N VENKATRAMAN
சிறுகதை வரிசை எண்
# 248
காதலின் தீபம் ஒன்று
அம்மவரம் கிராமம். இரண்டு மாவட்டத்தின் எல்லையை ஒட்டியிருக்கிறது. பிரதான சாலையில் இருந்து பிரிந்து 2 கிமீ உள்ளே போக வேண்டும். இருபுறமும்
பச்சைப் பசேலென்று நெற்பயிர் வெல்வெட் விரித்திருந்தது. ஆறு அருகில் இருந்தாலும்
மழைக்காலத்தில் தான் நீரோட்டம். ,கரும்பு ,மா, வாழை, கொய்யா மரங்களும் ஆங்காங்கே செழித்திருந்தன. தென்னை குறைவு தான்.
கிராமத்தின் நட்ட நடுவில் கோதண்டராமர் கோவில்.
அருகில் மலைமேல் ஹனுமன் கோவில்.
சந்நிதித் தெரு பூரா அக்ரஹாரம்.
இப்போது சில வீடுகள் மட்டும் பிராம்மணர்கள் வசிக்கின்றனர்.
கோதண்டராமர் கோவிலில் தெலுங்கு பிராம்மணரான, ராமச்சந்திர சர்மா தான் பராமரித்து , பூஜைகள் நடத்துகிறார். விசேஷ நாட்களில் மட்டும், பட்டார்சார்யார்கள் வந்து முறைப்படி திருமஞ்சனங்கள், பெருமாள் புறப்பாடுகள், ஆராதனம் செய்வார்கள்.
கோவிலில் ஸ்ரீராமநவமி பத்து நாள் உத்ஸவம் எல்லாம் கலந்து கட்டி செய்வார்கள்.
தெருவை அடைத்து பந்தல் போடப்பட்டு யார் வந்தாலும் ஊர் வரவேற்கும். அதே நேரம் ஊரில் பாகவதர்கள், பஜனை, சீதா கல்யாணம், பிரவசனம் எல்லாம் உண்டு.
அதை ஏகாம்பர ஐயர் குடும்பம் முன்னின்று நடத்தும். தெருவில் பந்தல் போட்டு , நீர்மோர், பானகம் ,கோஸ்மல்லி மற்றும் மதியம், இரவுகளில் ஓயாமல் சிற்றுண்டிகள் உண்டு.
வழக்கமாக கலந்து கொள்ளும் பாகவதர்களன்றி, இடையிடையே விசேஷ அழைப்பாளர்களாக முக்கியமான பிரபலமான
பாகவதர்களும் வந்து பாடுவார்கள்.
இந்த அம்மவரம் உத்ஸவத்தில் கலந்து கொள்ளாத பாகவதர்களே இருக்கமாட்டார்கள். வருபவர்களுக்கு சம்பாவனையோடு வேஷ்டி,ஷால் அணிவித்து கௌரவிப்பதும் சிறப்பு .
மாலையில் பஜனைக்கு முன் VIP க்கள் நிகழ்ச்சி 4மணியில் இருந்து நடக்கும்.
அந்த ஆண்டும் அப்படி ஒரு நிகழ்ச்சி.
வழக்கமாக வரும் Prof .லக்ஷ்மணன் , தன்
மாணவர்கள் சிலரை அழைத்து வந்திருந்தார்.
நான்கு தமிழ் மாணவர்கள், ராகவன், ரகுநாதன், வெங்கடரமணன், கோகுல், ஒரு ஹிந்திக் காரர் ஷரத் சந்தர்.. ஒரு பெண்
அனுராதா. அவர்கள் Project ல் ஒரு அங்கம். கல்லூரியில் கலை நிகழ்ச்சிகள் நடத்திய
அனுபவம் . மெல்லிசை,மிமிக்ரி , டாக் ஷோ
நடத்துவார்கள். நான்கு நாள் தங்க எண்ணம்.
தினமும் மாலையில் ஒவ்வொரு நிகழ்ச்சி.
ஊர்மக்கள், பாகவதர்கள், கலந்து கொள்ள ஏதுவாக நான்கு மணிக்கு ஆரம்பிக்கும். ஆறரை மணிக்கு திவ்யநாம பஜனை ஆரம்பிக்கும்.
