selvakumar petchimuthu
சிறுகதை வரிசை எண்
# 268
செவனம்மா
செவனி "சாகக் கெடக்கா". கிட்டத்தட்ட பத்து நாள் ஆகுது, அவளுக்கு சுகமில்லாம போயி. கை, கால் எல்லாம் வீங்கிப் போய் காலே ஆனைக்கால் மாதிரி ஆகிப்போச்சு!. ஆமா அவளுக்கு சுகரும் பிரசரும் இருக்காம். புளியரையில இருந்து அந்த அபி அம்மாதான் டெய்லி ஆட்டோல வந்து பார்த்துட்டு போவுது. அந்த அபி அம்மா தங்கமான குணம், ஒரு ஊசியை கூட வலிக்க போடமாட்டா. அந்த அம்மாவை நெதம் ஒரு மொற பார்த்தாதான் செவனிக்கு கொஞ்சம் மனசு நிம்மதியா ஆ. பேரன்மார் எல்லாத்தையும் வரச்சொல்லியாச்சு. அவ கூட இருக்கிறது அவ மகா மரியோட கடைசி மகன் செல்வம்தான். அவளை எப்பவுமே சின்னப்பெய, ஏ சின்னப்பெயன்னு தான் கூப்பிடுவா, செவனி.
அவன் மெட்ராஸ்ல இஞ்சினியரா இருக்கான். ஆச்சிக்கி உடம்பு முடியலன்னு சொன்னதுமே அவன் மெட்ராஸ்ல இருந்து வந்துட்டான். அவன்தான் அவனோட ஆச்சிய இப்பல்லாம் பாத்துக்குறான். அவளுக்கு சாப்பாடு கொடுக்குறது, மாத்திரைய ஒழுங்கா வேளா வேளக்கி கொடுக்குறது. அவள ஒன்னுக்கு இருக்க கூட்டிட்டு போறது, வெளிக்கி இருக்க கக்கூசுக்கு கூட்டிட்டு போறது எல்லாத்தையும் அவன் தான் பாத்துக்குறான். செவனிக்கி கொஞ்சம் கொணங்காணாது.வெடுக்குண்ணு பேசுவா,எடுத்தெரிஞ்சி விழுவா,ஏன்னா வயசான காலத்துல அவ கூட இல்லாம போனதுக்கு. அவன்கிட்ட மட்டும் இல்ல எல்லா பேரன்மார்கிட்டயும் தான். வெளியில திண்ணயில தான் செவனி
படுத்து இருக்கா. வீட்டுக்குள்ளே இருந்து அவசரத்துக்கு எழுந்து வர முடியாதுன்னு. அவ கூட சின்னப்பயலும் படுத்திருப்பான். நல்லா அசந்து அவன் தூங்கிகிட்டு இருக்கும்போது சின்னபெய ஏ சின்ன பெயன்னு கூப்டுவா. அவன் எழுந்திருக்கலன்னா ஏ சின்னபெயன்னு அமயம்(சத்தம்) போடுவா. "ஒப்பன ஓக்கறபயலே" அப்படினு முனங்குவாள். செல்வம் பதறி பதறி எழுந்திரிச்சி என்ன ஆச்சுன்னு கேட்பான். ஒன்னுக்கு இருக்கணும்னு சொல்லுவாள். உடனே எழுந்து மெதுவாக வீட்டு முன்னால ரெண்டு அடி தூரம் இருக்கிற தென்னை மரத்து அடியிலே நிக்க வச்சு, மரத்துல கையை பிடிக்க சொல்லிட்டு சேலையை தூக்குவான்.அவ ஒண்ணுக்கு இருந்ததும், அவ கால்லயும்,அவனோட கால்லையும் மூத்திரம் தெறிக்கும். அதுக்கு ஒரு பக்கெட்டில் தண்ணி எடுத்துட்டு வந்து சேலையை தூக்கி ஆட்சிக்கு முன்னால 2 கப் தண்ணீர் ஊத்தி ரெண்டு பேர் கால்லயும் தண்ணி ஊத்தி கழுவிட்டு படுக்க வைப்பான். இவ்வளவு தூரம் அவ வெடுக்குன்னு பேசியும், செல்வத்துக்கு அவனோட ஆட்சி மேல கோபமே வராது. ஏன்னா அவனுக்கு ஆச்சிய அவ்வளவு பிடிக்கும். பக்கத்தில் அவகிட்டயே