logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Maha Farwin

சிறுகதை வரிசை எண் # 266


#மூணாம்_தேசம் ராவுல வெள்ளி பூக்குற மாதிரி சனம் பெருத்த ஊருலதான் பொறந்தேன். பட்டாம் பூச்சியாட்டம் நாலு பேருக கண்ண பறிக்கத்தான் வளந்தேன்... பிடுங்கி நடாத நாத்தா பொறந்த ஊர்லதான் வாக்கப்பட்டும் தொலஞ்சேன்.. மாசி களரிக்கு மாமன் மச்சினெங்க அங்காளி பங்காளி கூடுறாப்ல பொண்ணு பாக்கவே பாதிவூரு சனங்க வந்துச்சுக... தாம்பூலம் மாத்தயிலதான் சனுச்ச மறு மாசமே தங்காம போனதுகணக்கா காவூரு சனமா போச்சு.... கழுத்த நீட்டும் போது தல கணக்குக்கே மாப்ளயும் பொண்ணும்னா பார்த்துக்க.... அப்பவே எங்கப்பு சூதானமா இருந்துச்சுனா எங்கூர்லயே பாதி கொல்லைக்கு சொந்தக்காரியா இருந்திருப்பேன் என் தலயெழுத்தும் நல்லாதான் இருந்து தொலஞ்சிருக்கும். பொசக் காத்துக்கும் குத்துக்கல்லாட்டம் நிக்குற எங்கப்பு எப்படியோ மதிய எழந்துருச்சு.... மாய மந்தரத்த போட்டுதான் கட்டிக்கிட்டு போனாங்கெனு எங்காத்தா வேற தனி ஒப்பாரி. வேலிய தாண்டி போற கொடியாட்டம் காட்டு முள்ளுள படருனு பழிச்சொல்லுல விழுந்துட்டேன் போல... ஒங்கொப்பனாலதான் நாலு மாங்கா நாலு காசுனு தொங்குன தாலியத்து வீசுனேன். நாலு கன்னி பூ நறுக்கவே கத்திய தேடுற சிறுக்கிக்கு இம்புட்டு தெனவாட்டு எந்த சாமி தந்துச்சோ... ஒருவேளை வருசாவருசம் மாத்திக்கட்டிருந்தா பெலத்தோட தொங்கிருக்கும்... கருங்கெடா தோலு நம்ம சடையாண்டி கண்ணு... வைக்கோப்போர் மாதிரி படர்ந்த தேகம் வாடில வெளியாகுற காளையோட நட...இதுல எதப் பார்த்து மயங்கினாளோ சக்களத்தி சிறுக்கி.. அவள ஒங்கப்பன் கூத்தியாளா வச்சிருக்கானு தெரியும்போது நீ வயித்துல நாலு மாசம். தல புள்ளைக்கு கூட என் மொகத்துல அம்புட்டு செழிப்பு இல்லைனு ஊரே சொல்லுச்சு.. ஓ நொக்காளுக்கு அஞ்சு ஆறு இருக்கும்னு பொன்னரசி தனபாலுட்ட புலம்ப... எங்கப்பனோடேயே நீ நல்ல பொழப்பு பொழச்சிருந்தா நாமளும் அந்தூர்லயே காடுகர வாய்க்கா வரப்பு சொந்தம்பந்தமுனு வாழ்ந்திருப்போம்னு... மேக்கால கால நீட்டிக்கிட்டு, கொண்டு வந்த சீலையில ஒன்ன காணலயேனு கட்டப் பையில தேடிக்கிட்டிருந்த வயித்துப்புள்ளக்காரி நாகவள்ளி சொன்னதுதான் குத்தம்.... நடு தூணுல சாஞ்சு பேசுனவ.... குரல ஒசத்தி ஈன்ட மாடாட்டம் எழும்பி... முந்தானைய உதறிக் கட்டி... எடுபட்ட சிறுக்கி என்னடி சொன்ன ... நாலுவா பருக்க வயித்துக்கு இல்லாம போனாலும் சூடு சொரணைய இழந்தாடி