logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

செ.மு.நஸீமா பர்வீன்

சிறுகதை வரிசை எண் # 241


நிய்யத்து 'ஏளா சிங்கம் வருது' நூர்த் தாத்தா சொன்ன மறுநிமிடம் இந்த வார்த்தையைப் பிடித்துப் பின்தொடர்ந்து வீட்டுக்குள் ஓடும் ஷக்கீலா அசையாமல் அப்படியே இருந்தாள். இரண்டாவது கடவாய் பல்லினிடையே சிக்கிய கறித்துண்டின் பிசிரொன்றை நிமிண்டுகிற நாவு போல அடங்காத மனசு எங்கோ ஆழத்தில் கிடக்கிற அத்தஹியாத்து இருப்பு போன்ற ஒரு சொல்லை நிமிண்டிக் கொண்டிருந்தது. 'ஏம்புளா என்னமோ மாதிரி இரிக்கிற. உடம்புக்குச் சுகமில்லையா' 'இல்ல தாத்தா ஒன்னுமில்ல' 'செரி காத்து விசுவிசுன்னு அடிக்குது. வூட்டுக்குள்ளயாவது போயி உக்காரலாமா' 'இல்ல வேணாந் தாத்தா' நூர்த் தாத்தா அவள் முகத்தை சூழ்ந்து நோக்கினாள். தலை நோன்புக்கு முந்திய மாலை ஆகாயத்தில் பிறை தேடியபோது தோன்றிய வெறுமைபோல தெளிவற்று சோர்வாகவும் குழப்பமாகவும் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. இவ்வாறான தோன்றுதல்கள் தூங்காத சைத்தானின் இரவுகள் போலவே தொடர்கிறது. சேலையின் முந்தானைக்குள் முழு உடலையும் பொதிந்தபடி உட்கார்ந்திருந்தவள் சேலை விலகினால் உள்ளே தகித்துக் கொண்டிருக்கிற நெருப்புத் துண்டங்கள் விழுந்து விடும் என்பது போல அசையாதிருந்தாள். அவள் முகத்தில் அப்பிக் கிடந்த யோசனை நூர்த்தாத்தாவை மெளனமாக்கியிருந்தது. அடுத்தடுத்த வீட்டுத் திண்ணைகள் எழுப்பிக் கொண்டிருந்த ஒலிகளின்மீது தன் பார்வையை ஒட்டிக் கொண்டபடி அமர்ந்திருந்தாள். ஒரு மாதமாகப் பெய்த மழையில் வாளாங்குளத்தில் நிறைநீர் விடுகிற மூச்சுக்காற்றிலிருந்த ஈரப்பதத்தில் விறைத்துக் கிடந்த ஊர்ப் பெண்கள் வாசலிலும் திண்ணையிலுமாக அமர்ந்து தன் பேச்சுகளால் சூடேற்றிக் கொண்டிருந்தனர். வெள்ளை பைஜாமாவும் தொப்பியும் மிடுக்கான நடையுமாக தெரியும் அத்ராமாஜியாரின் உருவமே எந்த இண்டு இடுக்கிலயிருந்தாலும் வீட்டு அடுப்படியை நோக்கி அவர் வீட்டுப் பெண்களை விரட்டப் போதுமானது. 'எங்க மாமா வூட்டுல பேசமாட்டாரு தாத்தா; கர்ஜிப்பாரு. அவரு சிங்கமாக்கும்' கண்களை விநோதமாக விரித்தபடி அத்ராமாஜியாரை ஒரு சிங்கமாக்கி முன்பொரு முறை ஷக்கீலா சொன்ன வார்த்தையும் விதமும் பிடித்துப்போக நூர்த் தாத்தா உங்க வீட்டுச் சிங்கம் என்றே பேச்சின் கூடவே குறிக்கப் பழகினாள் நூர்த்தாத்தா சொன்னது ஷக்கீலாவின் காதுகளில் விழுந்ததுமே அவள் எழ முயலாமலில்லை. அவளுக்குள் அலைந்து கொண்டிருந்த வடிவம் தெரியாத சொல் வளைந்து கொக்கியாக அவள் முதுகில் ஏறிக் கொண்டு பின்னிழுக்க அவளால் முன்னகர முடியாமலிருந்தாள். அத்ராமாஜியார் நெருங்கி வருகிற பீதியில் ஷக்கீலாவை உலுக்கியபடி நூர்த் தாத்தா மீண்டும் சொன்னபோது அவள் எழுந்து சாவகாசமாக உள்ளே போனாள். ........................ ஷக்கீலா தன் தகரப் பெட்டியைத் திறந்தாள். சாப்பிட அடம்படிக்கிற குழந்தையின் வாயைத் திறக்குமளவுக்குக் கூட அதைத் திறப்பது கடினமாக இருக்கவில்லை.தாழ்ப்பாளோ பூட்டோ இல்லாத அந்தப் பெட்டி திறக்க இலகுவாக இருந்தது. அவள் தன் சந்தோசத்தின் கதவுகள் கூட இப்படி இலகுவானதாக மாறுகிற காலத்தை தினமும் எதிர்நோக்கினாள். வருடத்திற்கொருமுறை நோன்பில் ஜக்காத்தாகக் கிடைத்த சேலைகளில் பளபளப்பான நாலைந்து சேலைகளை உடுக்காமல் அப்படியே வைத்திருந்தாள். இந்தச் சேலைகளை எந்த உறுத்தலுமில்லாமல் உடுத்துக் களைவதற்காகவாவது சலீமின் விடுதலையை விரும்பினாள். பெட்டியிலிருந்து நைந்து போன ஒருசேலையை எடுத்துக் கொண்டு குளியலறை நோக்கிச் சென்றாள். அவளைத் தொடர்ந்து கொண்டிருக்கிற சொல்லையும் குளியலறைக்குள்ளே இழுத்துச் சென்று தாழிட்டாள். பக்கெட்டிலும் தொட்டியிலும் குளியலறை முழுக்க நீரில் நனைந்து சொற்கள் சொட்டிக் கொண்டிருந்தன. 'அண்ணா, அவர் மௌத்தானப் பின்ன என்னால முடிஞ்ச மட்டிலும் இதுகள வளர்த்தி ஆளாக்கிட்டேன். எனக்கு ஆஸ்துமா முத்திடுச்சுன்னு ஆசுத்திரியில சொல்லிட்டாங்கோ. நான் போயி அட்மிட்டாகுறதுக்கு முன்னால உங்கட்ட புள்ளைகள ஒப்படச்சுட்டுப் போகவக்கும் நான் வந்தது. அல்லாவுக்குப் பின்ன எம் மக்களுக்கு இனி நீதான் கேட்டியா. என் வூட்டயும் மக்களயும் உங்கட்ட ஒப்படச்சிட்டேன்' அண்ணன் யூசுப்பின் கையையும் ஷக்கீலாவின் கையையும் புடிச்சுக் கொடுத்த உம்மாவின் அழுத முகமும் மாமாவின் உள்ளங்கைகளுக்குள் உம்மா பொதிந்து சென்ற சொற்களும் அவளைத் துரத்தின. 'உங்க அண்ணன் எங்க கடையில வேலை செய்ய சம்பளம் வேற கொடுக்கணுமாம். வக்கத்த நாயி வாய்த் திமிறு பேசிட்டு வேலையும் நாங்களும் வேணமுன்னு எங்கேயோ ஓடிப் போயிருச்சு' அண்ணனைக் காணோமென்று கேட்ட ஷக்கீலாவின் கண்களுக்கு நேரே மாமா மகன் வீசிவிட்டுச் சென்ற சொற்கள் கண்களில் நீராகத் திரண்டது. 'எனக்குன்னு யாருமில்ல நெனச்சிருந்தேன். இப்ப நீ இருக்கிற நமக்குன்னு ஒரு வூடு இரிக்குது. இனி நமக்கான வஸ்துவெல்லாம் சேர்க்கலாம். நாலு மக்களாச்சும் நாம பெத்துக்கலாம். நீ என்ன சொல்ற?' அவளோடு சலீம் கடைசியாக இருந்த இரவில் அவள் தலை முடியை நீவிக் கொண்டிருந்த சொற்கள் நினைவில் எழுந்து அவளை அழுந்தியது. கல்யாணம் முடித்தபிறகு ஷக்கீலாவும் சலீமும் தனித்தனி வீடுகளில் கிடந்தபோது மாமாவிடம் 'எங்க உம்மாவோட வூட்டுச்சாவிதாங்கோ மாமா நாங்க அங்கனயாச்சும் போயி அடச்சு மூடிக்கெடப்போமில்ல' என்று கேட்டபோது வீடு அதிரச் சிரித்த மாமாவின் சிரிப்புச் சத்தமும் உன்ன இத்தன காலம் பார்த்து கஞ்சி ஊத்தி கெட்டிக் கொடுத்ததெல்லாம் யாரோட கணக்குல எழுத? என்ற கேள்வியும் அவளின் மனதைச் சுக்குநூறாக உடைக்கப் போதுமானதாக இருந்தது. அவள் நினைத்துப் பார்க்க விரும்பாத எல்லாச் சொற்களும் அவள் முன்னே அணிதிரண்டு நின்றன. அவளுக்குத் தேவையான சொல் முரண்டு பிடித்துக் கொண்டு உள்ளே உழன்று கொண்டிருந்தது. காலையில பஜ்ருக்கு முன்னாடி எழுந்து குளிச்சிடனும். மாசக்குளி குளிக்கிறது போல குளி. நிய்யத்து அதே போலத்தான். ஹைளின்னு வாறதுக்குப் பதிலா ....... சொல்லணும். ஓர்ம வச்சிக்க. என்று கல்யாணம் முடித்த இரவில் ஜுனைதா மாமி சொல்லிக் கொடுத்தாள். அந்த இரவில் அவர்களுக்குள் ஏதும் நடக்காதபோதும் அவள் மாமி சொல்லித் தந்தபடியே நிய்யத்துச் சொல்லிக் குளித்தாள். மறுநாளிலிருந்து அத்ராமாஜியார் வீட்டில் ஷக்கீலாவும் அவரோட சிநேகிதர் குடோனில சலீமும் உறங்கினார்கள். ஏன் ரெண்டு பேருந் தனித்தனியா கெடக்குறீங்கோ? அன்னிக்காச்சும் ரெண்டு பேரும் சேர்ந்தீங்களா? ரெண்டு பேரும் சேர்ந்தாதான் நிய்யத்து சொல்லிக் குளிக்கணும். உம் புருஷன் உன்னத் தொட்டா நீ ஏதும் பயப்படாத. அவருக்கு சம்மதிச்சுக்கோ. அவரு உன்னத் தொடறதுக்குத் தான் கல்யாணம் முடிச்சு வச்சிருக்காங்கோ. பின்ன ஏன் தனித்தனியா கெடக்கிறீங்கோ. மாமா கிட்ட சொல்லி ஒரு வூடு குடியாவுற வேலயப் பாரு என்னா நூர்த்தாத்தா பலவாறு புத்தி சொல்லிக் கொடுத்த பின்புதான் தயங்கித் தயங்கி மாமாவிடம் ஷக்கீலா உம்மாவின் வீடு குறித்து கேட்டாள். ஷக்கீலாவைப் பாதுகாத்ததற்கான கூலியாக அந்த வீட்டை எடுத்துக் கொண்ட அத்ராமாஜியார் அவர் மகளை அந்த வீட்டில் குடி வைத்திருந்தார். 'கெட்டிக் கொடுத்த பின்னயும் இவ ஏன் இங்கயிருக்குறா. வூடு பாத்து வையுங்கோ' என்று நூர்த்தாத்தா தலைமையிலான அக்கம் பக்கத்தினரின் கேள்விகள் அத்ராமாஜியார் வீடு நோக்கிப் போனபோது அவர் ஒரு பழைய வீட்டை வாடகைக்கு முடிப்பதற்காக அவர் வீட்டிலிருந்து வெளியேறினார். ஜுனைதா மாமி சொல்லித் தந்த நிய்யத்து நினைவிலிருந்த நாளொன்றில் தான் புதுக்குடித்தனமும் புருஷனின் அருகாமையும் அவளுக்குக் கிடைத்தது. ஷக்கீலாவைப் போலவே சலீமும் சிறு வயதிலேயே அநாதரவான நிலையில் அவனின் பெரியாப்பா மூலமாக இந்த ஊரில் வேலைக்குச் சேர்த்தப்பட்டிருந்தான். அத்ராமாஜியார் வீட்டில் ஷக்கீலா இருப்பதைப் போல அவர் சிநேகிதக்காரரின் குடோனில் சலீமும் இருந்தான். எனக்கு உம்மா நாம் பொறந்த