சிறுகதை
மயில் குயில் ஆச்சுதடி
தஞ்சாவூர்க்கவிராயர்
சிறுவயதில் விடுமுறை தினங்களில் கிராமத்திலிருந்து தஞ்சாவூர் கீழவாசலில் இருக்கும் பாட்டி வீட்டுக்குப் போவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஒரே காரணம்: வர்ணபாஸ்!
முக்கால் டிரவுசர், கிழிந்த பனியன், பரட்டைத்தலை உடம்பெல்லாம் வர்ணத் திட்டுகள். ஆடு மாதிரி அப்பாவிக் கண்கள். அம்மைத் தழும்பு முகம். மயில் டான்ஸ் ஆடுவதில் தஞ்சாவூரில் அவனை மிஞ்ச ஆள் கிடையாது.
என்னைப் பார்த்ததும் அந்த ஆட்டுக் கண்ணில் மின்னல் மாதிரி ஒரு சந்தோஷம் தெறிக்கும். வாயால் பேசவே மாட்டான். கண்களாலும் சைகைகளாலும்தான் பேசுவான்.
தண்ணீர்த்தொட்டி சமீபம் இருந்த சிறிய குடிசை பாட்டிவீடு பக்கத்திலிருந்த பெரிய குடிசை. அதுதான் கரகாட்டம், புலிவேஷம், மயிலாட்டம், ரிக்கார்டு டான்ஸ், ஒயிலாட்டம் கலைஞர்கள் காண்ட்ராக்கு கம்பெனி புலி, மயில் படங்களுடன் ஒரு போர்டு பூவரசமரத்தில் கட்டியிருக்கும்.
வர்ணபாசுக்கு வேஷமே வேண்டாம். நடந்தாலே மயிலின் ஒய்யார நடை நடந்துதான் போவான்.
“எலேய்! மயிலு! லூசுப்பயலே! என்ன வேணும்னு வாயைத்திறந்து சொல்லேண்டா” என்பார்! மளிகைக்கடைக்காரர்.
மளிகைக் கடையில் அடுக்கியிருக்கும் சாமான்களை எல்லாம் மயில் மாதிரியே வெடுக் வெடுக்கென்று திருப்பிப் பார்ப்பான்.
சைகைகளாலேயே சாமான்களை வாங்கிவிடுவான். அளவுகளைக் காட்டவே விரல்பாஷை ஒன்று வைத்திருப்பான்.
பெரிய வளர்ந்த குழந்தைதான் வர்ணபாஸ். என்னைப் பார்த்ததுமே சிரித்துக் கொண்டே கடைக்கு ஓடிப்போய் தேன்மிட்டாய் வாங்கித் தருவான்.
தேன்மிட்டாய் மாதிரிதான் அவன் உருண்டைக் கண்களும் இருக்கும். பிற்காலத்தில் நான் எந்தக்கடையில் தேன்மிட்டாயைப் பார்த்தாலும் தன் உருண்டைக் கண்களால் வர்ணபாஸ் என்னைப் பார்ப்பது மாதிரியே இருக்கும்.
காலை விடிந்ததுமே பக்கத்து வீட்டிலிருந்து “எலேய்! வர்ணபாசு! எந்திரிடா! டீ வாங்கிட்டுவாடா...” என்ற குரல் கேட்கும்.
வர்ணபாஸ் கையில் பெரிய கூஜாவுடன் மயில்நடை நடந்துபோவான். அந்த வீட்டில் அப்படி ஒரு பழக்கம். காலை எழுந்ததுமே டீ முகத்தில்தான் விழிப்பார்கள்.
பழைய ஜமக்காளத்தில் தெரு முற்றத்தில் மயில் தலைகள், மாட்டுத்தலைகள் ப்ளாஸ்டர் ஆப் பாரிஸ் மாவில் பிசைந்து பிசைந்து உருவாக்குவதிலும் வர்ணம் பூசுவதிலும் ஈடுபட்டிருப்பான் வர்ணபாஸ்.
பூவரச மரத்திடியில்தான் இந்த வேலை நடக்கும். நான் திண்ணையில் உட்கார்ந்தபடி வேடிக்கை பார்ப்பேன்.
மயில் தலைகள் அவன் கையால் செய்வதுபோலவே இருக்காது. அவன் கையிலிருந்து பிரசவிப்பது போலவே இருக்கும்.
வர்ணம் பூசிய பொம்மைகளை கிட்டேகுனிந்து பார்ப்பதும், எட்டநின்று பார்ப்பதுமாய் இருப்பான் வர்ணபாஸ்.
