logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Asha Bright

சிறுகதை வரிசை எண் # 267


தாலாட்டு சில்லென்ற ரம்மியமான மழை நாளின் மாலை பொழுது ! வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை என்றாலே எங்கிருந்தோ வந்து அனிச்சையாய் ஒட்டிக் கொள்ளும் உற்சாகத்தின் மிகுதியில் தோழியர் இருவரும் பேருந்தில் அமர்ந்திருந்தனர். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த இந்திரா மதியம் பெய்த மழையின் மிச்சமாக ஜன்னல் கம்பியை பற்றியிருந்த நீர்ப்பொதிகளாய் திரண்டிருந்த நீர் திவலைகளை தன் விரல்களால் தட்டி தட்டி விளையாடியபடியே , அடுத்த மழைக்கு காத்திருந்த இருள் சூழ்ந்த மேகங்களின் மந்தகார குளுமையின் ஆளுமையில் உடல் சிலிர்த்து இருந்தாள். " கவிதா இங்க பாருடி !எவ்வளவு அழகா முத்து முத்தா இந்த தண்ணிங்க கம்பில நிக்குது! இன்னைக்கு ஃபுல்லா செம மழை தான் .ஜாலி! " என்று இந்திரா கூற, கண்களை மூடியிருந்த கவிதா சற்று சலிப்புடன் " சும்மா இருடி ! நல்லா சொக்கிக்கிட்டு வந்துச்சு . எழுப்பி விட்டுடா" என்று அங்கலாய்த்து கொண்டாள். " இந்திரா! கவிதா ! நீங்க ரெண்டு பேரும் மெயின் கேட்டிலேயே இறங்கிக்கோங்க. எனக்கு உக்கடம் மீன் மார்க்கெட் வரைக்கும் போகணும். நாளைக்கு சனிக்கிழமை இல்லையா... கலாதேவி அம்மா மீன் வாங்கிட்டு வர சொல்லி இருக்காங்க . இன்னைக்கு டிராபிக் அதிகமா வேற இருக்கு . நான் அதனால உள்ள வரல . நீங்க போயிடுங்க ! " என்று ஓட்டுநர் ரவி அண்ணா கூறினார். " சரி அண்ணா! மழை பெய்யலையே! அதனால நாங்க நடந்து போறோம் ஜாலியா! " என்று பதிலளித்தாள் இந்திரா . கண்களை மூடியிருந்த கவிதாவை மீண்டும் தட்டி எழுப்பி , "எழுந்திருடி ! இறங்கணும் !" என்று உலுக்கினாள் இந்திரா. தோழியர் இருவரும் பேருந்திலிருந்து இறங்கி " பூக்களின் இலக்கு இல்லத்தின் " பிரதான நுழைவு வாயிலில் இருந்து நீண்டிருந்த பாதையில் நடக்கத் துவங்கினர் . "இந்த ரவி அண்ணா எப்பவும் இப்படிதான் ! ஒரு அஞ்சு நிமிஷம் ஆகுமா... நம்மள கொண்டு வாசலில் விடுவதற்கு ? நல்ல தூக்கமா வந்துட்டு இருந்தது. காலேஜ்ல கடைசி ஹவரு எக்கனாமிக்ஸ் கிளாஸ் செம்ம போர் வேற ! அதனால் டயர்டா வேற இருந்துச்சு! இப்ப நடந்து வேற போகணும்! என்று அடுக்கடுக்காக புலம்பித் தள்ளினாள் கவிதா. " சும்மா இருடி ! புலம்பிக்கொண்டே வராதே ! நாளைக்கு நல்லா மீனை சப்புக் கொட்டி சாப்பிடும் போது.. இந்த வாய் எங்க போகுதுன்னு பார்க்கிறேன்" என்று கிண்டல் அடித்தாள் இந்திரா. இந்திரா ,கவிதா இருவரும் கோயமுத்தூர் உக்கடத்தில் இருக்கக்கூடிய " பூக்களின் இலக்கு இல்லம்" எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் , அவர்களுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்ததே பராமரிக்கப்பட்டு வருகிறார்கள் . இலக்கு