முதல் நாள் பாட்டுக் கச்சேரிக்கு, எல்லாம் தயாரானார்கள். அன்று விடுமுறை. விஷயம் அறிந்து நிறைய இளம்வயதுப் பிள்ளைகள் வந்திருந்தனர்.
முதலில், துவக்கப் பாடலை கீபோர்டில் ராகவன் இசைக்க, ஷரத் பேட் வாசிக்க ரகு தபேலா கோகுலும் ரமணனும் பாடத் தயாரானார்கள்.
"கஜவதனா கருணா சதனா ' அடுத்து...
அனு ஹிந்தோளத்தில்..ஆலாபனை ஆரம்பிக்க...பசங்கள்
. "ஏம்மா, அதான்
சாயங்காலம் பாகவதருங்க பாடப் போறாங்க..நீ நல்ல சினிமாப் பாட்ட எடுத்து விடு..தமிழ்ப் பாட்டு பாடு "
இவர்கள் வெளியூர் பசங்க. விஷயம் தெரியாது.
"இங்க சினிமாப் பாட்டு பாட அனுமதி இல்லைப்பா.."
அனு விழிக்க, .அனந்து , "என்ன ,'சாமஜ வர கமனா..' பாடப் போறியா..அதுக்கு நோக்கு அர்த்தம் தெரியுமா..?' ன்னு கேட்டு வைக்க,
"நேரங்காலந் தெரியாம ஓட்டை வாய வச்சுண்டு.." ஜெயராம ஐயர்.,..
"டேய் அபிஷ்டு, சும்மா இருடா..'
'கொழந்தே நீ பாடும்மா..'
அனு ஆரம்பித்தாள் ,
"சாமஜ வர கமனா...கம்பீரமா
பட்டத்து யானை வர அதுல மிடுக்கா அமர்ந்து வர ராமா, " அவள் பேசப்பேச எல்லோரும் அசந்து விட்டனர். "ஆனா நான் பாடப் போறது..ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே...' இதை ஓரளவு கூட்டம் வரவேற்றது. இருந்தும் சினிமாப் பாட்டு..கோரிக்கை அப்படியே .
பெரியவர் வந்து சத்தம் போட்டார்.."என்னங்கடா இது,
இது ராமநவமி உத்ஸவம். இங்க போய்.."
'இல்லை சாமீ, சாயங்காலம் பாகவதருங்க இததான் பாடறாங்க.
இப்ப லைட் ம்யூசிக்கா இருந்தா நல்லாருக்கும்.
," சில பசங்க கேட்க, "
இதோ பாருங்கோ, இந்த
டமுக்கடிக்கிற பாட்டுல்லாம் கூடாது."
"சரி.,சரி..அதான் பெரியவர் சொல்ட்டாரே.
நீ பாடும்மா..'
அனு யோசித்து, "ராகவனே,ரமணா, ரகுநாதா பாற்கடல் வாசா." பாட,
கோகுல், ரமணா ஒவ்வொருவரும் தலா ஒரு பாட்டு பாட ஷரத் , குர்த்தா, பைஜாமாவில் தபலாவை வாங்கி,
"ஜீனி ரே ஜீனி..ச்சாதரியா .சாத்
ரங்குக்கே பீனி சதரியா..ஜீனி ரே ஜீனி..'
பிரபலமான கபீர் பஜன் பாட ஆரம்பித்தான்.
முதலில், ஆர்வம் காட்டாத மக்கள் பந்தல் உள்ளே வர ஆரம்பித்தனர்.
பிரபல இந்தி கஜல் பாடகர் போல , விஸ்தாரமாக , உச்சஸ்தாயியில் ஜாலம் காட்ட...கூட்டம் கப்சிப்.
மறுபடி அனு முறை,
"கண்ணா மூச்சி ஏனடா என் கண்ணா.."
பாடல் நேயர் விருப்பமாக வர..அதற்கு ஏகாம்பர ஐயர் பேத்தி டான்ஸ் ஆட..ஆஹா, "என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா?' கலக்கிவிட்டார்கள்.
ஒரு மாமியின் விருப்பம்.
'மருகேலரா ஓ ராகவா..' ஜயந்தஸ்ரீ ராகம்.
ஸ்பீக்கரில் பாடல் அக்கம்பக்கத்து கிராமங்களுக்கும் போனது. மலையைத் தொட்டு எதிரொலித்தது.
