logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Venki

சிறுகதை வரிசை எண் # 263


கானுக்குள் காணாமல்போன கைக்கடிகாரம் - வெங்-கி அப்பாவுக்கு, நான் எழுதுவது, முகவரி தெரியவில்லை ஆக குறிப்பிட முடியவில்லை. நான் சோர்ந்து போய்டேன். அம்மா சொன்னா நான் தான் காரணமுன்னு, நான் ஒத்துக்கமாட்டேன். சாப்பிட தான் செய்றேன். என்னை யாராவது வந்து என்ன செய்யுறனு கேக்கமாட்டாங்களானு எதிர்பார்க்குறேன். அது சரியா, இல்லையானு எனக்கு தெரியல. அப்படி, நான் என்ன செய்தாலும் என்னை வேவு பார்க்க எந்த சக்தியும் இப்போது இல்லை. உன் மேல எனக்கு கொஞ்சம் கோவம் இருக்கு கொல்லும் அளவுக்கும் இருக்கு, துப்பாக்கியால சுடும்படியா முடிவு செஞ்சேன் ஆனா பொம்ம துப்பாக்கி வெச்சு சமாளிக்கலாம், நெச தோட்டாவுக்கு எங்கே போவது அதனால் தான் அம்பாக என் இந்த கடிதத்தை பாய்ச்சுறேன். அம்பிலே சிக்கி, அகப்பட்டு நீ கீழே விழுந்தால், ஒரு குரல் கொடு. இருக்கும் தடம் அறிந்து, உன்ன வந்து பார்க்க சௌகரியமா இருக்கும். சொன்னால் நம்ப மாட்டாய், முன்பு போல விளையாட போவதும் குறைந்து விட்டது. அதிகம் பேசுவதும், இல்லை, கையெழுத்து அழகாகும் வரை எக்கச்சக்கமாக எழுதுகிறேன். நேரம், காலம் தெரிவதே இல்லை. எல்லாமே தலைகீழாகிவிட்டது. கடிகாரம் இருந்தால் நேரம் பார்க்க முடியும்! சரி வரட்டும் காத்திருக்கேன். காலை சாப்பாடே மதியமாகிப்போகிறது, மால சாப்பாடு ராத்திரி, பிறகென்ன ராத்திரி சாப்பாடு கட்டு, தூக்கம் தான். சில நாட்களில் அதுவும் குலைந்து போய்விடும். நீண்ட நாட்களாய் காத்திருக்கிறேன். முக்காலமும், மணல் மேட்டில் அலையடிக்கும் உப்புத்தண்ணீர் போல பிணைந்து, எங்கள் மேல் அடித்து ஆடுகிறது. அம்மா பற்றி யோசிப்பாய், நானே சொல்கிறேன். அவள் தினமும் காலையில் என்னை தயார்படுத்திவிட்டு வேலைக்குப் போய்விடுகிறாள். சரியாக சாப்பாடு கட்டிக்கொண்டு போவதையும் நிறுத்தி விட்டாள். அதனால் தான் மெலிந்து ரோடு கூட்டும் விளக்கமாறு போல் ஆகிட்டாள். சிரிப்பாக இருக்கிறது. ஹி.ஹி.ஹி. ராத்திரி சாப்பிடுவதும் வெறுத்துக்கொண்டு தான். எனக்கு இப்போதெல்லாம் ஊட்டிவிடுவதில்லை. எனக்கும் ஏனென்று புரியவில்லை, நானும் கேட்பதுமில்லை, விட்டு விடுகிறேன். ஜூன் மாத தேர்வில் நான் அறிவியலில எழுபத்தேழு, வகுப்பிலே முதல் மதிப்பெண் எடுத்துருக்கேன். வாத்தியார் என்னை கீப் இட் அப் என்று கூறினார், அப்டினா இப்டி தான் இன்னும் நல்லா படிக்கணும்னு அர்த்தம். நீ சொல்லாத குறையை தீர்த்தாறு போ! நேற்று நண்பன் பாலுவின் அப்பா தவறிவிட்டார், அவனுக்கு துணையாக நாங்கள் சிலர் இருந்து, அவனை கவனித்துக்கொண்டோம். பாவம் மனுஷன் இறந்தவிதத்தை கேட்டு எனக்கு நெஞ்சே படத்து