logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

ஆர். ரமேஷ் கண்ணன்

சிறுகதை வரிசை எண் # 29


பிச்சைக்கார தாத்தா. ஊரு உறவை விட்டு மனைவியோட சென்னைக்கு வந்து ஆறு வருசமா ஒரே கம்பெனில புரொடக்ஷன் இன்சார்ஜ் வேலை பார்க்கிறார் 'கதிர்வேல்'. பஸ்லதான் தினமும் வேலைக்கு போயிட்டு வருவார். காலையில 8.27 க்கெல்லாம் கரெக்டா வந்துரும் 14'B டவுன் பஸ். அதுலபோனா, 2.50 டிக்கெட், 20 நிமிடப்பயணம், 9 மணிக்கு கரெக்டா ஆபீசுக்கு போயிடலாம். மூணு வருசத்துக்கு முன்னாடி ஒரு நாள், கதிர்வேல் வேலைக்கு போகும்போது, 55 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர், 'தம்பி' என்று கைநீட்டி பிச்சை கேட்டார். கதிர்வேல் வேலைக்குப் போகும் அவசரத்தில் பாக்கெட்டில் இருந்த ஒரு பத்து ரூபாயை எடுத்து அந்தப் பெரியவரின் கையில் கொடுத்துவிட்டு சென்றார். மறுநாள் காலை அதே இடத்தில் அந்தப் பெரியவர் 'தம்பி' என்று கை நீட்டி நின்றார். கதிர்வேல், பிச்சை கேட்ட அந்தப் பெரியவரின் முகத்தை நிமிர்ந்து பார்த்தார். "நேற்று இவருக்குத்தான் கொடுத்தோமா?" என்று நினைத்துக் கொண்டே ஒரு பத்து ரூபாயை கொடுத்துவிட்டு சென்றார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன், தன் மனைவி பிள்ளையிடம் இரண்டு நாட்களாக ஒரு பெரியவர் பிச்சை கேட்டதையும், அவருக்கு பத்து ரூபாய் கொடுத்துவிட்டு சென்றதையும் சொன்னார். அதைக் கேட்டதும் மனைவி பிரமிளா "நாம இருக்கிற நிலமையில இப்படி தெனமும் பத்து ரூவா கொடுத்தா எங்க போறது" என்றாள். "இல்லடி அவரு தம்பின்னு சொல்லி கை நீட்டும்போது கொடுக்காம கடந்துபோக முடியல அதான் கொடுத்தேன் " என்றார் கதிர்வேல். "அம்மா… அந்தத் தாத்தா பாவந்தானம்மா. அப்பா குடுக்கட்டும் நீ பேசாத " என்றது மகள் கலைவாணி. " சரி நான் எதுவும் பேசல . நீங்க சம்பாதிக்கிறீங்க யாருக்கு வேணா குடுங்க, என்ன வேணா பண்ணுங்க இப்ப வாங்க சாப்பிடுவோம் " என்று எழுந்து உள்ளே சென்றாள். மறுநாள் கதிர்வேல் வேலைக்குப் கிளம்பும்போது "அப்பா அந்தத் தாத்தாவுக்கு காசுகொடுத்துட்டு போங்க" என்றது கலைவாணி. "சரிடா தங்கம். கண்டிப்பா கொடுத்துட்டு போறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பினார் கதிர்வேல். தூரத்தில் போகும்போதே அந்தப் பெரியவர் இருக்கிறாரா என்று பார்த்தபடியே சென்றார். கதிர்வேலைப் பார்த்தவுடன் எழுந்து வந்து 'தம்பி' என்று கை நீட்டினார் அந்தப் பெரியவர். கதிர்வேல், சிரித்தபடியே ஒரு பத்து ரூபாய் எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு சென்றார். கடந்த மூன்று வருடத்தில் கதிர்வேலுக்கும், பெரியவருக்குமான