ஒன்பதாம் பக்கம் மௌத்தாப் போச்சு. அதால எங்க வாப்பா ரெண்டாவது பெண் கெட்டுச்சு. எனக்க வாப்பாயும் சின்னம்மாயும் என்னை ரெண்டாம்த்த வயசுல யத்தீம்கானா மதரஸாவில எங்க வூருல சேர்த்திப் போட்டாங்கோ. பன்னென்டு வயசாகும்போ எனக்க பெரியப்பா ஒரு ஜோலி கோயம்புத்தூருல உண்டுன்னு கூட்டிவந்து சேர்த்தினாரு. மம்மலி சாகிப்போட பாடி கம்பேனியில காஜா எடுத்திட்டிருந்தேன். வாலியக்காரனானதும் அவர்ட குடோனுக்கு மாத்தினதாக்கும். குடோனுக்குப் போயே பைஞ்சு வருஷத்துக்கு மேல ஓடிட்டுது. இப்பலாக்கும் எனக்கொரு கல்யாணஞ் செஞ்சு வக்கிற நெனப்பு வந்திரிக்குது. போகட்டும். அல்ஹம்துலில்லா. நமக்கு விதிச்சது நமக்குக் கிட்டுமில்லே. சலீமைக் கண்கொட்டாமல் பார்த்தபடியிருந்தாள். வெளிர் மஞ்சள் நிறச் சட்டையில் மாநிறமான அவன் அற்புதமாக இருந்தான். அவள் தன் கண்களைக் கொஞ்சம் சிமிட்டிக் கொள்ளட்டும் என்பது போல அவன் தன் சட்டையைக் கழற்றி வைத்தான். அன்பொழுக அவன் தோளில் சாய்ந்திருந்தாள். சலீமின் பேச்சுகளை மட்டுமே காதுகளுக்குள் ஊற்றிக் கொள்ள ஆவலாய்த் திறந்திருந்த அவளது காதுகளில் தடதட என்று ஒழுங்கற்ற தன்மையோடான ஒலிகள் துளைத்தன. தொலைவில் கேட்டுக் கொண்டிருந்த சத்தம் நெருங்கி நெருங்கி அவர்கள் வீட்டுக் கதவுகளில் வேகமெடுத்து மோதின. பூட்சுகளின் சத்தம் கதவிலும் கதவுகளின் சத்தம் அவள் இதயத்திலும் பட்டு எதிரொலித்தது. கதவைத் திறந்த சலீமிடம் சில கேள்விகள். இந்த வீட்டின் சுவர்களுக்குக் கூட அவன் பெயர் இன்னும் துலக்கமாகத் தெரிந்திந்திருக்காத நிலையில் அவர்களின் கையில் படபடத்துக் கொண்டிருக்கிறதாளில் அவன் பெயர் இருந்ததாக உறுதி செய்யப்பட்டது. விசாரணைக்கு என்ற ஒற்றை சொல் ஷக்கீலாவிடம் சொல்லப்பட்டு சலீமை விழுங்கிக் கொண்ட ஜீப் விரைந்தது. ஷக்கீலா கதறித் துடித்து அழுவதற்கான எந்தப் பிரயாைசையும் பட வேண்டியிருக்கவில்லை. அவள் கண்களில் ஒரு துளி நீர் வெளிவரவுமில்லை. இங்கு என்ன நடக்கிறதென்று விளங்காதவளாக திக்பிரம்மை பிடித்தவளாக உட்கார்ந்திருந்தாள். அவளின் வலது கையும் இடது கையும் தமக்குள் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல வேறுவறு திசையில் தனித்து கிடந்தன. இரவின் நிசப்தத்தைக் காவல்துறையின் வருகை வெறிநாய் போலக் கடித்துக் குதறியிருந்தது. அழுகையும் ஓலமுமான குரல்களின் நடுவே ஷக்கீலா இருந்தாள். அடேய் சின்னஞ் சிறுசுகள் இப்பதான்டா கல்யாணமாகி வாழத் தொடங்கினாங்க. அந்தாள எங்கடா இழுத்துட்டுப் போறீங்க ஷக்கீலாவுக்காக பக்கத்து வீட்டிலிருந்து வயதான ஒரு பெண் குரல் எழுந்தது. மறுநாள் புலர்ந்தபோது காலச் சக்கரம் பின்னோக்கிச் சுழன்றதுபோல அவள் தன் மாமா வீட்டு அடுப்படியிலிருந்தாள். 