Shankar R
சிறுகதை வரிசை எண்
# 240
#ஜீவ_ராகம்.
"தாமரை இன்னுமா தூக்கம் ?"
அம்மாவின் சத்தம் தாமரையின் காதில் விழவில்லை.!
ஏனோ அவளுக்கு அன்று ஒருவித சோர்வு..!
இன்று கம்பெனி வேலைக்குப் போக வேண்டுமா?
ஒரு நாள் லீவு எடுத்தால் என்ன குறைந்தா விடும்..?
சூப்பர்வைசர் சிடு மூஞ்சி ராகவன் நாளை வேலைக்குப் போகும் போது..
காச் மூச் என்று கத்துவான்..
சாந்தமான ரமபிரான் ராகவனின்
பெயரை இவனுக்கு யார் வைத்தார்கள்?
அந்தக் காட்சி அவளுக்கு மனதில் வந்தது...
"தாமரை ஒய் ஆர் யூ
ஆப்சென்ட்
எஸ்டர் டே?"
தலையை ஆட்டிக் கொண்டு
சிவந்த அவனது மூஞ்சி,
இன்னும் சிவந்து போவதைப் பார்க்க தாமரைக்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை....
'களுக்' என்று தூக்கத்தில்
சிரித்தததைக் கேட்ட
அம்மா பாராவதியின் கோபம்
கொப்பளித்தது .!
"ஏண்டி நீ பைத்தியமா?..
எதுக்கு இப்ப சிரிப்பு..?
தூக்கத்தில் சிரித்தாலே சத்தம் போடும் அம்மா சில நாட்களாகத் தனக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை அறிந்தால் என்ன செய்வாளோ?.
தன் வேலை உண்டு தான் உண்டு என இருக்கும் அவள் ரவிச்சந்திரனை ஏன் பார்த்தாள்.?
கம்பெனியில் பினிஷிங் செக்ஷ்ன் என்பது பெண்கள் சாம்ராஜ்யம்.!
ஆம் மகளிர் மட்டும்...!
நூல் கண்டுகளை அழகாகக் கம்பனி பேப்பர் சுற்றி கலர் வாரியாக அட்டைப் பெட்டியில் அடுக்க வேண்டு்ம்.!
பெண்களுக்குப் பொறுமையும்
கலை நயமும் கூடுதல் என்பதால் இருக்கலாமோ?
ரவிச்சந்திரன் குவாலிட்டி இன்ஸ்பெக்டர் என்பதால் அடிக்கடி
அங்கு வரும் சந்தர்ப்பங்கள் ஏராளம்.!
அன்று கம்பனி முடிந்து தாமரை வேகமாய் நடந்து கொண்டிருந்தாள்.!
மழை மேகம் கடல் அலை போல் சுருண்டு எப்பொழுது வேண்டுமானாலும் கொட்டித் தீர்த்து விடுவேன் என்று உறுமியது.
சில் என்ற குளிர்ந்த காற்றும் அதன் ஊடே மிதந்து வரும் அவளுக்குப் பிடித்த மண் வாசனையும் ..
மழையில் நனைவது கூட ஒருவித சுகமாக இருக்குமே என்ற எண்ணத்தை
ஏற்படுத்தினாலும்..
ஜுரம் வந்தால் ..
என்ன செய்வது ?
என்ற கவலையும் அம்மாவின் திட்டுக்களும் ..அவளைத் துரத்தி வேகமாக நடக்க வைத்தது....
பின் புறம் கார் ஒன்று கடந்து சென்று ரிவர்சில் வந்து ...
"தாமரை ஏறிக்கோ."
காரில்
ரவிச்சந்திரன்.!
"சார் நீங்க போங்க ஒன்றும் கவலையில்லை"
"தாமரை ஏன் பயப்படணும்.?.
நான் கூட அந்தப் பக்கம்தான் போகணும்! சீக்கிரம் ஏறிக்கோ ...
பலத்த மழை வரும் போல இருக்கு !
அவன் வற்புறுத்தலைத் தட்ட முடியாமல் தாமரை ஏறிக் கொள்ள..
மெதுவாக மழையில் கார் நகர்ந்தது!
ஒருவருடன் ஒருவர் பேச நினைத்தாலும் அருகே அமர்ந்திருந்தாலும்..
இருவருக்கும் ஒருவிதத் தயக்கம் .!