போயிற்று, மூச்சு முட்டி மாண்டாராம். தண்ணி இல்லாம செத்தவர் கதையும் உண்டு இப்படி மூச்சு இல்லாம செத்த கதையை கேட்க உனக்கு கூட கஷ்டமாக தான் இருக்கும்னு நெனைக்குறேன். மூச்சுக்கும் உரிமை போர் செய்யணுமா! வெளியூர் வேலைக்கு போன நம்ம காலி மாமா, போன மாதம் வீட்டுக்கு வந்தார். கொஞ்சம் தின் பண்டம் கொண்டு வந்திருந்தார், ரொம்ப நாள் கழிச்சு அதெல்லாம் தின்ன கெடச்சதும் மகிழ்ச்சி. அடுத்த முறை வரும்போது, கைகடிகாரம் வாங்கிட்டு வாறேன்னு சொன்னாரு, ஆனால் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அப்பா கொண்டுவருவாருனு சொலிட்டேன், அவரு கொஞ்சம் என் வெடுவெடு பேச்சில் மனம் புண் பட்டுவிட்டார் போல, அம்மாவை வாடிய முகத்துடன் நோக்கினார், அம்மா சேலையை எடுத்து முகத்தை துடைத்துக்கொண்டு, அவரை பார்த்து லேசான புன்னகை செய்தார். அவர் நீண்ட அமைதிக்கு பின் கிளம்பிவிட்டார், ஆச்சர்யம் என்னவென்றால், என் நடவடிக்கைக்கு அம்மா கோவப்படவே இல்லை, அதன் புதிரும் எனக்கு புரியவில்லை. அது போகட்டும், அப்பா உனக்கு நினைவு இருக்கிறதா அந்த கடிகாரத்தை எப்போது வாங்கினோம் என்று. நம்ம ஊர் மாதா கோவில் பொருட்காட்சி நடந்த பொழுது, எனக்கு இன்னும் நல்லா நினைவிருக்கிறது. மறக்க முடிந்த நாளா அது, ஒரு அசாதாரண அந்தி பொழுதல்லவோ. நீண்ட நாளாய் நாம் ஒன்றாக வெளிய போக வேண்டுமென்று நான் கேட்டிருந்தேன், நீ வேலை வேலை என்று அதை தவிர்த்தே இருந்தாய். அன்று அதிசயமாக நீயும் அம்மாவும் வெளியே செல்கிறோம் என்றதும், அதிலும் வெகுகாலமாய் நான் கேட்ட மாதா திருவிழாக்கு போகலாமென்றதும் அடடா ஒரு நாளில் மனுசனுக்கு எத்தனை குஷி தரும் சேதிகள். நம் வாழ்வில் காலம் பெரும் பங்காற்றுவதை என்னால் உணர முடிகிறது, காலம் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறது, சமயங்களில் நாம் வேண்டுவதை கொடுக்கிறது, சமயத்தில் எதிர்பாராத மாயைகளையும் புரிகிறது. நாம் பொருட்காட்சி இருக்குமிடத்தை நெருங்கிய பொழுதே, மணி சூரிய அஸ்தமனமாக இருந்தது. நான் இருட்டியதை காரணம் காட்டி ‘உம்’மென்றிருந்தேன், அப்போது நீ சொன்னது நினைவிருக்கு ‘அப்பா ராவுல லைட்டு வெளிச்சத்துல ஒசரமான ராட்டுனத்தொட கடேய்களா, ஆளுக்க கூட்டமா பாக்க ஜே ஜேனு இருக்கும் அப்பா’ நீ சொன்னது சமாதானதுக்கோ என்னவோ உண்மையில் சொன்னபடியே அமைந்தது. உள்ளே நுழைந்ததும் ஒரு அற்புதமான அனுபவம், அந்த இரவை கொண்டாடி தீர்க்கும் கரண்டு லைட்டுகளும், இரும்பு ராட்டினங்களும், பந்தல் கடைகளும், மொய்க்கும் ஈக்களும், அதில் கொஞ்சம் மனிதர்களும், எத்தனை விதமான மனிதர்கள் இங்கே அடடா அடையாளம் துறந்து, ஈக்களை போல் காற்றையும், நிலத்தையும் சம உரிமைப்போட்டு திரிந்து கொண்டிருந்தார்கள். என் சிறிய