logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

நயினார்

சிறுகதை வரிசை எண் # 259


தார்ச்சாலையில் பூக்கள் ----------------------------------------- சூரியன் உச்சத்திலிருந்ததால் வெயில் சிரித்து வியர்வையை பறித்துக் கொண்டிருந்தது. மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார் பூவேந்தன் பைக்ல உரசிட்டுப் போறவங்க அசால்டா ஒரு கோடுதானேனு சொல்றாங்க..அதை சரி செய்ய எத்தனை மணி நேரமாகுது..எவ்ள செலவாகுது.. எப்பப்பாரு என் தங்கச்சிகிட்ட போய் நிக்க முடியாது இந்தாங்க பத்தாயிரம் இதுக்கு மேல எதுவும் செய்ய முடியாது.. அண்ணே இன்னும் நாலு வருசமெல்லாம் கஷ்டம் இரண்டு வருசத்ல வேற வண்டிய பாருங்க டிங்கரிங்கும் பெயிண்ட்டுக்குமே நாப்பாத்திமூனாயிரம் ஆச்சுனா ஆர்டிஓ ஆபிஸ் செலவுக்கு என்ன செய்றது இப்படி உரையாடல்களை சுமந்துகொண்டு பயணம் போவதாக நினைத்த சிந்தனை செக்குமாடாய் அவரை சுற்றியபடியே இருந்தது. ஐம்பதை தொட்டும் இளமையை விடாத பூவேந்தன் ஒரு கால்டாக்ஸி டிரைவர் என்றால் எவரும் நம்பமாட்டார்கள் பளிச்சென மிடுக்கும் தோரணையும் இன்னும் ஒரு தொழிலதிபராகவே காட்டிக்கொண்டிருக்கிறது அவர் தோற்றம் எட்டு வருடங்களுக்கு முன் வியாபரத்தில் ஏற்பட்ட சரிவில் கடனோடு விழுந்து வட்டியில் மூழ்கி ஒரு வழியாக எழுவதற்குள் நிறைய இழந்திருந்தார். தளராத நம்பிக்கையை வழங்கிய மனைவி மல்லிகாவின் முயற்சியோடு புதியதாக ஒரு காரை வாங்கி பண்ணாட்டு நிறுவனத்தோடு இணைத்து காரோட்டும் பூவேந்தன் கடும் உழைப்பால் காரை வைத்துக்கொண்டு குடும்பத்தை ஓட்டி வருகிறார். மகள் சென்பகத்தை நல்ல இடத்தில் ஆறு மாதங்களுக்கு முன் கட்டிக்கொடுத்ததும் மகன் பூவரசன் பொறியியல் கல்லூரியில் முதல் வருடம் படிப்பதும் பூவேந்தன் உழைப்போடு மல்லிகாவின் சிக்கனமும் ஒரு காரணமாகும். ஆமாம் காய்கறியோ மளிகை சாமானோ ஒரு ரூபாய் குறைவென்றால் ஒரு கிலோமீட்டர் நடக்கவும் தயங்கமாட்டாள். பேருந்து வந்ததையோ பூவேந்தன் வேளச்சேரியில் இறங்கியதையோ கவனிக்கவில்லை வீட்டு வாசலில் மகளின் செருப்பை பார்த்ததும் அவருக்கு சோர்வு கொஞ்சமாக விடைபெற்றது என்னப்பா வண்டிய விட்டுட்டு வர இவ்ள நேரமா..எவ்ள கேட்டாங்க அம்மா புலம்பிட்டேயிருக்கு.. மகள் சிரித்தாள். எப்போதும் போல குழி விழுந்த அவள் கன்னத்தில் தன் சோகத்தை தூக்கிப்போட்டார் பூவேந்தன். சமையலறையிலிருந்து சத்தம் கேட்டு வந்த மல்லிகா.. மருமகன் அந்த ரூம்ல இருக்காரு போய் பாத்து வாங்கனு கேட்டு வாங்க.. எல்லோருக்கும் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்..