logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

அகல்

சிறுகதை வரிசை எண் # 272


வளர்ந்து வரும் நாகரீகத்தோடு வானை தொட்டு விடும் முயற்சியில் கட்டிடங்களும் போராடிக் கொண்டிருக்கும் காலம் இது. 'ஸ்மார்ட் சிட்டி' எனப் பெயர் பெற்று வளர்ந்து கொண்டிருக்கும் மாநகரத்தில், எத்தனை காசுகளை செலவளித்து கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை. ஆனால் பல நாட்களாக கட்டுமானப் பணி மட்டும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பழைய பேருந்து நிலையம் புது மணப் பெண்ணைப் போல மிக மெதுவாக தாயாராகிக் கொண்டிருக்கிறது. எந்நேரமும் ஏதாவது ஒரு இயந்திரத்தின் இரைச்சல் அந்த பகுதியினை கடப்போரின் காதுகளை செவிடாக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தது. கடந்து செல்பவர்களுக்கே இத்தகைய நிலைமை என்றால் அங்கு வாழ்வோர்..? ஆம். இத்தனை இரைச்சலிலும் அங்கு சிறு குறு வணிகர்களும், வாழ்வாதாரத்தை தேடிக் கொண்டிருக்கும் மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலி எடுக்கும் கட்டிடங்களுக்கு சில மீட்டரே தொலைவு கொண்ட ஒரு தூய்மைத் தொழிலாளர் குடியிருப்பு பகுதி இருக்கிறது. இங்கு வசிப்போருக்கு வீடு இருக்கிறது. ஆனால் அது சொந்தம் கிடையாது. எப்போது யார் வந்து பிடுங்கிக் கொள்வர், துரத்தி விடுவர் என்ற பயத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எத்தனையோ வருடங்களுக்கு முன்பு எப்படியோ வந்துவிட்ட இவர்களில் மூதாதையர்கள் தங்களது குடிகளை இங்கு நிறுவிக் கொண்டனர். இவர்களும் அப்படி அப்படியே தங்களது காலத்தை தள்ளிக் கொண்டிருக்கின்றனர். புத்தி உள்ளவர்கள் படித்து பணிக்கு சென்று தங்களது நிலையை உயர்த்திக் கொண்டனர். படிப்பறிவு இல்லாதவர்கள் இன்னமும் குப்பைகளை அள்ளிக் கொண்டிருக்கின்றனர். உடன் வாரிசுகளும். குப்பை அள்ளும் பணியாகினும் அரசாங்க உத்யோகமும், அதில் வரும் வருமானமும் தேவையை பூர்த்தி செய்ய, பொருளாதார ரீதியில் நல்ல முறையில் தான் உள்ளது வாழ்வு. இதிலும் ஒரு ஓட்டையாக, அவரத்தேவைக்கு வாங்கிய கடன் ஸீபீடு, மீட்டர், ஜெட் என வட்டிக்கு வட்டி போட்டு, வாங்கிய ஐம்பதாயிரம் பணத்திற்கு லட்சத்தில் வட்டி கட்டிக் கொண்டிருக்கின்றனர் போதிய படிப்பறிவும், பகுத்தறிவும் இல்லாத ஏழை மக்கள். மாநகரின் மையத்தில், இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலும் போதிய கழிப்பிட வசதியின்றி, படிப்பறிவின்றி வாழும் மக்கள் இவர்கள். ஆம். நீங்கள் வாசித்தது உண்மை தான். ஊரெல்லாம் இருக்கும் கழிவுகளை சுத்தம் செய்யும் இப்பகுதி மக்களுக்கு தங்களது கழிவுகளை தள்ள ஒரு இடமில்லை. இந்த பகுதிக்கென கட்டப்பட்ட கட்டண கழிப்பிடமும் சரியான பராமரிப்பின்றி இழுத்து மூடப்பட்டு