Savitha
சிறுகதை வரிசை எண்
# 264
சொப்பு சாமான்.
புஷ்பாக்கா எங்கள் வீட்டில் ஒரு மாதம் தங்கியிருந்தாள். அக்கா என்றால் சின்னப்பெண்ணில்லை. அம்மாவை விட ஒன்றிரண்டு ஆண்டுகள் இளையவளாயிருக்கக் கூடும். அப்போதெல்லாம் அத்தை, ஆன்ட்டி என்றெல்லாம் கூப்பிடும் வழக்கமில்லை . அதனால் பக்கத்து வீட்டுப்பெண்கள் அம்மாவுடன் வேலை பார்ப்பவர்கள் எல்லாரும் அக்காதான். முதலில் அவளை புஷ்பா என்று மட்டும்தான் அம்மா சொல்லியிருந்தாள். புஷ்ப மேரி என்று அப்புறம்தான் தெரிந்து கொண்டோம். பாட்டிக்காக அம்மா அப்படி சொல்லியிருந்தாள் என நினைத்துக் கொண்டேன். ஆனால் பாட்டிக்கெல்லாம் அம்மா பயப்படுகிற ஆளில்லை. அப்படி நினைத்துக் கொள்ள வேண்டாம். ஆனால் எதற்கு பயப்பட வேண்டுமோ அதற்கெல்லாம் அம்மா பயப்படவே மாட்டாள். ஒன்றுமில்லாத உதவாக்கரை விஷயங்களுக்குதான் அதிக முக்கியத்துவம் தருவாள். சட்டென சிறிய பாத்திரங்களைக் கண்டால் வாங்கி விடுவாள். வீட்டில் இருக்கும் அத்தனை பாத்திரங்களும் சொப்பு பொம்மை விளையாடும் அளவுதான் இருக்கும். வீட்டில் நாலுபேர் வந்தால் பெரியதாக சமைக்கக் கொள்ள பாத்திரங்களே இருக்காது. பாட்டி தலையில் அடித்துக் கொள்வார். இதில் மட்டும் அப்பாவும் பாட்டியும் சேர்ந்து கொண்டு அம்மாவை திட்டிக் கொட்டுவார்கள். அம்மா பாட்டிக்கும் சேர்த்து நான்கு புடவைகள் வாங்கி வருவாள். பாட்டி அதற்கப்புறம் லேசாய் திசை மாறுவார். சீரியசான எல்லா விஷயங்களிலுமே அம்மா இப்படித்தான். பாட்டிக்கு எதற்கு கோபம் வரும் எனவும் அம்மாவுக்கு எனக்குப் புரிந்த அளவு கூடப் புரியாது. ஆனால் இந்தக் கதை அம்மாவைப் பற்றியதல்ல. புஷ்பாக்காவைப் பற்றி. புஷ்ப மேரியக்காவைப் பற்றி.
அக்காவின் சொந்த ஊர் அஞ்செட்டி. யானையெல்லாம் கூட வருமாம் தோட்டத்திற்கு. குழந்தைகளை எல்லாம் கணவனிடம் விட்டு விட்டு வந்திருந்தாள். கணவன் ஒரு விவசாயி, அங்கிருக்கும் நிலம், ஆடு, மாடெல்லாம் விட்டுவிட்டு ஒருநாள் கூட நகர முடியாதாம். தேனை ஒரு பிராந்தி பாட்டிலில் ஊற்றி பத்திரமாய் எடுத்து வந்திருந்தாள். அந்த ஊரைப்பற்றி பெருமையாக சொன்னாள். அப்போதுதான் அம்மாவுக்கு ஊர்ப்பாசம் என புரிந்தது. அம்மா கொஞ்சநாள் அந்தப்பக்கமெல்லாம் வேலை பார்த்திருக்கிறாள். அதனால் சுமுகமாக உறவேற்பட்டு விட்டது. இப்போதிருக்கும் அம்மா ஆபிசிற்கு புதிதாக பதவி உயர்வு கிடைத்து வந்திருக்கிறாள். தங்க இடமில்லாததால் ஆபிசில் யார் ஏமாந்தவள் என எல்லாரும் கைநீட்டிய என் அம்மாவுடன் வந்து சேர்ந்து கொண்டாள். வீடு கிடைச்சவுடனே போயிடறேன் லலித ராணி என்று கொஞ்சியே வந்து சேர்ந்து கொண்டாள். இப்படியெல்லாம் யாராவது முழுப்பெயரையும் கொண்டு அழைத்தால் அம்மாவிடம் அத்தனை காரியமும் சாதித்து கொள்ளலாம். லலிதா, லல்லி, ராணி இதெல்லாம் அம்மாவுக்கு பிடிக்காது. அடுத்து லலிதா ராணி என நெடில் போட்டு அழைத்தாலும் சரி வராது. அப்பா எப்போதாவதுதான் பெயரை உச்சரிப்பார். இப்படி யாராவது கூப்பிட மாட்டார்களா என ஏங்கி போயிருக்கையில்தான் இந்த புஷ்பமேரி வந்திருக்கிறாள்.
மறுபடி அம்மாவிடமே போய்விடுகிறேன். மன்னிக்கவும். தேன் கொண்டு வந்தாளில்லையா. பாட்டிக்கு மிகவும் பிடித்து போயிற்று. அஞ்செட்டி தேனா? நல்லாருக்குமே. குளிர் ஜாஸ்தியாச்சே. எப்படி தாங்கறே னு வரிசையாய் கேட்டுக்கொண்டே தேனை வாங்கிவைத்துக் கொண்டாள். மல்லம்மா தளியில் இருக்கிறாளே தெரியுமா என ஒரு பாட்டம் எல்லாம் விசாரித்துக் கொண்டார்கள். உன் வீட்டில் நீ இல்லையென்றால் யார் சமைப்பார்கள் என்றும் கேட்டு வைத்துக் கொண்டாள். ஒருவழியாய் புஷ்பமேரி வீடு கிடைக்கும்வரை எங்களுடனே தங்குவதென்பது முடிவாயிற்று. ஒரு இடத்தை அவளுக்கு ஒழித்துக் கொடுத்தாக வேண்டும். என்னமோ பெரிய வீடாக கட்டிக்கொண்டு குடியிருக்கிற மாதிரி எத்தனை கருணை. ஆமாம். பணக்காரர்களுக்கு வருவதற்கு பெயர்தானே கருணை.
வீடு பெரியதுதான். எப்படி பெரியது என்றால் வீட்டை விட வெளியில் பெரிய காலி இடம் இருக்கும். ஒரு ஆறு அடிக்கு தென்னை ஓலை வேய்ந்து ஒரு ஹால் செட்டப்பில் வைத்திருந்தோம். சேர் போட்டுக் கொண்டு உட்காருவது. உரலைப் போட்டுக்கொண்டு மாவாட்டுவது. பாயைப்போட்டு புத்தகங்களை படித்துக்கொண்டிருப்பது என பகல் பூரா அதே இடம்தான். வீட்டின் நுழைவு வாயில்தான் சமையலறை. இடது பக்க மூலைச்சதுரம்தான் குளியலறை, நடுராத்திரியில் வெளியே மழைபெய்தால் பாட்டிக்கெல்லாம் அதுதான் அவசரத்துக்குக்கூட.. அதற்கென்ன பண்ண முடியும்? ஒண்டு குடித்தன பராக்கிரமங்களெல்லாம் ஜென் தத்துவங்களை விட அனைத்தையும் துறந்தவை. அப்புறமாய் போனால் ஒரு பத்துக்கு பதினாறில் ஒரு ஹால். அதில்தான் சகலமும். கட்டில், பாய், ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கப் பட்ட டிரங்குப்பெட்டிகள், சூட்கேஸ், இரும்பு மடக்குச்சேர், போனால் போகிறதென அப்போதுதான் ஒரு டிவி வேறு செகண்ட் ஹாண்டில் வாங்கியிருந்தோம்.