படுத்துக்குவான். அவனுக்கு என்ன பயம்னா, நம்ம ஆச்சி இன்னும் கொஞ்ச நாட்கள்ல செத்துப் போய்டுவாளோன்னு பயம். சின்ன வயசுல அவன் அவனோட ஆச்சிகூட தான் படுத்து உறங்குவான். அவதான் அவனுக்கு உலகமே. மறுநாள் அபியம்மா வந்து பார்த்துட்டுப் போகும்போது, இன்னும் நாலு அஞ்சு நாள்ல ஆச்சி உயிர் போயிடும்னு சின்னபயகிட்ட மட்டும் சொன்னுச்சி! அதக் கேட்டதுல இருந்து இவனுக்கு என்ன சொல்லணும்னே தெரியல! அமைதியா இருக்கான்! மதியம் அபியம்மா சொன்னதுல இருந்து சாப்பிட கூட செய்யல செல்வம்! என்ன செய்யலாம்னு யோசிச்சான்.
அவளோட அண்ணன்மார் சரவண சுந்தருக்கும் திருப்பூருல இருக்க பெரியம்மா மவன் ரவிக்குமார் கிட்டயும் போன் பண்ணினா. ரவி தன் பொண்டாட்டி புள்ளைய கூட்டிட்டு நைட்டு திருப்பூரில இருந்து செங்கோட்டைக்கு பனியன் கம்பெனியில லீவு போட்டுட்டு பஸ் ஏறிட்டான். சரவணன் சுந்தரும் கம்பத்துல ஒரு மரக்கட வச்சிருக்கான். அவனும் நைட்டோட நைட்டா கிளம்பி வந்துட்டான். ராத்திரிக்கே ஆச்சிகிட்ட சொல்லிட்டான். பேரப்புள்ளய வர போறாங்கன்னு கிழவிக்கு கொஞ்சம் முகத்தில் அமைதி!. கொஞ்சம் தெம்பும் கூடிப்போச்சு. காலையில எட்டு மணிக்குள்ள ரெண்டு பேரும் வந்துட்டாங்க. ஆச்சிக்கி பேரன்மார பார்த்து சந்தோஷம். ஆனாலும் அவளுக்கு என்னன்னே தெரியல கண்ணில் நீர்வடியுது. செல்வம் கூட பிறந்த மூத்த அண்ணன் ரமேஷ நினைச்சு அழுவுறா. செல்வத்தோட மூத்த அண்ணன் பேரு ரமேஷ். செவனி மவ மாரிக்கி மொதப்புள்ள, செல்லப்புள்ள! சின்ன வயசுல இருந்தே மூத்த புள்ள மூத்த புள்ளன்னு செல்லம் கொடுத்து வளத்தாங்க. செல்வமும் சரவணனையும் தாண்டி அவனுக்குத்தான் வீட்டில் முதல் உரிம! அவன் என்ன தப்பு செஞ்சாலும் மாரியும் அவ புருஷனும் கண்டுக்கிறது இல்ல. அதை தெரிஞ்சுகிட்டு அவன் சின்ன வயசுல இருந்தே பேச்சி கிட்டயும் மாரி கிட்டயும் தெரியாம அவங்க உழைக்கிற காச திருடுவான். ஆனால் பழிய தம்பிமாரு மேல போட்டுருவான். அதனாலயே செல்வமும் சரவணனும் அவன் செஞ்ச தப்புக்கு அடி வாங்குவாங்க. அவன் எதுவுமே தெரியாத மாதிரி கமுக்கமாக இருந்துக்குவான். இது வளர வளர ரொம்ப மோசமா மாறிடுச்சி! அவன் திருந்தவே இல்லை, கொஞ்சமும் அவன் அத கண்டுக்கவே இல்லை. அவனுக்கு குற்ற உணர்ச்சியே இல்லை! சரவணன் படிக்க மாட்டேன்னு வேலைக்கு போனதுக்கு அப்புறம் கூட, அவன்கிட்ட இல்லாத பொய் சொல்லி, அவன் உழச்ச எல்லாவற்றையும் புடுங்கிட்டான். சரவணன் வெறும் வெகுளி. யார் என்ன சொன்னாலும் நம்பிடுவான். அண்ணே ஏமாத்துரன்னே தெரியாம, அவனும் நம்ம அண்ணன் தான கேக்குறான்னு எல்லா துட்டயும் கொடுத்தான்.