அந்த வீட்டுக்கு டான்ஸ் பார்ட்டியை புக செய்ய வருபவர்கள் அட்வான்ஸ் கொடுக்கும்போது மயில் டான்சு கட்டாயம் வேணும் என்பார்கள். அதைக்கேட்டு சிரித்தபடி கோணிக்கொண்டு நிற்பான் வர்ணபாஸ்.
சிரிப்பா அது? மனிதர்களால் அப்படி சிரிக்கவே முடியாது. மயில் சிரிப்பதைப்போல் இருக்கும்.
தெருக் குழந்தைகளுக்கு வர்ணபாஸை மிகவும் பிடிக்கும்.
பூவரச இலையில் பீப்பீ செய்து கொடுப்பான்.
எத்தனை தடவை, எத்தனை குழந்தை கேட்டாலும் செய்துகொடுக்க மறுக்கவே மாட்டாள்.
நாங்கள் அவன் செய்து கொடுக்கும் பூவரச இலையில் நாதசுரம் ஊதினால் பீப்பீ என்று ஒரே சத்தம்தான் கேட்கும். அவனோ பூவரச இலை நாதசுரத்தில் வாராயோ தொழி வாராயோ என்ற பாட்டையே வாசித்துவிடுவான்.
அவனைச் சீண்டுவதில் தெருக் குழந்தைகளுக்கு தனி குஷி. ஒருநாள் எங்கிருந்தோ ஒரு ஓணானைப் பிடித்து நூலில் கட்டி தரதரவென இழுத்துவந்தார்கள். வர்ணபாஸ் ஓணானை விட்டுவிடுமாறு எவ்வளவோ மன்றாடியும் கேட்கவே இல்லை.
ஓணான் பரிதாபமாகப் பார்த்தது வர்ணபாசு பார்ப்பது மாதிரியே இருந்தது.
ஓடிப்போய் எல்லோருக்கும் கடையில் தேன்மிட்டாய் வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தான்.
ஓணானுக்கு விடுதலை கிடைத்தது.
உயிர்களிடத்து அன்பு வேணும் என்ற பாரதியார் பாட்டை எங்கள் தமிழ் வாத்தியார் அடிக்கடி பாடுவார். அதன் அர்த்தத்தை வர்ணபாசுதான் எனக்குப் புரியவைத்தான்.
கோயில் திருவிழா, பல்லக்கு ஊர்வலங்கள் எல்லாம் பழைய மாரியம்மன் கோவில் ரஸ்தா வழியாகத்தான் போகும் ஊர்வலத்தில் மயில் டான்சு, குறவன் குறத்தி, காவடி ஆட்டம் எல்லாம் களை கட்டும்.
மயிலாட்டம் வந்துவிட்டாலோ விசில் தூள்பறக்கும். பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் மடங்கிய றெக்கையில் ஒட்டியிருக்கும் கண்ணாடி ஜரிகை அலங்காரம் டால் அடிக்கும். நீலமும் பச்சையுமாய் கழுத்து மின்னும். தலைப்பகுதியில்ஒரு பச்சை நிறத்துண்டு தொங்கும்.
மயில் நடந்துவந்து வட்டமாக தனக்கான மேடையை உருவாக்கும். மக்கள் விலகி வழிவிடுவார்கள். உள்ளே தான் நிர்மாணித்த தரைவட்டத்தை சுற்றிவருவதே கம்பீரமாக அருக்கும்.
உலகத்திலேயே கம்பீரமான பறவை மயில்தான் என்று எனக்குத் தோன்றும்.
தோகை விரித்து ஆடத் தொடங்கியதும் அதன் கால்சலங்கை சத்தமும் மேளக்காரர்களின் தாளலயமும் கேட்டு, மக்கள் பெருத்த ஆரவாரம் செய்வார்கள்.
ஆண் மயிலுக்குத் தோகை உண்டு. பெண் மயிலுக்குத் தோகை கிடையாது. மழை வருவது அறிந்து மயில் அகவும் ஆடும் என் மனசுக்குள் நான் படித்த பள்ளிக்கூட பாடல் வரிகள் ஓடும்.
ஒரு நாள் பக்கத்து வீட்டில் என்னவோ சத்தம் எட்டிப்பார்த்தேன்.
டேய் வர்ணபாசு இப்படி மயிலு மாதிரி நடக்காதடா என்று வர்ணபாசுவின் அம்மா திட்டுவது கேட்டது.
முதல் தடவையாக வர்ணபாசு வாய்திறந்து பேசியதை அன்றைக்குத்தான் கேட்டேன்.
என்னை ஏன் மயிலாப் பெத்தே?
விக்கித்து நின்றாள் அவன்தாய்.
