பாலஜோதி ராமச்சந்திரன்
சிறுகதை வரிசை எண்
# 254
ஆசான்
‘டிங்’ என்ற ஒலியில் எனது தூக்கம் விழித்துக் கொண்டது. முகநூலில் யாரோ பதிவிட்ட தகவலின் கவன ஈர்ப்பொலி. அதனுடைய மெல்லியச்சத்தம். அந்த அதிகாலை நேரத்தில், கிள்ளியெறியப்பட்ட பெருஞ்ச்சத்தத்தின் துணுக்காகவே இருந்தது.
வலதுபுறத்தில் எனது கைகளை நீட்டி, திறன்பேசியைத் எடுத்தேன். முகப்புத்திரையில் சரவணன் பெயர் ஒளிர்ந்தது, அதனைச் சுண்டினேன்.
‘கண்ணீர் அஞ்சலி’ என்று தலைப்பிட்டிருந்த சுவரொட்டிப் புகைப்படத்தில் ஜெ. ஆர். சிரித்துக் கொண்டிருந்தார். வேகத்தடையில் ஏறியிறங்கும் கனரக வாகனம் போல், இருதயம் குலுங்கி அதிர்ந்தது. ‘எப்படி..? நல்லாத்தானே இருந்தாரு...? பத்து நாளைக்கு முன்பு போனில் பேசினாரே.... ‘சங்கரா, மார்ச் 8-ம் தேதி மெட்ராஸில் இருப்பேன்டா. கல்லறைக்குப் போகனும். நீயும் கூட வருவியா?’ என்று கேட்டாரே. அய்யோ.... இன்னிக்குதானே மார்ச் 8. வர்றேன்னு சொன்னவரு... வராமலேயே போயிட்டாரே’ என்று என் மனம் அதிர்ந்தது. அந்தச் சுவரொட்டியில் தோற்றம் - மறைவு என்று குறிப்பிடப்பட்டிருந்த தேதிகளைப் பார்த்தேன். அவர் பிறந்தநாள், மாதம் ஏற்கனவே எனக்குத் தெரிந்ததுதான். மறைவு 08.03.2023 என்று போடப்பட்டிருந்தது. எனக்குள் ஆச்சரியம் எழுந்தது. ‘அட, இது உண்மையா? எப்படி சாத்தியம்? ஒரு வேளை, நேற்றிரவு இறந்ததை இன்றைய தேதியில் சரவணன் போட்டு விட்டானா? அவனிடமே கேட்டுவிடலாம்’ என்று யோசித்தபடியே, அந்தச் சுவரொட்டியின் ‘இங்ஙனம்’ பகுதியைப் பார்த்தேன் அந்தத் துயர்வேளையிலும் மெலிதாய் எனக்குப் புன்னகைத் துளிர்த்தது. அதில், ‘ஜெ. ஆர். சார் முன்னாள் மாணவர்கள் ரசிகர் மன்றம்’ என்று குறிப்பிட்டு, கீழே எங்கள் ஐந்து பேர்களின் பெயர்களும் இருந்தது. முதல் பெயராக, எனது பெயரைப் போட்டிருந்தான் சரவணன். பள்ளி நாட்களில் கரும் பலகையில் வண்ணச் சுண்ணம் துண்டுகளால் எழுதப்பட்டவை, முதன் முறையாக அச்சில் ஏறி இருக்கிறது. அதுவும் சாரின் மறைவுக்கு. நினைத்தபோதே பெருந்துயரின் நிழல் என்னை மூடிக்கொண்டது.
சரவணனுக்கு போன் செய்தேன். முதல் ஒலியிலேயே எடுத்துவிட்டான். ஜெ. ஆர். சார் வீட்டில் இருப்பதாகச் சொன்னான். கூடவே, பாட்சா, இஸ்மாயில், ராஜுவும் இருக்கிறார்கள் என்றான். வழமையான முதற்கட்ட விசாரிப்புகள் முடிந்ததும் சார் இறந்தத் தேதியைப் பற்றிக் கேட்டேன். இரவு ஒன்றரை மணிக்கு இறந்ததைக் குறிப்பிட்டுவிட்டு, அவனும் மற்ற நண்பர்களும் மார்ச்-8, குறித்து சிலிர்த்துப் பேசினார்கள். வியந்தார்கள். சாரை பற்றி வியாகுலப்பட்டார்கள். “காலை பதினோரு மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படுவதாக’ ராஜு சொன்னான். சென்னையிலிருந்து தன்னால் வர முடியாத சூழலைச் சொல்லி விசனப்பட்டேன். நண்பர்கள் மாறி மாறி எனக்கு ஆறுதல் கொடுத்து, “நாங்கள் பார்த்துக்கறோம் சங்கரா. நீ ஏழாம் நாளுக்கு வா” என்றார்கள். ஒருவழியாக போனை துண்டித்தேன். கண்களும் குரலும் கலங்கி இருந்தது. துக்கம் வழிந்தது.