இது கடைசியில் வீட்டுக்குள்ள பெருத்த அடியா விழுந்து போச்சி. எல்லாரும் அவனை வெறுத்தாச்சி. ஆனாலும் நம்ம வீட்டுக்கு தலமவன், அவன என்ன கேக்குறதுன்னு விட்டுட்டாங்க. செவனி மட்டும் அத கண்டுக்கல. ஏன்னா வளர்த்தது அவதான. அவளுக்கு எப்படி மனசுல பேரன வெறுக்க தோனும். யாரும் ரமேஷ் கிட்ட பேசுறது கூட இல்ல. திடீரென்று ஒரு நாள் காலேஜ் போறப்போ ஒரு லாரி வந்து ரமேஷ் வண்டிய மோதி அவன திருநெல்வேலி ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் வச்சிருந்தாங்க. அவனுக்கு மூளைக்கு போற நரம்புல 2 நரம்பு கட்டாகி அவனால் நடக்கவோ கையை தூக்கவோ முடியல. இவன் பன்ன கூத்துனால யாரும் இவனை மனசார பாக்கல. இவனுக்கு மூத்திரம் போகவும், வெளிக்கி போகவும் முடியாம ரொம்ப கஷ்டப்பட்டான். ஒரு பத்து நாள் இருக்கும் என்ன நெனச்சானோ 30 தூக்க மாத்திரைய போட்டு செத்தே போனான். அவன் செத்துப் போனது சிவனிக்கி ரொம்ப வருத்தம். வீட்டுல எல்லாரும் அந்த துக்கத்தில் இருந்து மீளவே கஷ்டப்பட்டாங்க.
பேரன்மார் மூணு பேருமே சேர்ந்து இன்னைக்கி கற்குடில அம்மங்கொட, பேசாம ஆட்சியை கூட்டிட்டு போனா என்னன்னு நினச்சி ஒரு ஆட்டோவ அமத்தி செவனிய கூட்டிட்டு போனாங்க!
கற்குடியில் வடகாசி அம்மன் கோயில் ஊர்கோயில். ரொம்ப சத்தி உள்ள தெய்வம். அந்த கோயில் கொட சுத்தி இருக்க எல்லா ஊர விடவும் இன்னும் சிறப்பா நடக்கும். அந்த கோயிலுக்கு என்ன சிறப்புன்னா, விதவிதமான நேத்திக்கடன் இருக்கும். பூப்பெட்டி, முளைப்பாரி, பூசணிக்காய் தூக்குறது, பால்குடம்,குற்றால தீர்த்தம், அக்கினிசட்டி, திருநீற்று கப்பரைன்னு கிட்டத்தட்ட விதவிதமான வேண்டுதல்கள் நடக்கும். செவனிய பேரன்மாரு கூட்டிகிட்டு சாமக்கொட வரைக்கும் ஆட்டோல இருக்க வச்சி, சாமிகிட்ட மெதுவாக கூட்டிட்டு போயி திருநாரு பூச வச்சி, ஊர்ல செவனியோட சொந்தபந்தம், அவள சுத்தி சின்ன வயசுல உள்ள சேக்காளியன்னு, எல்லார்கிட்டயும் பேச வச்சு கிழவிய கடைசியா ஒருமொற அவ ஆயுசுக்கும் காணாத சந்தோசத்த கொடுத்துட்டாங்க. செவனிக்கி இப்ப செத்தாலும் பரவாயில்லைன்னு தோணிருச்சி. மவா மாரி மூணு பேரையும் திட்டுதா, எதுக்கு சாவப்போற மையத்தை கூட்டிகிட்டு கொடபாக்க கூட்டிட்டு போறீங்கன்னு! செல்வத்துக்கு தெரியும் அவளோட கடைசி ஆச, அவ வைராக்கியம் எதுன்னு,
அது கடைசியா கற்குடிய, தன்னோட பெறந்த ஊர பாக்கதுதான் செவனியோட விருப்பம்னு!
