logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

அ.பெர்த்தி வினித்

சிறுகதை வரிசை எண் # 249


*தலைப்பு: கைதட்டும் ஓசை* (மூன்றாம் பாலினத்தார்) *கதாபாத்திரங்கள் :* ✨சேகர் (அப்பா) ✨ராணி (அம்மா) ✨பொன்னி ( அக்கா) ✨கயல் ( தங்கை) ✨வேந்தன் என்கிற வேலம்மாள் ( மகன் ) மற்றும் சில சிறு கதாபாத்திரங்கள். *கைதட்டும் ஓசை* மங்களபுரம் ஊரிலே வசிக்கும் வசதியான குடும்பம் இது. சேகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறார். இவருடைய மனைவி ராணியோ அரசு மருத்துவமனை உணவகத்தில் வேலை செய்பவர். இவர்கள் இருவருக்கும் சிறு வயதிலேயே பெற்றோரின் கண்டிப்பின் பேரில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. மனைவிக்கோ கல்வி அறிவு இல்லை. ஆனால், கணவனோ அரசு ஊதியம் பெறும் பட்டதாரி ஆசிரியர். அடிக்கடி சண்டையும் சச்சரவுமாக இருக்கும் இந்த குடும்பத்தில் விடியலாய் பிறந்தவள் தான் பொன்னி. பொன்னி பிறந்த ஓராண்டிலேயே மகன் வேந்தனும் பிறந்தான். மகன் என்றாலே கொண்டாட்டம் தானே பிறகு என்ன தந்தைக்கு அவ்வளவு மகிழ்ச்சி. வேந்தன் பிறந்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது அதற்கு கயல் என பெயரிட்டனர். இவ்வாறு மூன்று பிள்ளைகளோடு இந்த குடும்பம் சண்டைகளையும் கடந்து கொஞ்சம் மகிழ்ச்சியோடு தான் வாழ்ந்து வந்தது. சேகருக்கு சிறு வயது முதலே போதை பழக்கம் இருந்து வந்துள்ளது. சம்பாதிக்கும் ஊதியத்தில் பாதியை தன் உடலுக்கு குளிர்ச்சையூட்டும் மதுபானங்களை குடித்துக் குடித்து குடியை கெடுப்பார். எனவே வேறு வழி இல்லாமல் பொன்னியின் படிப்பை நிறுத்தி பொன்னியை நூறு நாள் வேலை திட்டத்திற்கு அனுப்பினார்கள். கல்வியை நிறுத்திவிட்டு கல்லை தலையில் தூக்க வைத்த அந்த குடிகார தந்தைக்கு புரியவில்லை கல்வியின் மகத்துவம். இப்போது வேந்தன் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். கயலோ ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்றாள். வேந்தனை மட்டும் தனியார் பள்ளிக்கூடத்தில் அதிக கட்டணத்திற்கு படிக்க வைக்கின்றனர். கயலை கட்டிடங்கள் கூட சரியில்லாத அரசு பள்ளியில் படிக்க வைக்கின்றனர். பரவாயில்லை கயலாவது படிக்கின்றாள் பொண்ணியைப் போல் அல்லாமல். இப்போதுதான் முக்கிய திருப்பம் வர தொடங்குகிறது, பொதுவாகவே ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு ஆடைகள் தொடங்கி அணிகலன்கள் வரை ஆபரணங்கள் ஏராளம். கண்ணுக்கு மை, நெற்றிக்கு பொட்டு, செவிகளுக்கு கம்மல், உதட்டுக்கு வண்ணப்பூச்சு, வளையல்,கொலுசு என எத்தனை எத்தனை.... இந்த குடும்பத்தில் சேகரையும் வேந்தனையும் தவிர மற்ற மூவருமே பெண்கள். சேகர் காலையில் பள்ளிக்கூடம் சென்றால் வீடு வருவதற்கு இரவு ஆகிவிடும். வேந்தனும் எந்த நண்பர்களுடனும் சேராமல் வீட்டிலேயே இருப்பான். சிறுவயதிலிருந்தே