விட்டது. தெருவின் கடைக்கோடியில் இருக்கும் இரண்டு பெரிய கட்டிடங்களுக்கு மத்தியில் உள்ள சாக்கடை தான் இங்கு வசிப்பவர்களுக்கான கழிப்பிடம். வலப்புறம் உள்ளது ஆண்களுக்கும் இடப்புறம் உள்ளது பெண்களுக்குமென பிரிக்கப்பட்டது. அந்த சாக்கடை சந்தில் நின்று கொண்டு அருகில் பீடி பிடிக்கும் ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தான் சபரி. ஒருவர் எழுந்து வெளியே வர, “ண்ணா... ண்ணா... ஸ்கூலுக்கு லேட் ஆகிடுச்சு ண்ணா. நா போயிட்டு சீக்ரம் வந்துடுறேன் ண்ணா” என கேட்டான் பீடி பிடித்துக் கொண்டிருந்த பெரியவனிடம். “படிக்கிற பையன் நேரத்தோட எழுந்து வந்துட்டு போறதுக்கு என்னடா. சீக்ரம் போய்டு வா. நா முப்பது எண்ணுற வரைக்கும் தான் உனக்கு டைம்” முடிந்து போன பீடியை காலில் போட்டு நசுக்கியவாறு சொன்னவன், அவன் சென்றதும் அடுத்ததனை பற்ற வைத்தான். இரண்டு பெரிய கற்களின் மேல் லாவகமாக கால் வைத்து உள்ளே இறங்கிய சபரி, அவசரமாக வந்ததனை மட்டும் வெளியே தள்ளி விட்டு, சிறிது நேரத்திலேயே எழுந்து மேலே வந்தான். வேக வேகமாக வீட்டிற்கு சென்றவன் குளியலறையினுள் புகுந்து கொண்டான். அவனது அம்மா குளியலறை கதவின் மீது எடுத்து போட்டிருந்த யூனிஃபாரமை மாட்டிக் கொண்டு அடுத்த சில நிமிடங்களில் வெளியே வந்தான். “ம்மா... இன்னைக்கு எதுவும் சமைக்கலயா..?“ “வாசல் தெளிக்க போயிட்டு இப்போ தான் சாமி வந்தேன். தயிர்காரம்மா கம்பஞ்சோறு கொட்டாந்துச்சு. நான் தயிர் ஊத்தி பெசஞ்சு வெக்கிறேன். நீ போயி சம்பு கடையில மதியத்துக்கு கட்டிட்டு வந்துடு.“ “சீக்ரம் ம்மா. இன்னைக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு” சொன்னவாறே தனது டிபன் பாக்ஸுக்களை எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கி நடந்தவன், ஒரு சந்தில் நுழைந்து மறைந்தான். சபரியின் தந்தை கூட தூய்மை பணியாளர் தான். ஆனால், அரசாங்க உத்தியோகமல்ல. சாதாரண கூலித் தொழிலாளி. வயது முதிர்ந்த அரசாங்க ஊழியர்கள் தங்களது பணியை செய்ய முடியாமல் பணி செய்வதற்கெனவே ஒருவரை பிடித்து தனக்கான இடத்தில் அமர்த்தி விடுவர். சம்பளத்தில் கொஞ்சமும் கொடுப்பர். இப்படியான வாய்ப்பு ஒன்றின் மூலமாக, உறவினர் ஒருவருக்காக உள்ளே நுழைந்த சபரியின் தந்தை, அரசாங்க ஊழியர்கள் போதாமல் கூலிக்கு ஆள் எடுப்பதாகவும், சில மாதங்களில் நிரந்தர பணி நியமனம் செய்யப்படுவர் என்ற செய்தி அறிந்த பின்பு அதில் சேர்ந்து கொண்டார். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக பணியில் இருக்கிறார். இந்த வருடம், அடுத்த வருடமென அவரது அரசாங்க ஊழியர் கனவு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இருபது வருடங்கள் ஏமாந்த பின்னும் சபரியினுடைய தந்தையின் நம்பிக்கை சற்றே வியப்பானது தான் இல்லையா..? சபரியின் அன்னை அடிக்கடி நோய்வாய்ப்பட்டு போவதினால் அந்த பணியிலிருந்து விலகி விட்டார். வருமானம் போதாமல் தினம் காலையில் அருகிலிருக்கும் அங்காடிகளிலும், காலை எழுந்து வாசல் தெளிக்க முடியாத வீடுகளிலும் வேலை கேட்டு, நாளொன்றுக்கு சுமார் முப்பது முப்பத்தைந்து வாசல்களை நீர் தெளித்து பெருக்கி கோலமிட்டு விட்டு வருவார். சூரிய உதயத்திற்கு முன்பே இப்பணிகளை செய்ய வேண்டி இருப்பதினால் தினம் காலை நான்கு மணிக்கு முன்பாகவே எழுந்து கொள்வார். சில நாட்கள் நீர் பற்றாக்குறையினால் சில தூரங்களுக்கு வாளியில் நீரைச் சுமந்து செல்ல வேண்டியிருக்கும். அப்படியான நாட்களில் சபரிக்கு தேவையான உணவை சமைத்து தர அவரால் இயலாது. என்ன செய்வது விலைவாசிகளை உயர்த்தும் அரசாங்கம், ஏழை மக்களின் ஊதியத்தினையும் உயர்த்தினால் தானே வாழ்வு சமப்படும். அம்மாவினால் சமைத்து தர இயலாத நாட்களில், இரண்டு தெரு தள்ளி இட்லி கடை வைத்திருக்கும் சம்பூரணி என பெயர் கொண்ட சம்பம்மாவிடம் தனது மதிய உணவு பாத்திரத்தை நிரப்பிக் கொண்டு கிளம்பி விடுவான் சபரி. இன்றும் அப்படித் தான் வாய்த்தது. சபரி சென்ற நேரம் நிறைய பாத்திரங்கள் இருந்தன. சம்பம்மாவும் சமைப்பதும் பார்சல் செய்வதுமாக பிஸியாக இருந்தார். “சம்பம்மா ஆறு இட்லி” என பாக்ஸை நீட்டினான் சபரி. “இரு ப்பா. எத்தனை பாத்திரம் இருக்கு பாரு. அவங்கவங்க வெச்சுட்டு போய் எவ்ளோ நேரமாச்சுண்டு சண்டைக்கு வராங்க. ஒரு பத்து நிமிஷம் ஆகும் நில்லு.“ கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்த சபரி பல்லை கடித்துக் கொண்டு நின்றான். அவனது சிறு வயதிலிருந்து பார்க்கிறான் சபரி. இந்த சம்பம்மாவிடம் மட்டும் அப்படி என்ன தான் சூப்பர் பவர் இருக்கிறதென்று தெரியவில்லை. குழம்புகளை மட்டும் நேரத்துடன் வைத்து எடுத்துக் கொண்டு வந்து கடையை போட்டு விடுவார். இரண்டு அடுப்புகளை வைத்து ஒன்றில் இட்லி மற்றொன்றில் தோசையென சுடச்சுட சுட்டு கேட்பவருக்கு பார்சலும், அங்கேயே அமர்ந்து உண்பவர்களுக்கு பரிமாறவும் செய்வார். பம்பரத்தை போல வேலை செய்யும் அவரது கைகளையே பார்த்தவாறு நின்றிருந்தான் சபரி. அப்போது தான் அவன் கண்களில் பட்டது அந்த சம்பவம். அடுப்பின் அனலில் அமர்ந்திருப்பவரின் நெற்றியில் சுரந்து வழிந்த வியர்வை திறந்திருந்த மாவுப் பாத்திரத்தில் ஒரு சொட்டிட்டது. திகைப்புடன் விழிகளை விரித்தவனின் அனுமதியின்றியே செவி வழி செய்தி அவன் கண்களில் காட்சியானது. சில நாட்களுக்கு முன்பு. தெருக்கடை திண்ணையில் நண்பர்களுடன் அமர்ந்து வளவளத்துக் கொண்டிருந்த போது ஒருவன் சொன்னான். “டேய்... இனிமே சம்பம்மா கடையில எதுவும் வாங்காதீங்க டா” “ஏன் டா” “இன்னைக்கு காலையில முட்ட தோசை சாப்டலாம்னு சேத்து வெச்சிருந்த காச எடுத்துட்டு போனேன் டா.