யஞ்ஞா
சிறுகதை வரிசை எண்
# 273
நாம் வேடிக்கை பார்க்கிறோம்
அந்த அறை முழுதும் முன்மதிய வேக்காடு. வளர்ந்தும் வளராமலும் நிற்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் அலுவலக அறை அது. மூன்று நாட்களுக்கு ஒரு முறை வந்து சுத்தம் செய்யும் ஆண்ட்டி ஒரு வாரமாய் வந்திருக்கவில்லை போலும். ஆங்காங்கே தூசும் மண்ணுமாய் ஒரு மெல்லிய படலம். மூக்கு நுனியை துறுதுறுக்க பையிலிருந்த மாஸ்க் ஒன்றை எடுத்து மாட்டிக்கொண்டாள் அவள். இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கத்துக்கு இதைச் சுட்டிக்காட்டி ஒரு சைகை செல்லுவது அடிக்கண் பார்வையில் படத்தான் செய்தது.
இருந்து தொலையட்டும்!
இதென்ன இன்று நேற்றா நடக்கிறது! இவள் மாஸ்க்கை போட்டுக்கொண்டால் போதும்! அலுவலகம் முழுக்க ஒரு கேலிப் பார்வை எழுந்து அடங்கும். முன்பெல்லாம் வெளிப்படையாகவே கேலி செய்வதுண்டு.
'நீ மட்டும் ஏன் மாஸ்க் போடற?'
'மாஸ்க் எதுக்கு? நாமதான இருக்கோம்'
'அந்த மாஸ்க்க கழட்டு மொதல்ல'
'நீ மட்டும்தான் ரூல்ஸ ஃபாலோ பண்றியா? நாங்களாம் இல்லையா?'
'இந்த மாஸ்க்காலதான் அன்னைக்கு உனக்கு பானிக் அட்டாக் வந்துச்சு!'
'எடுத்துட்டாப்பா மாஸ்க்க!'
'ஹே மாஸ்க்க கழட்டிரு. எனக்கும்தான் பயமா இருக்கு.. ஆனா இங்க யாருமே போடல, நாம மட்டும் போட்டா நல்லாருக்காதுல..'
இப்படி ஆரம்பிக்கும் பல பேச்சு இவளது வெற்று பார்வையில் அசௌகரியமாய் நெளிந்து இரண்டு நிமிடங்களில் நகர்ந்துவிடும்.
பல சமயங்களில் தோன்றியதுண்டு, எப்படி அது.. செய்ய வேண்டிய விஷயத்த செய்யாத இவங்களாம் சரி, ஆனா அதையே சரியா செய்யற நான் தப்பா.. ஹ! அதென்ன அது? நான் செய்யல அதனால நீயும் செய்யக்கூடாதுனு. நான் அப்படிதான் செய்வேன்! எவன் என்ன நெனச்சா எனக்கென்ன? இப்போது மட்டும் என்ன கொஞ்சி குலாவிக்கொண்டா இருக்கிறார்கள்? இருபது முப்பது பேர் இருக்கும் அலுவலகத்தில் அந்த இருபத்தொன்பது பேரும் ஒரு புறம் இவள் மறுபுறம் என்றுதானே இருக்கிறாள். அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே என்ன கெட்டது?
இப்படி வீம்பாய் எண்ணிக்கொண்டாலும் ஏதோவொரு தருணத்தில் நெருக்கும் மக்களின் நெடியிலிருந்து இவளது முகத்தை இவள் மூடிக்கொள்ளத்தான் செய்கிறாளோ.. ச்சே!
கண் முன்னால் ஒளிர்ந்த திரையில் கவனமானாள்.
இந்தப் பக்கத்தில் இருந்து ஒருத்தி,"காலைல என்ன சத்தம் கீழ?"
அந்தப் பக்கம் அவனது சலித்த குரல்,"புதுசா என்ன? அதே கதைதான்"
நடுவில் அமர்ந்திருந்தவளுக்கு எரிச்சல் எட்டிப்பார்த்தது.
