Mohamed Batcha
சிறுகதை வரிசை எண்
# 289
உதவி இயக்குனன்.
.
“ மச்சான் போன வாரம் கூட இயக்குனர் வெற்றிமாறனை அவர் ஆபிஸ்ல பார்த்திட்டு வந்தேண்டா. விடுதலை பார்ட் 2 பண்ணும் போது அவசியம் கூப்பிடுறேன்னு சொல்லியிருக்காரு…” என்று மதிமாறன் சொல்லும் போதே அவர்கள் நமட்டாக சிரித்துக் கொண்டார்கள்.
பார்ட்டிகளின் போது மதிமாறன்தான் அவர்களுக்கு பொழுது போக்கு அம்சம். ஆனால் அவன் மட்டும் குடிக்க மாட்டான். அவனுக்குத் தெரியும் தன்னை இவர்கள் ஒரு விரய அம்சமாகவே பயன்படுத்துவது. ஒவ்வொரு சமயமும் அவரைப் பார்த்தேன் இவரைப் பார்த்தேன் என்று சொல்வதும் இவனக்கு வழக்கமாகிவிட்டது. சில நேரங்களில் அது உண்மையாகவும் கூட இருக்கும். பல நேரங்களில் அறை நண்பர்களின் மகிழ்ச்சிக்காகவும் இட்டுக் கட்டிக் கதையளப்பான்.
படிக்கும் போதே அவனுக்குள் எப்படியோ சினிமா ஆசையும் ஒட்டி கொண்டது. அதன் கவர்ச்சியாக இருக்கலாம். அல்லது அதன் பிரமாண்டமாக இருக்கலாம். அவன் வீட்டில் அம்மா அப்பா அண்ணன் எல்லோருமே கூலி வேலைதான் செய்கிறார்கள். அவர்கள் உதவியால்தான் கல்லூரி வரையும் படித்தான். இவன்தான் அவர்களின் கனவாகவும் இருந்தான். ஆனால் இவனிடம் இருக்கும் சினிமா பித்தை குடும்பத்தார் தெரிந்து கொண்ட பிறகு இவனோடு தங்கள் கனவையும் சேர்த்து வைத்துக் கை கழுவி விட்டு விட்டார்கள்.
அவன் அண்ணன் எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டான். “ மதி… நம்மள இந்த சமூகம் எந்த அளவுக்கு ஒடுக்கி வச்சியிருக்குதுன்னு உனக்கு நல்லாவே தெரியும். ஒரு நல்ல வேலைக்கு போடா… நாமளும் தலை நிமிர்ந்து நிற்கணும் “ என்று,. ஆனால் அவன் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை , “ நான் எப்படியும் சினிமாவில் சாதிப்பேன் … அப்ப வர்றேன்” என்று கிளம்பினவன்தான். அவர்கள் தொடர்பையும் அறுத்துக் கொண்டான்.
கொஞ்ச நாள் சாலிகிராமத்தில் இருக்கும் டீக்கடை ஒன்றில் சமோசா மாஸ்டராக வேலைப் பார்த்துக் கொண்டு… அங்கேயே தங்கிக் கொண்டான். அங்கு டீ குடிக்க வரும் துணை நடிகர்கள், உதவி இயக்குனர்கள் எல்லோரும் அவனுக்கு வியப்பாக தெரிந்தார்கள்.
அங்குதான் அவளைப் பார்த்தான். அத்தனை அழகு! அவள் வீடும் அங்குதான் இருந்தது… அவளும் இவனைப் போன்றே சினிமா கனவில் வந்தவளல்ல. அவள் பாட்டி, அம்மா என்று இரண்டு தலைமுறையாக காலத்தின் கட்டாயத்தில் துணை நடிகைகளாகவே வாழ்ந்து கனவு கண்டு கொண்டிருப்பவர்கள். இப்போது இவளும்….
அவள் டீக்கடைக்கு வரும் போதெல்லாம் பேச்சுக் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நட்பை வளர்த்துக் கொண்டான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் தனியாக சந்தித்துப் பேசத் தொடங்க ஒரு பூ அவர்களுக்குள் மலர்ந்து கொண்டிருந்தது. அவளும் அவனை தன் ஒண்டு வீட்டிற்கு அடிக்கடி அழைத்துச் சென்றிருக்கிறாள். அவள் பாட்டி, அம்மா எல்லோருமே அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்களுக்கும் அவனைப் பிடித்திருந்தது. ஆனால் ஆண்கள் யாரும் இல்லாத வீடாகவே அவளின் வீடு இருந்தது.
