logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

க. சத்யப்பிரியா

சிறுகதை வரிசை எண் # 252


பானைக்குள்ள என்னது? இன்னைக்கு காலேஜ்ல அந்த பி.டி வாத்தியார் செம ரைடு… ‘‘மண்டைல பீ தடவுனவங்களே இங்க வாங்கடான்னு’’ கூப்புட்டு அங்கனயே நாக்கப் புடுங்கிக்கிட்டுச் சாகுற மாதிரி, ஊருக்குப் போயி நாண்டுக்கிட்டு நின்னு சாகுற மாதிரி நல்லாக் கேட்டுப்புட்டாரு. கண்டும் காணாமச் சந்தைக்குப் போற அவசரத்துல வேகவேகமா நடந்துபோயி சேர் ஆட்டோவப் புடிச்சுச் சந்தையில இறங்கி எல்லாத்தையும் வாங்கிப்புட்டு, காணிக்கூர் பாதாளகாளி விளக்குப் பூசைக்கு வந்த பெளர்ணமிக் கூட்ட நெரிசலையும் தாண்டி, செமயத் தூக்கிக்கிட்டு நடையா நடந்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக வந்து ஒரு டீயைக் குடிச்சுப்புட்டு, ரஞ்சித் பஸ்ஸுக்குக் காத்திருந்தோம். ஆட்களை மட்டுமல்லாது அனைத்தையுமே அள்ளிப் போட்டுக்கொண்டு அசுர வேகத்தில் வந்து நின்றது, ரஞ்சித் பஸ். காய்கறிப் பையை உள்ளே கொடுத்துவிட்டுக் கசங்கிப்போய் உள்ளே சேர்ந்துவிட்டேன். ஒவ்வொரு கிராமமாய் ஆட்களும் பொருட்களுமாய் இறங்கிக்கொண்டே வர, மூச்சுவிடக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. சன்னல் வழியா கத்தரிச்செடியைப் பார்த்த ஒடனே இந்த ஆயா சொன்ன விதைய வாங்காம வந்துட்டனேன்னு அப்பதா மண்டைல ஒரைச்சுச்சு. இறங்க வேண்டிய ஊரும் நெருங்கிக்கொண்டே வந்தது. காய்கறிப் பையை எடுத்து காலிடுக்கில் வைத்துக்கொண்டு, கட்டைப்பையை இறுக்கிப் பிடித்துப் பார்த்தேன். கட்டை உடையாது என்கிற நம்பிக்கையில் கம்பியைப் பிடித்து எழுந்து வாசலருகே வந்து நின்றேன். காணிக்கூர் விலக்குல இறங்கிக் குறுக்குப் பாதையில வயக்காட்டு வரப்பு மேலேயே நடந்தா ரெண்டு மைல்ல ஊருக்குள்ள போயிரலாம். இந்த ஆயாகாரி அவ சொன்னத வாங்கியாரலைனு ஆட்டமா ஆடுவாளே… அவ கண்ணுல படாமச் சுத்திகிட்டுப் போயிரணும். இந்நியாரம் அவ வயக்காட்டுலதா இருப்பா… இன்னும் வந்திருக்க மாட்டா… பெரியாயி கோயிலைச் சுத்திப் போயிட்டா தப்பிச்சுருலாம்… இப்படியாக எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தது. ஆயாகாரிக்கு எழுபத்தைந்து வயசாகிருச்சு, தாத்தா போயி ஆறேழு வருசம் இருக்கும். ஆனாலும் யாரையும் அண்டாம, கைக்கஞ்சி காச்சிக் குடிச்சுட்டுக் கம்பீரமாத்தா இருக்குறா… ரேசன் காடுல பேரன் பேரைச் சேர்த்துகிட்டு அரிசி, சீனி எல்லா வாங்கிருது. ஓஏபி பணம் ஆயிரமோ, ஆயிரத்தி ஐநூறோ மாசமானா வாங்கிருது. களையெடுக்கப் போகுது… மக வீட்டுல சொல்லிக் கருவாட்ட கொண்டுவர வச்சு அப்பப்ப கருவாட்டு யாவாரம் வேற. பூராத்தையும் மக வீட்டுக்கு ஏத்திவிட்டுறணும். அதுதா இந்த ஆயாகாரி நெனப்பு. மகள அண்ண மயனுக்குக் கட்டிக் கொடுத்துப்புட்டுக் காலத்துக்கும் ஏத்திவிட்டுகிட்டே இருக்கணும் இவளுக்கு. இவ மகளே பேரன் பேத்தி எடுத்துட்டா… இன்னும் இவ கொட்டம் அடங்க மாட்டேங்குதே… இந்த