logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

SURENDRAN N

சிறுகதை வரிசை எண் # 245


மொக்க - சிறுகதை ----------- ------------ சுட்டெரிக்கும் வெயில். வறண்ட காற்று. மதுரையை நோக்கிச் செல்லும் அந்தத் தார்ச்சாலை கானலைக் கக்கியது. மதன், பேருந்தில் ஜன்னலோர இருக்கை கிடைக்கும் என எதிர்பார்த்தான்; கிடைக்கவில்லை. மூன்று பேர்கள் அமரும் இருக்கையில் இடது பக்கம் நடைபாதையின் ஓரமாக இருக்கை கிடைத்தது. ஜன்னலோர இருக்கையிலும் அதற்கடுத்த மைய இருக்கையிலும் தடித்த உருவத்தில் இருவர் அமர்ந்திருந்தார்கள். மதன் உட்காரப் பத்தாத இடம்தான்; வேறு வழியில்லை; உட்கார்ந்து கொண்டான். போவதும் வருவதுமாக இருந்த நடத்துனர் மற்றும் பயணிகள் அவன் தோளில் உரசியபடி இருந்தார்கள். அசதியில் அவனது இடது கால் நடைபாதைப் பக்கமாக ஒதுங்கியது. நடத்துனர் வரும் போதும் போகும்போதும் "கால உள்ள வைங்க சார்" என்று தவறாமல் சொன்னார். அதனால், காலை உள்ளிழுத்து வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தினான் மதன். அருகில் இருந்த தடியர்களும் மதுரைக்கே பயணச் சீட்டு வாங்கியதைக் கண்டான். மதுரைவரை இதே நெருக்கடி நிலைதான் என்று உறுதியானது. வழியில் எதிர்ப்படும் ஊர்களில் யாராவது இறங்கினால், காலியாகும் இருக்கையைக் கைப்பற்றும் முடிவோடு அமர்ந்திருந்தான் மதன். ஓட்டுனர் மிதமான வேகத்தில் பேருந்தைச் செலுத்தினார். விர்ர்... என்ற இரைச்சலோடு தனியார் பேருந்து ஒன்று கடந்துபோனது. பயணிகள் சிலர் அதை ஆர்வமாகவும் ஏக்கமாகவும் பார்த்தார்கள். ஒருவர், "சைய்..., அந்த வண்டியப் பிடிச்சா கால்மணி நேரத்துக்கு முன்னாடியே மதுரை போயிறலாம்" என்று புலம்பினார். அப்படி என்னதான் அவசரமோ? நடத்துனரின் நடவடிக்கைகள், கிண்டல் கேலிப் பேச்சுக்கள், சில்லரைக்கான புலம்பல்கள், சிறுவர்களுக்கான அரைக் கட்டணத்தை முழுக் கட்டணமாக்கிய கறார், படியில் நிற்பவர்களை உள்ளே வரச்செய்த கண்டிப்பு, நிர்வாகத்தின் நிறை குறைகள் பற்றிய பிரசங்கம் எனப் பொழுதுபோனது. பயணச் சீட்டுகளைக் கொடுத்து முடித்த நடத்துனர், ஓட்டுனரின் அருகில் இருந்த ஒலி பெருக்கியை முடுக்கினார். தனது கைப்பையில் இருந்த குறுந்தகட்டை எடுத்துச் செருகிப் பொத்தானை அழுத்தினார். திரையிசைப் பாடல்கள் ஒலித்தது. நடத்துனரின் ரசனை எண்பதுகளின் துவக்கத்தில் இருப்பது புரிந்தது. மதனுக்குத் தரவேண்டிய மீதத் தொகையைப் பயணச் சீட்டின் பின்புறம் எழுதிப் பிரமாணம் தந்திருந்தார் நடத்துனர். சட்டைப் பையில் துளாவி பயணச்சீட்டு இருப்பதை உறுதி செய்து கொண்டான் மதன். மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இறங்கும்வரை நடத்துனர் தனக்குத் தரவேண்டிய பாக்கித் தொகையைத் தரமாட்டார் எனத் தெரிந்துபோனது. இந்த