வீட்டுக்குள் இருந்த வேந்தனுக்கு பல்லாங்குழி விளையாடுவதும், பரமபதம் விளையாடுவதும் தான் பிடிக்கும். தன் சகோதரிகளோடு சேர்ந்து வீட்டு வாசலில் கோலம் போடுவது ,சமைப்பது என அனைத்தையும் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டினான். ஆரம்பத்தில் இரு சிறுவனுடைய ஆசையாக தெரிந்த ராணியின் கண்களுக்கு போகப் போக பிடிக்கவில்லை. காரணம், ஒரு நாள் ராணி மளிகை கடைக்கு சென்று விட்டு வீட்டுக்குள் வரும் பொழுது வீட்டின் ஓரத்தில் கண்ணாடி முன் நின்று கொண்டு வேந்தன் தனக்குத்தானே நெற்றியில் பொட்டு வைத்து ரசிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாள். ஆனால் இதை வேந்தனிடம் காட்டிக் கொள்ளாமல் வீட்டிற்குள் நுழைந்து சமையலறைக்குள் சென்று விட்டாள். அம்மாவின் சத்தத்தை கேட்டவுடன் வேந்தனும் பொட்டினை கண்ணாடியில் ஒட்டி விட்டு சகஜமாக வருவது போல் தன் தாயை வந்து கொஞ்சிக் கொண்டிருந்தான். சிறுவன்தானே பிறகு பார்த்துக் கொள்ளலாம் என ராணியும் தன் மனதை தேற்றிக் கொண்டாள். அந்த ஊரில் மாரியம்மன் திருவிழா வந்தது. திருவிழாவில் நடனங்கள் விளையாட்டுகள் ஆயிரம் இருந்தாலும் வேந்தனும் அம்மனுக்கு அலங்காரம் செய்யும் அழகை கண்டு ரசித்து கொண்டு இருந்தான். பெண்கள் மஞ்சள் நிற புடவை அணிந்திருப்பதை கண்டு ஆசை கொண்டான். அன்று வீட்டிற்கு வந்த வேந்தன் தன் வீட்டின் கொள்ளை புறத்திற்கு சென்று ஒரு சிறிய கல்லை நன்கு தண்ணீரில் கழுவி எடுத்து வந்தான். பிறகு அக்கல்லுக்கு மஞ்சள் பூசி, காகிதத்தால் புடவை செய்து அதற்கு வர்ணம் திட்டினான். பெண் சாமி வந்த பெண்களைப் போல் ஆடிக்கொண்டிருந்தான். இதை பார்த்த கயல் வேந்தனோடு சேர்ந்து ஆடினாள். இருவரையும் கண்ட பொன்னி ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டாள். மனதினுள் நினைத்துக் கொண்டாள். நமக்கு தான் சிறுவயதை அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை தன் உடன்பிறப்புகளாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும் என எண்ணினாள். இப்படியே நாட்கள் கழிந்தன, இப்போது வேந்தன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். அன்று வீட்டில் உள்ள அனைவரும் சந்தைக்கு சென்று விட்ட நிலையில் இவன் மட்டும் தனியாக இருந்தான். யாரும் இல்லாத நேரத்தில் பொன்னியுடைய பாவாடை சட்டையை எடுத்து அணிந்துக் கொண்டான். தலை துவட்டும் துண்டை தனக்கு தலைமுடியாக வைத்துக் கொண்டான். கயலுடைய நகைகளை எல்லாம் போட்டுக் கொண்டான். அனைத்தையும் அணிந்து தன்னை ஒரு பெண்ணாக நினைத்து பாவனைகள் செய்து கண்ணாடியின் முன் நின்று ரசித்து கொண்டு இருந்தான். வேகமாக அனைத்தையும் கழற்றினான். பள்ளியில் இவனுடைய நடவடிக்கைகளை கண்டு சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்து வந்தனர். அவற்றை எல்லாம் இவன் பொருட்படுத்தவில்லை. ஒரு