கண்களுக்கு காண கிடைத்தவை தான் எவ்வளவு, ஆனால் நீயோ அங்கு கண்டவை எல்லாம், அதன் இன்னொரு பக்கமாக இருந்தது. காலி குப்பை தொட்டிகளும், வழி நெடுக குவிந்து, சிதறிக் கிடக்கும் பிளாஸ்டிக் கப்புகளும், தட்டுகளும், ஈக்கள் மொய்க்கும் தீனிகளும், பேப்பர்களும், தண்ணீர் பந்தங்களில் நடக்கும், சாமர்த்தியமான அட்டோளியங்கலும், தின்பண்ட கடைகளின் பிசினஸ் எதிக்ஸ்களும், கழுதைகுருதைகளுமே. இதில் அம்மா தான் மோசம், கொஞ்சம் பாவம் அவள் கவனம் முதலில் உன்மீது, பிறகு என்மீது அதற்குப்பின் கண்ணைப்பறிக்கும் பான்சி கடைகளின் மீது. ஊர்ந்து நகரும் ஈக்களை அங்கே தானே நான் கண்டிருக்கேன். ஒரு வழியாக பொருட்காட்சியின் ஒரு மையத்தை அல்லது விசாலமான ஒரு இடத்தை அடைந்து நிற்க, அமர இடம் வாய்த்தது. நடந்த களைப்பில் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தோம். ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம்! செல்லமா சடங்காகிட்டாள். சிறப்பாக விழா முடிந்தது, கறி சோறு வேறு, சித்தப்பா செய்த ஒரு சிறப்பான விடயம். சரி அன்றுக்குப் போவோம். எனக்கு சில கடைகளுக்குள் செல்லவும் ஆசை எழுந்தது. ஆனால் அதற்கு முன்னால் அங்கே இருக்கும் விளையாட்டு ராட்டனங்கள் பலவில் பங்கு கொள்ள விரும்பினேன். முதலில் கூட்டத்தைப் பார்த்து கொஞ்சம் நீங்கள் இருவரும் தயக்கத்தோடு இருந்தது ஒரு பக்கம், நுழைய இடம் ஒதுக்காமல் பலமான ஆட்கள் இருந்தது இன்னொரு பக்கம். இதற்கிடையில் நானல்லவோ உங்களை இழுத்துக்கொண்டு போனேன். ஒரு சவுளி கடை அது, அதிலும் ஐம்பது சதவீதம் தள்ளுபடி போட்டிருந்தார்கள். அம்மாவுக்கு ஆசை இருப்பதை நீ பார்த்திருப்பாய் இருக்கலாம், ஆனால் உனக்கு ஆசை இருந்ததை நான் பார்த்திருந்தேன் அறிவாயோ. சரி அத விடு போன வேகத்தில் சில சீலைகளை வாசம் பிடித்ததோடு வெளியே வந்தாகிட்டது. கையோடு ஒரு பான்சி ஸ்டோருக்குள் நுழைந்தோம், அடடே ஆண்களும் மயங்கும் படியாக எப்படி அலங்கார கோலாமாக இருந்தது அந்த கடை, அம்மாவுக்கு ஏதேனும் வாங்குவதாக பார்வையிலேயே தீர்மானமாகிற்று. கடையை புரட்டினோம், இருந்த கூட்டத்திலும், உங்கள் கூச்சத்திலும், மாறி மாறி ஒவ்வொன்றாக, புரட்டிய பின் இறுதியாக ரெண்டு, நாலு வளையல்களிருக்கும் என்று நினைவிருக்கிறது. வாங்கி அம்மாக்கு கொடுத்தாய், அத்தனை மனித ஆர்ப்பாட்டங்களுக்கு இடையிலும், கடைக்காரன், உன் கண்ணுக்கு கண் பார்த்து மைக்ரோ செகண்டுகள் காட்டிய சிரிப்பை நீ அணு அணுவாக ஆயுள் ஆயுளாக ரசித்துக்கொண்டிருந்தாய், கடைக்காரர் என்னவோ எல்லோரிடத்தும் அதே சின்னச்சிரிப்பை காட்டிக்கொண்டு தான் இருந்தான், அதை என்னைக்காட்டிலும், கவனிக்கக்கூடிய நீ அறிவாய். இருந்தும் உனது பூரிப்பின் காரியம் அறிய