logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Mohamed akbar ajrathul hamna

சிறுகதை வரிசை எண் # 256


ஆறாத வடு செம்பிழம்பவன் தன் ஒளிக்கீற்றுக்களை நாளா புறமும் வீசி மெல்ல கடல் முகத்திரையிலிருந்து எட்டிப் பார்த்தான். அவன் வருகை கண்ட மறு நொடி கூம்பியிருந்த புஷ்பங்கள் எல்லாம் இதழ் விரித்து சிரிக்கத் தொடங்கின. பறவை இனங்களின் இன்னிசை கீதங்கள் வான் தொட்டு எதிரொளிக்கத் தொடங்கின. உடல் எங்கும் பச்சை குத்திய புல்வெளிகளின் மேல் இருந்த பனித்துளிகள் செம்பிழம்பவன் கள்ளப் பார்வையில் உருகிப் போயின. அது வித்யபுறகிராமம். கிராமம் முழுவதும் மணட் பாங்கானது. அந்த மணலிலும் மனித உழைப்பு படர்ந்து பசுமை குடி கொண்டிருந்தது. தம் வேலைதான் தமக்கு தெய்வமாக கருதி தொழில்நோக்கி சென்று கொண்டிருந்தனர் கிராமிய மக்கள். ஜன்னலின் ஒரு சிறிய துவாரத்தினூடு வந்த ஒளி கீற்றுக்கள் அவன் கண்களில் பட்டுத்தெரித்தன. கண்களை கசக்கி கொண்டே எழுந்தவன் மணியைப் பார்க்க ஏழை காட்டியது. மறு கணம் போர்வையை முகம் வரை இழுத்து விட்டவன் கனவுக்குள் கனவானான். அவன் கதிர் என அழைக்கப்படும் கதிரவன். மெலிவான தோற்றம்; அவன் நிறம், அழகான வெண்மை அது; பார்ப்போரைக் கவரும் கம்பீரம்; என்ன நினைக்கிறான் என அறிய முடியாத புருவ முடிச்சுகள், இப்படியாக வர்ணித்துக் கொண்டே செல்லலாம். "உனக்கு ஒன்னும் ஆகாதுடா... பயப்படாதே ...அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்..." அவன் விழித்திரையில் தோன்றிய பிம்பங்களின் ஒளி செவிகளுக்குள் ஊடுருவி அவனை நிலைகுலையச் செய்தன. சட்டென விழித்துக் கொண்டான். அவன் கண்கள் கலங்கிப் போயிருந்தன. தன் முன்னால் தொங்கவிடப்பட்டிருந்த ஆளுயர புகைப்படத்தை பார்த்தவன் விம்மி அழ ஆரம்பித்தான். தினமும் அவன் படும் வேதனை அது. அவனுக்கென்று இருந்த ஒரே ஒரு உறவு அவன் இழப்புக்கு இவனே காரணமாகி விட்டான். இவன் தான் நினைக்கிறான். தொலைபேசி சினுங்க கண்களை துடைத்துக்கொண்டவன் அதனை காதிலே வைத்தான். மறுமுனையில் கேட்கப்பட்ட கேள்வியில் அவன் இதழ்கள் விரிந்து கொண்டன. "என்ன வருங்கால பொண்டாட்டிய... நெனச்சுக்கிட்டு இருக்கியா?" "ஹே அம்மு... இன்னும் பல்லு கூட விளக்கல்ல கலாய்க்கிறீயா?" சிரித்தான். "தெரியும் குளிச்சிட்டு இங்கிட்டு பக்கம் வா..." குளியலறைக்குள் நுழைந்து பல்லு விளக்கி சவர்க்காரமிட்டு தேய்த்து குளித்துவிட்டு வர எவ்வளவு நேரம் எடுத்தது என்றெல்லாம் தெரியாது அவனுக்கு. அரை மணித்தியாலத்தில் அந்த பெரிய பங்களாவின் முன் அவன் வண்டி நிறுத்தப்பட்டது. "அண்ணா" என்ற வண்ணம் சுடிதார் அணிந்த ஒரு பெண் அவள் ஓடி வந்து கட்டிக் கொண்டாள் பரிவுடன் தலை முடிகளை லேசாக கலைத்து விட்டவன் "ஹேய் அம்மு!"