Anuraadha Jaishankar
சிறுகதை வரிசை எண்
# 246
பேழை திறந்தது
**********************
"உங்கள் அம்மாவின் தனிப்பட்ட விருப்பம் என்ன என்று நீங்கள் யாராவது அவரை கேட்டுத் தெரிந்து கொண்டு இருக்கிறீர்களா?"
என் பன்னிரெண்டு வயதில் ஏழாம் வகுப்பில் ஒரு நாள் என் தமிழ் ஆசிரியர் இந்த கேள்வியை கேட்டபோது அது என்னை அடுத்த இருபது வருடங்கள் விரட்டப் போகிறது என்பதை நான் அறிந்து இருக்கவில்லை. ஆனால் அந்த நிமிடமே அந்த கேள்வி அடுத்தவருக்கு இடம் கொடுக்க கூடாது என்பதற்காக முடிந்தவரையிலும் காலை விரித்துக் கொண்டு உட்காரும் குழந்தை போல் என் மனதுக்குள் சம்மணம் இட்டு அமர்ந்து விட்டது. விளையாடும்போது ஒளிந்து இருக்கும் தோழர்களைக் கண்டுபிடிக்க அவர்களது கை, கால், அணிந்து இருக்கும் உடை, அவர்களது மெல்லிய குரல் அல்லது மூச்சு சத்தம் எதுவும் தெரிகிறதா,கேட்கிறதா என்று தேடுவது போல ஏதாவது துப்பு கிடைக்குமா என்று மனம் நினைவடுக்குகளில் பழைய நிகழ்ச்சிகளின் வழியே தேடி அலைந்தது. ஒரு இனம் புரியாத ஆர்வத்தையும் குறுகுறுப்பையும் ஏற்படுத்தி விட்டது.
அன்று மாலை பள்ளியிலிருந்து திரும்பும்போது அந்த கேள்வியை என்னை விட இரண்டு வயது இளையவளான என் தங்கை கீதாவிடம் கேட்டேன். பெண் பிள்ளை என்பதால் என்னை விட அவள் அம்மாவோடு செலவிடும் நேரம் சற்று அதிகம். அவளுக்கும் அந்த கேள்வி ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவளும் அன்று வரையிலும் அதைப் பற்றி யோசித்து இருக்கவில்லை. வீடு போகிற வழி நெடுக இதுவாக இருக்குமோ, அதுவாக இருக்குமோ என்று பேசிக் கொண்டே நடந்தோம். நாங்கள் இருவருமாக அம்மாவை கேட்காமலேயே அவளது தனிப்பட்ட ஆசை என்ன என்று கண்டுபிடித்து விடவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டோம். அந்த முடிவு எங்கள் இருவருக்குமே ஒரு பரிசுப் பொருளைத் திறந்து பார்ப்பதற்கு முன் ஏற்படும் எதிர்பார்ப்பு கலந்த மகிழ்ச்சியையும் படபடப்பையும் உண்டு பண்ணியது. அன்றிலிருந்து அம்மாவை அவளுக்குத் தெரியாமல் கூர்ந்து கவனிப்பதே எங்களது முதல் வேலை ஆயிற்று. அப்படியே அம்மாவுக்குத் தெரியாமல் இருவரும் கண்களால் பேசிக் கொள்ளவும் பழகிக் கொண்டோம்.