எனது விசும்பலான குரலைக் கேட்டு, ஏற்கனவே விழித்துக் கொண்ட சுமதி, ஓரளவு அவதானித்து, “யாருங்க... என்னாச்சு?” என்று கேட்டாள். அவளிடம் விபரத்தைச் சொல்லிவிட்டு, புலனத்தைத் திறந்தேன். அதில், என்னுடன் தமிழ்த்துறையில் பணிபுரியும் பெண் தோழிகள், “உலக மகளிர் தின வாழ்த்துகளை” என்னோடு பகிர்ந்து இருந்தார்கள். அன்றைக்குக் காலை, துறை சார்பாக மகளிர் தின விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். பிரபல எழுத்தாளர் ஒருவரை பேசுவதற்கு அழைத்திருந்தோம். எனக்கு அதுபற்றிய பணிகளை மீறி, ஜெ. ஆர். சார் நினைவுகள்தான் நிரம்பி இருந்தது. சுமதி படுக்கையை விட்டு எழுந்தாள். நான் எழவில்லை. ‘சார்.... ஜெ. ஆர். சார்.... ஆசானே’ என்று மனசு முழுதும் அகவலித்தது.
********
அவர், அரசு மேனிலைப் பள்ளியில் கணக்கு வாத்தியாராக இருந்தார். என்.சி.சி.க்கும் அவர்தான் பொறுப்பு. பள்ளியில் அவருக்கென்று தனி அறை கொடுக்கப்பட்டிருந்தது. வகுப்புகள், சாரணர் படைக்கான பயிற்சிகள் அளிக்கும் நேரங்கள் தவிர, ஜெ. ஆர். சார் அந்த அறையில்தான் இருப்பார்.
திரட்டு மீசையும் முரட்டுக்குரலும் அவரின் தனித்துவ அடையாளங்கள். கணிதவகுப்பையும் அணிவகுப்பையும் அவர் முறைமைப்படுத்தும் போது, சிங்கம் போல் கர்ஜிப்பார். வகுப்பில் பாலசிங்கம். மைதானத்தில் ராஜசிங்கம் என்பதான தோற்றத்தில் இருப்பார். கண்டிப்பும் காத்திரமான உடற்கட்டும் கொண்டவர்.
மற்றவர்களுக்குத்தான் அவர் ஜெயராமன் சார். எனக்கும் எனது நண்பர்களுக்கும் அப்போதும் இப்போதும் பரோட்டா வாத்தியார்தான். அவருக்கு அப்படியொரு பெயர் வைத்ததுமே நான்தான். அத்துடன் அவரது பிறந்தநாளான ஆகஸ்ட் 5-ம் தேதியன்று அவருக்கு ரசிகர் மன்றம் வைத்ததும் நான்தான். வருடா வருடம் ஆகஸ்ட் பதினைந்தாம் தேதியன்று, பள்ளியில் கொடியேற்றி, சுதந்திரதினம் கொண்டாடி, எல்லோருக்கும் ஆரஞ்சு மிட்டாய் தருவார்கள். அதற்கு பத்து நாள்கள் முன்பதாகவே, பரோட்டா வாத்தியாருக்குப் பிறந்தநாள் கொண்டாடி, எல்லோருக்கும் சூடம் மிட்டாய் நாங்கள் தருவோம். கொஞ்சம் பெரியதான- த/அ மாத்திரை போல இருக்கும். அதைச் சப்பி சாப்பிட்டு விட்டு, எல்லோரும் உடனடியாக தண்ணீர் குடிப்போம். சாதாரண தண்ணீர் குளிர்ந்தத் தண்ணீராக மாறி தொண்டைக் குழியில் இறங்கும். குதூகலமும் உற்சாகமுமாக இருக்கும். ஊரில் செல்வாக்கான பிரமுகரும் கோவில் தர்மகர்த்தாவுமான குருந்தப்பன் மகன் என்பதால், என்னை ஆசிரியர்கள் யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள். தவிர, அஞ்சு பாக்கெட் சூடம் மிட்டாய் வாங்கித் தருவதே எனது அப்பாதான்.