வாழணும் ... ஒருத்தட்டையில சோத்தப் போட்டு உண்ணலாம்... உடுப்புகள மாத்திக்கலாம்... புருசன பங்குக்கு கொடுத்து அப்படி பவுமான வாழ்க்கை தேவயானு சாயங்கால பொழுதும் அதுவுமா மாடத்துல விளக்கயும் ஏத்தாமா... அடைய வந்த கோழிகள பொட்டியப் போட்டும் கவுத்தாம மாடு கன்டுகளுக்கு ரெண்டு கூளத்தயள்ளி காட்டாம ஊரையே இருளு வந்து அப்பி நாட்டாமை பண்ணுற நேரத்துலயும் இவக் கூப்பாடு ஓயல.... வெறுஞ் சிறுக்கி வெத்தச் சிறுக்கியா நண்டாணும் சுண்டாணுமா உங்கள நா தூக்கியாரும் போது மனசு நிறைய வீராப்பு மட்டும்தான் இருந்துச்சு... அண்ட ஒண்ட இடமில்லதா பிச்சக்காரியாதான் ஊர உறவ வெறுத்து இங்க வந்தேன்.... ஈன புத்தி நீங்க பசியில வாடுறத கண்டு ஆத்துல குளத்துல விழுந்து சாகதான் தோணுச்சு... இம்மாம் பெரிய ஊர்ல குளத்தையுங் காணோம் குட்டையுங் காணோம்.... ஏன் நிலமைய விட மோசமாதான் கெடந்துச்சு ஆறு.... கண்ணக்கட்டி காட்டுல விட்டது மாதிரி நின்னவள... உங்கள கட்டிக் காப்பாத்த எத்தனையோ வழி இருக்குனு செல்லய சேத்து ஒரே அடிதான் அடிச்சா அந்த மவராசி.... ஏன் கலங்கி நிக்குற என்ன ஏதுனு ஒன்னும் கேட்கல... இந்தாடிமா இது பொறம்போக்கு நிலம்தான் இத்துப்போன குச்சுதான் ஓ மனசுக்கு ஒப்புனா ஆக்கி பொங்கி புள்ளைகள காப்பாத்திக்கனு சொன்ன சொல்லுலதான் மறு பொறப்பா உசுர எழுப்பி உங்கள ஆளும்பேருமாக்குனேன். புள்ளகுட்டிக்காரினு தெரிஞ்சும் ஒருத்தன் வாழ்க்க தாரேனு வந்தான். கூட சேர்ந்து வேலை பார்க்குற ஆட்களும் சொல்லுச்சுக...ஒத்த வயசுதான் ஒனைய போல நாதியத்தவன்தான்.... அரசி கட்டிக்கடி நல்லவந்தான் நல்லா வச்சுக் காப்பாத்துவானு... முன்னயும் கெட்டு பின்னயும் கெட்டு போயிட்டா என்னத்த பண்ணுறது.... எனையவே நம்பி இரு உசுருக இருக்கே... இன்னைக்கு இனிக்க இனிக்க பேசுறவன் நாளைக்கு ஒரு சொல்லு சொல்லிட்டா... அசிங்கப்பட்டு அவமானப்பட்டு வாழுற நிலமையால போயிடும்னு தனி மனுசியானாலும் வைராக்கியமா வாழ்ந்து சாகணும்னு மனசுக்குள்ள போராட்டம். மனக்கணக்கு எல்லாம் மருவாத கெட்ட உடம்புக்கு புரியுமா என்ன? ஆசைய அள்ளி தீ மூட்டும்... கெட்ட கெட்ட எண்ணத்த எல்லாம் சொசகமான சொகம்னு கையப் புடிச்சு இழுக்கும். ஊரு ஒலகத்துல யாரும் செய்யாததானு நியாயம் பேசி தீர்ப்பு சொல்லும்.. ஆச ஆசையா வளர்த்த கெடவா நேந்து விட்டத்ததனமா ஆசைகள எல்லாம் மொத்தமா அறுத்தெறிஞ்சிட்டேனு சொல்ல .... நாகவள்ளி ஆத்தா பொன்னரசிய கட்டி அழுதமேனிக்கே.... வெளித் திண்ணையில பாய விரிச்சு காஞ்ச