எங்களுக்குத் தெரிந்த வரையில் எப்போதுமே அம்மா எதிலுமே அதீத ஆர்வமோ ஆசையோ காட்டியதில்லை. அதற்காக அம்மா ஏனோ தானோ என்று அசிரத்தையாக வாழ்ந்ததாக அர்த்தமில்லை. அம்மா அம்மாவுக்கே உரிய அத்தனை அழகுகளுடனும் இருப்பாள். நேர்த்தியாக உடை உடுத்தி எப்போதுமே வெளியில் கிளம்ப தயாரானது போல இருப்பாள். எளிய புடவைகள்தாம். இருந்தாலும் அவை அம்மா கட்டும்போது தனி அழகாகிவிடும். நன்றாக சமைப்பாள். வீட்டை அழகாக வைத்துக் கொள்வாள். வேலை செய்யும்போதும், நாங்கள் படிக்கும் நேரம் தவிரவும் ஏதாவது பாட்டு முணுமுணுத்துக் கொண்டே இருப்பாள். சத்தமாக பாடி ஒரு நாளும் கேட்டதில்லை. எதிலுமே அம்மாவை குறை சொல்ல முடியாது. ஒரு நிதானம், பொறுமை இருக்கும். அதனாலேயே என்னவோ அவள் தனிப்பட்ட விருப்பம் எது என்று கண்டுபிடிப்பது எங்களுக்கு சற்றுக் கடினமாக இருந்தாலும் பிடித்த ஒன்றாகிப் போனது.
எங்கள் சுமதி அத்தை வீட்டுக்கு வரும்போதெல்லாம் எதாவது இரண்டு புது பாத்திரங்களோடுதான் வருவாள். " கடைத்தெருவுக்கு போனேன் அண்ணி. நீங்க என் கல்யாணத்துக்கு கொடுத்த லோட்டா எல்லாம் பெரிசா இருக்கு. வீட்டுக்கு வர்றவங்களுக்கு காபி கொடுத்தா குடிச்சு முடிக்கறதுக்குள்ள அவங்களுக்கு மூச்சு திணறி போவுது. அதான் சின்னதா இருக்கட்டுமேன்னு இந்த டபரா டம்ளர் செட் வாங்கினேன்" என்பாள். அம்மாவும் அதை எடுத்து பார்த்து "நல்லதுதான், தினசரி உபயோகத்துக்கு கைக்கு அடக்கமாக அழகா இருக்கு" என்பாள். ஒரு முறையேனும் எனக்கும் வாங்கி இருக்கலாம் என்றோ நானும் வாங்கப் போகிறேன் என்றோ சொன்னது இல்லை. நாங்கள் அத்தை கொண்டு வந்து காண்பிக்கிற சாமான்கள் நல்லாருக்குமா, நாமும் வாங்கலாம் என்று கேட்டாலும் " உங்க பாட்டி எனக்கு கொடுத்த பாத்திரமே கள்ளிப் பெட்டியில அவ்வளவு கிடக்கு. எல்லாம் நீங்க பெருசான பிறகு உங்களுக்கு புடிச்சா மாதிரி வாங்கிக்கலாம்" என்று விடுவாள்.
நாங்களோ அப்பாவோ சொல்வதற்கு முன்பே அன்று எங்களுக்கு என்ன சாப்பிட வேண்டும் என்று தோன்றி இருக்குமோ அதை சரியாக சமைத்து இருப்பாள். மூன்று பேருக்கும் மூன்று விதமாக தோன்றி இருந்தாலும் எல்லாமே சொல்லி வைத்தாற் போன்று இலையில் இருக்கும். அது எப்படி என்பது எங்களுக்குப் புரியாத ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் தூங்கும் போது அம்மா எப்படியோ எங்கள் மனதில் புகுந்து கண்டுபிடித்து விடுகிறாள் என்று கீதா நம்பினாள். எனக்கு அப்படி இல்லை என்று தெரிந்தாலும் வேறு எப்படி என்று காரணம் சொல்லத் தெரியவில்லை.