ஒரு ஆர்வம், ஒரு வேலை எல்லார்க்கும், கிடைக்கபெற்ற அந்த அற்ப சிரிப்பு உனக்கும் வாய்த்தது தானோ! “நல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யும் மழை” மூதுரை 10 தண்ணீர் கேட்டு அடம் பிடிக்கும் என்னையும், அம்மாவையும் ஒரு தண்ணீர் பந்தலுக்கு அழைத்து போனது நீ, சங்கிலி போட்டு கட்டியிருந்த டம்ளரில் நார அளுக்கு அத்தோடு தண்ணீரை குடித்துவிட்டு, பொம்ம கடைக்கு போவோமென்று அம்மா சொன்னதை மறுத்துவிட்டு நீயும் நானும் சேர்ந்து, ஒரு சேட்டு பையன், கம்பில் கட்டி தூக்கிக்கொண்டு, நடமாடும் கடையோடு நின்றிருந்தான். அதோ அங்கே இருந்தது நம் இருவருக்குமான நாடித்துடிப்பு, அப்பனையும் பிள்ளையையும் இணைக்கும் ஒரு தொப்புள் கொடி. அதை கடக்கும் நொடியில் இருவருமே உள்ளுக்குள் எதோ அரிப்பதுபோல் தோன, சிலையாக நின்று விட்டோம். இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா அந்த கடிகாரமாக இருக்கிறது, இருந்தது. சற்று நிமிடம் நம் நேரத்தை அது நிறுத்திப்பார்த்துவிட்டதே. அந்த கடிகாரத்தை தேர்ந்தெடுத்தோம், அதன் விலையும் கூட நினைவிருக்கு நாற்பத்தி ஐந்து. அதை கையில் மாட்டிக்கொண்டது தான் தாமதம். பட்டத்து இளவரசன், மகுடம் சூட்டப்பட்டு, கோலோஞ்சி ஆட்சி தோரணையும், அதிகாரப்பார்வையும் கொள்வது போல நானும், அரசாட்சியை உரியவனிடம் கொடுத்துவிட்டு, வாழ்வை துறந்து, துறவு மனப்பாங்கோடு, சற்றே பெருமிதத்தோடு நீயும். சில நேர நகர்வுக்குப்பின், இந்தாங்க ஒரு ராட்டுனமாட்டும், போவுறதா எப்புடி, என்றால் அம்மா. என்னிடம் நீ கேட்டபோது நான் ரொம்பவும் யோசனையில் ஆழ்ந்தேன். அம்மாவோ அந்தா இருக்கே ரயிலு வண்டி அதுல போவமா, என்று சொன்ன மறு கணமே வீம்புக்கெ‌ன்றே என் கணக்கிலிருந்து நான் அதை நீக்கிவிட்டேன். அம்மாவுக்கு என்ன தெரியும் என்ற ஒரு எண்ணம் அப்போது. நெஜமாகவே அப்போது மட்டும் தான் அப்பா. அப்போ நான் முதலாவதாகவே என் பட்டியலிலிருந்து நீக்கியிருந்த அந்த பெரிய சக்கரமான ராட்டினத்தில் போவோமா என்று கையை நீட்டி நீ கேட்டது எனக்கு வெறுப்பையே ஏற்ப்படுத்தியது, உனக்காக கேட்டுக்கலாம் என்று நான் நெனச்சாலும் மனசில் கொஞ்சம் வருத்தம் தான் நெனச்சாப்புல இருக்க முடியல என்று. விருப்பமில்லை என்றாலும் கூட அதன் மேலிருந்த பயமும் தயக்கத்துக்குக் காரணம். சரி பக்கத்தில் வந்தாச்சு, பிறகென்ன அனுமதிசீட்டு பெறவேண்டியது தான், கட்டணத்தை கேட்டு நீ தள்ளாடிக்கிட்டு வந்ததும் கண்ணுக்குள் நிக்குது. நாற்பது ரூபாவாம். அடுத்த நிமிசம் அம்மா சொன்னது உனக்கும் நினைவிருக்கும். கொஞ்சம் சந்தோசப்பட்டது நான் தான். அடுத்து ராட்டினத்தை கண்கள் வலை வீசத்தொடங்கியது. அந்த எண்ணமும் மணல் வீடானது. நான் மட்டும் போகும்படி