எஸ்.விஜயலக்ஷ்மி
சிறுகதை வரிசை எண்
# 244
போதை மாறிய பாதை
~~~~~~~~~~~~~~~~~
காலையில் இருந்து இராஜாத்திக்குள் ஒரே தவிப்பு. இந்த மனிதர் சொன்ன நேரத்துக்கு வந்துவிட வேண்டுமே என்று... கணவன் கனகமுத்துவிடம் மீண்டும், மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தாள்...
"நல்லா நெனப்புல வச்சுக்கங்க... சாயந்தரம் அஞ்சரைக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துடுவாங்கன்னு இராமமூர்த்தி மாமா சொல்லியிருக்காரு. பார்கவி அஞ்சு மணிக்குள்ள வந்துடறதா சொல்லியிருக்கு. நீங்க கொஞ்சம் முன்னாடியே வந்துடுங்க..."
கனகமுத்து-இராஜாத்தி தம்பதியின் ஒரே மகள் பார்கவி. இராஜாத்தியின் தாய்மாமன் இராமமூர்த்தியின் முயற்சி தான் இந்தத் திருமண ஏற்பாடு.
அடித்துச் சொல்லிவிட்டுக் கிளம்பினான் கனகமுத்து. நேரத்தோடு வந்துவிடுவதாக...
மாலை நாலரைக்கே அலுவலகத்தில் அனுமதி கேட்டுக்கொண்டு வந்துவிட்டாள் பார்கவி. பரபரப்பாக, மாப்பிள்ளை வீட்டாருக்கென பலகாரங்கள் தயாரித்துக் கொண்டிருந்தாள் இராஜாத்தி. கூடமாட உதவியாக இருந்தாள் பக்கத்துவீட்டு அம்புஜம். தாமரைப்பூ வண்ண சில்க் காட்டன் புடவையில் திருமணக்களையுடன் தயாராகி வந்தாள் பார்கவி. தோட்டத்துச் செடியிலிருந்து அம்மா பறித்துக் கோர்த்த மல்லிகைச்சரம் அவள் சடையை அலங்கரித்திருந்தது.
மணி ஐந்தரையை நெருங்கியது. இராஜாத்தியும் அம்புஜமும் முகம் அலம்பி, பார்வைக்கு மரியாதையாய் அலங்கரித்துக் கொண்டனர்.
மெதுவாகக் கேட்டாள் அம்புஜம்...
"என்னண்ணி, அண்ணனை இன்னும் காணோமே..."
ஏற்கனவே அடிவயிற்றில் புளிகரைத்துக் கொண்டிருந்தவளுக்கு அம்புஜத்தின் கேள்வி முகம் இருளச் செய்தது.
இரண்டு முறை கைப்பேசிக்கு அழைத்துப் பார்த்தள். பதில் இல்லை. ஆட்டோ ஓட்டுற மனுஷனை எங்கே போய்த் தேடுறது! காலைலயே படிச்சு,படிச்சு சொல்லிவிட்டோமே... அவன் கூப்பிட்டான், இவன் கூப்பிட்டான்னு தண்ணியடிக்கப் போயிடக்கூடாதுன்னு... சொன்னது எதுவும் காதுல ஏறல போலயே... தனக்குள்ளே மருகினாள்...
பார்கவிக்கு இது பழகிப்போன ஒன்று. அவளுடைய பட்டமளிப்பு விழா நினைவிற்கு வந்தது. வீட்டிலிருந்து இரண்டு 'பஸ்' மாறித்தான் அவள் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். மாலையில் தான் பட்டமளிப்பு விழா. பார்கவி மதியமே கல்லூரிக்குச் சென்றுவிட்டாள். இராஜாத்தி தனியாக எங்கும் பயணப்பட்டவளில்லை. குடியிருக்கும் தெருவில் நாலு வீடுகளில் பத்துப்பாத்திரம் தேய்த்து, வீடு பெருக்கி, மெழுகி என குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்பவள். பார்கவியின் சம்பளத்தை அப்படியே அவள் திருமணத்திற்காக சேர்த்து வருகிறாள். ஆட்டோவுக்கு நியாயமான வருமானம் உண்டு. அது வீடு வரை வந்தால் தானே! கனகமுத்து குடிப்பழக்கத்திற்கு ஆளானதில் இருந்து குடும்பமே தள்ளாட்டம் தான். அன்றும் போதையைத் தேடிப் போனவன் வீட்டிற்கு வரவில்லை. விழா முடிய இரவு நேரம் ஆகிவிட்டதால் பார்கவி வீடு வந்து சேரும் வரை வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருந்த இராஜாத்தி, அவளைக் கண்ட மாத்திரத்தில் கதறி அழுதுவிட்டாள். அம்மா அப்படி அழுது பார்கவி அதுவரை பார்த்ததில்லை.