அம்மா படிப்பு விஷயத்தில் மட்டும் எங்கள் இருவரிடமும் கண்டிப்பாக இருப்பாள். படிப்புதான் பெரிய, அழிவில்லாத சொத்து என்பாள். அப்பா அலுவலக மனமகிழ் மன்றத்தில் உறுப்பினராக இருந்தார். அங்கிருந்து மாதம் நான்கு புத்தகங்கள் கொண்டு வருவார். இரண்டு குழந்தைகளுக்கான புத்தகங்கள் வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லி விடுவாள். நாங்கள் அதைப் படிக்க வேண்டும். மீதி இரண்டையும் அம்மா இரு நாட்களுக்குள் முடித்து விடுவாள். ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு சிறுவர்களுக்கான ஒரு கதைப் புத்தகம் வாங்கித் தருவாள். வெள்ளிக்கிழமைகளில் இரவு சாப்பாட்டுக்கு பின் எல்லோரும் முற்றத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்போம். நேரம் சந்தோஷமாக போகும். அந்த நேரத்தில் அம்மா ஏதாவது அப்பாவிடம் சொல்வாளா, ஏதாவது தெரிந்து கொள்ள முடியுமா என்று நானும் கீதாவும் தூக்கத்தை சிரமப்பட்டு கலைத்துக் கொண்டு உட்கார்ந்து இருப்போம். அம்மா பேசுவதில் இருந்து அவள் சந்தோஷமாகத்தான் இருப்பது போன்றும், அவளுக்கு என்று நடக்காத ஆசை எதுவும் இல்லை போன்றும்தான் எங்களுக்கு தோன்றும். இருந்தாலும் நாங்கள் அம்மாவை கவனிப்பதைத் தொடர்ந்து கொண்டுதான் இருந்தோம்.
தீபாவளி போதுதான் துணி எடுக்க கடைக்கு போவோம். நான்கு பேருக்கும் இரண்டு செட் புதுத்துணிகள் வாங்குவோம். ஒன்று தீபாவளிக்கும் மற்றது பொங்கலுக்கோ பிறந்த நாளுக்கோ இஷ்டம் போல போட்டுக் கொள்ளலாம். எங்கள் இருவருக்கும் பிடிக்கிற மாதிரி அம்மா அழகாக நல்ல டிசைனில் எடுத்து விடுவாள். அப்பாவுக்கும் அம்மா ஆசையாக தேர்ந்தெடுத்து சொல்லுவாள். நிறைய பார்த்தாலும் அப்பா இறுதியில் அம்மா சொன்னதைத்தான் வாங்கி இருப்பார். அம்மாவிடம் பட்டுப்புடவைகள் கிடையாது. ஒரு முறையேனும் வாங்கச் சொல்லி நானும் கீதாவும் நச்சரிப்போம். அம்மா புன்னகையோடு அந்த கோரிக்கையைக் கடந்து விடுவாள். ஏதாவது விசேஷங்களுக்கு உடுத்த கொஞ்சம் பார்டர் வைத்த புடவை ஒன்றும், ஒரு வீட்டுக்குக் கட்டுகிற புடவையும் எடுத்துக் கொள்வாள். ஆனால் அதை எடுப்பதற்குள் அம்மா படும் பாடுதான் வேடிக்கையாக இருக்கும். அம்மாவுக்கு தனக்கு என்று எடுக்கும் போது மட்டும் குழப்பம் வந்து விடும். அப்பாவிடம் உங்களுக்கு பிடிச்சு இருக்கா என்று கேட்பாள். அம்மா உடுத்துகிற புடவை அப்பாவுக்கு எதுக்கு பிடிக்க வேண்டும் என்று நாங்கள் பேசிக் கொள்வோம். அப்பாதான் பொறுமையாக உதவ வேண்டும். சிறிது சுணக்கம் காட்டி விட்டார் என்றால் தொலைந்தது. அம்மா முகம் வாடிவிடும். என்னவோ எனக்கு வாங்கதான் எனக்குத் தெரிய மாட்டேங்குது. கூட வர்றவங்க கொஞ்சம் பொறுமையா இருந்தா என்ன என்று புலம்ப ஆரம்பித்து விடுவாள். ஆனாலும் அப்பா நல்லா இருக்கு என்று சொன்ன புடவையைத்தான் எடுத்துக் கொள்வாள். மாதாமாதம் வரும் புடவைக்காரரிடம் அக்கம்பக்கத்து வீடுகள் போல் தவணை முறையில் ஒரு முறை கூட வாங்கியது கிடையாது.