நாள் இவன் வகுப்பில் பெண்ணை போல் நடந்து கொள்வதாக இவனுடைய நண்பர்கள் இவனுடைய தங்கையான கயலை அழைத்து சிரித்துக் கொண்டே கூறினார்கள். கயலோ தன் தாயான ராணியிடம் வந்து நடந்தவற்றை கூறினாள். இதைக் கேட்ட ராணிக்கு அளவு கடந்த கோபமும், அதிர்ச்சியான பயமும் இருந்தது. சேகரிடம் கூறலாமா என ஏக்கமும் இருந்தது. ஆனால் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. அன்று புடவை கட்டியும் நகைகளை அணிந்தும் ரசித்துக் கொண்டிருந்த வேந்தனை எதிர்பாராத விதமாக அரை நாள் பள்ளிக்கூடத்தை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த சேகர் பார்த்துவிட்டார்.தலையிலிருந்து உள்ளங்கால் வரை கடும் கோபத்தோடு இருந்த தந்தை மாலை நேரம் வரை எதையும் வெளிக்காட்டாமல் காத்திருந்தார். மாலை நேரம் ராணியும் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாள். பொன்னியும் வந்து அமர தொடங்கிய போது திடீரென எழுந்த சேகர் வெந்தனுடைய கன்னத்தில் பலார்ர்ர் என அறைந்தார். அறைந்து விட்டு பின் நடந்தவற்றையெல்லாம் அனைவருடைய முன்னிலும் கேட்டார். சேகர் கூறியவுடன் ராணியும் தான் கண்டவற்றை கூற, கயலும் தான் கேட்டவற்றைக் கூற, பொன்னியும் அம்மனுக்கு அலங்காரம் பண்ணி ஆடியது கண்டதைக் கூற ஒன்றும் அறியாத சிசுவைப் போல வேந்தன் அடக்கமாக நின்று கொண்டிருந்தான். தந்தை அவனுடைய புத்தகப் பையில் உள்ள பொருட்களை எல்லாம் கீழே கொட்டினார். அதிலிருந்து பேனா பென்சில்களை தவிர மற்ற பொருள்கள் ஆகிய முகம் பார்க்கும் கண்ணாடி, கண்ணுக்கு பூசும் மை, பொன்னியின் கண்ணாடி வளையல் போன்றவை எல்லாம் விழுந்தது. அப்போதுதான் வேந்தன் நடந்தவற்றையெல்லாம் கூறத் தொடங்கினான், “அப்பா! என்ன மன்னிச்சிருங்க பா... நான் வேணும்னே இதெல்லாம் பண்ணல. சின்ன வயசுல இருந்து அம்மாவையும் அக்காவையும் தங்கச்சியும் பார்த்து எனக்குள்ள நானே ஆசையை வளர்த்துக்கிட்டேன். பள்ளிக்கூடம் போகும்போது பசங்களா என்னை பார்த்து சிரிப்பாங்க. என்ன வந்து கட்டி பிடிப்பாங்க, என் இடுப்பை கிள்ளு வாங்க ஏன்னா... நான் பொம்பள மாதிரி பண்றேன் நடக்கிறேன்னு சொல்லுவாங்க... ஆனால் நான் ஒரு நாளும் அதலாம் தெரிஞ்சு பண்ணது கிடையாது. என்னய அறியாமயே நான் அப்படி பண்றேன்னு தோணுது.... அன்றைக்கு மாரியம்மன் கோவில் திருவிழா போனோம்ல அப்பதான் நான் ஒருத்தவங்கள பார்த்தேன்... அவங்க பேரு கண்ணம்மா இவங்க ஒரு திருநங்கை. அதாவது இவங்க அப்பா அம்மா இவங்களுக்கு வச்ச பேரு கண்ணன், ஆனா இவங்க இவங்களுக்குள்ள இருக்க பெண்மையை உணர்ந்துகிட்டு கண்ணம்மானு பேரு வச்சுக்கிட்டாங்க. இவங்கதான் அம்மனுக்கு அலங்காரம் பண்ணாங்க, தீ மிதிச்சாங்க அவங்கள பார்க்கும்போதே ரொம்ப தெய்வீகமா இருந்துச்சு... அதனால திருவிழாக்கு அடுத்த நாள் நான் பள்ளிக்கூடத்தை விட்டுட்டு அவங்கள பார்க்குறதுக்காக அவுங்க வீட்டுக்கு