வருசேந்திரம்!
--------------
(ஏ.ஆர்.முருகன் மயிலம்பாடி)
#சூரிய வெளிச்சம் பட்டதும்,, பளாச்சென மின்னியது பட்டு உருமாலைத் தலைப்பாகை!,
ஆசையாய் தொட்டுப் பார்த்து நெகிழ்ந்து போனாள் செண்பகவல்லி,
'முழுக்கைச் சொக்காய் உடுத்தி, நீள முழத் துண்டு தோளில் புரள,, நுண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்த பட்டுக் குஞ்சம் வைத்த உருமாலையைத் தலையில் கம்பீரமாக அணிந்து, குதிரை வண்டியில் வந்திறங்கிக் கோவில் முதல் மரியாதையை ஏற்றுக் கொள்ளும் கணவர் கோவர்த்தனத்தின் ஞாபகம் வந்து மனசை நிறைத்தது'. அது அந்தக் குடும்பத்துக்கே உரிய கவுரவம்,
மூன்று வருசங்களுக்கு முன்பு கொரோனாவில் அவரைக் காப்பாற்ற முடியாமல் மரணமடைந்து போன பிற்பாடு பெட்டிக்குள்ளேயே முடங்கிப் போனது,, ஒவ்வொரு ஆண்டும் இறந்த நாளன்று வருசேந்திரத் திதி செய்யும் போது மட்டும் எடுத்து வழிபாட்டில் வைத்துக் கும்பிடுவது வழக்கம்..
அதையே பார்த்துக் கொண்டிருந்தவள் உள்ளறையிலிருந்து வந்து கொண்டிருந்த தன் அண்ணன் மகளைப் பார்த்து,
"இந்த முறை கோவில் திருவிழாவுக்கு இதைக் கட்டீட்டுப் போய் என் மகன் முத்துராசு முதல் மரியாதையை ஏத்துக்கனும்,அதுக்கு நீ தான் ஒத்தாசை செய்யனும்"
"நான் என்ன செய்யனும் அத்தை?"
"கழுத்தை நீட்டி அவனோட மூனு முடிச்சை ஏத்துக்கனும், அதுக்காகத் தானே உன்னை வரவழைச்சிருக்கேன்"
பூரணி வெட்கத்தோடு முகஞ் சிவந்து தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.
"இன்னிக்குத் திவசச் சடங்கு முடிஞ்சதும் பேசி முடிச்சுடப் போறேன். அடுத்த மாசத்துல கல்யாணத்தை வச்சுக்கலாம்"
பதிலேதும் சொல்லாமல் புன்முறுவல் பூத்த படி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
முத்துராசு முப்பதைத் தொடப் போகிறான்.
படிப்பு, மேற்படிப்பு, அப்பா மரணத் துக்கம் எனக் காலம் ஓடி விட்டது, இனியும் தாமதிக்க முடியாது. சட்டுப் புட்டுன்னு தேவையை முடித்து விட வேண்டும். முறைப் பெண்ணான பூரணிக்கும் யசு ஏறிக் கொண்டிருக்கிறது.
சொத்துப் பத்துக்குக் குறைச்சலில்லை. எழுபது சொச்சம் ஏக்கர் நிலம் இருந்தது, பத்து மைல் தூரத்தில் ஓடுகிற, வற்றாத நதியான காவிரியாற்றோரம் கிணறு வெட்டி, அங்கிருந்து குழாய் இணைப்பு மூலம்,. சுத்துப்பத்து நிலக்கிழார்கள் நூறு பேருக்கு மேல் ஒன்று சேர்ந்து கொண்டு வந்திருந்த திட்டத்தின் மூலமாகப் பஞ்சம் இல்லாமல் தண்ணீர் பாய்ந்தது. அங்கையன்பட்டி செழுமை மிகுந்த ஊர். அந்தப் பெயரே அவன் கொள்ளுத் தாத்தா வழியில் வந்ததாகப் பேச்சுண்டு!, கிராமம் பூராவும் அந்தக் குடும்பத்தின் மேல் பற்றுக் கொண்டிருந்தது. தந்தை கோவர்த்தனம் மூன்று முறை பஞ்சாயத்துத் தலைவராக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அவரின் இறப்புக்குப் பிறகு சுற்றமும், சூழமும், தெப்புத் தேற இவ்வளவு காலம் பிடித்து விட்டது.