அவஸ்தையை தவிர்க்க சில்லரை கொடுத்து சீட்டை வாங்குவார்கள் என்பது நடத்துனரின் திட்டம். பாக்கித் தொகையைக் கேட்டு வாங்க மறந்தால், மதனுக்கு நாநூற்றி நான்கு ரூபாய்கள் அம்பேல். பயணம் என்பது அநேகமாக எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தரும். பயணம் என்பது வாகனங்களிலோ, ரயிலிலோ, விமானத்திலோ செல்வது மட்டுமல்ல; உணர்வுகளின் வழியிலும் இருக்கும். பயணங்கள் புதிய அனுபவங்களை தரும்; கற்றலை மேம்படுத்தும்; தேடலைச் சுகமாக்கும்; நம்பிக்கையை வளர்த்தெடுக்கும்; ஞானத்தைப் பெருக்கும்; சிந்தனையைத் தூண்டும். மதனுக்கு, பேருந்து இயங்கும் ஓசை, சுகமான இசை இவைகளுக்கிடையில் ஏதேதோ நினைவுகள், சிந்தனைகள், திட்டமிடல்கள் மனதில் வந்து போனது. வெக்கையினால் ஏற்பட்ட அயர்ச்சியில் மெல்ல மெல்ல இமைகளை மூடித் தூங்கிப் போனான். நீண்ட நேரம் கழித்து மதனைத் தட்டியெழுப்பிய நடத்துனர், மீதத் தொகையைக் கொடுத்தார். பயணச் சீட்டை வாங்கிப் பின்புறம் எழுதியிருந்த குறிப்பை அடித்துத் தந்தார். "சரியா இருக்கான்னு பாத்துக்கங்க" என்றார். தூக்கக் கலக்கத்தில் இருந்த மதன் இமைகளை இரண்டொரு முறை மூடித் திறந்தான். பணத்தை எண்ணிச் சரிபார்த்துச் சட்டைப் பையில் வைத்தான். அதே பையில் இருந்த கைப்பேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தான். இன்னும் அரைமணி நேரப் பயணத்தில் மதுரை ஆரப்பாளையம் வந்துவிடும். உயரமான நபர் மதனின் அருகில் வந்து நின்றான். அவனுடன், அவனுக்கும் குட்டையான ஒருவனும் வந்து நின்றான். மதன் தூங்கியிருந்தான். உயரமானவனின் கைகள் மதன் தோளில் உரசியது. வழித்து நிமிர்ந்து பார்த்தான் மதன். அந்தப் பார்வையில் 'என்னப்பா கையத் தோளில் வைக்கிற?' என்ற கேள்வி வெளிப்பட்டது. நெட்டையன் எந்தவித உணர்ச்சியையும் வெளிக் காட்டாமல் மதனை ஒருமுறை பார்த்துவிட்டு வேறு எங்கோ திரும்பிக் கொண்டான். கையை எடுக்கச் சொல்வதா, வேண்டாமா? என்ற யோசனை நீண்டு நிர்த்துப் போனது. மெதுவாகக் கண்களை மூடினான். பேருந்து வளைவில் திரும்பி நின்றது. 'காளவாசல் இறங்குறவங்க வாங்க...' என்று நடத்துனர் உசார் படுத்தினார். ஆரப்பாளையம் இன்னும் ஐந்து அல்லது எட்டு நிமிடங்களில் வந்துவிடும். அரைத் தூக்கத்தில் இருந்தான் மதன். நெட்டையனின் வலதுகை ஆள்காட்டி விரலும் நடுவிரலும், சிலவுக்குள் நுழையும் நண்டு போல, மதனின் தோளில் ஊர்ந்து கீழிறங்கிச் சட்டைப் பையில் இருந்த கைப்பேசியைக் கௌவியது. அதே சமயம் பேருந்து வேகத் தடையில் ஏறி இறங்கிக் குலுங்கியது. அந்த சந்தர்பத்தில் கைப்பேசியை எடுத்த நெட்டையன் குட்டையனிடம் கொடுத்தான். என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்த மதனுக்கு, எதோ நிகழ்ந்திருக்கிறது என்பதை உள்ளுணர்வு உணர்த்தியது. குழப்பத்தில் நிமிர்ந்து பார்த்தான். பேருந்தின் பின்வாசலை நோக்கி நகர்ந்த குட்டையனின் கையில் மதனின் கைப்பேசி இருந்தது. மதன், குட்டையனை நோக்கிப் பாய்ந்தான். நெட்டையன் மதனை நெருக்கித் தள்ளியபடி நின்றான். கைப்பேசியை திருடியவன் நெட்டையான்தான். ஆனால், கைப்பேசி இப்போது குட்டையனிடம்... குட்டையனைப் பிடித்துக் கைப்பேசியைக் கைப்பற்ற வேண்டும். நெட்டையனைத் தள்ளி விட்டுவிட்டு குட்டையனை நெருங்கினான் மதன். நெருக்கடியான சாலையில் மெதுவாக நகர்ந்துகொண்டு இருந்தது பேருந்து. பின்வாசலின் படியில் தொங்கிய குட்டையன் அலட்சியமாகப் பார்த்தான். குட்டையனைக் கவனித்த நடத்துனர், பேருந்தை நிறுத்தச் சொல்வதா அல்லது வேகமாக ஓட்டச் சொல்வதா என்று குழம்பினார். பேருந்தை நிறுத்தினால் குட்டையன் இறங்கி ஓடிவிடுவான். நிறுத்தாமல் போனால், இறங்க முயன்று விழுந்து தொலைப்பான்; பிரச்சினை ஆகிவிடும். இருந்தாலும், "அவனப் பிடிங்க... பிடிங்க விடாதிங்க..." என்று சத்தம்போட்டார் நடத்துனர். குட்டையன் லாவகமாகப் பேருந்தை விட்டு இறங்கி ஓடினான். அவனைப் பிடிக்கமுடியாது. பேருந்தினுள் இருந்த நெட்டையனைத் தேடினான் மதன். நெட்டையன் முன்வாசல் வழியாக இறங்கி ஓடிக்கொண்டு இருந்தான். பயணிகளில் ஒருவர், "என்னசார் பிரச்சினை?" என்றார். "செல் போனத் திருடிட்டாய்ங்க சார்... ஒருத்தன் திருடி இன்னொருத்தன் கிட்டக் குடுத்தான். அவன விரட்டிப் போனேன்; இவன் தப்பிச்சிட்டான். போனு பதினெட்டாயிரம் சார். வாங்கி மூணுமாசந்தான் ஆகுது!" என்று பரிதவித்தான் மதன். மதன், ஆண்டிராய்டுக் காலத்து மனிதன். அவனுடைய உலகமே அந்தக் கைப்பேசிதான். அவனது வாழ்வின் ஒர் அங்கம் அது. முக்கியமான தொலைபேசி எண்கள், வங்கிக் கணக்குகளைக் கையாளும் செயலி, முக்கியக் குறிப்புகள், புகைப்படங்கள், சில ரகசியங்கள் இன்னும் நிறைய அந்தக் கைப்பேசியில் இருந்தது. எல்லாம் ஒட்டு மொத்தமாகப் பரிபோனது. தலையைப் பிசைந்தான். பையைத் தோளில் போட்டுக் கொண்டு, குட்டையன் போன திசையில் நடந்தான். எங்கு போகிறோம் என்ன செய்கிறோம் என்ற நிதானமே இல்லை அவனுக்கு; என்ன செய்வது என்றும் புரியவில்லை. ஆரப்பாளையத்ததையொட்டி விரிந்து, பறந்து, வறண்டு கிடந்தது வைகையாறு. வெள்ளை வெளேரென்ற மணற்பரப்பு சூரிய வெளிச்சத்தில் மினுமினுத்தது; சூரியச் சூட்டைத் தின்று வெக்கையைக் கக்கியது மணல். அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிறு சிறு பள்ளங்கள். அதில் கழிவுநீர் தேங்கியிருந்தது. கோரைப் புற்களும் நாணலும் அடர்ந்து சிறுசிறு புதராகி இருந்தது. குட்டையன், ஆற்றில் இறங்கி எதிர்ப்பக்கக் கரையை நோக்கி சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருந்தான். மதன் குட்டையனை