su.karunanithy
சிறுகதை வரிசை எண்
# 269
தன்னழிப்பு
"கலோ... அம்மா நான் அங்கவந்து கொஞ்சக்காலம் உங்களோட இருக்கப்போறன்.இஞ்ச இவரோட இருக்கேலாது இவருக்கு ஒருமண்ணும் தெரியாது ...தாய் ஒண்டும்சொல்லிக்குடுக்கயில்ல"
'ஏனடி... எல்லாத்துக்கும் முரண்டுபிடிக்காம விட்டுக்குடுத்து அனுசரிச்சுப்போகவேணும் எல்லாத்துக்கும் எதிர்த்துக்கதைக்காமல் பேசாமலிரு.'
"உங்களுக்குச் சொன்னால் விளங்காது லக்சனுக்கு வீடுகூட்டத்தெரியாது மொப்பண்ணத்தெரியாது இறைச்சிவெட்டத்தெரியாது சமையல்வேலையிலும் ஒண்டும்தெரியாது காட்டிக்குடுத்தாலும் செய்யத்தெரியுதில்ல. எந்தநேரமும் அம்மா அம்மா... எண்டு சொல்லிக்கொண்டிருப்பார்..".
'பொறுமகளே.. பொறுமகளே அவசரப்படாத நான் சொல்லுறதக்கேள்'
" அம்மா இதுஉங்கடகாலமில்ல .. இப்பநாங்க யூறோப்பில இருக்கிறம். உங்கட கதையக்கேட்டுக்கொண்டு என்னால இருக்க ஏலாது."
உலகத்தின் எழுநூற்றி எட்டுக்கோடிமக்கள் சனத்தொகையில் இருநூற்றி எழுபது மில்லியன் மக்கள் அகதிகளாக புவியின் மேற்பரப்பெங்கணும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் இந்தக்கணக்கினுள் லக்சனின் பெற்றோரும் அவனது மனைவியின் பெற்றோரும் உள்ளடக்கம். ஐய்ரோப்பாவில் அங்ககீகரிக்கப்பட்ட அகதிமனிதர்கள். லக்சனும் அவன்மனைவியும் ஐரோப்பாவில்ப்பிறந்து வளர்ந்தவர்கள் லக்சனின் பெற்றோர் வாழும்நகரத்திலிருந்து நூறுகிலோமீட்டர் தொலைவில் அவன் மனைவியினது பெற்றோர் வாழும் நகரம். லக்சனுக்கு திருமணமாகி ஆறுமாதங்களாகின்றன. புதுமனைவியும் அவனுமாக லக்சனின் பெற்றோர்வீட்டிற்கு பக்கத்துத்தெருவில் வாடகைக்கு வீடெடுத்து தனிக்குடித்தனமாகினர்.
சுகன்யா ஆறுமாதங்களுக்குள் தன்தாயிடம் கணவன்பற்றி பலமுறைப்பாடுகளை முன்வைக்கலானாள். மகளின் குற்றச்சாட்டுகளுக்கு நேரிலும் தொலைபேசியிலுமாக பலஆலோசனைகளையும் புத்திமதிகளையும் புகட்டியிருந்தும் மகள் செவிமடுப்பதாயில்லை.
மாமியார்வீட்டிற்குப்பக்கத்தில் வீடு எடுக்கும்போது சுகன்யா விற்கு பிடிக்கவில்லை தடுத்தும் லக்சன் கேட்கவில்லை. இருவருக்கும் தன், தன், தாய்வீட்டிற்கு பக்கத்திலிருக்கவே விருப்பம். அனால் அப்படி சாத்தியப்படவில்லை. சாத்தியப்படாது.
லக்சனுக்கு இரண்டு இளையசகோதரிகள் இவன்தான் ஆண்பிள்ளை மூத்தவன் .பெற்றோர் செல்லமாகவே வளர்த்து படிப்பித்து ஆளாக்கியிருந்தனர். நல்லவேலையிலுமிருக்கின்றான். கடைச்சாப்பாடுகளைத்தவிர்த்து ஆரோக்கியத்திற்கு உகந்த வீட்டுச்சமையல் உணவுகளிலே வளர்ந்தவன். பெற்றோர் கைக்குள்செல்லமாகவும் செழிப்பாகவும் வளற்கப்பட்டவன்.