நீ சொன்னது தான் எனக்கு எத்தனை, அதிர்வையும் ஐயத்தையும் கொடுத்தது. தனியாவா, நானா, மாட்டேன். ராட்டினம் மேல போவெயில நானுமுல்லா மொத்தமா போய்டுவேன் போல என்று நான் எனக்குள் பேசிக்கொண்டது அப்போது உனக்கு கேட்டிருந்தால் ஏச்சு வாங்கி இழுவிக்கிட்டு தான் இருந்துருக்கணும். நான் வேண்டாம் பா ஒசர போவுது பயமா இருக்கு என்றதை நீ புரிந்துகொள்ளவில்லை என்றே அப்போது நினைத்தேன். உன் விளக்கத்தை கூட! மன்னிக்கணும் அப்பா “எல்லாத்துக்கும் ஒரு வெளக்கம் வெச்சுருக்காரப்பா சே” என்று நினைத்துக்கொண்டேன். ஏலேய் யெப்பா இந்த ராட்டினம் ஒசர போறது மட்டுமில்ல, உனக்கு ஊரயே காட்டும், யாருமே சுவாசிக்காத புது காத்து மேல இருக்கும், அங்கன இருந்து பாத்தேன்னா இங்கன எல்லாம் ஒன்னு தான், எறும்பு ஈக்கலாத்தான் தெரியும் ஆளுக்க. அப்புடியே வானத்த தொட்டுடராப்புல இருக்கும் போய் தான் பாரேன் பிடிக்கலைன்னு வெய்யேன், அப்பாவுக்கு கண்ணு காட்டு, இந்தாப்பா ராட்டினக்காரரே பிள்ள பயப்புடுதுல்லா நிப்பாட்டு, ஏறக்கிக்குடுதேன்னு சொல்லிடறேன். நெனவிருக்கா நீ சொன்னதெல்லாம்! என்னவோ இந்த விசப்பரிட்சை எங்கே முடியுமென்று எனக்குள் புயல் வீசியது. அதில் நாலு பேருக்கு தாராளமாக இருக்கைகள் இருந்தது. என்னோடு அமர்ந்திருந்த அண்ணன், தங்கை, அந்த தங்கையின் மகள், தன் மாமாவிடம் வம்பு செய்துகொண்டிருக்கும் அந்த குட்டிக்குழந்தையும் குஷியாகவே இருந்தார்கள் என்னை கூட நாங்க பார்த்துக்கொள்கிறோம்னு உன்னிடம் சொன்னார்களே அவர்களும் சிரித்த முகத்தோடு ஆவலுற்றிருந்தார்கள். ஆனால் அந்த சட்டென்ற, பதறவைக்கும் படி புறப்பட்ட ராட்டினத்தின் அந்த ஒரு நொடி என்னமோ செஞ்சுடுச்சு எனக்குள். முதல் சுற்றிலேயே பாதி வரை கண்களை இருக்க பொத்திக்கொண்ட நான் அடுத்த பாதி அதாவது முதல் ரவுண்டு தரை தட்டும் போது கண்ணை திறந்து உன்னைத்தேடிய படி ரெண்டாம் சுற்றிலும் அதே போல கண்ணை பொத்திக்கொண்டேன். இந்த தடவை ஒரு சின்ன தவறை சரியாக செய்துவிட்டேன், கொஞ்சம் முன்னதாகவே கண்ணைத்திறந்து விட்டேன். அய்யய்யோ! என்ற என் அலறலைக்கேட்ட அந்த குட்டிக்குழந்தை சிரிக்கத்தான் செய்தது, அந்த குழந்தைக்கு என்னை விட ரெண்டு வயசு தான் கொறைச்சல் இருக்குமென்றாலும் அந்த சிரிப்புக்கு பின் எனக்கு அது குழந்தையாக தெரியவில்லை. நான் அந்த காட்சியை தெளிவு படுத்திக்கொள்வதற்க்குள் தரை தட்டியது ராட்டினம். உன்னையும் எளிதாக காண முடிந்தது. இந்த முறை உனக்கு நான் அசைத்த கைகள், அதே வேகத்தில் என் கண்ணை பொத்திக்கொள்ள பயன்பட்டது, கைகளின் குற்றமோ, கண்ட காட்சியினால் ஆர்வம் கொண்ட கண்களின் குற்றமோ தெரியவில்லை. கொஞ்சமாக விரல்களின் இடுக்குகள் வழியே கண்கள் அந்த அபார