அவ கிட்டத்தட்ட 16 வருசமா கற்குடி ஊருக்கே போகல! சாவந்தட்டியும் நான் ஒரு காலமும் இந்த ஊருக்கு வரவே மாட்டேன்னு அழுதுகிட்டே ஓடோடி வந்தா ஏன்னா?
செவனி கற்குடிகாரி! அவ அப்பன் பேரு அடிவெட்டி, அம்ம மாடத்தி! அந்த ஊருலயே பேரு வாங்குன குடும்பம் செவனியோட குடும்பம். ஊரே பஞ்சத்துல அடிபட்டபோது, அவ அப்பன் அடிவெட்டி தோட்டம், தொறவு வயக்காடு எல்லாம் மழை தண்ணி இல்லாம காஞ்சி கெடந்தப்போ மாடத்திக்கி ரெண்டு பொம்பள புள்ளைய வச்சி வளக்க முடியல, அடுத்து மூனாவது மாசமா இருந்தா மாடத்தி! முத்து கோடங்கிட்ட சோவி போட்டுப் பாத்தா மூனாவதும் பொம்பளன்னு தெரிஞ்சது, ஆனா அவ பொறந்தா உன் குடும்பமே நல்லா இருக்கும்னு சோசியக்காரன் சொல்ல, மூனாவதா மாடத்தி வயத்துல பெறந்தா இந்த செவனி. பதினாறாவது நாள் இவளுக்கு "சிவனம்மாள்" ன்னு பேரு வச்சா அடிவெட்டி!
இவ பொறந்த நேரம் மழை பேஞ்சி, ஊருல வெள்ளக்காடு வந்து சுத்தி இருக்க குளமெல்லாம் பெருவி அடிவெட்டியோட வயக்காடு, தோப்பு, தென்னை, மாங்கான்னு எல்லாம் விளைய, செவனியம்மாவுக்கு ஒரு வயசு பிறக்கும் முன்னயே கற்குடிக்கி தெக்க இருக்க பாறக்கொளத்த குத்தகைக்கு எடுத்தா அடிவெட்டி. அந்த கொளத்துல மீன் வளத்து, அதுல வந்த காசு பணத்தால பஞ்சம் அப்படின்னா என்ன அப்படிங்கற அளவுக்கு மாறிப் போனான் அடிவெட்டி. செவனி பெறந்த பிறகும் இன்னும் நாலு பிள்ளைகள் பெறந்தாலும், ஒரு காலமும் கஷ்டப்படல அடிவெட்டி. ஏன்னா அப்படி ஒரு கைராசிக்காரி செவனம்மா!
அடிவெட்டி எப்போவுமே செவனின்னு தான் வாய் நிறைய கூப்பிடுவாரு.
இப்படி குடும்பத்திலேயே கைராசிக்காரியா இருந்த செவனிதா வாழ்க்கையில ரொம்பவும் கஷ்டப்பட்டா. சொந்த தாய் மாமன் மகன் செல்லையாவுக்கே செவனிய கட்டிக் கொடுத்தாங்க! செல்லையா ரொம்ப குடிப்பான், ஆனா ஒரு வெள்ளந்தியான மனுசன். யாருக்கும் ஒரு கெடுதலும் பண்ணாதவரு. இருந்தாலும் செல்லையா அம்ம ஒரு தரங்கெட்ட பொம்பள!செவனி உழைப்ப எல்லாத்தையும் அவ பிடுங்கிக்கிட்டா, செவனிக்கி அத தட்டி கேட்ககூட தைரியம் இல்ல. ஏன்னா செல்லையா ஒரு அம்மா பக்தன். அவனோட அம்ம என்ன சொல்லுவாளோ அதையேதான் அவன் கட்டளையா கேப்பான். செவனி என்ன சொன்னாலும் செல்லையாவுக்கு அவனோட காத்துல ஏறாது.