அவர்கள் இருவரையுமே ரஜினி, கமல், விஜய் , அஜீத் படங்களின் பாடல் காட்சிகளின் போது பின்னால் நின்று ஆடிக் கொண்டிருப்பதை கவனித்திருக்கிறான். இப்போது அவர்களுடன் பேசுவதே அவனுக்கு பிரபல நடிகர் நடிகைகளுடன் பேசுவது போன்ற ஒரு பிரமையை உண்டாக்கியது.. அவர்களின் தயவால் அவர்கள் கலந்து கொள்ளும் பட பிடிப்புகளையும் நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பை விரைவில் ஏற்படுத்திக் கொண்டான்
இந்த விஷயம் டீக்கடை ஓனருக்குத் தெரிய வர , “ஏன்டா போனாப் போகுதுன்னு வேலைப் போட்டு கொடுத்தா… அந்தப் பொண்ணு கஜூரேகா கூட திரியிரியாமே…! அவளுகெல்லாம் அத்தனை ஒழுக்கமானவளுங்க கெடையாது தெரியுமா? ஒழுங்கா வேலையைப் போய் பார்க்கிறதென்னா பாரு… இல்லைன்னா இப்படியே ஓடிடு” என்று கண்டிக்க , அவனுக்கு இப்போது இந்த ஓனர்தான் தன் சினிமா கனவிற்கு முட்டுக் கட்டைபோடுவதாக தோன்றவே அங்கிருந்து வெளியேறினான்.
இந்த தடவை அவனுக்கு… அவள் … அந்த கஜூரேகாதான் உதவி செய்தாள்…
அவனுக்கும் முதலில் கஜூரேகா என்ற அவளின் பெயர் வியப்பை ஏற்படுத்தியது. இப்படியெல்லாமா பெயர் வைப்பார்கள்! பிறகுதான் தெரிந்தது. அவள் அம்மா ஒரு பாடல் காட்சிக்காக கஜூரோஹா சென்றிருந்த போது அங்குள்ள சிற்பங்களை கண்டு வியந்து ரசித்திருக்கிறாள் . அப்போதுதான் இவனின் அவளும் அவள் வயிற்றில் கருவாக உருவாகியிருக்க…. அப்போதே அவள் அம்மா முடிவு செய்துவிட்டாளாம் . பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி கஜூரோஹா என்று பெயர் சூட்டுவதென்று.. ஆனால் கூப்பிடுகிறவர்கள் கஜூரேகா என்று மாற்றி விட்டார்கள்.
அவள் அம்மாவின் சிபாரிசு பேரில் தன் வீட்டு மொட்டை மாடியில் வாடகைக்கு குடியிருக்கும் உதவி இயக்குனர் சிலருடன் சேர்த்து இவனையும் தங்க வைத்தாள். இது அவனுக்கும் ஓகேவாகவே இருந்தது. அவள் குடும்பத்தின் தயவால் சினிமாவில் சின்ன சின்ன வேலைகள் செய்யவும் தொடங்கினான். அந்த வருவாய் அவன் வயிறை கழுவுவதற்கும் போதுமானதாக இருந்தது. படமே வெளிவராத சில இயக்குனர்களிடம் உதவிக்கு சேர்ந்தும், தன் அறை நண்பர்களின் உதவியாலும் ஓரளவிற்கு ஸ்கீரின்ஃப்ளே எழுதவும் கற்றுக் கொண்டான். இப்போது அவன் சொந்தமாகவே ஸ்கிரீன் ஃப்ளே எழுதி இரண்டு கதைகள் கைவசமும் இருக்கின்றன.
சொந்தமாக இயக்கும் ஆசை இருந்தாலும் , சினிமாவைப் பொறுத்த வரை அதிர்ஷ்டம் என்று ஒன்று வேண்டும். அதுவரை ஒரு நல்ல இயக்குனரிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்வது மிகவும அவசியமாகிறது.
சில இயக்குனர்கள் அவனை வேலைக்கு வைத்துக் கொள்ள சம்மதித்த போதும் கஜூரேகா அவனை அங்கெல்லாம் விடவில்லை. “ நீ அங்கெல்லாம் போனா… அவனுங்களுக்கு புட்டி வாங்கிக் கொடுத்தே கெட்டுடுவே…” என்று தடுத்து விட்டாள்.
