logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

A karthikeyan

சிறுகதை வரிசை எண் # 28


வசைக் கவி ஒன்னு இவனுகள தமிழ் படிக்கச் சொல்லனும் இல்லனா நாம இந்தி கத்துக்கனும் போல கெரகம் நான் பேசுறது அவனுக்குப் புரியல அவன் பேசுறது எனக்குப் புரியல என்று சலித்துக் கொண்டு உள்ளே சென்றாள் மருமகள் லட்சுமி. அந்தப் பையன் சென்று விட்டானா இல்லையா என்பதை எட்டிப்பார்த்து உறுதி செய்து கொண்டு வெளியே நடந்தார் சிவசு. தம்பி ... கொஞ்சம் நில்லு ... இந்தப் பெரியவர் தன்னிடம் குல்பி வாங்கத்தான் வருகிறாறோ என்று முடிவு செய்த அவன் ‘கித்னே சாப்’ என ஆர்வத்துடன் கேட்டான். உனக்குத் தமிழ் தெரியாதா...? “தமிழ் நை மாலும் சாப் ...” உனக்குத் தமிழ் தெரியாதா...? தமிழ் நை மாலும் சாப் ... உனக்கு கொஞ்சம்கூடத் தமிழ் தெரியாதா…? “.................................” எல்லோரும் கேட்கும் பொதுவான இந்தக் கேள்விக்கு அவனுக்குப் பதிலளிக்கத் தெரிந்தது. ஆனால் இவர் வேறு ஏதோ ஒன்றைக் கேட்க நினைக்கிறாறோ எனப் புரிந்து கொண்டு அமைதியாய் நின்றான். இந்த இடத்தில் வேறு யாராக இருந்தாலும் தனது இந்தி புலமையை இந்நேரம் மெய்ப்பிக்கத் தொடங்கியிருப்பார்கள். ஆனால் இப்போது அவன்முன் நிற்பது சிவசு என்று தமிழ் வாத்தியார் என்பது அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அதற்குள் “கியா பையா…?” என எங்கிருந்தோ வந்த குரல் பக்கம் முகமலர்ச்சியுடன் திரும்பிப் பேச ஆரம்பித்தான் அந்தக்குல்பி வாலா. குல்பி விற்பவரும் அவில்தார் முருகனும் இவரைப் பொருட்படுத்தாமல் பேசிக் கொண்டிருப்பதை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தார் சிவசு. “மாப்பிள்ளை சார் நான் பேசிகிட்டு இருந்தேனே மாப்ள சார் அத இடையிலேயே முறிச்சிகிட்டு நீங்க பேசிட்டு இருக்றது சுத்தமா சரியில்லங்க மாப்பிள்ளை சார்…” “மாப்பிள்ளை சார் அவனுக்குத் தமிழ் தெரியாது மாப்பிள்ளை சார். அவனே ஊரவிட்டு ஒறவ விட்டு பொழைக்க வந்துருக்கான். அவன்கிட்ட ஏன் உங்க தழில் புலமையைக் காட்ட நெனைக்கிறீங்க மாப்பிள்ளைங்க சார்…? என்று அதே கிண்டலுடன் அவில்தார் முருகனும் பதில்தர சிவசுவின் கோபம் தலைக்கேறியது. ” தமிழ் பேசுறதே புலமையாயடா…? “சரி விடு… அவன் பொழைக்க வந்தவன் … சாரு, வடநாட்டப் படிக்கத்தான் அங்க வேலைக்குப் போனீகளோ? பொழைக்கப்போன எடத்துல இவரு மட்டும் இந்தி கத்துக்குவாறாம் ஆனா இங்க பொழைக்க வாரவன் தமிழ் கத்துக்க கூடாதாம் …?” என்னங்கடா உங்க நியாயம்…? “அட வுடுறா போயித் தொலையிறான்…” “டே மர மண்ட … அவன் தமிழ் பேசாம