என்றாள் மல்லி எதிர்பார்த்ததை விட பட்ஜெட் எகிறுது டிங்கரிங் பெயிண்டிங்கு நாப்பத்தி மூனாயிரம் கேட்கிறாங்க.. சொல்லிக்கொண்டே சின்ன அறைக்கு போனார். ஓ..நினைச்சேன் என்னிக்கி நீங்க கரக்டா கணிச்சிருக்கீங்க..வண்டிக்கு எப்சி இன்சூரன்ஸ் ரிப்பேர்னு என் தலைய தான் உருட்டுவீங்க..எப்பா சாமி நீங்க கேட்ட பத்தாயிரத்த வாங்கி கொடுத்திட்டேன் இனிலாம் என்னை கேட்டுறாதீங்க.. சாப்பாடு எடுத்து வைத்துக்கொண்டே சொன்னவளின் சத்தம் கொஞ்சம் கூடியதால் பெரிய அறையிலிருந்த மகன் பூவரசன் வெளியே வந்தான். மருமகனை வாங்க என கேட்டுவிட்டு வந்த அப்பாவை..போய் கால் முகம் கழுவிட்டு வாங்கப்பா சாப்பிடுவீங்க..தம்பி உங்களுக்காக வெயிட்டிங்.. மகள் சென்பகம் சொன்னதும் எடுத்து வைத்திருந்த தண்ணீர் தம்ளரில் வாய் வைத்தபடி மனைவியை பார்வையால் உருஞ்சினான் புரிந்த மல்லிகா.. ஆள விடுங்கப்பா என்கிட்ட பணம்னு எதுவும் கேட்டிராதீங்க..சாயங்காலம் சந்தோசமா கிளம்ப முடியாது.. ஏம்மா அவரே வெயில்ல சோர்ந்துபோய் வந்திருக்காரு..ஏம்ப்பா இந்த மாசம் எப்சி வரும்னு முன்னாடியே தெரியும்ல சேத்து வச்சிருக்க கூடாதா எதாவது பிளான் பண்ணிருக்கலாம்ல.. ஹாலில் அம்மாவின் சீதன கட்டிலில் அமர்ந்த பூவேந்தன் பக்கத்தில் போய் அமர்ந்தாள் உன் கல்யாணத்துக்கு வாங்குன சிலலறை கடனை அடைச்சி இருபதாயிரம் சேத்ததே பெரிய விஷயம்..முப்பதாயிரத்ல முடியும்னு நினைச்சேன்..என்ன பண்றது..இன்னும் ஆர் டி ஓ ஆபிஸ்ல எப்படியும் அஞ்சாயிரத்துக்கு குறையாம ஆகும்.. எழுந்து சட்டையை கழட்டினார் அவ்ள ஏன் இதுக்கு முன்னாடி மூவாயிரம்தானே ஆகும் சட்டையை வாங்கினாள் சென்பகம். இப்பதான் ஸ்டிக்கர் ஓட்டுற வேலைய கொடுத்திருக்காங்களே..ஐநூறு ரூபாய்தான் மதிப்பு அதுக்கு குறிப்பிட்ட கடைலதான் வாங்கி ஒட்டனும் ஆயிரத்து இருநூறு ரூபாய்..எதுலலாம் காசு பாக்க முடியுமோ பாக்றாங்க அப்டியிருந்தும் பொது சொத்தை விக்கிறாங்க..நல்லவேளை ஸ்பீடு கவர்னர்னு ஒரு பொருள் பத்து பைசாவுக்கு பிரயோசனமில்ல அது ரினிவல் பண்ணிக்கலாமாம் இல்லனா அதுக்கு ஆறாயிரம் ஆகியிருக்கும்.. மகளையும் மனைவியையும் ஒரே நேரத்தில் பார்த்தார். அது எதுக்குப்பா.. சிட்டில அறுபதுக்கு மேல போகக்கூடாதுனுதான்..இருக்கிற டிராபிக்ல நாப்பதுல போறதே பெரிய விஷயம்.. பூவரசன் எதையோ தேடியபடியே சொன்னான் பரவால மகனே உனக்கு இவ்வளவு தெரிஞ்சிருக்கா..இதுல காமெடி என்னன்னா அதை யாரும் பொருத்துறதே இல்லை ச்சும்மா காமிச்சிட்டு எடுத்திடுவாங்க..சரி இரண்டு பேரும் அம்மா கிட்ட பேசி எதாவது வழி பண்ணுங்க..முகம் கழுவிட்டு வரேன்.. சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு நகர்ந்தார் கவலைப்படாதீங்க இறைவன் இருக்கான்..