வயிறும் வெறும் வயிறுமா படுத்துட்டாளுக.... ஆத்தாக்காரி சொன்ன சொல்லுக எல்லாம் நாகவள்ளிய உறங்க விடாம காதுக்குள்ளார கத்துதுக. இப்ப அவ நெனப்பெல்லாம் தம்பிக்காரன் தனபாலு செஞ்ச கூத்த நெனச்சுதான் மனசு கூத்தாடுது.... பொன்னரசியோட இளைய மகன்தான் தனபாலு! இப்பதான் அரும்பு வெடிக்க தொடக்காலு வயிறு நெஞ்சுனு அருகம்புள்ளு படர்ந்தாப்ல இளந்தாரிங்ற அடையாளம் ஒன்னு கூடி வருது. பள்ளிக்கூடத்துக்கும் போகாம ஊடமாட ஒத்தாசைக்கும் வராம இப்படியா உங்கவும் திங்கவுமா வீட்டுலயே அட காத்துக் கெடப்பனு அவனயும் ரெண்டு வசவுனாலும் தெனமும் கொடுக்காம இருக்க மாட்டா பொன்னரசி.... கூ..கூனு கூப்பாட்டு போட்டவளுக மெதுவா குறுக்கச் சாத்தவும்.. பாலுக்கு காத்திருந்த பூனக்குட்டியா மசக்ககாரி சீலய எடுத்து கட்டி அழகு பார்க்குறான் தனபாலு.... பசியில எழுந்தாளோ சொப்பனங் கண்டாளோ.. பாதகத்தி மவ காண கூடாதத ஓரஞ்சாரமா குறுகுறுனு ஆத்தா பொன்னரசிப் பார்த்துட்டா.... பேயக் கண்ட மாதிரி ராவெல்லாம் தூக்கமில்ல பொன்னரசிக்கு.... தீனி போடாம படுத்திட்டியேனு மயிலயும் செவலயும் ஊட ஊட கத்துதுக.... முச்சந்தில விடுற ஊளை இங்க வர கேட்க.... பொரண்டு பொரண்டு படுக்குறா.... கண்ணுல தூக்கம் தங்காம மனசுல துக்கம்தான் மிஞ்சுது..... பொழுது விடிய தலவாசல தூத்து மாடுகன்டுகள அவுத்து கட்டி சாணத்த அள்ளிவாருன நாகவள்ளி இப்பதான் ஆத்தால தேடுறா..... காங்கல.... சொல்லாம கொல்லாமா எங்க போயி தொலஞ்சுச்சுனு முனகலோட கால்கடுக்க போயி ரெண்டு கிலோ சர்க்கரையும் அஞ்சு கிலோ கோதுமையும் வாங்கியாந்த நாகவள்ளி தானாப் பேசுறா ஐயோ,... ஒரு சொட்டு எண்ணெய்யில்லனு... ரேசன் கடைக்கு போயிட்டு வந்ததுல மிச்சக் காச பாக்குறா... வெளி நிலயில கையத் தொழாவி அகப்பட்ட காசுகளோட நாடாரு கடையில அப்பு வெரசா கொடுங்க இனி போயிதான் சமைக்கணும்.... வெரசா வெரசாணு சொல்லிக்கிட்டே மூட்ட மூட்டையா ரக ரகமா வெளியில இருக்குற அரிசி சாக்கயும் தலைக்கு மேல தொங்குற காப்பித் தூளு சீயக்கா தூளயெல்லாம் நாலஞ்சு பார்வ பார்த்த பின்னாடிதான் அவ கேட்ட சாமான நீட்டுனாரு அப்பு.... சில்லறைக்கும் நிக்காம சொச்சம் தாரேனும் சொல்லாம நாலு காலுப் பாய்ச்சலா முக்கு ரோட்ட கடக்க..... குறுக்கமறுக்க நாக் குட்டி ஒன்னு இவக் கூடவே ஓடியாருது. காப்படி கஞ்சிய காய்ச்சி வெஞ்சனத்துக்கு தேட... எனக்கு ஒன்னுமில்லையானு வாள ஆட்டிக்கிட்டே கேட்குது புதுசா வந்த நாக்குட்டி... நாலு பருக்கையில கருவாட்ட பிசஞ்சு இந்தானு சொல்லிட்டு மத்தமத்த வேலைகள பார்க்க... உச்சி பொழுது நெருங்க அசலூரு கோடங்கியோட வந்தா பொன்னரசி கொட்டத்துல ஆடு மாடுகளுக்கு தண்ணியக் காட்டுற தனபால கையழச்சு வா சாமி செத்த உக்காருனு சொன்னவ.... சூடம் சாம்பிராணி பூ ஊதுபத்தினு நடு வீட்ல வச்சு....