முற்று முடிவாய் படிப்பை முடித்து, ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி பயிற்சிக்குப் பிறகு முத்துராசு ஊருக்கு வந்து சேர்ந்து ஓராண்டு ஆகப் போகிறது.
சிறு வயதிலிருந்தே விவசாயத்தின் மீது தீவிரமான ஆர்வம் கொண்டிருந்தான். அதற்கேற்ப கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டத்தில் சேர்ந்தான். முதுகலையில் தோட்டக்கலைப் பயிர்களைப் பற்றிய பாடப்பிரிவில் இணைந்தான். ஆஸ்திரேலியாவில், கால்நடைப் பராமரிப்பு, காலநிலை மாறுபாடு குறித்த உயர் பயிற்சியையும் வெற்றிகரமாக நிறைவு செய்தான்.
கை நிறையச் சம்பளத்தோடு பல்வேறு வெள்ளைக் காலர் பணி வாய்ப்புக்கள் அவனுக்காகக் காத்துக் கிடந்த போதிலும், அவற்றைப் பிடிவாதமாக மறுத்து விட்டுத் தன் பூமியை வளப்படுத்துவதில் அக்கறை காட்டி விவசாயியாக வலம் வருகிறான்.
எல்லாத் தொழிலும் அந்தஸ்தை வளர்க்கும், உழவு மட்டுமே உள்ளத்தைப் பக்குவப்படுத்தும், நிறையக் கற்றவர்கள் மேலை நாட்டுத் தொழில் நுட்ப அறிவு பெற்றவர்கள், ஊர்புறங்களிலுள்ள சொந்த நிலங்களில் பாடுபட முன் வர வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து செயலில் இறங்கி முன் மாதிரியாய் திகழ்கிறான் .
மஞ்சள் வெள்ளாமை அந்தப் பகுதி மண்ணுக்கே உரித்தானது. கரும்பு, வாழை போன்ற பணப் பயிர்களும் போட்டி போட்டு விளைந்தன. தோட்டம் பூராவும் சொட்டு நீர் பாசனத்துக்கு மாற்றினான், அதனால் நீர் மேலாண்மை எளிதாக இருந்தது.
அருகாமையில் இருந்த அந்தியூர் சந்தை, மாடுகளுக்குப் பிரசித்தி பெற்றது. அங்கு போய், நாட்டு மாடுகள் நான்கும், காங்கேயம் காளைகள் ஒரு ஜோடியும் வாங்கி வந்தான். இயற்கை எருவைப் போல் விளைச்சலை அதிகப்படுத்தும் மகத்துவம் வேறெதிலும் கிடையாது. ஏற்கனவே கட்டுத்தறியில் இருந்த கறவைகளுக்குத் தட்டைப்பயிறு, பாசிப்பயறு, துவரைக்குருணை, போன்றவற்றை ஊற வைத்து ஆட்டிக் குடிதண்ணீரில் கலந்து கொடுத்தான். அதனால், தினமும் காலை, மாலைகளில் கூட்டுறவுச் சங்கத்துக்கு ஊற்றுகிற பாலின் அளவு அதிகரித்தது.
தலைச்சேரிப் பண்ணையிலிருந்து ஒரு டஜன் ஆடுகள் வாங்கி வந்து பட்டி போட்டான், மறு வெள்ளாமைக்குக் காத்திருக்கிற நிலங்களுக்குப் புழுக்கை நல்ல அடியுரமாகப் பயன்பட்டது.
குறுகிய காலத்திலேயே,பண்ணையம் முன்பிருந்ததை விட போசாக்காகச் செழித்தது.