ஒரு கணவன் மனைவிக்கு இடையே ஆன அழகிய தருணங்களைக் கூட நாங்கள் மறக்க முடியாத அற்புதத் தருணங்களாக மாற்றி விடும் மாயம் அவர்களுக்குத் தெரிந்து இருந்தது. ஒரு முறை அப்பா அம்மாவுக்கு என்று பச்சை கலரில் அரக்கு பார்டர் போட்ட பட்டுப் புடவை ஒன்றை எடுத்து வந்தார். அம்மா உள்ளே இருந்தாள். அப்பா எங்களிடம் காண்பித்து நாம அம்மாவுக்கு இதைப் பரிசா கொடுக்கலாம் என்றார். எனக்கும் கீதாவுக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அம்மா ஒரு பட்டுப் புடவை உடுத்த வேண்டும் என்பது எங்களது வெகு நாள் ஆசை. அம்மா பணம் அதிகம் செலவாகும் என்பதால்தான் பட்டுப் புடவை வாங்குவதைத் தவிர்க்கிறாள் என்பது எங்களுக்குப் புரியத் தொடங்கி இருந்தது. அப்பா உள்ளே அம்மாவை கூப்பிடச் சென்றபோது நாங்கள் இதுதான் அம்மாவோட ஆசையா இருக்கும் என்று தீர்மானமாக முடிவு செய்து கொண்டோம். கீதா சட்டென்று உளறி விடக்கூடாது என்று நான் அவள் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். ரகசியம் நழுவிடக் கூடாது என்றும் மூச்சு வழியே கசிந்திடக் கூடாது என்றும் தவித்துக் கொண்டு நின்றோம். அப்பா அம்மாவின் கண்களை மூடி அழைத்து வந்தார். இப்போது நினைத்தாலும் மனதில் மகிழ்ச்சி தருகிற, மறக்க முடியாத காட்சி அது. நாங்கள் அம்மாவிடம் புடவையைக் கொடுத்தோம். குழப்பத்துடனும் ஆச்சரியத்துடனும் திறந்து பார்த்த அம்மா புடவையை பிரித்து பார்த்தாள். மலர்ச்சியுடன் மூவரையும் பார்த்து ரொம்ப நல்லா இருக்கு என்றாள். நாங்கள் உடனேயே அம்மாவிடம் அளவு ரவிக்கை வாங்கிக் கொண்டு ஓடிப் போய் மணி டெய்லரிடம் புதுத் துணியைக் கொடுத்து அடுத்த நாளே வேண்டும் என்றோம். மறுநாள் புதுப் பட்டுப்புடவை அணிந்த அம்மாவுடன் கோவிலுக்குச் செல்கையில் எங்கள் இருவருக்கும் பெருமை தாங்கவில்லை. அப்பாவுக்கு நிச்சயம் அம்மாவின் ஆசை தெரிந்துதான் வாங்கி இருப்பார். எனவே எங்களுக்கும் அது தெரிந்து விட்டது என நம்பினோம். ஒரு பெரிய தேடலுக்கு விடை கிடைத்து விட்ட நிறைவில் அன்று இரவு நானும் கீதாவும் தூக்கம் வரும்வரையில் அதைப்பற்றியே பேசிக் கொண்டு இருந்தோம்.
அடுத்த வாரம் சுமதி அத்தை உறவினர் திருமணத்திற்காக வந்து இருந்தாள். எப்போதும் போல புதிதாக வாங்கிய பட்டியலை அம்மாவிடம் சொல்லிக் கொண்டு இருந்தாள். நான் எதிர்பார்க்காத ஒரு நொடியில் சட்டென்று கீதா அத்தையிடம் "நாங்களும் அம்மாவுக்கு புதுப் பட்டுப் புடவை வாங்கி இருக்கிறோம் அத்தை" என்று சொல்லிவிட்டாள். "அப்படியா, காமிங்க அண்ணி" என்று அத்தை ஆவலுடன் கேட்கவும் அம்மா புடவையை எடுத்து காண்பித்தாள். "கட்னதையே கட்டுறேன்னு நினைச்சேன். இதை உடுத்திட்டு போகட்டுமா அண்ணி" என்றாள் அத்தை. நான் கீதாவை முறைத்தேன். கீதா இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவள் முகம் போன போக்கில் புரிந்தது. அம்மா எப்போதும் போல் சரி என்றாள்.
