logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

அனந்த் ரவி

சிறுகதை வரிசை எண் # 243


காலத்தின் ரசவாதம். அவன்: அந்த வீட்டின் கதவு திறந்தேதான் இருந்தது. இன்று நான்காம் நாள். எனவே துக்கம் கேட்க வருவார்கள் என்பதால் அப்படி இருக்கலாம். வாசலில் செருப்புகள் நிறைய இல்லை. இன்னும் யாரும் வரவில்லை போலிருக்கு. சற்று தயக்கத்துடன் திறந்திருந்தக் கதவை மென்மையாகத் தட்டி ஓசை எழுப்பினான். யாரும் உடனே வந்து விடப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் ஒரு மெல்லிய சோகத்தை முகத்தில் வலிய ஏற்றிக் கொண்டான். ஒரு தடித்த பெண்மணி வந்து கதவருகில் நின்றாள். “பத்மினி……” என்று இழுத்தான். “உள்ளேதான் இருக்கா.” என்று சொல்லிவிட்டு அவள் வழி விடுவது போல நகர்ந்தாள். அவன் வீட்டிற்குள் நுழைந்தான். மரணத்தின் வீச்சம் இன்னும் அங்கே மீதமிருந்தது. பாலாடை போல காற்றிலேயே துக்கம் புரண்டு கொண்டிருந்தது. இழப்பின் வலி, அது கொடுத்த வேதனை அந்த வீடெங்கும் நீக்கமற நிறைந்திருந்தது. வேகமெடுத்து ஓடும் மழைநீர் வெள்ளத்தின் நடுவே உடைமைகளைத் தலைகளில் சுமந்து கொண்டு நடக்கும் பாவப் பட்ட மனிதர்களைப் போல அந்த வீட்டின் மனிதர்கள் தங்கள் மனங்களில் சோகத்தைச் சுமந்து கொண்டு தத்தளித்துக் கொண்டிருந்தனர். யாரிடம் எதைக் கேட்டாலும் உடனே அழுது விடுவார்கள் போலவே அவனுக்குத் தென்பட்டது. பாழடைந்த ஒரு மண்டபத்தின் சிலந்தி வலைகளைப் போல அந்த வீட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் துக்கம் தொங்கிக் கொண்டிருந்தது. அப்படித்தானே இருக்கும்? சிறு வயதில் மரணம், அதுவும் கோரமான சாவு என்னும் போது அதை ஜீரணிப்பது கடினம்தானே! நாற்காலிகளின் முதுகுகளிலும், அங்கிருந்த ஒரே சோபாவின் நீண்ட முதுகிலும், கொடியெங்கிலும் துணிகள், துணிகள். காற்றிலேயே அதீதமான ஒரு ஈரம் தென்பட்டது. தூக்கிச் செருகிய புடவையுடன் இடுப்பில் குழந்தையை இடுக்கிக் கொண்டிருந்த ஒரு பெண்மணி கிண்ணத்திலிருந்து எதையோ எடுத்து குழந்தையின் வாயில் திணித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் குழந்தைக்குப் பயம் காட்டத் தன்னை அந்த பெண்மணி உபயோகித்துக் கொள்வாள் என்று அவனுக்குத் தோன்றியது. “சொல்லிக்கக் கூடாது. கிளம்பு” என்று யாரோ யாரையோ விரட்டிக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது யாரோ விசும்பும் சப்தமும், மெல்லிய அழுகுரலும் கேட்டுக் கேட்டு நின்றது. “எனக்குப் பச்சத்தண்ணி ஆகாதுடி. வெந்நீர் போடு” என்று ஒரு வயதான பெண்மணி கூறுவது கூடம் வரைக்கும் கேட்டது. சமையல் அறையில் சிமினியின் பகபக சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. இரண்டு அல்லது மூன்று பெண்கள் சமையல் அறையில் இருப்பதாகத் தோன்றியது. ஒரு கலவையான வாசனை