அன்றைய நாள்களில், என்னைப் போன்ற மாணவர்களையும் முதல் தலைமுறை கல்லூரி அண்ணன்களையும் ரஜினியும் கமலும்தான் ஆக்கிரமித்து இருந்தார்கள். சரவணனுக்கும் பாட்சாவுக்கும் ரஜினிதான் பிடித்தக் கதாநாயகன். இஸ்மாயிலுக்கும் ராஜூவுக்கும் கமல்.
எனக்கு எப்போதுமே ஜெயராமன் சார்தான். அவருக்கு எம்.ஜி.ஆரையோ, சிவாஜியையோ, ஜெமினியையோ, அல்லது ஜெய்சங்கரையோ பிடிக்குமாக்கும் என்பதாக நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால், அவருக்கு சந்திரபாபுவைத்தான் பிடிக்கும். அவர் பாடிய பாடல்களை ஓய்வு நேரங்களில் அவரது அறையில் அமர்ந்து மெல்லியக் குரலில் பாடுவதை பலதடவை கேட்டிருக்கிறோம். அந்த வயதில் சந்திரபாபு யார் என்றே எங்களுக்குத் தெரியாது. தெரிந்துக்கொள்ளவும் ஆசைப்பட்டதில்லை.
ஊர் தியேட்டரில் கமல் படமோ, ரஜினி படமோ போட்டார்கள் என்றால், சில அண்ணன்மார்கள் எல்லாம் சேர்ந்து, தியேட்டரில் வாழ்த்துத் தட்டி வைப்பார்கள், கலர்பேப்பர் கொடி கட்டுவார்கள். முதல் காட்சிக்கு வரும் எல்லோருக்கும் இனிப்புத் தருவார்கள். அந்த அண்ணன்மார்களோடு சேர்ந்து நாங்களும் வேலை செய்வோம். அதிலிருந்து தோன்றியதுதான் ஜெயராமன் சாருக்கு ரசிகர் மன்றம் வைக்கும் ஐடியா.
இதுபோல், வாழ்த்துத்தட்டி, கொடி எல்லாம் கட்டமாட்டோம். எங்கள் வகுப்பறை கரும்பலகையில் பூக்கள் வரைந்து, ‘ஜெயராமன் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று வண்ணச் சுண்ணாம்பு கட்டியால் எழுதி, கும்பிடுவது போல் கைகளை வரைவோம். ஜெ.ஆர்.சார் மாணவர்கள் ரசிகர் மன்றம்’ என்று குறிப்பிட்டு, எங்கள் ஐவரின் பெயரையும் எழுதிவைப்போம். ஒவ்வொரு வகுப்பாகச் சென்று சூடம் மிட்டாய் கொடுப்போம். இவ்வளவுதான் எங்கள் கொண்டாட்டமெல்லாம். கொடுமை என்னவென்றால், சார் அன்றைக்கு பள்ளிக்கு வரமாட்டார். ஊரிலும் இருக்கமாட்டார். இன்றைக்கு சென்னையாக இருக்கும் அன்றைய மெட்ராஸுக்கு போய்விடுவார். மறுநாள் ‘டான்’ என்று பள்ளிக்கு வந்து விடுவார்.
வருடத்தில் இரண்டு வெவ்வேறு தினங்களில் மெட்ராஸுக்குப் போய்விடுவார். அப்போது எவ்வளவு பெரிய முக்கிய வேலைகள் பள்ளியில் இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தமாட்டார். அந்த சமயத்தில், சாரணர் படையின் பயிற்சிகளை விளையாட்டு வாத்தியார்தான் நடத்துவார். ஜெ.ஆர்.சார் இப்படி மெட்ராஸுக்குப் போய் வருவது குறித்து, பள்ளியில் ஏனைய ஆசிரியர்கள் மத்தியில் எள்ளல் பேச்சும் செவிபேச்சும் இருக்கும். மனச்சான்றே இல்லாமல், இட்டுக்கட்டி பேசிக்கொள்வார்கள், அவர்கள் அப்படி என்ன புனைவு சேர்த்து பேசிக் கொள்ளுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், அதனை அறிந்துக் கொள்ளும் ஆர்வம் மட்டும் எங்கள் ஐந்து பேருக்கும் இருந்தது.