விதைய வாங்காம வந்ததுக்கு வேற கொண்ட மயித்த ஆயாம விடமாட்டாளே! நினைவுகள் வேறு திசைக்கே போகாமல் ஆயாவைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தது. ஒருவழியா பெரியாயி புண்ணியத்துல அவ கண்ணுல படாம வீடு வந்து சேர்ந்துட்டோம்… பெருமூச்சு விட்டேன். ஆயாவின் வீட்டை இங்கிருந்தே எட்டிப் பார்த்தேன். அவ இன்னும் வயக்காட்டிலிருந்து வரல. ஆயாகாரி இந்த விதயப் பத்திக் கேக்குறதுக்கு முன்னாடி அந்த ரூமப் பத்திக் கேட்டுருவோம். அப்பத்தே அது செவனேன்னு இருக்கும், இல்லைனா மொணங்கித் தள்ளிரும்னு முடிவு பண்ணிட்ட. எங்க வீட்டுல ஒரு சின்ன ரூம் மாதிரி இருக்கும். அந்த ரூம் சாவி, ஆயாட்ட மட்டுந்தே இருக்கும். அந்த ரூமுக்குள் அவளைத் தவிர வேற யாரும் உள்ள போக முடியாது. அந்த ரூமுக்குள் அப்படி என்னதா இருக்குமுன்னு எனக்கு வெவரந் தெரிஞ்ச நாள்ல இருந்து அம்மாட்ட கேக்குற, சொல்லமாட்டேங்குது. எங்க அம்மாவும் பேரன், பேத்தி எடுத்திட்டாலும் இன்னும் மாமியாகாரி மேல பயம்தான்.. ‘‘அந்தக் கெழவி காசு பணம், நகை நட்டு எல்லாத்தையும் அதுக்குள்ள வச்சிருக்குதாம். கெட்டிக்கொடுத்து இங்க வந்து ஏழு பிள்ளைகளப் பெத்து, அஞ்சக் காப்பாத்தி, மூனக் கரையேத்தியும் இன்னைக்கு வர அந்த ரூமுக்குள்ள போனதில்லத்தா’’ என்றார் அம்மா. வயக்காட்டிலிருந்து வந்து வீட்டிற்குள் நுழைந்த அப்பாவிடம், ஆயா ஏன் யாரயும் அந்த ரூமுக்குள்ள விடமாட்டேங்குது என்றேன். ‘‘ஆயா அந்த ரூமுக்குள்ளதா நம்ம சொத்துப் பத்தரத்தயெல்லா வச்சிருக்கு, காசு பணம் வச்சுருக்கும், அது அன்னைக்கு போட்டுட்டு வந்த நகையக்கூட இன்னும் பத்தரமா வச்சுருக்குது, கண்ணுலகூடக் காட்ட மாட்டேங்குது. அதுனாலதா யாரையும் உள்ளவிடாமச் சாவியப் பத்தரமா சுருக்குப்பையிலயே வச்சிருக்கு’’ என்றார். நீங்க பாத்துருக்கீங்களா? என்றேன். ‘‘இல்லமா… எங்க அப்பு சொல்லுவாரு, அதத்தான் நானும் சொல்லுற’’ என்றார். அந்த ரூமுக்குள்ள என்னதா இருக்குன்னு இன்னைக்குப் பாத்தரணும்னு முடிவு பண்ணிட்ட. பொழுது சாய்ஞ்சிருச்சு, ஆயாவும் வந்து சோத்த ஆக்கித் தின்னுப்புட்டுப் படுத்துருச்சு. எனக்கா… ரவ முழுக்கத் தூக்கமே வரல, என்ன செய்யலாம் என்று யோசித்தேன். விடியட்டும் பாத்துருவோம்னு தூங்கிட்டேன். விடியவும் வெள்ளனத்துல எந்திருச்சு பாட்டியைத் தேடினேன். விதையப் பத்தி இவ கேக்குறதுக்கு முன்னாடி நம்ம போயி இந்த ரூம் சாவியப்பத்திக் கிளறுவோம்னு நெனைச்சுகிட்டு, பின்புறம் இருந்த பாட்டியிடம் ஆயா… ஆயா… அந்த ரூம்ல என்னதா வச்சுருக்க? பெட்டி நெறையா காசு பணம், நகைன்னு வச்சுருக்கிறியா? பூராத்தையும் உன் மகள் வீட்டுக்கு ஏத்திவிடணுமோ? ஏன் அத யாருக்கும் தராம வச்சிருக்க? நானும் ஓம் பேத்தி தான, என்ட்ட கொடுத்தாதா என்னவாம்? என்று கேட்டதும் ஆயா ஒரு நமட்டுச் சிரிப்புச் சிரித்தது. ஏய் கிழவி..! எதுக்குச் சிரிக்கிறன்னு கோவமாகக் கேட்டேன். அதற்கு ‘‘வா