எல்லார் மாதிரியும் எனக்கு மனுசப் பொறப்பு கெடைக்கலியே மயிலாப் பொறந்தது என் தப்பா? மயிலுதான் நமக்கு சோறு போடுது ம்...ஆமாம்...-தேம்பினான்.
ஓடிவந்து அவனைக் கட்டிக் கொண்டாள். இரண்டுபேரும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு அழுதார்கள்.
திண்ணையில் காயவைத்திருந்த மயில்களின் கழுத்து அழுகையால் புடைத்திருப்பது போல் எனக்குத் தோன்றியது.
டேய் நீ மயிலாவே இருடா எங்களமாதிரி மனுசங்களா இருக்க வேணாம் நீ என் செல்ல மயிலுடா என்று அவனைக் கட்டியணைத்து கேவினாள் அந்தத்தாய்.
அம்மா ஒருநாள் அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது வர்ணபாசுவின் பெயரும் அடிபட்டது.
“நம்ம வர்ணபாசுவைத் தெரியுமில்ல?”
“ஆமாம் மயில்டான்ஸ் ஆடுவானே அவன்தானே?என்ன அவனுக்கு?”
“அவனுக்கு கல்யாணம்னாங்க...”
“அவனுக்குகூட பொண்ணு குடுக்க ஆள் இருக்கா?”
“நீங்க வேற...கல்யாணமே முடிஞ்சு போச்சு!”
அம்மா சொன்ன விளக்கம் எனக்குப் புரிந்தது
நான் எட்டாங்கிளாஸ் பையன் ஆச்சே!
“கீழ அலங்கம் பீரங்கி மேடைக்கு எதுத்தாப்ல இவங்க சொந்தக்கார மனுஷாளோட பொண்ணு கரகாட்டம், காவடி ஆட்டம் எல்லாம் நல்லா ஆடுமாம்! அங்க இருக்க ரெளடிப்பசங்க சுத்தி சுத்தி வரானுங்களாம்! வர்ணபாசு மாதிரி நலல்வனுக்கு கட்டி வச்சுடணும்னு ஆசைப்பட்டு கல்யாணம் முடிச்சுட்டாங்களாம்!”
அடுத்த விடுமுறைக்குப் பாட்டி வீட்டுக்குப் போனபோது வர்ணபாசுவின் புதுப் பெண்டாட்டியைப் பார்த்தேன்.
குண்டாக, குள்ளமாக இருந்தாள். முகம் லட்சணமாக இருந்தது. கன்னங்களில் ரோஸ் சாயம் மிச்சமிருந்தது. கண்ணில் கருநீலச் சாயம் பளபளத்தது. முகம் சற்றே கடுகடுவென்று இருந்தது.
வர்ணபாசு முகமும் வாடி இருந்தது.
பாட்டிதான் அவனைத் திட்டியது.
“வர்ணபாசு! லூசுப்பயலே! உனக்கு யாரும் சொல்லலியா? புதுப் பொண்டாட்டிக்கு லாலா கடை அல்வா வாங்கித்தராம...பெட்டிக்கடை தேன் முட்டாயி வாங்கி கொடுத்தியாமே! அந்தப் புள்ள சொல்லிட்டு அளுவுது!”
வர்ணபாசு வெட்கத்துடன் தாவித்தாவி ஓடிப்போய்விட்டான்.
எட்டாங்கிளாஸ் பாஸ் பண்ணிவிட்டேன்.
வர்ணபாசுவிடம் சொன்னேன். தேன் மிட்டாய் வாங்கிக் கொடுத்தான்.
பூவரசு இலை பீப்பீயில் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குத் தம்பி! என்ற எம்.ஜி.ஆர். பாடலை வாசித்தான்.
வர்ணபாசுவின் மனைவி எங்கேயோ போய்விட்டு அப்போதுதான் உள்ளே நுழைந்தாள்.
பாவம்! வர்ணபாசுவின் வாயிலிருந்து பூவரச நாதசுரத்தைப் பிடுங்கி பிய்த்துப் போட்டுவிட்டுப் போய்விட்டாள்.
பீப்பீயை மட்டுமல்ல வர்ணபாசுவின் வாழ்க்கையையும் பிய்த்துப் போட்டுவிட்டுப் போய்விட்டது அந்தப் பெண்.
மூன்று மாதம்கூட ஆகவில்லை.
ரெட்டிபாளையத்தில் யாரோ ஒரு சாராயக் கடைக்காரனைக் கட்டிக்கொண்டு குடித்தனம் நடத்துகிறதாம் அந்தப் பெண். மனசு வலித்தது.
தினம்தோறும் அடி உதைதானாம். பாட்டியிடம் சொல்லிவிட்டு அழுதாளாம்.