உள்ளூர் தொழிலாளர்களில் ஆண், பெண் இரு சாராருக்கும் நல்ல சம்பளத்தோடு வேலை வழங்கினான். பக்கத்துக் குடியானவர்களுக்குத் தொழில் நுட்ப ஆலோசனைகள் கொடுத்து, நவீன வழிமுறைகளைக் காட்டினான்.
வேளாண்மைத் துறை அதிகாரிகள்,பொறியியல் நிபுனர்களோடு கலந்து பேசி அரசாங்கத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்டினான். எதிர்காலத்தில் தரமான விதைகளை உற்பத்தி செய்து பிறருக்கு வழங்க வேண்டும் என்பது அவனது சிந்தனையாக இருந்தது.
ஊராட்சி நிர்வாகத்தோடு இணைந்து நூறு நாள் வேலை ஆட்கள் மூலமாக ரோட்டோரங்களிலும், கம்மாக்கரைகளிலும், ஏரி, குளம், குட்டைப் புறம்போக்குகளிலும் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க முயற்சிகளை மேற்கொண்டான்.
கிராமத்தில் வசித்தவர்கள் எல்லோரும் அவன் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கலந்து தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்.
"அம்மா ரெடியாயீட்டீங்களா?, எல்லோரும் நமக்காகக் காத்திருப்பாங்க"
குளித்து முடித்துத் தலையைத் துவட்டிக் கொண்டே வந்தவன், குரலை உயர்த்தினான்,
"ம்,, நீ கிளம்புனாச் சரி, சமையல்காரங்க அடுப்பைப் பத்த வச்சுட்டாங்க, விரதம்ங்கிறதாலக் காலை ஆகாரம் கிடையாது. காபித் தண்ணியாவது ஒரு முழுங்கு குடுச்சுட்டு வந்துடுறேன். உனக்கும் கொண்டு வரட்டுமா?"
"விரதம்னா எதுவுமே அருந்தக் கூடாது. காபி, அது, இதுன்னு வயித்தை நெரப்பீட்டு இருக்கிறதில்ல"
முத்துராசுவின் எகத்தாளச் சிரிப்பைக் கண்டு கொள்ளாமல் அடுக்களை நோக்கிச் சென்றாள்.
வாசல் பந்தலில் உற்றார் உறவினர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களிடம் சென்று இரண்டொரு வார்த்தைகள் குசலம் விசாரித்து விட்டுப் புது வேஸ்டி, சட்டை அணிந்து கொண்டு புறப்பட்டான்.
"பூரணியையும் கூட்டீட்டுப் போலாம்"
செண்பகவல்லி மெல்லச் சொன்னாள்.
"அவ எதுக்கு?, அப்பாவுக்காக ஆத்மார்த்தமா நாம செய்யுற சம்பிரதாயம், அதுல நம்ம மட்டும் கலந்துட்டாப் போதும்"
"ஏன் அவளும் நம் குடும்பத்துல ஒருத்தி தானே, அவளும் வரட்டும், மத்த நம்ம உறவினர்கள் இங்கிருக்கிற வேலைகளைக் கவனிச்சுப்பாங்க, அந்தச் சின்னப் பொண்ணு இங்கிருந்து என்ன செய்யப் போறா?"
"நீ எப்பொவும் பிடிவாதத்தைக் குறைச்சுக்க மாட்டே, சரி, சரி வரச் சொல்லு"
எனக் கூறி, அவள் வரும் வரை காத்திருந்து இருவரையும் ஏற்றிக்கொண்டு காரைக் கிளப்பினான்.
குலதெய்வக் கோவிலுக்கு வண்டியை விட்டான். கோவில் பூசாரிகள் பழத் தட்டோடு வந்து எதிர் கொண்டு அழைத்துச் சென்றார்கள். செல்லியாண்டியம்மன் சிங்க வாகனத்தின் மேல், கதாயுதங்கள் தாங்கி, ஆடை அணிகலன்கள், ஆபரண அலங்காரத்தோடு கருணை வடிவமாகக் காட்சி தந்தாள்.
பயபக்தியோடு சாமி கும்பிட்டுப் பிரசாதம் பெற்றுக் கொண்டான்.
