logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

R LOKESH

சிறுகதை வரிசை எண் # 270


இஞ்சி டீ திட்டுத் திட்டாகப் பஞ்சு மிட்டாய்ப் போன்ற பொன் நிற மேகங்கள் மிதக்கும் வானவில் நிற வானத்தில் கூட்டம் கூட்டமாக பறவைகள் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்க, கருனையற்றுப் பொசுக்கும் சூரியன் மங்கும் மாலை நேரத்து மயக்கத்தில், சூரியக் கதிர்கள் மேகங்களுள் ஊடுருவி தங்க நிறம் தழுவிக்கொண்டு வானம் மிளிர்ந்து கொண்டிருந்தது. திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சந்திப்பு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. கண் இமைக்காமல் இரைக்காகக் காத்திருக்கும் கழுகுகளிடமிருந்து தப்பிப் பிழைத்து, அலைந்து திரிந்து கிடைத்த சொற்ப புழுக்களைத் தவிப்புடன் கரையும் தன் குஞ்சுகளுக்கு ஊட்டிவிடச் செல்லும் பறவையின் வேகம் போல மக்கள் அனைவரும் வாகனங்களில் அவரவர் வேகத்தில் பறந்து கொண்டிருந்தார்கள். விர்ர்ர்ரூம்... விர்ர்ர்ரூம்…. விர்ர்ர்ரூம்… என வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஓடிக்கொண்டிருந்தன. இடைப்பட்ட இடைவெளியில் ஓடிச் சாலையைக் கடந்து ரௌண்டானாவிற்கு கிழக்கே நடந்து சுமங்கலி ஹோட்டலுக்கு அடுத்தாக அமைந்துள்ள மதன் தேநீர் விடுதிக்குச் சென்றுக் கொண்டிருந்தேன். மயக்கும் மாலை வேளையில் மனிதர்களை ரசித்துப் படித்தபடி தேநீர் ருசிப்பது பேரனுபவம். டீவிஎஸ் டோல்கேட் பாலத்தின் நிழல் என் மீது போர்வை போல என்னை அரவணைத்துக் கொண்டிருந்தது. திருச்சி என்றால் எல்லோரும் மலைக்கோட்டை என்பார்கள். ஏனோ எனக்கு பாலங்கள் தான் நினைவிற்கு வரும். காவிரி பாலம், கொள்ளிடம் பாலம் என ஒவ்வொரு பாலமும் ஒரு சரித்திரம் சொல்லும். ரௌண்டானா பேருந்து நிறுத்தத்தில் “கொய்ங்கென” காதுகளை அடைத்து ஒலி எழுப்பி நின்ற பேருந்துக்குள், கல்லூரி நேரம் முடிந்து வீடு திரும்ப காத்திருந்த மாணவ மாணவியர்களும், காலி கூடைகளுடனும், கோணிப் பைகளுடனும் வேலை முடிந்து வீடு திரும்பும் மக்களும் சலசலப்புடனும் பேரிரைச்சலுடனும் ஏறிக் கொண்டிருந்தார்கள். "ஏப்பா, லூசுப் பயலே கண்ண எங்கடா வச்சுருக்க" என ஒருவன் காலை மிதித்தவன் மீது வெறுப்பை உமிழ்ந்தான். ஆனால் மிதித்தவனும் கூட்டத்தில் தான் சிக்கிக் கொண்டுள்ளான் என அவனுக்கு மறந்து போகிறது. என்னைக் கடந்து சென்ற அந்த நெரிசலானப் பேருந்தைப் பார்த்த படியே மதன் தேநீர் விடுதிக்குள் நுழைந்தேன். இந்தக் கடையில் லெமன் டீ, கீரின் டீ, சைனா டீ, என எல்லா டீயும் கிடைக்கும். இஞ்சி டீ தான் இங்கு ஸ்பெஷல். அதற்கு என்னைப் போல பெரும் ரசிகர் கூட்டமே உண்டு. இதயக்கனி, அது தான் அங்கு டீ போடும் அண்ணனோட பேரு. எனக்கு நண்பரும் கூட. அவர் என்னைப் பார்த்ததும் ஒரு ஸ்மைல் அனுப்பி இஞ்சி டீ போடச் சொல்லி