logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

ழகரன் சேது

சிறுகதை வரிசை எண் # 257


தலைப்பு- "கண்ணபுரம்" கதையாசிரியர்- ழகரன் சேது ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன். அப்பொழுதுதான் கண்ணபுரத்தில் வருடா வருடம் புரட்டாசித் திங்கள் கடைசியில் நடைபெறும் வேட்டைக்கருப்பு திருவிழா கோலாகலமாக நடந்து முடிந்தது. மூன்றுநாள் திருவிழா கலை கட்டியது. விழாவின் முதல் நாள் காப்புக்கட்டுதல் தொடங்கி, இரண்டாம் பகல் கறி விருந்துடன் தொடர்ந்து, மூன்றாம் நாள் வேட்டை கருப்பு வெறியாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் முடிவடைந்தது. விழாவின் சிறப்பாக அந்த ஊர் பண்ணையார் ராயப்பனால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜில்லா புகழ் ஜிகினாராணியின் கரகாட்டத்தைக் கண்டு அவரை ஊரே கொண்டாடியது. ராயப்பன் அந்த ஊரிலேயே மிகவும் செல்வாக்கு மிக்கவர். நாற்பது ஏக்கர் நஞ்சைக்கும், எண்பது ஏக்கர் புஞ்சைக்கும் மற்றும் அந்த ஊர் மக்களின் உள்ளங்களுக்கும் சொந்தக்காரர். அந்த மக்களுக்கு அவர் திருவாய் நாதமே தேவ வாக்கு.அவரும் அவ்வப்போது தேவை என வருபவர்களுக்கு,தங்கக்கட்டி போல் பணத்தை தூக்கி வீசுவார்.மாறாக அந்த மக்கள் அவரின் தென்னை,வாழைத்தோப்பிலும் மற்றும் மற்ற வேளாண் வேலைகளிலும் ஈடுபட்டு தங்கள் உடலை வருத்தி, தங்கள் சிறுவாடு கருவாடு ஆனாலும், பண்ணையாரின் பணப்பொட்டியை பத்திரமாகப் பார்த்துக்கொண்டனர். மழை இல்லாவிட்டாலும் அவரின் தேவைகளுக்கு எப்பொழுதும் ஏரி மற்றும் கம்மாய் வழியாக பாசனம் நடைபெறும். குறிப்பாக நஞ்சை நிலம் ஏரி மடையை ஒட்டி இருப்பதால் அங்கு வருடம் முப்போகம் நெல் சாகுபடி நடைபெறும். ஒரு வழியாக புரட்டாசி முடிந்து ஐப்பசி பிறந்தது. வானில் வட்டத்திகிரி சுட்டெரித்தது. வழக்கம்போல மலையப்பன் டீக்கடை மேசையில் வெட்டி வட்டமேசை மாநாடு நடைபெற்றது. அதில் ஒருவர் "என்னைய்யா ஐப்பசி மாசத்துல பைப்புல தண்ணி வர மாதிரி ஊத்து ஊத்துன்னு ஊத்தும்னு பாத்தா, இப்படி வெள்ளி மொளச்ச கொஞ்ச நேரத்துல சுல்லுனு சூரியன் கொல்லுதே!" மற்றொருவர் "அப்படின்னா இந்த முறை மழை தாரை தப்பட்ட மாதிரி வெளுத்து வாங்கப் போதுன்னு அர்த்தமய்யா" ஒருவர் "அட ஆமாய்யா....... வேட்டகருப்பு ஜிகினா ராணி ஆட்டத்துக்காகவாச்சும் ஒரு காட்டு காட்ட வேணாமா? பண்ணையாரு எல்லாத்தையும் காரணமாத்தான் செய்யிராரு...! போன வருஷம் பக்கத்து ஊரு பேச்சியாத்தா திருவிழால ஜிகினா ராணி ஆட்டத்த ஏற்பாடு பண்ணதால அந்த சித்திர மாசத்துலேயும் மத்தளம் போல மழை கொட்டித்தீத்துச்சாமே....!" அதற்கு மற்றொருவர் பதில் சொல்ல, மாநாடு தொடர்ந்தது. டீக்கடை வட்டமேசை தலைமை ஒருங்கிணைப்பாளர் பெருமிதத்துடன் சொன்னார் "ஜிகினாராணி ஜிகினாராணிதாய்யா....ஹா....ஹா....ஹா....ஹா....! அன்று மாலை வானம் கருவண்ணத்தை வாரி பூசிக் கொண்டது. இரவு முழுவதும் நல்ல மழை பெய்தது. விடிந்ததும் மக்கள் அனைவரும் வேட்டைக்கருப்பு கோயிலுக்கு முன் ஆளுக்கு ஒரு கற்பூரத்தை ஏற்றி காணிக்கை செலுத்தினர். ஒரு வாரத்திற்குப் பின் மழை அதிகரிக்க தொடங்கியது.