அந்தப் பத்து ரூபாய் உறவு ஒரு நாளும் விட்டுப் போனதே இல்லை. அந்த உறவில் கலைவாணிக்கும் பங்கு உண்டு. தினமும் காலையில் தவறாமல் அப்பாவிடம் சொல்லி அனுப்புவாள். அந்தப் பெரியவர் எப்போதும் பஸ்டாப் பக்கத்தில் இருக்கும் சிக்னலில்தான் பிச்சை எடுப்பார். எல்லோரும் அவரை ஒரு பிச்சைக்காரராகத்தான் பார்த்தார்கள். ஆனால், கதிர்வேல் மட்டும்தான் புன்னகையோடு சந்தோஷமாய் பணத்தை கையில் கொடுத்துவிட்டுப் போவார். அவர் அதை வாங்கும்போது அந்தப் பணத்தில் அன்பும் கலந்திருப்பதாக உணர்ந்தார். அந்த அன்பிற்காகத்தான் தினமும் காலையில் அவர் அங்கு வந்து நின்றார். —-------------------------------------------------------------- கதிர்வேல், ஆறு வருடமாக அந்த கம்பெனியில் வேலை பார்த்ததன் பயனாக நேற்றுதான் 'மேனேஜர் சங்கர்', "நாளை முதலாளியிடம் உங்களின் பணி உயர்வு பற்றி பேசுவோம்" என்று கதிர்வேலிடம் சொல்லியிருந்தார். கண்டிப்பாக இன்று நமக்கு பணிவு உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார் கதிர்வேல். கலைவாணி எப்போதும்போல் "அப்பா அந்தத் தாத்தாவுக்கு காசு கொடுத்துட்டு போங்க" என்று ஞாபகப்படுத்தினாள். 'சரிடா தங்கம்'னு சொல்லிவிட்டு கிளம்பினார். "முதல்வேலையாக அடுத்தமாசம் டீவுல ஒரு டூவீலர் வாங்கணும்" என்று நினைத்துக்கொண்டே பஸ் ஸ்டாப் வந்துவிட்டார் கதிர்வேல். 14'B பஸ்ஸில் ஏறி கண்டக்டர் வந்ததும் டிக்கெட் எடுக்க பாக்கெட்டில் கைவிட்டபோதுதான் "ஆகா…அந்தப் பெரியவருக்கு பணம் கொடுக்காமல் வந்துவிட்டோமே என்று நினைத்தார்". "எனக்காக அந்தப் பெரியவர் அங்குதானே நின்றிருப்பார்". என்று பதறிப்போனார். கண்டக்டரிடம் "சார் நிறுத்துங்க நான் இறங்கணும்" என்றார் . "என்னாச்சி சார் பொறுங்க. அடுத்த ஸ்டாப்ல இறங்கிக்கலாம்" என்றார் கண்டக்டர். அடுத்த ஸ்டாப்பில் கீழே இறங்கி வேகமாகப் போயி அந்த இடத்தில் பார்க்கிறார். அந்தப்பெரியவரை காணவில்லை. "ச்சே….. எங்கே போயிருப்பாரு?" . "நம்ம ஆபீஸ்க்கு போகும்போது அந்தப் பெரியவர் இங்கே நின்னாரா? ….". "நாமதான் அவசரத்துல அவரைக் கவனிக்காமல் போய்விட்டோமா?....". "ஒருவேளை அவர் நின்றிருந்தால் நம்மிடம் வந்து தம்பி என்று கேட்டுருப்பாரே? …. எங்கே போயிருப்பாரு? ". என்று தனக்குள்ளே பேசிக்கொண்டே நடந்து பஸ் ஸ்டாப் பக்கமாகச் சென்றார். ஆபீஸ்க்கு நேரத்தோட போறது இன்னைக்கு முக்கியமான ஒன்று. மேனேஜர் இவருக்காக அங்கே காத்திருப்பார். அதைக்கூட அவர் பெரிதாக நினைக்கவில்லை. "மூன்று வருடமாகத் தொடர்ந்து நமக்காக நின்றிருந்த அந்தப் பெரியவரை எப்படி கவனிக்காமல் விட்டேன்" . "மகள்கிட்ட வேற சொல்லிவிட்டு