'இத்தன நேரம் உள்ள என்னத்தச் செய்யுற' என்ற குரல் பதின்மூன்று வருடத்திற்கு முந்தைய நினைவுகளிலிருந்து உருட்டிக்கொண்டு வந்து அவளைக் குளியலறையில் இருத்தியது. ஜலதாரையில் தேங்கி நின்றிருந்த சோப்பு நுரை தன் உடலின் வனப்பையெல்லாம் உறிஞ்சிக் குடித்து மினுங்குவதாக நினைத்துக் கொண்டவள் அருகிலிருந்த சிமெண்ட் தொட்டியிலிருந்து நீரை அள்ளி அள்ளி ஊற்றினாள். அவளுடலின் மினுமினுப்பை விடவும் மெதுவாகவே நுரைகள் கலைந்தன. .......................... தன் வாழ்வில் சலீமின் அருகில் இருந்த ஒருநாள் குறுக்கிட்டது உண்மையோ இல்லையோ என்ற குழப்பத்தோடு தன்னை ஒரு மலைப்பாம்புபோலச் சுற்றி இறுக்கிக் கொண்டிருக்கிற அவஸ்தைகளுக்குள் ஒடுங்கிக் கிடந்தவள் ஏதோ நினைவாக எழுந்து நடந்தாள். சுவரில் வரிசையைக் குலைத்த பின்னும் அதே பாதையில் திரும்ப ஊர்கிற எறும்பு போல அத்ராமாஜியார் வீட்டிற்கு இழுத்து வரப்பட்ட ஷக்கீலா, சலீமைத் தொலைத்த இடத்திற்கே வந்து நின்றாள். தன் கண்களில் ஏதும் குறையிருப்பது போல, ஏதோ மாயாஜாலமாக அவன் அங்கு தோன்றிவிட மாட்டானா என்பதுபோல கண்களை மூடி மூடித் திறந்து பார்த்தாள். அவன் எங்கும் காணாத போது திரும்பி நடந்தவள் தன் கண்களைப் பின்னந்தலையிலே ஒட்டிக் கொண்டதுபோல மாமா வீடு போய்ச் சேரும்வரை அவள் புது வீட்டின் தெருவிலேயே பார்வையை நிலைகுத்தியிருந்தாள். திரும்பி வந்தவளுக்காக வாசல்படியில் அத்ராமாஜியார் குடும்பம் கொட்டி வைத்திருந்த வசவுகளைக் கடந்து உள்ளே போவது அவளின் இத்தனைக் காலத்துயரங்களையும் கடந்து வந்ததை விடவும் கொடுமையானதாகயிருந்தது. .................................... புருஷனப் போலீசு புடிச்சுட்டுப் போனா அவ்வளவுதானா? எந்தத் தப்பும் பண்ணாம ஒருத்தனப்புடிச்சுட்டுப் போயி அவங்க தான் வெளியவுடாம வச்சிருக்காங்கன்னா உங்க மாமாவுக்கும் மத்தவங்களுக்கும் என்ன கேடு வந்திச்சு. பேச்சு மூச்சில்லாம இருக்காங்களே நீயாவது ஓரெட்டு போயிப் பார்த்துட்டு வரலாமில்ல விரல்களிடையே அடுக்கிய முல்லைமலர்களை நூல்களில் சுற்றியபடி நூர்த் தாத்தா கேட்டாள். இல்ல தாத்தா. அவரப் புடிச்சுட்டுப் போறப்ப நாங்க இருந்த வூட்டுக்குப் போயி அன்னக்கி நின்னதுக்கே எங்க மாமாவும் அவர்மக்களும் பரக்கிழி கிழிச்சாங்களே, இவுங்க ஜெயிலு கோர்ட்டுனு போவ வுடுவாங்களா. பொட்டப்புள்ள வூடு தாண்டுனா நெருப்புல விழுந்தமாதிரியில்ல குதிக்கிறாங்க. எண்ணெய்ச் சட்டியிலயிருந்து தப்பிக்க தீச்சட்டியில வுழுந்தது போலாச்சு எங்கதை. முன்ன விட