காரில் விழும் மழைத்துளிகளின் சன்னமான சத்தமும் அரை வட்டமாய்
சுழலலும் காரின் வைப்பர் சத்தமும்
கார் டயரில் பட்டுச் சிதறும் மழை நீரின் சத்தமுமே அங்கு மெல்லி இழையாகப் பாய்ந்து கொண்டிருந்தது..
"சார் காரை இப்படி நிப்பாட்டுங்க நான் எறங்கணும்...
இங்கதான் என் வீடு !
சின்ன சந்து .
கார் போகாது நிறுத்துறீங்களா?."
"பரவாயில்லை தாமரை
கார் உங்கள் இருக்கும் இடம் செல்லுமே"
அந்த சிறிய சந்தில் கார் வருவதைப் பார்த்த எல்லோருக்கும் ஆச்சர்யம்.!
தாமரை காரிலிருந்து இறங்குவதைக் கண்ட பார்வதிக்கு மனம் துணுக்கென்று
இருந்தது.!
ரவிச்சந்திரனைப் பார்த்ததும்
இது பழகிய முகமாக இருக்கிறதே
என்ற நினைவும்..
"கடவுளே ! அண்ணன் ராசுவின் சாயலையும் நினைவையும் ஏற்படுத்துகிறதே?
ஒரு வேளை ராசுவின் பையனோ?
என்ற பிரமிப்பையும் ஏற்படுத்தியது..!
பல வருடங்கள் ஆனாலும் அண்ணனின் நினைவும் பிறந்த வீட்டின் நினைவும் இப்பொழுது வருவானேன்?"
ஏழை கோவிந்தனைக் காதலித்துக் கல்யாணம் செய்த குற்றத்தால் வீட்டாரால் ஒதுக்கப் பட்டுச் செண்பகச் சேரியிலிருந்து திருவையாறுக்கு இடம் பெயர்ந்தும்..
பல வருடங்களுக்குப்
பின்னும் ஏன் இந்த சோதனை..?.
பார்வதியைப் பார்த்த ரவிச்சந்திரன் ,...
"அம்மா
பயப்படாதீங்க...
நான் தாமரை வேலை செய்யும் கம்பெனியில் ஃபோர்மென் .
ஒரு விஷயமா திருச்சி போறேன்..
தாமரை காரில் ஏறத் தயங்கத்தான் செய்தாங்க...
நல்ல மழை ..நான் தான் காரில் ஏறிக் கொள்ள வேண்டினேன்..
என்னுடன் வேலை செய்யறவங்க மழையில் நனைய வேண்டாமே என்று நான் தான்....
வரேன் அம்மா..."
ஒரு நிமிடம் அவன் கண்களும் தாமரையின் கண்களும் சந்தித்தன.
ஓராயிரம் ஜென்மங்கள் பழகிய
இனிய உணர்வு..
தாமரையுடன் வேலை
செய்யும் எல்லோரும்
அலப் பறைகளாக இருக்கும் போது இவள் மட்டும் பாரம்பரியமான மேலாக்கு உடுத்தித் தளரப் பிண்ணிக் கொண்டு...
எப்படி இவளால் இருக்க முடிகிறது?
குடும்பச் சூழ்நிலை ஒரு காரணமொ?.
ஒருநாள் அவன் கேட்டும் விட்டான்.!
"ஏன் தாமரை எல்லாப் பெண்களும் அழகா சாரி உடுத்தி
பேஷனா வராங்க..
ஏன் நீ மட்டும் பாவாடை தாவணியில்?"
கொல்லென்ற மற்ற
பெண்களின் சிரிப்பும்..
ஏழ்மையின் இயலாயமையும்..
தாமரையின் கண்களில் நீரை வரவழைத்தது..
ஒரு நொடியில் நிலைமை
அறிந்த ரவிச்சந்திரன்..
"சாரி நான் தமாஷாகத்தான் சொன்னேன்...
நீங்க அழாதீங்க ...
இந்த டிரஸ்சில் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!"
அவள் காதில் மட்டும் கேட்கும்படி
அவன் சொன்னதை நினைத்தும்...
மனதில் தென்றலாய்
வருடுகிறானே?
என நினைத்தும் சிரித்துக் கொண்டே நகர்ந்தாள் தாமரை..!
சிவராத்திரி ..திருவையாறு மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது..