இருக்கதுனால பரவாயில்ல ஆனா மறைமுகமாக நமக்கு இந்தி கத்துத்தாரானே அது உனக்குப் புரியலயா…?” “உன் தங்கச்சி சரசு இருக்காளே… இப்பல்லாம் இவனுக்கிட்ட பொருள் வாங்குற அளவுக்கு இந்தி கத்துகிட்டா… அதக்கூட விடு என் பேத்தி ஏக், தோனு இந்தப் பஞ்சுமிட்டாய்க்காரன்கிட்ட மிட்டாய் வாங்க ஆரம்பிச்சதுல இருந்து எண்ண ஆரம்பிச்சிட்டா…” “ஏன்டா … இவனுக ரெண்டு வார்த்த பேசுனா என்ன… அவனுக குடியா முழுகிடும்…?” “அவ்வளவுதாண்டா மாப்ள… ஏக் தோனு ரெண்டு வார்த்தை போதும் அதுவும் இல்லன்னா ஒரு வெரல நீட்டி பத்து ருபாயக் கொடுத்த அவன் எண்ணித்தரப் போறான் அதுக்கு மொழி தேவையே இல்லடா” என்று அவருக்கு புரியவைத்துவிட்டதாய் சிவசுவைப் பார்த்தார் அவில்தார் முருகன். “அப்ப ஐயா நம்மகிட்ட வியாபார ஒப்பந்தம் பண்ண வந்துருக்காரு… நாமதான் ஒரு மொழி பெயர்ப்பாளர போட்டுக்கனும் போல… அப்படித்தானானா…? அதுசரி ரெண்டுக்கும் மேல வேனுமின்னா அப்ப எவன் மொழியில சொல்லி அவனுக்குப் புரிய வப்ப…?” இவனுக்கு இன்னும் புரியப் போவதில்லை என்று முருகன் சிறிது சலிப்புடன் கூடிய கோபத்துடன் பேச ஆரம்பித்தார். “ஆமாடா ரெண்டு வேனுமின்னா தோனு சொல்லு முனு வேனுமின்னா தோ தோனு சொல்லு மாப்ள…” “ஏன்டா அப்ப பத்து வேனுமின்னா தோ, தோ தோனுகிட்டு கெடக்கனுமா…? உங்களுக்கு என்னடா பிரச்சனை… உனக்குத் தமிழ்னா என்னான்னு தெரியுமாடா…?” என்று மிகுந்த கோபத்துடன் பேச ஆரம்பித்தா சிசசு, அது ஒரு நீண்ட பிரசங்கத்தின் தொடக்கமாக இருக்கும் என்பதை முன்பே அறிந்த முருகன் நமட்டுச் சிரிப்புடன் நடையைக் கட்டினார். டேய் நில்லுடா என்று எத்தனையோ முறை கூப்பிட்டும் முருகன் நிற்கவில்லை. இளம் பிராயத்தில் இருந்தே சிவசுவை சீண்டுவதும் பின்னர் சமாதானம் ஆவதும் இயல்பானதுதான் என்றாலும் இன்று சிவசு கொஞ்சம் அதிகமாகவே கோபப்படும் அளவுக்கு மீறிவிட்டது. அவர் மெதுவாக நடந்தார். தமிழைக் காப்பாற்றும் ஊசிகளும், மாத்திரைகளும் நுண்னுயிர் எதிர்ப்பிகளும் இருப்புக் குறைந்து வருவதாக அவருக்குத் தோன்றியது. அவரைப் பொருத்தவரை ஒரு புறம் ஆங்கிலமும், மறுபுறம் இந்தியும் தமிழை மறக்கடிக்க முயல்வதாய் நினைத்தார். சிறிது துாரம் சிந்தனையோடு நடந்த அவர் வழக்கத்திற்கு மாறாக ஒரு தேநீர் மட்டும் அருகிலிருந்த கலப்புக் கடையில் சாப்பிட முடிவு செய்திருக்க வேண்டும். எனவே அருகிலிருந்த கடைக்குள் நுழைந்தார். “துமாரா நாம் கியா ஹை” என்று ஒரு குழந்தை தான் படித்த பாடத்தை அந்தக் கடையின் சிப்பந்தியிடம் பேசிப் பயிற்சி செய்து கொண்டிருந்தது. நுழைந்த மாத்திரத்தில் அவருக்குத் தெளிவாகக் கேட்டது. அதனை