குளங்கள், கம்மாய்கள், ஏரி என அனைத்து நீர்நிலைகளும் நிறைய, தொடர்ந்து மழை பாரி வள்ளலாய் மாறிப்போனது! ஒரு கட்டத்தில் ஏரியின் உபரி நீர் கலங்கல் வழியாக வெளியேற்றப்பட்டது. இருப்பினும் ஏரியின் அளவுடன் ஒப்பிடும்போது கலங்கல் பாதை சிறியது என்பதால், நீர் வெளியேறினாலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தது. அந்த ஏரி சுத்து வட்டாரத்திலேயே மிகவும் பெரியது. ஏரியின் கிழக்கே ராயப்ப பண்ணையாரின் நஞ்சை நிலம் இருந்தது. பெரும்பாலும் அங்கு நெல் மட்டுமே பயிரிடப்படும். ஏரியின் மேற்கே மேட்டுக்குடியினரான ராயப்ப பண்ணையார் மற்றும் அவரது உறவினர்களின் குடியிருப்பு அமைந்திருந்தது. மற்ற சமூகங்கள் அனைத்தும் ஊரின் தெற்கே வாழ்ந்து வந்தது. கிழக்குப் பகுதியுடன் ஒட்டி இருப்பதால் அதுவும் தாழ்வான பகுதிதான். ஏரியின் நீரளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஊர்க்காவலில் ஈடுபட்டிருந்த  தோட்டிகள் இருவர்,உடனே இந்த செய்தியை தங்கள் ஊரின் வாழும் வேட்டைக்கருப்பான ராயப்ப பண்ணையாரிடம் கூற வேண்டும் இன்று இருவரும் விரைந்தனர். பண்ணையார் தன் வீட்டில் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு, இன்னும் மூன்று மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பொன்னி வயல் ஏரி நீர் தேங்கி அழுகிவிடுமோ...! என்ற கவலையில் இருந்தார். மற்றொருபுறம் சாகுபடியாக இருந்த நெல்லை விற்று பக்கத்து ஊரில் விலைக்கு வர இருந்த சினிமா கொட்டகையை வாங்கலாம் என தீட்டிய திட்டமும் வீணாகிவிடுமோ...!என்ற எண்ணம் வேறு. தோட்டிகள் இருவரும் ஐயா! ஐயா! என்று அலறி எடுத்துக் கொண்டே அவரை வீட்டை அடைந்தனர் . அதிலே ஒருவர்,"ஐயா...... ராசா! ஏரி ஒதடு வரைக்கும் தண்ணி ரொம்பிடிச்சி ஐயா..... இன்னும் கொஞ்ச நேரத்துல மதகுவாய தெறந்து தண்ணிய வெளியேத்தலனா , தெக்க ஏரி மட ஒடஞ்சி தண்ணி மொத்தம் ஊருள்ள பூந்துடும் ஐயா. புள்ளகுட்டி பூனகுட்டி எல்லாம் தூங்கிட்டு இருக்கு! அதற்குப் பண்ணையார், "அது சரி மொக்க... ஏற்கனவே போற கலங்கல் தண்ணி என் நஞ்ச வழியாத்தான் போகுது. அதுக்கே என் நெல்லு பயிர் எல்லாம் என்ன ஆகும்னு தெரியாம அடிவயித்துல நெருப்ப கட்டிக்கிட்டு இருக்க... நீ வேற.... போய்யா....! அதற்கு மற்றொரு தோட்டி, "அங்க அடுப்பு எரியவே நெருப்பில்லையா....! என்றார். உடனே பண்ணையார் பலத்த குரலில் "ஏய் " என்று கத்தினார். அப்பொழுதுதான் அவர்கள் பண்ணையாரின் இன்னொரு முகத்தை கண்டனர். பிறகு பண்ணையார், "இப்போ என்ன மட ஒடஞ்சாபோச்சி..? இல்லல்ல, போங்கய்யா... போய் ஏன் வயல்ல வரப்பு வெட்டி விடுங்க.போங்க மட ஒடஞ்சா பாத்துக்கலாம். நான் அப்போவே என் புஞ்ச நெலத்துல வந்து குடிசையை போட்டுக்கோங்கன்னு சொன்னேன்ல...! நீங்கதான் யாரும் கேட்கல " என்றார் அதிகார திமிருடன். அதற்கு ஒரு தோட்டி, "இல்லைய்யா... மதக தெறந்தே ஆகனும் வேற வழி இல்ல " இன்று தீர்மானமாக சொல்லிவிட்டு புறப்பட எண்ணினார். அதற்குள் பண்ணையார் தன் காவலாளிகளை அழைத்து, தோட்டிகள் இருவரையும் கயிற்றால் கட்டிப் போட உத்தரவிட்டார். அப்பொழுதுதான் அவர்களுக்கு புரிந்தது, பண்ணையார் இத்தனை காலம் வீசியது தங்கத் துண்டுகள் அல்ல.... அடிமை நாய்களுக்காக வீசப்பட்ட ரொட்டித்துண்டு என்று. அங்கோ...! ஏரி மடை சிறுக சிறுக உடைந்து ஊருக்குள் தண்ணீர் பரவ ஆரம்பித்தது. அங்கிருந்த அலுமினிய குண்டான் ஒன்று.... ஊர் வீதியில் மிதந்து கொண்டே ஊமை தண்டோரா போட்டது.  