இல்லம் தான் அவர்களின் மொத்த உலகமே ! அங்கு இவர்களைப் போல இருபதுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளும், பதினைந்து முதியோர்களும் இருக்கிறார்கள். இருவரும் கோபாலபுரத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறார்கள் . இந்திரா இளநிலை உயிரியல் பாடமும் , கவிதா இளநிலை கணிதவியலும் பயின்று வருகிறார்கள். அந்தப் பாதையின் இருபுறமும் பச்சை பசேல் என்று செடிகொடிகள் சூழ்ந்து, நகரத்தின் நெருக்கடி , பேருந்து இரைச்சல் என சந்தடி ஏதுமில்லாமல் ஓர் அமைதியான சூழலை உருவாக்கி இருந்தது. கூட்டமாக மலர்ந்திருந்த மஞ்சள் நிற செவ்வந்தி செடிகளினருகே புற்களினிடையே சாம்பல் நிற காட்டு சிலம்பன் பறவைகள் அமர்ந்திருந்தன. அதைப் பார்த்ததும் இந்திரா கண்கள் விரிய " கவிதா! இங்க பாருடி ! இந்த பறவைகளை! .. ஆங்கிலத்தில் இதை ஸெவன் சிஸ்டர்ஸ் என்று சொல்லுவாங்க! ஏன் தெரியுமா ? இந்த பறவைகள் எப்பவுமே ஏழு , எட்டு பறவைகளா தான் இருக்கும் " என்று உற்சாகமாக கூறினாள் . அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு பறவை மற்றும் ஓர் பறவையின் வாயில் எதையோ ஊட்டி விட்டுக் கொண்டிருந்தது . இதை கவனித்த கவிதா, " இந்திரா ! அங்க பார்த்தியா அந்த பறவை எவ்வளவு அழகா அதோட குட்டிக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறது.! அம்மா என்றாலே அன்பு தானே ! "என்று கூறினாள் அதுவரை மகிழ்ச்சியில் விரிந்திருந்த இந்திராவின் விழிகள் திடீரென களை இழந்து கோபமேறி, " அம்மா என்றால் அன்பு என்பதெல்லாம் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் வேண்டுமென்றால் சரியா இருக்கும்! அது மனித பிறவிகளுக்கு எல்லாம் ஒத்து வராது.! " என்று சற்று காட்டமாக பதில் அளித்தாள் இந்திரா. தோழியின் உள்ளக் கிடப்பை நன்கு அறிந்தவளான கவிதா அவளை திசை திருப்பும் நோக்கில் , " நாளைக்கு அம்மணியோட பர்த்டே வேற . கலா அம்மா எப்படியும் உனக்கு ஸ்பெஷல் கிப்ட் வச்சிருப்பாங்க. நாளைக்கு லீவு வேற! அதனால ஜாலியா இருக்கலாம்! " என்று கூறினாள். " வேண்டாம்! கடுப்ப கிளப்பாத! ஓடிடு ! எத்தனையோ தடவை நான் சொல்லிட்டேன் .வருஷத்திலேயே எனக்கு பிடிக்காத நாள்னா அந்த ஒரு நாள் தான். அதை வேற நினைச்சு நான் கொண்டாடணுமா? போடி உன் வேலையை பாத்துட்டு.! என்னோட மூடே போச்சு! ராணி பாட்டிகிட்ட ஒரு கப் டீ வாங்கி குடிச்சா தான் எல்லாம் சரியா வரும் ! என்றபடியே விறு விறுவென இல்லத்தின் வரவேற்பறைக்குள் நுழைந்தாள் இந்திரா. அங்கு செய்தித்தாளை வாசித்தபடி கலாதேவி, அந்த இல்லத்தின் நிர்வாகி அமர்ந்திருந்தார். கலா தேவி .. ஐம்பது வயதான பெண்மணி! கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாக இலக்கு இல்லத்தை திறம்பட நிர்வகித்து வருகிறார் கலாதேவி. தோழியர் இருவரும் அவருக்கு மாலை வணக்கத்தை தெரிவித்துவிட்டு சமையலறையை நோக்கி சென்றார்கள். " பாட்டி எங்க இருக்கீங்க ? " என்று கத்தியபடியே சமையலறையில் ராணி பாட்டியைத் தேடினாள் இந்திரா. பின் வாசலில் இருந்து ராணி பாட்டியின் குரல் கேட்கவே , இருவரும் அங்கு விரைந்தார்கள் . " என்ன பாட்டி பண்ணிட்டு இருக்கீங்க! எனக்கு ஒரு கப் டீ தாங்களே ! கொஞ்சம் தலைவலியா இருக்கு ! " என்று இந்திரா கேட்டாள்.