புஷ்பாக்கா சமையலறையிலேயே படுத்துக் கொள்கிறேன் என்று விட்டாள். பாட்டி எங்களுடன் படுத்துக்கொண்டாள். எல்லாம் ராத்திரி ஒன்பதிலிருந்து காலை ஆறுமணி வரைதானே. நடுவில் என்ன நடக்கும் எனதான் எனக்கு அப்போதெல்லாம் தெரியாதே. சில சமயம் படுத்தவுடன் காபிக்கு எழுப்புவது போல் கூடத் தெரியும். காபியைக் கலந்து வைத்துக்கொண்டு அம்மா எழுப்பும்போது கனவு மறைந்து நிஜமென தூக்கம் கலையும்.
புஷ்பாக்காவின் தெலுங்கு கலந்த உச்சரிப்பில் வீடு முழுக்க ஒசூர் பாஷை பரவலாயிற்று. இரண்டு நாள் சும்மா இருந்த பின் அடுத்த நாள் 'ஏனம்மா இதி. இந்த்த கலீஜாருக்குது' என ஒரு இடம் விடாமல் சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டாள்.. அம்மாவுக்கும் சுத்தத்துக்கும் ரொம்ப தூரம். பாட்டிதான் செய்வாள். பாட்டி ஊருக்குப்போனால் வீட்டுக்கு வரவே பிடிக்காது. பக்கத்து வீட்டிலேயே பொழுது போக்கிக்கொண்டு இருப்பேன். பாட்டி ஊருக்கும் போய்விட்டாள். புஷ்பாக்காவை எனக்கு பிடித்து விட்டது. கட்டக்கரேலென நல்ல கிராமத்துக் கட்டை. திட தேகம். நல்ல உயரம். வழித்து எண்ணெய் தடவிய கிறித்துவ சதுர முகம். இரவில் தோத்திரம் செய்து கொண்டிருப்பதை விடாமல் கேட்பேன். அவள் இல்லாத நேரங்களில் அப்பா அவளை மாதிரியே சொல்லிக் காமிப்பார். சிரிப்பாய் இருக்கும். அவளிடம் பேச மாட்டார். ஏதாவது அண்ணா என சொல்ல வந்தால் காதில் கேளாதது போல் போய்விடுவார். அவருக்கு பாட்டி இருந்தாலே பிடிக்காது. யார் வீட்டிற்கு வந்தாலும் அப்பாவுக்கு ஆகாது. அதிலும் அம்மா விடாமல் கடைக்கு துரத்துவதில் இன்னமும் வெறுத்து திட்டிக்கொண்டே போய்விட்டு வருவார். புஷ்பாக்கா ஊசி போல தொண்டை.பானை போல வயிறு ரகம். அப்பாவுக்கு அதிலேயே வெறுப்பு வந்து விட்டது
புஷ்பாக்காவிடம் ஒரு வேப்பெண்ணெய் மணம் எப்போதும் இருந்தது. மூன்று புடவைகளை மட்டும் மாறி மாறிக் கட்டிக்கொண்டாள். ஒரு பைசா பர்சிலிருந்து எடுக்க மாட்டேங்கறா னு அப்பா இல்லாத நேரத்தில் அம்மா முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள். சரியாய் 5 பைசா.. 10 பைசாக்கெல்லாம் கணக்கு பார்த்தாள். கீரைக்காரி வந்தால் கீரை வாங்கி வைத்துவிட்டு பைசாக்கூடத் தராமல் அம்மாவிடம் கைகாட்டி விட்டுவிடுவாள்.
எல்லாவற்றுக்குமான வைத்தியம் கற்று வைத்திருந்தாள். நெடுநாள் அம்மா கழுத்தில் இருந்த மருவை தலையிலிருந்து ஒரு முடியை பிடுங்கி இறுக்கிக் கட்டினாள். காலையில் உதிர்ந்திருந்தது. புஷ்பாக்காவுக்கு மூன்று பெண்கள். அப்புறமாய் ஒரு பையன். பெரிய பெண் அவளுடைய பெண்ணில்லையாம். அவள் அக்கா பெத்துப்போட்டுவிட்டு செத்துப்போய்விட்டாளாம். அதனால் இவள் வளர்த்து கன்னியாஸ்திரியாக்கப் போகிறாளாம். அதனால் பாத்திமாவில் அடுத்த வருடம் சேர்த்து விட்டு விட்டால் இனிமே எனக்கு அவ செலவில்ல என்று ஒருமுறை சொல்லியிருந்தாள். ஒரு மாதிரி புஷ்பாக்காவை நாள் முழுவதும் காசு எண்ணுபவளாகவே பார்க்க பாவமாகவும் அதேசமயம் எரிச்சலாகவும் இருந்தது.