போனேன்... அங்க அவங்களை மாதிரியே நிறைய பேர் இருந்தாங்க..... என்ன நல்லா கவனிச்சாங்க.... எனக்கும் அது ரொம்ப புடிச்சி இருந்துச்சு அதனால நான் அவுங்க கிட்ட கேட்டேன் நானும் உங்கள மாதிரி ஆகணும்னா என்ன பண்ணனும்னு..... அவங்க சொன்னாங்க நீ முதல்ல நல்லா படி அப்படின்னு..... அப்புறம் நானும் வீட்டுக்கு வந்துட்டேன் அதுக்கப்புறம் தான் கண்ணாடி முன்னாடி இது மாதிரி எல்லாம் பண்ணேன். இதுல என்னோட தப்பு எதுவுமே இல்லையே, சின்ன வயசுல இருந்து நீங்க என்ன வெளிய விட்டது கிடையாது பல்லாங்குழி பரமபதம் தாயம்னு அக்கா கூட தான் விளையாண்டேன். அப்படியே எனக்குள்ள ஆசையை வளர்த்துக்கிட்டேன். நான் ஒன்னே ஒன்னு கேட்கட்டா? உங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க இல்ல மூணு பொண்ணுங்கன்னு நினைச்சு இருக்கீங்களா? ” என்று கூறினான். இதை கேட்ட சேகர் ஒன்றும் சொல்லாமல் வேந்தனின் உடைகளை மற்றும் புத்தகங்களை எல்லாம் எடுத்து வீட்டிற்கு வெளியில் வீசினார். எனக்கு பிறந்த ஆண் பிள்ளை செத்துப் போச்சு என நினைத்துக் கொள்கிறேன். நீ வீட்டை விட்டு வெளியே போ! என விரட்டி அடித்தார். பொன்னியும் கயலும் அழுது கொண்டே இருக்கிறார்கள். பத்து மாதம் பக்குவமாய் பெற்றெடுத்த தாயும் கதறி கதறி அழுது சேகரிடம் வேண்டாம் வேண்டாம் என்று கெஞ்சுகிறாள். சேகர் ராணியை பார்த்து, படிக்காத நாயே உன்ன கல்யாணம் பண்ணதாலதான் என் வாழ்க்கையே நாசமா போச்சு... என்றார். ஆனால் வேந்தனோ தன் தந்தையிடம் மீண்டும் வீட்டுக்குள் வர அனுமதிக்க கெஞ்சவில்லை. தன் உடைமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு பக்கத்து ஊரில் வசிக்கும் கண்ணம்மாவின் வீட்டிற்கு சென்றான். நடந்தவற்றையெல்லாம் கூறினான் கண்ணம்மாவும் வேந்தனை ஏற்றுக் கொண்டாள். கண்ணம்மா வேந்தனின் படிப்பை நிறுத்தவில்லை. அதே தனியார் பள்ளிக்கூடத்தில் கட்டணம் கட்டி படிக்க வைத்தாள். வேந்தனின் பெயரை வேலம்மாள் என மாற்றினாள். சிறிது காலம் வேந்தனாகிய வேலம்மாளும் கண்ணம்மாவும் மகிழ்ச்சியாக இருந்தனர். இதற்கிடையேதான் கண்ணம்மாவுக்கு புற்றுநோய் வந்தது. சிறிது காலங்களிலேயே உடலில் வலுவின்றி இறந்து விட்டாள். ஐயோ என்ன செய்வது என்று அறியாமல் நிலை தடுமாறி நடுத்தெருவில் நின்றான் வேலம்மாவாகிய வேந்தன். கண்ணம்மா தனக்கு கொடுத்த பணத்தை எல்லாம் சேர்த்து வைத்து மும்பைக்கு சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு முழு பெண்ணாக மாறினான். ( இனி வேலம்மாள் என்றே சொல்லலாம் ) அறுவை சிகிச்சை எல்லாம் செய்து கொண்டு மேற்படிப்புக்கு செல்லலாம் என நினைக்கும் பொழுது எந்த கல்லூரியும் வேலம்மாவுக்கு இடம் கொடுக்கவில்லை. வேறு வழியில்லை பணம் வேண்டும் பணம் இல்லை என்றால் வாழ்க்கை நடத்த முடியாது என திட்டமிட்ட வேலம்மாள் சென்னைக்கு சென்றாள். சென்னை