"சித்திரை மாசம் வந்தாலே, அப்பா சுறுசுறுப்பாயிடுவாரு, பரம்பரைத் தர்மக்கர்த்தாங்கிறதைத் தாண்டி, அம்மனோட அனுக்கிரகப் பக்தரா விளங்கினாரு, பூச்சாட்டிலிருந்து பதினைஞ்சு தினங்கள் கழிச்சுத் திருவிழா முடியுற வரைக்கும் கடும் நோன்பிருப்பாரு . நம்ம அம்மனுக்கு எழுபதடி நீளமுள்ள பூக் குண்டம் உண்டு . சுத்து வட்டாரத்துலையே நம் ஆலயத் தீக்குண்டமே பெருசுங்கிறதால ஆயிரக் கணக்கானவங்க பூ மிதிப்பாங்க, நெருப்பு வளர்க்க ஊஞ்ச மரங்களை மட்டுமே பயன்படுத்துறது வழக்கம், சென்னம்பட்டி வனப் பகுதிக்கு ஊரிலிருக்கிற டிராக்டர்காரர்கள், மரம் வெட்டுபவர்கள், எடுபிடி வேலை செய்ய ஆட்கள் எல்லோரையும் கூட்டிக் கொண்டு போய், வனச் சரகரின் அனுமதியோடு வெட்டி எடுத்துட்டு வருவாரு, அதெல்லாம் சாதாரணக் காரியமில்லை"
மூத்த பண்டாரம் நாத் தழுதழுக்க நினைவு கூர்ந்தார், பக்கத்திலிருந்த பெரிய பூசாரி தொடர்ந்தார்,
"அவர் காலமானதிலிருந்து மூனு வருசமாப் பூச்சாட்டக் கொடுப்பினை வாய்க்கலை, கொரோனான்னு சொல்லி அறநிலையத் துறை அனுமதி கொடுக்கலே, அந்தப் பாழும் வியாதியால தானே நம்ம ஐயாவையும் பறி கொடுத்தோம்,,"
நின்று நிதானித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசினார்,
"இந்தத் தடவை எந்தத் தடையும் இருக்காது. நல்ல வேளையாய் சின்னவரு தந்தையைப் போலவே ஊருக்கு உழைக்கிறவராய் வாய்ச்சிருக்கிறாரு, இனி மேல் எல்லாத்தையும் ஏத்துச் சிறப்பாப் பண்ணுவார்னு எதிர்பார்க்கிறோம்"
"அதெல்லாம் செல்லியாண்டியம்மன் அருளாலே நல்ல படியாய் நடக்கும், நீங்க ஒன்னும் வருத்தப் படாதீங்க பூசாரியாரே"
செண்பகவல்லி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் சொன்னாள்,,
"நீங்க சொல்றது பலிக்கும்மா!, ஆனா..?"
கேள்விக்குறியோடு பண்டாரம் நிறுத்தினார்,
"என்ன சொல்றீங்க"
"பண்டிகை போட்டு எடுக்கிறதுல எந்தப் பிரச்சினையுமில்ல, உங்க குடும்பத்துக்குக் கோவில் நிர்வாகம் செய்யுற பரிவட்டச் சம்பிரதாயமும் பிசிறில்லாம நடந்துட்டாச் சிறப்பா இருக்கும்"
"அதுக்கு என்ன இடைஞ்சல்?"
"உங்களுக்குத் தெரியாததா?, அந்த முறைமைக்காகவே நவமணிகள் பதிச்ச பட்டு உருமாலை உங்க வீட்ல இருக்கு, அதை அணிஞ்சு வரனும்னா தம்பதி சமேதராய் ஆகனும்"
"ஓ.. நீங்க சொல்றதை நானும் யோசிச்சேன். நீங்க மத்தியானம் விருந்துக்கு வர்ரீங்க இல்லை. அங்கே தெருஞ்சுக்குவீங்க, அப்பொ நடக்கிற ஐயாவுக்கான அஞ்சலி நிகழ்ச்சியிலே என்னோட முடிவை அறிவிக்கப் போறேன், என் மகன் எப்பொவும் என் பேச்சை மீற மாட்டான்"
அர்த்தம் பொதிந்த பார்வையோடு, முத்துராசுவையும், பூரணியையும், நோக்கியவாறே சொன்னாள்.