அவன் திருமணம்செய்த இடத்திலும் சுகன்யாவும் ஒரு அண்ணனுந்தான். தந்தையார் தண்ணியடித்து தண்ணியடித்து ஈரல் கரைந்து தண்ணியாலே இறந்து போனார் . அண்ணனும் திருமணமாகி தொலைவில் வசிக்கின்றான். சுகன்யாவிற்கும் கணவனது நகரமே வதிவிடமானது.
"கலோ அம்மா ... எனக்குச்சமைக்கத்தெரியாதாம் சீஸ் சையும் அரைச்ச இறைச்சியையும் எண்ணைய விட்டுத்தான் சமைக்கிறனாம், வேற சமையல் தெரியாதாம், அவருக்கு சமைக்கவோ கடைக்குப்போய் சாமான் வாங்கவோ தெரியாது. அவர் எனக்கொண்டும் தெரியாதெண்டுறார்."
".....உனக்குச்சமைக்கத்தெரியாதெண்டு எனக்குதெதெரியும். நானும் சொல்லித்தரயில்ல....எதுக்கும் நான் சம்பந்தியோட கதைக்கிறன் இதெல்லாம் குடும்பத்துக்குள்ள ஒருபிரச்சினையா பிள்ள.....இதெல்லாத்தையும் பெரிசாத்தூக்கிப்பிடிக்காத"
தாயார் மருமகனை நியாயவாதியாகவும் மகளை குற்றவாளியாகவுமே பார்த்து மகளைப்பணிய வைக்க பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்தார்.
சுகன்யாவின் தாய் பகுதிநேரவேலைதான் செய்துகொண்டிருந்தவர்.கணவன் இறந்தபின் தொலைக்காட்சி தொடர்நாடகங்களிலும் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளிலும் மூழ்கி அமைதியையும் ஆறுதலையுங் கண்டு களிப்புற்று அடிமைப்பட்டு சோம்பேறியாகிவிட்டார். மகள் கல்லூரியிலும் வேலையிடத்திலும் கன்ரீனில் சாப்பிடுவதை வழக்கமாகக்கொண்டிருந்ததால் தனியொராளுக்கு வீட்டில் சமைப்பதை நிறுத்திவிட்டு கடைச்சாப்பாட்டில் காலத்தை ஓட்டலானார். ஊபர் ஈற்றில் ஆடர்கொடுத்தால் உணவு வாசலுக்குவரும் வசதிற்குள் தாயும் மகளும் பழகியிவிட்டனர்.இதனால் மகளுக்கு தமிழ் உணவுவகைகள் சமைக்க தாய்கற்றுக்கொடுக்கவில்லை.மகள் கற்கவுமில்லை. அய்ரோப்பிய சமையலையும் யூ ரியூப்பில் பார்த்துத்தான் சமைக்கப்பழகிக்கொண்டிருக்கின்றாள் சுகன்யா.
இரண்டுவாரங்கள் கழித்து சுகன்யா தனியாக தாய்வீட்டிற்கு வந்திருந்தாள்.நேராக எல்லா குறைகுற்றங்களையும் முன்வைத்து தாயும் மகளும் கலந்துரையாடியிருந்தனர்.
லக்சன் தன்தாய்வீட்டிற்கு அருகாமையில் வீடெடுக்கும் போதே குடும்பங்களுக்குள் முரண்பாடுகள் பிடுங்குப்பாடுகள் வரவும் வாய்ப்பிருக்குமென சுகன்யா புரிந்துகொண்டாலும் கதைத்துக்குழப்பக்கூடாதென்று நினைத்திருந்தாள். லக்சன் திருமணமாகி தனிக்குடித்தனம் வந்து ஆறுமாதங்களில், உடல்நிறையில் ஆறுகிலோ அதிகரித்திருந்தது, யீன்ஸ்சுகள் அளவில்லாமல் போனதும், குடும்பமகிழ்ச்சியாலன்று சுகன்யாவின் சமையல்முறையென லக்சனின் பெற்றோரும் கண்டித்திருந்தனர்.லக்சன்
வீட்டுவேலைகளில் பங்கெடுப்பதில்லை. தினமும் வேலையால் வந்தால் தாய்வீட்டிற்குப்போய்த்தான் வீடு வருவதாகவும், அங்கு சாப்பிட்டுவிட்டு வருவதாகவும் குற்றப்பத்திரிகைதயாரித்தாள். சுகன்யா வேலையால்வந்து தான் தனியாகவீட்டுவேலைகளை செய்வதாகவும் லக்சன் உதவிசெய்வதில்லை என ஏகப்பட்ட முறைப்பாடுகள்.
