அகன் அவிரோள்
சிறுகதை வரிசை எண்
# 255
தலைப்பு - பிரபஞ்சத்வைதம்
என் வெண்வெளியே
“நான் ஒன்றல்லவே??
உன் இரண்டா நான்?? - இல்லை??
உனக்கெனவே…
உன் அணு தாங்கி,
ஓருடல்… ஈருயிராய்…
நிற்கும் உன் உயிரோ?…
-- முத்தங்களுடன் உன் அத்வைதினி…”
கண்கள் மூடினாளும் அவளது வதனம் விழித்திரையில் திரையிட்டுக் காட்டியே அவனது சிந்தையை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. அவளிடம் விரைந்து செல்லவே மனமும் ஏங்கி, வழியின்றி தவித்துக் கொண்டிருந்தான் அவன். ‘அத்வி… அத்வி…’ என்ற அவனது பிதற்றல்கள் மட்டும், எட்டிய திக்கும் மெல்ல கேட்டுக் கொண்டே அன்றைய இரவு கடந்தது.
பொழுது புலர்ந்த வேளை, குளிரின் நடுக்கம் அவனை வாட்டி எடுக்க, விடிவதையும் உணராதிருந்தான் அவன். வெளியில் காற்றின் சப்தம். அஃது உயிர்வளி அன்று… உயிர்வலி அளிக்கவல்லது.
கம்பளி போர்த்து யாக்கை கிடத்தியிருந்தான். வெப்பம்காட்டியை எடுத்து தன் நாவினடி வைத்தான். சதம் அடித்திருந்தது உடல் வெப்பம். அருகில் காலியாக இருந்த தண்ணீர் குடுவையை எடுத்துக் கொண்டு, தன் நிலையை அறிந்து, மனோநிலையை மாற்றி எழுந்தான்.
கூடாரம் விட்டு வெளியே வந்தவன், நிற்கத் தெம்பில்லாது, தரை முழுதும் கம்பளமென வெண்விரிப்பாய் விரிந்திருந்த வெண்பனியில் மெல்ல நகரத் துவங்கினான். வீசும் குளிர் காற்றும் சோதித்துத்தான் பார்த்தது அவன் உடலையும், உறுதியையும்.
அருகிருந்த சிகப்பு நிற கூடாரத்தின் உள்நுழைய, அதன் திரை சற்றே படபடத்தது காற்றில். ஒருவித கிலியுடன் உள்நுழைந்தான். அது அவனது நண்பனின் கூடாரம்தான். அங்கு அவன் நண்பனும் இருக்கிறான். ஆனால், பிணமாக.
கண்கள் அவனைக் கண்டதும் தானே குளமாக, கட்டுப்படுத்திக் கொண்டு, தண்ணீரைத் தேடினான். அங்கும் தண்ணீர் சிறிது கூட இல்லை. சுற்றும் பனியென கொட்டிக்கிடக்கும் தண்ணீர். அருந்தும் இயல்பினதோ அஃது?
வழியனைத்தும் அடையுண்டிருக்க, தீ மூட்டி வெண் பனியை உருக்கி, அதனை அமிழ்தமென அருந்தினான். விரைவில் நஞ்சாகும் அவ்வமிழ்தமென அறிவான் அவன்.
மீண்டும் தன் மஞ்சள் நிற கூடாரத்திற்கே வந்து வான்நோக்கி உடல்கிடத்தியிருந்தான், சிந்தனைகள் சிதறிக்கிடக்க….
இந்த யாக்கையை வைத்துத்தான் வாழ வேண்டுமோ? சிறிது சிறிதாக உடல் வருந்தி இறப்பதைவிட? தற்கொலை மேலோ? தற்கொலையும் சரியோ? நான் இல்லையேல் என் அத்வி என்னவாவாள்? சிந்தனைகள் ஓடிக் கொண்டேயிருந்தது கடிகாரத்தின் முட்கள் போல மாறி… மாறி… நிற்கா நேரம் போல், நில்லாதேடியது எண்ணங்களும்…
அவனது உடல் முழுதும் சிவந்து, தோல்கள் வறண்ட நிலையில் தசைகளை அசைப்பதே கடினமாக இருந்தது. உதடுகள் சற்றே கருத்து வெடிப்புற்ற பாலை நிலமானது. வாயால் சுவாசிக்கும் நிலைக்கு ஆளானான். என்னே பெருந்துயரம்??