அவ்வப்போது வெளி வந்து வீடெங்கிலும் அலைந்துக் கொண்டிருந்தது. சிறுவர்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். “இவருக்கு காபி ஆகவே ஆகாது. பூஸ்ட்தான்” என சமையலறை வாசலில் யாரோ ஒரு அழுத்தமான வேண்டுகோளை வைத்துக் கொண்டிருந்தார்கள். “பத்மினி ரூம்ல இருக்கா..” என்று ஒருத்தி சொல்ல, எல்லாரையும் தாண்டிக் கொண்டு அந்த உள்ளறைக்கு எப்படி செல்வது என்று அவன் தயங்கினான். பெண்கள் சாம்ராஜ்ஜியம். எது செய்யலாம், எதை செய்யக் கூடாது, என்ன சமைக்கலாம் எது சாஸ்திர விரோதம் என்பதெல்லாம் இந்த பத்து நாளும் அவர்கள் கையில். அவன் உள்ளே செல்லலாம் என்பது மாதிரி ஒரு பெண் அறை வாசலில் நின்று அவனை உத்தேசமாகப் பார்த்தாள். வேறு வழியில்லை. கொடியில் தொங்கும் துணிகள் தலையில் இடித்து விடாமல் அவன் எழுந்து அறைக்குள் நுழைந்தான். ஒரு கட்டிலின் விளிம்பில் எழுதி வைத்த சித்திரமாக அமர்ந்திருந்தாள் பத்மினி. அவளைப் பார்த்த விநாடியில் அதுவரையில் மனதில் கனன்றுக் கொண்டிருந்த எண்ணங்கள் சட்டென விலகிப் போக எதனாலோ தாக்கப் பட்டவனாக் கண்கலங்கினான் அவன். பத்மினி இப்போது சோகத்தின் சுமைதாங்கி! பட்டாம் பூச்சியாய் பறந்து திரிந்து கொண்டிருந்த பத்மினியா இது? அல்லது அவளது நிழலுருவமா? மெல்ல நடந்தான். அவளை நெருங்க நெருங்க அவள் சோகம் அவனைக் கவ்வி ஆகர்ஷிக்கத் தொடங்கியது. மினி என்று அழைத்து விடப் போகிறோம் என்று அவன் சர்வ ஜாக்கிரதையாக தன் நாக்கை இழுத்துப் பிடித்துக் கொண்டான். அவன் தலையைப் பார்த்ததும் அங்கே உட்கார்ந்திருந்த ஒரு பெரியம்மாள் மிகவும் சிரமப் பட்டு எழுந்து வெளியே சென்றாள். இருந்த ஒரே நாற்காலியில் அவன் அமர்ந்தான். அந்த நாற்காலியில் அந்த சூடு இன்னும் கொஞ்சம் மிச்சம் இருந்தது. தலை குனிந்தே இருந்தாள் பத்மினி. ஒரு வினாடி நிமிர்ந்த பொழுது அவள் கண்கள் குளங்களாகத் தென்பட்டன. “சே மினி என்ன இது? அழாதே” என்று அவள் முகத்தை உயர்த்திச் சொல்லிவிடப் போகிறோம் என்று அவன் பயந்து போய் தன்னை இறுக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அவள்: அவள் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. “அவ்வளவு உதாசீனப் படுத்திய பிறகும் வந்திருக்கிறானே?” ஆனால் அவனது வருகை அவளுக்கு ஒரு சின்ன ஆறுதலைக் கொடுத்தது போலத்தான் இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலின் நடுவே கிடைத்த மரநிழல் போல “பத்மினி” அவன் குரல் அவனுக்கேக் கேட்காத மாதிரி ஒலித்தது.. அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் சட்டென்று அவனைக் கலைத்துப் போட்டது. அவனது அந்த அழைப்பில் இருந்த நடுக்கம் அவளையும் கலக்கியது. கண்களைத் துடைத்துக் கொள்ள முயன்று தோற்றுப் போனாள். அடங்கியிருந்த துக்கம் மெல்ல மெல்ல வேகம் பிடித்து