ஏங்கூடன்னு’’ சொல்லிக் கூட்டிட்டுப் போயி, முகட்டு உசரத்துக்கு இருந்த ஆறேழு பானை இருக்குற ரூமைக் காட்டியது. என்னத்துக்குதா இத்தத் தண்டிப் பானைகள வச்சுருக்குறியோ? இதுக்குள்ள என்ன வச்சுருக்க என்று கேட்டவுடன், ‘‘இது விதை நெல்லு, வெள்ளாமைல வந்தது பூராத்தையும் கொட்டி வைக்குறதுடி, தாழிப்பானைன்னு சொல்லுவோம்’’ என்றது ஆயா. சரி, இப்ப இதுக்குள்ள ரகசியமா என்னதா வச்சுருக்கன்னு கேட்டேன். ‘‘கம்பு, கேப்பை, சாம, கொள்ளு, கருவாடு, ஓந் தாத்தனுக்குத் தெரியாமக் காசு பணம் கூட இதுலதா வப்பேன். அப்பறம் நெல்லுக்கஞ்சி வந்ததுல இருந்து எல்லாத்துலயும் நெல்லுதா கொட்டி வப்போமுடி. இன்னைக்கு வக்கனையா மூணு தேரமும் சோறு திங்கிறைல… அப்போவுலா… நெல்லுச்சோறு கெடைக்காது. ஆடி, தைன்னு எதாச்சும் நல்லநா திங்கநாளைக்குத்தே நெல்லுச்சோறெல்லாம்’’ என்றது ஆயா. சரி… அந்தா ஒரு சின்னப் பானையக் கெட்டித் தொங்க வச்சிருக்கைல… அதுல என்ன இருக்குதுன்னு கேட்டேன். ‘‘அதுல பாம்பு இருக்குதுடி’’ என்றது ஆயா. கிழவி நம்மள எப்புடி பயங்காட்டுதுன்னு நெனைச்சுகிட்டே உண்மயச் சொல்லு ஆயா என்றேன். ‘‘அதுலா ஒன்னுமில்ல, வா போகலாம்னு’’ இழுத்துட்டு வெளிய வந்து கதவச் சாத்திப் பூட்டி சாவிய இடுப்புல சொருகிகிட்டுப் போயிருச்சு. என்ன இருக்கும்? அம்மா சொன்னது மாதிரிக் காசு பணமா இருக்குமோ, இல்ல அப்பா சொன்னது மாதிரி நகையா இருக்குமோ என்று யோசித்துக்கொண்டே திட்டம் போட்டேன். எல்லோரும் அசந்து தூங்கிக்கொண்டிருந்த இரவு வேளையில், ஆயாவின் முந்தியில் முடிந்து வைத்திருந்த சாவியை அவிழ்த்துவிட்டேன். யாருக்கும் தெரியாமல் அந்த ரூம் கதவைத் திறந்து உள்ளே போய்விட்டேன். தொங்கிக் கொண்டிருந்த அந்தச் சிறிய பானை என் உயரத்திற்கு எட்டவில்லை. என்ன செய்வதென்று சுற்றிப் சுற்றிப் பார்த்தேன். ஒரு மூளையில் அன்னக்கூடை இருந்தது. அதை எடுத்துக் கவிழ்த்துப் போட்டு ஏறினேன். கையை விட்டுக் கிளறினால் ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. என்னவாக இருக்கும் என்ற யோசனையிலேயே வெளியே எடுத்தேன். அய்யோ… அம்மா என்று அலற… எல்லோரும் அங்கே வந்துவிட்டார்கள். ‘‘இன்னியாரத்துல இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க’’ என்று அம்மா கேட்க, அம்மா… பாம்பு. இந்தக் கிழவி, வீட்டுக்குள்ள பாம்பு வளக்குறாமா! என்ன கடிச்சிருச்சு என்று கத்தினேன். ‘‘எங்க? எங்க? காமி’’ என்றார். நானும் காண்பிக்க, கையில் பாம்பு கடித்த தடமே இல்லை. அம்மா அங்க பாரு… கருப்பு கலர்ல நீளமா இருக்குது பாரு… அப்பா அதைக் கையில் எடுத்துப் பார்த்தார். அடச் சை… இது சவுரி முடி. இதையா இந்தக் கிழவி பூட்டிப் பூட்டி வச்சுருக்கு? கெரகம் புடிச்சதுக்கு சவுரி முடி கேக்குதாக்கும். க.சத்யப்பிரியா, ஆய்வியல் நிறைஞர், வரலாற்றுத் துறை, மாநிலக் கல்லூரி, சென்னை – 05.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.