கல்யாணத்திற்கு போய் வந்த அத்தை "எல்லாரும் இந்த புடவை எனக்கு அவ்ளோ நல்லா இருக்குன்னு சொன்னாங்க அண்ணி" என்று புடவையை தடவிக் கொண்டே சொன்னாள். அம்மா "உனக்கு நல்லாதான் இருக்கு. நீயே வச்சுக்க" என்ற போது எங்கள் இருவருக்கும் அழுகையே வந்துவிட்டது. அத்தை தேங்க்ஸ் அண்ணி என்றபடி வேறு புடவை உடுத்துக் கொண்டு எங்கள் பட்டுப்புடவையை மடித்துத் தன் பெட்டிக்குள் வைத்துக் கொண்டாள். நான் வந்த கோபத்தில் கீதாவை நறுக்கென்று கிள்ளி விட்டேன். அவள் அழத் தொடங்க, நான் அவளையும் கூட்டிக் கொண்டு அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டேன் . அத்தைக்குத் தெரியாமல் அதை எடுத்து விடலாமா என்கிற என் எண்ணத்தை யோசித்து செயல்படுத்தக் கூட எனக்கு அவகாசம் இல்லை. ஏனெனில் அத்தை சிறிது நேரத்தில் கிளம்பியும் விட்டாள். மாலை வரை முள் மேல் நிற்பது போல் காத்திருந்து அப்பா வந்தவுடன் அவர் தன் டிவிஎஸ் வண்டியை ஸ்டான்ட் போட்டு நிறுத்தும் முன்னரே புகார் செய்தோம்.
ஒரு வினாடிக்கும் குறைவான நேரம் அப்பா முகத்தில் ஒரு ஏமாற்றம் கீற்றாக தோன்றி மறைந்ததை என்னால் உணர முடிந்தது. அப்பா கை கால் கழுவிக் கொண்டு அம்மா தந்த காப்பியைக் குடித்தார். பின் மெல்ல அம்மாவிடம் "சுமதிக்கு வேற புடவை எடுத்துக் குடுத்து இருக்கலாமே, நாங்க உனக்கு ஆசையா வாங்கின புடவை இல்லையா அது" என்றார். அப்பா அப்படி எங்களையும் அவரோடு சேர்த்து சொன்னது ரொம்பப் பிடித்தது. அம்மா புன்னகைத்தாள். எங்கள் இருவரையும் பார்த்து "நீங்க எல்லாரும் எனக்கு வாங்கித் தரணும்னு நினைச்சது, வாங்கிட்டு வந்து ஆசையா என் கையில கொடுத்த நிமிஷம், உங்க பிரியம் எல்லாம் என் மனசுலதான பத்திரமா இருக்கு, அது என்னிக்கும் எங்கிட்டயேதான் இருக்கும்" என்றாள். எங்களுக்குத் திரும்ப வந்த அழுகையில் அம்மாவின் ஆசை அது இல்லை என்கிற ஏமாற்றமும் கலந்து இருந்தது.