இதுதான் இப்படின்னு பார்த்தா அவளுக்கு மொத புள்ள செத்தே பெறந்தது. அடுத்து கருப்பசாமின்னு ஒரு புள்ள பெறந்து எட்டு வயசுல அம்மை விளையாண்டு செத்துப்போச்சு. அடுத்துதான் பண்பொழி ஊருல இருக்கக்கூடிய திருமலைக்கோயில் முருகனுக்கு செல்லையாவும் செவனி
அம்மாளும் "முருகா எனக்கு ஒரு நல்ல புள்ளைய குடு,
அப்படி பெறந்துச்சின்னா
என் பிள்ளைக்கு உன்னோட பெயரையே வைக்கிறேன்" அப்படின்னு வேண்டிகிட்டாங்க. அப்புறம்தான் மூனாவதா பிறந்தது ஒரு பொம்பளபுள்ள. அதுக்கு மூக்கம்மான்னு பேரு வச்சு, அது பெறந்து ஆறு மாசத்துல செம்பு கம்பி வளையம் மூக்குல போட்டு முருகனுக்கு மொட்டை அடிச்சு நேத்தி கடன அடச்சாக. அடுத்தது ஐயப்பன். கடைசியா பிறந்ததுதான் செல்வத்தோடு அம்மா மாரி.செவனி புள்ளய மூனுலயுமே மாரிதான் வாயாடி. நேர்மையா இருப்பா. கட்டுகடுக்குன்னு பேசுவா. அவ வாய்க்கு தான் எல்லோரும் பயப்படுவாக.செவனி கூட மாரியக் கண்டா பயப்படுவா. ஏன்னா இப்பவும் பெத்த தாயின்னு என்று பாக்காம என்ன பொழப்பு பொழச்சிங்கன்னு செவனிய பார்த்து கேப்பா. செவனிக்கும் தெரியும், நம்ம கூறுகெட்ட பொழப்பு பொழச்சிட்டோமேன்னு.
மூக்கம்மா வயசுக்கு வந்த பெறவு மூக்கம்மால ஊட்டிக்கி பக்கத்துல இருக்க ஒரு எஸ்டேட்டுல கட்டிக் கொடுத்தாக. அவளுக்கு மூன்று புள்ளைக பெறந்து, ரொம்ப தூரம் இருக்கதால மூக்கம்மா
நெனைவுல,அவளோட மூத்த மகனை அங்கிருந்து தூக்கிக்கிட்டு வந்து தெக்கு மேட்டுலயே வளர்த்தா செவனி. ஐயப்பனும் கவர்மண்ட் வேலை கெடச்சு நாகர்கோயிலுல வேலை செய்யிதான். அங்கயே கல்யாணமும் செஞ்சிகிட்டான். கடைசியில மாரி உள்ளூருலயே காதலிச்சு ஓடிப் போய்ட்டா. ஆனால் மாரி மாமியா அந்த வேசி முண்ட மாரிய கொடுமைப்படுத்தியே காலத்தைக் கழிச்சா. அதனால அவ அந்த குடும்பத்தை விட்டுவந்து,தனியா வேற வீட்ல இருந்தா, பின்ன அவ மூனு பிள்ளையையும் கஷ்டப்பட்டு வளர்த்தா செவனி. மூன்று புள்ளைகளையும் மூக்கம்மாவோட
மூத்த மவனையும் வளர்த்தா. பேரப்பிள்ளைகன்னா அவளுக்கு உயிரு. நாலு புள்ளைகளையும் காக்கா தன்னோட கூட்டுக்குள்ளே பொத்தி பொத்தி பாதுகாக்குத மாரி அவ அடகாத்தாள்.
செல்வம் தான் வீட்டிலயே கடைசி.