அம்மாவின் மூன்று நாட்களுக்கு நானும் அப்பாவும்தான் சமையல். நான் பெரியவளான பிறகும் அதே சிஸ்டம்தான். அப்பா அதிலெல்லாம் பயங்கர கண்டிப்பு. ஒதுக்கி ஓரமாய் உட்கார வைத்து விடுவார். சாதத்தை தூக்கி தூக்கிப் போடுவார். எரிச்சலாய் இருக்கும். அவரின் கடைக்குப் போகக் கூட அனுமதியில்லை. வீட்டிற்கு கூடப் படிப்பவர்கள் வந்தால் அம்மா முணுமுணுப்பாள். யாராவது தூரக்காரி இருக்கப் போறா..வெளியவே இருக்கச் சொல்லு என்பாள். என்னையும் தட்டு, பாய் சகிதம் ஓரமாய் உட்கார வைத்து விடுவார்கள். யாரேனும் வந்து விட்டால் நான் அதையெல்லாம் போய் முதலில் மறைப்பேன்.
அதனால் அந்த முறை அம்மா ஒதுங்கியபொழுது புஷ்பாக்காவிடம் 'எங்க வீட்டுக்காரரு ரொம்ப பார்ப்பாரு. அவருதான் சமைப்பாரு. எனக்கும் சாப்பாடு போடுவாரு. உனக்கு எப்படி சாப்பாடு போடச் சொல்றது? . நீ பேசாம மூணு நாளைக்கு ஊருக்கு போயிடு. இல்லைனா கீதா வீட்ல தங்கிக்கறயா ?' எனக் கேட்டாள். புஷ்பாக்கா அதுவரை மாற்று ஏற்பாடுகளைப் பற்றி யோசித்திருக்கவேயில்லை. இரண்டு நாள் தங்கிக்கொள்கிறேன் என வந்தவள் வீடு கிடைத்த பிறகும் கூட அட்வான்ஸ் கொடுக்கவே முதல் மாச சம்பளம் வாங்கிதான் என அழுத்தம் திருத்தமாக ஒரு மாசமாக எங்கள் வீட்டில்தான் உட்கார்ந்திருக்கிறாள்.
'சரி லலித ராணி..நான் அஞ்செட்டிக்கே போறேன். ஒரு அம்பது ரூபா இருக்கா?' என கடன் வேறு கேட்டாள். அப்பா இல்லை என சொல்லும்படி அம்மாவிடம் கண்காட்டினார். புஷ்பாக்கா காசு கொடுத்தால்தான் போவேன் என்பதுபோல அழிச்சாட்டியமாய் இருந்தாள். வேறு வழியற்று அம்மா கொடுத்தாள்.
ஏற்கனவே உக்ரத்தில் இருந்த அப்பா இன்னும் ரெளத்ரமாகி விட்டார். அப்பாவுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை கடன். கேஸ் சிலிண்டர் கூட கடன் கேட்க கூடாது. அவசரத்துக்கு தரக் கூடாது. அவரின் ஒரே வாக்கியத்தைத் திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருப்பார். 'பாவம் னு யாரையும் நினைக்கக் கூடாது. நினைச்சா நம்மதான் பாவமா ஆயிடுவோம்.' இதைக் கேட்டு கேட்டு எனக்கும் அம்மாவுக்கும் அலுத்துப்போயிருந்தது. ஆனால் அவர் நிறுத்துவதாயில்லை. புஷபாக்கா அந்தப்பக்கம் போனதும் தானாச்சு.