அவள் சொன்னதைக் கேட்டுக் கோவிலில் இருந்தவர்கள் சந்தோசப்பட்டார்கள். களிப்போடு வழியனுப்பி வைத்தார்கள்.
அடுத்ததாக, ஊராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்தார்கள்.
பிரமுகர்களும் அலுவலர்களும் குழுமியிருந்தனர்.
கோவர்த்தனத்தின் புகைப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. விடு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாலிருந்த மைதானத்தில் புதிய மரக் கன்றுகள் நடப்பட்டன. தூய்மைப் பணியாளர்களுக்கு எடுத்து வந்திருந்த சீருடைகளை வழங்கியதோடு பண முடிப்புக்களையும் அன்பளிப்பாக வழங்கினான்.
எல்லோரையும், மதியச் சாப்பாட்டுக்குத் தன் இல்லத்துக்கு வரச் சொல்லிக் கூப்பிட்டு விட்டுப் புறப்பட்டான்.
ஊர் முற்றத்தில் இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பாக விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கி வைத்தான். வெற்றி பெறக் கூடியவர்களுக்கு மாலையில் நடைபெறும் அஞ்சலி நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளிக்குள் சென்று, அனைத்துக் குழந்தைகளுக்கும் தம் செலவில் ஏற்பாடு செய்திருந்த பகல் சாப்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தான்.
மகளிர் சுய உதவிக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் கலந்து கொண்டான்.
அந்தக் குழுவை வெற்றிகரமாக நடத்தி வரும் ஒருங்கிணைப்பாளர் வைதேகி உள்ளிட்ட பெண்கள் தாங்கள் உற்பத்தி செய்திருந்த இயற்கை முறையிலான மசாலாப் பொடிகள், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் துணிப் பைகள், பாக்கு மட்டையால் செய்த உணவுத் தட்டுகள், ஆகியவற்றைப் பார்வைக்கு வைத்திருந்தார்கள். அந்தக் குழு ஆரம்பிக்கப்பட்டுச் சிறப்பாகச் செயல்படுவதற்கு ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருந்த கோவர்த்தனம் பெரும் தூண்டுகோலாக இருந்தார்,,
என்ன தான் ஆண்கள் சம்பாதித்துக் கொடுத்தாலும், பெண்கள் சுயகாலில் நின்று பொருளாதார வளர்ச்சி பெறுவதே, ஒவ்வொரு குடும்பத்தையும் மிளிரச் செய்யும், என்பதைப் புரிய வைத்து அவர்களை முழு முனைப்போடு தங்கள் சொந்த அறிவில் செயல்படுவதற்கு தயார்படுத்தினார். வங்கிகளில் மானியமும், கடனும் பெற்றுக் கொடுத்துப் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார்.
அதனால் மகளிரிடம் அவருக்குப் பெரும் செல்வாக்கு நிலவியது. தங்கள் குடும்பத்தில் ஒருவராய் எண்ணி நினைவு நாளைச் சிறப்பித்தார்கள்.
அங்கிருந்தவர்களை மதிய விருந்துக்கு அழைத்து விட்டு வீடு வந்து சேரும் போது, பந்தலில் நிறையக் கூட்டம் சேர்ந்திருந்தது. ஆளம்புகள் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
"படையல் போடுறதுக்கு நேரம் நெருங்கீட்டு இருக்கு, நான் அதைக் கவனிக்கிறேன்" என்று சொன்ன அம்மா அதற்கான மும்முரத்தில் உள்ளே நுழைந்து, கட்டளைகளைப் பிறப்பித்தாள்.
தட்டுக்களிலும், பாத்திரங்களிலும் பலகாரங்களும், பட்சனங்களும் எடுத்து வரப்பட்டன.
