்லாம் எப்படி இருக்கீக?” “எங்களுக்கென்ன குறைச்ச, தண்ணியத் தவிர” ‘தண்ணீர்’ என்ற வார்த்தையைக் கேட்டதும் நீண்ட பெருமூச்சு விட்டாள் முத்தழகி. “என்ன முத்து அமைதியாயிட்ட?” “ஒன்னுமில்லண்ணே” “வாங்க. ஏறிக்கோங்க”, என்று தனது டிவிஎஸ்-50 மோட்டார் சைக்கிளில் முத்தழகியையும் வள்ளியையும் ஏற்றிக்கொண்டான் பாண்டி. வீட்டின் அருகே வந்ததுமே கதிர் ஓடி வந்தான். “வாங்க அத்தே. வா வள்ளி” “கதிரு”, என்று வாரி அணைத்து முத்தமிட்டாள் முத்தழகி. “எப்படி இருக்கே?” “நல்லா இருக்கேன் அத்தே. வள்ளி நீ எப்படி இருக்க?” “நான் நல்லா இருக்கேன்”, என்று சிரித்தாள் வள்ளி. “அம்மா அத்தையும் வள்ளியும் வந்தாச்சு” “வாங்க அண்ணி. வாடி வள்ளிக் குட்டி” “எப்படி இருக்கீங்க அண்ணி?” “சாமி புண்ணியத்துல நல்லா இருக்கோம்” தான் வாங்கி வந்திருந்த மிக்சர் பார்சலையும் பிஸ்கட் பாக்கெட்டையும் அண்ணியிடம் கொடுத்தாள் முத்தழகி. “சரி ரெண்டு பேரும் சாப்பிடுங்க. கடைக்குப் போயி சாமான் வாங்கிட்டு வந்துர்றேன்”, என்றான் பாண்டி. “சரி நீ போய்ட்டு வா”, என்றாள் முத்தழகி. பாண்டி கிளம்பிச் சென்றான். முத்தழகி, வள்ளி மற்றும் கதிருக்கு உணவு பரிமாறினாள் பாண்டியின் மனைவி ரமணி. சாப்பிட்டுக்கொண்டிருந்த வள்ளிக்கு விக்கல் வந்தது. “அம்மா தண்ணி”, என்றாள். அப்போது ரமணி, “ஒரே ஒரு மடக்கு குடிட்டி”, என்றாள். முத்தழகியைப் பார்த்துக்கொண்டே ஒரே ஒரு மடக்கு தண்ணீர் குடித்தாள் வள்ளி. “ஒரு வாய் தண்ணிதான். ஆனா அதுக்கு அலையற அலைச்சல் இருக்கே. நாயை விடக் கேவலமா! பிள்ளைகளைப் பழக்கிக்கறது நல்லதுதானே அண்ணி”, என்றாள் ரமணி. ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தாள் முத்தழகி. வள்ளியின் முகம் மட்டும் சுருங்கிப் போயிருந்தது. சாப்பிட்டு முடித்து எழுந்தவர்கள் கோயில் விழாவைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். வள்ளியும் கதிரும் வீட்டுக்கு வெளியே உள்ள திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். “கதிர் இங்கயும் தண்ணி பிரச்னை இருக்குல்ல?” “என்ன வள்ளி தெரியாத மாதிரி கேக்க? முன்னாடி எல்லாம் குடிக்க மட்டும்தான் லாரி தண்ணி வாங்கணும். இப்ப குளிக்கவும் வாங்க வேண்டி இருக்கு. குடிக்கிறதுக்குன்னா ஒரு குடந் தண்ணி பத்து ரூபா. குளிக்கிறதுக்குன்னா ஏழு ரூபா. நாலு நாளைக்கு ஒருதடவைதான் குளிக்கிறோம். அதுவும் வெறும் நாலு கப்புல. பக்கத்துத் தெருவுல குலுக்கல் முறையில தண்ணியை விக்கிறாங்க. ம்ஹூம்... குடிக்கிற தண்ணிக்கு குலுக்கல்” “இதுக்கு விடிவு காலமே கெடையாதா கதிரு?” “ஊர விட்டுப் போனாதான் விடிவுகாலம். அப்பா அதைத்தான் யோசிச்சிட்டு இருக்கு” “ஊர விட்டுப் போகப் போறீகளா?’ “ஆமா. தினமும் தண்ணிக்காக குடத்த தலைல வச்சுக்கிட்டு நாய் மாதிரி தெருத்தெருவா சுத்த வேண்டாம்ல” “உனக்கு இந்த ஊரை விட்டுப் போறதுதான் இஷ்டமா?” “ம்ஹும். எனக்கு இந்த ஊருதான் பிடிச்சிருக்கு. இங்க இருந்து போகணும்னு நினைச்சாலே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆனா என்ன செய்யிறது?” “கதிரு, என் பிரண்டு புவனா சொன்னா, ராஜேஸ்வரி அம்மன் கோயில் தசராவுல விஜயதசமி அன்னிக்கு பூசாரி விடுற அம்ப எடுத்து வச்சுக்கிட்டா மழை வரும்னு” “அதெல்லாம் சும்மா டூப்பு” “ஒரு தடவ செஞ்சு பாப்போமா?” “அந்தக் கூட்டத்துல அம்பு கிடைக்கறதெல்லாம் கஷ்டம்” “சரி விடு. இன்னிக்கு சாயங்காலம் கோயிலுக்குப் போவோம்ல?” “இல்ல. இன்னிக்கு போறாமான்னு தெரியல. ஏன்னா அமைச்சர் வரப்போறதா சொன்னாங்க. நெறைய கூட்டம் வரும்” “அப்ப நம்ம ரெண்டு பேரும் போயிட்டு வருவோமா?” “சரி அம்மாகிட்ட கேட்டு சொல்றேன்.” மாலையில் இருவரும் ராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் சென்றார்கள். அமைச்சர் வந்திருந்தபடியால் கூட்டம் அதிகமாயிருந்தது. “பயங்கர கூட்டமா இருக்கே?” என்றாள் வள்ளி. “நான்தான் சொன்னேன்ல. அமைச்சர் வந்திருப்பாரு.” கதிர் கூறியதைக் கேட்டதும், “ஓ அமைச்சர் வந்திருப்பாரா? கதிரு நீ இங்கேயே இரு. இப்ப வாறேன்” என்று ஓடினாள். “ஏய் வள்ளி நீ அங்கெல்லாம் போவக்கூடாது” அவன் கூறியது எதுவுமே வள்ளியின் காதில் விழவில்லை. வள்ளி அந்தக் கூட்டத்தின் அருகில் சென்றாள். அங்கே பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸ்காரர் அவளைத் தடுத்தார். “ஏ பாப்பா எங்கே போற?” “எனக்கு அமைச்சரப் பாக்கணும்.” “அமைச்சர நீ பார்க்கணுமா, எதுக்கு?” “அது ஒரு பிரச்சனை” “என்ன பிரச்சனை? எங்கிட்ட சொல்லு” “உங்ககிட்ட சொன்னா தீத்துத் தருவீகளா?” “என்ன பிரச்சனைனு முதல்ல சொல்லு” “தண்ணிப் பிரச்சனை” “அத சொல்லவா வந்த?” “ஆமா!” “அட பைத்தியம். அதை யாராலும் தீக்க முடியாது” “உங்களால முடியாதுன்னா விடுங்க. நான் அமைச்சர்கிட்ட பேசிக்கிறேன்” “அதெல்லாம் விட முடியாது. போம்மா, போம்மா அங்குட்டு. நம்ம கழுத்தறுக்கனும்னே வருதுக”, என்று அவள் கைகளைப் பிடித்து சிறிது தூரம் இழுத்து வந்து, “பொம்பள புள்ளையா இருக்கிறியேன்னு