வருடங்கள் உருண்டோடின. நான் வேலைக்கு வந்து, கீதா கல்யாணமும் முடிந்து விட்டது. என் மனதை அரித்துக் கொண்டிருந்த அந்த கேள்வியை நான் மறந்து விட்டதாக நம்பிக் கொண்டிருந்தேன். பரபரப்பு அற்ற ஒரு நாளில் ஆழ்மனதில் கல் போன்று கிடந்த அது டால்பின் போன்று துள்ளி மேலே வர ஆரம்பித்தது. அம்மாவைப் பற்றிய என் அத்தனை வருட அவதானிப்புகளை என் மனதில் முன்னும் பின்னுமாக ஓட்டிப் பார்த்தும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஒரு நாள் பொறுக்க முடியாமல் என் ஆசிரியர் கேட்ட கேள்வியை அம்மாவிடம் நேராகவே கேட்டுவிட்டேன். பயணம் செய்வதா, கோவிலுக்கு போவதா, இசையா, புத்தகம் படிப்பதா, உனக்கு ரொம்பப் பிடித்தமான, உனக்கென்று மட்டும் இருக்குற உன்னோட ஆசை எதும்மா ? நீங்கள் எல்லோரும் நன்றாக இருப்பதுதான் என்றெல்லாம் சொல்லக் கூடாது என்றேன். அம்மா ஒரு நிமிடம் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தாள். பின் தனது வழக்கமான சிரிப்புடன், "நீ இப்படி கேக்கறதே ரொம்ப சந்தோஷமா இருக்கு, எனக்குன்னு ஒரு ஆசை இருக்கு. அப்பா ரிட்டையர் ஆனதும் உங்க ரெண்டு பேரிடமும் சொல்றேன்" என்றாள். எனக்கு நம்பவே முடியவில்லை. வருடக் கணக்காக இருட்டில் தேடியவனுக்கு முதல் ஒளிக்கீற்று தெரிந்தது போல் மனம் துள்ளியது. அது ஒரு விதமான உணர்ச்சிப் பிரளயத்தை என்னுள் உண்டு பண்ணியது. கீதாவைத் தொடர்பு கொண்டு சொன்னேன். அப்பா பணி ஓய்வு பெறுகிற நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கினேன்.
ஒரு வருடம் சென்று இருக்கும். என் திருமணம் நடந்தது. அடுத்த இரு மாதங்களில் அப்பா பணி ஓய்வு பெற்றார். அந்த மாதம் ஊருக்குப் போகும் போது அம்மாவிடம் நிச்சயம் அவள் விருப்பத்தை கேட்டு விட வேண்டும் என்ற முடிவில் இருந்தேன். ஆனால் தொடர்ந்த ஒரு வாரத்தில் நன்றாக இருந்த அப்பா திடீரென மாரடைப்பால் காலம் ஆன செய்தி வந்தபோது அதிர்ச்சியில் உறைந்து விட்டேன். அப்பாவை இழந்த சோகத்தை விட அம்மாவை எப்படி தேற்றப் போகிறேன் என்கிற கவலைதான் மேலோங்கி நின்றது. அப்பாவின் மறைவு நெஞ்சில் விழுந்த பாறாங்கல் என்றால் அம்மாவைத் தேற்றுவது கையையும் காலையும் கட்டிக்கொண்டு நீச்சல் அடிப்பது போல இருந்தது. எங்கள் குடும்பத்தில் எல்லா வேலைகளையும் அம்மாதான் முன்னின்று செய்பவளாக இருந்தாலும், அம்மா என்கிற பட்டத்தின் நூல் அப்பாதான் என்பது எனக்குத் தெரியும். நான் பயந்தபடியே அம்மா தன்னுள் ஒடுங்கி விட்டாள். பேச்சு குறைந்து விட்டது. என்ன சொல்லியும் எங்கள் வீட்டை விட்டு என்னுடன் நகரத்துக்கு வர மறுத்து விட்டாள். நான் அம்மாவுடன் தினமும் அலைபேசியில் பேசினாலும், அவளிடமிருந்து ஒன்றிரண்டு வார்த்தைகளுக்கு மேல் பதில் வராது. நான் அம்மாவுக்காக மாதாமாதம் ஊருக்குப் போக ஆரம்பித்தேன். அவளுடன் ஒரு வார இறுதியைக் கழிப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டேன்.