வந்தோமே". என்று அதையே நினைத்துக்கொண்டிருந்தார். "அடுத்த பஸ் வருவதற்கு நேரமாகும், ஆட்டோவில் போய்விடலாம்" என்று ஒரு ஆட்டோவை தேக்கினார். ஆட்டோவில் ஏறி, பஸ்டாப் அடுத்து உள்ள சிக்னலை நெருங்கும்போது, சிக்னல் ஓரமாக நான்கைந்து பேர் வேடிக்கை பார்த்துக்கொண்டு கூட்டமாக நின்றிருந்தார்கள். அவர்களுக்கு பக்கத்தில் 'TN07 AJ1001' என்ற நம்பர் பிளேட்டுடன், ஒரு ப்ளூ கலர் BMW கார் நின்றுகொண்டிருந்தது. அந்தக் காரை பார்த்ததுமே கதிர்வேல் ஆட்டோவை நிறுத்தி, அந்தக் காரை நோக்கி ஓடினார். அந்தக் கார் கதிர்வேலின் முதலாளியுடையது. இரண்டு பேரை கைகளால் விலக்கிவிட்டு என்ன நடக்கிறது என்று பார்த்தார். அதிர்ச்சியும் , ஆச்சரியமும் நிறைந்த ஒரு நிகழ்வு நடந்துகொண்டிருந்தது. கதிர்வேல் தேடிவந்த அந்தப் பெரியவரின் முன்னால், முதலாளி நின்று "காரில் ஏறுங்க" எனக் கெஞ்சிக் கொண்டிருந்தார். கதிர்வேலுக்கு ஒன்றுமே புரியவில்லை. முதலாளியிடம் சென்று "என்னாச்சி சார்?. ஏன் அவரை காரில் ஏறச் சொல்றீங்க ?" என்று கேட்டார். "கதிர்வேல் நீங்களா?. அதையெல்லாம் அப்புறம் சொல்றேன். இப்ப இவர கார்ல ஏரச்சொல்லுங்க ப்ளீஸ்" என்று கேட்டுக்கொண்டார். யார் என்ன சொன்னாலும் யாரென்றுகூட நிமிர்ந்து பார்க்காமல் தலையைக் கவிழ்ந்து உட்கார்ந்திருந்தார் அந்தப் பெரியவர். வேறு வழியில்லாமல் முதலாளி தன் காரில் வைத்திருந்த மூன்று 500 ரூபாய் கட்டுகளை எடுத்துவந்து பெரியவரின் முன்னால் நீட்டி," இதையாவது வாங்கிக்கோங்க" என்றார். பெரியவர் தனது கைகளால் அந்தப் பணத்தை தட்டிவிட்டார். கதிர்வேலுக்கு ஒன்றுமே புரியாமல் நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தார். "இவர் இப்படித்தான் கதிர்வேல். சரி வாங்க போகலாம்" என்றார் முதலாளி. "சார் ஒரு நிமிடம் பொறுங்கள்" என்று சொல்லிவிட்டு, தன் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு பத்து ரூபாயை எடுத்து அந்தப் பெரியவரின் முகத்துக்கு நேராக நீட்டி, "ஐயா இதை வாங்கிக்கோங்க" என்றார். கதிர்வேலின் குரல் அவருக்கு பழக்கம் இல்லை. ஆனால், அந்தக் கை அவருக்கு பழக்கப்பட்ட கை. கதிர்வேலின் கையைப் பார்த்தவுடன் பெரியவர் நிமிர்ந்து பார்த்தார். கண்களில் கண்ணீர் வழிந்தது. கண்களைத் துடைத்துக்கொண்டே எழுந்து, அந்தப் பத்து ரூபாயை வாங்கிக்கொண்டு, எதுவும் பேசாமல் ரோட்டைக் கடந்து அந்தப் பக்கமாகச் சென்றுவிட்டார். முதலாளி ஆச்சர்யமாய் பார்த்துவிட்டு. இருவரும் காரில் ஏரினார்கள். "கதிர்வேல் ……,நான் கொடுத்த பணத்தை வாங்காமல், நீ கொடுத்ததை வாங்கிக்கொண்டாரே எப்படி?" எனக் கேட்டார் முதலாளி. "சார், அவரை எனக்கு மூன்று