சிந்தனையை மாற்றியது அந்த குரல்… மனத்தில் நிறைந்த குரல்… ‘பிரபா…’ அந்த அழைப்பின் கற்பனையில் சிதைந்தது அவன் எண்ணங்கள்… குரலின் பின்னே சிந்தை செலுத்தினான். ‘இவ்வளவு பக்கம் வந்து, நீ தோல்வியை ஒப்புக்கொள்ளாதே பிரபா…’ என்ற அவளது வார்த்தைகள் நினைவுக்குள் சவுக்கடி கொடுக்க, திடுமென கண்விழித்தான் அவன்.
எதுவும் செய்யாமல் உயிர்விடுவதோ? கடைசிவரை போராடித் தோற்பதே மேல்…. வெளியில் வந்து மண்டியிட்டு, வெண்பனியை முத்தமிட்டுக் கூறினான். நான் சாகவே, ஆசை வைத்த நீ காரணமாய் ஆகிடுவாயோ? அவ்வாறெனினும் வீரனாய் உன்னுள் புகுவேனே, அதுவோ தோற்றதாகுமோ? என் இறை நீயெனில், உன் இரை ஆகுவேன் நான்… வருகிறேன் என் வெண்வெளியே… நீயே என் வழி(லி)….
நாடோடியின் வாழ்வில் திசையறிவது மட்டுமே முன்னிடும் அன்றோ?? செல்கிறான் இந்தத் திசையன் திசைகாட்டியோடு… வடக்கின் 10 கி.மீ. தொலைவில் உள்ள மைத்ரிக்குத்தான் அவன் செல்ல வேண்டும். திசையும், தூரமும், அவன் துயர்நிலையும் அறிவார் எவரோ?
***
அகவிழி
கால்கள் நகர்ந்தபோதும், சிந்தை வேறெங்கோ மயங்கிக்கிடந்தது. என் அத்வி எப்படி இருக்கிறாளோ? என் நினைவு கொண்டாளோ? என் பிஞ்சு பிறந்திட்டதோ? அதனை ஏந்தித் தழுவ வேண்டிய நான்…
வேதனையின் வலியில் கண்கள் குளமாக.. சற்றே தலையை வான்நோக்கி நிமிர்த்தி கண்ணீர் துளிகளை விழுங்கிக்கொண்டான்.
அத்வி தன்னவனிடமிருந்து பதில் வராததால் மிகுந்த கலக்கமுற்றாள். அவனது உயர் அதிகாரிகளிடம் சென்று முறையிட்டும் பதில் ‘தெரியவில்லை’ என்பதாகவே இருந்தது.
“சார்.. உள்ள வரலாமா?”
“வாங்க.”
“சார்.. நான் கிட்டத்தட்ட மூனு வாரமா உங்ககிட்ட கேட்டிட்டு இருக்கேன். சரியான பதில் எதுவும் இன்னும் வரலை சார்… என் ஹஸ்பன்ட் போன க்ரூல இருக்கிற ஒருத்தரோட பேமிலிக்கும் அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல… நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க?”
“உங்க நிலைமை எனக்கு புரியுது. நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. அவங்களோட கம்யூனிகேஷன் கட் ஆகிடிச்சி. நாங்க டிரை பண்ணிட்டிருக்கோம். பயப்படாதீங்க..”
“மத்தவங்க மாதிரி… கண்ணீர் வடிச்சி, கால்ல விழுவேன்னு நினைக்காதீங்க… என் புருஷனை எப்படி காப்பாத்தனும்னு எனக்கு நல்லாத் தெரியும்..
எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான். அந்த க்ரூவோட இந்த நிலைமை தற்செயலா நடந்ததா? இல்லையா?... ஒரு வேலை தற்செயல் இல்லன்னா?... ரொம்ப வருத்தப்படுவீங்க..”
