○சிறுகதைப் போட்டி
ஜனனம்
" சுபா சாப்பிட்டாச்சா... நேரமாகுது.. .நானும் சீக்கிரமா வேலைக்குப் போகணும்மா ..." கந்தன் அன்பொழுக பத்தாவது படிக்கும் மகளைக் கூப்பிட்டார். ஒரே பெண். எப்படியாவது கஷ்டப்பட்டு அவளை மருத்துவத் துறையில் படிக்க வைக்கணும்னு அடிக்கடி கனவு காண்பவர். அந்த எண்ணம் அவருடைய ஒவ்வொரு செல்லிலும் கல்வெட்டாய் பதிஞ்சே போச்சு.
சூரியனின் உஷ்ணம் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டின் உஷ்ணத்தை அதிகரிக்க ஆரம்பித்தது. ஒரே ஒரு மின்விசிறிதான் அவர்களது இளைப்பாறல். கந்தன் மனைவி தெய்வானை நாலு வீட்டுக்குப் பாத்திரம் தேய்த்து வீடைச் சுத்தம் பண்ணப் போகணுங்கிற அவசரத்தில் இட்லியும் தண்ணியா சாம்பார்ங்கிற பேரில் வீட்டுமுன் வளர்ந்த முருங்கை மரத்து இரண்டு காய்களைப் போட்டு ஒப்பேத்தியிருந்தார். பருப்பு கொஞ்சமா இருந்ததால் முருங்கை சூப் போலவே சாம்பார் வாசனையடித்தது.
சுபா படிச்சு வேலைக்குப் போனாத்தான் ஓரளவு நல்லா சாப்பிட முடியும்னு தீபாவளி எப்ப வருதுன்னு காலெண்டர் பின்னாடி தேடுற பசங்களைப் போல எதிர்பார்ப்புடன் இருந்தனர். இப்போதைக்கு நாலு வீட்ல கிடைத்த பண்டங்களும் சாப்பாடுகளுமே அவர்களுக்கு வித்தியாசமான சுவையான சாப்பாடு.
மகளைத் தன் சைக்கிளில் உட்கார வைத்துப் பள்ளியில் விட்டுட்டுத் தன் பணியிடம் சென்றார் கந்தன். முன்பு மாதிரி விறகு, வரட்டி மூலம் உடல்களை எரித்தல் வேலை கிடையாது. பொத்தானை அமுக்குனா மின்சாரமே அந்த வேலைகளைச் சுளுவாக முடித்து விடும். தினமும் உடல்களைப் பார்த்துப்பார்த்து தொலைக் காட்சியில் எப்பவாவது அழகிய நடிகையை அவர் கண் முன்னாடி பக்கத்தில் கேமரா மூலம் கொண்டு வந்து காட்டினால் கூட சின்னப் பிள்ளையிலே டூரிங் டாக்கீஸ்ல பார்த்து வியந்த சில்க் ஸ்மிதா போன்ற அழகு இப்போது அவரைக் கவர்வதில்லை. இந்த உடம்பும் எரிஞ்சு சாம்பலாத்தானே ஆகும்" னுதான் மனசுல 'படக்' னு தோணுது. அழகுடம்பை ரசிக்கவே தோணுவதில்லை. இந்த வேலையை விட்டுப் போனாலும் அந்த நினைவு போகுமா என்பது கடவுளுக்கே வெளிச்சம். போகாதுன்னுதான் தோணுது.
பெண்களை மட்டுமல்ல, குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள், வயதான ஆண்கள்...யாரைப் பார்த்தாலும்
" கடைசீல ஏங்கிட்டதானே வந்தாகணும்" னு ஒரு எதிர்மறை சிந்தனை.... நெகிழ்ச்சியில் கண்களை மீறி அனிச்சையாக இரு துளி கண்ணீர் உதிப்பது போல.... இயல்பாக உதிக்கிறது. அழகான பூக்களைக் கூட ரசிக்க முடியவில்லை. கடற்கரை, மலைப்பிரதேசங்களை ரசிக்க இயலலாம்; ஆனால் அங்கெல்லாம் போய் மாமாங்கமாச்சு.
நாடார் கடை காலெண்டர்கள் நிறைய வந்து போயின. சுபா செவிலியராகி பக்கத்து தனியார் மருத்துவமனையில் சேர்ந்தும் விட்டாள். கந்தனுக்கும் தெய்வானைக்கும் நிரம்ப மகிழ்ச்சி. ஏதோ தங்களுக்கே வேலை கிடைத்த மாதிரி தெருவிலும் போகிற இடங்களிலும் ஒவ்வொருவரிடமும் சொல்லி மாய்ந்து விட்டனர்.