தவிர, எங்களுக்குமே ஜெ.ஆர்.சார் எதற்காக விடாப்பிடியாக மெட்ராஸ் போய் வருகிறார்? அங்கே யாரை.... அல்லது எதை பார்க்கப் போகிறார்? அங்கே அவருக்கு அப்படி என்னத்தான் முக்கியமான வேலை இருக்கிறது? என்றதான விடை தெரியாதக் கேள்விகளும் இருந்தன. இதுபோன்ற விஷயங்களில் எல்லாம் மூக்கை நுழைத்து துப்பறிந்து விடுவதில் சரவணன் சாமர்த்தியசாலி.
“டேய்... நம்ம சாருக்கு மெட்ராஸுல இன்னொரு பொண்டாட்டி இருக்காம்டா சின்னவீடு. அவங்களைப் பார்க்கத்தான் இவரு போயிட்டு வர்றாரு” என்று அவன் சொன்னபோது நாங்கள் அதிர்ந்தோம்.
“வருசா வருசம் மார்ச் 8-ம் தேதியும் ஆகஸ்ட் 5-ம் தேதியும் தவறாம அந்தப் பொண்டாட்டி வீட்டுக்குப் போயிடுவாருடா நம்ம சார்” என்றான். ராஜுதான் கேட்டான். “ஏன்டா, ஆகஸ்ட் 5-ம் தேதி நம்ம சாரோட பொறந்தநாளு. மார்ச் 8-ம் தேதி என்னடா?” “அன்னிக்கு அந்த ரெண்டாவது பொண்டாட்டியோட பொறந்தநாளாம்” என்றான் சரவணன். அதனைக் கேட்டதும் எல்லோரும் ஒட்டு மொத்தமாக என்னைப் பார்த்தார்கள்.
“ஏன்டா சங்கரா... இங்கே நாம சாரோட பொறந்தநாளை கொண்டாடிட்டு இருக்கோம். அவரு என்னடான்னா, தன்னோட பொறந்த நாளையும் ரெண்டாவது பொண்டாட்டி பொறந்தநாளையும் கொண்டாட மெட்ராஸுக்குப் போறாரு. இதுல அவருக்கு ரசிகர் மன்றம் வேற” என்றான் கடுகடுப்பாக, இஸ்மாயில்.
ராஜு அவன் பங்குக்கு, “ரசிகர் மன்றத்தைக் கலைச்சிருவோம்டா. இனிமே அவருக்குப் பொறந்த நாளெல்லாம் கொண்டாட வேண்டாம்” என்றான். நானும் சரியென்று தலையாட்டினேன். ஆனால், அந்த வருடம் ஆகஸ்ட் 5ம் தேதி நெருங்கியபோது, என் நண்பர்களை சமாதானப்படுத்தி, வழக்கம் போலவே சாரின் பிறந்தநாளைக் கொண்டாடினேன். அதற்கு ஒரே காரணம், பரோட்டா.
********
எனக்கும் சாருக்குமான உறவுப்பாலமாக இருந்ததே பரோட்டாதான். எனது பால்யத்தில் பரோட்டா சாப்பிடுவதென்பது பெருங்கனவாகவே இருந்தது. அதற்காக என்.சி.சி.யில் சேர வேண்டும்... நண்பர்களுடன் சேர்ந்து, ஆசை தீர பரோட்டா சாப்பிட வேண்டும் என்பது அந்த வயதின் லட்சியமாக இருந்தது. அதனை நிறைவேறாத நிராசையாக்கி, என் பரோட்டா கோட்டைகளைத் தகர்த்தெறிந்ததன் மூலம் அறிமுகம் ஆனவர்தான் ஜெ.ஆர்.சார்.
அப்போது நான் ஆர்.சி.பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். நண்பர்கள் நால்வரும் அரசு மேனிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். பள்ளி முடிந்ததும் நாள் தவறாமல் தெருவில் அமைந்திருக்கும் பொது நூலகத்தில் கூடுவோம். நூலகக் கட்டிடத்துக்கு எதிரேதான் எனது வீடு இருந்தது.