“ “ம்ம்” “அப்போ... ஏன் சம்பம்மா ரெண்டு நாளா கடை தொறக்கலண்டு அந்த கோமதி அக்கா வந்து பேசிட்டு இருந்தாங்க. நா அவங்க பாப்பா கூட விளையாண்டுட்டு இருந்தேனா...“ “ம்ம்” “அப்போ தான் டா எதேச்சையா பாத்தேன். சளி காய்ச்சல் ன்டு அந்த அக்கா கிட்ட பேசிக்கிட்டே மூக்குல ஒழுகின சளிய சிந்தி அந்த பக்கம் போட்டாங்களா... ஆனா... அது கரெக்டா தொறந்திருந்த தக்காளி சட்னி குண்டாலயே வுழுந்துருச்சு.“ “அச்சச்சோ... அப்றம்..?“ “தோசையும் வேணா... ஒன்னும் வேணான்டு எழுந்து வந்துட்டேனே. சம்பம்மா கிட்ட ருசி இருக்குற அளவுக்கு சுத்தம் இல்லைடா” என ஒருவன் பேசிக் கொண்டிருக்க, தூரத்தில் அவன் பெயர் அழைக்கும் சப்தம் கேட்டு எழுந்து ஓடினான் கதை சொன்னவன். “ச்சே... சம்பம்மாவா இப்டி” என சபரி ஆதங்கப்பட, “அட நீ வேற டா. அவங்க பெரியம்மா புதுசா இட்லி கடை போட்டு இருக்காங்க ல்ல. கஸ்டமர் புடிக்க இப்படி புரளிய கெளப்பி விட்டு இருப்பாங்க” என சமாதானம் சொன்னான் மற்றொரு தோழன். “ஏன் ப்பா தம்பி. டப்பாவ குடுப்பா” நினைவுகளில் சுழன்றிருந்த சபரி தெளிந்தவனாக டப்பாவை கொடுத்து விட்டு நின்றான். “தக்காளி சட்னி எதுல வெக்கட்டும்” என கேட்ட சம்பம்மாவை பார்த்து மழுப்பலாக சிரித்தவன், “இல்ல சாம்பார் மட்டும் போதும்” என்று விட்டான். பார்சல்களை வாங்கிக் கொண்டு திரும்பியவன் மணியை பார்க்க, திட்டமிட்ட நேரம் கடந்திருந்தது. இன்று கணிதப் பாடத்திற்கான ஸ்பெஷல் கிளாஸ். டெஸ்டுக்கான ஃபார்முலாக்களை மனதில் சொல்லிப் பார்த்தவாறே நடந்தான். வீட்டினுள் நுழைந்தவுடன் பையை தாயார் செய்தவன், அம்மா மாலைக்காக எடுத்து வைத்திருந்த பாலில் கொஞ்சம் ஒரு பேப்பர் கப்பில் ஊற்றிக் கையில் எடுத்துக் கொண்டு, மற்றொரு கையில் கம்பங்கஞ்சியை எடுத்து குடித்தவாறே வெளியே வந்தான். அவனது வீட்டிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளி இருந்த ஒரு சந்தில் பல நாட்களாக பயன்படுத்தாத ஒரு வாகனத்தின் அடியில் நாய் ஒன்று, ஈன்று சில நாட்களேயான தனது குட்டிகளுடன் படுத்திருந்தது. கொண்டு வந்த பாலை அங்கிருந்த ஒரு பாத்திரத்தில் ஊற்றிய சபரி, தனது வளர்ப்பு நாயான குட்டிகளின் அன்னையை தடவிக் கொடுத்தான். இதே போல குட்டியாக இருக்கும் போது ஒரு ரோட்டோரத்தில் இருந்து எடுத்து வந்தது நினைவு வந்தது. ஊற்றிய பாலை குட்டிகள் குடித்து விட்டனர். மொத்தம் எட்டு குட்டிகளை ஈன்றிருந்தது சபரியின் வளர்ப்பு நாயான ஜெனிபேட். ஐந்து ஆண் குட்டிகளும், மூன்று பெண் குட்டிகளும். மூன்று ஆண் குட்டிகளை யாரோ வந்து தூக்கிச் சென்று விட்டனர். இப்போது மொத்தமே ஐந்து குட்டிகள் தான் இருந்தன. நான்கு குட்டிகள் தான் பால் குடித்தன. ஒன்றின் காலில் யாரோ ஒரு குடிகார புண்ணியவான் பைக்கை விட்டதில் அது நோய்வாய்ப்பட்டுக் கிடந்தது. இந்த வார சனி, ஞாயிறு விடுமுறையில் அதனை