" இப்ப என்ன வேலை பாக்கிறே பாப்பா " என இரவு சோற்றைப் பிசைந்து கொண்டே கேட்டார் கந்தன்.
" பொதுப் பிரிவுதாம்பா.... காய்ச்சல்காரங்களையெல்லாம் பாப்பாரே ... அந்த டாக்டருக்கு உதவி பண்றேம்பா".
" எப்ப குழந்தைகள் பிறக்குற இடத்துல வேலை பாப்பே? "
" இப்பதான் அதுக்கும் பயிற்சி எடுத்து வார்றேம்பா... அடுத்த வருஷம் டெலிவெரி பாக்க வர்ற டாக்டருக்கு உதவப் போடுவாங்கன்னு நினைக்கிறேன்... போட்டவுடன் சொல்றேம்பா".
அடுத்த வருடம் ஒரு நாள்
" நாளையிலிருந்து மகப்பேறு பகுதில வேலை பாக்கப் போறேம்பா " என கூறினாள் சுபா. கந்தனுக்கு மனசெல்லாம் மத்தாப்பாகப் பொரிந்தது. உடலெல்லாம் இனம் புரியாத தவிப்பு, துடிப்பு எல்லாம் கலந்த உணர்வு நிலை.
" பாப்பா.... நானும் வர்றேன்.... ஓன் உதவிலே பிறக்கிற குழந்தையைத் தூரத்திலிருந்து பாக்கணும்... நல்லா குளிச்சிட்டு சுத்தமா... வேலைக்கு லீவு போட்டுட்டு வந்துடுறேன்... " தனது உதவியாளுக்கு உடனே மொபைல் பண்ணினார் கந்தன்.
அடுத்த நாள் சூர்யோதயம், மரங்களிலிருந்து குருவிகளின் ' கீச் கீச்', காகங்கள் கரைதல், அணிலின் உருவத்துக்குப் பொருந்தாத சத்தம் எல்லாமே தெய்வீகமாக தோன்றின கந்தனுக்கு. பரபரப்பாக இருந்தார்.
" அப்பா....நாந்தானே வேலை பார்க்க போறேன்... நீங்க என்ன சின்னக் குழந்தையாட்டம் பரபரன்னு சுத்துறீங்க?"
அசட்டுச் சிரிப்பை உதிர்த்தார் கந்தன் செடியானது காய்ந்த இலையை உதிர்ப்பது போல.
மகப்பேறு அறைக்கு எதிர்ப் புறமாயிருந்த வெட்டவெளி பெஞ்சுகளில் காலைல பத்து மணிலருந்து காத்துக்கிட்டிருந்தார் கந்தன்.
காலைல ஏதும் டெலிவரி கேஸ் வரவில்லை. மதியம் மூனு மணிக்கு மேலே ஒரு பெண்மணியைத் தள்ளு படுக்கையில் உள்ளே கொண்டு போயினர். கந்தனின் கண்கள் இனிப்பைக் கண்ட சிறுவன் போல விரிந்தன.
ஆறு மணிக்கு மேலேதான் முதல் சிசு, சுபா உதவி செய்ய பிறந்தது. தூரத்தில் சிசுவின் அப்பாக்குக் காட்டியபோது தனக்கும் சிறிது புலப்பட்டது கண்டு கண் கலங்கினார் கந்தன். அவரால் எதையும் பார்க்க முடியாதபடி கண்ணீர்த் திரை. குளிக்கும்போது நம் மார்பில் நீரானது வேகமாக இறங்கி பாதம் தாண்டி தரையைத் தொடுவது போல கண்ணீர் கந்தன் கன்னங்களைத் தாண்டி நாடியில் இறங்கியது. தோளில் போட்டிருந்த பழுப்பேறிய வெள்ளைத் துண்டால் கண்களைத் துடைத்துக் கொண்டார். தான் இத்தனை வருஷம் கஷ்டப்பட்டது வீண் போகலைங்கற எண்ணம் மீண்டும் மீண்டும் மேலோங்கியது. மரணத்தையே பார்த்துக் கொண்டிருந்த குடும்பத்தில் ஒருத்தி இனி ஜனனத்தையே பார்த்துக் கொண்டிருப்பாள் என்ற நினைப்பே அவருக்கு வாழ்நாள் முழுமைக்கும் போதுமானதாகயிருந்தது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்