அவர்கள் நால்வருமே என்.சி.சி.யில் இருந்தார்கள். வாரத்தில் இரண்டு நாள்கள் பயிற்சி இருக்கும்.
என்.சி.சி.யில் இருக்கும் மாணவர்களுக்கு காலை உணவாக அப்போது பரோட்டா தருவார்கள். இரண்டு பரோட்டாவும் குருமாவும் கிடைக்கும். நூலகக் கூடுகையின் போது, நண்பர்கள் சிலாகித்து விவரிக்கும் பரோட்டா, எந்த வடிவத்தில் இருக்கும் என்பது கூட அப்போது எனக்குத் தெரியாது.
நண்பர்கள் பரோட்டா தின்ற அன்று மாலையில், அதுகுறித்தே பேச்சு இருக்கும். அதைக் கேட்டுக் கேட்டு, பார்த்தேயிராத பரோட்டா மீது எனக்கு பைத்தியமே பிடித்துவிட்டது. எப்படியாவது அதை ருசி பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் பொறியாக மாறி, வெறியாக உருவெடுத்தது. நண்பர்களிடம் கேட்டேன்.
“நீங்க ஸ்கூல்லேருந்து பரோட்டா எடுத்துட்டு வந்து எனக்குக் குடுக்கக் கூடாதா?” சரவணன் நான் சொன்னதைக் கேட்டுச் சிரித்தான்.
“போடா... இவனே, ஒனக்கு இருக்கிற வசதிக்கு பரோட்டா கடையே வைக்கலாம். ஒன்னோட அப்பாகிட்டே கேட்டா... க்ளப் கடையில வாங்கித் தரப்போறாரு” என்றான்.
“டேய்... சரவணா, க்ளப் கடையிலேருந்தெல்லாம் எங்கப்பா வாங்கித் தின்னவும் மாட்டாரு. யாருக்கும் வாங்கித்தரவும் மாட்டாருடா. அவருகிட்டே பரோட்டா வாங்கித் தாங்கப்பானு கேட்டா, உடம்புத்தோலை உரித்து உப்புக்கண்டம் போட்டுருவாருடா. இந்த வயசுல க்ளப் கடை பரோட்டாவா கேக்குதுனு சொல்லி, நாக்குல சூடு வச்சிருவாருடா” என்றேன். ஊர் பெரிய மனிதர்கள், க்ளப் கடை எனப்படும் அன்றைய உணவு விடுதிகளில் சாப்பிடுவதை கௌரவக் குறைச்சலாகவும் மானக்கேடாகவும் கருதிய காலம் அது. தாகத்துக்கு ஒரு தம்ளர் தண்ணீர் கூட குடிக்க மாட்டார்கள். என் அப்பாவும் அதில் சேர்த்தி.
“அப்ப நீ பரோட்டாவை மறந்துட வேண்டியதுதான்” என்றான் சரவணன். எனக்கு அழுகையே வந்துவிட்டது. அப்போது பாட்சாதான் ஒரு யோசனையை சொன்னான்.
“சங்கரா, எட்டாம் வகுப்பு முடிச்சதும் ஒன்பதாம் வகுப்பு எங்க ஸ்கூல்ல வந்து சேர்ந்துடு. என்.சி.சி.ல பேரு குடுத்துரு. நாம எல்லோருமே சேர்ந்து பரோட்டா திங்கலாம்”
அவன் அப்படி சொன்னதைக் கேட்டதும்தான் எனக்கு நிம்மதியே வந்தது. ஆர்.சி.பள்ளியில் எட்டாம் வகுப்பு வரைதான் உண்டு. அதற்கு மேல் படிக்க வேண்டும் என்றால், அரசு மேனிலைப் பள்ளியில் தான் சேர வேண்டும். ஒரு வழியாக எட்டாம் வகுப்பை சுமாரான மதிப்பெண்களோடு தேர்ச்சிப் பெற்றேன். ஆர்.சி.பள்ளியில் டி.சி வாங்கிக் கொண்டு அப்பாவுடன் அரசு மேனிலைப் பள்ளியில் நுழைந்த போது, அவ்வளவு மனக் கொண்டாட்டமாக இருந்தது. மாணவர்கள் பள்ளியில் சேர்வது எதற்கு... படிப்பதற்காகத்தானே? ஆனால், பரோட்டா உண்பதற்காக மட்டுமே பள்ளிக்குச் சென்ற ஒரே மாணவன், கடந்த நூற்றாண்டில் நானாகத்தான் இருப்பேன்.