அவர்களின் பெற்றோர் அகமகிழ்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர். அச்சமயம் முதலாளியிடம் இருந்து குரல்வரவே அக்குழந்தையிடம் “தன்னியவாத்” எனக் கூறிக்கொண்டு அவன் ஓடிவிட்டான். சிவசுவிற்கு அங்கே அமருவதா இல்லை சென்று விடலாமா என்ற குழப்பம் அதிகமாயிற்று. அடுத்த சில கணங்களில் கடைச் சிப்பந்தி வளைந்து குனிந்து சிவசுவை நமஸ்தே ஜீ என்று வரவேற்றான் சிவசு அவனை உற்றுப் பார்த்தார். மேலும் பவ்யமாக அந்தக் கடைச் சிப்பந்தி அவரிடம் “ஜிசாக்கி ஆப்கோ ஜரேத்ஹே…” என்று கேட்டான். சிவசுக்கு என்னவோ செய்தது தன்னுடைய தோள் துண்டை சரி செய்து கொண்டு தொண்டையைச் செருமி ஒரு நமஸ்தே கொண்டு வா என்றார். “இங்க பாரு ஜீய கொஞ்சம் துரக்கலாய்ப் போட்டு நமஸ்தேவும் ஜீயும் நல்லா கலக்கி சூடா கொண்டா” என்றபடி தொண்டையை மறுபடியும் செருமிக்கொண்டார், பெரும்பாலும் டீ, காபி, போண்டா போன்ற ஏவல்களையே கேட்டுப் பழக்கப்பட்ட அவனுக்கு இவரின் வார்த்தைகள் மிகவும் வித்தியாசமாக இருந்திருக்க வேண்டும். அவன் மட்டுமல்ல அக்குழந்தையும் அதன் பெற்றோரும்கூட அவரைச் சற்று விசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். “என்ன முழிக்கிற போ… போயி ஒரு நமஸ்தே கொண்டுவா” என்றார் மறுபடியும் தன் முதலாளியின் ஆசிரிய என்றும் அவரை நன்றாகக் கவனிக்க வேண்டுமென்றும் அவனுக்குச் சொல்லப்பட்டிருந்தது என்பதால் அவன் மீண்டும் பவ்யமாக “கியா சாப்” என்றான். இதற்கிடையில் இருவரும் பேசிக்கொண்டிருந்ததைப் பொருட்படுத்தாமல் “பையா ஏக் டீ சுகர் ஜாஸ்தி” எனக்கூறி சிவசுக்கு எதிரே அமர்ந்தான் ஒரு இளைஞன். அவனின் ஒரு குரலைக் கேட்டும் கேட்காததுமாய் இன்னும் சிவசுவின் பதிலுக்காகக் காத்திருந்தான் அந்தக் கடைச் சிப்பந்தி, “என்ன புரியலையா…?” என்று பொட்டுக்குழியில் கைவைத்து கையை ஆட்டிக் கேட்கவும் அவன் புரிந்து கொண்டு “அச்சா சாப்” என்றான் அவன். இங்க நான் வந்தது இந்தி கத்துக்க இல்ல சரியா…? எப்ப தமிழ்ல பேசுரியோ அப்ப இங்க சாப்புட்டுக்கிறேன்… போயி முதல்ல தமிழ் கத்துக்கப்பாரு என்று தன் முகபாவனை மற்றும் குரல் ஏற்றத்தாழ்வின் முலம் புரிய வைக்க முயன்றார் சிவசு. சார் உங்களுக்கு இந்தி சுத்தமாத் தெரியாதோ…? என்று இதுவரை அமைதியாக இருந்த அந்த இளைஞன் கேட்டான். அந்தக் கேள்வியில் இருந்த ஏளனமும் ஐயோ பாவம் என்ற எக்காளமும் சிவசுக்கு சகிக்க முடியாததாகிப் போனது. அவர் அவனையே உற்றுப் பார்த்தார். “ஏன் ஐயாவுக்கு தமிழ் தெரியாதோ? ” “தெ… தெரியும் சார்…” அப்ப தமிழ்ல அவன்ட கேட்கவேண்டியதுதானே, “இல்ல