“என்ன மிரட்டுறியா? எங்க சப்போர்ட் இல்லாம உன்னால உன் புருஷனை கண்டுபிடிக்க முடியாது.. அதை முதல்ல ஞாபகத்தில வச்சிக்கோ..”
ஒரு நக்கலான சிரிப்பை உதிர்த்துவிட்டு அவள் கூறினாள்.
“அதையும் பாத்துடலாம்… இராமாயணம் தெரியுமா?... சீதையை கண்டுபிடிக்க இராமனுக்கு தேவைப்பட்டது ஒரே ஒரு வானரம் மட்டும்தான். மொத்த படையும் இல்ல. மறந்துடாதீங்க.”
வீட்டிற்குள் நுழைந்தவள், தன் கணவனின் வார்த்தைகளை சிந்தைக்குள் நினைவு கொண்டாள். அன்று விளையாட்டாக தன் கணவனை அவனது கனவுகளைக் கூறச்சொல்லி அவள் எடுத்துவைத்த ஒரு காணொலியை ஓட்டிப் பார்த்தாள்.
“என்னோட கனவு… அண்டார்டிகா மேல எனக்கு இருக்குற காதல் இதை புரிஞ்சிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்.. நான் சொல்றேன்… இருண்ட தேசத்தைப் பத்திக் கூட கதைகளில் கேட்டிருப்போம். ஆனா இது வெண்மை தேசம்… எங்கயும் வெண்மை மட்டும்தான் இருக்கும். அதைத்தாண்டி இங்க எந்த நிறமும் இல்லை. ஆகாயமும் இல்லை. பூமியும் இல்லை. எல்லாமே இங்க பனி.. பனி.. பனி மட்டும்தான்…
பெரிசா உயிரினம் எதுவும் இல்லை. ஒரு மரம் கூட கிடையாது. அழகான குட்டி பென்குயின்கள், சீல்கள் இன்னும் சில உயிரினங்கள் மட்டும்தான். அதுங்களும் ரொம்ப குறைவாத்தான் இருக்கும்…
அங்க உயிர்வாழறது ரொம்ப கஷ்டம். ஆனா அங்க பூமியோட பல உயிரினங்களோட தடங்கள் இருக்கிறதை நான் நம்புறேன். இதுக்கு முன்னாடி போன பல ஆராய்ச்சியாளர்கள் அதை முழுமையா வெளிக்கொணர முடியாம தோத்து போயிட்டாங்க. ஆராய்ச்சிக்காக நான் அங்க போகனும்னு நினைக்கிறேன். என்னால கண்டுபிடிக்க முடியுமா, முடியாதான்னு நான் யோசிக்கல. முயற்சி பண்ணாம தோத்து போயிடக் கூடாதுன்னு நினைக்கிறேன்.
இது கண்டுபிடிக்கப்பட்டா உலகத்தோட ஆரம்பத்துக்குக் கூட ஒரு பதிலா இது இருக்கும். கஷ்டம்தான். ஆனா, முடியாதது இல்லை. என்னோட இந்த ஆராய்ச்சி ஆறு மாசத்தில முடிஞ்சிரும். அதுக்காக நான் இங்க கண்டுபிடிச்சிருக்க இந்த கருவிகள் நிச்சயமா அதை ரொம்ப எளிமையாக்கிடும்…”
“ஒருவேளை நான் திரும்ப வரலைன்னா… நீ என்ன பண்ணுவ? அத்வி…”
“தேடி வந்து ஒதப்பேன்…”
“இது உனக்காக. ஒருவேளை நான் வரலைன்னா இது உனக்கு தேவைப்படும் அத்வி….
என் இதயமே
உனக்கெனவே யான்…
வெண்பனியின் காதலன்..
இப்பெண்பனியின் காவலன்..
நினைத்ததும் அடையவே,
நான் தருகிறேன் என் அ(ஹ)னு(ணு)வையே (!)
கண்கள் அறியாது;
அகவிழியை விளிப்பாய்..
உன்,புறம் கிடைக்கும் வழியே…
சென்று வரவா என் தேவியே?….”
தன் காதல் கணவனின் இந்த கவிதை காணொலியை கண்கள் கலங்கி பார்த்து நின்றாள். உள்ளுணர்வாய் ஏதோ தோன்ற அந்த கவிதையை மீண்டும் முனுமுனுக்கலானாள்.