பள்ளியில் சேர்ந்து ஒரு வாரம் தென்றலாக நகர்ந்தது. அன்று என்னை என்.சி.சி.யில் சேர்த்து விடுவதற்காக நண்பர்கள் நால்வரும் ஜெ.ஆர். சார் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அவர் இருக்கையில் அமர்ந்து கண்களை மூடியபடி சினிமா பாடல் ஒன்றை மெல்லியக் குரலில் பாடிக்கொண்டிருந்தார். அவர் அன்றைக்குப் பாடிய பாடல் சந்திரபாபுவுடையது என்பதே ரொம்ப நாட்களுக்குப் பிறகுதான் எனக்குத் தெரியும்.
ஜெ.ஆர். சார் கண்களைத் திறந்தார். எங்களைப் பார்த்தார். பாட்சா விஷயத்தை சொன்னான். “அவ்வளவுதானே... சேர்த்துட்டாப் போச்சு” என்றவர், என்னை மாத்திரம் தனியாக நிற்கவைத்து, “எங்கே.... கால்கள் ரெண்டையும் ஒண்ணா வெச்சு, பாதம் ரெண்டையும் வீ மாதிரி வெச்சு, நிமிர்ந்து நில்லு” என்றார். அவரது கம்பீரமான குரலில் பதட்டமடைந்து, என்னன்னவோ செய்தேன். ஆனால், அவர் சொன்னதுபோல் செய்யவில்லை. சார் ராஜுவை அழைத்து எப்படி நிற்க வேண்டும் என்று மாதிரி காட்சிப் படுத்திக் காட்டும்படியாகக் கூறினார். அவன் செய்துக் காட்டியது போலவே இந்தமுறை செய்தேன்.
அவர் என் முழங்கால் முட்டிகளை சில நிமிடங்கள் உற்றுப் பார்த்தார். என் நண்பர்கள் ஒவ்வொருவராக அழைத்துப் பார்க்கச் சொன்னார். அவர்களும் பார்த்தார்கள். சார் அவர்களிடம் ஜாடை மாடையாக ஏதோ கேட்டார். அவர்கள் மீண்டுமாக என் முழங்கால் முட்டிகளைப் பார்த்து விட்டு, ஒன்று போலவே உதட்டை பிதுக்கினார்கள். நான் சிலை போல் நின்றுக் கொண்டிருந்தேன்.
“ஏன்டா சரவணா, உனக்குத் தெரியும்தானே.... அதை அவன்கிட்டே முன்னாடியே சொல்லியிருக்கலாம்தானே.... நேரா என்கிட்டே கூட்டிட்டா வர்றது”என்றார்.
“மறந்துட்டேன் சார்” என்றான் அவன்.
“சங்கரனுக்கு பரோட்டா சாப்பிடனும்னு ஆசை சார். அதான், என்.சி.சி.ல சேரனும்னு விரும்புறான்” என்று பாட்சா பட்டென்று போட்டு உடைத்துவிட்டான். அதனைக் கேட்டு ஆச்சரியமாக சார் என்னைப் பார்த்தார். பிறகு, சரவணனை மட்டும் இருக்கச் சொல்லிவிட்டு எங்களை எல்லாம் வகுப்புக்குப் போக உத்தரவிட்டார். பத்துநிமிடங்கள் கழித்து சரவணன் சோகமான முகத்துடன் வகுப்புக்கு வந்தான். என்னைப் பார்த்தான். அவன் கண்கள் தழும்பியது. எனக்கு என்ன நடக்கிறதென்றே ஒன்றும் புரியவில்லை. தழுதழுத்தக் குரலில் அவன், “எங்களை மன்னிச்சுடு சங்கரா. நீ என்.சி.சி.ல சேர முடியாது” என்றான். எனக்கு பொசுக்கென்று கண்கள் பொங்கி, கண்ணீர் பிரவாகமெடுத்தது. “ஏன்டா?” என்று கேட்டேன்.