அரசாங்க கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டுமென முடிவெடுத்திருந்தான் சபரி. இன்று வெள்ளிக் கிழமை. “இன்னைக்கு ஒரு நாள் பொறுத்துக்கோ... நாளைக்கு போய் மருந்து வெச்சு கட்டிட்டு வந்துடலாம்” என்றாவறே எழுந்து சென்றான் சபரி. வீட்டிற்கு சென்று பள்ளிப் பையை எடுத்து மாட்டியவன் முன்பு அவனது அன்னை வந்து ஆட்டோவிற்கான பணத்தை கொடுத்தார். வாங்கி பேண்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டான். புத்தகப் பை மிகவும் கனமாக இருந்தது. அவனது ஒடிசல் தேகம் பையை மாட்டியதும் சற்றே வளைந்தது. அம்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு வீதியைக் கடந்து தார்சாலையில் நடந்தான். எதிரே வந்த ஒரு கடையை பார்த்து விட்டு நின்றான். பிறகு, முடிவை மாற்றிக் கொண்டவனாக, வேகவேகமாக நடந்தான். அம்மா தரும் ஆட்டோக்கான பணத்தில் நாய்களுக்கு உணவு வாங்கித் தருவான் சபரி. ஆட்டோவில் போனால் பத்து நிமிடத்தில் பள்ளியை அடைந்து விடலாம். நடந்து சென்றால் அரைமணி நேரமாகும். அந்த பணத்தை சேமிக்கத்தான் வேகவேகமாக வீட்டிலிருந்து கிளம்பினான். இப்போதே பிஸ்கட் பாக்கெட்டை வாங்கி வைத்து விட்டால், பள்ளியில் நண்பர்கள் யாராவது பார்த்து, எடுத்து விட்டால் வாங்க முடியாது என்பதால் தான் வரும் போது வாங்கிக் கொள்ளலாம் என்ற முடிவோடு நடந்தான். அடுத்த அரை மணி நேரத்தில் பள்ளியை அடைந்து விட்டான் சபரி. கிழக்கு வானில் மெல்ல உயர்ந்துக் கொண்டிருந்த சூரியன் மெல்ல மெல்ல நகர்ந்து உச்சிக்கு வந்து, மேற்கு வானை நோக்கி பயணமாகிக் கொண்டிருந்தார். கணக்கு வாத்தியாருக்கு உடல்நிலை சரியில்லாததால் மாலைக்கான சிறப்பு வகுப்பு இல்லை என அறிவிக்கப்பட்டது. தனது வீட்டை கடந்து செல்லும் சைக்கிள் வைத்திருக்கும் நண்பனிடம் லிப்ட் கேட்டு வந்து இறங்கிக் கொண்டான் சபரி. கடையில் நான்கு பிஸ்கட் பாக்கெட்களை வாங்கி பையினுள் திணித்துக் கொண்டு, வீட்டை நோக்கி வந்தான். பையை கழட்டி வைத்த கையோடு ஒரு பிஸ்கட் பாக்கெட்டை மட்டும் எடுத்துக் கொண்டு நாய் படுத்திருந்த இடத்தை நோக்கிச் சென்றான். காலை படுத்திருந்த இடத்தில் நாயையும், அதன் குட்டிகளையும் காணவில்லை. வேறு எங்காவது சென்று விட்டதாவென, அது ஓய்வெடுக்கும் இடங்களிலெல்லாம் தேடினான். அதன் பசியை இவன் பொருக்காதவனாக, “ஜெனிபேட்... ஜெனிபேட்...“ என கத்தியும் பார்த்தான். நாயை மட்டும் காணவில்லை. பக்கத்து தெருவில் குட்டிகள் மட்டும் அங்கங்கே திரிந்து கொண்டிருந்தன. சின்ன குட்டிகளாதலால் பால் தான் குடிக்கும். இன்னும் சில நாட்கள் கழித்து பிஸ்கட் பழக்கலாம் என்ற முடிவோடு ஜெனிபேட்டை தேடினான். அவனது ஒன்று விட்ட, சித்தப்பா மகள் இனியா வந்தாள். “என்ன ண்ணா பண்ற” “ஜெனிபேட்டை காணோம் இனியா. நீ எங்கையாவது பாத்தியா..?