பார்த்துவிட்டான். கண்ணெட்டும் தூரத்தில் இருப்பவனை எப்படியாவது பிடித்து விடவேண்டும் என்று வேகமாக நடந்தான். பதுங்கிப் பதுங்கி புதரில் மறைந்து, குணிந்து, குட்டையனின் அருகில் போனான். மதனை எதிர்பார்க்காத குட்டையன் ஓட்டத்தைப் பிடித்தான். விடாமல் துரத்திய மதன் குட்டையனின் முதுகுச் சட்டையைப் பிடித்தான். சட்டைப் பொத்தான்களை அவிழ்த்து விட்டு கைகளை உயரத் தூக்கினான் குட்டையன். சட்டை கழன்று மதனின் கையோடு வந்தது. ஓடத் துவங்கினான் குட்டையன். விடாமல் துரத்திச் சரிவில் ஏறிய குட்டையனின் கால்களைப் பிடித்துக் கொண்டான் மதன். இருவருமே உரண்டு பள்ளத்தில் விழுந்தார்கள். ஒருவர்மீது ஒருவர் புரண்டார்கள். கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டினான் மதன். குட்டையனும் திட்டினான். இருவருமே சம பலம் கொண்டவர்களாக இருந்தார்கள். குட்டையன் தப்பிச் செல்வதோ, மதன் அவனிடமிருந்த கைப்பேசியைப் பிடுங்குவதோ, சூழ்ச்சிகள் ஏதாவது செய்தால் தவிர சாத்தியமில்லை என்ற நிலை உருவானது. "யேய்... திருட்டுப்பயலே... போனக் குடுடா!" என்றபடி குட்டையனைப் போட்டு அமுக்கினான் மதன். அழுத்தத்தில் திணறிய குட்டையன், "போன நான் எடுக்கல... எங்கிட்ட இல்ல" என்றான். குட்டையனின் இடுப்பில் துளாவினான் மதன்; செல்போன் இருந்தது; வேட்டியில் சுற்றிச் செருகியிருந்தான்; எடுக்க முடியவில்லை. "டேய் பிராடு... இடுப்புலதான்டா இருக்கு... மரியாதையாக் குடுத்திரு" என்று மூர்க்கமாகக் கத்தினான் மதன். "சரி... என்னையவிடு... போனத் தரேன்" என்ற குட்டையன் பிடியைத் தளர்த்தினான். விட்டுக் கொடுத்தல் என்பது துவங்கியது. சமபலம் கொண்ட இருவரின் மோதல் பேச்சுவார்த்தையை நோக்கி நகர்ந்தது. திடீரென எங்கிருந்தோ வந்த நெட்டையன் மதனை இழுத்துப் போட்டு மிதித்தான். நெட்டையனின் திடீர் தாக்குதலில் நிலைகுலைந்து, கோபத்தின் உச்சத்திற்குப் போனான் மதன். நெட்டையனோடு மல்லுக் கட்டினான். குட்டையன் இருவரையும் விலக்கி விட்டான். மதனைப் பார்த்து "சகோ... எதுக்கு வீணாச் சண்டை போடுறீங்க... ஒரு பைவ் தௌசன் குடுத்துட்டு செல்ல வாங்கிட்டுப் போங்க...!" என்றான். "இதெல்லாம் ஒனக்கே நியாயமாத் தெரியிதா? என்னோட பொருளவே திருடிட்டு, ஏங்கிட்டயே பணம் கேக்குறியே! போலீசுக்குப் போவேன்" என்றான் மதன். கோபத்தை அடக்கிக்கொண்டான். பொருளைக் கைப்பற்றும்வரை கவனமாகப் பேசவேண்டும். "நடக்குறதப் பேசுங்க சகோ... காசு பாக்குற எடத்துல நியாயதர்மம் பாக்கக் கூடாது, நியாய தர்மம் இருக்கிற எடத்துல காசு தேடக்கூடாது; ஊருல நடக்குறதும் அதுதான். இஸ்டம்னாப் பாருங்க. இல்லைனா, நடையக் கட்டுங்க" என்றான் குட்டையன். "இதெல்லாம் ஒரு பொழப்பா...?