இங்கு , இன்னொரு எதற்கும் அசையாத மலையைப் பற்றிக் கூற வேண்டும். கோவில் அர்ச்சகர் ஷர்மாவின் மகன் ராம்குமார் , வேதம் படித்து விட்டு அப்பாவுக்கு உதவியாக கோவில் பூஜை, வேதபாராயணம்
மற்றும் வைதீக வேலைகளுக்குவெளியூர்
போய் வருவான். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பான். அதீத ஞானம். ஆனால், கிராமத்தில் யாரோடும் கலந்து பழக மாட்டான். ஏதாவது கேட்டால் பதில் சொல்வான். ஊரில் இவ்வளவு
நிகழ்ச்சிகள்நடந்தாலும் வீட்டில் இருந்தே ரசிப்பான்.
பிரபலமான பாகவதாள் பாடினாலும் எட்ட நின்று கேட்பான். அவனுக்கு கல்யாணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டிருந்தனர். லக்ஷணமான, தீக்ஷண்யமான முகம் . ஆனால் ஏனோ பெண் அமையவில்லை. பெற்றோருக்கும் கவலைதான்.
இந்த நிகழ்ச்சியையும், வீட்டில் கேட்டுக் கொண்டிருந்தவன். வெளியில் வந்து திண்ணையில் அமர்ந்து அனு பாடலை கேட்டான்.
ஈர்த்தது போலும். நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது. சினிமாப் பாடல் கேட்ட இளவட்டங்களும் குழுவினரைப் பாராட்டியது. ராம்குமார் சாயங்கால சந்தி முடித்து, மலைமேல் உள்ள ஹனுமான் கோவிலுக்குப் போய் தீபம் ஏற்றி விட்டு வந்தான். மறுநாள், அனு ஏகாம்பர மாமா வீட்டிலிருந்து ராம் குமார் வீட்டுக்கு ஏதோ வேலையாய் வந்தாள்.
எல்லோரும் பாராட்டினார்கள்.
ராம்குமார், பூஜை அறையிலிருந்து வந்தவன் , இவளைப் பார்த்து சற்று துணுக்குற்றான்.
அவன் அம்மா சொன்னாள்.
" இதி அனுராதா ராமு. ப்ரொபஸர் பிலிஸினி ஒச்சாரு..
நேத்து பாடினாளே', "
அவன், "கேட்டேன்.. நன்னா பாடினேள்..'
போய் விட்டான்.
"அவன விடு, அவன் அப்பிடித்தான்'..சங்கீதம் கத்துண்டியா?"
"ஆமாம் மாமி, அப்பப்போ ஸ்டேஜ்ல பாடுவேன்'. வேலையை முடித்துக் கொண்டு போய்விட்டாள்.
ஆனாலும், ராம்குமார் அவளைப் பாதித்தான்.
கல்லூரியில் எவ்வளவோ பிள்ளைகள் இவளை வசீகரிக்க முயல , இவளோ..
யாரையும் சட்டை செய்ததில்லை.
இவன் நல்ல தேஜஸான முகம்,சந்தனக் கீற்று , நல்ல உயரம், சிகை , லேசான தாடியும், மீசையும் இவளைப் பார்த்தும் ஓரிரு வார்த்தை பேசி அகன்ற கண்ணியம் ஈர்த்தது போலும்.
காலையில், ராமர் கோயிலுக்கு அனு போக
அங்கே, ராம்குமார் அப்பாவுக்கு உதவி செய்து கொண்டு இருந்தான்.
ஹாரத்தி முடிந்து தீர்த்தமும், துளசி, ப்ரசாதம் கொடுத்தான்.
இவள் வாங்கும் போது ,
"சாயங்காலம் எல்லாரும் மேலே ஹனுமாரை சேவிக்க வாங்கோ. விசேஷ திருமஞ்சனம் இருக்கு"
எல்லோருக்கும் சொல்வது போல் சொன்னாலும் அது அவளுக்காகவே சொன்னதாகப் பட்டது.
மாலை நிகழ்ச்சி முடிந்து நண்பர்களோடு போகலாம் என எண்ணிக் கொண்டாள்.
நண்பர்கள் வேறு வேலை இருப்பதாக சொல்ல தான் மட்டும் மணியக்கார மாமா பெண்ணுடன் மலை ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போனாள். ராம்குமார் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சார்த்திக் கொண்டிருந்தான்.