அவளுள் புகுந்துப் புறப்பட்டது. “கொஞ்சம் கூட எதிர்பார்க்கலைமா” அவள் முகத்தை மூடிக் கொண்டுப் பொங்கிப் பொங்கி அழுதாள். அந்த அழகான தோள்களும், முதுகும் குலுங்கின. சுற்றி இருந்த அனைத்தையும் மறந்து ஓவென்று பெருங்குரலில் வீசி அழ ஆரம்பித்தாள் பத்மினி. கூடத்தில் சட்டென்று சப்தங்கள் அடங்கிப் போக ஒவ்வொருவராக எட்டிப் பார்க்க ஆரம்பித்தார்கள். அவன்: பத்மினி எழுந்து வந்து தன்னைக் கட்டிக் கொண்டு விடப் போகிறாளோ என்று அவன் பயந்தான். சிறிது நேரம் வீர்யமாக அழுதவள் மெல்ல மெல்ல அடங்க ஆரம்பித்தாள். என்ன சொல்வது அவளிடம்? எது அவளுக்குச் சமாதானத்தைத் தரும்!? சொல்ல நினைத்ததை சொல்லி விடலாமா? இது சரியான சமயம்தானா? இந்த இடத்தில், இந்த நாளில் அப்படி சொல்லலாமா? தான் சொல்லுவது அந்த வீட்டிற்கு, அந்த சூழ்நிலைக்கு மிகவும் அந்நியமாகப் பட்டு விடாதா? துக்க வீட்டில் மங்கல விஷயமா!?….. சொல்லலாமா?! “இவளுக்கு வேணும் சார். அழட்டும் விடுங்கோ” என்றபடியே உள்ளே வந்தார் பத்மினியின் அப்பா. அவன் எழுந்து நின்றான். “உப்பைத் தின்னாத் தண்ணி குடிக்கணும்ங்கற மாதிரி, இவ அழ வேண்டியதுதான்.” அவன் தலை நிமிர்ந்தான். “சார் அதெல்லாம் வேண்டாம் சார். இந்த நேரத்துல….. இப்பிடி நடக்கும்னு தெரியுமா?” “என்ன செய்யறது? எல்லாம் என் தலையெழுத்து” என்று சொல்லி திடீரென அழ ஆரம்பித்து விட்டார் பெரியவர். “என் பொண்ணைப் பார்க்கவே சங்கடமா இருக்குய்யா. பகவான் அவளை சோதிச்சிட்டார்” என்று சொல்லிக் கொண்டே மடேர் மடேர் என்று தலையிலடித்துக் கொண்டார். அவருடைய மிதமிஞ்சிய சோகம் அவனுக்கு ஒரு நடுக்கத்தைக் கொடுத்தது. அவருக்கு ஏதாயினும் ஆகி விடப் போகிறதே என்று அச்சப் பட்டான். “வாழ வேண்டிய வயசுல கருகிப் போயிட்டாளே. இனிமே இவளுக்குத் துணை யாரு? என்ன ஆகும் இவ வாழ்க்கை?” மேலும் மேலும் தன் துக்கத்தின் எல்லைகளை விரிவுப் படுத்திக் கொண்டே இருந்தார் பெரியவர். நல்ல வேளையாக உறவினர் யாரோ ஒருவர் துக்கம் கேட்க வரவும், துண்டால் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு நகர்ந்தார் பெரியவர். குளத்தில் கல்லெறிந்தவுடன், கலையும் பிம்பமாக, மெல்ல எழுந்து சிறிது தண்ணீரைப் பருகி விட்டு மீண்டும் அமர்ந்து கொண்டாள் பத்மினி. அழுதழுது அவள் கண்கள் சிவந்திருந்தன. அவள்: பத்மினி அவனைக் கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை. ரோஷக்காரன். உனக்கு நல்லா வேணும்னு நினைச்சி கிட்டிருப்பான் என்றுதான் நினைத்தாள். “இது எனக்கு விதிக்கப் பட்ட சோகம், இது என் மீது கவிழ்ந்து வழிய வழிய இதை நான் தான் அனுபவித்தாக வேண்டும்.” இந்த மிதமிஞ்சிய சோகத்தைப் பங்கு போட அவன் வந்து விடுவான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. அப்பா அழுவதையோ அம்மா அழுவதையோ அவளால் ஒரு