இந்த கருமத்துக்குத்தான் நான் ஓரமா உக்கார்றது! ப்ச்
சில மாதங்களுக்கு முன்னால் அனைவருக்கும் இடம் மாற்றியதில் இப்படி நடுவில் வந்து சிக்கிக்கொண்டாள். முன்பெல்லாம், அதாவது இங்குச் சேர்ந்த புதிதிலெல்லாம் மெய்யாகவே பொருந்திப்போக முயற்சி செய்தவள் தான். ஆனால் தானாகச் சென்று பேசியும் நீ பேசுவதே இல்லை எனவும் மொத்தமாய் மூடிக்கொண்டதுதான் மிச்சம். இப்பொழுதும் இவர்கள் செய்வது அதைத்தான்! எப்பொழுதும்போல் இவள் நடுவில் அமர்ந்திருப்பாள், மற்ற இருவரும் அப்படி ஒருத்தி அங்கு இருப்பதே தெரியாதவர்கள் போலப் பேசிக்கொள்வர், பிறகு நாங்கள் பேசியும் அவள் பேசவே இல்லை என்று அலுத்துக் கொள்வர்.
அச்சமயங்களில் எல்லாம் ஒதுங்கிக் கிடப்பவளை வலுக்கட்டாயமாக ஊர் நடுவில் அமர வைத்து பிறகு ஒதுக்குவதுபோல் இருக்கும் இவளது மனநிலை.
வேலையில் கவனத்தைத் திருப்ப முயற்சி செய்தாள்.
இந்தப் பக்கத்திலிருந்து இவள்,"இன்னைக்கும் யாரும் தடுக்கலையா?"
அந்தப் பக்கத்திலிருந்த அவன்,"அட நீ வேற! புருசன் பொண்டாட்டி சண்டைக்கு நடுவுலலாம் போகக் கூடாது. அப்பறம் நம்மல கிறுக்கனாக்கிருவாங்க"
இவள்,"அதென்னவோ சரிதான். எங்க வீட்டுக்கிட்டயும் இதே கதைதான்! தெனம் குடி அடினு"
அவன்,"ஏன் அங்க யாரும் தடுக்கலையாக்கும்?"
குரலில் என்ன கேலியா?
இவள்,"அட நீ வேற! அதான ஹைலைட்டே!"
அவன்,"ஏன் என்னாச்சு?"
இப்பொழுது அவனிடமும் ஆர்வம்.
இவள் பல்லைக்கடித்துக்கொண்டாள். இந்த மாதிரி சமயங்களில் காதென்ற கருமம் இல்லாவிட்டால் தான் என்ன!
இவள்,"ஒருவாட்டி பெரிய சண்டை! அந்தாளு அவர் வைஃப போட்டு அந்த அடி! அதுவும் ரோட்ல.. யாருக்கும் பக்கத்துல போகவே தயக்கமா இருந்துச்சு.. சிலர் இது எப்பவும் போலனு கண்டுக்கல. எங்க பக்கத்து வீட்டு அக்கா தாங்க முடியாம போய் அந்தாள பிடிச்சு விட்டாங்க பாரு ஒரு அறை!"
அவன்,"வாவ்! ஹா.. ஹா.. நிஜமாவா?"
இவள்,"ஆமா! ஆனா விஷயமே அதுக்கடுத்துதான"
அவன்,"ஏன் என்னாச்சு?"
இவள்,"அந்தம்மா அவ்ளோ நேரம் அவர்ட்டதான் அடிவாங்கிட்டு கெடந்துச்சு ஆனா அந்தக்கா அடிச்சதும் பாக்கனுமே! நீ யார்டி எம் புருசன் மேல கை வைக்கனு ஒரே ரகளை. அந்தக்கா செம ஷாக்! என்னடா நாம இவங்களுக்காக பண்ணா இவங்க இப்படி பேசறாங்கனு.."
அவன்,"அடக்கடவுளே!"
இவள்,"அதுக்கடுத்து அந்தக்கா காலி பண்ணி போற வரைக்கும் ஒரு மாதிரி சங்கடத்தோடவே இருந்தாங்க அந்த ஏரியால"
அவன்,"இந்த கண்றாவிக்குதான் நான்லாம் யார் பிரச்சனைக்கும் போறதில்லை.. கீழயே பாரு! அந்த ஆளு அந்த அடி அடிக்கிறான் அந்த ஆன்ட்டிய! இத்தனைக்கும் அவங்க ஒன்னும் இவர் சம்பாதியத்துல இல்ல, இவரில்லனா வாழ்க்கை இல்லனு சொல்ல.. பண்றதெல்லாம் பண்ணிட்டு தெரியாம பண்ணிட்டேனு ஒரு வார்த்தை சொல்லிட்டா போதும் உடனே இந்த ஆன்ட்டீஸும் 'குடி மட்டும்தான்! மத்தபடி அந்த மனுசன் தங்கம்னு' கொடி பிடிக்கறாங்க. இதுல பேக்ரவ்ண்ட்ல எனக்காக பொறந்தாயே எனதழகா வேற!"