‌ " ஒரு மருதாணி செடியை பதியம் போட்டு வச்சிருந்தேன் . அதை எடுத்து நட்டுகிட்டு இருக்கேன் கண்ணுங்களா! நீங்க உங்க அறைக்கு போய் , கை காலெல்லாம் கழுவிட்டு வாங்க ! அதுக்குள்ள நான் உங்களுக்கு டீ போட்டு வைக்கிறேன்" என்று கூறினாள் ராணி பாட்டி. ஒரு குட்டி குளியலை முடித்துவிட்டு புத்துணர்ச்சி அடைந்தவுடன் , மீண்டும் சமையலறைக்கு வந்து ராணி பாட்டியிடம் இருந்து தேநீர் கோப்பையை வாங்கியபடி தன் அறைக்குள் நுழைந்தாள் இந்திரா . கட்டிலில் அமர்ந்தவளுக்கு ஏதேதோ எண்ணங்கள்! சோர்வாக தேநீர் கோப்பையை கையில் ஏந்தியபடி அமர்ந்திருந்தாள் . அப்போது கைகளில் செய்தித்தாள்களால் பொதியப்பட்ட ஒரு பொருளை ஏந்தியபடி கலாதேவி அவள் அறையினுள் நுழைந்தார். அவரைப் பார்த்ததும் ," வாங்க அம்மா " என்று எழுந்தாள் இந்திரா. " நாளைக்கு உன்னோட பிறந்தநாள்! ஞாபகம் இருக்கு தானே ! இந்த வருட பிறந்தநாள் பரிசு ரொம்ப சிறப்பானது ! அதனால் தான் உன்னோட பிறந்தநாளோட முந்தின நாளே அதை உன் கையில சேர்த்துட்டேன்! அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே விஷஸ் மை டியர்! " என்று கூறியபடி அவள் தலையை தடவி கொடுத்தார் கலா தேவி. " சூப்பர்! சூப்பர்! கலா அம்மாவோட கிப்ட் இப்பவே வந்தாச்சா ? இந்திரா சீக்கிரம் ஓபன் பண்ணு! என்னன்னு பார்க்கலாம்! " என்று கவிதா இந்திராவை விட கூடுதல் உற்சாகத்தில் கூற , கலா தேவி அவளை பார்வையாலேயே நிறுத்தினார் . "கவிதா! நைட் மெனு லிஸ்ட்ல கொஞ்சம் மாத்தணும்னு சொன்னீங்க இல்லயா ! புது உணவு அட்டவணை தயார் செய்யணும் . என் கூட வா" என்று கவிதாவை கையோடு அழைத்து சென்றார் கலா தேவி. "இது என்னவா இருக்கும் !டிரெஸ்ஸா இருக்குமோ? .. இல்ல ஏதாவது புத்தகமா இருக்குமோ? என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு கட்டிலில் அமர்ந்தவாறு அந்த உறையை திறக்கத் துவங்கினாள் இந்திரா. பொதியின் மேலுறையை கிழித்து எறிந்திட , அதனையடுத்து மேலும் மிகப் பழைய செய்தித்தாள்களால் பொதியப்பட்டிருந்து. அந்த அட்டை பெட்டியின் உள்ளே நான்காய் மடிக்கப்பட்ட விதமாய் காகிதம் ஒன்று இருந்தது .அதைத் திறந்து வாசிக்க துவங்கினாள் இந்திரா. " இந்திரா! நல்லா இருக்கியா மா? நீ இதை வாசிக்கிற அப்படின்னா உனக்கு இன்னைக்கு பதினெட்டாவது வயசு தொடங்குது ! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! நீண்ட ஆயுசோடையும் , நோய் நொடி இல்லாம எல்லா செல்வங்களும் பெற்று நீ நல்லா இருக்கணும். இப்படியாக அந்த கடிதம் தொடர்ந்து கொண்டிருந்தது. இந்திராவின் மனதில் ஏகப்பட்ட வினாக்கள் ! ...யாராக இருக்கும் ? இந்த கலா அம்மா தான் ஏதோ விளையாடுறாங்களா? ஏதாவது "டிரஷர் ஹண்டு" மாதிரி புது விளையாட்டு ஏதாவது ஐடியா பண்ணி இருக்காங்களோ? என்னன்னு தெரியலையே! " என்று குழப்பத்துடன் அந்த கடிதத்தை வாசிக்க துவங்கினான் இந்திரா. " உன்கிட்ட ஒரு கதை சொல்லணும்! யாரோடயோ கதை தானே அப்படின்னு சொல்லி , நீ மூடி வச்சுட்டு போயிடாத! கண்டிப்பா வாசி! " " என்னோட பேரு பூமாரி. என்னோட சொந்த ஊரு திருச்சிக்கு பக்கத்துல இருக்குற லால்குடி! எல்லா பொண்ணுங்கள மாதிரி தான் எனக்கும் நிறைய கனவுகள் இருந்தது. நிறைய லட்சியங்கள் இருந்தது. ஆனால் குடும்ப சூழல் காரணமாக என்னால பத்தாம் வகுப்புக்கு மேல படிக்க முடியல. சீக்கிரமே அப்பாவும் தவறிட்டதால எனக்கு கட்டாயப்படுத்தி என்னோட பதினெட்டாவது வயதிலேயே கல்யாணம் நடந்தது. எனக்கு கிடைச்ச புருஷன் தொடக்கத்தில் நல்லவனா தான் இருந்தான் .விளையாட்டாக தான் சூதாட தொடங்கினான். அந்த சூதாட்டம் தான் எங்க வாழ்க்கைக்கு வினையா அமைஞ்சுச்சு ! கிடைக்கிற கூலி அத்தனையையும் சூதாடியே செலவழிக்கத் தொடங்கினான் . இதுக்கு இடையில நான் கர்ப்பமானேன். அப்ப கூட அவன் திருந்தல. நாளாக ,நாளாக சூதாட்டத்துக்கு அவன் அடிமையா மாறி போய்விட்டான். அம்மா வீட்டுக்கும் எனக்கு போக முடியாத சூழ்நிலை! .என்ன பெத்தவ ஒரு அன்னாடம் காட்சி! . எனக்கு கீழே இன்னும் மூணு தங்கச்சிங்கள கரையேற்ற வேண்டிய நிர்பந்தம் என்னோட அம்மாவுக்கு. நான் திரும்பவும் அங்க போய் நின்னா அந்த குடும்பம் நாசம் ஆயிரும் .அதனாலேயே என்னோட கஷ்டத்தை எல்லாம் மனசுக்குள்ளே மறச்சுக்கிட்டு என் காலத்தை ஓட்டிக்கிட்டு இருந்தேன். போகப்போக சூதாட்ட வெறியில அவன் என்ன செய்கிறான் என்பது அவனுக்கே தெரியாம போச்சு. கடைசியில் ஒரு நாளு மாசமா இருக்கிற பொண்ணுன்னு கூட பாக்காம என்னையே பகடையா வச்சு சூதாடி , அவன் நண்பர்களுக்கு என்னை விருந்தாக்க பார்த்தான். அங்க இருந்து எப்படியோ தப்பிச்சு பொழச்சு கோயம்புத்தூருக்கு வந்து சேர்ந்தேன். வந்த இடத்துல ஒரு வயசான இட்லி கார பாட்டியோட ஆதரவு கிடைச்சது. அவங்க கூட தங்கி இருந்து , சில வீடுகளில் வீட்டு வேலை செஞ்சு என் வயிற்ற கழுவிட்டு இருந்தேன் . கடவுள் புண்ணியத்துல ஒரு அழகான பெண் குழந்தை எனக்கு பிறந்துச்சு . அந்த குழந்தையோட முகத்தை பார்த்து என் கவலை எல்லாம் மறந்துட்டு இருந்தேன். எல்லாம் நல்லா போயிட்டு இருக்குன்னு நினைச்சுட்டு இருந்த நேரத்துல, என் தலையில் இடி விழுகிற மாதிரி ஒரு நாள் என்னோட குழந்தை வலிப்பு வந்து வாயில நுரை தள்ளி மூச்சு பேச்சு இல்லாம கிடந்தா. உடனடியாக பக்கத்துல இருந்த ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் குழந்தையை சேர்த்தேன். அவளை சோதித்து பார்த்த மருத்துவர்கள் உடனடியா அவளுக்கு தீவிர சிகிச்சை செய்யணும் .