அப்பாவின் மறைவுக்குப் பின் மூன்று மாதங்கள் சென்று நான் அம்மாவுக்காக ஊருக்குச் சென்று இருந்தேன். மாலை கடைத்தெருவில் ராமண்ணாவின் தேநீர்க்கடையில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தேன். அப்போது தங்கம் ஆசாரி மாமா என்னை பார்த்துவிட்டு என்னருகில் வந்தார். அவர் அப்பாவின் நண்பர். ஆரம்ப நல விசாரிப்புகளுக்குப் பின் தாழ்ந்த குரலில் "தம்பி, உன்கிட்ட கொஞ்சம் பேசணும். என் வீட்டுக்கு வரமுடியுமா ?" என்றார். புரியாமல் சற்று வியப்புடன் அவரது சைக்கிளில் அவரை உட்கார வைத்து ஓட்டிக் கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றேன். வீட்டை ஒட்டியே இருக்கும் தச்சுப் பட்டறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருந்தவற்றை என்னிடம் காண்பித்து, "அப்பா காலம் ஆகிறதுக்கு மூணு நாள் முன்ன என்கிட்ட இதை செஞ்சு தரச் சொல்லி கேட்டுக்கிட்டார். மொத முறையா என் சம்சாரம் வாயைத் தொறந்து இது வேணும்னு ஒரு விஷயம் கேட்டு இருக்கா. நல்லா செஞ்சு கொடுத்துடு. கையில இப்போ பணம் வந்துடும்ன்னாரு. வேலையை ஆரம்பிக்க இருக்கையிலே இப்படி நடந்து போச்சு. நான் ஆரம்பிச்ச வேலையை நிப்பாட்ட வேணாம்னு முடிச்சுட்டேன். உங்க அம்மாட்ட பேசவும் சங்கடமா இருந்துச்சு. நீ வர்றப்போ சொல்லலாம்னு இருந்தேன். எடுத்துக்கணும்னு கட்டாயம் இல்லை. அம்மாகிட்ட பேசிட்டு வேணும்னாலும் சொல்லு " என்றார். ஒரு நிமிடம் அப்படியே ஆச்சரியத்தில் நின்றேன். மெல்ல ஏதோ புரிவது போல் இருந்தது. அப்பாவின் அறையில் பரணில் இருந்து இறக்கிய இரண்டு மரப் பெட்டிகள் ஓரமாக இருந்ததை அவர் இறந்தபோது வந்த சமயமே கவனித்து இருந்தாலும் இதுவரை அதில் என்னவோ புத்தி செல்லவில்லை. அதையும் இதையும் இணைத்துப் பார்த்ததில் இப்போது விளங்குகிற மாதிரி இருந்தது. “அப்பா சொன்னபடியே இருக்கட்டும். இப்பவே வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடு பண்ணமுடியுமா மாமா?" என்றேன். அவர் அரைமணியில் வருவதாகச் சொன்னவுடன் வீட்டுக்கு ஓடினேன். அப்பா அறைக்குச் சென்று பெட்டிகளைத் திறந்து பார்த்தேன்.
தங்கம் மாமா வருவதற்காக காத்திருந்தேன். இருபது வருடங்களை விட அந்த இருபது நிமிடங்களைக் கடக்க சிரமப்பட்டேன்.
வாசலில் வண்டி நிற்கிற சத்தம் கேட்டவுடன் உள்ளே பார்த்து குரல் கொடுத்தேன்.
" அம்மா, இங்கே வாயேன். தங்கம் மாமா வந்து இருக்காங்க ".
வெளியே வந்தவள் எனக்குப் பின் நின்றவரை பார்த்தாள். அவருக்குப் பின் வண்டியில் இருந்து இறக்கப்பட்டவற்றை பார்த்தாள். ஆறடி உயரத்தில் கண்ணாடிக் கதவுடன் கூடிய அழகிய மூன்று மர அலமாரிகள். நான் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
அம்மாவின் முகத்தில் ஆர்வம், மகிழ்ச்சி, துக்கம், இயலாமை என கலவையான உணர்ச்சிகள் வரிசையாகத் தோன்றி மறைந்தன. வினாடிகள்தான். மாமாவை நோக்கி கைகளை கூப்பிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
நான் அலமாரிகளை அப்பா அறையில் வைக்க ஏற்பாடு செய்தேன். தங்கம் மாமாவுக்கு நன்றி சொல்லி அவர்கள் கிளம்பியவுடன் அம்மாவிடம் சென்றேன். சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து இருந்தாள். அவள் அருகே கீழே அமர்ந்தேன்.
