logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Subha Selva Kumar

சிறுகதை வரிசை எண் # 288


உடலும் உணர்வும் !.. அந்தப் பேருந்தில் இரண்டு பேர் அமரக்கூடிய சீட்டில் உட்கார்ந்திருந்த விஜயாவும் ரவியும் ஆளுக்கொரு திசையில் வெளியே பார்த்துக்கொண்டிருந்தனர். கண்கள்தான் வெளியே இருந்ததே தவிர இருவரின் மனமும் உள்ளே சுனாமியாய் அலையடித்துக் கொண்டிருந்தது.தாங்க முடியாத வருத்தமும்,நமக்கு ஏன் இப்படி நடந்தது என்ற கேள்வியும், அடுத்து இனி என்ன செய்யப் போகிறோம்.. மற்றவர்களை எப்படி எதிர் நோக்கப்போகிறோம்..உறவுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம்...எல்லாவற்றுக்கும் மேலாக..எப்படி இனி இவர்கள் முன் வாழப்போகிறோம்..என்பது போன்ற பல கேள்விகள் இருவரின் மனதிலும் ஓங்கி ஓங்கி அறைந்து கொண்டிருந்தன. விஜயாவுக்குக் கண்கள் கலங்கி கண்ணீரைச் சொறியத் தொடங்கியது.. துடைத்துக்கொண்டாள்.அந்தச் சலனத்தில் இவள் பக்கம் திரும்பிய ரவியின் கண்களோ இவள் கண்களைப் பார்க்க..தாயின் ஸ்பரிசத்தைத் தேடிய குழந்தையாய் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.அவளின் கண்ணீர் அவன் தோள்களை நனைத்தது.அவன் மனமோ சற்று முன் நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தது. "ஏண்ணே..என்ன இத்தினிப்போல சின்னதா செயின் வாங்கிட்டு வந்திருக்கே உன் மருமவளுக்கு!!..நாளைக்கு அவ உன் மவனைக் கட்டிக்க ஒத்துக்கமாட்டா பாத்துக்கோ"..ரவியின் தங்கை நித்யா கேலியாய் கூறியதைக் கேட்டதும்..அவள் கணவன் ரகுவோ.. "போடி இவளே..மச்சானுக்கென்ன..அவரு சிங்கக்குட்டியப் பெத்து வச்சிருக்காருடி..அவரு வீட்டு முன்னாடி நான் நீன்னு போட்டி போட்டு பொண்ணு வீட்டுக்காரங்க வந்து குவியுவாங்க பாரு..அவரை இப்பவே ஐஸ் வச்சுக்கோ..இல்ல பேசாம நாமளே டைரக்டா போய் நம்ம விமல் மாப்ளயவே ஐஸ் வச்சு ப்ராக்கெட் போட்டு வச்சுக்கணும். அப்பதான் அவரு நம்ம பொண்ணைக் கட்டுவாரு..இல்லியா மச்சான்."..சொல்லிவிட்டு அவன் சிரிக்கவும்.. இங்கே ரவிக்கும் விஜயாவுக்கும் யாரோ ஈட்டியால் வந்து குத்துவதைப் போல இருந்தது.கடந்த இரண்டு நாட்களாய். அவர்களே தற்கொலை செய்து செத்துப் போய் விடலாமா என்ற எல்லை வரை போய்விட்டு..பின் மனம் மாறி ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது தங்கையின் வீட்டு விசேஷத்துக்கு வருவதற்கும் மனம் ஒப்பவே இல்லை.ஆனாலும் தவிர்க்க இயலாமல் வந்திருக்கின்றனர்.இவர்கள் மனதில் எதைப் பற்றிய கவலை இருக்கிறதோ அதைப் பற்றியே நித்யாவும் ரகுவும் பேசவே என்ன சொல்வதென்று தெரியாமல் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். "ஏன் மைனி என் மருமவனையும் ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு அவன் முறைப்பொண்ணு சடங்குக்குக் கூட்டிட்டு வந்திருக்கலாமில்ல..அவளைக் கட்டிக்கப் போறவனில்லையா.""..