காட்சியைப் பார்த்து விட்டது. அடே அப்பா விமானத்திலிருந்து பார்த்தால் இப்படித்தான் இருக்கும் போல. கடல் வரைக்கும் கண்ணுக்கு தெரிந்த மாறி தான் இருந்தது. மனுசங்கள், எல்லாம் ஈக்களும், எறும்புகளுமாக தெரிந்தது என்னை உயர்ந்தவனாக, உச்சியில் அமர்ந்து பிரஜைகளுக்கு தரிசனம் கொடுக்கும் ராசாத்தி ராசாவாக நினைக்கவைத்தது. ஒவ்வொரு முறை தரையை கடக்கும் போதும், ஆகாயத்தில் பறக்கும்போதும், அவதாரம் பூண்டு மக்களோடு மக்களாக இருந்துவிட்டு காலக்காற்றில் கரைந்துபோகும் சாமியாவே என்னை நினைக்கவைத்து விட்டது. “இனி எதுவும் முடியும் அண்டம் என் கையில், ஆகாயம் என் ஆசை நதி அதில் நான் ‘சுட்டி டீவி’ சூரியன்” அந்த கடிகாரம் மினுத்தது, ஓவ்வொரு முறை நான் வானைத் தொடுகையிலும். எப்போதும் கையில் கடிகாரத்தோடு கிடந்த என்னை என் கூட்டுகாரர்களும் கேலி செய்வார்களே, திங்கயில தூங்கையில பேழையிலன்னு எல்லா நேரமும் கையோடு அப்பிக்கொண்டு அது தொங்கிக்கொண்டிருக்குமே. நினைவிருக்கு எத்தனை முறை நம்ம கக்கூசு கோப்பைக்குள் என் கடிகாரத்தை தவறிவிழ விட்டிருப்பேன், அப்போதெல்லாம் நீதானே எனக்கு எடுத்து சுத்தம் செஞ்சு தருவாய். அப்போ எல்லாம் நெனப்பேன் இனி ஒருமுறை இப்படி தவற விடக்கூடாதேன்று, அது தொடர்ந்து கொண்டே தானே இருந்தது இறுதியாக ஒருமுறை நான் தவறவிட்ட அந்த குழியின் ஆழத்தை குறைவாக அல்லவா எடை போட்டுவிட்டேன். எடுத்து வருவதாக சொன்ன உன்னையும் தவற விட்டதை உணராமல் உடலெங்கும் மலத்தொடும், அழுக்கொடும் வருவாயென வாலி தண்ணீருடன் துண்டோடு நான் காத்துக் கிடந்தேனே சில நாட்கள். என்னோடு நான், கையோடு கடிகாரம், இதயத்தில் நீ. அற்புதங்களில் நம்பிக்கை இல்லை இப்போது, ஆனால் நிகழுமானால் அது அந்த கடிகாரத்தின் உயிரோட்டமாக வாய்க்குமா. கானுக்குள் தவறி விழுந்ததாக சொல்லப்படும் நமது பிரதி, காலத்தின் சக்கரவர்த்தி மிஸ்டர் ‘கடிகாரம்’ இப்போது இருக்குமிடம் எனக்கு மட்டுமில்லை, நம் வம்சத்துக்கே தெரிந்தாயிடும். என்ன எழுதுவதென்றே தெரியாமல் ஏதேதோ எழுதி வைக்கிறேன். எனக்கு தெரிந்ததை, தெரியாததைக் கூட. யதார்த்தம் இருக்காது. இப்படித்தான் எழுதவேண்டுமென்று சட்டம், உண்டா என்ன, அது சரி ஏதேதுக்கோ சட்டம் இருப்பது தானே நம் ஊரோட பெருமிதம். உன்னை பார்க்கும் ஆசை இப்போது இல்லை, ஆக நீ வர வேண்டாம். வேண்டுமானால், காலம் நிச்சயிக்குமானால் நான் வருவேன், எப்போதென்று கேட்காதே நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கையில் காலத்தால் எதுவும் நடக்கும். அம்மா இப்போது வேலைக்கு போவது இல்லை. கடிதத்தை எழுதத் தொடங்கியபோது பால காண்டம், ஆனால் இப்போது யுத்த காண்டத்தில் இருக்கிறேன். காலம் ஒரு மாயாவி தான். என் (இப்போது