விட்டு கடையில பஜ்ஜி போடும் ஆயாவைத் தேடினேன். அப்போது தான் பார்த்தேன். இந்த கடையில் இன்னும் எந்த வட மாநில தொழிலாளிகளும் வேலை செய்யவில்லை. கடை ஓனர் சேர்த்துக்கலையா?, இல்லை இங்கு வேலை செய்றவங்க, ஓனர் தரும் சம்பளமே போதுமென நினைத்து வேலை செய்றாங்கலானு தெரியல. முகம் முழுவதும் மஞ்சள் பூசி எப்போதும் சிரித்த முகத்துடன் பஜ்ஜி போட்டுத் தரும் பாட்டி எப்போதும் போல இன்றும் என்னை அன்புடன் விசாரித்து பேசிட்டு இருக்கும் போதே இதயக்கனி அண்ணன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து இஞ்சி டீ போட்டு வச்சிட்டாரு. கடை பெஞ்சில உட்கார்ந்து இஞ்சி டீயை ருசித்தபடி மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தொண்டையில் இதமாக இறங்கும் இஞ்சி டீயைப் போல, வானத்தின் தங்க நிற வண்ணம், பேருந்துகள், வண்டிகள், பாலம் மேலெல்லாம் முலாம் பூசியது போல தங்க நிறம் இறங்கி பளபளன்னு மென்மையா மினுக்கின்றன. ஒரு கையில் டீ கிளாஸும் மறு கையில் பீடியுமாக என் அருகில் உட்கார்ந்திருந்தவர், சுற்றி நடப்பது எதையும் பொருட்படுத்தாமல், பீடியை ஆசை தீர அனுபவித்து இழுத்து, காலையிலிருந்து தூக்கிய சுமையின் பாரத்தை இறக்கி வைத்துக் கொண்டிருந்தார். பீடி பிடிப்பவர்கள் பெரும்பாலும் ஆண்கள் ஆயினும் பீடி சுருட்டுவது பெண்களே அன்றோ என நினைத்துக் கொண்டிருந்த நேரம், நான்கு பேருந்துக் கழக ஊழியர்கள் டீ குடிப்பதற்காகக் கடைக்கு வந்தார்கள். டீக் கடையின் பின் புறம் தான் SETC பஸ் டிப்போ, டிப்போ வாசலில் சிவப்பு நிற காகிதக் கொடிகள் கட்டப்பட்ட தொழிலாளர்கள் யூனியனின் கரும்பலகையில் போராட்டம், கண்டனம், கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களும் ஒட்டப் பட்டிருக்கும். பஸ் மெயின்டனன்ஸ், பென்சன், ஊதியம், பஸ் ரூட் மற்றும் போக்குவரத்துக் கழகத்தில் தனியார் துறையின் தலையீடு பற்றிய புதிய பதற்றமும் டீ யுடன் அவர்களுக்குள் இறங்கியது. பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்பட்ட ஒரு பேருந்தைப் பார்த்து “மச்சான் பஸ்ல போற அந்த புள்ளய” என்று ஒருவன் சொல்ல மற்ற நால்வரும் பஸ்ல உட்கார்ந்திருந்த அப்பெண்ணை டீ, காபி, பால் என அவரவர் கைகளிலிருந்த கிளாஸை ருசித்தவாறு கண் விரியப் பார்த்தார்கள். அப்பெண்ணும் இவர்கள் பார்ப்பதைப் பார்த்தாள். ஆனால் அவள், வெட்கம், கோபம், பயம், எரிச்சல், ஆச்சரியம், எனப் பார்வையில் பல வித உணர்ச்சிகளை வெளிப்படுத்தி விட்டு பேருந்தில் கடந்து சென்றது போல இருந்தது எனக்கு. “டேய் அவள் என்னைத் தான் பார்த்தாள்” “இல்லை இல்லை என்னைத் தான்டா பார்த்தாள்” என அவர்களுக்குள் கூச்சலிட்டுக் கொண்டே கிளம்பினார்கள். ஒரு பார்வையில் தான் எத்தனை உணர்ச்சிகள் என யோசனைகள் சுழல. " வெயில் இல்லை மழை இல்லை பார்த்தேன் வானவில்லை… என் நெஞ்சோடு