நித்யா ஆசையாய் தன் அண்ணன் மகனைப் பற்றி விசாரிக்க.. விஜயாவுக்கோ முள்ளின் மேல் நிற்பதைப் போல இருந்தது. "இல்ல.. பரீ..ட்..சை இரு..க்கு ".திக்கித் திணறினாள். “சரி மைனி விடுங்க..அடுத்த மாசம் நான் லீவுக்கு வருவேன்ல அப்போ வந்து என் சிங்கக்குட்டியப் பார்த்துக்கிறேன்"..என்று சிரித்து அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விஜயாவை மூச்சு விடச்செய்தாள் நித்யா. விசேஷ வீட்டில் எங்கே திரும்பி யாரைப் பார்த்தாலும் அவர்கள் கேட்கும் ஒரே கேள்வி "விமல் நல்லாயிருக்கானா..அவன் வரலியா?" என்பதுதான். சும்மாவா?.. கல்யாணமாகி ஏழு வருஷமாய் குழந்தை இல்லாமல்...மனம் நொந்து.. தவமாய் தவமிருந்து...எல்லாக் கடவுளுக்கும் விரதமிருந்து பெற்ற ஒரே ஆண்குழந்தை அவன்.சொந்த பந்தத்தில் எல்லாருமே இந்தத் தம்பதியைப் பார்த்து ஆச்சர்யப்பட்டனர்..பலர் பொறாமை கூடப் பட்டனர்.ஏனென்றால் சொத்து பத்து எக்கச்சக்கமுள்ள ரவிக்கு குழந்தை இல்லாதது ஒரு பெரிய குறையாயிருந்த நிலையில் அவனுக்கு குழந்தை பிறந்ததே சிலரால் தாங்க முடியாதபோது..அது ஆண்குழந்தையாகப் பிறந்ததில் பொறாமை வருவதில் அதிசயமென்ன?.. விமலைத் தரையில் நடக்க விடாமல் தாங்கி வளர்த்தனர் அவனது தாயும் தந்தையும்.."அவனுக்கென்ன ராஜாவாட்டம் ஆம்பளப்புள்ளய பெத்து வச்சிருக்கான்!".. என்று ரவியைப் பார்த்து அவர்கள் கிராமமே பேசித் தீர்த்தது.எல்லாம் நல்லபடியாகவே போய்க்கொண்டிருந்தது இரண்டு நாட்கள் முன்பு வரையில். “கோயிலுக்குப் போயிட்டு..அப்படியே அங்க உள்ள சொந்தக்காரங்க வீட்டுக்கும் போயிட்டு ராத்திரிதான் கண்ணு நாங்க திரும்பி வருவோம்" என்று சொல்லிவிட்டுச் சென்ற ரவியும் விஜயாவும் சில பல காரணங்களால் மத்தியானமே வீடு திரும்பிவிட நேர்ந்தது. மின்சாரம் இல்லாததால் காலிங்பெல்லும் வேலை செய்யாமல் போக.. அங்கேதான் அவர்களுக்கான அந்த அதிர்ச்சி காத்திருந்தது. ஜன்னலைத் திறந்தாவது மகனைக் கூப்பிட்டுப் பார்க்கலாமே என்று நினைத்த ரவி ஜன்னலைத் திறக்க..அங்கே அவர்கள் கண்ட அந்தக் காட்சியைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அம்மாவின் ரவிக்கையை எடுத்துப் போட்டு..அவளின் புடவையைக் கட்டி..நெற்றியில் அழகாய்ப் பொட்டிட்டு,கண்களுக்கு மையிட்டு, உதட்டில் குங்குமத்தைத் தடவி கைகளில் வளையல்களும் போட்டு..தலையில் பூச்சூடி கண்ணாடி முன்பு நின்று ஒயிலாக நடந்து.. தன்னைத்தானே அவ(ள்)ன் ரசித்துக்கொண்டிருக்க.. அந்தக் காட்சியைப் பார்த்த பெற்றவர்களின் மனமோ ரணமானது. அதிர்ச்சியிலிருந்து மீள வெகுநேரம் ஆயிற்று அவர்களுக்கு. ஆத்திரத்திலும் பதட்டத்திலும் விமலைப் போட்டு அடித்து "என்னது? ஏது? ஏண்டா இப்படி?"..என்று கேட்டு அவர்கள் கதற.. அந்தக் குழந்தையோ பயந்து.. நடுங்கி.. அழுது.. பல்லியாய் சுவற்றோரம் பதுங்கி..அப்பா அம்மாவிடம் தன் உடல் உணர்வுகளையும் மன மாற்றத்தையும் சொல்லியழுதான். தங்கள் தலையிலடித்துக்கொண்டு அழுது தீர்த்தனர் அந்தப் பெற்றோர். "ஒரே பையன்..