திகைப்புடன் ஏற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் இவனுமா கலங்குவான்? துக்கம் ஒரு குளமாக தேங்கியிருக்க அதில் தான் கழுத்து வரைப் புதைந்திருப்பதாக அவள் எண்ணிக் கொண்டாள். தாய் தந்தை என்றில்லை அந்த வீடே, சுற்றி இருக்கும் உலகமே அவளுக்கு அன்னியமாகத் தான் தெரிந்தது. ஊரெங்கும் கடன் பட்டுக் கொள்ளாமல் அப்பாப் பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு அது. அவளுக்கு, அவளுக்கென்றே ப்ரத்யேகமா ஒரு ஊஞ்சலை கட்டிக் கொண்ட வீடு. “ஊஞ்சல்ல படுத்துக்கோ பத்மினி. இன்னைக்கு பவுர்ணமி. நிலா வெளிச்சம் நேரா ஊஞ்சல்ல இறங்கும். அந்த மாதிரி கட்டியிருக்கேனாக்கும்” பெருமிதப் பட்ட அப்பா இப்போது தலை தலையாய் அடித்துக் கொண்டு அழுகிறார். நிலவு விழும் வீடு ! என்று அவள் கவிதை எழுத முனைந்தது அவள் நினைவுக்கு வந்தது. இப்போது அது இழவு விழுந்த வீடாகி விட்டது. மோகன் தன்னையேதான் உற்றுப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது. அது, அந்த பார்வை, அந்தப் பார்வையில் படந்திருக்கும் பச்சாதாபம்….அவளுக்குப் பிடிக்கிறதா என்ன? நேருக்கு நேர் அவன் கண்களை சந்திக்க அவளுக்குச் சற்று சங்கடமாகத்தான் இருந்தது. இவன் என் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளத்தான் வந்திருக்கிறானா? அதுதானா? அவன் எதை எதிர்பார்த்து இங்கே வந்திருக்கிறான்? எதையாவது ஏடாகூடமாகக் கேட்டு விடுவானோ? அவன் பார்வையைப் பார்த்தால் அச்சமாகத்தான் இருக்கிறது. இவ்வளவு பேருக்கு எதிரிலே எப்படி தைரியமாக என்னைப் பார்க்க வந்தான்?. இது யார் என்று அப்பா என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்வேன்? அவன் ஒரு வேளை அப்பாவிடமே பேசிவிடுவானோ? என்ன பேசுவான்? இந்த வீட்டிலா அப்படி பேசுவான்? அவர் இறந்த நாலாவது நாளிலேயே அதைப் பேசி விடுவானா? அப்படிப் பேசினால் அது சரியாக இருக்குமா? நானும் ஒரு வேளை அதை எதிர்பார்க்கிறேனோ? என்ன எதிர்பார்க்கிறேன்? அவன் கேட்க வேண்டும், சொல்லி விட வேண்டும் என்பதுதான் என் விழைவா? எண்ணங்கள் தாறுமாறாய் தாக்க மூச்சு முட்டியது அவளுக்கு. கணவன் மறைந்த துக்கம் என்னிலிருந்து விலகி விட்டதா? ஒரு புதிய பாதையின் தேடல் என்னுள் அதற்குள் முளை விடத் தொடங்கி விட்டதா என்ன? தன்னைப் பிடிவாதமாக சூழ்ந்த கேள்விகளால் திக்கு முக்காடிப் போனாள் பத்மினி. அது ஒரு வினோதமான மனநிலை. துக்கம் பொங்கிப் பெருகிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால்…ஆனால்…அதற்காக இனி வாழ்நாள் முழுவதும் இப்படி கலைந்த ஓவியமாகவே இருந்து விட வேண்டுமா என்ன? அழுது கொண்டே இருக்க வேண்டுமா? எனக்குப் பசிக்காதா? தாகம் எடுக்காதா? தூக்கம் வராதா? வந்தால்….