அதுக்கு கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் வரைக்கும் செலவாகும் என்று சொன்னார்கள். ஆனா என் கையில எதுவும் இல்லை.! அவ்வளவு பணத்துக்கு நான் எங்க போவேன்! . உதவி கேட்டு அங்க இங்கன்னு அலைஞ்சேன் ! எங்கேயும் எனக்கு பணம் கிடைக்கல .கடைசியா நான் வீட்டு வேலை செஞ்ச ஒரு சார்கிட்ட உதவி கேட்டேன். ஒரு நிபந்தனையோட அவர் எனக்கு உதவ முன் வந்தார் . அந்த நிபந்தனை வேற ஒன்னும் இல்ல! ... என்னோட கற்பு தான். ஆனால் என்னோட குழந்தையோட உயிருக்கு முன்னால எனக்கு வேற எதுவும் பெருசா தோணல . ஏன்னா அஞ்சு அறிவு படைத்த விலங்கோ பறவையோ...இல்ல ஆறறிவு படிச்ச மனுஷங்களோ எல்லாருக்குமே அம்மா என்றாலே அன்பு தான்" ... ..இந்த வரியை படித்ததும் இந்திராவிற்கு எட்டு மாடி நிலையிலிருந்து கீழே விழுந்தது போன்று ஒரு உணர்வு அவளை கவ்வியது. அந்த நொடி தாய்மை பற்றிய அவளுடைய தவறான புரிதல் எல்லாம் சுக்குநூறாக உடைந்து சிதறியது. அவளுடைய உச்சி மண்டையில் யாரோ நறுக்கென்று குட்டு வைப்பது போல இருந்தது. அவளை அறியாமலேயே அவளுடைய கண்கள் கண்ணீரால் நிறைந்தது . தொடர்ந்து வாசிக்க தொடங்கினாள்.... "அந்த ஆளோட ஆசைக்கு பணிந்து என்னோட பொண்ணோட உயிரை எப்படியோ காப்பாத்திட்டேன்! ஆனா அன்னைக்கு நான் செஞ்ச அந்த காரியத்தோட வெகுமதி என்ன தெரியுமா ? எய்ட்ஸ் ! ஆமா எனக்கு எய்ட்ஸ் வந்துடுச்சு. பொதுவா எய்ட்ஸ் நோயாளிகள் குறைந்தது ஒரு பத்து வருஷமாவது அறிகுறிகளோடு உயிர் வாழுவாங்க! ஆனா என்னோட அதிர்ஷ்டம் ...என்னோட வாழ்நாள் ரொம்ப குறுகியதா கடவுள் வச்சுட்டாரு !இப்ப என்னோட குழந்தைக்கு ஒன்றரை வயசு . இந்த கடிதம் நான் எழுதும் போது என்னோட உடல்நிலை ரொம்ப மோசமா தான் இருக்குது. இன்னும் எத்தனை மணி துளிகள் நான் உயிரோட இருப்பேன் அப்படின்றது கூட எனக்கு தெரியாது! எனக்கு சாவரத பத்தியெல்லாம் கவலை இல்லை ! ஆனா என்னோட பிஞ்சு குழந்தையை இந்த பயங்கரமான உலகத்துல தனியா விட்டுட்டு போறோமே அப்படின்ற வருத்தம் மட்டும்தான் என் நெஞ்சில் பேயாட்டம் ஆடிட்டு இருந்தது . இந்த உலகத்துல பிறந்த ஒவ்வொரு உயிரும் உயிர் வாழுறதுக்கு கடவுள் எப்படியாவது ஒரு வழி அமைச்சிருப்பாரு ! . அப்படித்தான் எனக்கு ஒரு அம்மாவ தெய்வமா கடவுள் காட்டினார். என்னோட குழந்தையை அவங்க கிட்ட ஒப்படைச்சேன்! அவங்க என்னோட குழந்தையை காப்பாத்துவாங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு! . யாரோ முகம் தெரியாத இந்த பொம்பள என்கிட்ட எதுக்கு இந்த கதை எல்லாம் சொல்றான்னு தானே நீ நினைக்கிற இந்திரா? .... இதை வாசிக்கும் பொழுது இந்திராவின் இதயத்துடிப்பு தாறுமாறாக எகிறியது. எங்கே இதயம் வந்து வெளியே விழுந்து விடுமோ என்று நினைக்கும் அளவுக்கு