மோசமா நடந்துக்கிறாங்க. தாத்தா ஜெயிலு மாமா வீட்டவிட கஸ்டமாயிருக்குமா என்ன விம்மலோடு வந்த ஷக்கீலாவின் கேள்வி நூர்த்தாத்தா மனதைப் பிசைய எந்தத் தப்பும் செய்யாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி தண்டனையத்தான் அனுபவிக்கிறீங்கோ. பொம்பளக்குக் கஸ்டம் வந்தா பொம்பளயோட போவும். ஆம்பளக்குக் கஸ்டமுன்னா பொம்பளக்கும் சேர்த்திதான் வரும். உனக்கு வேற கல்யாணம் செஞ்சுவைக்குற யோசனைகூட அவுங்களுக்கு வரலியா அதப்பத்தி யோசிக்க அங்க யாருக்கும் நேரமில்ல. அதுவரைக்கும் நல்லதும்தான். நீங்க நம்புனா நம்புங்கோ தாத்தா. எனக்கு நீயிருக்குறன்னு அந்த ராத்திரி போலீசு வாறதுக்கு முன்ன சொன்னாரு. இனி விடுதலையாகி வாறப்பவும் அந்த நெனப்புல வருவாரில்லியா. என்னைப் போலத்தான் கஷ்டப்பட்ட மனுஷன். நான் சதிக்கிறது நியாயமில்ல தாத்தா. படச்சவன் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு தானிருக்கிறான். உனக்கு நல்ல காலமொன்னு வரும். செரி, திரும்பு கொஞ்சம் பூ வச்சிக்க. நூர்த் தாத்தா தன் ஆறுதலையும் சேர்த்துத் தொடுத்து ஷக்கீலாவின் கூந்தலில் நுழைத்தாள். முல்லைப் பூவின் மணம் வியாபித்த இடங்களிலெல்லாம் முளைத்துவிட்ட கண்கள் ஷக்கீலாவின் தலைமீது நிலைகுத்தியபோது பார்வைகளின் பாரம் தாங்காமல் தன் மெலிந்த தேகம் ஒடிந்து விழுமோ என்று விம்மினாள். புருஷன் ஜெயிலில் படும் துன்பங்களின் வலிகளை அளவீடு செய்து பார்க்கவோ அவனுக்காக மனமுருகி அழுது தீர்க்கவோ நோக்கமில்லாதவளாகத் தன்னைக் குறித்து வருந்தினாள். தனக்காக அழுவதற்கே அவளுக்கு அவகாசமில்லாததாகத் தோன்றியது. மாமா வீட்டு ஆட்களுக்கோ போலீசுக்கோ சர்க்காருக்கோ ஏன் புரிவதில்லை அவள் சுதந்திரமாக பூ வைக்கவும் புடவை மாற்றவும் நடமாடவுமாவது சலீம் விடுதலையாக வேண்டுமென்பது என்றே கவலை கொண்டாள். வூடு தனியாப் போறேன்னு ஆடிக்கிட்டுப் போனாளே.. வகதரவா வாழத் தெரிஞ்சுதா. புருஷனயே தொலைச்சிட்டில்ல வந்து நிக்கிறா. இப்ப யார மயக்குறதுக்கு பூ வச்சு சிங்காரிச்சிட்டு நடக்குறான்னு தெரியலயே முந்தைய நாள்களில் மீந்து விடுகிற சோற்றில் அரைக்கரண்டி சுடு சோற்றோடு சுடு சொற்களையும் ஏளனப் பார்வைகளையும் சேர்த்துத்தான் பிசைய வேண்டியிருந்தது. புளுத்துப் பிசுபிசுக்கிற சோற்றிடையே பயறு போல் தடையும் பருக்கைகளைப் போல அவள் தனக்கான சொற்களைத் தேடிக் கொண்டிருந்த ஒரு பொழுதில் ஜுனைதா மாமி அவளின் உறவுக்காரரிடம் அவளுக்காகப் பேசினாள். வீட்டிற்கு வந்திருந்த அந்தத் தடித்த மனிதரை அங்கு எல்லாரும் வக்கீல் மாமா என்றே அழைத்தனர். எங்கள நம்பியிருக்கு எத்திமான