அவர் நினைவை உதறி விட்டேன், அவரை மறந்து விட்டேன் என்று பொருளா? நான் அப்போது துரோகி ஆகி விடுவேனோ? இத்தனை நாள் மோகனை மறந்திருந்தேன் என்று சொல்லி விட முடியாது. அவன் நினைவுகளை ஒரு ஓரத்தில் சுமந்து கொண்டேதான் இருந்தேன். …அது கூட தர்ம நியாயப் படி துரோகம்தானே ? இப்போது அது அப்படியே தலைகீழாக மாறி அவர் நினைவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டு மோகனுடன்….. சீ சீ என்று தலையை உதறிக் கொண்டாள் பத்மினி. அந்த நினைப்பு அவளுக்கு அசிங்கமாகத்தான் இருந்தது. அதெப்படி சாத்தியம்? “சாத்தியமாகத்தான் வேணும். இல்லேன்னா வாழறது எப்படி?” பெற்றோர்களுக்குப் பிடிக்காத கல்யாணத்துக்கு அவர்களை நெம்பித் தள்ளிக் கொண்டு போன போது, அன்று அம்மா சொன்ன வார்த்தைகள் இன்னமும் அவள் மனதில் நிழலாடின. மீண்டும் அம்மா அதையே சொல்ல வேண்டி வந்து விடுமோ? மோகனின் உதடுகள் துடித்துக் கொண்டிருப்பது அவளுக்குத் தெரிந்தது. இவ்வளவு பேருக்கு நடுவில் தன்னை மினி என்று அழைத்து விடுவானோ? கவலைப் படாதே மினி, நான் இருக்கிறேன் உனக்கு. பழசையெல்லாம் துடைத்து எறிந்து விடுவோம். நான் ஆசை ஆசையாகத் திட்டம் போட்ட, வாழ்க்கையைக் கண்டிப்பாக ஆரம்பிப்போம் என்று சொல்லி விடுவானோ? அவன்: திருமணம் மினியைக் கலைத்துப் போடவில்லை. அவள் கருக்கழியாமல் அப்படியே அதே மாதிரிதான் இருக்கிறாள். என் மினி, என் மினியாகவே இருக்கிறாள். ஆனால் அவசரப் பட்டு விடக் கூடாது. இது துக்க காலம். துக்கத்தை பதின்மூன்று நாட்கள் காக்க வேண்டிய கட்டாயத்தில் அவள் இருக்கிறாள். அல்லது இருப்பாள். ஒரு சுனாமி வெள்ளமாக காலம் அவள் வாழ்க்கையை இழுத்துக் கொண்டு போய் விட்டது. அமைதியின் இழைகள் அவளைச் சூழ்ந்து கொள்ளும் காலம் வரும். புயலுக்குப் பின் அமைதி. அவள் யோசிக்கட்டும். அமைதியாக யோசிக்கட்டும். வாழ்க்கையில் அவளுக்கு முன் நீண்டு கிடக்கும் பாதைகளை அவள் கூர்மையாக அவதானித்து, ஆராயட்டும். நான் போட்ட சாலையில் பயணிப்பதே சுகம் என்று அவளுக்கு, அவளுக்கேப் புலப் படட்டும். அதுவரையில் அமைதியாகத் தானே இருந்தாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் மோகன். மெல்ல எழுந்தான். இதற்கு மேலும் இங்கே அமர்ந்திருந்தால் அது தன்னை அசைத்து விடும். இவள் சோகத்தைப் பார்க்கப் பார்க்க நான் கரைந்து விடுவேன். என் மனத்தை, அதன் திடத்தை, இந்த வீடு அழித்து விடலாம் அதற்கு முன் நான் கிளம்பியாக வேண்டும். “நான் கிளம்பறேன் பத்மினி” பருத்த சரீரம் கொண்ட, அவனுக்கு நாற்காலியை விட்டுக் கொடுத்த பெண்மணி கையில் ஒரு காபி டம்ளரோடு அறைக்குள் வந்தாள். வெளியே யார் யாரோ வந்திருக்க துக்கம் கரை புரண்டு கொண்டிருந்தது. சிலர் பத்மினியைப் பார்க்கவென்று அறைக்குள் வர முயற்சிக்க, அவனைப் பார்த்ததும் சற்றுத் தயங்கி விலகினார்கள். “காபி சாப்பிடுங்க” என்று அந்தப் பெண்மணி சொல்லவும் அவன் பத்மினியை