Kavinmathi V
சிறுகதை வரிசை எண்
# 258
நட்பு
அழகாக பச்சைப்பசேல் என்று பார்ப்பதற்கே மெய்சிலிர்க்கவைக்கும் ஊரான பூம்பட்டினத்தில் தனியார் பெண்கள் பள்ளி ஒன்று உள்ளது. அதன் குறிக்கோள் அவர்களால் முடிந்த வரை அனைத்து பெண் குழந்தைகளுக்கும் படிப்பையும் மற்றும் வாழ்வியலையும் கற்றுத் தர வேண்டும் என்பது தான்.
அங்கு ஆறாம் வகுப்பு பயிலும் மாணவிகளை ஆசிரியர்களிலிருந்து அனைவருக்கும் பிடிக்கும். அதில் பெரும்பாலான குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். ஒரு சில குழந்தைகள் தான் மெல்ல கற்பார்கள். அனைவரிடமும் ஒவ்வொரு விதவிதமான திறமைகள் உண்டு. தேர்வு காலம் என்றாலே ஆரோக்கியமான போட்டி நிலவும்.
இப்பள்ளியில் ஆண்டு விழா மழலையர் முதல் ஐந்தாம் வகுப்பு வரை மார்ச் பத்தாம் தேதி அன்றும், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மார்ச் பதினோறாம் தேதி அன்றும் நடைபெற்றது. கமலா, மாலா, தேவி மூவரும் மிக சிறந்த தோழிகள். கமலா, மாலா இருவரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் .தேவி நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அது மட்டுமல்லாமல் தேவி எப்பொழுதும் தேர்வில் முதல் இடத்தைப் பிடிப்பதால் தான் இருவரும் அவளுடன் பேசுகிறார்கள். ஆனால் இது தேவிக்குத் தெரியாது.
ஆண்டு விழா அன்று எங்கு பார்த்தாலும் ஒரே மகிழ்ச்சி. அனைவரும் ஆடி பாடி சந்தோசமாக இருந்தார்கள். அப்பொழுது ஆறாம் வகுப்பு மாணவிகளுக்குள் சண்டை மூண்டது. ஒற்றுமையாக, கலகல என்றிருக்கும் தோழிகளுக்குள்ளே பூசல் ஏற்பட்டது. ஆண்டு விழா நடனத்திற்காக ஆறாம் மற்றும் ஏழாம் வகுப்பு மாணவிகளை ஒரே அறையில் இருக்க சொன்னார்கள். அந்த அறையிலே கமலி என்ற ஏழாம் வகுப்பு மாணவி மட்டும் தான் தண்ணீர் பாட்டில் வைத்து இருந்தாள்.
கமலா அன்று ஊருக்கு சென்றதால் பள்ளி ஆண்டு விழாவிற்கு வரவில்லை. மாலா, தேவி மட்டும் தான் இருந்தார்கள். மாலா கமலியிடம் தண்ணீர் பாட்டிலை வாங்கி தண்ணீர்க் குடித்துக் கொண்டிருந்தாள். அந்த அறையில் இரண்டு வகுப்பு மாணவிகளும் இருந்ததால், நெரிசலாக இருந்தது. மாலா தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் போது தேவி நேரிசலில் இடித்து தண்ணீர் சிதறி மாலாவின் ஒப்பனையைக் களைத்து விட்டது. தேவி என்னை மன்னித்து விடு என்று சொன்னாலும் மாலா கேட்காமல் அவளுடன் பேசவில்லை. அது மட்டுமின்றி தகாத வார்த்தைகளால் பேசி தேவியை புண்படுத்தினாள்.
பள்ளி ஆண்டுவிழா முடிந்தது. ஆனாலும் மாலா தேவியுடன் பேசவில்லை. இரண்டு நாள் விடுமுறை. திங்கட்கிழமை மூவரும் பள்ளிக்கு வந்திருந்தார்கள். அப்போது, மாலா கமலாவிடம் தேவி "தான் அழகாக இருந்ததால் பொறாமையில், என் மீது தண்ணீரை வேண்டும் என்றே கொட்டி எனது ஒப்பனையை களைத்து விட்டாள்" என்று அழுது கொண்டேக் கூறினாள். எனவே, தேவியிடம் நீ பேசக்கூடாது என்று கூறியதால் கமலா பேசவில்லை.
தேவி யாரும் தன்னை புரிந்துக் கொள்ளவில்லை என்ற கவலையிலே இருந்தாள். மறுநாள் அவள் பள்ளிக்குக் கிளம்பிவிட்டு, மதிய உணவு எடுத்து வைக்கும்போது கை தவறு கண்ணாடி கிண்ணம் கீழே விழுந்து உடைந்தது. உடைந்த கண்ணாடித் துகள்களை எடுத்துக் குப்பைத்தொட்டியில் போட்டு விட்டு அம்மாவிடம் சொன்னால் திட்டுவாங்களோ? என்று எண்ணி சொல்லாமல் பள்ளிக்கு சென்றுவிட்டாள்.
ஆனால் , அம்மாவுக்கு இது எப்படியோ தெரிந்துவிட்டது. அவள் பள்ளி விட்டு வந்ததும் அவள் அம்மா அன்பாக ஏன் நீ கண்ணாடித் துகள்களைப் பெருக்கினாய் கையில் குத்தியிருந்தால் என்ன ஆவது?என்றார். உடனே அவள் அம்மாவை அணைத்துக் கொண்டு என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா, உங்களிடம் கூற பயமாக இருந்தது, அதனால் தான் கூற வில்லை என்றாள்.
உன் பள்ளி ஆண்டு விழா அன்று நடந்ததும் எனக்குத் தெரியும் என்று சொன்ன அவள் அம்மா, தேவியிடம் "பிரிந்து செல்ல நினைப்பவர்களிடம் புரிந்து கொள் என்று கெஞ்சாதே. புரிந்து கொண்டவர்களாக இருந்தால் பிரிவைப் பற்றி அவர்கள் நினைத்திருக்கவே மாட்டார்கள்" என்று கூறினார்.
இதன் மூலம் தேவி "நண்பர்கள் நம்முடன் கடைசிவரை வரப் போவதில்லை. நம்முடன் கடைசிவரை வரப் போவது நம் தாய், தந்தை தான். எனவே, அவர்கள் தான் நம்முடைய உண்மையான நண்பர்கள்" என்பதை புரிந்து கொண்டாள்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்