சில நேரங்களில் கஜூரேகாவையும் அவள் குடுபத்தையும் கேவலமாக சிலர் பேசுவதை கேட்கும் போதெல்லாம் அவனுக்குள் ஓர் உலை கொதிக்கும். ஆனாலும் அவர்களின் நல்ல குணம் அவனுக்கு நன்றாகவே தெரியும். அதனால் கேட்டு சங்கடப்படுத்த விரும்பாமல் விழுங்கிக் கொள்வான்.
இன்று காலைதான் வெற்றி மாறன் ஆபிசிலிருந்து அவனுக்கு அழைப்பு வந்திருந்தது. இந்த வாய்ப்பை எப்படியும் விட்டு விடக் கூடாது என்ற முனைப்பால் அவர் சொன்ன நேரத்துக்கு அங்கிருந்தான். அவனால் நம்ப முடியவில்லை . தன் வாழ்க்கையின் மிக முக்கியமான திருப்பம் இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று…
இந்த தகவலை கஜூரேகாவிடம்தான் முதலில் சொல்ல வேண்டும் என்று மனசு துடித்தது. அவனுக்காக மகிழ்ச்சியடைய கூடிய ஒரே ஜீவன் அவள் மட்டுமே என்பது அவனது அசைக்க முடியாத நம்பிக்கை.
அவளே அவனிடம் கேட்டாள், “ நாம இன்னைக்கு பீச்சுக்கு போகலாமா மதி … கொஞ்சம் உன்னிடம் மனசு விட்டுப் பேசணும்” என்றாள் .
‘என்ன அப்படி நம்மிடம் பேசப் போகிறாள்?’ – என்ற குழப்பம் அவனிடம் ஓடினாலும், அதுவும் நல்லதாகவே பட்டது . அங்கேயே வைத்து இந்த நல்ல விஷயத்தையும் அவளிடம் சொல்லி விடலாம்.
கடற் காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது.
ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மையானவர்கள் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப் போன்றே நடித்துக் கொண்டிருக்க அலைகளும் கூட அப்படியொரு எண்ணத்தில் கரைகளைத் தழுவி விளையாடிக் கொண்டிருந்தது . ஒரு காகம் தன் வயிற்றைக் கழுவிக்கொள்ள சுண்டல் தின்பவனிடம் பறந்து பறந்து வித்தைக் காட்டிக் கொண்டிருந்தது.
அவள் அவன் கைக்குள் தன் கையை அடக்கிக் கொண்டாள். ஓர் அனாதரவாக்கப்பட்ட சிட்டுக் குருவி அடிப்பட்டுத் தன் கைக்குள் தஞ்சம் புகுந்தது போன்ற ஓர் உணர்வு ஏற்பட… அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டு வழியமாட்டேன் என்று அடம் பிடிக்க….,
“ நீ என்னை காதலிக்கிறீயா மதி?” என்றாள்.
ஆம் என்பதாக தலையை அசைத்தான்.
அவள் தொடர்ந்தாள் , “ நீ என்னை காதலிக்கலேன்னாலும் பரவாயில்லை மதி ….. நான் உன்னை காதலிக்கிறேன் … நான் உன்னை மட்டுமே காதலிக்கிறேன்.. , நீ நினைக்கிற மாதிரியெல்லாம் நான் அத்தனை சுத்தம் இல்லாதவ தெரியுமா ?”