ஒன்பது வகையான காய்கறிப் பொறியல்கள், பருப்பு வடை, பழரசப் பாயசம், அப்பளம், இனிப்பு வகைககளில் லட்டு, ஜிலேபி, அதிரசம், மைசூர்பாகு என விதம் விதமாய் வந்திறங்கின,
சம்பாப் பச்சரிச் சாதம், கூட்டு, குழம்பு, ரசம், கெட்டித் தயிர் வகையறாக்களும் தயாராயின.
நீண்ட தலை வாழை இலைகளை விரித்து அவை முறைப்படி பரிமாறப்பட்டது.
வெவ்வேறு வகையான பாத்திரங்களில் பலவகையான கனி வகைகளை நிரப்பி வைத்தார்கள்.
பிரத்தியேகமாக, வாழைப் பழம், தேங்காய், எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு, நிரம்பிய வெள்ளித் தட்டம், கோவர்த்தனத்தின் புகைப்படத்தின் முன்பு படைக்கப்பட்டது.
முத்துராசு, தன் அப்பா, தாத்தா, அம்மாயி போன்ற, மறைந்த அமரர்களுக்குத் துணி வகைகளைத் தாம்பாளத் தட்டுக்களில் பரப்பினான்.
ஐந்து முக வெண்கலக் குத்து விளக்கில் பசுமாட்டு நெய்யூற்றித் தீபம் ஏற்றினான்.
"அந்த உருமாலையை எடுத்து வந்து வையப்பா" என அன்னை நினைவு படுத்தியதும் அதை எடுத்து வந்து துணித் தட்டின் மையத்தில் வைத்தான். அதன் பளபளப்புத் தூக்கலாய் பிரகாசித்தது.
குலதெய்வக் கோவில் பூசாரிமார்கள் உள்ளே நுழைந்ததும், வெளியில் காத்திருந்த அத்தனை பேரும் கூடத்தை நிறைத்து ஆக்கிரமித்து நின்றார்கள்.
"பூசை செய்யலாமா?"
என்று கேட்டு விட்டு ஆலயப் பூசாரிகளில் பெரியவர் கற்பூரத் தட்டைத் தூக்கினார்.
எல்லோரும் கண்களில் ஒற்றிக் கொள்ள புகைப்படத்தைச் சுற்றிலும் ஒளி வட்டத்தைப் பரப்பினார்.
வழிபாடு முடிந்து எல்லோருக்கும் தீபாரதனை காட்டினார்.
"சரி,, படையலை எடுத்துட்டு வாங்க, "
என்றதும் அருகிலிருந்த பெண்கள், படைக்கப்பட்டிருந்த பதார்த்தங்களை இலைகளில் சேகரித்தார்கள்.
"முதல் இலையை நீ வாங்கிக்கோப்பா!"
என்றதும், முத்துராசு ஒன்றைப் பெற்றுக் கொண்டு நடந்தான். மாடிப் படிகளில் ஏறி மொட்டைமாடியை அடைந்தான்.
வெளி மாடியின் மேற்புற வெற்றிடத்தில் அதை வைத்தான். பின் தொடர்ந்தவர்களும் தாங்கள் சுமந்து வந்தவற்றைப் பரப்பி வைத்தார்கள்.
"கீழே இறங்கிக்கோங்க, அப்பொத்தான் காகங்கள் வரும்"
"வா, வா" என்று பெருங் குரலெடுத்துக் கூப்பிட்டார்கள். சில பெண்கள் குலவைச் சத்தம் எழுப்பிக் "கா.. கா.. கா..." என்று கரைந்தார்கள்.
கீழே இறங்கிப் பந்தலுக்குள் நின்று கொண்டு காகங்கள் வருகின்றனவா? என்று வானத்தின் நாலா புறங்களிலும் துளாவினார்கள்.