சென்பா மச்சானை கூப்டு ஒன்னா சாப்பிடலாம்.. சார்ஜரை கண்டுபிடித்தவனாக எடுத்து அவன் பையில் வைத்தான். நைட் என்ன சாப்பாடுமா.. இட்லியும் சட்னியும்தான் எல்லோருக்கும் செய்யனும்ல.. சித்தி மாமா மொத்த குடும்பத்துக்கும் நீதான் செய்றியா.. ஆமா கல்யாணத்துக்கு பத்து பைசா செலவில்லாம போறோம் நாம இதுகூட செய்யலனா எப்டி..கிளம்புற வரை வேலை சரியா இருக்கும் எல்லோரும் துணி எடுத்து பேக் பண்ணிட்டீங்க..உங்கப்பா இப்பதான் வந்து அயர்ன் பண்ணும்பார்..பாரு.. தட்டுகளை பரப்பினாள் அந்த ஊருக்கு ஆறுநாள் ரொம்ப அதிகம் இராமேஸ்வரம் கூட்டிட்டு போறதா மாமா சொன்னதால வரேன்.. பூவரசன் சொன்னதும்..டேய் அப்பாட்ட சொல்லி வை..மாமாவை நம்ப முடியாது.. சென்பகம் சிரித்தபடி இருந்த தட்டுகளில் சோற்றை நிறைத்தாள் ஏன் மல்லி டை அடிச்சிருக்க கூடாது..பல வருஷத்துக்கு பிறகு பிறந்து ஊருக்கு போற.. முகத்தை துடைத்தபடியே சிரித்த பூவேந்தனை முறைத்தாள் மல்லிகா அது ஒன்னுதான் குறை..வீட்டுக்கு மருமகன் வந்தபிறகும் நீங்க தான் யூத் யூத்னு ஆடுறீங்க நான் வேறயா.. முந்தானையை சரி செய்தாள். சரி பணத்துக்கு என்ன முடிவு பண்ணீங்க..அந்த ரூட் கிளியரானதான் நிம்மதி..எங்கமா சாப்பிட மருமனை கூப்பிடலயா.. சாப்பிட உட்கார்ந்தார் நீங்க மூனுபேரும் சாப்பிடுங்க நானும் அவரும் கொஞ்ச நேரம் கழிச்சி சாப்பிடுறோம்..வண்டிக்கு இன்னும் எவ்ள தேவையிருக்குப்பா.. பக்கத்தில் அமர்ந்து பரிமாறினாள் முப்பது கைல இருக்கு..பதிமூனு இங்க..எலக்டரீசன் ஒர்க் கொஞ்சம் இருக்கு ஆர்டிஓ ஆபீஸ்ல ஆறு..இன்னும் இருபதாயிரம் கிட்ட தேவையிருக்குமா.. சாம்பாரை சோற்றில் ஊற்றினார். பாரு சென்பா முப்பதுனு சொல்லிட்டு ஐம்பதுக்கு கொண்டாந்திருக்காரு.. மகளை பார்த்தாள் மல்லிகா அவர் என்னமா செய்வாரு..நீங்க கவலைப்படாதீங்கப்பா..நான் வளையல் தரேன் அதை வச்சி வேலையை முடிங்க.. சுடியின் துப்பட்டாவை சேர்த்து முடிச்சுப்போட்டாள் அம்மாடி இல்ல வேணாம்மா..அந்த நினைப்பே வரக்கூடாது உனக்கு..ஏற்கனவே உன் பிரண்ட் வாங்குன கடனுக்கு ஜாமீன் போட்டதுக்காக நீ இ.எம்.ஐ கட்டுறதே கஷ்டமாயிருக்கு இது வேறயா.. என்கிட்ட எட்டாயிரம் இருக்கு..வேணும்னா தரேன்.. பூவரசன் சாப்பிட்டபடியே சொல்ல.. பூவேந்தனும் சென்பகமும் கோரசாக ஹே..என்றார்கள் எப்படி செல்லப்பா இவ்ள பணம்.. வியப்பாக கேட்டார் பூவேந்தன் இன்னும் ஆறுமாசத்ல எனக்கு லேப்டாப் வாங்கனும்..மொத்தமா உங்களுக்கு கஷ்டமாயிருக்குமேன்னு நீங்க கொடுக்கிற காசை சேத்து வச்சேன்.. சோற்றை பிசைந்தபடியே சொன்ன பூவரசனை பூரிப்போடு பார்த்தார்கள் மூவரும் பாத்தியா மல்லி மகனை..