“ நாங்களெல்லாம் இந்த சினிமா என்கிற இந்திர லோகத்தின் ஆட்டக்காரிகள்…. ஒவ்வொரு நாளைக்கு ஒரு பிரம்மா எங்களை ஆட அழைப்பான்… நாங்களும் போய் ஆடித்தான் ஆகணும். இல்லைன்னா இங்க எங்களால வயிறு கழுவ முடியாது… “
“ உன்னை மாதிரிதான் சினிமா ஆசையில் என் பாட்டியும் ஒரு குக் கிராமத்திலிருந்து இங்க ஓடி வந்தா… சினிமா என்பது சுஜாதா எழுதின மாதிரி ஒரு கனவுத் தொழிற்சாலை…. விக்கிரமாதித்தியன் என் பாட்டியைக் கீழே இறக்கவேயில்லை. கதைக் கேட்டு கதைக் கேட்டு அவளைக் கந்தலாக்கினப் பிறகுதான் இறக்கி விட்டான். போராடிக்கிட்டேயிருந்தா! …. அப்புறம் யாருடைய ஆசைக்கோ பிறந்த என் அம்மா அப்ஸரஸ் மாதிரியான அழகி. அவளையும் கதாநாயாகி ஆசை சும்மா விடுமா? கனவு அவளையும் பிடிச்சசியாட்ட என் பாட்டியோட கனவையும் சேர்த்து சுமந்து ஆட ஆரம்பிச்சா… அவளும் ஆடியாடி களைச்சிட்டா மதி ..… இப்ப என் டர்ன்… உனக்கு ஒன்று தெரியுமா இங்கே மகாபாரதம் எடுக்கிறவன் கூட முதல்ல துயிலுரிக்கிற காட்சிக்குதான் ஒத்திகைப் பார்ப்பான்” அலுப்புடன் நகைத்தாள்….
“இப்ப நான் அவங்க இரண்டு பேர் கனவுகளையும் சேர்த்து சுமந்து ஓடத் தொடங்கியிருக்கேன் மதி…. நானும் தளர்கிற வரைக்கும் ஓடிக்கிட்டேதான் இருக்கணும். இந்த கனவுத் தொழிற்சாலை நமக்கு வேறொரு உலகம். இந்தக் கனவுகள்தான் எவ்வளவு மோசமானது பார்த்தியா மதி... “
அவனையே சிறிது நேரம் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள், “ உன்னை எனக்கு அவ்வளவு பிடிக்கும் மதி… நீ தொலைஞ்சிடக் கூடாதுன்னுதான் உன்னை எப்பவும் என் கையிலேயே பிடிச்சிகிட்டு திரியிறேன். நீ கண்டிப்பா ஜெயிக்கணும் மதி … ஜெயிப்பே … இல்லைன்னா என்னை வித்தாவது உன்னை நான் ஜெயிக்க வைப்பேன்… கனவுகள் தொடர்ந்து தோற்றுவிடக் கூடாது மதி..” – விழாமல் தவித்துக் கொண்டிருந்த கண்ணீர் அவன் கைகளில் பொளிரென்று விழுந்தது.
அவன் அவளின் கையை ஆதரவுடன் அழுந்த பிடித்த அழுத்தத்தில் அவளுக்கான ஒரு அழகான கூடு அங்கே உருவாகிக் கொண்டிருக்க…… அவன் சொல்ல வந்த அந்த நல்ல செய்தியை இன்னம் சில நாட்கள் கழித்தே அவளிடம் சொல்வதென முடிவு செய்து கொண்டான்.
அவன் சற்றும் எதிர் பார்க்கவில்லை! உதவி இயக்குனர் வாய்ப்பிற்காகத்தான் வெற்றிமாறன் அவர்களை பார்க்க அன்று சென்றிருந்தான். அப்போதுதான் அவர் எதேச்சையாக அவனிடம் கதை எதுவும் இருக்கிறதா என்று கேட்க… தான் எழுதி வைத்திருந்த இரண்டு கதைகளையும் அவரிடம் கொடுத்து விட்டு வந்திருந்தான். அதை படித்து விட்டுதான் அவர் அவனை அழைத்திருந்தார் என்பது இன்று அங்கு போன பிறகுதான் தெரிந்தது.
அவன் எழுதியிருந்த கஜூரோஹா என்ற துணை நடிகை ஒருவரின் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது…” இந்த கதை நன்றாக இருக்கிறது மதிமாறன் . இதை சினிமாவாக்க விரும்புகிறேன். இதை நான் இயக்குவதை விட கதையை உள்வாங்கி எழுதியிருக்கிற நீயே இயக்குவதுதான் சரியா இருக்கும். நானே தயாரிக்கிறேன்… ஒரே ஒரு சின்ன சஜஷன் மட்டும்தான். கதையின் நாயகியாக ஒரு துணை நடிகையே இருந்தா நல்லாயிருக்கும்.”
- முகமது பாட்சா
இந்த கதை என் சொந்த கற்பனையில் உருவானது.. இதற்கு முன் எந்த இதழ்களிலும், ஊடகங்களிலும் இந்த கதை பிரசுரம் ஆகவில்லையென உறுதியளிக்கிறேன்.
- முகமது பாட்சா
.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்