வருடமாகத் தெரியும். தினமும் அவருக்கு பத்து ரூபாய் கொடுத்துவிட்டுதான் நான் ஆபீசுக்கு வருவேன். இன்று ஏதோ சிந்தனையில் அவரைக் கவனிக்காமல் வந்துவிட்டேன். இப்போது நான் அவரைத் தேடித்தான் வந்துகொண்டிருந்தேன்" என்றார் கதிர்வேல். கதிர்வேலின் மனிதாபிமானத்தையும், உயர்ந்த பண்பையும் நினைத்து வியந்தார் முதலாளி. "சார்…, நீங்கள் ஏன் அவரைக் காருக்குள் ஏறச் சொன்னீங்க?. பணம் வேறு கொடுத்தீங்க? " என்றார் கதிர்வேல். அவர் என்னோட அண்ணன்தான் கதிர்வேல். சின்ன வயசுலருந்தே எதைக் கேட்டாலும் வேண்டாம் என்றுதான் சொல்வார். கல்யாணமும் பண்ணிக்கல. ஒரு நாள் வீட்டைவிட்டு கிளம்பிப் போய்விட்டார். பலமுறை அவரைப் பார்த்து வீட்டிற்கு அழைத்தும் அவர் வரவில்லை. பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வதில்லை. நான் என்ன பண்றது கதிர்வேல். இத்தனை ஆண்டுகளாக அவருக்குத் தெரிந்தவர், பழக்கமானவர் என்று யாரையுமே நான் பார்த்ததில்லை. இன்று அவர் உங்கள் மீது காட்டிய அன்பும் அக்கறையும்கூட எனக்கு புதுமையாகத்தான் இருக்கிறது. "யூ ஆர் கிரேட் கதிர்வேல். தேங்க்யூ " என்று சொல்லும்போது, கார் கம்பெனி முன் நின்றது. ஆபீஸ் வந்ததிலிருந்து சங்கர்சார் கதிர்வேலை இன்னும் காணோமே என்று பார்த்துக் கொண்டிருந்தார். கதிர்வேல் வந்தவுடன், "கதிர்வேல், உங்ககிட்ட நேத்து என்ன சொன்னேன். இன்னைக்குன்னு பாத்து இவ்ளோ லேட்டா வறீங்க" என்றார். "சாரி சார் நான் வரும்போது ஒரு சின்ன தவறு நடந்துபோச்சு. அதான் லேட் ஆயிடுச்சு". "சரி வாங்க முதலாளியப் பார்த்து பேசுவோம்". "ஓகே சார் வாங்க போகலாம்". காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போது கதிர்வேலுக்கு இருந்த சந்தோஷம் இப்போது இல்லை. அந்தப் பிச்சைக்காரப் பெரியவர் நடந்து கொண்டதையும், முதலாளி அவரை அண்ணன் என்று சொன்னதையுமே நினைத்துக் கொண்டிருந்தார். மேனேஜர் முதலாளியிடம் கதிவேலின் திறமையைப் பற்றியும், அவருக்கு உயர் பணி கொடுக்கலாம் என்பது பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார். முதலாளி கதிர்வேலை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தபடி "யுவர் கிரேட் கதிர்வேல்" என்று சொல்லிவிட்டு, மேனேஜரிடம் சரி அப்படியே செய்யுங்க என்றார். "ஓகே சார்" என்று சொல்லிவிட்டு கதிர்வேலை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார் மேனேஜர். மேனேஜரை மீண்டும் அழைத்தார் முதலாளி. மேனேஜர் வேகமாக உள்ளே சென்றார். "மேனேஜர்…., கதிர்வேல் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்?". "12 ஆயிரம் சார்". "சரி அடுத்த மாசத்துல இருந்து அவருக்கு 