அர்ச்சனை, ஆரத்திக்குப் பிறகு, எல்லோரும் கிளம்பும் சமயம்,
ராம் , "மன்னி, இருங்கோ நடைய சாத்திட்டு நானும் வரேன்.." காத்திருந்தனர்.
கீழே இறங்கி நடக்க,
"மன்னி, அவா ஃப்ரெண்ட்ஸ் வரலயா ? "
அனு , அவன் தன்னிடம் கேட்காமல் அவளிடம் கேட்டதால், சும்மா இருந்தாள்.
மன்னி, "அனு, உன்னதான் கேக்கறான் ராமு,"
அனு ,"அவங்களுக்கு வேற வேலயாம், டவுனுக்கு போயிருக்காங்க".
ராமு, 'மன்னி, அனு நேத்து நன்னா பாடினாங்க"
"அதை நீயே அவகிட்ட சொல்ல வேண்டிது தானே..'
"ம் ம், மருகேலரா பாட்டுக்கும், கண்ணாமூச்சி ஏனடா பாட்டுக்கும், ஒரு
சம்பந்தம் உண்டு. தெரியுமா? உனக்கு திரை எதுக்கு ராகவா, நீ அசைய, அசையாத
எல்லாப் பொருளிலயும் இருக்கே.
இப்படி போறது. அர்த்தம் .
அதே தான்
'கண்ணா மூச்சி ஏனடா..பாட்டுலயும் வரும்.
இது அனுவுக்கே புதிய செய்தி.
மன்னி அசந்து போனாள்
'ராமு நீ இவ்ளோ,பேசுவியாடா..!! அனு, இவன் இப்பிடி பேசி நா கேட்டதே இல்ல'
அனுவுக்கும் வியப்பு. இவ்வளவு விவரம்
தெரிந்தவனாக தோற்றம் இல்லை.
"ஓ மை காட், எனக்கு இது புதுசு"
மன்னி வந்ததும் ராமுவோட அம்மாவிடம் நடந்ததைப் பற்ற வைத்தாள். அவளுக்கே ஆச்சரியம் .
' ராமுவுக்கு உள்மனதில் அனு மேல் அபிப்ராயம் இருக்கு . பகவானே
அனுக்ரகம் பண்ணுங்கோ..'
மணிகாரர் மூலம் அனு நண்பர்கள் கிட்டே யாரு,என்னன்னு விசாரித்தாள் .
"அவங்க பெரிய மத்திய அரசு அதிகாரி. பெரிய எடத்துல படிச்ச பதவில இருக்க பையனுக்கு தான் குடுப்பாங்க, "என்றார்.
இது மெதுவாக,ராம்குமாருக்கும் எட்ட , அவன் மறுபடிஅஞ்ஞாத வாசம். இது எதுவும் அறியாத அனு, அவனைக் காணாமல் தவித்தாள்.
இது சரி வருமா?
தப்பில்லையா? அப்பா ஒத்துப்பாரா?
' நான் ஏன் இப்படி ஆனேன்! இது தான் காதல் என்பதா? அவனைப் எப்போதும் பார்க்க வேண்டும் போல் இருப்பது ஏன்?"
காலையில்,கோவிலுக்கு சீக்கிரமே போய்விடுகிறான். அன்று மாலை , அவனைப் பார்த்த போது,
'ஏங்க, இன்னிக்கி எங்க ப்ரொக்ராம் இருக்கு. வாங்க ". கூப்பிட்டாள்.
அவன் எங்கோ பார்த்தபடியே,
" இதோ பாருங்கோ அனு, வானவில்லின் வர்ணஜாலம் பாக்க அழகாயிருக்கும். ஆனா அது நிரந்தரம் இல்லை. அப்படி சில ஆசைகள் இந்த வயசில வரும் .மனசுக்குப் புரியாது. ஆனா,புத்தி யதார்த்தத்தைப் புரிஞ்சிக்கணும் . வீணா ஆசைய வளத்துக்கப் படாது"
அவன் உள்ளே போய் கதவை சாத்திக் கொண்டான்.
மாலை கச்சேரியில் அனு, மூன்றாவதாக, "ராமா நீயெட.." கரஹரப்ரியாவில் பாட..அதில் அவள் குரலில் சிறு சோகமும் இழையோடி வந்தது.