வாரிசு வந்திருச்சு.. சிங்கக்குட்டி பொறந்துட்டான்னு கொண்டாடினோமே ..இப்போ இது வெளியே தெரிஞ்சா அவ்ளோதான். நம்ம மானமே போயிடும். இனிமே நாம உயிரோட இருக்கவே கூடாது .மூணு பேரும் சேர்ந்து செத்துப் போயிடலாம்'..என்று ரவி அழ.. அவனோடு சேர்ந்து விஜயாவும் அழுதாள்.. "அப்பா..நாம என்ன தப்பு பண்ணினோம்ப்பா..நீங்களோ நானோ எந்தத் தப்பும் பண்ணலயேப்பா..நாம எதுக்காக சாகணும்? இது இயற்கையா எனக்கு நடந்த மாற்றம்ப்பா..இதைப் பத்தி நான் நிறைய வாசிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன். இயற்கையில ஆணாப் பொறந்த எனக்குள்ள பொண்ணுக்குரிய ஹார்மோன்கள்தான் அதிகளவில சுரக்குதாம்.அதனாலதான் நான் என்னை ஒரு பொண்ணா உணர்றேனாம்.எனக்கு நான் இப்படியிருக்கிறதுதான் புடிச்சிருக்குப்பா.என்னால போலியா நடிக்க முடியாதுப்பா.இதுதான்ப்பா நான்....நான் இப்படியே இருக்கிறேன்ப்பா. இதனால என்னோட படிப்போ, ஃப்யூச்சரோ எந்தவகையிலும் பாதிக்கப்படாதுப்பா.இதுவரைக்கும் விமலா இருந்த நான் இனிமே விமலாவா வாழ்ந்துட்டுப் போறேம்ப்பா..ப்ளீஸ்ப்பா..என்னை புரிஞ்சுக்கோங்கப்பா"..என்று அவன் தன்னைப் புரிய வைக்க முயற்சித்தான். அவன் சொல்லுவதெல்லாம் அவர்களின் அறிவுக்குப் புரிந்தாலும்..மனம் வலிக்கத்தான் செய்தது..அதன்பின்புதான் விஜயாவுக்கு அவனின் சமீபகால மாற்றங்கள் சில நினைவுக்கு வந்தன.அவனிடம் அவ்வப்போது ஒருவித பெண்தன்மை எட்டிப் பார்த்ததை அவளும் கவனித்திருந்தாள்.ஆனால் அது இத்தனை தூரம் போகும் என்பதை அவள் யோசிக்கவில்லை. தலையில் இடி விழுந்ததைப் போல இருவரும் அமர்ந்திருந்தனர்.எப்போது இருட்டியது..எப்போது விடிந்தது என்று கூடத் தெரியாமல் விட்டத்தைப் பார்த்தே உட்கார்ந்திருந்தனர். அந்நேரம் ரவியின் ஒரே தங்கை நித்யாவின் மகள் பூப்படைந்து விட்டதாக சேதி வர.. இதிலிருந்து மீளவும் முடியாமல்.. தங்கையிடம் உண்மையைச் சொல்லவும் முடியாமல் திணறி..பலவாறு யோசித்து..ஒரு வழியாய்க் கிளம்பி இதோ தாய்மாமன் சீர் செய்ய விசேஷத்துக்கு வந்துவிட்டு திரும்பிச் சென்று கொண்டிருக்கிறார்கள். "என்னங்க..என்ன செய்யப் போறோம்ங்க?"..எத்தனையாவது முறை என்றேத் தெரியாமல் மீண்டும் ஒருமுறை அந்தக் கேள்வியைக கேட்டாள் விஜயா. அவளை ஆதரவாய்ப் பற்றிய ரவியின் மனதில்.. புயலுக்குப்பின் வரும் அமைதியாய்..ஆழ்ந்த குழப்பத்திற்குப்பின் ஒரு தெளிவும், தைரியமும் ஒரு சின்னப்புள்ளியாய் தோன்றி மின்னியது.சில விநாடிகள் யோசித்தவன்... "எதுக்கு நாம இவ்ளோ யோசிக்கிறோம் விஜி..முதல்ல நம்ம புள்ளையைப் பத்தி வருத்தப்பட்டோம்..அவன் வாழ்க்கையில இப்படி நடந்திடுச்சேன்னு அழுதோம்.அதெல்லாம் நியாயமான வருத்தம்தான்.ஆனா அதுக்குப்புறம் நாம நினைச்சு வருத்தப்படுறதெல்லாம் என்ன? அடுத்தவங்க என்ன நினைப்பாங்க? அவங்களுக்கு என்ன பதில் சொல்லப்போறோம்ங்கிறதுதானே..அதுதான் நாம பண்ற தப்பு விஜி.