இவள்,"நீ ஏன்பா சொல்ல மாட்ட! ஒரு பொண்ணு தனியா இருக்கது எவ்வளோ பெரிய கஷ்டம்னு பயம்காட்டி வச்சுட்டு இப்ப வந்து சரியில்லனா விட்டிருனா எப்படி முடியும்? அப்படியும் யாராது வெளில வந்தா ஒடனே இந்த ஜெனரேஷனே இப்படிதான் எடுத்ததுக்கெல்லாம் டிவோர்ஸ், லாயல்டி இல்ல மண்ணாங்கட்டி இல்லனு உருட்டுவ'
"என்னவோ போ"
"ஹா..ஹா.. நீயேண்டா அதுக்கு இவ்வளோ காண்டாகற?" என்று இன்னொரு குரல் இவள் முதுகிற்குப் பின்னாலிருந்து வந்தது. ஹெச் ஆர் தானே அது?
இவன்,"ஹ்ம்.. எல்லாம் வேதனை தான்!"
ஹெச் ஆர்,"எதுக்காம்?"
இவன்,"உண்மையா காதலிக்கற எங்கள மாதிரி பசங்களலாம் விட்டு இந்த மாதிரி கஞ்சா குடுக்கியா பார்த்துப் போய் விழுங்க!"
இவள்,"வயித்தெறிச்சல் உனக்கு"
"பே!" என்றவனின் குரலைத் தொடர்ந்த இருக்கையை நகர்த்தும் சத்தமும் கீபோர்ட் தட்டலும் அவன் வேலையில் மூழ்கிவிட்டதை உணர்த்த இந்தப் பக்கமும் அமைதியானது.
தோளில் படிந்த கையால் திரும்பினாள்.
ஹெச் ஆர் தான்.
"உன் டீம்ல எதாவது ரெக்வைர்மென்ட் இருக்கா? ரெண்டு கேண்டிடேட்ஸ் இருக்காங்க. எத்தனை இருக்குனு சொன்னா ப்ரஸீட் பண்ணலாம்" போன்ற தகவல்களைக் கேட்டுக்கொண்டு அகன்றுவிட்டாள்.
இவளுக்குத்தான் இவர்கள் பேசியது தலைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. நிஜமாகவே அப்படியெல்லாம் நடக்குமா? இல்லை அந்த நேரச் சுவாரஸ்யத்தைக் கூட்ட இட்டுக்கட்டியதா? ப்ச் என்னவோ! எவன் எப்படி போனா எனக்கென்ன!
மணியைப் பார்த்தாள் மதிய இடைவேளை.
அதுக்குள்ள மதியமா?
இப்பொழுதெல்லாம் அவள் கண் முன்னாலே காலமும் காட்சிகளும் நழுவுகிறது. அதை உணர்ந்தும் உணராமலுமாய் ஒரு மனநிலையில் மௌனப் பார்வையாளராய் அவள் வாழ்க்கையின் பின் இருக்கையில் அமர்ந்திருக்கிறாள்.
வழமை போல சாப்பாட்டை எடுத்து வைத்தவள் ஒரு யூடியூப் காணொளியையும் ஓடவிட்டுக்கொண்டு உண்ணத் தொடங்கினாள்.
விவாத நிகழ்ச்சி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. இந்த கால இளைஞர்களின் தனிமை மோகத்தைப் பற்றிய விவாதம் போய்க்கொண்டிருந்தது. ஒட்ட விரும்பாது தனித்திருப்பதற்கும் ஒட்ட இயலாமல் தனித்திருப்பதற்குமான அடிப்படை வித்தியாசங்களைப் புறந்தள்ளிவிட்டு மேலோட்டமாக அதை வெறும் ட்ரெண்ட், கெத்து எனும் ரீதியில் கொண்டு சென்றதையும் இன்றைய இளைஞர்கள் என அமர்ந்திருந்தவர்கள் பேசிய அரைவேக்காட்டுத்தனமான விடயங்களும் எரிச்சலூட்ட அடுத்த காணொளிக்குத் தாவி விட்டாள்.
தனிமை ஒரு கோரப் பசி. உடலுக்காக அரை வயித்துப் பசியில் படுப்பவர்களுக்குப் பிறவி பட்டினியின் வலி புரிவதில்லை.
அதுவும் அதே சானலின் மற்றொரு நிகழ்ச்சி தான். 'வேடிக்கை பார்ப்பவர்கள்' என்ற தலைப்பில் நாம் தினம் தினம் கடந்து செல்லும், அதிகம் கவனத்தில் பதியாத சில மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் பற்றிப் பேசும் ஒரு நிகழ்ச்சி.