பிடிபிடியென உலுக்கி எடுத்து விட்டார். அம்மாவும் அது இதுவென சமாளித்துப்பார்த்தாள். ஒன்றும் வேலைக்காகவில்லை. கத்திக்கொண்டே இருந்தார். அவளை இனிமேல் வீட்டில் சேர்த்தவே மாட்டேன். வந்தவுடனே போய்விடச் சொல்கிறேன் என அம்மா சத்தியம் செய்யாத குறையாக திரும்ப திரும்ப சொன்ன பிறகுதான் கொஞ்சம் அடங்கினார். நல்ல வேளை. அம்மா சத்தியம் செய்யவில்லை. செய்திருந்தால் அதற்கு ஒருமணி நேரம் பாடம் எடுத்திருப்பார்.
அடுத்தநாள் முழுக்க அம்மா எரிந்து விழுந்து கொண்டே இருந்தாள். எனக்கே இந்த புஷ்பாக்கா எப்போது போவாள் என எரிச்சலாக மாறிவிட்டது. இந்தமுறை ராகிமாவு, பேரிக்காய் என சுமந்து கொண்டு வந்தாள் புஷ்பாக்கா. தயங்கி தயங்கி அம்மா சொல்லி விட்டாள். புஷ்பாக்கா இன்னும் ஒரு வாரம்தானே இருக்கு சம்பளம் வர. 1ம் தேதி குடிபோனா வாடகை தர சரியா இருக்குமேன்னு பாத்தேன். என கெஞ்சினாள். அப்பா அசையவேயில்லை.
'இன்னும் ரெண்டு நாள்தான். இடத்தை காலி பண்ணிடுங்க ' சம்பளம் வாங்கினவுடனே அம்பது ரூபாவை லலிதா கிட்ட கொடுத்துடுங்க.
புஷ்பாக்கா அப்பாவை பார்த்துக்கொண்டே அமைதியாய் இருந்தாள்.
அம்மா அப்பாவிடம் வந்து மெதுவே 'மாசமா வேற இருக்கா. அப்பறமே போகட்டும். விடுங்க' என்றாள். அப்பா முறைத்தார். அம்மா கெஞ்சுவதைக் கண்ட பிறகு
புஷ்பாக்கா
'அண்ணா.. ஏமிண்ணா.. இப்டி சொல்லிட்டீங்க. அட்வான்ஸ் வாங்காம வீடு தருவாங்களா? நான் எங்க போறதுண்ணா?' என மறுபடி கெஞ்சினாள். அப்பா திரும்பவேயில்லை. புஷ்பாக்கா அழுதபோது இன்னும் அவள் முகம் இருண்டு போனது. அம்மா அசராத அப்பாவை ஒருமுறை அழுந்த பார்த்து விட்டு
'புஷ்பா. நீ ஒண்ணாம் தேதியே போவியாம். அவர் சொன்னா சொல்லிட்டுப் போறாரு.அவரா வாடகை தர்றாரு. நான்தானே தரேன். நீ இரு புஷ்பா'.
சிலசமயம் அம்மா எரிச்சலில் அப்பாவின் கையாலாகாத்தனத்தை இப்படி சொல்வதுண்டுதான். ஆனால் யார் முன்னாடியும் இப்படி சொன்னாதாக எனக்கு ஞாபகமில்லை. அப்பா எரிச்சலாய் வெளியில் எழுந்து போய்விட்டார். புஷ்பாக்கா படுக்கையைப் போட்டுக்கொண்டு படுத்து விட்டாள். அதற்கப்புறம் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொள்ளவேயில்லை. நடுவில் முக்கியமான விஷயங்களை பரிமாறிக் கொள்ள என்னை உபயோகித்தது மட்டும் தான் எனக்கு கடுப்பாயிருந்தது. புஷ்பாக்கா அம்மாவிடம் இன்னும் அதிகமாய் லலிதகுமாரி என அடைந்து கொண்டிருந்தாள். அந்த பத்து நாட்களாக அப்பா புஷ்பாக்கா வீட்டில் இருக்கும்போது வரவேயில்லை. இரவும் முன்னதாய் சாப்பிட்டுவிட்டு படுத்துக் கொண்டார்.