“ “நானும் எங்கையும் பாக்கல ண்ணா. ஆனா... அந்த ராணிக்கா சொல்லுச்சு” “என்ன சொல்லுச்சு” சபரியின் பார்வை கூர்மையானது. “அது... குட்டி கால்ல வண்டி ஏறினதுனால போற வர வண்டி காரங்களையெல்லாம் தொரத்திட்டு இருந்ததுல நம்ம ஜெனிபேட்” “ஆமா” “அந்த சாந்த அக்காவோட புருஷனையும் கூட காலைல கடிக்க போயிடுச்சாம். அதனால அவன் நாய் புடிக்கிற வண்டிக்கு போன் பண்ணி சொல்லிட்டானாம். இன்னைக்கு மதியானம் வந்து நம்ம ஜெனிபேட்ட புடிச்சுட்டு போயிட்டாங்களாம்” வெறி வந்தவன் போல கண்கள் சிவந்து போனான் சபரி. அழுகையாக வந்தது. ஆண்பிள்ளை அழக்கூடாது என்ற கொள்கையில் அழுகையை அடக்க, கோபம் தான் வந்தது. அந்த சாந்தாவின் மகன் தான் குடித்து விட்டு பைக்கை ஓட்டி வந்து குட்டியின் காலில் விட்டது என்பதும் தெரிய வந்தது. அந்த குடும்பத்தின் மீதே கடும் கோபம் வந்தது. அப்போது அவ்வழியாக கடந்து சென்ற சாந்தாவின் கணவனை கண்டதும், கோபம் அறிவை இழக்க, அருகிலிருந்த செங்கல்லை கையில் எடுத்தான் சபரி. இன்று இந்த அரைமண்டை கிழவனின் தலையை உடைக்காமல் விடக்கூடாது என்ற முடிவோடு தான் எடுத்தான். “அண்ணா... அங்க பாரு” என்ற இனியாவின் அலறலில் அவள் கைகாட்டிய திசையை பார்த்தவனின் கண்களிலிருந்து எவ்வளவு கட்டுப்படுத்தியும் கண்ணீர் வழிந்தது. அந்த காயம் பட்ட குட்டி நாய் இறந்து கிடந்தது. மனமுடைந்து போனவனாக கல்லை தூக்கி எறிந்து விட்டு அதனருகில் சென்றான் சபரி. உண்மையாகவே செத்து தான் போய்விட்டதா என சோதித்துப் பார்த்தான். ஆமாம். செத்து தான் போய்விட்டது என்பதை உறுதியாக தெரிந்து கொண்டான். பயந்தவனாக வீட்டினுள் ஓடிச் சென்று கதவடைத்துக் கொண்டான். அந்த வாயில்லா ஜீவன் தன் மீது வைத்திருந்த அன்பை நினைத்து பார்த்தான். கண்ணீர் மடைதிறந்த வெள்ளமாக வந்து கொண்டே இருந்தது. சிறிது நேரம் அழுதான். வாழ்வில் எத்தனையோ ஏமாற்றங்களை சந்தித்தவன் என்பதால் சிறிது நேரத்திலேயே நிதர்சனத்தை உணர்ந்துக் கொண்டான். நிதானமாக யோசித்ததில், அந்த கொலைகாரனை ஏதாவது செய்தால், தனக்கும் தனது குடும்பத்திற்கும் தான் ஏதாவது அவப்பெயர் வருமென்ற உண்மை சுட்டது. கைகளை இறுக்கிக் கட்டிக் கொண்டான் ஆமாம் தானே. அவர்களுக்கெல்லாம் அது தெரு நாய். இவனுக்கு தானே தெரியும் அது எப்படிப்பட்ட உயிரென்று. 'ஒரு நாய்க்காக, பெரிய மனிதரென்றும் பாராமல் இப்படி செய்து விட்டானே' என்ற பழிச் சொல் தான் விழும். நாய் பிடிக்கும் வாகனம் தனது ஜெனிபேட்டையும் கொன்றிருக்கும் என நினைக்கும் போதெல்லாம் சபரியின் கண்கள் சிவந்தது. மகனின் கண்ணீரை காண சகியாத தாய், “அவங்க கொல்ல மாட்டாங்க சாமி. ஆளுங்க நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்துல விட்டுடுவாங்க. அது எங்கையாவது பொழச்சுக்கும் விடு. அதுவுமில்லாம, நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம். உன்ன