‘நினைத்ததும் அடையவே, நான் தருகிறேன் என் அனுவையே… இதன் அர்த்தம் என்ன?
அப்போது தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. ‘அனு… ஹனு…இதை எப்படி நான் மறந்தேன்’ என்று தன்னையே திட்டிக்கொண்டு வீட்டின் கீழ்தளத்தில் யாரும் அறியாது வைத்திருந்த தனது கணவனின் ஆராய்ச்சி கூடத்திற்கு சென்றாள்.
எதையோ தேடிக்கொண்டிருந்தாள்….
தேடியது கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் அவள் திளைத்திருந்தாள். ‘நான் வந்துட்டே இருக்கேன் பிரபா… எங்கிட்ட உதை வாங்க ரெடியா இரு..’ என்றவள் உடனே தன் நண்பன் பார்த்திபனுக்கு போன் செய்தாள்.
“பார்த்தி.. எனக்கு உன்னோட ஃப்லைட் தேவை.. ரொம்ப தூரம் போகனும்.. நீ கண்டிப்பா கூட வரனும்.. தயாரா இரு. நான் வந்துட்டே இருக்கேன். நாம உடனே கிளம்பனும்.”
“ஏய் அத்வி… என்ன நீ பாட்டுக்கு ஷாப்பிங் போகனும் வாங்கிறமாதிரி கூப்புடற? எங்க போறோம்? என்ன விஷயம்? எதுவுமே சொல்லலை”
“சார் என்ன கலெக்டரா? ஆபீஸ்க்கா போறீங்க? நீ வெட்டியா தானே இருப்ப.. உன் கராஜ்ல வெட்டியா துருப்பிடிச்ச வண்டியை துடைச்சிட்டிருப்ப அதானே? அண்டார்டிகா போகனும், ரெடியா இரு…”
“அட, அது என்ன அமிஞ்சிக்கரை பக்கத்திலயா இருக்கு? அண்டார்டிக்காம்மா…”
“ஐ ஆம் ஆன் த வே.. எனக்கு தெரியும் உன்னால முடியும்..” போனை துண்டித்துவிட்டு தனக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
***
ருத்ரரூபம்
பனியின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே செல்ல, தடைகள் தாண்டி அவன் மைத்ரியை அடைந்துவிட்டான். அது அண்டார்டிகாவில் உள்ள இந்தியாவின் ஆராய்ச்சிக்கான தலைமையிடம். இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு உதவுவதற்காகவே ஆய்வகங்களில் உணவுகள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும். அவன் அவற்றை கண்டெடுத்து உண்ணத் துவங்கினான்.
அப்போதுதான் அவன் எதிரில் இருந்த கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தான். முகம் முழுவதும் தாடியும், மீசையும் நிறைந்து, முடிகளுக்குள் சிறிது முகமே தென்பட்டது. தோள்களைத் தாண்டி கூந்தல் புரண்டது. காட்டுமிராண்டியாய் அவனைக் காட்டியது பசியின் கோரம். தனது உருவம் கண்டு சற்று புன்னகைத்து வைத்தான்.
அவனது தலையை குறிவைத்தது ஒரு துப்பாக்கி. அவன் நிமிர்ந்தபோது அவன் முன் நின்றது அவனது உயர் அதிகாரியான தசானன்.
“சார் நீங்களா? அப்போ எங்க க்ரூவை அந்த குளிரில உறைஞ்சு சாகனும்னு விட்டது? ஆராய்ச்சி குறித்த ரிப்போர்ட் இருந்த என்னோட லேப்டாப், பென்டிரைவ் எல்லாத்தையும் திருடினது? இதுக்கெல்லாம் பின்னாடி இருந்தது?..”
“நான் தான்… என்ன நினைச்ச பிரபா? நான் அவ்வளோ நல்லவன் எல்லாம் இல்லை.. நான் தசானன்.. அர்த்தம் தெரியுமா? பத்துத் தலை ராவணன்.. நான் அசுரன்டா… இந்த கண்டுபிடிப்பால உனக்கு என்ன கிடைக்கும் ஒரு அவார்டு அவ்வளோதானே? நான் அதுக்கும் மேல தரேன்.. எவ்வளோ பணம் வேணும்?”