இன்னிக்கு சடங்கு வீட்ல அந்த சுப்பிரமணி வெள்ளையும் சொள்ளையுமா வந்தானே பாத்தியா..சொத்துக்காக கூடப்பொறந்தவங்களையும் பெத்தவங்களையும் ஏமாத்தி புடுங்கிக்கிட்டு அவங்களை நடுத்தெருவுல விட்டவன் அவன்..ஆனா அவன் எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாம இந்த ஊர்ல ஜம்முன்னு வாழறான்.அவனைப் பார்த்து யாரு என்ன சொல்லுவாங்கன்னு அவன் யோசிக்கிறானா பாரு?.. அந்தப் பயலே வாழற இந்த ஊர்ல எந்தத் தப்பும் செய்யாத நம்ம புள்ள வாழக்கூடாதா?...இது நம்ம புள்ளயோட வாழ்க்கை...விஜி. அவனுக்கு நல்லதோ கெட்டதோ..அதை நாமதான் பார்த்துக்கப் போறோம்.இதுல அடுத்தவங்களை நினைச்சு நாம ஏன் பயப்படணும் சொல்லு? வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் உலகம் இது! என்ன, நம்மளைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிப்பாங்க.. நம்ம பின்னாடி பேசுவாங்க..பேசிட்டுப் போகட்டுமே.. அப்படிப் பேசுறவங்க சிரிக்கிறவங்க வீட்ல நாளைக்கு இப்படி நடக்காதுன்னு என்ன நிச்சயம்? அடுத்தவங்களுக்காக நாம வாழ முடியாதும்மா..வாழவும் கூடாது நாம நமக்காக வாழணும்.நம்ம புள்ள ஆசைப்பட்ட படிப்பையோ வாழ்க்கையையோ அமைச்சுக் குடுக்கிற வசதி நம்மகிட்ட இருக்கு. அவனை இல்லல்ல.. அவ..ளை இனிமே அவ ஆசைப்பட்டபடி வாழ விடுவோம்.இத்தனை வருஷமும் அவன்னு சொன்ன இந்த வாயும்.. மகன்னு நம்பின நம்ம மனசும் இந்த உண்மையை ஏத்துக்கிறதுக்குக் கொஞ்ச நாள் ஆகலாம்..அது ஈசியா நடந்துடாது.முள்பாதைதான்.ஆனாலும் பரவால்ல அந்த முள்பாதையில நம்ம புள்ளைய மட்டும் தனியா போகட்டும்னு மனசார நம்மளால விடமுடியுமா..பாவம்ல அவன்..சாரி அவ.. அவ சொன்னமாதிரி இயற்கையா நடக்குற இந்த மாற்றத்தை யாராலயும் எந்த பெத்தவங்களாலயும் ஈசியா ஏத்துக்க முடியறதில்லதான்..நாம கொஞ்சம் வித்யாசமான எடுத்துக்காட்டான பேரண்ட்ஸா இருப்போமே"..ரவி பேசி முடிக்கவும் அதுவரை இடையில் குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டிருந்த விஜயாவின் ஈரமான கண்களைத் துடைத்து அவளைத் தன்னோடு சாய்த்துக்கொண்டான். "சார் நீங்க நல்லாயிருப்பீங்க சார்..உங்க குடும்பம் ரொம்ப நல்லாயிருக்கும் சார்.. பின்னாலிருந்து நெகிழ்ச்சியாய் ஒரு குரல் கேட்கவும் இருவரும் ஒரு சேரத் திரும்பிப் பார்த்தனர். அங்கே ஒரு திருநங்கை அமர்ந்திருந்தார்.தன் கண்களைத் துடைத்தபடி..கரகரத்த தொண்டையைச் சரி செய்துவிட்டு.. கொஞ்சம் முன்னோக்கி வந்து இவர்கள் இருக்கையை ஒட்டியபடி அமர்ந்தவர்.. "என் பேரு நிலா.நீங்க இவ்ளோ நேரம் பேசினதையெல்லாம் நான் கேட்டுட்டுத்தான் சார் வந்தேன்.என் நெஞ்சே நிறைஞ்சு போயிடுச்சு சார்.எத்தனையோ வலி தாங்கின நெஞ்சு சார் இது.அந்த வலிக்கெல்லாம் மருந்து போட்டு விட்டுட்டீங்க சார் உங்க நல்ல மனசால. பன்னெண்டு வருசத்துக்கு முன்னால இன்னிக்கு உங்க புள்ள இருக்கிற இதே இடத்துலதான் நான் இருந்தேன் சார்.