கொமராக்கும். கெட்டியவனப் புடிச்சிட்டுப் போனது தவிர ஒரு தகவலுமில்ல. எப்படியானாலும் எங்களுக்கு இதோரு கடனாக்கும். என்ன ஏதுன்னு பார்த்தா அதுக்கான கூலி உங்களுக்கு அவனிடத்துல கெடைக்கும். மனசு வைங்கோ.. இந்த வீட்டில் மனதில் கொஞ்சமாவது ஈரமுள்ள ஜீவன் உண்டு என்பதே மனத்திற்கு இதமாக இருந்தது. வக்கீல் மாமாவின் வருகை நிகழ்கிறதோறும் அவரிடமிருந்து அவளுக்கான வார்த்தைகளை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். ஒவ்வொரு முறையும் விடாப்பிடியாக மெளனிக்கிற அவரின் வாய்க்குள் அடைபட்டுக்கிடக்கிற வார்த்தைகளை தன் விரலைப் போட்டாவது பிடுங்கி எடுத்துவிட வேண்டும் போல அவளின் கைகள் பரபரத்தது. ................................ இங்க செய்யுற வேலைய வெளியில நாலூட்டுல செஞ்சா எங்கஞ்சிய நாய் குடிக்கண்டா.. வேலைகளில் உடல் நோக முணுமுணுத்துக் கொண்டாள். 'உன்னக் கெட்டியவன் அடுத்த வாரம் வாறானாம். அண்ணன் சொல்லிவுட்டுருக்காரு' ஷக்கீலாவின் புனல் போலிருந்த காதுவழியே சென்று இதயத்திற்குள் இறங்கியது ஜுனைதா மாமியின் குரல். நோகும் கால்களை அந்தக் குரல் கொண்டு நீவிக்கொண்டாள். அவள் உரித்துக் கொண்டிருந்த வெங்காயத்தின் உள்ளீடு போலக் கடந்த நாட்கள் நினைவுகளாக உரியத் தொடங்க ஜுனைதா மாமி சொல்லித் தந்து இப்போது நினைவிலில்லாத குளிப்பின் நிய்யத்து வளையத்துக்குள் நின்று நினைவலை சுழன்றது. எங்கே நின்றாலும் என்ன செய்தாலும் மறந்துவிட்ட சொல்லைத் தேடியலைந்தாள். நெருங்கிக் கொண்டிருக்கும் சலீமின் அருகாமையின் ஆவலில் அவள் ஓடிக்கொண்டிருக்க நினைவில் வர மறுத்த அந்தச் சொல் வேண்டாத விருந்தாளியை வரவேற்பது போல முகந் திருப்பிக் கொண்டிருந்தது. எண்ணிக்கையிலடங்காத முறை நூர்த் தாத்தா முன்னிலும் ஜுனைதா மாமி முன்னிலும் மாமாவின் மருமகள்கள் முன்னிலும் வெறுமனே நின்று திரும்பினாள். அந்த நிய்யத்து என்ன என்று அவள் கேட்க நினைத்த கேள்வி அவளின் புதிய சேலைகள் வைக்கப்பட்ட பெட்டிக்குள் கசங்கலில்லாமல் மடித்து வைக்கப்பட்டு பத்திரமாகக் கிடந்தது. .......................... அந்தா சலீமோட காரியம் ஒன்னும் இப்போ சரியாவாது போலயிருக்கு. கிட்னியில வியாதின்னு பெரியாஸ்பத்திரியில வச்சிருக்காங்களாம். பார்ப்பம் பின்ன கேட்டியா என்று வாரங் கடந்தபின், வக்கீல் மாமா வாய் திறந்தபோது சிதறின வார்த்தைகள். நினைவுகளின் ஆழத்தில் கிடந்த சொல் குறித்த தேடல் ஷக்கீலாவுக்குள் தேமல்போலப் படர்ந்து கொண்டிருக்க அவர் அள்ளி வீசிய சொற்கள் பொறுக்கப்படாமல் அங்கு இரைந்தே கிடந்தன.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.