logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

கோ. நாராயணன்

சிறுகதை வரிசை எண் # 271


ஐந்து கிலோ மீட்டர் அரிசி மூட்டை டேய் முனியாண்டி கிளம்பிட்டியா, ம் கிளம்கிட்டேன் மாமா, கோமதி அக்கா போலாமா பைய எடுத்துக்கிட்டியா டி சரசு, ஆங் எடுத்துக்கிட்டேங்கா, கருப்பாயி எனக்கொரு எடம் போட்டு வை. சரி பாட்டி போன்ற எல்லா சத்தங்களும் கேட்டுக்கொண்டிருந்தன. பள்ளிக்கு போகும் குழந்தைகளைப் போல ஆளாளுக்கு வீட்டிலிருந்த கஞ்சியோ கூழையோ குடிச்சிட்டு பையை தூக்கிட்டு வரிசையாய் போய்க்கொண்டிருந்தார்கள். டேய் வீட்ட பூட்டிட்டு சாவியை எரவானத்தல வச்சிட்டு போ, உங்க அப்பா வந்தா அந்த மாட்ட கொஞ்சம் மாத்தி கட்ட சொல்லு, நான் போய்ட்டு வரேன். பொன்னம்மா அக்காவும் வேக வேகமா கிளம்பி ஓடுறா. பேசிய படியே நடை, அட போடா மாப்ள, இவ்ளோ காலையிலே போறோம் ஆனா அந்த ஊரு ஆளுங்க பின்னாடி தானே நிக்க வேண்டியிருக்கு. அவங்களுக்கென்ன மாமா பக்கத்துலயே வூடு பின்ன என்ன பன்னுவாங்க, போன முற நம்மாளுங்க 20,30 பேருக்கு அரிசியே கெடைக்கலடா மாப்ள. அதான் இந்த முற அப்படி உட்டுடக்கூடாதுனு தான் காத்தாலயே கிளம்பி போறோம் . ஒரு வழியா அந்தனூர்க்கு வந்தாச்சி. என்ன அதிசயமோ தெரியல இன்னிக்கி அந்தனூர்க்காரங்க அஞ்சாறு பேரு தான் இருக்காங்க நமக்கு முன்னாடி. இந்த முறை எல்லாருக்கும் அரிசி கெடைச்சிடும்னு கூட்டத்துல யாரோ சொல்ல 5 கிலோ மீட்டர் நடந்து வந்த களைப்பு பஞ்சா பறந்திடிச்சி. ஆனா சேல்ஸ் மேன் வர பத்து 11 மணி ஆகும். மாமா இப்பதான் ஏழு மணி ஆகுது. போய் டீ தண்ணீயாவது குடிச்சிட்டு வரலாமா. வேனா மாப்ள, போய்ட்டு வந்தா அப்புறம் எடங் கெடைக்காது அப்படியே நில்லு பாத்துக்கலாம் . டேய் பாத்திங்களா கடம்பூர்க்காரன்க எவ்வளவு வெவரமா காலையில் வந்து வரிசையில நிக்க ஆரம்பிச்சிட்டானுங்க ஏளனமா பாத்தபடி உள்ளுர்காரங்க பேச்சு இருந்தது. இது எல்லார் காதுலயும் கேட்டாலும் எதுக்கு வம்புனு எல்லாரும் வரிசையில் நின்னுனு இருந்தாங்க. கருப்பி ஆயா போன முறையே கூட்டத்துல உன்ன தள்ளி விட்டானுங்க ரேஷன் அட்டைய யாருகிட்டயாவது கொடுத்தனுப்புறதுதானே என பச்சமுனி கேட்டான். அட போடா இவனே, யாரு இருக்கிறா எனக்கு வாங்கி வந்து கொடுக்குறதுக்கு. எட்டு மணி ஆயி இப்ப ஒரு வழியா ஒன்பது மணி ஆயிடிச்சி. அஞ்சி பேரா இருந்த உள்ளுர்காரங்க இப்ப 15 பேரா நிக்கிறானுங்க. ஏதோ பேசனாப்ல கொஞ்ச நேரம் பேசிட்டு அப்படியே உள்ள நொழைஞ்சிடுறானுங்க. அடிக்கிற வெயில வச்சே பத்து மணி ஆவ போவுதுனு தெரிஞ்சிகிட்டது கூட்டம். இப்ப தள்ளு முள்ளு அதிகமாயிடுச்சி கடம்பூருகாரங்க முன்னாடி அஞ்சி பேர்ல ஆரம்பிச்சது இப்ப அம்பது பேரா வந்து நிக்குது கூட்டம். முன்னாடி இருக்கிறவன் பின்னாடி தள்ள பின்னாடி ஒரு கூட்டம் முன்னாடி தள்ள நடுவுல இருந்த கடம்பூர்காரங்க பிதுங்கி பிதுங்கி நசுங்கி போனாங்க. கூட்ட நெரிசல்ல நெஞ்சு அடைச்சி போற மாறி இருந்தாலும் முப்பது