" அம்மா, உன்னோட தனிப்பட்ட விருப்பம் என்னன்னு நானா கண்டுபிடிக்கணும்னு இத்தனை வருஷமா காத்து இருந்தேன். இப்ப எனக்கு அது என்னவா இருக்கும்னு ஊகிக்க முடிஞ்சாலும் , உன் வாயால நீ சொல்லி கேக்கறதும், அதை நிறைவேத்தி வைக்கிறதும்தான் என்னோட மிகப் பெரிய சந்தோஷமா இருக்கும்னு தோணுது. அந்த சந்தோஷத்தை எனக்குக் கொடும்மா. தயவு செஞ்சு சொல்லும்மா. நான் கண்டிப்பா செய்யறேன்" என்று மன்றாடும் குரலில் சொன்னேன்.
அம்மா சற்று நேரம் அமைதியாக இருந்தாள். நான் ஆவலுடன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தேன். சில நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தன. பின் என் கைகளைப் பிடித்துக் கொண்டு மெல்லச் சொன்னாள்.
" எனக்குன்னு தனியா ஒரு சின்ன நூலகம் வீட்ல வேணும். இந்த மாதிரி புத்தக அலமாரில அழகா புத்தகங்கள் அடுக்கி வச்சு காலையில இருந்து சாயந்திரம் வரைக்கும் படிச்சுட்டே இருக்கணும். அந்த சின்ன பெட்டிகள்ல இருக்கறது எல்லாம் என் கலியாணத்துக்கு முன்ன, என் சின்ன வயசுல நான் சேர்த்த புத்தகங்கள். உங்க ஊர்ல பெருசா புத்தகத் திருவிழா நடக்குமாமே, அதுக்கு என்னை கூட்டிட்டு போ. இப்போ நிறைய புத்தகம் வாங்கணும். " என்றாள். சொல்லி முடிக்கையில் அவள் முகம் பளபளத்தது.
நான் அம்மாவின் மடியில் என் முகத்தைப் புதைத்துக் கொண்டேன். அம்மாவை மீட்க வழி தெரிந்து விட்டதிலும் எனது பல வருட தேடலுக்கு விடை கிடைத்து விட்ட நிம்மதியிலும் சற்று நேரம் திக்குமுக்காடிக் கொண்டு இருந்தேன். பின் எழுந்து அவளை இறுக அணைத்துக் கொண்டேன்.
" நிச்சயம் செய்யறேன் மா" என்று சொன்னபோது எடை இழந்து காற்றில் மிதந்தேன்.
***********************
அனுப்புனர்
அனுராதா ஜெய்ஷங்கர்
C 1-104, அக்ஷயா பெல்வேடேர் அபார்ட்மெண்ட்ஸ்
(Akshaya Belvedere Apartments)
GST மெயின் ரோடு
கூடுவாஞ்சேரி
செங்கல்பட்டு
603202.
அலைபேசி எண் - 9940946833
மின்னஞ்சல் முகவரி- vanujai@yahoo.com
இந்த படைப்பு எனது சொந்தக் கற்பனையில் உருவானது. இது எதன் மொழிபெயர்ப்போ அல்லது தழுவலோ இல்லை என்று உறுதி அளிக்கிறேன் .இந்த போட்டியின் முடிவு வெளியாகும் வரை இந்த சிறுகதையை வேறு எந்த போட்டிக்கோ, அச்சுக்கோ, அல்லது இதழுக்கோ அனுப்புவதில்லை என்றும் உறுதி அளிக்கிறேன். இது ஏற்கனவே அச்சு வடிவம், கிண்டில், ஒலிவடிவம் அல்லது மின்னிதழ் போன்ற எதிலும் வெளிவரவில்லை என்கிற உறுதிமொழியையும் அளிக்கிறேன்.
அனுராதா ஜெய்ஷங்கர்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்