நீங்கள்லாம் மனுசப் பிறவியே இல்ல!" சலிப்பைக் கொட்டினான் மதன். "அட...! ஆகுற கதையப் பேசு. துட்டுத் தரியா, இல்லையா?" என்றான் நெட்டையன். "கஷ்டப்பட்டுச் சம்பாரிச்ச காசுல வாங்குன போனு" முக்கியமானதெல்லாம் அதுல இருக்கு; குடுத்திருங்க. நீங்க கேட்ட அளவு பணம் இல்ல. இரநூறு ரூபாதான் இருக்கு; வாங்கிட்டுப் போனக் குடுங்க" "யோவ்... எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கோம்; இருநூறு ரூபா தரேங்கிற! இந்த ஏரியாவுலதான் இருப்போம். எப்பவேணாலும் வந்து, ரெண்டாயிரம் குடுத்துட்டு வாங்கிக்க" என்று தொகையைக் குறைத்தான் நெட்டையன். சொல்லிக் கொண்டே இருவரும் நடந்தார்கள். ஒடிக் குட்டையனைப் பிடித்தான் மதன். கரையிலிருந்து யாராவது பார்க்கிறார்களா, உதவிக்கு வருவார்களா? என்று சுற்றிச் சுற்றிப் பார்த்தான். ஊரும் உலகமும் அதனதன் போக்கில் இயங்கிக் கொண்டிருந்தது. குட்டையன் என்ன நினைத்தானோ? கைப்பேசியைத் தூக்கி மதனை நோக்கி வீசினான். "போலீசுக்குப் போவன்னு பயந்து குடுக்கல. குடுக்கணும்னு தோனுச்சி அதான்... எடுத்திட்டுப் போ" என்றான். திசைக்கு ஒருவராய் நான்கு போலீசார் பாய்ந்து வந்தார்கள். சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தது போல இருந்தது. நெட்டையன், குட்டையன் இருவரையும் பிடித்தார்கள். மதன் சொன்னதைக் கேட்டு, இருவரையும் அடித்துத் துவைத்தார்கள். "போன் கிடைச்சிருச்சா... நீ போயிரு. இவன்ங்க பழைய கேஸ்ல இருக்கனுங்க. நாங்க பாத்துக்கிறோம்" என்ற போலீசார் இருவரையும் இழுத்துப் போனார்கள். மதுரையில், பிரபல ஜவுளிக் கடையில் மேனேஞ்சராக இருந்தான் மதன். கருப்பாயூரணியில் இருந்த அவனது நண்பனைப் பார்க்க இருசக்கர வாகனத்தில் புறப்பட்டான். வழியில் ரிங்ரோடு கருப்பாயூரணி சந்திப்பில், சாலையோரம் இருந்த டீக்கடையில் டீ குடித்தான். எதிரில் இருந்தவன் மதனைப் பார்த்து சிரித்தான். நீண்ட யோசனைக்குப் பிறகு அவனை அடையாளம் கண்டு கொண்ட மதன் சிரிப்பதா, கடுமை காட்டுவதா என்ற குழம்பினான். எதிர்ப்பட்டவன், மதனிடம் கைப்பேசியைத் திருடிய பழைய குட்டையன். "என்ன சகோ... நல்லா இருக்கிங்களா... என்னத் தெரியிதா?" என்றான் குட்டையன். "ம்ம்..." என்று தலையசைத்த மதன், மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. குட்டையனே தொடர்ந்தான், "அன்னைக்கிச் ஜெயில்ல போட்டாங்க. கேச ஒத்துக்கிட்டேன். ஆறுமாசத் தண்டனைய அனுபவிச்சிட்டு வெளிய வந்தேன்; நாலுநாள் ஆச்சு" என்றான். மதன், அவனது பேச்சை விரும்பவில்லை. தம்ளரில் இருக்கும் டீயை அனுபவித்துக் குடிப்பது தடைப்பட்டது. ஐந்து நிமிடங்கள் கழித்துப் பார்த்திருக்கக் கூடாதா? என்று எண்ணிக் கொண்டான். "தண்டனைய அனுபவிச்சிட்டு வந்தியே... திருந்தி