பாக்கேன். இல்லன்னா சென்னில ரெண்டு குடுத்திருப்பேன். போ இங்கேருந்து”, என்று மிரட்டினார். அவர் இப்படி மிரட்டியதைத் தூரத்தில் நின்ற கதிர் கவனித்தானோ இல்லையோ வேறு இரு கண்கள் கவனித்தன. இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்த எலீனா என்னும் வெளிநாட்டுப் பெண்மணியே அந்த இரு கண்களுக்குச் சொந்தக்காரி. மொழி தெரியாவிட்டாலும் போலீஸ்காரரின் உடல்மொழியும் வள்ளியின் பயந்த முகமும் அவளைச் சற்றே திகைப்புறச் செய்தன. என்னவாயிருக்கும் என்பதை அறியும் ஆர்வம் ஏற்பட்டது அவளுக்கு. வாடிய முகத்துடன் வந்த வள்ளியைத் தன் வழிகாட்டியுடன் வந்து இடைமறித்தாள் அவள். அப்போது கதிரும் வந்து இணைந்து கொண்டான். என்ன விஷயம் என்பதைத் தன் வழிகாட்டியின் மூலமாக கேட்கச் சொன்னாள் அந்த வெளிநாட்டுப் பெண். “ஏதோ தண்ணி பிரச்சினையாம் மேடம். அத அமைச்சர்கிட்ட சொல்ல வந்துச்சாம்”, என்று அவளிடம் ஆங்கிலத்தில் சொன்னான் அந்தச் சுற்றுலா வழிகாட்டி. “ஆனா அவர பார்க்காமலே வந்துட்டாளே”, என அவள் கேட்க, “மேடம் இங்கெல்லாம் அப்படி ஈசியா பார்க்க முடியாது” “அப்ப யார்கிட்ட சொல்லனும்? அவங்கதானே பொறுப்பு” “அது உங்க நாட்டுல. இங்கே இல்லை” “அடக் கடவுளே”, என்றவள் வள்ளியின் கரங்களைப் பிடித்துக் கொண்டு “உன் பெயர் என்ன?”, என்று ஆங்கிலத்தில் கேட்க, சட்டென்று அவளோ “வள்ளி. உங்க பேரு?”, என்றாள். “ஆங்கிலம் தெரியுமா?” “ம்ம். தெரியும். ஆனா யார்கிட்டயும் பேசுனதில்ல” “நல்லது. என்னோட பேரு எலீனா” “உங்க ஊர் எது?”, என்றாள் வள்ளி. “இங்கிலாந்து” “இங்க ஏன் வந்துருக்கீங்க?” “இந்தியக் கலாச்சாரம் பற்றிப் படிக்க வந்துருக்கேன்” “ஓ. சரி உங்க ஊர்ல எல்லாம் தண்ணீர் பிரச்சினை உண்டா? குடிக்கத் தண்ணியில்லாம ஒரு நாளாச்சும் இருந்திருப்பீங்களா?” இந்தக் கேள்வியை எதிர்பாராத எலீனா சற்றே திகைப்புடன் “நோ” என்றாள். “எங்க ஊர்ல.....”, என்று வள்ளி சொல்லத் தொடங்கிய போது, “ஏய் பொண்ணு, உன் கதையை கேட்கவா மேடம் இங்கிலாந்துல இருந்து இங்க வந்துருக்காங்க?”, என்றான் அந்த வழிகாட்டி. “ஷ்...” என்று அவனைத் தன் பார்வையால் கடிந்துவிட்டு வள்ளியிடம் திரும்பினாள் அந்த வெளிநாட்டுப் பெண். “வள்ளி நீ சொல்லு” வள்ளி தங்கள் ஊர்த் தண்ணீர்ப் பஞ்சத்தை அழுதுகொண்டே சொல்ல, இப்படியும் ஒரு ஊரா என்று எண்ணி அதிர்ந்து போனாள் எலீனா. “நாளை எனக்கு உங்க ஊரைச் சுத்திக் காட்டுவியா?”, என்றவளிடம் வேகமாக “சரி” என்று