ரசித்தேன் கொல்லாமல் கொல்கிற அழகை… உயிரில் ஒர் வண்ணம் குழைத்து வரைந்தேன் அவளை"… என டீக் கடையின் ஒலிபெருக்கியிலிருந்து கசிந்து கொண்டிருந்த யுவன் இசையில் பழனி பாரதி வரிகள் என் நினைவோட்டத்தை நிறுத்தி 'இதையும் ரசி ருசி' எனச் சொல்லாமல் சொல்லிக் காற்றில் கடந்து செல்கிறது. பாதி கிளாஸ் டீ முடிந்து பாதி கிளாஸ் டீ மீதமிருந்தது. "நம்ம ஊரு எப்படி இருந்தது மாப்ள! அமைதியா, மாசற்று, டிராஃபிக் என்ற பேச்சுக்கே இடமில்லாம, நதி போல அமைதியாகவும், ரசனையாகவும் ஓடிகொண்டிருந்த நம்ம திருச்சியும் சென்னை போல மாறிவிட்டது" என 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் சென்னையைப் பற்றிச் சொல்ல, காபியை ருசித்தவாறு “ஆமாம் மாமா” என்றார் காபியில் சர்க்கரை வேண்டாம் என்று சொன்ன வயதைக் கணிக்க முடியாத மற்றொருவர்‌. வேலைவாய்ப்பின்மை, மேல் படிப்பு, ஊரில் அடக்குமுறை என அனைத்திற்கும் நகரமே பதிலென வருபவர்களை எந்த வித முகச் சலிப்பின்றி சென்னை போன்ற நகரம் தானே எற்று கொள்கிறது. அவ்வளவு மக்கள் தொகையிலும், போக்குவரத்து நெரிசலிலும், பேரிரைச்சலிலும் இயல்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் சென்னையை அங்கு வசிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அங்கு வாழ்பவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்" என சென்னை எனக் கேட்டதும் பல பல எண்ணங்கள் என்னுள் முற்று பெறுவதற்குள் டீ கிளாஸ் காலியாகிவிட்டது. மனிதர்கள் தான் எத்தனை வகைகள். ஒவ்வொருவரும் ஒரு விதம். அவர்களைப் படிப்பதென்பது டீயை ருசிப்பது போல ரசனையானது. குடித்து வைத்த காலி கிளாஸ்களை எடுப்பதற்கும் கழுவதற்கும் சற்று கண் பார்வையற்ற தாத்தா கடையில் புதிதாக வேலைக்கு சேர்ந்து இருந்தார்‌. பெஞ்சில் கிடந்த காலி கிளாஸ்களை ஒவ்வொன்றாக எடுத்து பின் அதை அவர் கழுவும் போது என் மனதிற்குள் ஏனோ ஒரு பாறாங்கல்லைத் தள்ளி விட்டது போல இருந்தது. ஒரு பக்கம் முதியோர் இல்லங்களாக மாறிக் கொண்டிருக்கும் தெருவோரக் கடைகள், ஆதரவற்ற முதியோருக்கு இந்த வேலை மூலம் வருமானம் என்ற ஒன்று அவர் வாழ்வியலைத் தொடர வைக்கும் மறுபக்கம் என நினைத்துக் கொண்டு, காலியான டீ கிளாஸை அவர் கையில் கொடுக்காமல் கழுவுற இடத்தில் வைத்து விட்டு “அண்ணே டீக்கு gpayல பணம் அனுப்பிவிட்டேன்ணே" என குரல் எழுப்பிவிட்டு நகர்ந்தேன். காலியான டீ கிளாஸில் இன்னும் சிறுது கரையாமல் இருக்கும் சர்க்கரை போல தாத்தாவின் வாழ்வியல் மனதில் கரையாமல் இஞ்சியின் காரம் போல நெருடிக் கொண்டிருக்குது. அன்புடன் லோக்கி. விலாசம் R. லோகேஷ். 9, ஐந்தாவது தெரு வெங்கடேஸ்வரா காலனி மாதவரம் பால்பண்ணை சென்னை – 600051 கைபேசி – 9952925747. Email - arkokesh99@gmail.com

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in