அதனால செவனியோட அதிக நேரத்தை செலவழிச்சது மாரி மகன் செல்வம்தான். செல்வத்த்துக்கு செவனியோட பேரத்தான் அவனுக்கு வச்சிருக்கா மாரி. அதனாலேயே செவனிட்ட அவன் அடிக்கடி சண்ட போடுவான். எனக்கு ஒன்னோட பேர தான வச்சிருக்கு. நீ ஏன் எனக்கு சங்கிலி எடுத்து போடல, தங்கத்துல ஒரு பொருளை எடுக்கலன்னு. அதைக் கேட்டு சிரிச்சிட்டு போய்டுவா செவனி. செவனிக்கி
செல்வம் அப்படின்னா ரொம்ப உயிரு. அவன வயலுக்கு கூட்டிட்டு போறது, தேக்கங்கொட்டைப் பொறுக்க கூட்டிட்டு போறது, மாந்தோப்பு வயக்காடுன்னு எல்லா பக்கமும் சுத்தி உருவி உருவி வளத்தா செவனி.
ஒருமொற கற்குடியில சித்திர மாசம் அம்மன் கொடன்னு பேரன்மார் 4 பேரையும் கூட்டிட்டு போனா செவனி.
கற்குடியில் இருந்தது செவனியோட
கடைசி தம்பி. அவன் வீட்டுக்கு இரண்டு மணிக்கு தெற்கு மேட்டுல இருந்து கிளம்பி தெக்க வயக்காட்டு வழியா, அஞ்சு மைல் தூரம் நடந்து கற்குடிக்கு கூட்டிக்கிட்டு போயிட்டா. தம்பி வீட்டுக்கு போனா தம்பி பொண்டாட்டி கடமைக்கு மட்டும் வாங்கன்னு கூப்பிட்டா. அப்பவே செவனியோட மூஞ்சி மாறிடுச்சு. செவனியோட தம்பி இருக்க அந்த பொது வீட்டிலேயோ, சொத்துலையோ மொத்தம் 7 பேருல ஒரு பங்கோ, இல்லன்னா ஒரு பைசா பணமோ கூட அவ வாங்கல. செவனியோட அக்கா தங்கச்சிக கூட வீடு, இடம், ரூபாய், தோப்புல பங்குன்னு வாங்கிட்டாங்க. அதுல எதுவுமே வாங்காதது செவனி
மட்டுந்தான்.
அதை நினைச்சு
செவனி ஒரு போதும் கவலைப்பட்டது இல்ல. ஏன்னா நம்ம கூட பிறந்தவங்கதானன்னு அவ விட்டுக்கொடுத்தா செவனி.
எப்போதுமே விட்டுக் கொடுத்தவளுக்கு ஒரு வீம்பு வரும், ஆனா செவனி
எதையும் கண்டுக்காம பொறுத்துக்கிட்டா.
புள்ளைக பசிக்கிதுன்னு சொல்லியும் தம்பி பொண்டாட்டி கேட்டும் கேக்காத மாதிரி போறா. ராத்திரிக்கு சொந்தக்காரு வீட்டுல போயி செவனி கஞ்சி குடிச்சிட்டு, பேரன்மார சாப்பிட வச்சா. நைட்டு சாம பூச முடிஞ்சதும் தம்பி வீட்டுக்கு வந்து பிள்ளைகளை தூங்க வச்சா. காலையில் பிள்ளைகள் எழுந்திருச்சு மறுபடியும் பசிக்குதுன்னு சொல்லவும்,
ஆச்சி சோறுன்னு சின்ன பேரன் சொல்ல, அதை கேட்டும் கேட்காதது மாதிரியே வாரவுக போரவுகன்னு எல்லோர்கிட்டையும் கூப்ட்டு வச்சு கதை பேசிக்கிட்டு இருந்தா செவனியோட நாத்தனா.
அதைப்பார்த்த செவனியோட தம்பி பொண்டாட்டி அப்பவும் எதுவுமே கண்டுக்கல. பார்த்தா அவ செவனியோட தம்பி குடும்பமே கோயில்ல பொங்கப்பான தூக்க போற நேரத்துல, செவனி நாலு பேரையும் கூட்டிட்டு பாறக்கொளத்த தாண்டி கூட்டிகிட்டு வந்துட்டா.