வந்தியா? தண்டனைங்கிறது குற்றவாளிகள் திருந்துறதுக்குத்தான்" "இதோட நாலுதடவ திருந்தி வந்தேன். ஒவ்வொரு தடவையும் பசி என்னையத் திருந்தவிடலன்னு சொல்லுவேன்; உழைச்சுச் சாப்பிடனும்னு சொல்லுவிங்க. வேலை குடுக்க மாட்டேங்குறாங்கன்னு சொல்லுவேன்; தொழில் செய்யின்னு சொல்லுவிங்க. பேச்சு வளந்துக்கிட்டே போகும்" நிதானமாகப் பேசினான் குட்டையன். அவன் சொன்னதை விரும்பியோ விரும்பாமலோ கேட்டுவைத்த மதன், "உன் பேரென்ன?" கேட்டான். "ஏம் பேரு மொக்கேட்டு... சுருக்கமா, ஏட்டுன்னு கூப்பிடுவாங்க!" சொன்னதோடு புன்சிரிப்புச் சிரித்தான். பதிலுக்குப் பலமாகச் சிரித்தான் மதன். பரஸ்பரம் நிகழ்ந்த அந்தச் சிரிப்பில் இருவர் மனதிலும் இருந்த பழைய நினைவுகள் கசடுகளாகத் துடைத்து எரியப்பட்டது. நல்ல விதமாக, புதிதாக, நட்புப் பூப்பூத்து கண் சிமிட்டியது. எதையோ சொல்லத் தயங்கிய குட்டையனை, என்ன என்பது போலப் பார்த்தான் மதன். "சகோ..., சாப்பிட்டு ரெண்டுநாள் ஆச்சு. வடையும் டீயும் வாங்கிக் குடுத்தாப் போதும்; மனசிருந்தாச் செய்ங்க" கேட்டுக்கொண்டே தலை கவிழ்ந்தான் மொக்கேட்டு. "யோவ்.. மொக்க, உனக்குப் பிடுங்கிட்டுப் போறதுதானே பழக்கம். இப்போ, கேட்டு வாங்குறியே... ஆச்சரியமா இருக்கு!" "உங்ககிட்டப் பேசிக்கிட்டு இருக்கிற இந்த நிமிசத்துல திருந்தலாம்னு முடிவு பண்ணினேன். ஆனா, இந்தப்பசி என்னையத் திருந்த விடாமப் பண்ணிருமோன்னு முதல் தடவையா பயப்படுறேன்" என்று இளக்கமாகப் பேசினான் குட்டையன். ரிங்ரோட்டில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிக் கண்டெய்னர் லாரி அசுர வேகத்தில் வந்தது. கருப்பாயூரணி செல்வதற்காக ஆட்டோ ஒன்று மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஊர்ந்து சென்றது. விநாடி நேரத்தில் எடுக்கப்படும் முடிவுகள், முடிவுகளை மாற்றி அமைத்து விடும். விநாடி நேரம் பொறுத்து ஆட்டோ சென்றிருந்தால் கண்டெய்னர் லாரி கடந்து போயிருக்கும். அசுர வேகத்தில் வந்த லாரியின் பின்சக்கரத்திற்கும் பின்பாக மோதியது ஆட்டோ. யானை மீது முயல் மோதியதுபோல இருந்தது. சுற்றிச் சுழன்று தறிகெட்டு ஓடிக் கவிழ்ந்தது ஆட்டோ. நல்ல வேளையாக பயணிகள் இல்லை. ஆட்டோ டிரைவர் மட்டும் குப்புற விழுந்தார். நடுத்தர வயதுக்கும் கூடுதலான வயது அவருக்கு. அக்கம் பக்கம் இருந்தவர்கள் கூடினார்கள். மதனும் ஓடினான். கடைக்காரரும் ஓடியிருந்தார். தட்டில் வடைகளும் கண்ணாடிக் குப்பிகளில் பதார்த்தங்களும் இருந்தது. கல்லாப் பெட்டி பாதி திறந்த நிலையில் இருந்தது. மொக்கேட்டு நின்று நிதானித்துச் சுற்றும் முற்றும் பார்த்தான். சாலையின் நான்கு திசைகளிலும் வாகனங்கள் வந்து தேங்கின. அனைவரின் கவனமும் விபத்தின் பக்கமாக இருந்தது. மோக்கேட்டு