தண்ணீர் ஊரைத் தேடி வந்த செய்தி தெரியாமல் ஊர் மக்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். முதலில் இருந்த வீட்டினுள் புகுந்த தண்ணீர் வீட்டுக்காரரின் பாதம் தொட்டு அங்கே தேங்க அனுமதி கேட்டது. அவர் உடனே சுதாரித்துக்கொண்டு தன் மனைவி மற்றும் குழந்தைகளை எழுப்பிவிட்டு விரைந்து சென்று ஊரில் உள்ள மற்ற அனைவரையும் எழுப்பினார்,"ஏ... காத்தாயி, ஏ.... மயில்சாமி எல்லாரும் எழுந்து வெளிய வாங்க... ஊருக்குள்ள தண்ணி வந்துடுச்சு" என்றார். ஒவ்வொருவர் வீடாக தண்ணீர் புக ஆரம்பித்தது. ஏரிமடை உடைந்து ஒட்டுமொத்த தண்ணீரும் ஊருக்குள் புகுந்தால் என்னவாகும் என்று நினைத்து மக்கள் அனைவரும் அஞ்சினர்.மொத்த தண்ணீரும் ஒரே நேரத்தில் உள்ளே வந்தால் எல்லா வீட்டையும் மூழ்த்திவிடும் இன்று அவர்களுக்குப் புரிந்தது. முடிந்த அளவிற்கு தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட அவர்கள் ஆயத்தமானார்கள்.உடையாத சட்டிப்பானைகள், கிழியாத துணிமணிகள் ,செட்டியார் வீட்டில் கடனாக வாங்கி வந்த மரக்கால் படி குருணை அரிசி என முடிந்த அளவிற்கு தலையிலும் தோளிலும் தூக்கிக் கொண்டு மேட்டுப்பகுதியான பண்ணையாரின் புஞ்சை நிலம் நோக்கி சென்று அங்கிருந்த ஒரு அரச மரத்தின் அடியில் தஞ்சமடைந்தனர். ஒருவர் கேட்டார், " ஏ... ராமசாமி...எல்லா பொருளையும் எடுத்துட்டு வந்தியா". அதற்கு அவர், "ஆமா எடுத்துட்டு வர அங்க என்ன தங்கமும் வைரமுமா இருக்கு.....? எல்லாம் தகரொந்தானய்யா" என்றார். மீண்டும் அவர், "அப்போ குடும்ப அட்டை, ஓட்டுக்கு காசு வாங்குற அட்டை " அதற்கு அவர், "ஓ... அதெல்லாம் முதலிலேயே எடுத்துக்கிட்டே" என்று சொல்லி நிம்மதி அடைந்தார். அவரைப்பொறுத்த வரையில் வாக்காளர் அட்டை என்பது ஓட்டுக்கு காசு வாங்க மட்டுமே பயன்படும். அதைத் தாண்டி அவர் யோசிக்கவும் இல்லை. பண்ணையார் போன்ற ஆட்கள் அதைத் தாண்டி யோசிக்க விட்டதும் இல்லை. அறியாமையே அடிமைத்தனத்தின் ஆணிவேர். புத்தக முட்டையை தன் பாவாடைக்குள் பதுக்கி அதை நனையாமல் பார்த்துக் கொண்ட ஒரு சிறுமியின் பரிதாப நிலையை கண்டு மழை கொஞ்சம் மனமிறங்கியது. விடிந்ததும் ராயப்ப பண்ணையாரின் அனுமதி வாங்கி,அங்கேயே ஆளுக்கு ஒரு குடிசை போட்டு, மீண்டும் ஒரு அடிமை வாழ்க்கை வாழ அவர்கள் ஆயத்தமாகி பேசிக் கொண்டிருந்தனர். அன்றும் இன்றும் இந்த உலகத்தில் இரண்டே கூட்டம் தான். ஒன்று ஆளும் வர்க்கம், இன்னொன்று அடிமை வர்க்கம். அறியாமையை கொளுத்தி உரிமைக்குரல் எழுப்பும் வரையில் இந்த உலகில் எந்த ஒரு அடிமை வர்க்கத்தின் நிலையும் மாறாது. வேடிக்கை என்னவென்றால் அவர்களுக்கு அன்று தெரியவில்லை, அவர்களின் விடுதலையை அந்த சிறுமிதான் தன் பாவாடைக்குள் பதுக்கி வைத்திருக்கிறாள் என்று!....

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • Naveen Raj Avatar
    Naveen Raj - 2 years ago
    மேட்டுக்குடியின் ஆளுமையை ஒழிக்க படிப்பு ஒன்றே ஆயுதம்..