ஏறிட்டான். அந்தப் பெண்மணிக்குப் புரிந்தது. “துக்கம் கேட்க வந்தா எதுவும் கொடுக்காம அனுப்பக் கூடாது” என்று விளக்கம் தந்தாள். சூழ்நிலை சரியில்லாததால் மளமளவென்று காபியைக் குடித்து விட்டு எழுந்தான் மோகன். அப்போது பத்மினியின் அப்பா மறுபடியும் உள்ளே வந்தார். “அப்பா…… மோகன்” என்று உடைந்து போன குரலில் அறிமுகப் படுத்தினாள் பத்மினி. “அப்பவே புரிஞ்சி கிட்டேன் பத்மினி” என்று அவனைத் திரும்பிப் பார்க்காமலேயே சொன்னார் அவள் அப்பா. பத்மினியின் முகத்தில் ஒரு வினாடி ஒரு மின்னலடித்து மறைந்தது. தொடர்ந்தார் பெரியவர்: “உன்னைப் பாத்ததும் அப்பிடியே உறைஞ்சி போய் நின்னுட்டார். நான் கவனிச்சேன்” என்றவர் திரும்பினார், “மிஸ்டர் மோகன் நீங்க அடிக்கடி வந்து போயிட்டு இருங்க. உங்களை மாதிரி நல்ல ஃப்ரண்டைப் பாத்துதான் அவ மனசு ஆறணும்” அவள்: அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. விவரமில்லாமல் எதையாவது சொல்லிவிடப் போகிறானோ என்று பயந்தவள், அவன் கிளம்புவதைப் பார்த்ததும் சற்று நிம்மதி ஆனாள். கண்களால் அவளிடம் அனுமதி பெற்றுக் கொண்டு மெல்ல நகர ஆரம்பித்தான் மோகன். திடீரென்று சில பெண்கள் அறைக்குள் நுழைந்து அவளை கட்டிக் கொண்டு பெருங்குரலில் அழ ஆரம்பித்தார்கள்.அவள் கண்களில் கண்ணீர் பெருக அவன் வெளியேறிக் கொண்டிருப்பது ஒரு திரைப்படக் காட்சி போல அவளுக்குத் தெரிந்தது. திடீரென்று அந்த நொடியில் தான் தனியளாக ஆக்கப் பட்டு விட்டதைப் போல ஒரு எண்ணம் அவளுக்குத் தோன்றியது. ஏன், எதற்கு அப்படித் தோன்ற வேண்டும் என்று தன்னையே விசாரித்துக் கொண்டாள் பத்மினி. அப்பா: காலத்தின் கரங்கள் வலிமையானவை. காலம் மந்திர சக்தி கொண்டது. எதையும், எதுவாகவும் மாற்றி விடும் ரசவாதம் தெரிந்தது காலம். அவன் இப்போது போகட்டும். நட்பு எது, காதல் எதுவென்று காலம் அவளுக்குப் பாடம் புகட்டும். என் பத்மினி அப்போது தெளிவாக ஒரு பாதையைக் கண்டறிந்து விடுவாள் இந்த முறை முழுவதுமாக அவளாக அவள் பாதையைத் தேர்ந்தெடுக்க விட்டு விடக் கூடாது. என் தேர்வாகவும் அது இருக்க வேண்டும். *************** எழுதியது : அனந்த் ரவி. அலைபேசி எண் : 9444018042 விலாசம் : A.Ravi, Flat 4A, Malles Altius, Opp: Bharathi Vidyalaya School, Perumbakkam Main Road, Perumbakkam Chennai – 600100 Word Limit : 1522 Unicode : Arial Unicode MS ****************** இது என் சொந்தக் கற்பனையில் உருவான கதை. வேறு எதனுடைய தழுவலோ மொழிபெயர்ப்போ அல்ல. இது வேறு எந்த பத்திரிக்கையிலும் பிரசுரமாகவோ, பரிசு பெறவோ இல்லை. இந்தப் போட்டியின் முடிவு வரும்வரை வேறு எந்த போட்டிக்கும் இதை அனுப்ப மாட்டேன் என்றும் உறுதி கூறுகிறேன். அனந்த் ரவி.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.