பசி, மனம் இரண்டுக்கும் நடுவில் திண்டாடினான். சில்லரைக் காசுகள், ரூபாய் நோட்டுகள், வடை, பதார்த்தங்கள், வாழைப் பழங்கள் எல்லாம் அனாதரவாய் காட்சி தந்தன. குறைந்தபட்சம் இரண்டு வடைகளை எடுத்து, வேட்டிக்குள் போட்டுக் கொண்டு, எங்காவது போய் தின்னலாம் என நினைத்தான். பசி வடையின் வடிவத்தில் சிரித்தது. வடையை எடுத்து வைத்துக் கொண்டால், பசி என்பதில்லாமல் திருட்டு என்றுதான் சொல்வார்கள். விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுனருக்கு உடம்பில் வேறு எங்கும் காயங்கள் ஏற்படவில்லை. காது வழியாக வழிந்த ரத்தம் சாலையில் ஓடியது. கண்கள் மேல் நோக்கி செருகியிருந்தன. அருகில் இருந்தவர்கள் ஆபத்பாந்தவனான நூற்றி எட்டுக்கு போன் செய்தார்கள். இன்னும் ஒருவர் போலீசுக்குத் தகவல் சொன்னார். சிலர் ஆட்டோ டிரைவரை அடையாளம் காணுவதில் மும்முரமாக இருந்தார்கள். சிறிது நேரம் கழித்தது, ஆட்டோ டிரைவர் இழுத்து மூச்சு வாங்கினார். சுதாரித்த மதன், சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து "உயிர் இருக்குசார்... ஆஸ்பத்திரிக்குப் போனா காப்பாத்திறலாம்" என்றான். அனைவரும் வேடிக்கை மட்டும் பார்த்தார்கள். மதன் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து வந்தான். ஒருவன், "நூத்தி எட்டுக்குப் பேசியாச்சு சார்" என்று சொல்லி 'கொஞ்சம் பொறுங்க... வண்டி வந்திரும்' என்பது போலப் பார்த்தான். "அட இருங்கசார்... தூக்கி என் வண்டியில உட்காரவச்சு, பின்னால உக்காந்து பிடிச்சுக்கங்க; ராஜாஜிக்குப் போயிருவம்" என்றான். உதவிக்கு யாராவது வருவார்களா என்று எதிர்பார்த்தான். கூட்டத்தில் இருந்தவர்கள் பின்வாங்கினார்கள். ஆம்புலன்சும் போலீசும் வந்ததுதான் இதைச் செய்ய வேண்டும் என்ற மனநிலை உருவாகியிருந்தது. மொக்கேட்டு, "சகோ... வண்டிய எடுங்க... நான் பிடிச்சு உக்காந்துக்கிறேன்" என்று ஆட்டோ டிரைவரைத் தூக்கி மதனுக்குப் பின்னால் இருத்தி, அதற்கும் பின்னால் உட்கார்ந்தான். "மொக்க, நல்லாப் பிடிச்சு உக்காந்துக்க" என்ற மதன் கூட்டத்தைப் பிளந்துகொண்டு வண்டியை ஓட்டினான். அரசு ராஜாஜி மருத்துவமனையின் அவசர சிகிட்சைப் பிரிவுக்கு முன்பாக நிறுத்தினான். பணியாளர் ஸ்டெச்சரைக் கொண்டு வந்தார். ஆட்டோ டிரைவரை ஸ்டெச்சரில் கிடத்தினார்கள். மதனும் ஊழியரும் முன்புறம் இருந்தவர்களை ஒதுங்கச் சொன்னபடி ஸ்டெச்சரை இழுத்துக் கொண்டு போனார்கள். பின்பக்கமிருந்து தள்ளியபடி சென்ற மொக்கேட்டு, ஆட்டோ ஓட்டுனரின் சட்டை, பேண்ட் பாக்கட்டைத் துளாவி, கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டான். மதன் இதைப் பார்த்துவிட்டான். பட்டன் போன் ஒன்றும் இருந்தது. அதையும் எடுத்துக் கொண்டு பின்னோக்கி