செவனியோட
சின்ன பேரன் சரவணன் பசிக்குது ஆச்சின்னு சொல்லவும், இந்த பெயவுள்ள பசி தாங்காதேன்னு அழுத வாக்குலையே கொஞ்சம் நேரந்தா,கொஞ்சம் பொறுன்னு சொல்லி அவன சமாதானப்படுத்தி வயல்காட்டுக்கு உள்ள அவள் வேலை பாக்குற ஐயா களத்துக்கு கூட்டிட்டு வந்தா. ஐயாக்களம்தான் அவ வேலை பாக்க இடம். அங்கே ஒரு பெரிய நிலக்கிலார் குடும்பத்தோட வயல்காட்டுல, மாட்டுத் தொழுவுல சாணி அள்ளுறதுதா
செவனியோட வேலையே.
அங்கே வேல செஞ்ச ராமையா தோட்டத்துல வெளஞ்ச வாழக் கொலய பழுக்க வச்சிருந்தான். அவன் புள்ளைகளோட
செவனியக் கண்டதும், இங்க வாங்க மதினின்னு மூனு சீப்பு வாழப்பழத்த எடுத்து குடுத்தான். அது செவனியோட பங்குதான். அந்த வாழைப்பழத்த ஒவ்வொருக்கா உரிச்சுக் கொடுத்தா. கிணத்துலருந்து தண்ணிய எறச்சு குடிக்க வச்சா. புள்ளைகல பாத்து அழுதுகிட்டே, நல்லதங்கா மாதிரி நடந்தா, ஊர் வந்து சேந்தா, வரும்போதே சொல்லிக்கிட்டுதா வந்தா, "இன்னும் நான் செத்தாலும் கற்குடி ஊர் பக்கம் போவ மாட்டேன்" ன்னு அன்னக்கி வந்தவ நேத்தைக்கி தான் அவ கற்குடி ஊர் பக்கம் போனா.
சின்ன வயசுல இருந்தே ,
"அவ பெறந்த பெறகுதா ,அந்த ஊரே ரொம்ப காலத்துக்கு பெறகு மழ தண்ணியோட இருந்ததுன்னு" எல்லோரும் சொல்லி சொல்லியே வளத்துட்டாங்க. அதையே கேட்டு வளர்ந்ததால என்னவோ அவளுக்கு அந்த கற்குடி ஊர் மேல் உள்ளூர ஒரு பித்து உண்டு. அவ வளர வளர அந்த ஊரும் வளந்ததா மனசுக்குள்ளேயே நினைச்சா. அவளுக்கு சின்ன வயசுல இருந்தே இயற்கையோட புரிதல் உள்ளுக்குள்ளே இருந்திச்சி. ஒவ்வொரு மொற ஊர்ல மழ பெஞ்சு பச்சை பசேலேறுன்னு, பச்சை போர்வை போத்திய மாதிரி மாறும் போதும் அவ ஒவ்வொரு தடவையும் புதுசா பிறந்துட்டதாவே நினைச்சா.
அவளுக்கு மழையின்னாலே ரொம்ப புடிக்கும். மழக்காலத்துல
அண்டிமாந்தோப்புக்கு(முந்திரி) போய் அண்டிமாம்பருப்பு பெறக்கும்போதும், வெறகுக்கு போவும்போதும்
ஊருல வயக்காட்டில் உளுந்து போட்டாலும், அவதான் முதல்ல வருவா, நாத்து நடுவா, அவள மாதிரி வேகமாக சீரா கிழக்க சூரியன பாக்கும்படி நாத்து நட அந்த ஊருலயே யாராலயும் முடியாது.
நாத்து நடும்போது அவ மழ வரனும்னு வேண்டுவா. என்னவோ தெரியவில, இவ நாத்து நடும் போதெல்லாம் மழ எங்க இருந்து வரும்ன்னே தெரியாது, கொட்டோ கொட்டுன்னு கொட்டும், இவளுக்கும் மழக்கும் உள்ள உறவ யாரும் புரிஞ்சுக்கவே மாட்டாங்க. மழ செவனிக்கி ஒரு சினேகிதி தான்.