"கலோஅம்மா ...மாமா மாமியோட கதைச்சனீங்களா...என்ன சொன்னவ..."
'ஓம்பிள்ள அவை ஒருநாளைக்கு லஞ் சுக்கு வரச்சொன்னவை கதைக்கலாமெண்டு.லக்சன் குடிவெறி இல்லாத நல்லபிள்ளையெல்லா... இப்பிடிவந்தமையாது.....நீ சனைனதமாடாமலிரு பொறுமையா.'
"இவர மாத்த ஏலாதம்மா...இவர் மாறமாட்டார். ஆம்பிளத்திமிர் அவரிட்ட இருக்கு எனக்குச்சரிவராது நான் விட்டுட்டு வரப்போறன்."
கருவிகளில் இயங்கிக்கொண்டிருக்கும் இன்றைய மனிதவாழ்வியக்கத்தில் யாவும் விரைவுபடுத்தப்பட்டிருக்கின்றன.அதற்கேற்ப மனிதர்களின் புரிதல்களின் வேகம் போதாமையால் பொறுமையற்ற நிலையிலெடுக்கும் வேகமுடிவுகள் விபரீதமாகிவிடுகின்றன. லக்சன் சுகன்யா குடும்பத்தினற்கு புரிதலுக்கும் தம்மைத்தாம் ஆள்வதற்குமான அறிவு பரிணாமமடைய ஆறுமாதங்கள் போதாது. இருவர்களது பெற்றோர்களும், காரணமோ காரணமின்றியோ எதற்கும் சண்டைபிடிக்காமலும் அவசரப்படாமலும் பொறுமையையும் விட்டுக்கொடுப்பையும் பின்பற்றி அனுசரித்துப்போகும்படியும் வலியுறுத்தியிருந்தனர்.அவர்கள் காலத்தினதும் வயதினதும் அறிவினதும் ஆலோசனைகளை வழங்கியிருந்தனர்.
மகள் கணவனை விட்டுப்பிரிவதை எந்தத்தாயும் பெற்றோரும் அனுமதிக்கமாட்டார்கள்.இளையதலைமுறையினர் இன்றிதை இலகுவாக எடுத்துக்கொள்கின்றனர்.பெற்றோர்களால் பொறுக்கமுடியாதிருப்பினும் வலிந்து தம்எண்ணங்களையோ விருப்புகளை\யோ திணிக்கவியலாது சகித்துப்போகவேண்டிய சமூக விஞ்ஞானச்சூழல்.மாற்றம் என்பது விரைவில் நடக்கவேண்டுமென்று எதிர்பார்க்க இயலாதது.
வெகுவிமரிசையாக ஆடம்பரமாக நடாத்திமுடித்த திருமண நிகழ்வில் பிடிக்கப்பட்ட புகைப்பட அல்பம் ஒளிப்பட சீ. டி. இதுவரைக்கும் கைக்குவந்து சேரவில்லை. கலியாணவீடுசெய்ய சுகன்யாவும் தாயும் வாங்கிய கடனும் இன்னும் அடைத்துமுடியவில்லை.அந்தப்பொறுப்பும் இருவற்கும் சுமையாகவிருக்க மகளும் சுமையாகிவிடுவாளோ என்ற ஏக்கமும் பயமும் தாய்க்கு.
எத்தனைபேர் சேர்ந்து தீர்மானித்து திட்டமிட்டு செலவழித்து ஈடேறிய திருமணம். மனம்நிறைந்த கற்பனைகளையும் கனவுகளையும் சுமந்து நின்றவர் வாழ்வு. நிறைவுகாணவேண்டிய இல்லறவாழ்வு .
மகள் முடிவை மாற்றுவாளென்ற அசட்டு நம்பிக்கை தாய்மனதிலிருந்தாலும் அமைந்தவாழ்வை அழிப்பதான மகளதுபேச்சு ஒரு தற்கொலைமுயற்சிபோலவே மனதில்த்தோன்றியது.
சு.கருணாநிதி.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்