என்று புன்னகைத்தான். "முண்டக்கண்ணி வந்தும் வராததுமா அண்ணன் மேல தொங்கிக்கொண்டு இருக்க??" அவளை சீண்டவென்றே பிறந்திருக்கும் உடன்பிறப்பு சித்தார்த். "அமுதா என்டு சொல்லு..." பற்களை கடித்துக் கொண்டு கூறினாள். அவளுக்கு அவன் இப்படி அழைப்பதில் விருப்பமில்லை. "முண்டக்கண்ணி" "உன்ன" சட்டென கதிர் கையணைப்பிலிருந்து விலகியவள் அவனை நோக்கி வர அவன் அவ்விடத்தில் இருந்தால் தானே? சுற்றிச் சுற்றி ஓட ஆரம்பித்தான். இடை இடையே "முண்டக்கண்ணி" "முண்டக்கண்ணி" என்ற அழைப்பு வேறு. கதிர் தனக்குள்ளே சிரித்துக் கொண்டான். முன் மண்டபத்தில் கொழுவப்பட்டிருந்த புகைப்படத்தை பார்த்தான். புகைப்படங்களை பார்த்து பார்த்து அவன் காலம் கழிகிறது. "சூர்யா" என முனுமுனுத்தான். கள்ளம் கபடமற்ற புன்னகையுடன் தன் இரு உடன்பிறப்புக்களின் கரங்களையும் பற்றி பிடித்துக் கொண்டு நின்றிருந்தான். "உன் இடத்தை எனக்கு தந்துட்டு போயிட்டியா?" அவன் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் எழும்பினாலும் கேட்பதற்கான தைரியம் இல்லை. கேட்பதற்குரிய நபரும் இவ்வுலகில் இல்லை. ஆனால் பல கேள்விகள் அவனைக் கை நீட்டி விசாரிக்கவே செய்தன. அந்தப் புகைப்படத்தை வருட போனவன், " அண்ணா எலும்பு...ன்னா சாரின்...னா" என்ற அமுதாவின் அழுகை கூறிய குரலில் வெளியில் வந்தான். நிலத்தில் விழுந்து துடித்துக் கொண்டிருந்த சித்தார்த்திடம், "சித் என்னாச்சு..?"என்ற வண்ணம் அமர சிரித்துக் கொண்டு எழும்பினான் அக் கள்வன். "எப்படி எப்படி... அண்ணா மன்னிச்சிடு... அண்...ணா" அமுதாவை வெறுப்பு ஏற்றுவது தான் அவன் குறியாய் இருந்தது. ஓங்கி ஒரு அறை விட்டான் கதிரவன். "அறிவில்ல இப்படியா நடந்து கொள்வ?" என்றவன் அதிர்ந்த அவர்கள் இருவரையும் தன் கவனத்தில் எடுக்காது கிளம்பி விட்டான். அவன் கண்கள் கலங்கி இருந்தன. தானும் ஒரு நாள் இப்படித்தான் விளையாட்டுக்காய் பொய் கூறி நடந்த விபரீதம்... மனம் நொந்தான். தன் கால்களை தொட்ட அலைகளை ஓர் வித வேதனையுடன் பார்த்தான். அவன் கையில் சிகரெட் இருந்தது. மது, சிகரெட் எல்லாம் பாவிக்கும் பழக்கம் அவனிடம் இல்லை. ஆனால் இப்பொழுது இப் புதிய பழக்கம் அவனுக்கு பழக்கமாய் போய்விட்டது. தன் வலிகளை மறைப்பதற்கான வழி என நினைத்துக் கொண்டிருக்கிறான். கண்மூடி இருந்தவன் மரணத்தின் விளிம்பிலிருந்த சிகரட்டை தூக்கி தூரப் போட்டான். அவன் விழித்திரையை மறக்க நினைக்கும் மறக்க முடியாத சம்பவங்கள் தொட்டன. தாய் தந்தை யாருமில்லாத இவனுக்கு சகலதுமாய் இருந்தவன் தோழன் சூர்யா. அவனுடன் கழித்த நிமிடங்கள் பொன்னானவை. இவன் நெஞ்சில் ஆணித்தரமாய் படிந்து இருந்தன. தனக்காக தன் குடும்பத்தையே ஒதுக்கி விட்டு வந்தவன். மறக்க முடியுமா? "உங்க பையனா கதிர ஏத்துக்க முடியாது இல்ல... நானும் வேணாம்!.. எனக்கு கதிர் தான் முக்கியம்..." தந்தையிடம் சவால் விட்டுவிட்டு வந்து விட்டான். பணக்கார திமிர் சற்றும் இல்லாமல் தன்னுடன் சேர்ந்து தெருக்கடைகளில் பீங்கான் அலம்பியவன்.கல்லூரி முடித்து இரண்டு பேரும் ஒன்றாகத்தான் வேலையும் பெற்றனர். மறக்க முடியாத நாள். 