முதல் சில நிமிடங்கள் விளம்பரங்களில் கழிய, மறுபுறம் ஏதேதோ எண்ணங்கள் அதன்பாட்டில் ஓடிக்கொண்டிருக்கத் தன்னிச்சையாக உண்டுகொண்டிருந்தவளின் தொண்டை இறுகி உணவு இறங்க மறுத்தது. சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தவள் பிறகு மெல்ல அலைபேசியை அணைத்துவிட்டு உணவை மூடி வைத்தாள். சரியாய் ஐந்து நிமிடங்கள் அவள் எதிரிலிருந்த அவளது 'பே' தடுப்புச் சுவரையே வெறித்திருந்தவள் பிறகு வேலையில் அமிழ்ந்துவிட்டாள்.
இதுவும் ஒருவித மசில் மெமரிதான் போல! உள்ளுக்குள் பூகம்பமே வெடித்துக்கொண்டிருந்தாலும் செய்ய வேண்டிய வேலை தன்பாட்டில் ஓடிக்கொண்டிருப்பது.
எந்த பஸ்ஸை பிடித்தாள் எப்படி வந்தாள் என்றெல்லாம் கேட்டால் அவளுக்கும் தெரியாது. ஆனால் வந்துவிட்டாள்.
தன்னிடம் இருந்த சாவியை வைத்துத் திறந்து வீட்டினுள் நுழைந்தாள். பக்கத்து அறையில் காத்தாடி ஓடும் சத்தம் கேட்டது. அம்மா இன்று சீக்கிரம் வந்துவிட்டாள் போல. மணியை ஒரு தரம் ஏறிட்டவள் பிறகுத் தன் அறை புகுந்தாள்.
ஒரே நேர்கோடாய் செய்து பழகியதாலோ என்னவோ தங்கு தடையின்றி லாப்டாப் பையை ஒரு புறமும் அதிலிருந்த லாப்டாப்பை எடுத்து மேசை மீதும் வைத்தவள் நேராய் வந்து படுக்கையில் விழுந்தாள். பழைய காத்தாடி பரிதாபகரமாய் நின்றுகொண்டிருந்தது. ஏனோ, ஏதோ ஒரு விதத்தில் தானும் இந்த தூசு ஏறிய காத்தாடிபோல் நின்றுவிட்டதாய் பட்டது. எழுந்து சென்று ஸ்விட்சை தட்டினாள். காத்தாடி சுழன்றது. மீண்டும் தனது அலைபேசியை எடுத்தவள் அந்த காணொளியை ஓடவிட்டாள்.
அதில் ஒரு நடுத்தர வயது மனிதர் பேசிக்கொண்டிருந்தார். நடைபாதை வாசியாம். அவர் பேசியதின் சாராம்சம் இதுவே, என் கையில் கிடைத்த அனைத்தையும் தொலைத்துவிட்டேன். அழகான குடும்பம், செழிப்பான வாழ்வென அத்தனையையும் சில தீயப்பழக்கங்களால் தொலைத்துவிட்டேன். இன்று நடுத்தெருவில் ஆதரவில்லாமல் நிற்கிறேன் என்றவர் தான் செய்த தவறுக்கு எவ்வளவு வருந்துகிறேன் என்று சொன்னதும் அதற்குப் பின்னால் ஒலித்த சோக இசையும் அந்த பேட்டி எடுக்கும் பெண்ணின் பிசிறு தட்டும் குரலும் அக்காட்சியை மனதோடு போட்டு அமுக்கி அழுத்துவதுபோலொரு பிம்பம் நிச்சயம் அனைவருக்கும் எழும். அதிலும் அவர் உரைத்த,"என் பொண்ண நான் பாத்துருக்கேன்.. நல்லா வளந்துட்டா.. எனக்கு அது போதும்"
கையிலிருந்த மொபைல் நழுவி 'சொத்' என இவள் முகத்தில் விழ அசையாமல் கிடந்தவள் எழுந்து நிலைக் கண்ணாடியின் முன் நின்றாள். இரண்டு முழு நிமிடங்கள் வெப்பமாய் கலங்கி நின்ற தன் கண்களையே மங்கல் பார்வை பார்த்தவள் தன் டீஷர்ட்டை கழட்டி எறிய, முதுகில் ஆங்காங்கே வட்டமிட்டிருந்த தழும்புகளின் நிக்கோட்டீன் வீச்சம் இன்னமும் அவள் மூக்கை நிமிண்டி துரத்தியது.