அவளுடைய படபடப்பு அதிகரித்தது! கைகள் நடுங்க நடுங்க அதை தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினாள் இந்திரா. " என்னுடைய குழந்தையை என்னுடைய அரவணைப்பில் வைத்துக் கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை கைதி! துரதிஷ்டசாலி ! என் குழந்தையின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் சாவு கொஞ்ச நாள் கூட தள்ளி போகாதா என்று ஏங்கித் தவிக்கிறேன். மரணத்தை நெருங்கி கொண்டிருக்கும் எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு நொடி துளியும் என் குழந்தையின் மழலை சிரிப்பில் பொக்கிஷமாக சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறேன். "என் கதைக்கும் உனக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது இந்திரா! . இதை நீ வாசிக்கும்போது , அம்மா என்ற ஒரு உறவை நீ எப்படி புரிந்து வைத்திருப்பாய் என்று எனக்கு தெரியவில்லை. பதினெட்டு வயதை நெருங்கி விட்டாய் ... அதனால் நான் சொல்வது உனக்கு புரியும் என்று நம்புகிறேன்". " இந்திரா! அன்பு மகளே ! நான்தான் உன்னை பெற்றெடுத்த உன் தாய்! இந்த அம்மாவை மன்னித்துவிடு என் கண்மணியே! கலா தேவி அம்மாவிடம் நான் தான் உன்னை ஒப்படைத்தேன்! அவர்கள் உன்னை நல்லபடியாக வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் என் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்!! இந்த கடிதத்தை நீ வாசிக்கும் பொழுது நான் கட்டாயம் உயிரோடு இருக்க மாட்டேன்! ஆனால் உன் உணர்வில் கலந்திருப்பேன்." அதை படித்ததும் "அம்மா" என்று சத்தமாக கத்திக் கொண்டே அழ தொடங்கினாள் இந்திரா. "எப்படிப்பட்ட தெய்வத்தை நான் இத்தனை நாட்கள் தவறாக புரிந்து வைத்திருந்திருக்கிறேன் ! எத்தனை வெறுப்பு! எத்தனை வசை மொழிகள்! அம்மா என்ற பெயரை கேட்பதற்கு கூட அவள் விரும்பியதில்லை . கண்கள் கண்டிடாத தேவதை அல்லவா என் தாய்! " அந்த கடிதத்தை எடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு குமுறி குமுறி அழுதாள் இந்திரா. கடிதம் இன்னும் தொடர்ந்தது ....தொடர்ந்து வாசித்தாள் . " கலாதேவி அம்மாவிடம் உனக்கு இந்திரா என்று பெயர் சூட்டுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன் . எனக்கு மிகவும் பிடித்தமான பெயர் இந்திரா! என்னவோ தெரியாது.. அந்த பெயரில் ஒரு ஆளுமை இருக்கும் ! நீயும் ஒரு தைரியமான திறமைசாலியான பெண்ணாக வளரணும்! . ஆதரவு இல்லாமல் இருக்கக்கூடிய மனுஷங்களுக்கு நீ எப்பவும் உதவியா இருக்கணும். உன்னோட வாழ்க்கையில எல்லா நல்ல விஷயங்களும் உனக்கு சாதகமா கூடி வரணும். நீ சந்தோஷமா இருக்கணும் . கடவுளிடம் போய் என் குழந்தைக்காக நான் இதை தான் கேட்பேன்! " "இந்திரா ! இதோட அம்மா உனக்கு ஒரு ஒரு பரிசு வச்சிருக்கேன். என்னோட கடைசி நாட்களில் நான் வேலை பார்த்த