சூப்பர்ல.. குடும்பமே மணக்குதுபா.. செடில இருந்தாலும் சிரிக்கும்..பறிச்சாலும் சிரிக்கும்..பிச்சிப்போட்டாலும் சிரிக்கும் இந்த பூ..அதனாலயே பூவரசன்னு வச்சேன்.. இது நல்லாயிருக்கே எனக்கும் இந்த பூ பெயரை அப்படித்தான் வச்சீங்களா..சிரித்தாள் சென்பகம் உன் காசை அப்படியே வச்சிக்க பூவா..மொத்தமா வளையல் வச்சி செலவ பாக்கட்டும்.. சென்பகம் சொன்னதும் மனைவி மல்லிகாவை பார்த்தார் பூவேந்தன். வேற வழியில்ல ஒரு மாசத்ல வண்டி ஓட்டி மீட்டு கொடுத்திடுங்க..மருமகன்கிட்ட கேட்கனும்..அவர் சரின்னா ஓகேதான்.. அவ்ளதானே இப்பவே கேட்டுட்டு வரேன்.. எழுந்து அறைக்கு ஓடினாள் சென்பகம். என்ன மல்லி அவங்க வீட்டுக்கு தெரிஞ்சா நல்லாயிருக்காதே.. அதெல்லாம் தெரியாது..மருமகன் சொல்லமாட்டாரு.. சொல்லும்போதே அறையிலிருந்து வெளியே வந்தான் சென்பகத்தின் கணவன் என்கிட்ட கேட்க என்ன இருக்கு மாமா நீங்க போட்ட பொருள் உங்க அவசரத்துக்கு இல்லனா எப்படி..நான் வீட்ல சொல்லமாட்டேன்..உங்களால எப்ப முடியுதோ அப்ப கொடுங்க.. சொன்னவனை பார்த்து ம் என்றவர்.. வெட்கத்தில் பேசவில்லை ரொம்ப சந்தோசம்ங்க மல்லிகா சிரித்தாள் நிறைவாக உணர்ந்த பூவேந்தனுக்கு இப்போதுதான் பசித்தது. சாப்பிட்டு முடித்த கையோடு பெயின்டரை அலைபேசியில் அழைத்தார் சுப்பு..பத்தாயிரம் அனுப்பியிருக்கேன்..ஒரு வழியா பணம் ரெடியாகிடுச்சு..வேலை சுத்தமா இருக்கட்டும்..நான் வர ஒரு வாரமாகும் வர்ரதுக்குள்ள முடிச்சீங்கனா ரொம்ப சந்தோசப்படுவேன்..எலக்டரீசன்ட்ட ஒரு மணி நேர வேலையிருக்கு..மறுநாள் எப்சி பாஸ் பண்ண போயிடுவேன்..எதுவும் முக்கியம்னா கால் பண்ணுங்க.. பேசி வைத்ததும் மல்லிகாவை பார்த்தார். பரபரவென சமையலறையில் இருந்தாள் நீண்ட நாட்களுக்கு பிறகு இராமநாதபும் அதுவும் தன் உடன்பிறப்புகளின் குடும்பத்தோடு செல்ல இருப்பதில் துள்ளல் தெரிந்தது. ஆறு மணி இரயிலுக்கு ஐந்து நாற்பதுக்கு இரயிலில் மொத்தப்பேரும் ஏறினார்கள் ஏறுவதற்கு முன் மல்லிகாவின் தங்கை பூவேந்தனை அழைத்து அவள் கணவன் பார்க்காத நேரம் அவன் சட்டை பையில் பணத்தை தினித்தாள் ஐயாயிரம் இருக்கு போக வர செலவுக்கு இருக்கட்டும்.. சட்டென நகர்ந்தாள் ஒரு காலத்தில் நன்றாக செலவு செய்தவனின் கையில் இப்போது பணமில்லாமலிருந்தால் எப்படி என நினைத்திருக்கலாம் சம்பாதித்ததை போல உதவி என கேட்காதவர்களுக்கும் தன் நேரத்தையும் பணத்தையும் செலவு செய்த பூவேந்தன் வசதிக்கேற்ப தன்னை இறைவன் பக்குவப்படுத்தியதாகவே நினைக்கிறார். ஒரு வாரம் சென்றது.ஊரிலிருந்த நாட்களில் தினமும் வண்டியை பற்றி விசாரித்தபடி இருந்ததால் எப்.