17ஆயிரம் குடுங்க. சம்பளம் இல்லாம ஒரு ஆயிரம் ரூபாய் சேர்த்து குடுங்க" என்றார் முதலாளி. "ஓகே சார்" என்று மேனேஜர் சொல்வதற்குள், "மேனேஜர்…. கதிர்வேலுக்கு ஆயிரம் ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுக்க சொன்னேன்ல, 'ஆமா சார்' அந்தப் பணத்தை கேசியரிடம் சொல்லி இன்னைக்கே கொடுக்கச் சொல்லுங்க. அடுத்த மாதத்திலிருந்து சம்பளத்துடன் சேர்த்து கொடுக்க சொல்லுங்க" என்றார். அந்த வேலைக்கு 15 ஆயிரம் தான் சம்பளம். ஆனால், 17 ஆயிரம் கொடுக்கச் சொல்லுகிறார். கூடுதலாக ஏன் அந்த ஆயிரம்?. இதையெல்லாம் முதலாளியிடம் கேட்க முடியாமல் "ஓகே சார்" என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார் மேனேஜர். கதிர்வேலை அழைத்து, முதலாளி சொன்னதை சொல்லிவிட்டு, "ஈவினிங் போகும்போது மறக்காம அந்த ஆயிரம் ரூபாய் வாங்கிட்டு போயிடுங்க" என்றார். செயற்கையான ஒரு சிரிப்போடு "ஓகே சார். தேங்க்ஸ்" என்று சொல்லிவிட்டு எழுந்து வந்தார் கதிர்வேல். அந்த ஆயிரம் ரூபாய் எதற்காக கொடுக்கச் சொல்கிறார் என்பது கதிர்வேலுக்குத் தெரியும். அவரின் அண்ணனுக்கு மூன்று வருடமாக தினமும் பத்து ரூபாய் கொடுத்ததற்கும், நாளையிலிருந்து கொடுக்கப்போவதற்குமாய் சேர்த்து அந்த ஆயிரம் ரூபாயை கொடுக்கச் சொல்கிறார் . அந்தப் பணம் அதற்காகத்தான் என்று முதலாளி சொல்லவில்லை. ஆனால், அந்த ஆயிரம் ரூபாயின் காரணம் அதுவாகத்தான் இருக்கும். கூடுதல் சம்பளம் வரப்போகிறது, அதை வைத்து என்ன செய்யலாம் என்று சந்தோஷமாய் ஆபீஸ்க்கு வந்த கதிர்வேல், அவர் எதிர்பார்த்ததை விட அதிகமாக சம்பளம் கிடைத்தும் அவருக்கு சந்தோஷம் இல்லை. வீட்டிற்கு போனதும் 'முதலாளி என்ன சொன்னார்?' என்று மனைவி கேட்பாள். என்ன சொல்வது?….. உண்மையைச் சொல்லிவிடுவோமா?, அல்லது வேண்டாமா? என்ற குழப்பத்தோடு சென்றார். கணவன் எப்போது வருவார் என்று காத்திருந்தவள், கதிர்வேலை பார்த்ததும் சந்தோமாய் வாங்க என்று அழைத்தாள். "முதலாளி கிட்ட பேசினீங்களா என்ன சொன்னார்?" என்று ஆர்வமாய் கேட்டாள் பிரமிளா. "ம்… சொல்லி இருக்கோம். சக்சஸ் என்று தான் நினைக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றார். "இப்பதாங்க எனக்கு நிம்மதியா இருக்கு " என்று சொல்லிக்கொண்டே மகிழ்ச்சியோடு உள்ளே போனாள் பிரமிளா. வேலைக்கு மீறிய சம்பளத்தையும், தனியாக கொடுக்கும் அந்த ஆயிரம் ரூபாயையும் கதிர்வேலினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனாலேயே அதைப்பற்றி மனைவியிடம் முழுமையாக சொல்லாமல் மறைத்து விடுகிறார். எப்போதும் போல் மறுநாள் காலை வேலைக்கு கிளம்புகிறார். மகள் கலைவாணி அப்பாவிடம் "அந்தத் தாத்தாவுக்கு