மலைகளுக்கு நடுவுல மரங்களும் செடிகளும் கொடிகளும் நிரம்பிய ஊரைவிட்டு செவனிய தெற்குமேட்டுக்கு கட்டிக் கொடுத்தாங்க. ஆனால் அவளுக்கு எப்போல்லாம் மனசு சரியில்லையோ, எப்போல்லா செல்லையா கூடவும் அவரோட அம்மா ஊர்காலி கூடயும் சண்ட வருதோ அப்போல்லாம், அவ கற்குடி ஊர பார்க்க பறந்து போய்டுவாள். ஏன்னா அது கற்குடி ஊரு, அந்த ஊரோட வெயிலு, மழ, குளிருன்னு எல்லாமே செவனி மண்டைக்குள்ளே ஆழமா பதிஞ்சு போச்சு.
இவ்வளவு ஆசைகளையும் காதலையும் அந்த ஊரு மேல வைச்சிருந்த செவனி
இந்த சம்பவம் நடந்து 16 வருசமா அவ கற்குடி ஊருக்கு போகவே இல்ல. கற்குடில இருந்து தெற்கு மேட்டுக்கு ஊருக்கு எந்த வீட்டிலயாவது கல்யாணம் ஆகி பொண்ணு வந்துருச்சுன்னா,
செவனிக்கி ரொம்ப சந்தோசமா ஆயிடும். இவ்வளவு நடந்த அப்பறமும்
கற்குடியப் பத்தி யாராச்சும் பேசுனா அவ மொகத்துல அவ்வளவு சந்தோசம் வந்துரும். அவ மொகம் பாற கொளத்துல பூத்த தாமரப் பூவ போல மலந்துரும். கல்யாண வீட்டுல போய் முதல் ஆளா நிப்பா. அங்க கற்குடி ஊருலருந்து வரும் பொம்பள ஆளுகள வீட்டுக்கு கூட்டிகிட்டு போய், காப்பி போட்டுக் கொடுப்பா. எல்லரும் ஏன் ஊருக்கு நீ வர மாட்டேங்கிறன்னு கேட்கும்போது, அங்க வரணும், இங்கே ஒரே வேலையா இருக்குல்ல, என்னால இங்க வேலைய விட்டுட்டு ஒரு பக்கமும் வர முடியாது, கண்டிப்பா வரணும் அப்படின்னு சொல்லுவா. ஆனா மனசுக்குள்ள நடந்த சம்பவத்த நினைச்சு குமுறி குமுறி அழுவா. சின்ன பெயலுக்கு தெரியும், அவளோட கடைசி ஆச என்னன்னு.
அவளோட ஆசைய நிறைவேத்தி வச்சாச்சுன்னு. அவ இன்னும் மூனு நாளு இல்ல, கற்குடி ஊருக்கு போன சந்தோசத்துலயே அவளுக்கு இன்னக்கே உயிர் போனாலும் போய்டும்ன்னு. மறுநாள் காலையில இருந்தே நல்ல கொடை பார்த்த செழிப்புல இருந்த செவனி மொகம் கொஞ்சம் கொஞ்சமா மங்கி போக ஆரம்பிச்சது. சாயங்காலமே பேரப்பிள்ளைக எல்லாத்தையும் கூப்பிட்டு திருநாரு பூசிவிட்டா. பேரப்பிள்ளைக எல்லாரும் அவளுக்கு பால் ஊத்துன்னாக. செல்வத்துக்கு தெரிந்து போச்சி ஆச்சி நம்மள விட்டு போக போறான்னு. அவன் பாலு ஊத்துன போது கண்ணீர் வடிச்சிக்கிட்டேதான் பால ஊத்துனான். மக மரியையும் மூக்கம்மாளையும் வரச்சொன்னா செவனி. எல்லோரும் அவ கால்ல விழுந்தாக கிழவி இரண்டு கையையும் தூக்கி, "நல்லா இருங்க மக்கா" அப்படின்னு சொல்லி வாயமூடல, செவனிக்கு உயிர் போயிடுச்சு.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்