“பணத்துக்காகவா இதெல்லாம்.. இது உலகத்தோட ஆழத்தை அடையாளப்படுத்துறது. இதனால நாம ஒரு புது உலகத்தை கூட உருவாக்க முடியும். இதை உங்கிட்ட தருவேன்னு நினைச்சியா?”
“தர மாட்டன்னு தெரியும். அதான் உன் லேப்டாப், பென்டிரைவ் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துட்டேன்.”
நக்கலாக வாய்விட்டு சிரித்தான் அவன், “என்னை என்ன முட்டாள் சயின்டிஸ்ட்டுன்னு நினைச்சியா?...”
“லேப்டாப்பில் ஆராய்ச்சி சம்மந்தமான எந்த ஃபைலும் இல்ல.. நீ என்ன பண்ணி வச்சியிருக்க? சொல்லு..”
“அது எங்க போகனுமோ அங்க போயிடுச்சி… உனக்கு கிடைக்காது..”
கோபமுற்ற தசானன் கத்திக்கொண்டு அருகிலிருந்தவனிடம் இரும்பு பைப்பை பெற்று அவனது தலையிலேயே அடித்தான். வெறி கொண்டவன் போல விண்ணை நோக்கி பலமுறை கத்தினான் தசானன்.
கீழே விழுந்த அவனது வாயிலிருந்து இரத்தம் வெளியேற ஆரம்பித்தது. வலியால் துடித்தான்.
“உன்னை நான் கொல்லாம விடமாட்டேன்…” என தசானன் கூறிக்கொண்டே அவனது நெற்றியை குறிபார்த்து துப்பாக்கியை வைத்தான். எங்கிருந்தோ வந்த குண்டு தசானனின் கையை பதம் பார்த்ததில் அவன் துப்பாக்கியை விடுத்தான். பிறகு தசானனின் உடன் வந்த இருவரது தலையையும் குண்டு துளைத்திருந்தது.
அவன் திரும்பிப் பார்த்தான். “அத்வி?.. நீ எதுக்கு இங்க வந்த? அதுவும் இந்த சூழ்நிலையில?..”
“எனக்கு மெட்டர்னிட்டி லீவ் முடியப்போகுது. ஐ அம் பேக் டு வொர்க்.. ஒரு ஆர்மி ஆஃபீசரா இருந்துக்கிட்டு நாட்டை காப்பாத்துற நான், என் புருஷனை நாட்டோட துரோகிங்கக்கிட்ட விட்டுருவேனா என்ன?..”
அத்வியின் கை மீது ஒரு பூச்சாடியை வீசி, அவள் கையிலிருந்த துப்பாக்கியை இழக்கச் செய்தான் தசானன்.
“என்ன அவ்வளோ ஈஸியா என்னை வீழ்த்திடலாம்னு நினைச்சீங்களா? நான் தசானன்.. பத்துத் தலை இராவணன்.. உங்களை அழிக்காம விடமாட்டேன்.”
இரத்தம் சொட்டச் சொட்ட இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். கீழே விழுந்த துப்பாக்கியை தசானன் எடுத்துக் கொண்டு, அகங்காரச் சிரிப்பில் “உங்க அழிவு என் கையில தான்.. நான் அழிக்கிறவன்டா” என்றான்.
அவனோ சட்டை கிழிந்து மார்பில் வழியும் இரத்தத்துடன் நின்றிருந்தான். தனது கால் பூட்ஸில் மறைத்து வைத்திருந்த கத்தியால் தசானனை குறிபார்த்து இதயத்தில் தாக்கினான் அவன். கீழே விழுந்த தசானனை பார்த்து,
“டேய்… நீ இராவணன்னா, நான் உன்னோட அப்பன்டா… நான் ருத்ரன்.. பிரபஞ்சருத்ரன்… இங்க ஆக்குறவனும் நான்தான், அழிக்கறவனும் நான்தான்..” என்று கூறிக்கொண்டே அவன் இதயத்தை பதம் பார்த்துக் கொண்டிருந்த கத்தியின் பின்பக்கத்தை தன் காலால் மிதித்து அவனது இதயத்தில் இறக்கினான்.