நாளும் கஞ்சி குடிக்கனுமே என்ன பன்றதுனு எல்லாத்தயும் தாங்கிக்கிட்டே சில பொம்பளைங்க நின்னுக்கிட்டு இருந்தாங்க. ஒரு வழியா சேல்ஸ்மேன் வந்துட்டாரு. சேல்ஸ்மேன பாத்ததும் கூட்டம் தள்ளு முள்ளு அதிகமாவே இருந்தது. சிலரு மயங்கி போற அளவுக்கு நெரிசல் இருந்தது. சேல்ஸ்மேன் உள்ள போயி உக்காந்து ஒவ்வொருத்தருக்கா பில்ல போட்டு கொடுத்தாரு. அம்பது, அறுபது ஆளுக்கு அப்பறமா கடம்பூர்காரங்க ஒவ்வொருத்தரா அரிசி வாங்க ஆரம்பிச்சாங்க. கருப்பி ஆயா ரெண்டு முறை கீழே விழுந்து எந்திரிச்சி நின்னா. ஒரு வழியாய் எல்லாரும் அரிசி, பருப்பு, எண்ணெய் எல்லாத்தையும் வாங்கிட்டாங்க, பின்னாடி இருந்த உள்ளுர்காரங்க சில பேருக்கு எதுவும் கிடைக்கல. வெளியூர்காரங்கள திட்ட ஆரம்பிச்சாங்க. எல்லாத்தையும் கேட்டபடி கடம்பூருகாரங்க தல மேல மூட்டைய கட்டிக்கிட்டு நடக்க ஆரம்பிச்சாங்க . இப்பவே நாலு மணி ஆச்சி, வாங்க அரசமரத்தடியில் ஏதாவது குடிச்சிட்டு பசங்களுக்கு போண்டா கீண்டா ஏதாவது வாங்கி போலாம்னு எல்லாரும் நடந்தாங்க. கடையில கொழம்புக்கு தேவையான எல்லாத்தையும் வாங்கி அதையும் மூட்டயோடு மூட்டையா கட்டி எல்லாரும் நடக்க ஆரம்பிச்சாங்க. காலங் காலமாக நடக்குற பாத தான் இது ஆனா இன்னிக்கு ஏனோ கல்லு முல்லுமா தெரியுது. மாசத்துல ஒரு நாள் இப்படித்தான் சாக வேண்டியிருக்கு. அன்னாடிக்கும் புள்ளைங்க எப்படி தான் இங்க வந்து படிச்சிட்டு போகுதுங்களோ. பாழா போனா ஊருக்கு எப்பத்தான் ரோடு போடுவாங்களோ தெரியலயே. நம்ம பேர புள்ளைங்க காலத்துலயாவது இந்த ஊருக்கு பஸ் வருமானு தெரியல. முந்தா நேத்து பாம்பு கடிச்சி செத்து போன மாலாவ ஆஸ்பத்திரிக்கு தூக்கினு போயிருந்தா காப்பாத்திருக்கலாம். என்ன பன்றது நம்ம வாங்கினு வந்த வரம் அப்படி. அது பத்தாதுனு சொந்தகாரனுங்க கூட காட்டு ஊரு, பஸ்சு இல்ல, பள்ளிக்கொடம் இல்ல, எந்த வசதியும் இல்ல எம்பொண்ணு வந்து அங்க கஷ்டப்படனுமானு நம்ம ஊரு பசங்களுக்கு எவனும் பொண்ணு கூட குடுக்குறதில்ல. இப்படியே ஆளாளுக்கு அவங்க கஷ்டத்த பேசிகிட்டே அஞ்சி கிலோமீட்டர் நடந்து வந்துட்டாங்க. ஊர பாத்ததும் எல்லாருக்கும் உசுரே வந்த மாதிரி இருந்தது. வீட்டுக்கு போறதுக்குள்ள இருட்டி போச்சி. அவங்க அவங்க வீட்ல அரிசி மூட்டைய வச்சிட்டு வீட்டு வேலைய பாக்க ஆரம்பிச்சாங்க . சாப்பாடு எல்லாம் முடிஞ்சி தெருவுல எல்லாரும் உக்காந்து பேச ஆரம்பிச்சாங்க . எக்கா கருப்பி ஆயாவ உன்னம் ஆளக்கானமே, என்னடி சொல்ற தங்கம், ஆமாக்கா எனக்கு பின்னாடி தான் நடந்து வந்தாங்க. வேகமா வா ஆயானு கூப்டதுக்கு, நா கொஞ்சம் பொறுமையா வர நீ போடி தங்கம்னு சொன்னாங்க, நானும் மட மடனு நடந்து வந்துட்டேன். இந்த செய்தி ஊரெல்லாம் பரவ பந்தத்த எடுத்துகிட்டு ஆம்பிள்ளைங்க ஒரு கூட்டமா கௌம்பி போனாங்க . ஊர் எல்லையில கருப்பி ஆயா அரிசி மூட்டையோட விழுந்து கெடந்தா பேச்சு மூச்சு இல்லாம.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.