சுற்றி நின்ற மரங்களை அண்ணாந்து பார்த்தார்கள். பறவைக் கரைச்சல் கிஞ்சித்தும் கேட்கவில்லை,,
"மத்தியான வெய்யில் இல்லையா?, சற்றுப் பொறுத்து வரும்"
"ஐயா எப்பொவும் ஆளு, அம்பு, சேனைன்னு கூட்டமா வாழ்ந்தவரு, அங்கெ போயும் அப்படித் தான் இருப்பாரு,, கூட்டத்தைக் கூட்டிட்டு வரக் கொஞ்சம் தாமதப்படுத்துறார் போலிருக்கு"
வயதான ஒருவர் தான் யூகித்தவற்றை எடுத்து விட்டுக் கொண்டிருந்தார்,,
"ஆளாலுக்குக் கசமுசான்னு கூச்சல் போட்டுட்டிருந்தாப் பயந்துட்டுப் பறவைகள் வராது,, கப்சிப்புன்னு அமைதியாய் இருங்க,,"
ஒருவர் அதட்டவே, அந்தப் பிராந்தியமே மவுனமானது.
நீண்ட நேரம் நிசப்தமாய் காத்துக் கிடந்து ஓய்ந்து போனார்கள்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாகியும் காகங்கள் தட்டுப்பட்ட பாடில்லை.
பந்தலுக்குள் ஆங்காங்கு முனு முனுப்புக்கள் மூண்டு சலசலப்பானது.
சில பெருசுகள் சர்க்கரை வியாதித் தொந்தரவில் பசியில் நெளிந்தார்கள்.
"இவ்வளவு நேரம் ஆகுதுன்னா,, ஏதாச்சும் காரண காரியம் இல்லாம இருக்காது"
ஒரு குரல் சற்று ஓங்கிக் கேட்டதும், ஆளாலுக்குத் தங்கள் கருத்துக்களை அருகருகே இருந்தவர்களிடம் கிசுகிசுத்துக் கொண்டார்கள்.
அமைதியாக அமர்ந்திருந்த பெரிய பூசாரி எழுந்து வந்து செண்பகவல்லியை அணுகினார்.
"ஏதாச்சும் மனக் குறையால தான் காலமானவர்களின் ஆன்மாக்கள் படையல் எடுக்கத் தயங்குறாங்களோனு, தோனுது,, அதனால அவுங்க முழுமையாய் சாந்தி அடையற மாதிரிப் பிராயச்சித்தம் செய்யனும்"
"அப்புடி அவுங்களுக்கு எந்தக் குறைபாடும் இருக்க வாய்ப்பில்லீங்களே"
"தன் மகனுக்கு இன்னும் கல்யாணம் நடக்கலையேங்கிற குறை நம்மளைப் போலவே அவுங்களுக்கும் இருக்கும்னு சந்தேகப் படுறேன்"
ஆங்காங்கிருந்தவர்களும் அதை ஆமோதிக்கும் வகையில் தலையை அசைத்தார்கள்,
"பெரியவர் சொல்றது சரியாய் இருக்கலாம்னு "....
மற்றொருவர் வழி மொழிந்தார்.
"அதுக்கு இப்பொ அவசரமாய் என்ன செய்ய முடியும்?"
இன்னொருவர் இடைமறித்தார்..
"இப்பொவே ஒரு பெண்ணை உறுதி செஞ்சு, நிச்சயதார்தத்தை முடிச்சுட்டோம்னா"...
பலருடைய பேச்சினூடே செண்பகவல்லி புகுந்து தன் மனசில் உள்ளதைச் சொல்ல முற்பட்டாள்,,
ஆனால் அதற்குள் முந்திக் கொண்டு முத்துராசு உரக்கப் பேசினான்.
"எல்லோரும் நல்லாக் கேட்டுக்கோங்க, படையல் போடுறது, இறந்து போனவங்க காகங்களாய் வந்து அதைச் சாப்பிடுறாங்கனு சொல்றது எல்லாமே நாம் வச்சிருக்கிற மூட நம்பிக்கையின் வெளிப்பாடு!, இருந்தாலும் இதைச் சாக்கா வச்சு என் உள்ளத்தில் உள்ளதை வெளியுலகத்துக்கு மட்டுமில்ல, என் அம்மாவுக்கும் தெரியப்படுத்துறதுக்கு ஒரு வாய்ப்புக் கிடைச்சிருக்குதுன்னு நெனைக்கிறேன்.