இதோ, அம்மாவின் முக இருள் பார்கவியை என்னவோ செய்தது. மெதுவாக அம்மாவின் அருகே சென்று மென்மையாக அணைத்தவள், "ஒன்னும் கவலைப்படாதேம்மா, நடக்கறது நடக்கும்..." என்று காதருகே கிசுகிசுத்தாள்.
அசுரபலம் வந்தது இராஜாத்திக்கு.
கைப்பேசியை எடுத்தவள், மாமன் இராமமூர்த்திக்கு அழைத்து தாங்கள் தயாராக இருப்பதாக செய்தி கூறினாள். "கனகு வந்துடுச்சாம்மா..." எனக் கேட்ட மாமனிடம், "வந்துடுவார் மாமா..." என தைரியமாக பதில் கூறினாள்.
மாப்பிள்ளை வீட்டார், நெருங்கிய உறவினர்களுடன் வந்துவிட்டனர். உடன் வந்திருந்த இராமமூர்த்தி அனைவரையும் அறிமுகப்படுத்தினார். கனகமுத்துவின் குடிப்பழக்கத்தாலும், அதனால் ஏற்பட்ட வறுமையாலும் உறவுகள் ஒவ்வொன்றாய் விலகிவிட, இராஜாத்திக்கு அம்புஜமும் இராமமூர்த்தியும் மட்டுமே துணையாய் இருந்தனர்.
டிபன், காபி முடித்தவர்களில் மூத்தவராய் தெரிந்த ஒருவர் பேச்சைத் தொடங்கினார்...
"எங்களுக்குப் பொண்ணைப் புடிச்சிருக்கு. பொண்ணுக்கு சம்மதமான்னு கேட்டுக்கங்க. அப்படியே பொண்ணோட தகப்பனார் வந்துட்டார்னா, மேற்கொண்டு பேசலாம்..." என இழுத்தவர் இராமமூர்த்தியின் முகத்தைப் பார்த்தார். இராமமூர்த்தி இராஜாத்தியின் முகத்தை ஏறிட, பலம் அனைத்தும் நழுவ தன்னிச்சையாய் வாசல் பக்கம் பார்த்தாள் அவள்.
அம்மாவின் நிலை புரிய மனம் கலங்கினாள் பார்கவி.
சிறிது நேரம் மௌனம் ஆட்சி செய்ய, அந்த மூத்த உறவினரே மீண்டும் தொடர்ந்தார்...
"பெண்ணுக்கு ஒரு விசேஷம் என்கிற போது என்ன வேலை எப்படி இருந்தாலும் தகப்பனார் உடனிருக்க வேண்டாமா.... இது நெருடலாக இருக்கே... சரி, இதுக்கும் மேலே இப்ப எதுவும் பேச முடியாது. நாங்க போய் ஃபோன் பண்றோம்..."
அவர் சொன்னது தான் தாமதம், ஸ்விட்ச் போட்டது போல் அத்தனை பேரும் எழுந்தனர். மாப்பிள்ளைப் பையன் மட்டும் சற்றுத் தயங்கி வேறு வழியில்லாமல் எழுந்து பின் தொடர்ந்தான். ஜன்னல் வழியாக இதனைக் கவனித்த பார்கவிக்கு கண்ணீர் சுரந்தது.
ஒரு மாத காலம் ஓடிப் போயிற்று. குடியைத் தொட்டதில் இருந்து அதற்காக ஒரு நாளும் வருந்தாத கனகமுத்து, இந்த நாட்களில் மட்டும் மனைவியிடம் நூறு முறையாவது மன்னிப்பு கேட்டிருப்பான். அவள் மன்னிக்கத் தயாரில்லை. எள்ளும் கொள்ளுமாக வெடித்தாள். தான் அந்தக் கெட்டப்பழக்கத்தை விட்டுவிடுவதாக எண்ணினாலும் அதனை இராஜாத்தியிடம் பகிரக்கூடிய தைரியம் வரவில்லை.
நம்பிக்கை இல்லாத இடத்தில் தைரியமான பகிர்தலுக்கு இடமேது?
தன் சின்ன வயதில் தான் கேட்டதெல்லாம் வாங்கித்தரும் அப்பா கானல் நீராய்த் தோன்றினார் பார்கவிக்கு. குடும்பபாரம் முழுவதும் அம்மா மேல் ஏற்றி, வருமானம் கிடைத்தாலே குடி தான் என்றிருக்கும் அப்பாவை, 'அப்பா' என்றழைத்தே எத்தனை காலம் ஆயிற்று! இப்படி ஒரு நல்ல வாழ்க்கைக்குக் குறுக்காக அவரே நிற்கிறாரே.... என எண்ணியெண்ணி கலங்கினாள் பார்கவி.