பணத்தை வைத்து உனக்காக ஆசையா இந்த பொருட்களை வாங்கி இருக்கேன். எல்லாவற்றையும் கலாதேவி அம்மாவிடம் ஒப்படைத்து விட்டேன். உன் கையில் கொடுக்கும் போது அந்த கைக்கடிகாரத்திற்கு புதிய பேட்டரி போட்டு தர வேண்டும் என்று எல்லாம் கேட்டுக் கொண்டு உள்ளேன். நிச்சயம் உனக்கு பிடிக்கும்னு நம்புறேன். முடிந்தால் இந்த அம்மாவை மன்னித்துவிடு மகளே!". இப்படிக்கு உன் அம்மா பூமாரி. அந்த அட்டைப்பெட்டியில் இருந்த மற்றுமொரு உறையினை எடுத்து பிரித்தாள் இந்திரா. அதில் மாம்பழ மஞ்சள் நிறமும், கருஞ்சிவப்பு நிற‌ முந்தானையுடனும் கூடிய ஒரு புடவை இருந்தது. அதில் ஏனோ அவளுக்கு தொட்டுணர்ந்திடாத அவளுடைய தாயின் வாசம் வீசியதாக தோன்றியது. இன்னொரு சிறிய பெட்டியில் டைட்டனின் ஒரு அழகான கைக்கடிகாரம் இருந்தது.அந்த கை கடிகாரத்தின் திருவியை அவள் திருத்தம் செய்ய அந்த கை கடிகாரம் ஓட துவங்கியது." டிக் டிக் "என்ற அந்த கடிகாரத்தின் ஒலி அந்த அறை முழுவதும் ஆக்கிரமித்து அவளுடைய காது மடல்களை ஊடுருவியது . அவள் இதுநாள் வரை கேட்டு உணர்ந்திடாத தன் தாயின் தாலாட்டு குரல் ஒலியாய் அந்த கடிகாரத்தின் ஒலி அவளுக்கு ஏனோ புலப்பட்டது. "ஆரிராரிராரோ ! என் கண்ணே கண்ணுறங்கு" .....இப்படி பாடுவது மட்டுமா தாலாட்டு. இல்லையே! அந்த கை கடிகாரத்தின்" டிக் டிக்" ஒலியே இந்திராவிற்கு தாலாட்டு...அவள் தாய் அவளுக்காக பாடிய தாலாட்டு ! அழுது சிவந்த விழிகளில் ஓர் விவரிக்க முடியாத நிறைவு தோன்றியது . தன் தாயின் மடியில் தலை வைத்து கதை கேட்டதைப் போல் உணர்ந்தாள் இந்திரா. ஜன்னல் வழியே தெரிந்த புன்னை மரத்தில் கூடு கட்டி இருந்த சிட்டுக்குருவி தன் குஞ்சகளுக்கு பாசத்துடன் உணவூட்டி கொண்டிருந்தது. அதைப் பார்த்து மெய்சிலிர்த்து , உள்ளம் மகிழ்ந்த இந்திரா ....பெருமிதத்துடன் தன் தாய் வாங்கி கொடுத்த அந்த புடவையையும் , கை கடிகாரத்தையும் எடுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்! அதில் தன் தாயின் சுவாசத்தையும், வாசத்தையும் உணர்ந்தாள்! கார் மேகங்கள் சூழ்ந்திட வெளிவர மனமில்லாத சூரியன், தன் மேகப் போர்வையை இழுத்து மூடியபடி பதுங்கியிருக்க , விடாப்பிடியாய் மேகக் கூட்டங்கள் கலைய தன் ஒளிக்கீற்றுக்களை வீசத் துவங்கி இருந்தான் சூரியன். மழை கொண்டு வந்த மண்வாசத்தை போல், தாயின் கடிதம் கொண்டு வந்த புத்துணர்ச்சி இந்திராவின் உச்சி முதல் பாதம் வரை இழையோடியது. அம்மாவின் பரிசு புடவையையும் , கைக்கடிகாரத்தையும். மிடுக்காக அணிந்தவளாய் ...புத்தம் புதிய இலக்குடன், புத்தம் புதிய தேடலுடன் அறையை விட்டு வெளியேறினாள் புதிய மனிதி இந்திரா ! இனி பூமாரியின் தாலாட்டு.. இந்திராவின் செவிகளுக்கு எப்பொழுதும் மிக அருகாமையிலேயே ஒலித்துக்கொண்டே இருக்கும். முற்றும்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.