சமுதாய முன்னேற்றத்தில் தன்னை முழுமையாய் அர்ப்பணிச்சவரின் நினைவு நாளை இவ்வளவு சிறப்பாக நடத்துவதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கிற ஊர் மக்களுக்கு நன்றி,,
கொரோனாப் பேரிடர் காலத்தில் தேவையான உதவிகளைக் கிராமத்துக்குச் செய்து கொண்டிருந்தவரையும் அந்தக் கொடூரமான நோய் விட்டு வைக்கலை,
நான் அப்போது வெளியூரில் இருந்ததால் இங்கு உடனே வர முடியவில்லை, அவருக்கு நோய் தொற்று உறுதியானதும் அம்மாவுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை,,
உடனே ஆஸ்பத்திரியில் அனுமதித்து ஆக வேண்டும், மூச்சுத் திணறலோடு மரண வேதனையில் துடித்துக் கொண்டிருந்ததைச் சகிக்க முடியாமல் அம்மா அலறினார். அவசர ஊர்திக்குத் தகவல் தந்த போதிலும் வரவில்லை. நோயாளிகளின் எண்ணிக்கை நிமிசத்துக்கு நிமிசம் அதிகரித்துக் கொண்டிருந்ததால், வண்டிகளுக்கு ஏகக் கிராக்கி ஏற்பட்டிருந்தது.
அவரவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒளிந்து கிடந்த காலத்தில் யாரைக் கூப்பிடுவது?,,
அப்பாவுக்கு உதவியாளராய் எங்கள் பண்ணையத்தைக் கவனித்துக் கொண்டிருந்த குமரேசன் எதைப் பற்றியும் கவலைப் படவில்லை, இரு சக்கர வாகனத்தில் தூக்கி வைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.
எவ்வளவோ தூரம் போராடியும் அப்பாவை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அந்த நோய் குமரேசனையும் தாக்கி விட அவரும் பிழைக்கவில்லை..
கைக்குழந்தையையும், இளம் மனைவியையும் விட்டுப் பிரிந்து விட்டார்.
என் மாமா மகளான பூரணி, ஐ.டி. படித்து பெங்களூருவில் டைடன் பார்க்கில் பணியாற்றுகிறார், அவருக்கு விவசாய வாழ்க்கை பிடிக்காது எனத் தெரிந்தும் குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்காக இங்கு வந்திருப்பதை அறிந்தேன்.
குமரேசனின் மனைவியையும் சின்னக் குழந்தையையும் இங்கு வந்த ஓராண்டாகச் சந்தித்து நன்கு பழகி இருக்கிறேன்.
முற்றிலும் என் ரசனைக்கு ஏற்ற பெண்மணியாய் தெரிந்தார். நம்மூர் சுய உதவிக்குழுப் பொறுப்பாளர் பணியைத் திறம்படச் செய்து வருகிறார். வருங்காலத்தில் எனது லட்சியங்களைச் செயல்படுத்த வைதேகியே சரியானவர் என முடிவு செய்து திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்திருக்கிறேன். தனக்காக நோய்பட்டு இறந்த குமரேசனின் மனைவிக்கு மறுவாழ்வு கொடுக்க நினைக்கும் மகனாகிய என்னை என் தந்தையின் ஆன்மா ஆசீர்வதிக்கும், என நம்புகிறேன்"
படபடவெனச் சொற்களை உதிர்த்துக் கொண்டிருந்தவனின் வார்த்தைகளில் லயித்துக் கிடந்தவர்களை....
"கா.. கா.. கா.. " எனப் படையலை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருந்த பறவைக் கூட்டத்தின் உற்சாகக் கூப்பாடுகள் ஆனந்தத்தில் ஆழ்த்தியது!!
---------------------------------------
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்