புறநகர் ரயில் வண்டிகளில் பயணிகளிடமிருந்து பணம் பறிக்க (பிச்சை) தொடங்கினாள். இதுதான் விதி என்று ஆகிவிட்டது வேலம்மாவுக்கு... நிறைய பாலியல் சீண்டல்களுக்கு உள்ளானால் வேலம்மாள். அன்று காலையில் செய்தித்தாளை பார்க்கும் பொழுது ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் தன் தந்தையான சேகருடைய புகைப்படத்திற்கு மேல் கண்ணீர் அஞ்சலி என எழுதி இருந்தது. தந்தையினுடைய இறப்பிற்கு போகலாமா வேண்டாமா என மனதில் ஒரு ஏக்கம். மனதை தேற்றிக்கொண்டு மங்களபுரம் செல்ல தயாரானால் வேலம்மாள். மங்களபுரம் சென்று வீட்டிற்குள் நுழைந்தாள். அங்கு பார்த்தாள் தந்தையின் சடலத்திற்கு மேலே தன் அக்காவான பொன்னியின் புகைப்படம் மாலைகளோடு தொங்கவிட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள். பிறகுதான் தெரிந்தது நூறு நாள் வேலை திட்டத்திற்கு சென்ற பொன்னியிடம் சில அறியாத நபர்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கி பொன்னியை கொலை செய்து விட்டனர் என்று.... ஒருவருக்கு எத்தனை கஷ்டம், வேலம்மாவை கண்டவுடன் ராணி ஓடி வந்து கட்டி அணைத்து அழ தொடங்கினாள். ஆனால் உறவினர்களோ வேலம்மாளை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார்கள். யாரும் இல்லாமல் இருந்த தன் தாயையும் தங்கையையும் கண்ட வேலம்மாள் தன்னோடு வருமாறு கூறினாள். திடீரென இறந்ததாக சொன்ன தந்தையின் சடலம் எழுந்து நின்றது. வேலம்மாளை நோக்கி சேகர் பின்வருமாறு சொன்னார். “ எதற்கு நீ பெண்ணாக மாறினாய்? ஒரு வாத்தியாருடைய மகன் பெண்ணாக மாறி என்னுடைய தொழிலுக்கும் என் பெயருக்கும் அசிங்கத்தை உண்டாக்குகிறாயா? உன்னை கொல்லத்தான் நான் இந்த திட்டத்தை தீட்டினேன். இறந்ததாக நாடகம் ஆடினேன். நீ இப்படி இருப்பதற்கு இல்லாமல் இருப்பதே மேல் என கத்தியை கொண்டு குத்த முயற்சித்தார் சேகர். என்ன செய்வது என்று அறியாமல் வேலம்மாள் அழுது கொண்டே புடவைகள் எல்லாம் கிளிய தன் மானத்தை மறைத்துக் கொண்டு வேகமாக ஓடினாள். தப்பித்தால் போதும் என்ற நிலையில் தண்டவாளத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த ரயிலில் தன்னையே அறியாமல் ஏறி விட்டாள். நல்ல வேளை சேகர் உடைய திட்டம் பயனில்லாமல் போனது. தனக்கு நம்பிக்கை துரோகம் செய்த குடும்பத்தை எண்ணி இனி மங்களபுரத்தின் சாயல் கூட வேண்டாம் என நினைத்து சென்னைக்கு சென்று தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள். இரண்டு ஆண்டுகள் ஓடின, தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி பட்டறைக்காக சேகர் சென்னைக்கு வரும் சூழல் ஏற்பட்டது. சென்னை சென்ட்ரலில் இருந்து தாம்பரத்திற்கு செல்ல புறநகர் ரயில் வண்டியில் ஏறினார். ரயிலில் வரிசையாக வெள்ளரிக்காய் மாங்காய் சுண்டல் என விற்றுக் கொண்டிருப்போரின் மத்தியில் ஒரு “ கைதட்டும் ஓசை ” கேட்டது. வருவது ஒரு திருநங்கை