சொல்லித் தலையாட்டினாள் வள்ளி. எலீனாவும் வள்ளியும் சோழந்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். காய்ந்துபோய்க் கிடந்த அந்தத் தரிசுக் காட்டிலே அவர்களது கார் போய்க்கொண்டிருந்தது. குடங்களும் தள்ளுவண்டிகளுமாய்க் கொளுத்தும் வெயிலில் செருப்பு கூட அணியாமல் காலில் வெடிப்புகளுடன் தார்ச்சாலையில் நடந்து செல்லும் பல பெண்களையும் ஆண்களையும் குழந்தைகளையும் கண்டாள் எலீனா. அவளது முகமும் புருவங்களும் சுருங்கின. தன் அருகிலிருந்த வள்ளியின் தலையைக் கோதினாள். திரும்பிய வள்ளியைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தாள். ஊருணி அருகேயுள்ள சாலையின் ஓரம் காரை நிறுத்திவிட்டு இறங்கினார்கள். அங்கே நின்றவர்கள் அவர்களை விசித்திரமாகப் பார்த்துத் தங்களுக்குள் ஏதோ சொல்லிச் சிரித்துக் கொண்டார்கள். வள்ளி அவர்களைப் பார்த்து,”ஏன் சிரிக்கீக? அவுக நம்ம ஊரைப் பாக்க வந்திருக்காக. நம்ம ஊருக்கு வந்தவுகளைப் பாத்து இப்படியா சிரிப்பீக?”, என்றவுடன் சிரிப்பதை நிறுத்திவிட்டு அவர்களது அருகில் வந்தார்கள். எலீனா அவர்களுக்குக் கை கொடுத்துப் புன்னகைத்தாள். வள்ளியிடம் “இந்த தண்ணியையா குடிக்கறீங்க?”, என்றாள். “ஆமா”, என்றாள் வள்ளி. “ரொம்ப அழுக்கா இருக்கே?” “இதத் தவிர வேற தண்ணி கிடையாது.” அவளுக்கு வள்ளியையும் சுற்றி நின்றவர்களையும் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. அண்ணாந்து வானத்தைப் பார்த்தாள். வானம் தெளிவாக இருந்தது அவளது மனத்தைப் போல. சரியாக ஒரு வாரம் கழிந்தது. எலீனா சோழந்தூர் மக்கள் நடுவே பேசிக்கொண்டிருந்தாள். “வாழ்க்கையில முதல் தடவை ஒரு அர்த்தமுள்ள விஷயத்த செய்யப்போறேன். அதுக்காக கள்ளம் கபடமில்லாத இந்த வள்ளிக்கு நன்றி சொல்லிக்கறேன். இந்த ஊரை நான் தத்து எடுத்துக்கப்போறேன். குடிநீர் பிரச்சனை இனி இந்த ஊருக்கு இருக்காதுன்னு நம்பறேன். அதுக்கான எல்லாவிதமான முயற்சிகள்லயும் நான் ஈடுபடப்போறேன். இனி இந்த ஊர்ல தண்ணிக்காக யாரும் சாகக்கூடாது. நன்றி” விஜயதசமியன்று ராஜேஸ்வரி அம்மன் கோயிலில் நின்று கொண்டிருந்தார்கள் வள்ளியும் முத்தழகியும். அப்போது கதிர் வானத்தைப் பார்த்துக் கைகாட்ட, எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று வள்ளியின் அருகில் வந்து விழுந்தது. கையில் எடுத்துக்கொண்டு அண்ணாந்து பார்த்தாள். வள்ளியின் முகத்தில் முத்து முத்தாய் மழைத்துளி தெறித்தது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.