பிரபஞ்சன் தனது கூந்தலை இழுத்து பின்பும் கொண்டை போல் சொருகினான். தசானனின் கடைசி நொடியில் பிரபஞ்ச ருத்ரன் உண்மையில் ருத்ர சொரூபமாகவே அவனுக்குக் காட்சியளித்தான். ருத்ரனின் ருத்ரரூபம், அவனது கண்களின் கோபச்சிவப்பு பார்த்த கிலியில் தசானனின் உயிர் பிரிந்தது.
“அடப்பாவிகளா புருஷனும், பொண்டாட்டியும் சேர்ந்து கொலை பண்ணிட்டீங்களா?..” என்றான் பார்த்திபன்.
“டேய் பார்த்தி நீயும் வந்திருக்கியா?”
“எங்கடாப்பா என்னை விட்டீங்க.. ஒரு ஏரோஸ்பேஸ் இஞ்சினியர்னு மரியாதை இருக்கா? டிரைவர் வேலைக்கு கூப்பிட்டிருக்கீங்க..”
“ஆமா, பிரச்சனைன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?..” என்ற பிரபஞ்சனை கீழே தள்ளிவிட்ட அத்வி அவனை அடித்து, உதைக்கத் துவங்கினாள்.
“போதும்மா செத்துட கித்துட போறான்.. பெட்ரோல் போட்டுட்டு வந்தது வேஸ்ட்டா போயிடும்..”
அத்வியை திருப்பி தரையில் கிடத்தி அவளது நெற்றியில் ஒரு முத்தமிட்டு அவளது கோபத்தைத் தணித்தான் பிரபஞ்சன்.
போலியாக ஒரு முறைப்பு முறைத்துவிட்டு பதில் கூறத் தொடங்கினாள் அவள்.
“எல்லாம் உன் கவிதையை வச்சித்தான் கண்டுபிடிச்சேன். உன்னோட அந்த கவிதையில உங்கிட்ட வர்றதுக்கு நீ அனுவை தந்ததா சொன்ன இல்ல. அதை வச்சித்தான்.
நீ கண்டுபிடிச்ச ‘ஹனு’ அப்படிங்கற ஆப் எனக்கு நியாபகம் வந்தது. அதுல உன்னோட லொகேஷன், ஹார்ட் பீட் ஸ்டேடஸ் எல்லாமே இருந்தது. அதோட அதில உன் லேப்டாப்போட எல்லா ஃபைல்ஸ்-ம் அப்டேட் ஆகியிருந்தது. அதை எல்லாம் பேக் அப் எடுத்து நம்ம ரூம்ல இருக்கிற இரகசிய பெட்டகத்துக்குள்ள வச்சியிருக்கேன்.”
“பரவாயில்லையே.. உனக்கு கூட மூளை வேலை செய்யுது போல... துப்பாக்கி எடுத்து சுடுற உனக்கு.. என் கவிதையில் ஒளிஞ்சிருக்குற விஷயம் கூட புரிஞ்சிருக்கு போல..” என்றான் பிரபஞ்சன்.
“உன்னைவிட எனக்கு மூளை நல்லாவே வேலை செய்யும்.. இப்படி உன்ன மாதிரி பேக் அப் இல்லாம மாட்டிக்க மாட்டேன்..“ என்றாள் அத்வி.
பார்த்திபன், “யார்டா அந்த அனு? உன்னோட எக்ஸ் கேர்ள் ப்ரண்டா? எனக்கு தெரியாம எப்படி?”
அத்வியின், “ம்…” முறைப்பில் வாயை மூடிக்கொண்டான் பார்த்திபன்.
பிரபஞ்சன், “அதெல்லாம் ஒன்னுமில்லை. ஹனுமன்னா எனக்கு ரொம்ப பிடிக்குமில்ல. அதான் அந்த ஆப்-க்கு ஹனு-ன்னு பேரு வச்சேன் அவ்வளோதான்.”
“சரி எப்படி இவ்வளோ தூரத்தை இவ்வளோ சீக்கிரமா கடந்து வந்தீங்க..?”