நடந்தான் மொக்கேட்டு. அவனைத் தடுக்கவோ, சத்தம் போடவோ இயலாத நிலையில் ஸ்டெச்சரை இழுத்துக் கொண்டிருந்தான் மதன். மருத்துவரிடம் விபத்து விபரங்களைச் சொல்லிவிட்டு வெளியில் வந்தான். மொக்கேட்டைத் தேடினான். அவனது கண்கள் அலை பாய்ந்தது. மொக்கேட்டு திருந்தமாட்டான் என்று நினைத்தான். ஏற்கனவே சிறை சென்று வரும்போதெல்லாம் பசி, திருந்த விடவில்லை என்று சொன்னான். இப்போதுகூட அவன் கேட்ட வடை, டீயை வாங்கித் தந்திருக்கலாம். திருந்தும் எண்ணம் வளர்ந்திருக்கும். ஒரு வாய்ப்பு நழுவிவிட்டது. மொக்கேட்டு திருடுவது, திருந்துவது, திருந்தாதது பற்றிக் கவலை இல்லை. விபத்தில் காயம்பட்டு வாழ்வா, சாவா என்ற நிலையில் இருப்பவரிடம் திருடுவது என்னவிதமான மனநிலை? அவனைச் சும்மா விடக்கூடாது என்று பொங்கினான். மனது குமுறியது. ஆவேசமாய் மொக்கேட்டைத் தேடினான். அவனை நையப்புடைக்க வேண்டும் என வெறி கொண்டான். அரைமணி நேரம் கழித்து மறைவிடத்திலிருந்து வெளிப்பட்ட மொக்கேட்டு, "பாவம்சகோ அந்தாளு... வாடகை ஆட்டோவாம்... மூணு பொம்பளப் பிள்ளைகலாம். பாக்கட் நோட்டுல போன் நம்பர் இருந்துச்சு. அவரோட போன்லயே எல்லாருக்கும் தகவல் சொல்லிட்டேன். அவருக்கு 'பி' நெகடிவ் ரத்தம்; எனக்கும் அதேதான்; தேவைப்பட்டா நானே ரத்தம் தரேன்" என்றான். ஆட்டோக்காரரின் பட்டன் போன், பாக்கட் நோட்டு, பணம் எல்லாவற்றையும் மொத்தமாக மதனிடம் கொடுத்தான். "மொக்க" என்று மனதார அழைத்த மதன், வலது கைப் பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் வளையமாக வைத்து மொக்கேட்டை நோக்கிக் காண்பித்தான். *** - அனாமிகன்கம்பம் - (புனைப்பெயர்) anaamigan3791@gmail.Com அன்புடையீர்; சுரேந்திரன் எனும் நான், 'அனாமிகன்கம்பம்' என்ற புனைப் பெயரில், 'மொக்க' என்ற தலைப்பிலான இந்தச் சிறுகதையை எழுதியுள்ளேன். இதுசமயம், அம்மையார் ஹைநூன்பீவி நினைவுச் சிறுகதைப்போட்டி - 2023 க்கு அனுப்பியுள்ளேன். நானொரு அறிமுக எழுத்தாளன். வாசிப்பு அனுபவப் பெருக்கில் எழுத வந்தேன். மேலும், இந்தச் சிறுகதையை எவ்வித வடிவத்திலும், இப்போதும் இதற்கு முன்பும் வேறு எந்த இதழுக்கும் அனுப்பியதில்லை; போட்டி முடியும்வரையிலும் அனுப்பமாட்டேன். இது எனது சொந்தக் கற்பனையில் எழுதியது. மொழி மாற்றமோ, தழுவலோ இல்லை என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். நடுவர் குழுவின் முடிவுக்குக் கட்டுப்படுவேன் என்பதையும் தெரிவிக்கிறேன். இப்படிக்கு, அனாமிகன்கம்பம், anaamigan3791@gmail.Com 9943205347

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • SURENDARAN N Avatar
    SURENDARAN N - 2 years ago
    கணிணி ஆபரேட்டரின் தவறால் இச்சிறுகதை பத்தி பிரிக்காமல் பதிவிடப்பட்டுள்ளது. அனாமிகன்கம்பம்.