சி..அதாவது பிட்டிங் சர்டிபிகேட் வாங்க வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்ல நாளை தீர்மாணித்திருந்தார். இன்னும் அரை மணி நேரத்ல பாலிஷ் போட்டு முடிச்சிடுவேன்..எடுத்திட்டு போகலாம்..என்ன அண்ணே வண்டி எப்படி இருக்கு.. கேட்ட பெயிண்டரை பார்க்காமல் வண்டியை சுற்றி சுற்றி வந்தார் பள பளவென மின்னிய வண்டியை தடவியபடியே..நல்லாயிருக்கு அதுக்குதான் சுப்பு உன்கிட்ட விட்டேன்.. நம்பர் பிளேட் மாத்திடுங்க..லைட்டெல்லாம் எரியுதான்னு செக்கப் பண்ணிடுங்க..இப்ப பண்ண பிறகு அடுத்து இரண்டு வருஷம் கழிச்சிதானே எப்.சி.. இல்ல சுப்பு எட்டு வருஷம் வரைதான் இரண்டு வருஷத்துக்கு ஒரு முறை நம்ம வண்டி ஒன்பது வருஷமாச்சுல இனி வருஷாவருஷம் எப்சி.. ஓ..அப்படியா..அப்ப அடுத்த வருஷம் வரை கீரல் விழாம பாத்துக்கங்க..ஒரு ரப்பிங் பாலிஷ் போட்டா போதும்.. ஆமா சுப்பு நிறைய செலவு பண்ணிட்டேன் அடுத்த எப் சிக்கு பெயிண்ட் அடிக்காம பாத்துக்கனும்.. டிங்கரிங்..பட்டி..பேஸ்..கலர்..ரப்பிங்.. மீண்டும் கலர்..கிளியர்..பிறகு ரப்பிங் பாலிஷ்..வாட்டர் வாஷ்..மீண்டும் ஒரு பாலிஷ் என மெருகேற்றியதால் மின்னிய அந்த இண்டிகா காரை பென்ஸ் காரைப்போல பாவித்து அமர்ந்தார். வரட்டுமா சுப்பு.. ம்..சரிங்கனே சாயங்காலம் ஒரு பூசனிக்காய் உடைச்சி ஒரு பூஜை போட்றுங்க.. கண்டிப்பா..மெல்ல நகர்த்தினார். மடிப்பாக்கத்திலிருந்து வேளச்சேரி வந்து புதியதாக நம்பர் பிளேட் மாற்றி எலக்ட்ரீசன் வேலையை முடித்துக்கொண்டு மறக்காமல் பூசனிக்காயை வாங்கி வைத்தபடி உருட்டினார். மாலை நேரப் போக்குவரத்து தொடங்கிவிட்டது. இடதுபுறமாகவே வந்து கொண்டிருந்தவரை மூன்று பேர் கெஞ்சியபடியே கை காட்டி நிறுத்த சொன்னார்கள். பதட்டமாக இருந்ததை பார்த்து இண்டிகேட்டரை போட்டபடி ஓரமாக நிறுத்தினார். ஸார்..திடீர்னு அப்பாவுக்கு நெஞ்சுவலி ராயப்பேட்டை போகனும் வலியால துடிக்கிறாரு வரீங்களா.. மகள் வயது பெண்..சாலையோரத்தில் அமர்ந்திருந்தவரை காட்டினாள். நான் டூட்டி பாக்கலமா..ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணி வரவழைங்க.. இல்ல அங்கிள் ஆம்புலன்ஸ்ல பேசுறவங்க எல்லோருமே கொஞ்சம் தூரமா இருக்காங்க..இந்த டிராபிக்ல வர லேட்டாகும்..அப்பாவுக்கு நல்லா வியர்க்குது பயமா இருக்கு பிளீஸ் அங்கிள்.. வண்டிக்குள் தலையை விட்டு சொன்னவன் பூவரசன் வயதென்பதால் மேலும் கெஞ்சுவதை காண சகிக்காமல் சரி வண்டில ஏறுங்க.. என்றார். அவசரமாக அவர்கள் வண்டியில் ஏறியதும்..வண்டியை செலுத்தினார் கண்ணாடி வழியாக பின்புறம் பார்த்தார் தன் வயதுதான் இருக்கும்..