“அதுல்லலாம் ஐயா கில்லிடா… யப்பா… நானும் ஒரு சயின்டிஸ்ட்டு தான் மறந்துடாத… ஐ அம் ஹேவிங் ய ஃப்லைட். ஆனா, இது சாதாரண விமானம் இல்லை. சூப்பர்சோனிக் ஸ்பீட்ல போகக்கூடியது. லைட் போறதவிட வேகமாக போகும்…
அப்புறம் இது உங்களுக்கு மட்டும் எக்ஸ்க்ளூசிவ்வா கிடைச்ச ரைடு. பெருமைபட்டுக்கோங்க மக்களே… இதை மட்டும் உலகத்துக்கு காட்டிட்டா... ஐயா இனிமே மல்டி மில்லினியர்.. ஹா.ஹா.. நீங்க கூட என்ன அப்பாயின்மென்ட் வாங்கிட்டுத்தான் பாக்கனும்” என்றான் பார்த்திபன்.
“டேய் தாங்க முடியலடா.. போதும்..“ என்றான் பிரபஞ்சன்
…
மூவரும் கிளம்பினர். இந்தியா திரும்பியதும் தசானனின் அனைத்துத் திட்டங்களையும் அதற்கு உதவியாக இருந்த தனது பிற உயர்அதிகாரிகளையும் பற்றி அனைவரும் அறிய ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினான்.
***
பிரபஞ்சத்வைதினி
சில வருடங்கள் கழித்து ஒரு மிகப்பெரும் விழாவில், பிரபஞ்ச ருத்ரன், “நான் இந்த உலகத்தோட ஆரம்பத்துக்கு உங்களை என் ஆராய்ச்சி மூலம் அழைச்சிட்டுப் போறேன். இது மொத்த உயிரினத்துக்கும் முன்னோடி…
நான் இதுக்கு வச்ச பேரு ‘ஆரிஜினெம் பிரபஞ்சியா….’ இது லத்தீன் மற்றும் தமிழ் மொழிகளின் கலப்பு. இந்த பிரபஞ்சத்தின் ஆணி வேர். இதை நீங்க அர்த்தமா எடுத்துக்கலாம்…
உங்களுக்கு இந்த தீஸிஸ்ல ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க..”
“இதை வச்சி வேற புது உயிரினம் எதுவும் கண்டுபிடிக்கிற திட்டம் இருக்கா” என்றார் ஒருவர்.
“அந்த ஐடியா இப்போதைக்கு இல்ல. இப்போ இந்த உயிரினத்தோட படிமத்தை முழுசா புரிஞ்சி ஆராய்ச்சியில இது குறித்த ஒரு நல்ல தெளிவும், இதோட பரிணாமம் பற்றிய ஒரு புரிதலும் கிடைச்ச பிறகுதான் இதை மீளுருவாக்கம் செய்யறத பத்தி யோசிக்க முடியும்.”
ஒரு கை தனது சட்டையை இழுக்கக் குனிந்து பார்த்தான்.
“நானும் உங்கள மாதிரி பெரிய சயின்டிஸ்ட் ஆகப்போறேன்…”
“கம் ஆன் மை டியர் லிட்டில் பிரின்செஸ்.. இவ என் பொண்ணு. என்னை மாதிரியே பெரிய சயின்டிஸ்ட் ஆகப்போறாளாம்..” என்றான் பெருமிதத்தில்.
“உன் பேரு என்னம்மா?...” என்றார் பத்திரிக்கையாளர்.
“பிரபஞ்சத்வைதினி..” என்றாள் தன் மழலைக் குரலில்.
“அதுக்கு அர்த்தம் இவள் இந்த பிரபஞ்சத்தின் மூம்மூர்த்தி வடிவம். ஆக்கல், காத்தல், அழித்தல் முத்தொழில் புரிபவள்… அப்புறம் நான் இந்த உலகத்தோட ஆரம்பத்தத் தேடி போனேன். அதே நேரத்தில் இவளும் பிறந்தா.. இவள் என்னோட குட்டி உலகம்” என்று உரைத்து நன்றி கூறினான் பிரபஞ்ச ருத்ரன்.
***
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்