"ராமா உன் மேல் ஆசை இல்லாதவர்களுக்கு ,உன் பெருமை தெரியுமா? உன் நெனப்பு தான் பெரிசா நெனக்கிறவாளுக்கு வேற எது பெருசு?'
விஸ்தாரமாகப் பாடி, கைதட்டல் பெற்றாலும் கண்கள் அவனைத் தேடியது.
அங்கே, அவன் வீட்டு வாசலில் , நின்று பாடியதை கேட்பதைக் கண்டவள் கண்களில் கண்ணீர் பெருகி ஓடியது. துடைத்துக் கொண்டு பார்த்தால், அவன் போய் விட்டிருந்தான்.
நிகழ்ச்சி முடிந்தது. மாலை பஜனை ஆரம்பிக்கும். இடையில், எல்லாருக்கும் டிபன்.
பாகவதாள் சிரமப் பரிகாரம் முடிந்து, டிபன், சந்தி முடித்து, வீபூதி, சந்தனம் இத்யாதி தரித்து தயார் ஆனார்கள். திடீரென்று ஒரு பெரிய கார்
அக்ரஹாரத்தை அடைத்துக் கொண்டு
வந்து நின்றது.
காரில் இருந்து அனுவின் அப்பா, அம்மா, மற்றும் நண்பர்கள் வந்து இறங்கினர்.
அனு , பட்டுப் பாவாடை தாவணியில் அளவான நகைகளோடு ஜொலித்தாள். காரில் இருந்து ஆட்கள், அரிசி, பருப்பு,பழங்கள், காய்கறிகள் இறக்கி வைத்தனர். அனுவின் பெற்றோரை ஏகாம்பர ஐயர் சந்தனம் குங்குமம் கொடுத்து வரவேற்றனர்.
"வாங்கோ,வாங்கோ, வரணும். அனுவோட அப்பா,அம்மாவா.."
"எப்படி தெரிஞ்சிது?"
"இதோ உங்க கூட ஷரத், ராகவன்,கோகுல்..உடனே புரிஞ்சுடுத்து..வாங்கோ, லைட்டா டிபன் சாப்ட்டுட்டு பஜனைல கலந்துக்கலாம்.
தோடயமங்களம் ஆரம்பிக்கப் போறா."
"சாரி, செத்த நாழில நாங்க கெளம்பணும்.
அனுவையும் கூட்டிண்டு போறோம்."
"கொழந்தய அழச்சிண்டு போறேளா!!
இன்னும் ரெண்டு..நா..பட்டாபிஷேகம்,
ஆனதும் அனுப்பி வைக்கிறேனே.."
"இல்ல. ஷமிக்கணும். என் பால்ய ஸ்னேகிதன் லண்டன்லேந்து வந்துருக்கான்.
அவன் பெரிய பிஸினஸ்மேன்.அவன் பையனும் இப்பவே துறு துறுன்னு சுட்டியா பிஸினஸ்ல கெட்டிக்காரன். அவனுக்கு,
அனுவ கேட்டு வந்திருக்கான்.
அதான்,அனுவை அழைச்சிண்டு போகணும்"
ஐயருக்கு எதுவும் பேச முடியாத நிலை.
அதற்குள், அனு அப்பா,அம்மாவைப் பார்த்து அசந்து ஓடி வந்து.
" ம்மா, ப்பா what a surprise"
ன்னு கொஞ்ச ...
அம்மா "வாடி, நன்னாருக்கியா, நீ இல்லாத அங்க வீடே வெறிச்சினு இருக்குடி"
அதற்குள் விஷயம் காற்றாகப் பரவியது.
"நீ உடனே கெளம்பு. நாம போகணும்" அப்பா.
"ப்பா, ரெண்டு நா தானே..இருந்துட்டு வரனே?"
"இல்ல கண்ணு, உன்ன நாளக்கி பொண் பார்க்க வர்றா"
"ப்பா, இன்னப்பா இது திடீர்னு...ஏம்ப்பா..?
அப்பா பிடிவாதத்திற்கு முன் ஒன்றும் மசியவில்லை அவள் கண்கள் கலங்க,
எல்லோரிடமும் பிரியா விடை பெற, அவள் கண்கள் ராம்குமாரைத் தேட, அவன் மலைக் கோயிலுக்குப் போய் விட்டது தெரிந்தது.