2020 மார்ச் மாதம் இரண்டாம் திகதி. அவனுக்குப் பிறந்த நாள். அவனது மரண நாளாயும் ஆயிற்று. கடற்கரை மண்ணில் மடங்கி விழுந்து அழுதான். "சூர்யா... எனக்கு ஆக்சிடென்ட் ஆச்சுடா.." பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று கூறிய வார்த்தைகள். "உனக்கு ஒன்னும் ஆகாதுடா... பயப்படாத... அஞ்சு நிமிஷத்துல அங்கே இருப்பேன்..." நடுங்கியபடி மறுமுனையில் இருந்தவனின் வார்த்தைகள் வந்தன. பொய் என்று கூறியிருக்கலாம்! இப்பொழுது நினைத்தான். ஐந்து நிமிடத்தில் வருவேன் என்றவன் இரண்டு மணித்தியாலம் ஆகியும் வராமையால் கிளம்பி வந்தவன் உறைந்து விட்டான். மக்கள் ஜனத்தை ஒருவர் ஒருவராக ஒதுக்கி வரும் போதே சொல்லிக்கொண்டு தான் வந்தான் "சூர்யாவாக இருக்கக் கூடாது" "சூர்யாவா இருக்கக் கூடாது!" என்று. ஆனால் அவன் கேட்டது இறைவன் செவிகளை அன்று சென்றடையவில்லை போலும்! "மச்சான் எந்திரி டா உனக்கு... ஒன்னும் இல்லடா... பயமா இருக்கு ... டா" நண்பனின் செவிகளை இவன் வார்த்தைகள் தீண்டாதது இறைவனால் எழுதப்பட்ட விதி. அவன் இறுதிக் கிரியைகள் நடைபெறும் இடத்தில் ஒரு ஓரத்தில் வெறித்து இருந்தவனிடம் வந்த நண்பனின் அப்பா சண்முகம் "கதிர்" எனும் போது தான் விழிப்புக்கே வந்தான். இன்னும் ஞாபகம்! "சொல்லுங்கப்பா!" கட்டிக் கொண்டார் அவர். "பிறந்த நாளைக்கி உன்ன தான் பா பரிசா கொடுக்க நினைச்சோம்... என் பையன நான் ஒழுங்காக பார்த்துக் கொள்ள... ல நானெல்லாம் நல்ல அப்பனா?" தலையில் அடித்துக் கொண்டு கதறியவரிடம் என்ன சொல்வான்? குற்ற உணர்ச்சி மேலோங்கியது. "அப்படி சொல்லாதீங்க உங்க மேல அவனுக்கு கோவம் இல்ல... உங்கள பத்தி தான் அடிக்கடி சொல்லுவான்.." தேற்ற முனைந்தான். அது அவர் கவலையை அதிகரிக்கத்தான் செய்தது. "நீ எங்க கூட இருப்பா !" என்றவரிடம் "முடியாதுப்பா இந்த பாவிய... வேணாம்!" என மறுத்தே விட்டான். ஆனால், அவரோ "அவன் ஆசைப்பா... அவன் ஆத்மாவாவது சாந்தியடையட்டும்!" என்கவும் தான் விரும்பாமல் சம்மதித்தான். அன்றிலிருந்து அவர்களின் வீட்டுப் பிள்ளை ஆனான் கதிரவன். அவர்களுக்கு இவன் சூர்யா! ஆனால் இவனைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு துரோகம் செய்த துரோகி நான்! அவர்கள் பொழிந்த பாசமழையில் தினம் தினம் செத்துப் பிழைத்தான். அவன் நினைவுகளில் இருந்து மீண்டு வரலாம் எனத்தான் இயற்கையோடு இணைந்த வித்யாபுர கிராமமும் சென்றான். அதிலும் தோற்றுப் போனான். ஆறாத வடுவாய் அவன் மனதில் நண்பனுடன் கழித்த தருணங்கள் நிலைத்து இருந்தன. இன்று ஒன்று அறியாத மழலையாய் விழி பிதுங்க நிற்கிறான். "சூர்யா!" என்ற சத்தம் கேட்க சட்டென பின்னால் திரும்பினான். அவன் செவிகள் கேட்டது பொய். ஏமாற்றம்! தினம் சூர்யாவை நினைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறான் தோழன் கதிரவன். சூர்யாவின் ஆசைகளை நிறைவேற்றுவது தனது இறுதி கடமையாக செய்து கொண்டிருக்கிறான் கதிர்... சூர்யா இன்னும் இறக்கவில்லை கதிரின் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் இரு உயிர் ஒருயிராக....

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.