பணம் கொடுத்துட்டு போங்கப்பா" என்று சொல்லி அனுப்புகிறாள். "சரிடா தங்கம்" என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். முதலாளி அவரின் அண்ணனுக்கு கொடுப்பதற்காகப் பணம் கொடுத்திருக்கிறார். அது அவருடைய பணம். அவருக்குத்தான் போய்ச் சேரவேண்டும் . என்ற நினைப்போடு அந்தப் பெரியவரைப் பார்த்துக்கொண்டே வருகிறார். அவர் எப்போதும் நிற்கும் அந்த இடத்தில் அவரைக் காணவில்லை. கதிர்வேல் அந்த இடத்தில் நின்று சுற்றி தேடுகிறார். எந்தப் பக்கத்திலும் அவரைக் காணவில்லை. கதிர்வேலின் மனமும், முகமும் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. "இத்தனை நாளாக இந்த இடத்தில் நமக்கென நின்று கொண்டிருந்த ஒரு உறவு எங்கே?". "நான் 12 ஆயிரம் சம்பளம் வாங்கியபோது, என் கஷ்டத்திலிருந்து நான் பத்து ரூபாய் அவருக்கு கொடுத்தபோது எனக்குள் இருந்த அந்த சந்தோஷமும், நிம்மதியும் இப்போது இல்லாமல் போனதே". இன்று நாம் எவ்வளவு பணத்தை அவருக்குக் கொடுத்தாலும் அது என்னுடைய பணம் இல்லை. அது அவருடைய பணம். அதனால் எந்தப் புண்ணியமும் , எந்த சந்தோசமும் எனக்கு கிடைக்கப் போவதில்லை. அவர் வேண்டாம் என்று தட்டிவிட்ட அந்தப் பணத்தை அவருக்குக் கொடுத்தால், அவரை ஏமாற்றுவதாகப் போய்விடுமே. ஆமாம்…. அவர் இன்று வராததும் ஒரு வகையில் நல்லதுதான். அவரை ஏமாற்ற என் மனம் இடம் கொடுக்கவில்லை. முதலாளி என்னிடம் பணம் கொடுத்து அனுப்பியிருப்பார் என்பது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதனால்தான் இன்று அவர் இங்கு வரவில்லை. என நினைத்துக் கொண்டே பஸ்டாப் வந்துவிட்டார். 14'B டவுன் பஸ் வந்தது. ஏரி உள்ளே சென்றார். கதிர்வேலின் நண்பர் ஒருவர் உள்ளே நின்றிருந்தார். கதிர்வேல், இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒருநாள் அவரைச் சந்திக்கையில் "இப்போது நான் வாங்கும் சம்பளத்தைவிட கூடுதலாக ஏதேனும் வேலை இருந்தால் சொல்லுங்கள்" என்று சொல்லியிருந்தார். அதற்குப் பிறகு இப்போதுதான் அவரைப் பார்க்கின்றார். இருவரும் கை கொடுத்து எப்படி இருக்கீங்க என்று விசாரித்துக்கொண்டார்கள். "சார் நீங்க கூட வேலைக்கு கேட்டிருந்தீங்கல்ல?. நான் உங்களுக்கு போன் பண்ணலாம்னு நினைச்சேன், மறந்துட்டேன் சாரி சார். நீங்க பார்க்கிற அதே வேலைதான். எங்க கம்பெனில வேக்கண்ட் இருக்கு. ஆனால், சம்பளம் 12,500 தான் கிடைக்கும். விருப்பம் இருந்தா சொல்லுங்க நாளைக்கே வந்து ஜாயின் பண்ணிக்கலாம். என்ன சொல்றீங்க?" என்றார் அந்த நண்பர். "எப்படின்னு யோசிச்சு சொல்றேன் சார்" என்று சொல்லிவிட்டு கதிர்வேல் எப்போதும் இறங்கும் அந்த