அனு வேண்டுமென்றே கால தாமதம் செய்ய, பஜனை தன்பாட்டிற்கு ஆரம்பிக்க, ஹார்மோனியம் நரசிம்ம மாமா ஸ்ருதி போட, மிருதங்கம் பாலு தொப்பிக்கு ரவை வச்சி , சின்ன கூழாங்கல்லால் கரணையைத் தட்டி சுருதி சேர்க்க..டோல்கீ ஸ்க்ரூ டைட் பண்ணி கும்காரம் ,டேக்கா சுந்து..சரி பார்க்க..
.
அனுவுக்கு போக மனமில்லாமல் தவிக்க, அம்மா, ஊகித்து விட்டாள்.
."என்னடி, மசமசன்னு..?"
"இன்னும் அஞ்சி நிமிஷம்..தான்.பொறப்டுடலாம்"
அவன் பத்து நிமிடம் ஆகியும் வரவில்லை.
தாம்பூலம்,புடவை,ரவிக்கை சகிதம் அனுவுக்கும்,அம்மாவுக்கும்..ஐயரின் மனைவி வைத்துக் கொடுத்தாள்.
"ஓம்..சுக்லாம் பரதரம்" உள்ளே பஜனைக்கு ஆரம்பிக்க, கார் கிளம்பியது. நண்பர்களிடம்
சொல்லி விட்டு கடைசியாகக் காரில் ஏறினாள் அனு. பார்வை மட்டும் ராம்குமார் வீட்டில், கார் ,கோவிலை பிரதட்சணமாக வலம் வந்து வேகமெடுக்கும் சமயம்,
ராம்குமார்.சைக்கிளை அவசரமாக நிறுத்தி
விட்டு திரும்ப, கார் வேகம் எடுக்க,
அனு "ட்ரைவர் அங்கிள் ஒன் மினிட்..ப்ளீஸ் நிறுத்துங்க"
"கார் நிற்கவும், ராம்குமார், அவளைப் பார்த்த பார்வையில்,
" நான் அப்பவே சொல்லல. இது சரிப்டாது" ன்னு.." என்பது போல் தோன்றியது.
"நான் பேய்ட்டு வரேன்..இது அப்பா,அம்மா.."
சொல்லி முடிப்பதற்குள் அழுகை வெடித்துக் கிளம்பியது.
அப்பா கோபமாக,
"அனு ,what s this..control yourself"
"நாங்க போய்ட்டு வரோம்" கார் கிளம்பி விட்டது. விஷயம் நண்பர்கள் மூலம் , புரொபஸருக்கு எட்ட., மறுநாள் அனுஅப்பாவிடம் தனக்கு டோஸ் விழப் போகிறது என்று நொந்து கொண்டார்.
ராம்குமார் உள்ளே போனவன், தன்னை யாரும் கூப்பிடவேண்டாம். என்று தன் அறையில் அடைந்து போனான்.
அனுவின் அம்மா, போகும் வழியில் ஒருவழியாக வாயைப் பிடுங்கி உண்மையை வரவழைத்தாள்.
இது அப்பா காதுக்கு எட்ட, ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதித்தார்.
"அனு, நீ ஆசைப்படறேன்னு, உனக்கு சுதந்திரம் குடுத்தா..இப்பிடித் தான்
நடந்துப்பியா..உன் வாழ்க்கை எப்படி அமைச்சிக் குடுக்கணும்..ன்னு எங்களுக்கு அக்கறை இருக்கு. வேற நெனப்பு வேண்டாம்"
அனு அப்பாவை எதிர்த்துப் பேசவில்லை.
ப்ரொஃபஸர், மறுநாள் காலை அவசர அவசரமாக, வந்து அனு அப்பாவை சமாதானப் படுத்த முயல..அவருக்கும் பாட்டு விழுந்தது.
"உங்கள நம்பி அனுப்பினதுக்கு நல்ல
பிரதியுபகாரம் பண்ணிட்டீர் ஓய்.."
ப்ரொஃபஸர், சமாதானம் வீண் ஆனது .அவர் சோகமாக அம்மவரம் திரும்பினார்.
ராமர் பட்டாபிஷேகம் வரை இருக்க மனமில்லாமல் பசங்களோடு, கிளம்ப
கோவிலுக்குப் போய் , ஸ்ரீகோதண்டராமரிடம்
"ஸ்ரீராமா , இப்பிடி ஆய்டுத்தே.ஒன்னோட
விசேஷத்துக்கு வந்தவாளுக்கு நல்லது தான் நடக்கும். இந்தக் கொழந்த அனுவை ஏம்பா
இப்பிடி கஷ்டப்படுத்தினே..