நான் வைத்திருக்கும்) கடிகாரத்தில் பேட்டரி தீர்ந்து போச்சு, போடாமல் விட்டு ஒன்றரை மாசம் ஆச்சு. நேரமில்லை. கடிகாரம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் காலம் காத்திருக்காது. நீ இல்லாமலும் கூட இந்த வாழ்கை நகரத்தான் செய்திருக்கிறது புரிந்து கொண்டேன். அம்மா வீட்டில் தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கிறாள். அவள் அப்போது என்னிடம் சொல்லாமல் இருந்ததற்கு காரணம், விசியம் தெரிந்து நான் நொந்து போவேன் என்பதை விட, அச்சத்தில் அவளை வேலைக்கு விடமாட்டேன் என்பதாகவே இருந்திருக்கும். இன்று என்னால் புரிந்து கொள்ளப்பட்ட இந்த செய்தி ஒரு காலத்தில் பெரும் புதிராக இருந்தது ஒரு விதத்தில் சரியே. இப்போது நானும் வேலைக்குப் போகிறேன். உனக்குத்தெரிந்த வேலை தான், என்னைக்காட்டிலும் பரிட்சயமுள்ளது உங்களுக்குள். அது தின்று செரித்தவர் பட்டியலில் உன் பெயரும் இருப்பது உங்கள் நெருக்கத்தைச் சுட்டுகிறது. அதே கழிவு நீர் குழிக்குள், உனக்குப்பின் துளைந்தவர்கள் ஏராளம். சுத்தம் சோறு போடுகிறது. வேலைக்கு நடுவே நேரம் கெடைக்கும் போதெல்லாம் உன்னையும் கூட தேடுகிறேன் இந்த கடிதத்தை ஒப்படைக்க, “கடிகாரமே ஓ கடிகாரமே என் தோழனே, துணையே உன்னோடு நான் கொண்ட கனவுலகத்தில் எங்காவது எனக்கு என்னைத் தேடிக்கொடு, என்னோடு, உன்னோடு நம்மோடு உயிரான அப்பனைத் துரத்தலாம், அகம் பற்றிகொள்கிறது தூய நதி, அடைக்கிறது தொண்டைக்குழி வாசம் உறைகிறது குழிக்குள் விழுந்தேனோ எந்த கானுக்குள் என் கண் துடிப்பு தெரிகிறதோ, சில நீர்க்குமிழிகள் இடலாம் பின் நின்றுவிடலாம் தடம் தேடிச்சொல் என் பிள்ளைக்கு முகவரி கொடுக்க வேண்டும்” அது பிறக்குமாயின், கற்க சொல்ல மாட்டேன், கற்றுக்கொடுக்க சொல்லுவேன். அளந்து பார்த்து போடச்சொல்ல மாட்டேன் ஆகாயம் தாண்டியும் போடுனுச்சொல்லுவேன். காலையில் தின்ன சோறும் சொதிக்கொழம்பும் அம்மாவை நினைவு செய்கிறது. என் பிள்ளைக்கும் சொதி பிடிக்கும் மாசம் ஒரு முறை நிச்சயம் இருக்கும். வீட்டைக்கடந்தால் வந்து ரெண்டு உருண்டை சாப்பிட்டு விட்டு போ. வேலையாக போய்கிட்டு இருக்கேன். மீண்டும் பால்யத்தில் இருந்து, ஓரளவு அதன் நடுமையிலிருந்து எழுதுகிறேன் “என் தந்தை இத்தேசத்தை நடத்துகிறார்” இப்போது என் கடிகாரத்தில் முற்கள் இல்லை, எப்போதோ வேலைக்கு சென்ற இடத்தில் தவர விட்டு விட்டேன். அதற்கு காரணம் கொஞ்ச காலம் முன்பு நான் அதன் மேல் கண்ணாடியை தொலைத்துவிட்டேன், அது நடந்தது என்றோ ஒரு நாள் கீழே விழுந்து தனியாக வந்த கண்ணாடியை எதோ பேருக்கு ஒட்ட வைத்திருந்ததே. இப்போது அதில் முற்களாக நானிருக்கிறேன், இப்படிக்கு, தேதி,

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.