இந்த ஒரு மாதமாக கெட்ட சகவாசம் மொத்தமும் விட்டொழித்தார் கனகமுத்து. வீடு தான் நரகமாக இருந்தது. அவ்வப்பொழுது பேசிக்கொண்டிருந்த இராஜாத்தியும் பேச்சுத் தொடர்பை நிறுத்திக்கொண்டாள். இவன் கொடுக்க எத்தனிக்கும் வருமானத்தையும் அலட்சியப்படுத்துகிறாள். இந்நிலை சிலநேரம் மீண்டும் குடியைத் தேடிப் போகலாமா என எண்ண வைக்கிறது... சிந்தித்துக் கொண்டிருக்கையில், "ஆட்டோ வருமா?" என்று ஒரு குரல் அழைத்தது. "சரி பொழப்பப் பார்ப்போம்..." என எண்ணியபடியே, "எங்க தம்பி போகனும்?" எனக் கேட்டான் கனகமுத்து. "டி-நகர், எவ்ளோ?" என பதிலுக்குக் கேட்டது குரல். "உக்காருங்க தம்பி, மீட்டர் போடறேன்" என்றவாறே மீட்டரைத் திருப்பிவிட்டான்.
கிளம்பிய ஐந்து நிமிடங்களுக்குள் இரு நபர்களை இடிப்பது போல் சென்று சமாளித்தது வண்டி.
"பார்த்து ஓட்டுங்க சார், எனக்கு சின்ன வயசு..." கிண்டலடித்தான் இளைஞன்.
"மன்னிச்சுக்கங்க தம்பி. மனசு சரியில்ல, அதான் இப்படி..."
"என்னாச்சு சார்.... இந்த வேலை செய்யற நீங்க எப்பவும் ஸ்டெடியா இருக்கனும்ல..."
" வீட்ல பிரச்சனை தம்பி..." என்று ஆரம்பித்து நடந்ததை ஒன்றுவிடாமல் கூறினான்.
இந்தக் கதையின் நாயகன் சாட்சாத் தானே தான் என்பதைப் புரிந்துகொண்டவன், "மாப்பிள்ளை பேர் என்ன சார்...?" எனக் கேட்டான்.
அந்த விபரங்கள் எல்லாம் இராமமூர்த்தியிடம் கேட்டு வைத்திருந்ததால் சட்டெனச் சொன்னான் கனகமுத்து,
"புகழேந்தி".
" ஓ, அப்போ அவரே தான்..." என்று தான் என்பதை மறைத்தான் புகழேந்தி, பார்கவியைப் பார்க்க வந்த மாப்பிள்ளை.
சடக்கென பிரேக் போட்டு, வண்டியை ஓரமாக நிறுத்திய கனகமுத்து, திரும்பி, ஆவலாய் நோக்கி, "உங்களுக்கு அவரைத் தெரியுமா?" எனக் கேட்டான்.
"என் நண்பன் தான். நீங்க வண்டியை எடுங்க... போய்க்கிட்டே பேசுவோம்..." என பயணத்தைத் தொடர்வித்தான் புகழேந்தி.
"தம்பி, என் பொண்ணு தங்கமான பொண்ணு. மாப்பிள்ளைப் பையனும் ரொம்ப நல்லவர்னு இராமமூர்த்தி சித்தப்பா சொன்னாரு. இந்தப் பிள்ளைகளை சேர்த்து வைங்க தம்பி, உங்களுக்குப் புண்ணியமாப் போகும்..."
"புண்ணியம் எல்லாம் இருக்கட்டும், பதிலுக்கு நீங்க என்ன தருவீங்கனு சொல்லுங்க..."
"என்கிட்ட என்ன தம்பி இருக்கு? இந்த ஆட்டோவை வேணா வச்சுக்கங்க... எம்பொண்ணுக்கு நல்லது பண்ணுங்க தம்பி..."
திரும்பித் திரும்பிப் பார்த்து பேசிக்கொண்டே வண்டி ஓட்டினான் கனகமுத்து.
"வண்டியெல்லாம் வேணாம் சார்... நீங்க ஒன்னு பண்ணுங்க, இனி காலத்துக்கும் குடியைத் தொட மாட்டேன்னு உறுதி சொல்லுங்க..."
"நிச்சயமா தம்பி. இப்போவே விட்டு ஒரு மாசமாச்சுப்பா..." என்று தழுதழுத்தான் கனகமுத்து.
வீட்டிற்குச் சென்ற புகழேந்தி, நடந்ததை பெற்றோரிடம் விளக்கிச் சொல்லி, தனக்குக் கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது அந்தப் பொண்ணோட தான் என உறுதியாகக் கூறினான்.
அவன் வீட்டினர் மீண்டும் இராமமூர்த்தியைத் தொடர்பு கொண்டதும், அன்று ஆட்டோவில் வந்த இளைஞர் தான் மாப்பிள்ளை புகழேந்தி என கனகமுத்து அறிந்துகொண்டதும், திருமணம் சிறப்பாக நடந்தேறியதும் தனிக்கதை!
-- எஸ்.விஜயலக்ஷ்மி.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்