சந்தோஷமா வளைய வந்துண்டு இருந்தா..அவாப்பாக்கு
பணம் தான் பெரிசுன்னு.அழைச்சிண்டு போய்ட்டார்., அந்த கொழந்த அந்தப் பையன் மேலஆசைப்பட்டது தப்பா?
நாங்க பொறப்படறோம்.
நாளைக்கி உனக்கு பட்டாபிஷேகம்;
நீ நன்னா பண்ணிக்கோ..
நாங்க போய்டு வரோம்.."
ஹாரத்தி பார்த்து கிளம்ப..
ராகவன்,ரகு,கோகுல்,ஷரத் தங்கள் லக்கேஜ்களை வாடகை வண்டியில் ஏற்றி புறப்பட்டது.
ஏகாம்பர ஐயர், "ஏன் லஷ்மணன், நாளைக்கி பட்டாபிஷேகம் பாத்துட்டு போகலாமே. "
"இல்ல ஸ்வாமி, மனசு சரியில்ல.பொறப்படறோம்."
கார் கிளம்பி தெரு முனையைக் கடந்தது.
ராம்குமார் அவர்கள் போவதையும் சலனமற்று பார்த்துக் கொண்டிருந்தான்.
சற்று நேரத்தில், ப்ரொஃபஸர் சென்ற வாடகை வண்டி அச்சு உடைந்து, நின்று போனது. வேறு வழியின்றி அவர்கள் ஐயர் வீட்டிற்கே திரும்பி வந்தனர்.
மறுநாள் காலை, பட்டாபிஷேகம், ஊரே விழாக் கோலம். மாக்கோலம், செம்மண்,தோரணம் ,
வாழை, கமுகு, பாக்கு
மரங்கள் கட்டி கோவில் வாசலில் மேடை.
சமையல் ஆயிரம் பேர் வந்தாலும் சாப்பிடத் தயாராகிக் கொண்டிருந்தது.
ராம்குமார் , மலை ஆஞ்சநேயர் கோவிலில் போய் உட்காரந்து விட்டான். அவன் மனது சரியில்லை , இந்த விழாவில் அவன் கலந்து கொள்ள மனம் ஒப்பவில்லை.
பூஜைகள் முடிந்த பிறகும் அவன் கீழே இறங்கவில்லை. துளசி தீர்த்தம் சற்று
அருந்தி, தியானத்தில் இருந்தான்.
கண் மூடினால், அனுவே நிறைந்தாள்.
அவன் அனுமார் முன் இருந்த,
ஸ்ரீராமச் சந்திர மூர்த்தியைப் பார்த்து பேசலானான்.
"லோகத்துல, பணம்,பதவி, அந்தஸ்து தான்
பெரிசா ராமா.."தியாகைய்யா , பணமா பெருசுன்னு பாடி..னார்.."இப்போ லோகத்துல பணம்,பதவி தானேப்பா பெரிசா போய்டுத்து. மனச யார் பாக்கறா " வாய்விட்டு பாட ஆரம்பித்தான்.,
"நிதி சால சுகமா, ராமா நூ சந்நிதி சேவ சுகமா..நிஜமுல...ஆரம்பித்து
சவுக்கத்தில் உருகிப் பாட கல்யாணியே இறங்கி வந்து விட்டாள்.
பாடி முடித்து கண் திறந்து ,பகவானைக் கை கூப்பி வணங்கித் திரும்பினால், அனு அப்பா, அம்மா..பின்னால் அனு, ராம்குமாரால் நம்ப முடியவில்லை.
ஒரு நிமிடத்தில் சுதாரித்து..
"கீழே ஊர்ல தான் பட்டாபிஷேகம் நடக்கறது.
இங்க நாளைக்கி தான் விசேஷம்.. வாங்கோ ஹாரத்தி காட்றேன்."
அவர்கள் பேசவில்லை .
அனு குனிந்த தலை நிமிராமல் இருந்ததால் ,
எதுவும் ஊகிக்க முடியவில்லை.
"சர்வாபீஷ்ட ப்பலசித்தி ரஸ்து", ப்ரசாதம் துளசி தீர்த்தம் ,செந்தூரம் தந்தான்.