அங்கும் இங்குமாய் மணல் திட்டுக்கள்... சல சலப்பாய் வளைந்து ஓடும் பார் புகழ் காவிரி!
மணலில் சிவனைப் பிடித்து அதற்கு ஆராதனைகள்.
திரும்பிய ரவிச்சந்திரன் கண்ணில் பூரண நிலவாய் ..
தனை மறந்து மணலில் சிவலிங்கத்தைப் பிடித்து தவழும்
சிரிப்புடன் வழிபடும் தாமரை.!
மஜந்தா கலரில் தாவணியும்
அதே கலரில் கச்சிதமாகத்
தைக்கப்பட்ட பிளவுஸும். .
கிளிப் பச்சையில் தாவணியும் ..
அழுத்திச் சீவினாலும் அடங்காமல் முரண்டு பிடிக்கும்
அலை அலையான கூந்தலும் ..
கால்களில் கொஞ்சும் கொலுசுகளும்!!
நெற்றியில் சின்னச் சாந்துப் பொட்டும் ..
ஒரு கீற்றாய் சந்தனம் அதன் மேல் மெலிதான கோடாக விபூதியும் அவளைத் தேவலோக மங்கையாகவே மாற்றி இருந்தது. !
"ஏன் என் மனம் அவளைப் பற்றியே நினைக்கிறது.?"
அந்த நினைவை மாற்றிக் கொண்டு திரும்ப முற்பட்டவனை..
" சார் நீங்க எங்கே இப்படி.?
"சிவராத்திரி இங்கு மிகுந்த
விஷேம் உனக்குத் தெரியாதா?"
குனிந்து அவளுக்கு மட்டும் கேட்கும்படியாக
"காவடி போன்ற கண்கள் புருவமும்
கஸ்தூரி மானின் கண்களும்
கழுத்தில் ஆடும் பதக்கமும் நீ
மற்றொரு மஹாலட்சுமியோ?
என்று காதில் கிசு கிசுத்தான்!
அவன் கண்கள் தன்னைப் படம் பிடிப்பதையும் ,முகம் பரவசமாவதையும் தாமரை உணர்ந்தாலும்..
"சார் என்ன கவிஞனாக மாறிட்டீங்க?
ஒரு வேளை ராமனையும், சீதையையும் கொண்டாடிய தியகராஜர் வாழ்ந்த இந்த இடத்தின் மகிமையினாலா? " என்றாள்.!
அவளுக்கு உள்ளூர அவன்
செய்கைகள் பிடித்திருந்தன.
ஆனாலும் பொய்க் கோபத்தை முகத்தில் வரவழைத்துக் கொண்டு..
" நீங்க பொது இடத்தில..இப்படி?.."
திடுக்கிட்ட ரவிச்ச்சந்திரன்
பொது இடம்னு கூடப் பாக்காம தான் நடந்து கொண்டதை நினைத்து வருந்தி..
"தாமரை மன்னிச்சுடு.
நீ ஒரு அழகி.!."
"என்ன அழகியா ?"
என்று பொய்க் கோபத்துடன் திரும்பிய தாமரையிடம்..
"இல்ல இல்ல உனக்கு அழகான
உள்ளம் என்று சொல்ல வந்தேன்..
நீ கோபத்தில் அப்படிப் பார்க்காதே!
உண்மையைச் சொல்கிறேனே.
நான் என் மனதை
உன் கிட்ட
பறிகொடுத்துட்டேன்..
உன்னை மனதார
விரும்புகிறேன் தாமரை .!."
"சார் எனக்கு ரொம்ப பயமா இருக்கிறது!.
தப்பு செய்யறமோ? எனத் தோன்றுகிறது?
காதல் கல்யாணம்னு சொன்னால்..
என் அம்மா வெட்டிப் பொலி போட்றுவாங்க.."
"தாமரை நான் சொல்வது புரியவில்லையா?"
"புரிகிறது ஆனாலும்
என்ன சார் ..
செய்ய முடியும்?
தினம் அடுத்த வேளை
சாப்பாடு கிடைத்தால் அது
கடவுளின் கருணை என
எண்ணும் ஏழைகள்..
பாவப் பட்ட ஜன்மங்கள்..
நீங்கள் பெரிய இடம்
சாத்யமாகுமா ?"
எந்த நேரத்தில் தாமரை அதைச் சொன்னாள்?
அந்த வார்த்தைகள் ஏன் அவள் வாக்கினில் வந்தது?..