ஆனா உங்க புள்ளைக்குக் கிடைச்ச மாதிரி என்னைப் புரிஞ்சுக்கிற ஒரு அருமையான அப்பா எனக்கு கிடைக்கல சார். "உன்னால எங்க மானம் போச்சு மருவாதி போச்சு..நீ ஏன் பொறந்தே..இனிமே உயிரோட இருக்காதே‌.செத்துடு..இல்லன்னா எங்க கண்ணு முன்னாடி இருக்காதே..எங்கேயாவது போய்த்தொலை..நீ செத்துட்டதா நினைச்சு நாங்க காரியம் பண்ணிட்டு நிம்மதியா இருப்போம்.உன்னை தினந்தினம் இந்தக் கோலத்துல எங்களால பார்த்துட்ருக்க முடியாது"... அப்படி இப்படின்னு சொல்லி என்னைப் போட்டு அடிச்சதுல..மனசு பூரா வலியோட ஏதோ ஒரு தைரியமும் வழி காட்ட வீட்டை விட்டு வந்துட்டேன் சார்"..துக்கம் தொண்டையை அடைக்க..கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மூக்கை உறிஞ்சி படி தொடர்ந்தார். "அதுக்குப்புறம் நான் பட்ட அடியை நாய் கூட பட்டிருக்காது சார்.எங்க போறதுன்னு தெரியாம அலைஞ்சதும்... பஸ்ஸ்டாண்ட்ல என்னைப் போல இருக்கிற ஒரு அக்காகிட்ட போய் அழுததும், அவங்க பிச்சை எடுத்துப் பொழைக்கலாம்னு என்னைக் கூப்பிட்டதும்..'இல்லக்கா நான் படிக்கணும். என்னோட இந்த பொறப்பால நான் படிக்கிறது தடைபட்டுடக்கூடாது'ன்னு அவங்க காலைப் புடிச்சிட்டு அழுததும்...அவங்க என்னை வேற ஒரு அம்மாகிட்ட அறிமுகப்படுத்தி வச்சதும்..அந்தம்மா என்னைப் படிக்க வைக்கிறேன்னு சொல்லி சென்னைக்கு கூட்டிப் போய் தப்பான தொழில் பண்ண வச்சதும்னு... அப்பப்பா நான் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா..!!! இதுவே உங்களை மாதிரி எங்கப்பாவும் என்னைப் புரிஞ்சுக்கிட்டு ஏத்துக்கிட்டு இருந்திருந்தா என் வாழ்க்கையும் எவ்ளோ நல்லாயிருந்திருக்கும்!. ம்ஹும்"..என்று ஏக்கப்பெருமூச்சு விட்டவரின் கண்களில் நீர் கோர்த்தது. "உங்க புள்ள ரொம்பக் குடுத்து வச்சவ..உங்களை மாதிரி பெத்தவங்க இருந்தா என்னை மாதிரி, உங்க புள்ளையை மாதிரி இருக்கிற எல்லாருக்கும் நல்ல மரியாதையான வாழ்க்கை கிடைக்கும் சார்.இப்படி ஒரு நல்ல மனுஷனை நான் இப்பத்தான் பாக்குறேன்..நீங்க தப்பா நினைக்கலன்னா நான் உங்களை ஒரே ஒரு தடவை அப்பான்னு கூப்பிட்டுக்கட்டுமா?"... கண்களில் கோர்த்த நீர் கன்னங்களில் வழிய அவர் கேட்டபோது.. ரவிக்கும் விஜயாவுக்கும்..புல்லரித்துப் போனது.."பரவால்லம்மா கூப்பிட்டுக்கோ..நீயும் எங்க பொண்ணு மாதிரிதான்" என்று ரவி பாசமாய்ச் சொல்ல..."அப்ப்ப்பா!!... என்று ஆசையாய் அழுத்தமாய் அழைத்து.."ரொம்ப தேங்க்ஸ்ப்பா"..என்று ரவியின் கைகளை எடுத்து முத்தமிட்டு கண்களில் ஒற்றிக்கொண்டார். வீட்டில் வருத்தத்தோடு அழுதுகொண்டிருக்கும் விமலாவுக்கு..தனக்கான விடியல் தொடங்கிவிட்டது என்பதை அவ(ன்)ள் அறியப்போகும் நேரம் நெருங்கியது.இது விமலாவுக்கான விடியலாக மட்டுமில்லாமல் அவளைப் போன்ற பலருக்கும் கிடைக்கவேண்டிய விடியலுக்கான ஒரு எடுத்துக்காட்டாக அமையட்டுமே!. ---------- சுபா செல்வகுமார்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.