பஸ் ஸ்டாப்பில் இறங்கி கம்பெனிக்கு சென்றார். முதலாளி அவர் அண்ணனுக்காக கொடுத்த பணத்தை, நாம் கொடுத்திருப்போம் என்று நினைத்துக் கொள்வார். ஆனால், அவர் இன்று வரவில்லை என்று சொன்னால் கண்டிப்பாக வருத்தப்படுவார். கடைசியில் என் மூலமாக ஏதாவது அண்ணனுக்கு செய்யலாம் என்று முதலாளி என்னை நம்புகிறர். அந்தப் பணத்தை அவருக்கு கொடுத்தியா என்று அவர் கேட்கப்போவதில்லை. ஆனால், அவரிடம் சொல்லாமல் அந்தப் பணத்தை நாம் வைத்துக் கொள்வது முதலாளியை ஏமாற்றுவதாக போய்விடும். பணி உயர்வு கிடைத்துவிட்டதென்று மனைவியின் அந்த சந்தோசம். மகள் தினமும் சொல்லி அனுப்புகின்ற அந்த வார்த்தை. இரண்டிற்கும் நாம் என்ன செய்யப் போகிறோம். சின்னப் பிள்ளையிடம் எப்படிச் சொல்வது? "அந்தத் தாத்தா வரவில்லை என்று". சொன்னால் தினமும் சொல்லிக் கொண்டிருந்த அந்தப் பிள்ளையின் மனம் என்னவாகும். மனைவியிடமும், மகளிடமும், முதலாளியிடமும் எதையும் சொல்ல முடியாத ஒரு நிலையில் இருந்தார் கதிர்வேல். அன்று நேரம் ஆக ஆக அவரின் மனதிற்குள் குழப்பம் அதிகமானது. அதுதான் நல்ல முடிவு என்று சொல்லிக்கொண்டே, பஸ்ஸில் பார்த்த அந்த நண்பருக்கு ஃபோன் பண்ணினார். "நாளை உங்கள் கம்பெனிக்கு வேலைக்கு வருகிறேன்" என்று முடிவாகச் சொல்லிவிட்டார். சங்கர்சாரிடமும், முதலாளியிடமும் நாளையிலிருந்து நான் வேலைக்கு வரமாட்டேன் என்று அவரால் சொல்ல முடியவில்லை. எப்போதும் போலவே ஆபீஸ் முடிந்து வெளியே வருவதற்கு முன்னால், நேற்று வாங்கிய அந்த ஆயிரம் ரூபாயை ட்ராவில் வைத்துவிட்டு வந்துவிட்டார். நேராக வீட்டிற்கு போய் மனைவியிடம் நடந்ததைச் சொன்னார். நேற்று அவ்வளவு சந்தோஷப்பட்ட மனைவி, இன்று அது இல்லை என்றதும் அவ்வளவாக வருத்தப்படவில்லை. "சரி விடுங்க. இவ்வளவு நாளா அந்த 12 ஆயிரம் சம்பளத்தை வைத்துதானே நாம வாழ்ந்தோம். அது போதும் நமக்கு" என்று ஆறுதலாகச் சொன்னாள் பிரமிளா. மறுநாள் வேறு கம்பெனிக்கு வேலைக்குப் போகிறார். கலைவாணி மறக்காமல் "அந்தத் தாத்தாவுக்கு பணம் கொடுத்துட்டு போங்க" என்று சொல்லி அனுப்புகிறாள். கதிர்வேல் மனக்கலக்கத்தோடு "சரிடா தங்கம்" என்று பொய்யாக சொல்லிவிட்டு திரும்பி கண்களை துடைத்துக் கொண்டே போகிறார். இன்றாவது அந்தப் பெரியவர் வந்திருப்பார் என்ற நம்பிக்கையில் சென்றார். அவரைக் காணவில்லை. வாழ்க்கையில் பெரிதாய் ஏதோ ஒன்றை இழந்து விட்டதாய் வருத்தப்பட்டார். அதே 14'B பஸ்ஸில் ஏறினார். பஸ் அடுத்த சிக்னலில் நின்ற பொழுது "இந்த இடத்தில்தானே நேற்று அவரைப் பார்த்தோம்" என்று, தேடிப்பார்க்கிறார். கொஞ்சம் தூரமாக அவரைப் போன்ற ஒருவர் நிற்பதாய் தெரிகிறது. 