சார் அவனுக்கே தமிழ் தெரியாது அவன்ட தமிழ்ல பேசுரீங்களே அதான் கேட்டேன்.” “அவன் எப்படி நான் ஹிந்திலதான் பேசுவேன்னு முடிவு பண்ணி என்கிட்ட ஹிந்தில பேசலாம்…? “சார் முனுவருசமா முடியாதத இனி எப்படி செய்யப்போறான் இது ஆகுற காரியம் இல்ல சார்…” “முனுவருசமா தமிழ்நாட்டுல இருக்கான் ஆனா முனு வார்த்தை தமழ்ல பேச முடியல ஆனா பாருங்க அவனைச் சுத்தியிருக்கிற எல்லாரும் இந்தியில பேச ஆரம்பிச்சிட்டிங்க… உனக்கு தமிழ்னா என்னான்னு உங்க தமில் வாத்தியார் சரியாச் சொல்லிக்குடுத்துருக்காரா…?” இந்தக் கேள்வி அந்த இளைஞனை சிறிது கோபப்படுத்தியிருக்க வேண்டும் என்பது அவனின் பதிலியே தெரிந்தது. “ஓ நல்லாச் சொல்லியிருக்கார் சார்…” “தமிழ் ஒரு மொழிதான் அதனால அத தலையில துாக்கி வச்சிகிட்டு ஆடவேண்டியதில்லைனு சொல்லிருக்கார் சார். ” ஒ அப்படியா… தம்பி தம்பி தவறோட முதல் புள்ளியே அங்கதான் ஆரம்பிக்குது எனக்கூறி தனது தோள் துண்டைச் சரி செய்து கொண்டும் தொண்டையை செருமிக் கொண்டும் பேச ஆரம்பித்தார் சிவசு. வெள்ளிக்கோள்ல வெள்ளி அதிகமாக இருக்குதுன்னும், செவ்வாய்க் கோள் சிவப்பானதுன்னும், வியாழன் பெரிய கோள்னும், காரிக்கோளான சனிக் கோள்ல கருப்பு நிற துத்தநாகம் இருக்குதுன்னும் இன்னைக்கு கண்டுபிடிச்சிச் சொலுதே உங்க அறிவியல். அதுக்கு பல நுரறு வருசத்து முன்னாடியே கோள்களோட பெயரை அதனோட குணங்களோட ஒப்பிட்டு எப்படி பெயர் வைக்க முடிந்தது…? இத்தனை வருடம் கழித்தும் அது எப்படி சரியா பொருந்தி இருக்கு…? அதுதான் தமிழ். அது ஒரு மொழி மட்டும் இல்ல தம்பி வாழ்வியல் கோளரு பதிகத்துல ஞானசம்பந்தர் என்ன சொல்றார்னா… ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனேயே… என அவர் முடிப்பதற்குள் அவன் இடை மறித்தான். “ஐயா நீங்க தமிழ் ஆசிரியரா…?” “இதெல்லாம் எழுதி இரண்டாயிரம் வருசம் இருக்குமா…? இதையெல்லாம் தெரட்டி ஞானசம்பத்திற்கு நோபல் பரிசு வாங்கிக் கொடுகக் முடியுமா…? பின்ன எதுக்கு சார் இந்தப் புராணம்?” சிவசுக்கு இவ்வளவு விளக்கங்களும் வியாக்யானங்களும் புறங்கையால் தட்டிவிடப்பட்டதுபோல் தெரிந்தது. இருந்தாலும் இன்னும் அவனுடைய புரிதலைக் கூர்மையாக்க விரும்பினார். “தம்பி மொழி பேசுறதுக்கு மட்டும்தான். ஆனா தமிழ் மொழியும் பேசுறதுக்கு மட்டும்தான்னு ஒவ்வொரு தமிழ் மகனும் நெனச்சதாலதான் ஞானசம்பத்திற்கு நோபல் பரிசு வாங்கிக் கொடுக்க முடியல. தமிழ் பேசுறதுக்கான மொழி மட்டுமில்லாம வாசிக்க வேண்டிய மொழி தம்பி…” அந்த வாலிபன் கொஞ்சமும் சுவாரசியமின்றி அவரைக் கவனித்து விட்டு அடுத்து வரப்போகும் டீக்காக