இவனுக்கே இப்படி ஒரு ஆசீர்வாதம் தேவை.
இவன் அவாளுக்கு சொல்றான்.
வேடிக்கை தான்..
ஹனுமான் தனக்குள் நினைத்துக் கொண்டார் போல மந்தஹாசம்.
அவர்கள், ஒன்றும் பேசாமல்
மலையிறங்கிச் சென்றனர்.
ராம்குமார் சைக்கிளில் சற்று நேரம் கழித்து வந்தான்.
பட்டாபிஷேகம், மந்த்ர கோஷங்களோடு
நடந்தேறியது.
."ராஜாதி ராஜாயப் ப்ரஸய்ய சாஹினே.......குபேராய வைச்ரவணாய மஹாராஜாயன மஹா..".வாத்தியங்கள் முழங்க ,வெடிகள் வெடிக்க ,ஹாரத்தியும் காட்டப்பட..க்ரீடம் சார்த்தி பட்டாபிஷேகம் ஆச்சு.
நீர்மோர் ,பானகம்,பாசிப்பருப்பு கோஸ்மல்லி..எல்லோருக்கும் கொடுத்தனர்.
ஆகாரம் ,பந்தி, பந்தியாய் நடந்தது. பஜனையும் தொடர்ந்து, நடந்தது.
மாலையில், ஏகாம்பர ஐயர், ராம் குமார் குடும்பத்தாரை தன் அகத்துக்கு வரச் சொன்னார். எதுவும் புரியாமல் அவர்கள் மட்டும் போக ராம் குமாரையும் வரச் சொல்ல ,குழப்பம் இன்னும் அதிகமானது. எல்லோரும் வந்து அமர்ந்த பின் ,ஏகாம்பர ஐயர், தொண்டையைச் செருமினபடி,
"அனுவோட அப்பா,அம்மா..அனுவை ராம்குமாருக்கு கல்யாணம் பண்ணித்தர சம்மதிச்சிருக்கா. மொறப்படி, பொண்ணு கேளுங்கோ..."
ஓ..ஹோ அங்கிருந்த நண்பர்கள் குழாம் உட்பட கத்த, ராம்குமாரும் நம்பவில்லை
.ஏன்,அனுவுக்கே ஆச்சரியம்.
"அப்பா, " என்று கூவியபடி அவர் மடியில் விழுந்து விம்மினாள்.
அம்மா அவளைத் தூக்கி சமாதானம் செய்தாள்.
"அசடு,சந்தோஷமா இருக்க நேரத்துல அழுவாளோ?"
இடையில் என்ன நடந்திருக்கும்?
லண்டனிலிருந்து வருவதாகச் சொன்னவர்கள், கடைசி நிமிடத்தில் வர இயலாத நிலை. அவர்களின் வியாபார
நிறுவனங்களில் ரெய்டு.
எதுவும் தவறு இல்லை என்றாலும், பங்குகள் விழுந்து சரிந்தன.
அதே சமயம், அனுவின் அப்பாவையும்
கனவில், அனுமன் கையில் கதாயுதத்துடன் ,
"என் ஸ்வாமி விசேஷத்திலிருந்து கொழந்தைய ஏண்டா..பாதில அழைச்சிண்டு வந்தே?"ன்னு மிரட்டினாராம்.
மறுநாள் அம்மவரம் கெளம்பியாச்சு. வர்ற வழியில மலைக் கோயில்ல மெரட்டினவர பாக்கப் போன போது, பாடின பாட்டு உருக்க, இவன விட வேற யாரு ஒசத்தியா கெடைக்கப் போறான்னு.
.சந்நிதில தீர்மானம் ஆச்சு.
கல்லுக்குள்ள ஈரம் இருக்குன்னு காட்ட வச்சாரு..
"பொண்ணுக்குப் பாடத் தெரியுமா..ஒரு பாட்டு பாடச் சொல்றது.." கிண்டலடித்தார் ஐயர்மாமா.
அனு வெட்கப்பட ..
"ம்..பாடும்மா" அம்மா..
"ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே..நன்மையுண்டொரு காலே..ஏ.ஏ.ஏ." ஹிந்தோளம் தேன்பாகாய்
வழிந்து ஓடியது.
ராம்குமார்-அனு ,கல்யாணம் வர்ற வைகாசியில நடக்கப் போறது . எல்லாம் வந்து வாழ்த்தணும்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்