'அங்கே நிற்பது அவராகத்தான் இருக்க வேண்டும்' என்று அவசரமாய் சிக்னல் என்று கூட பார்க்காமல் இறங்கி ஓடுகிறார். இவர் நினைத்ததுபோல் அவர் அதே பெரியவர்தான். கதிர்வேல் நேராக அவர் முன் நின்று கை கூப்பி கண்கலங்குகிறார். அந்தப் பெரியவர் சிரித்துக் கொண்டே தலையாட்டுகிறார். தன் பாக்கெட்டில் இருந்த ஒரு பத்து ரூபாயை எடுத்து அவரிடம் நீட்டுகிறார். அந்தப் பெரியவர் அதே சிரிப்போடு அந்தப் பணத்தை வாங்க மறுக்கிறார். அவரின் தம்பி கொடுத்து அனுப்பி இருப்பார், அந்தப் பணத்தைதான் நான் கொடுக்கிறேன் என்றுதான் அவர் வாங்கவில்லை என கதிர்வேல் புரிந்துகொள்கிறார். கதிர்வேல் அந்தப் பெரியவரின் கையைப் பிடித்து, அந்தப் பத்துரூபாயை அவரது கைக்குள் வைத்து, "இது உங்கள் தம்பி கொடுத்து அனுப்பிய பணம் இல்லை. இப்போது நான் அந்த கம்பெனியில் வேலை பார்க்கவும் இல்லை" என்று சொல்லுகிறார். அதைக் கேட்டதும் அந்த பெரியவர் பணத்தை வாங்கிக் கொள்கிறார். இருவருக்குமே கண்கள் கலங்கி நிற்கிறது. கதிர்வேல் குனிந்து அவரின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு, ஐயா நான் இன்று புதிதாக ஒரு கம்பெனிக்கு வேலைக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு, அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை தேக்கி ஏறி புதிதாய் அந்தக் கம்பெனிக்குச் செல்கிறார். இப்போது என்றும் இல்லாத ஒரு பெரிய நிம்மதியும் சந்தோஷமும் அவருக்குள் பரவியிருந்தது. இழந்த ஒன்று திரும்ப கிடைத்துவிட்டதாய் பெரும் மகிழ்ச்சியோடு வேலைக்குச் சென்றார் கதிர்வேல். எப்போதும் போல் மறுநாள் வேலைக்கு வரும்போது தவறாமல் "அப்பா அந்த தாத்தாவுக்கு பணம் கொடுத்துட்டு போங்க" என்று சொல்லி அனுப்புகிறாள் கலைவாணி. இன்று உண்மையாகவே தன் மகளிடம் "சரிடா தங்கம்" என்று சொல்லிவிட்டு வருகிறார். இன்று எப்போதும் நிற்கும் அந்த இடத்தில் அந்தப் பெரியவர் நிற்கிறார். கதிர்வேல் முகத்தில் எப்போதும் இருந்ததை விட இன்று மகிழ்ச்சி அதிகமாகவே இருந்தது. ஒரு பத்து ரூபாய் எடுத்து அந்தப் பெரியவரிடம் கொடுத்துவிட்டு, குனிந்து அவரின் காலை வணங்கிவிட்டு செல்கிறார். எப்போதும் போல் 8.27க்கெல்லாம் 14'Bடவுன்பஸ் வந்தது. கதிர்வேல் அதில் ஏறி தனக்கு பிடித்த சந்தோஷமான ஒரு வாழ்க்கையைப் பயணிக்கிறார். "வாழ்க்கை, பணத்தை நோக்கித்தான் நகர்கிறது. ஆனால் மனமும், உயிரும் பணத்தைத் தாண்டி வேறு எதையோ தேடுகிறது. சிலர் அந்தத் தேடலை கண்டுபிடித்து அதன்படி வாழ்கிறார்கள். பலர் அது என்னவென்று தெரியாமலேயே போய்விடுகிறார்கள்". நன்றி. எழுத்து; ஆர். ரமேஷ் கண்ணன்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.