கண்டுபிடிச்சு ஒருநாள் வரும் பாரு.” அன்னையின் ஆறுதல் மொழிகளை உண்மையா இல்லையா என ஆராயாமல், மனதிற்கு இதமாக இருப்பதை உணர்ந்த சபரி, அப்படியே நடக்க வேண்டுமெனவும் வேண்டிக் கொண்டான். ஒரு பெண் குட்டி இறந்து விட்டது. இரண்டு ஆண்குட்டியையும் கூட யாரோ தூக்கி சென்று விட்டார்கள். மீதமிருந்த இரண்டு பெண் குட்டிக்கும் பக்கத்து தெருவில் மலடி எனப் பட்டம் சூட்டப்பட்ட அக்கா தினம் பால் ஊற்றி வைப்பதனைப் பார்த்தவன், அதனையும் விட்டுவிட்டான். தனது ஜெனிபேட் பிரிந்ததிலிருந்து நாய்களின் மீதான பற்று சற்று அற்றுப் போய்விட்டதனை உணர்ந்தான் சபரி. அடுத்து வந்த திங்கட்கிழமை பள்ளிக்கு தயாராகி பையை சரிபார்த்தவன், மூன்று பிஸ்கட் பாக்கெட்டுகள் இருப்பதனைப் பார்த்தான். கசந்த புன்னகையுடன் கையில் எடுத்தவன் மூன்றையும் பிரித்து தெருவோரத்தில் ஓரிடத்தில் கொட்டினான். எங்கிருந்தோ வந்த சில நாய்கள் உண்ட பின் வாலாட்டி விட்டுச் சென்றன. காகங்கள் கூட இரண்டு துண்டுகளை தூக்கிக் கொண்டு பறந்தன. வீடு வந்தவனிடம் அவனது அன்னை ஆட்டோக்கான பணத்தை நீட்டினார். “சைக்கிள்ல போறேன் மா” என்றவன், சில நாட்களாக நிறுத்தி வைத்திருந்த சைக்கிளில் பையை மாட்டிக் கொண்டு புறப்பட்டான். நாய்களுக்கு செலவழிக்க பணம் வேண்டுமெனத் தான் சைக்கிள் மிதிக்க முடியவில்லையென பொய் சொல்லி, ஆட்டோவிற்கு பணம் தருமாறு கேட்டான் சபரி. இனி அது அவனுக்கு தேவையில்லை. இனி அவனுக்கு பணம் தேவையில்லை. அதிகமாக டீ, காபி குடிப்பதாக திட்டு வாங்க தேவையில்லை. ஞாயிறுகளில் கறியை வீண் செய்ய தேவையில்லை. வீட்டிலிருந்து பால் திருட தேவையில்லை. அம்மாவிடமும் பொய் சொல்ல தேவையில்லை. சைக்கிளில் செல்லும் போது வழியில் தெரிந்த நாயையெல்லாம் உற்று உற்றுப் பார்த்தான். ஏக்கம் நெஞ்சை இறுக்கியது. எதிர்பார்ப்பு மனதை சோர்வாக்கியது. உண்மையான தோழி ஒருவளை தொலைத்துவிட்ட சோர்வில், தனது மற்ற நண்பர்களுடன் உரையாடியவாறு பள்ளி வளாகத்தினுள் நுழைந்து மறைந்தான் சபரி. என்றேனும் ஒரு நாள் தனது ஜெனிபேட் தன்னை தேடி வரும் என்ற நம்பிக்கையுடன் வாழ்வின் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறான் சபரி.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • Divyapriya Avatar
    Divyapriya - 2 years ago
    மிகவும் அருமை...யதார்த்தமாக உள்ளது. வளரும் சமூகத்திற்கு நற் சிந்தனைகளைப் புகட்டுகிறது.

    அகல் Avatar
    அகல் - 2 years ago
    நன்றிகள் நட்பே..! 💜

  • Harshavarthini. K Avatar
    Harshavarthini. K - 2 years ago
    அருமை👌... இச்சிறுகதை இன்றைய வளரும் சமூகத்தின் மறுபக்கத்தை காட்டுகிறது.

    அகல் Avatar
    அகல் - 2 years ago
    நன்றிகள் நட்பே..! 💜