புஷ்பாக்கா எங்கள் வீட்டை விட சின்னதாக ஒரு வீட்டை கண்டடைந்திருந்தது இன்னொரு ஆச்சரியம். வேலை முடித்து விட்டு வந்து அந்த வீட்டை சுத்தப் படுத்தினாள். தொடப்பத்தை பாதியாய் கத்தரித்து சுண்ணாம்பில் முக்கி எடுத்து தானே அடித்துக்கொண்டிருந்தாள். தலைக்கு கட்டியிருந்த துணியுடன் பார்க்கும்போது பூலான் தேவி மாதிரி இருந்தாள். அம்மாவுடன் நானும் போயிருந்தேன். அம்மா திட்டினாள். 'மாசமாருக்கே. யாரையாச்சும் முப்பது ரூபா கொடுத்து அடிக்கச் சொன்னா அடிச்சுக் கொடுக்கப் போறாங்க. ஆனாலும் உனக்கு தைரியம் ஜாஸ்தி.' நான் அக்காவின் வயிற்றைப் பார்த்தேன். லேசாய் கூட உப்பலாய் இல்லை. எந்த மாதம் வயிறு பெரிதாகும் என யோசனை வந்தது.
வீட்டுக்கு திரும்பும் வழியில் பாத்திரக்கார பத்மாக்காவிடம் அரட்டை அடித்த பின் அன்றும் ஒரு சிறிய சொம்பை அம்மா வாங்கினாள். 'இங்க பாரேன். குட்டியூண்டு எவ்ளோ அழகாருக்கு' அழகாய் இருந்தது. அதிகபட்சம் ஒன்றரை டம்ளர் தண்ணீர் தான் பிடிக்கக் கூடும். 'பாட்டி வந்தா திட்டுவா' என்றபடி அடுப்பில் லேசாய் தீயில் வாட்டி ஸ்டிக்கரை பிய்த்து எடுத்து விட்டு கழுவி வைத்து தண்ணீர் மொண்டு குடித்தாள். அப்பா உள்ளே வந்தவர் தானே தட்டைக்கழுவி அமர்ந்து கொண்டார். இன்னமும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
புது சொம்பில் நீரெடுத்து பக்கத்தில் வைத்தாள். அப்பா அந்த சொம்பை வெறித்தார். இன்னிக்கு ராகி அடைதான் என்று சொல்லியவாறே தட்டில் அம்மா போட்டதும் என்ன நினைத்துக் கொண்டாரோ சொம்பை அப்படியே தட்டில் தண்ணீருடன் கவிழ்த்துவிட்டு வெளியே கொண்டுபோய் கொட்டிவிட்டு படுக்கையைப் பிரித்துப் போட்டுக் கொண்டு படுத்து விட்டார். சிறிது நேரம் பார்த்துவிட்டு அம்மா கொஞ்ச நேரம் புலம்பிக் கொண்டிருந்தாள்.
இரவு கவிழ்ந்த பின் வீட்டுக்கு வந்த புஷ்பாக்கா அசந்திருந்தாள். .அடுத்த நாளே அங்கு போய்விடுவதால் அன்று நெடுநேரமாய் ஸ்தோத்திரம் சொல்லிக்கொண்டே இருந்தாள். அம்மாவும் சாப்பிடாமலே படுத்து விட்டாள் போலிருக்கிறது. நாளை புஷ்பாக்கா போய்விட்டால் எல்ல சரியாகிவிடுமென நினைத்துக் கொண்டபடியே தூங்கிவிட்டேன்.
வழக்கம்போல் காலையில்தான் நான் விழித்தேன். எப்பொழுதும் போலவே அந்த இரவு என்ன நடந்தது என எனக்குத் தெரியாது. அம்மாவும் புஷ்பாக்காவும் வீட்டில் இல்லை. வீட்டில் லேசாய் துர்நாற்றம். அப்பா அந்த சமையலறை முழுக்க அந்த அதிகாலையில் நீரைக்கொட்டி கழுவிக் கொண்டிருந்தார். புஷ்பாக்காவின் ரத்தம் தோய்ந்த துணிகளை குச்சியால் எடுத்து தூரமாய்க் கொண்டுபோய் எரித்தார். பின்னா் அந்த மூன்றுநாளில் சமைப்பது போலவே அன்றைக்கும் சமைக்கத் தொடங்கினார்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்