என அறிந்த சேகர் தன் சட்டை பையிலிருந்து இரண்டு ரூபாய் எடுத்து கையில் தயாராக வைத்திருந்தார். அருகில் வந்தவுடன் தான் தெரிந்தது கைதட்டி வருவது தான் பெற்ற மகன் வேந்தன் என்று. என்னதான் கோபம் இருந்தாலும் தான் பெற்ற மகனல்லவா என நினைத்து கண்களில் கண்ணீரோடு எழுந்து நின்று வேந்தனை பார்த்தார் சேகர். வேந்தனாகிய வேலம்மா மீண்டும் தந்தை தன்னை கொல்லத்தான் வந்திருக்கிறார் என நினைத்து வேறு வழியில்லாமல் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து விட்டாள். கீழே விழுந்தவுடன் வேலம்மாள் உடைய தலையில் பலத்த காயம் பட்டு ரத்தம் பீறிட்டு ஓடியது. பின் ரயில் நின்றது. சேகர்தான் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வேலம்மாளிடம் அழுது கொண்டே சேகர் மன்னிப்பு கேட்டார். “ மன்னிச்சிருடா தங்கம்! நான் வேலை விஷயமா தான் சென்னைக்கு வந்தேன். இங்க வந்து நீ ரயில்ல பிச்சை எடுக்கிறத பார்த்ததும் எனக்கு ரொம்ப கஷ்டமா போயிருச்சு. அதுதான் உன்ன பார்த்ததும் எழுந்து நின்ன... அன்னைக்கு ஒரு கோவத்துல உன்ன கொல்லனும்னு தான் நினைச்சேன் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் அப்படின்றத இன்னைக்கு நான் புரிஞ்சுகிட்டேன். என்ன மன்னிச்சிடுடா வீட்டுக்கு வா உன்ன மகளாக ஏத்துக்குறேன்! ” என்று சொன்னார். செவிகளின் வலியே கேட்டுக் கொண்டிருந்த வேலம்மாள் ஆனந்த கண்ணீர் வடித்தாள். உடல் நலம் பெற்றவுடன் தன் தந்தையோடு செல்ல மறுத்தாள். காரணம், நான் பிச்சை எடுப்பது தானே என் தந்தைக்கு பிடிக்கவில்லை இனி உழைத்து சமுதாயத்தில் முன்னேறி காட்டுகிறேன் என்று நினைத்து வைராக்கியத்தோடு ஒரு அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தாள். விடுமுறை நாட்களில் மங்களபுரத்திற்கு சென்று குடும்பத்தோடு தங்கி வந்தாள். தான் சம்பாதிக்கும் பணத்தில் பாதியை மாதம் தோறும் வீட்டிற்கு அனுப்பினாள். மற்ற பணத்தை எல்லாம் சேர்த்து வைத்து பெண்கள் அழகு நிலையம் ஒன்றை அமைத்தாள். சிறு வயதிலிருந்து ஒப்பனைக்கு ரசிகையான வேலம்மாள் தன்னிடம் தனது அழகு நிலையத்திற்கு வரும் பெண்களுக்கு ரசித்து ரசித்து ஒப்பனை செய்து வந்தாள். வேலம்மாள் உடைய புகழ் நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் பரவியது. இதை கண்ட குடும்பத்திற்கும் பெருமை கிடைத்தது. இவ்வாறு அந்த குடும்பம் துன்பங்களைக் கடந்து மகிழ்ச்சியாக இருந்தது. *கருத்து:* இயற்கையின் உண்மையை பெற்றோர்கள் அறிந்தால் எந்த திருநங்கைகலின் கைதட்டும் ஓசையும் ரயில்களில் ஒலிக்காது. *“ வண்ணமயமான உலகம் யாவருக்கும் சொந்தம் ”* ........................... அ.பெர்த்தி வினித் தமிழ் இளங்கலை இரண்டாம் ஆண்டு, இலயோலா கல்லூரி, சென்னை – 600 034. 6380440539 bertivinith@gmail.com

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.