“உனக்கு முழங்கால் முட்டி ரெண்டும் இடிக்குதுடா. அப்படி இருந்தா என்.சி.சி.ல சேர்த்துக்க மாட்டாங்க. நாங்க நிற்கறோம் பாரேன்” என்றபடியே நால்வரும் சேர்ந்து, நின்றுக் காட்டினார்கள். அவர்களுக்கு இடிக்கவில்லை. நான் மீண்டுமாக நின்றுப்பார்த்தேன். முட்டிகள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டிருந்தது. ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி இருக்கிறது...? இதை சரி பண்ணமுடியாதா... என்.சி.சி.ல சேர முடியாதுன்னா... என்னோட பரோட்டா ஆசை அவ்வளவுதானா?” என்றெல்லாம் யோசித்ததில் தேம்பி அழத் தொடங்கினேன். வகுப்பில் இருந்த மற்ற மாணவர்கள் என்னை வேடிக்கைப் பார்த்து சிரித்தார்கள். எனக்கு அசிங்கமாகவும் அவமானமாகவும் இருந்தது, ராஜுவும் இஸ்மாயிலும்தான் அவர்களை அதட்டினார்கள்.
********
அன்று பிற்பகல். கடைசி வகுப்பு எடுக்க வேண்டிய பாபுதாஸ் வாத்தியார் வரவில்லை. ஆகையால், எங்கள் வகுப்பு கூச்சலும் கொண்டாட்டமுமாக இருந்தது. நானும் இயல்புக்குத் திரும்பி இருந்தேன். கடைசி மணி அடிப்பதற்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்பதாக, எங்கள் வகுப்பு வாசலில் வேறொரு வகுப்பு மாணவன் வந்து நின்றான்.
“இங்கே சிவசங்கரன் யாரு?” என்று கேட்டான். நான் எழுந்து நின்றேன்.” உன்னை ஜெ.ஆர். சார் கூப்பிடுறாரு. சீக்கிரமா வருவியாம்” என்று சொல்லிவிட்டுச் சென்றான். நான் குழப்பமும் பீதியுமாக நண்பர்களைப் பார்த்தேன்.
“டேய்... சங்கரா. சார் மனசு மாறிட்டாரு போலடா. உன்னைய என்.சி.சி.ல சேர்த்துக்குவாருனு நெனக்கிறேன். சீக்கிரம் போடா. பேர் குடுத்துட்டு வாடா” என்று உற்சாகக்குரலில் சரவணன் கத்தினான். மற்ற மூவரும் அதனை ஆமோதித்தார்கள். அவர்களின் உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டது.
ஓட்டமும் நடையுமாக விரைந்தேன். அறைவாசலிலேயே என்னை எதிர்பார்த்து நின்றிருந்தார் ஜெ.ஆர். சார். என்னைப் பார்த்ததும் புன்னகைத்தார்.
“வாடா... பயலே. வாசல்ல இறக்கிற வாளித் தண்ணீல கையையும் காலையும் கழுவிட்டு உள்ளே வா” என்றார். நானும் அப்படியே செய்தேன். ‘என்.சி.சி.ல பேரு குடுக்கணும்னா, முதல்ல கை, கால்களை கழுவனும் போல” என்று அப்போது சத்தியமாக நினைத்தேன். “அந்த பெஞ்சுல உட்காரு” என்றார். உட்கார்ந்தேன். அவர் மேசை மேலிருந்த மஞ்சள் நிற துணிப்பைக்குள்ளிருந்து காகிதத்தில் சுற்றிய ஒரு பொட்டலத்தை எடுத்துப் பிரித்து என் முன்னால் வைத்தார்.
“சாப்பிடு.”
“என்ன சார் இது?”
“பரோட்டாடா.” அவர் அப்படி சொன்னவுடன் கண்களில் ஆர்வச்சுடர் பற்றிக்கொண்டது. பேராசையாக அதைப் பார்த்தேன். காய்ந்த பூவரசு இலைகளைக் கொண்டு பின்னிய தடுக்கில், மூன்று பரோட்டா இருந்தது.
“இதுதான் பரோட்டாவா சார்?” என்று கேட்டதும் அவர் சிரித்தார். அதை ஒன்று போல் சேர்த்து பிய்த்துப் போட்டார். சிறிய சில்வர் தூக்கு வாளியைத் திறந்தார். குப்பென்று நான் அதுவரை அறியாத புது வாசனை அறையை நிரப்பியது. அது குருமா என்பதும் சார் சொல்லித்தான் தெரியும். அதை பரோட்டா மீது ஊற்றினார். கரும்பங் காட்டுக்குள் புதிதாக நுழைந்த குட்டியானையைப் போல், அந்த பரோட்டாக்களை தின்றேன். சார் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.