கடை சிப்பந்தியை எதிர் நோக்கத் தொடங்கினான். இதுவரையில் ஏதும் அறியாமலும் புரியாமலும் பவ்யமாக நின்று கொண்டிருந்த அவன் சிவசுவைப் பார்த்தபடி பாவமாக நின்றிருந்தான். “தும் ஜா… மெய்ன் பாஸ் சே பாத் கரேன்” (நீ போ நான் உன் முதலாளியிடம் பேசிக்கொள்கிறேன்) என்று கூறி துண்டை உதறி தோளில் போட்டுவிட்டுக் கிளம்ப ஆயத்தமானார் சிவசு. இப்போதெல்லாம் சிவசுக்கு எதிர்மறையான சூழ்நிலைகளே அமைந்து விடுகிறது. தங்கத்தை அடகு வைக்கச் சென்ற இடத்தில் தமிழில் பேசாத குஜராத்தி சேட்டுக்கு எதிராக வசைக்கவி பாடியதெல்லாம் அந்தக் காலம் ஆகிவிட்டது. தற்போது தமிழ் பேசும் ஆனால் தமிழ் மொழி பற்றி அறியாதவர்களுக்கு எதிராகவே வசைக்கவி பாட வேண்டியதாகி விடுகிறது. “சார் உங்களுக்கு இந்தி தெரியுமா…? பின்ன எதுக்கு இவ்வளவு பெரிய நாடகம் அவன்ட ரெண்டு வார்த்த பேசியிருந்தா பிரச்சனை முடிஞ்சிருக்கும்ல” என்று நீண்ட பரிசீலனைக்குப் பின்தான் தன் வினாவை எழுப்பினான். ஆனால் அதன் பிறகு அவன் சிவசுவைக் கண்டுகொள்ளத் தயாராக இல்லை என்பது சிவசுவுக்கு நன்றாகவே தெரிந்தது. அவரின் கோபத்தைக் கட்டுப்படுத்த ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாடார். “ தம்பி... எனக்கு இந்தி மட்டும் இல்ல தம்பி மலையாளம் தெலுங்கு ஏன் ஆங்கிலம்கூடத் தெரியும், அதைவிட பாரதிக்கு ஏழு மொழிகளுக்கு மேல் தெரியுமாம், எனக்கு அது தேவையா இருந்துச்சி கத்துகிட்டேன். ஆனால் வேறொருத்தனுக்கு தமிழ் தேவையா இருந்தும் கத்துக்காம அவன் மொழியப் பறப்புனா அதப் பாத்துட்டு அமைதியா இருக்க நான் இன்னும் பக்குவப் படல” “முடிஞ்சா தமிழ்ல பேசுறதோடு மட்டும் இல்லாம தமிழ் நுால்கள்ல இருக்குற தமிழின் பெருமைகளையும் படிங்க, என்னைப் போலவே மாறிடுவீங்க” என்று கூறி அவர்களிடம் காளமேகப் புலவரிடம் கடனாகப் பெற்ற வசைக்கவி ஒன்றைப் பாட வேண்டும் என நினைத்தார். ஆனால் அது இவர்களுக்குப் புரியாமல் போகலாம் என எண்ணி. பாரதிதாசரிடம் கடனாகப் பெற்று தன் வசைக் கவியைப் பாட ஆரம்பித்தார். “வாணிகம் தம் முகவரியை வரைகின்ற பலகையில் ஆங்கிலமா வேண்டும்? .......................... ....................... ......................... தாய் தமிழ்க்கு வல்லூறாய் வாய்த்தீரோ வளம் செய்யும் எண்ணமினி நீர் பிறந்த நல்லூரின் நன் மணியாய் அல்லாது நடந்திடுமோ? நவில்வீ ரின்றே!" என்று அவர் பாடிய வசைக்கவி இமயம் வரை எதிரொளித்துக் கொண்டிருந்தது. ஆனால் அந்த இளைஞனும தம்பதியரும் சிவசுவிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பது போல் அமைதியாய் தங்களின் தேநீரைக் குடிக்கத் தொடங்கினர். மூச்சை