தலை கவிழ்ந்திருந்தார். அவர் தோள் பிடித்த நிலையில் மனைவி கண் கலங்கியிருந்தது தெரிந்தது.பக்கத்தில் மகள் யாரிடமோ நிலவரத்தை அலைபேசியில் மூச்சுவாங்க சொல்லிக் கொண்டிருந்தாள் முன் இருக்கையிலிருந்த மகன் முன்னும் பார்த்துக் கொண்டிருந்தான் சைதாப்பேட்டை வரை வேகமாக வந்த வண்டி அதன் பிறகு நெரிசலில் சிக்கியது அலைபேசியில் மனைவி மல்லிகா அழைக்கவும் எடுத்தார். வண்டி வேலை முடிஞ்சிடுச்சு..வீட்டுக்கு வர்ர வழியில அவசரமா ஆஸ்பத்திரி போகனும்னாங்க..ராயப்பேட்டை போயிட்டிருக்கேன்..போயிட்டு வரேன்.. நாளைக்கு எப்சி பாஸ் பண்ணப் போகனும்னு சொன்னீங்களே..இப்ப அதுக்குள்ள ஏன் சவாரி போனீங்க.. வந்திடுவேன்..வைமா.. அலைபேசி வைத்துவிட்டு நன்தனம் சிங்னலை கடக்க வேகமெடுத்தார்..அதற்குள் சிவப்புக்கு மாற நிறுத்தினார். இதை எதிர்பாராத ஸ்கூட்டி ஆசாமி உரசுவதுபோல வந்து நிறுத்தினான் இன்னா தல நீ போயிடுவேன்னுதானே வேகமாக வந்தேன்..என்றவனை புன்னகைத்தார். ஆமா அங்கிள் நிக்காம போயிருக்கலாம்.. பின்புறம் அப்பாவை பார்த்துக்கொண்டே சொன்னான் இன்னும் கால்மணி நேரத்ல போயிடலாம்..என்னை பதட்டப்படுத்தாதே.. பச்சை வரும் முன்பே பாய்ந்தார் இடது வலது என கிடைக்கும் இடைவெளியில் புகுந்து புகுந்து முன்னேறி மருத்தவமணை அவசரப்பிரிவில் நிறுத்தினார். வேக வேகமாக இறங்கியவர்கள் உள்ளே நுழைந்ததும்..சக்கர நாற்காலி கொண்டுவரப்பட்டு முடியாதவரை ஏற்றினார்கள். எவருக்காகவும் காத்திருக்கவில்லை வண்டியை நகர்த்தி வெளியே வந்தார். மாரடைப்பாக தான் இருக்கும் சரியான நேரத்திற்கு கொண்டு வந்த நிறைவு இருந்தது. ஆசுவாசமாக வண்டியை வீட்டிற்கு ஓட்டி வந்தவர் சட்டென யோசித்தார் அந்த ஸ்கூட்டி ஆசாமி உரசுவதுபோல வந்தானே உரசியிருப்பானோ.. வீட்டு வாசலுக்கு அருகே நிறுத்திவிட்டு இடது பக்கம் வந்து பார்த்தவர் அதிர்ந்தார். வண்டி சத்தம் கேட்டு மனைவி வாசலுக்கு வரவும் என்ன சொல்வது என்று தெரியாமல் வீட்டிற்குள் நுழைந்தார் பூவேந்தன். வண்டியை சுற்றி பார்க்க ஆரம்பித்தாள் மல்லிகா ஸ்கூட்டிகளில் தேவைப்படாத நேரத்தில் பின்புறம் உட்காருபவரின் மிதியடியை மடக்கி வைக்கலாம். துணிச்சலான தன் செயலுக்கு கிடைத்த வீரத் தழும்புகள் என்றோ.. ஒரு உயிரை காப்பாற்ற எடுத்துக்கொண்ட முயற்சிக்கு கிடைத்த பதக்கமென்றோ.. வண்டியே பேசி மல்லிகாவை சமாதானப்படுத்தினால்தான் உண்டு.. ஆமாம்.. இடதுபுரத்தில் முன்கதவில் தொடங்கி பின்கதவின் பாதிவரை பட்டையாக தகரத்தை கிழித்திருக்கிறது அந்த கோடு நயினார் வேளச்சேரி, சென்னை 42.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in