சாப்பிட்டு முடித்துவிட்டு கையைக் கழுவிவிட்டு வந்தபோது, பெரிதாய் ஏப்பம் வந்தது. அதில் குருமா வாடை அடித்தது. அன்றுதான் ஏப்பத்துக்கும் வாசனை உண்டு என்பதேத் தெரிந்தது. நான் ஜெ.ஆர் சாரை பார்த்தேன். என் கண்களில் தாறுமாறாக நன்றியுணர்வு மின்னியது. வால் மட்டும் இருந்திருந்தால், அதையும் ஆட்டியிருப்பேன்.
“கிளாஸுக்கு போ” என்றார். அன்றைக்கு நான் புது மழையில் நனைந்தது போலவும் அந்த மழை முழுக்க பரோட்டா, குருமா வாசனை இருப்பதை போலவும் உணர்ந்தேன்.
********
“ஏங்க.... எவ்வளவு நேரமா இப்படி படுத்தே கிடப்பீங்க? டைம் ஆயிருச்சு பாருங்க” என்று சுமதியின் குரலைக் கேட்டு, நீண்ட நினைவுகளிலிருந்து மீண்டேன். குழந்தைகள் இரண்டும் பள்ளிச் செல்வதற்குத் தயாராகி இருந்தார்கள். நேரம் போனதேத் தெரியவில்லை. சட்டென்று நானும் தயாராகி, காலை உணவைத் தவிர்த்துவிட்டு, எனது துள்ளூந்தில் புறப்பட்டேன்.
இந்திரா நகரிலிருந்து பிரதான சாலையைப் பிடித்து, சில நிமிடங்களிலேயே அடையார் சிக்னல் வந்து விட்டேன். அங்கிருந்து வழக்கமாக நான் செல்லும் கிண்டிசாலையில் பயணிக்காமல், வலதுபுறமாகச் சென்று, கடற்கரை செல்லும் சாலையைப் பிடித்தேன். வழியில் ஒரு உணவு விடுதியில் வண்டியை நிறுத்தி, நான்கு பரோட்டாவும் சைவ குருமாவும் வாங்கிக் கொண்டேன்.
வழியில் ஏராளமான பெண்களும் கல்லூரி மாணவிகளும் திரண்டு மகளிர் தினப் பேரணி சென்றுக் கொண்டிருந்தார்கள். அதனைக் கடந்து, பட்டினப்பாக்கம் கல்லறைத் தோட்டம் முகப்பு முன்பாக வண்டியை நிறுத்தி, பரோட்டா பொட்டல நெகிழி தூக்கியை எடுத்துக் கொண்டு இறங்கி, உள்ளே நுழைந்தேன்.
சீருடை அணிந்த காவலாளி என்னைப் பார்த்ததும் சினேகமாக சிரித்து, “சார் வரலையா சார்?” என்று கேட்டான். “வந்து சொல்றேன் பாக்கியம்” என்றபடியே நடந்தேன். கொஞ்சதூரம் சென்றதும் அடர்ந்த மரங்களுக்கு நடுவே இருந்த அந்தக் கல்லறை முன்பாக நின்றேன். ஏற்கனவே அது வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. எனக்கு முன்பாக வந்திருந்த வேறு சிலர், வைத்த பூச்செண்டுகளும் மலர்வளையங்களும் கல்லறையின் கறுப்பு சலவைக் கல்லின் மீதாக இருந்தது.
நான் பொட்டலத்தைப் பிரித்து, பரோட்டாவைப் பிய்த்துப் போட்டு, குருமாவை அதில் ஊற்றி, கல்லறைக்கு முன்பாக வைத்து, கண்களை மூடி, ஜெ.ஆர். சாரை மனதில் நினைத்துக் கொண்டேன்.
“டேய்.... சங்கரா... நீ மட்டும் வந்துருக்கே... அவன் வரலையா? ஓ... செத்துட்டானா...? என்னோட மகா ரசிகன்டா அவன்” என்று கல்லறையில் மீது அமர்ந்து, சிரித்தபடியே சந்திரபாபு என்னிடம் கேட்பது போலவே இருந்தது. அது உண்மையாகவும் இருக்கலாம்.
-நிறைவு-
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்