ராவுல கண்டத கோடங்கிட்ட சொல்ல.... தனபாலு மொகத்துல பயமும் வெட்கமும் ஒன்னா சேர...முத்து முத்தா வேர்வ கொட்டுது.... எல்லா தெய்வத்தயும் அழச்சு கோடங்கி பாட்டா பாட பாட... மந்தையிலயே திரிஞ்ச கெடவா கொட்டத்துல கட்டுன மாதிரி சுத்திமுத்தி வெறிக்க பாக்குறான் தனபாலு... சுண்ணாம்பையே ஆயுளுக்கும் காணாத மதுலு கெக்களிப்பு போட்டு ஈ! ஈயினு!! முகத்தக் காட்டுது.. அம்புட்டு தெய்வத்தையும் கோடங்கி அழைக்க அழைக்க ...நம்மல எந்த சாமி காப்பாத்தப் போகுதுனு பயந்து அஞ்சுரான் தனபாலு.... உக்கிர தெய்வங்கயெல்லாம் உத்தரவு தர பயந்த கோளாறுனு சொல்லிடுச்சு கோடங்கி... இப்ப தனபாலு மூச்சு பேச்சில்லாம நிக்குறான்.நெற சொம்பு தண்ணிய மூஞ்சில அடிச்சு தாட்டியமா இருடாப்பானு கோடங்கி சொல்ல.... காணிக்கைய செலுத்தி கோடங்கிய வழியனுப்புறா பொன்னரசி. அக்காகாரிய கட்டியழுறான் தனபாலு....பனிக்குடம் ஒடஞ்சது போல அழுகைய கொட்டி,.. நான் ஆணுலயும் பொண்ணுலயும் சேத்தியில்லாம இருக்கேனு சொல்ல... மார் கட்டி அவஸ்தப்படும்முன்ன மாரடைக்குது நாகவள்ளிக்கு... நாம கண்டதெல்லாம் சரிதானு மனசுல நினச்சவ என்னத்தச் சொல்ல எப்படி தேத்த.... ஊரு சனம் என்ன பேசும்னு செத்த பொணமா நிக்க எல்லாத்தையும் கேட்ட பொன்னரசிக்கு உண்ம தெரிஞ்சுப் போச்சு.... ஆணொன்னு பொணொண்ணு ஊரெல்லாம் பெரும பீத்துனவ நெஞ்சுக்கூடு இத்தச் சுவரா இடிஞ்சு போச்சு... உசுரோட புருசனையே கொடுத்தவளுக்கு இத தாங்க முடியல... ஈரக்கொல நடுங்க தனபால பாக்குறா பொன்னரசி.... எனைய ஏம் போக்குக்கு விட்டுடுத்தா... நாதியத்தக் கழுதையா நா போறேனு எழவு வீடாட்டம் ஒப்பாரி வைக்கிறான்... வாப் பூட்டு போட்டமாறி நின்ன பொன்னரசி... நாலெட்டு வைக்கவே கை கால்னா நடுங்க ஏன் சாமி கலங்குற நம்ம தலமாடு காக்குற சாமி தப்பொன்னும் செஞ்சிடாதுனு சொன்னவ... மவக்காரிய அழச்சு உச்சிலயிருந்து உள்ளங்கா வர தடவி புருசனோட காவந்து பண்ணி நீ இருந்துக்கனு.... வயித்துல நாலு மாசமா ஆணா பொண்ணானு தெரியாம சுமந்துட்டு வந்தத.... இப்ப குமரியா கூட்டிக்கிட்டு வேத்தூருக்கு கிளம்பிட்டா மஹா பர்வீன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.