இழுத்து ஒரு பாட்டாகவே பாடி முடித்த அவருக்கு சிறிது ஆசுவாசம் தேவைப்பட்டது பாடி முடித்ததும் மேசையில் உட்கார்ந்தார் சிவசு . அந்த இந்திக்கார பையன் அவருக்கு முன்னால் தேநீர் கோப்பையுடன் புன்முறுவளோடு நின்றான். தான் பழமை வாதியாகிவிட்டதாகவும் தான் மேற்கொள்ளும் முயற்சிகளை பிற்போக்குத்தனம் என்றும் பலர் கடந்து செல்வதையும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சிறிது நேரம் அவனையே பார்த்தார் சிவசு. டேய் தம்பி தமிழ் படிக்க வருகிறாயா....? என்று சைகை மொழியில் அவனிடம் பேசினார் சிவசு அவன் அதை புரிந்து கொண்டு அவருக்கு பதில் ஏதும் சொல்லாமல் தனது முதலாளி அமர்ந்திருக்கும் பகுதியை பார்த்தான் . அவன்ட நான் சொல்லிக்கிறேன் எனச் சொல்லிவிட்டு "டேய் அழகேசா உன்னோட பையன தினமும் என் வீட்டுக்கு அனுப்பி விடு. ஒரு மணி நேரத்துக்கு நான் அவனுக்கு தமிழ் சொல்லித்தரேன். ஐயா கட முடிஞ்ச உடனே அனுப்பிரனே....? கட முடிஞ்ச உடனே தாண்டா அனுப்ப சொல்றேன் சரியா ......? எனக்கு கூறிவிட்டு அந்த இந்திக்கார பையனிடம் டேய் நாளையிலிருந்து வந்துரு என அவனிடம் ஒரு புன்னகையை சிந்தி விட்டு நகர்ந்தார் சிவசு அந்த இந்திக்கார பையன் "டி கே சாப் " "தஸ் ரூபியா... பஸ் சாப் " என்று மிகவும் மகிழ்ச்சியோடு அவரை வணங்கினான். பத்து ரூபாய் தன்னுடைய வருமானத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்பது சிவசுவக்கு நன்றாகத் தெரியும் ஆனால் இந்த இந்திக்காரன்தான் தன்னுடைய துருப்புச் சீட்டு எனவும் இவனை வைத்து இந்த கடையில் இனிமேல் யாரும் இந்தி பேசாத அளவுக்கு மாற்றுகிறேன் பார்.... என தனக்குள்ளாகவே சூளுரைத்துக் கொண்டு வேகமாக நடந்தார் சிவசு. இந்தக் கதை என்னால் என் சொந்த முயற்சியால் எழுதப்பட்ட புனைவு ஆகும். இது யாருடைய படைப்பின் தழுவலோ அல்லது முலமோ அல்ல என்பதை இதன் முலம் தெரிவித்துக் கொள்கிறேன் இது எந்த ஊடகத்திற்கும் நல்லது சமூக வலைத்தளத்திலும் பதிவாகவில்லை எனவும் கதைகளுக்கான தீர்ப்பு வரும் வரை எதிலும் பதிவிட மாட்டேன் என்றும் எந்த வெளியீட்டுக்கும் படைப்பை அனுப்ப மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். இப்படிக்கு தங்களின் உண்மையுள்ள, (அரி. கார்த்திக்) முகவரி : அரி கார்த்திக் த/பெ. அரிகிருஸ்ணன், சென்னமநாயக்கன்பட்டி (அஞ்சல்), பூதிப்புரம் (தெற்குத் தெரு), திண்டுக்கல் – 624 004. தொலைபேசி : 96556 52611 / 80725 08009 E-mail : arikarthikdiana2@gmail.com

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.