“வர்ணபாசு ரொம்ப நல்லவன்மா! விதரணை தெரியாதவன்! அவனைவிட்டு ஏன் போனே?” என்று பாட்டி நன்றாகத் திட்டிவிட்டு வந்ததாம்.
ஒத்தக்கை அல்லாப் பண்டிகை கீழவாசலில் வெகு விமரிசையாக நடக்கும். இசுலாமியர்களும் இந்துக்களும் சேர்ந்து நடத்தும் பண்டிகை.
ஒத்தக்கை அல்லா ‘பஞ்சா’வைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். கரகம் மாதிரி அதில் வெட்டுண்ட கையின் உருவம் பொறிக்கப் பட்டு மாலை சூட்டி தூக்கிவருவார்களாம்.
யாரோ ஒரு இசுலாமிய சேனாதிபதி எதிரிகளிடமிருந்து தஞ்சை மக்களைக் காப்பாற்றப் போராடியதில் அவன் உடல் சிதைக்கப்பட்டு கைமட்டும் கிடைத்ததாகவும், அந்தக் கையை பாஞ்சாவில் வைத்து கீழவாசல் ஜனமே கொண்டாடியதாம். ஆண்டுதோறும் அந்த சேனாதிபதி நினைவாக ஒத்தக்கை உருவம் செய்து எல்லா மதத்தவரும் பண்டிகை கொண்டாடுவது வழக்கம் என்று ஒரு கதை பாட்டி சொல்வார்.
மயில் டான்ஸ், கரகாட்டம், ஒயிலாட்டம், காவடி ஆட்டம், புலிவேஷம் என்று அமர்க்களமாக வந்தது ஒத்தக்கை அல்லா ஊர்வலம்.
முண்டியடித்து எட்டிப்பார்த்தேன்.
மயில் மெதுவாக நடந்துவந்து ஓரமாக ஓடிச்சென்று கும்பலை வட்டமாக நிற்க வைத்தது.
பின்னர் மெதுவாக நடந்து, கூட்டத்தினரை இப்படியும் அப்படியும் பார்த்தது.
அதன் பார்வை கரகாட்டக் கும்பலிடம் நிலைத்தது.
அங்கே அவன் பெண்டாட்டி கரகத்துடன் சலங்கை குலுங்க கால்மாற்றி நின்று கொண்டிருந்தாள்.
சட்டென்று திரும்பிய மயில் குபீரென்று தாவிக் குதித்து வட்டத்தின் நடுவில் நின்று தோகையை ஒருமுறை சிலிர்த்தது.
தலையை ஒரு சழற்று சுழற்றியது.
இதுவரை மக்கள் பார்த்திராத மயிலின் ருத்ர தாண்டவமாக ஆடத்தொடங்கியது.
மக்கள் கூட்டம் ஒருவர்மீது ஒருவர் சரிந்தது.
மேளக்காரர்களுக்கு எங்கிருந்தோ ஆவேசம்.
மயில் இப்போது வானத்துக்கும் பூமிக்குமாக நின்று ஆடியது.
தோகையின் தாண்டவம் வான் முகட்டைத் தொட்டது போல் கூட்டமே தன்நிலை இழந்து மனோவசியத்தில் கட்டுண்டு நின்றது.
கரகாட்டக்கும்பலில் வர்ணபாசின் மனைவியை இரண்டு ஆண்கள் சேர்ந்து தடுக்க முடியவில்லை.
மயில் ஆடியது. அண்ணார்ந்து பார்த்தால் வானமே ஆடியது. திரும்பிய பக்கமெல்லாம் திசைகளும் ஆடின.
மெல்ல மெல்ல ஆட்டம் நின்றது.
மயில் நடந்தது கம்பீரமாக ஜல்ஜல் லென்று உலகையே வென்றதுபோல் கழுத்தை உயர்த்தி நடந்தது.
அந்தப் பெண் கரகாட்டக் கும்பலிடமிருந்து விடுபட்டு ஓடிவந்து அவன் காலில் விழுந்தது.
மயில் குனிந்து அவள் தலையை தன் கூரான அலகால் தொட்டது!
மக்களிடம் ஒரே ஆரவாரம்.
மறுநாள் காலை
பக்கத்து வீட்டு திண்ணையில் காயவைத்திருந்த மயில் கழுத்துகளின் மீது காலை வெயில் தன் தங்க கிரணங்களால் பொன்முலாம் பூசியது.
மயில் முகங்களில் ஒரு தனிக் களை சுடர்விட்டது. சந்தோஷக்களை.
வீட்டு முற்றத்தில் பூவரச நிழலில் விரித்த பழைய ஜமக்காளத்தில் வரண்பாசு பெண்டாட்டி தலையை மடிமீதுவைத்து பேன்பார்த்துக் கொண்டிருந்தான்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்