ஐயாறப்பன் மட்டுமே அறிவான்!
பல வருடங்கள் ஓடி விட்டன தாமரை இப்போது பினிஷிங் செக்ஷ்ன் சூப்பரவைசர்..
இன்டர்காம் ஒலிக்க
எதிர்முனையில் ஹெச் .ஆர்
மானேஜர்
லோசனி.
"தாமரை ஹெச்.ஆருக்கு
வறீங்களா ? ."
எதற்கு லோசனி மேடம் கூப்பிடுகிறார்கள்?
என்ற யோசனையுடன் சென்ற தாமரையிடம்..
லோசனி வாஞ்சையுடன்,
"வா தாமரை..
மீட் கிஷோர் ..
நியூலி அப்பாயிண்ட்டட்.. டிரெயினி.
இன்றைக்கு ஜாயின் செய்கிறார்.
முதல் ஃபேஸ் டிரயினிங்
பினிஷிங் செக்ஷ்ன்..
அவரை அழைத்துச் செல்லுங்கள்"
பரிச்சயமான முகமாக உள்ளதே..?
அந்த மெல்லிய சிரிப்பும்..பணிவும் அவளின் இருபத்து ஐந்து வருட வாழ்வைப் பின்னோக்கிச் செல்ல வைத்தது..
"ஆம் இவன் ரவிச்சந்திரன் மகனோ?..!
ஏன் தனக்கு மட்டும் விரும்பிய ராஜகுமாரனைக் கைப் பிடிக்க முடியவில்லை. ?
சிகண்டி போல ஏன் என் வாழ்க்கை..?
பெற்ற அம்மா அப்பாவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்தான்..
ஆனால் ரவிச்சந்திரன்..
தாய் தந்தையிடம் தன் காதலைப் பற்றிய விளக்கம் கூடத் தர முடியாத பிள்ளைப் பூச்சியா?
அந்தஸ்து பணம் என்ற காரணம் இருவரையும் பிரித்து விட்டதோ?
தாமரைக்கு
தன்னுடன் வேலை பார்க்கும் சுசீலா மூலம் அவனது திருமணத்தைப் பற்றி அறிந்தாலும்...
என்ன செய்வது அவளால் மனதால் அழ மட்டுமே முடிந்தது.! ஏழையின் சொல் அம்பலம் ஏறுமா?
அவளுக்கு நன்றாக ஞாபகம் உள்ளது.. ரவிச்சந்திரன் எல்லோருக்கும் பத்திரிக்கை கொடுத்து வந்ததும். தன்னைப் பார்க்காத மாதிரி தள்ளிச் சென்றதும்...
குற்ற உணர்வினாலா?
ஏன் அவன் அப்படிச் செய்தான்...?
அதன் பிறகு தாமரைக்கும் கல்யாண
எண்ணம் வரவில்லை...
தம்பி தங்கைகள் குடும்பம்
என்று உழலும் சுமை வேறு...
"கிஷோர் எந்தக் காலேஜில் படிச்சீங்க .?"
"நான் எம்.பி.யே ஸ்டுடண்ட் மேடம்.
ஆஃபிசாராக ஜாயின் செய்துள்ளேன். ஆறு மாசம் டிரெயினிங்.."
"மேடம்னு கூப்பிட வேண்டாமே"
"சரி அம்மான்னு கூப்பிடட்டுமா?"
"கூப்பிடுங்களேன் "
தாமரை மனம் நிறைவாகச் சிரிக்கிறாள்...!
தனக்கும் காலத்தே திருமணம் ஆகி இருந்தால் கிஷோர் போல
ஒரு பையன் இருந்திருப்பானோ?
இறங்கும் இடம் வந்தால் 'பை' சொல்லும் ரயில் பயணம்தானா வாழ்க்கை?
அவளுக்குள்ளேயே ஒரு பலத்த சிந்தனை ஒரு பெரு மூச்சு!
"மேடம் என்ன மௌனமாயிட்டீங்க?
என் டியூட்டி என்ன என்று சொல்லுங்க? "
கிஷோர் பேச ஆரம்பிக்க...
ஆழ்ந்த நினைவுகளிலிருந்து
வெளிப் பட்ட அவளுக்கு
ரவிச்சந்திரனுடன் பழகிய நாட்கள்
ஜீவ ராகமாய் மனதில் விரிகிறது.....
சங்கர்.R
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்