கமெண்டுகளில் வந்திருந்தவை அவளைச் சுற்றிச் சுற்றி ஓடுவதாய் ஒரு மாயை எழுந்தது.
'ச்ச! இதுதான் அப்பாங்கறது. இப்பவாது இவர் பொண்ணு இவரோட சேரணும்"
'தப்பு செய்றது மனித இயல்பு. இவர பாத்தா அதை உணர்ந்துட்டா மாதிரிதான் தெரியுது. இவர் வைஃப் இவர மன்னிச்சு ஏத்துக்கலாமே!'
'ஆண்டவா அந்த பொண்ணுக்கு நல்ல புத்திய குடு'
'பெத்த தகப்பன ரோட்ல பாத்துட்டு எப்படி விட்டுப்போக மனசு வருதோ!'
'திருந்தினவங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாமே'
'என்ன நடந்துருந்தாலும் இவர் இப்படி கஷ்டப்படும்போது விடறது சரியில்லை'
'இவர் அட்ரஸ் குடுங்க. நான் இவருக்கு உதவி செய்ய விரும்பறேன்'
'இவரு எங்க வீட்டுக்கிட்ட இருந்தவர்தான். இவர் வைஃப் தான் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி பொண்ண கூட்டிட்டு போய்ட்டாங்க'
'இந்த மாதிரி பொம்பளைங்கனாலதான் பாதி பசங்க வாழ்க்கை வீணாகுது'
'நீங்கள் உங்கள் குடும்பத்துடன் சேர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்'
அத்தனை கமெண்ட்டுகளுமாய் சேர்ந்து அவள் தோளைச் சுட்டு விரல்கொண்டு குத்துவதுபோல் உணர்ந்தாள். பரபரவென தேய்த்துக்கொண்டவளின் பார்வை கதவு இடுக்கு வழியாய் தெரிந்த எதிர்த்த அறையில் நிலைத்தது.
அம்மா புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருப்பது தெரிந்தது.
வருடங்கள் பல தூக்கம் தொலைத்துத் திரிந்தவள் இன்று ஒதுங்க இடம் கிடைத்தும் அயர முடியாது அல்லாடிக்கொண்டிருக்கிறாள். இன்றும் உடலும் உள்ளமும் கொஞ்சமும் தளராமல் இறுக்கமாய் எங்கோ இருந்து வரப்போகும் ஏதோவொரு அபாயத்தை எதிர்கொள்ளத் தயார்நிலையிலேயே இருக்கிறது. இல்லையெனில் பாம்புக்குக் கூட பயப்படாதவளின் உடல் எதார்த்தமாய் அடுத்தவர் கை பட்டாலும் அதிர்ந்து அடங்குவதையும் மெல்லிய அதிர்விலும் பதறி எழுந்தமர்வதையும் என்னவென்று சொல்ல.
பெருமூச்சொன்றை வெளியிட்டவள் படுக்கையில் சரிந்தாள்.
இவர்கள் யார்? என்ன தெரியும் இவர்களுக்கு? ஏதோ கூட இருந்தவர்கள் போலல்லவா பேச்சும் அறிவுரையும்! எதுவும் தெரியாமல் எந்த தைரியத்தில் பேசுகிறார்கள்?
ஆமாம்.. இவர்களுக்கு எதுவும் தெரியத்தான் இல்லை! இவர்கள் வெறும் வேடிக்கை பார்ப்பவர்கள். சொந்த வாழ்வில் சுமை கழுத்தை நெறிக்கையில் அடுத்தவர் வாழ்க்கையிலிருந்து அத்தனையும் வேடிக்கைபார்த்துக் கடந்து செல்பவர்கள். அவனவன் தன் வாழ்வையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான், இப்போதைய என்னைப்போல. இவர்களைச் சொல்லி ஒன்றுமில்லை. ஏனெனில் இவர்களும் என்னைப்போல் வேடிக்கை பார்ப்பவர்கள்.
இப்பொழுது இந்த உலகமே என்னை வேடிக்கைப் பார்ப்பதுபோலொரு உணர்வு. இன்னும் சில நொடிகளில் என் மேல் விழும் இந்த கண்ணைக் கூசும் ஒளியில் இருந்து விலகி முன்னால் நிற்கும் கூட்டத்தில் ஒரு ஓரமாய் ஒதுங்கிப்போவேன். அப்பொழுது இவ்விடத்திற்கு இன்னொருவர் வரக்கூடும். அவர் ஓரத்தில் நிற்கும் என்னையும் சேர்த்துச் சாடக்கூடும்.
ஏனென்றால், நாம் வேடிக்கை பார்க்கிறோம்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்