செ.வைஷ்ணவி
சிறுகதை வரிசை எண்
# 239
நொய்யல்
முழுதும் புலராத அமெரிக்காவின் காலை பொழுதில் தன் துயில் கலைத்து எழ ஆரம்பித்தது சூரியன். கதிரவனின் இளஞ்சூட்டு வெம்மையில் சிறிதும் ஆரவாரமின்றி தன் உடைகளை பெட்டியில் அடுக்கியவாறு கிளம்பிக் கொண்டிருந்த கலையின் அலைபேசி சினுங்கியது. கலை, கலை வரதராஜன், உலகின் புகழ்பெற்ற ஓவியர்களுள் ஒருவன். இருபத்தைந்து வயதில் இத்தனை புகழோடு இருப்பதற்கு காரணம் அவன் ஓவியங்களில் நிறைந்து வழியும் தனித்துவமான வண்ணங்கள். உலகின் அனைத்து பிரத்தியேகமான வண்ணங்களையும் தேடி அலைந்து தானே செயற்கையாக உருவாக்கி அவற்றை தன் ஓவியங்களில் தெளிப்பதே அவன் வாழ்நாள் இலட்சியம்.
அலைபேசியின் சினுங்கலை அணைத்து பேசியவன், "ஹாய் அருண், நா கிளம்பிட்டு இருக்கேன் டா. ஏர்போர்ட் ரீச் ஆனதும் மெசெஜ் பண்றேன்" என்றான். "சரி டா இங்க எல்லாம் ரெடியா இருக்கு. நீ எந்த டென்ஷனும் இல்லாம கிளம்பு. நா வந்து உன்ன ஏர்போர்ட்ல ரிசீவ் பண்ணிக்கிறேன்" என்றான் அருண். "சரி டா" என்று அழைப்பை துண்டித்து அவன் நிமிர்ந்த போது வினய் அங்கு வந்தான்.
"என்னடா இப்போ எந்த நாட்டுக்கு கிளம்பிட்டு இருக்க? என்ற வினயின் கேள்விக்கு, "நம்ம ஊரு தான்! இந்தியால ஒரு ஆர்ட் காம்படிஷன் நடக்குது டா. அதுக்கு தான் கிளம்பிட்டு இருக்கேன்" என்று பதிலுரைத்தான். "அப்போ இந்த வாட்டியும் உனக்கு தான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ்னு சொல்லு" என்றவனிடம், "கெடச்சா சந்தோஷம் தான்" என்று தன்மையாக கூறினான். "சரி டா, அருண் கிட்ட பேசிட்டியா?" என்று வினய் கேட்க, "ம்ம் பேசிட்டேன் டா அவன் என்ன ஏர்போர்ட்ல பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொன்னான்" என்றான். "சரி டா ஹாவ் எ சேஃப் ஜர்னி" என்று சொல்லி விடைபெற்றான் வினய்.
கலை ஏர்போர்ட்டை அடைந்ததும் அருணுக்கு குறுஞ்செய்தியில் தகவல் சொன்னான். கலை அமர்ந்திருந்த விமானம் மேக கூட்டங்களுக்கு நடுவே கலையையும் அவன் வரைந்த ஓவியங்களின் புகழையும் சுமந்து மிதந்துக் கொண்டிருந்தது. வெண்ணிற ஆடை உடுத்திய மேகங்கள் கலையின் கண்களுக்கு மட்டும் பல வண்ணங்களாக தெரிந்தன. அவன் ஓவியங்களை போலவே அவன் கண்களும் தனித்துவம் வாய்ந்தது போலும். பாலின் வெண்மையும் தயிரின் வெண்மையும் வெள்ளையாக இருப்பினும் அவை கண்களுக்கு ஒன்றாக தெரிவதில்லை. தயிரின், துளி பழுப்பு நிறம் கலந்த வெண்மையை நம் கண்கள் வெகு எளிதாக கண்டுபிடித்து விடுகின்றன. அது போல மேகக் கூட்டங்களில் இருக்கும் வெண்மை வேறுபாடுகளை கலை ஆராய்ந்துக் கொண்டிருந்தான். பலருக்கு சலிப்பாக இருக்கும் விமான பயணம் அவனுக்கு மட்டும் ஏனோ எப்போதும் சுவாரஸ்யமாக அமைகிறது.
பல மணி நேர பயணத்திற்குப் பிறகு அந்த விமானம் இந்திய எல்லையில் உலவும் மேகங்களை கிழித்துக் கொண்டு கடலில் உருவாகும் வண்ண குமிழிகளை ரசித்தபடி சென்னையில் தரையிறங்கியது. தாய்நாடு வந்த சந்தோஷத்தில், கலை விமானத்தில் இருந்து இறங்கி அருணை தேடி வந்தான். நண்பனை பார்த்த மகிழ்ச்சி அருண் முகத்திலும் தெரிந்தது. சிறு உபசரிப்புக்கு பின் இருவரும் காரில் ஏறி அருணின் வீட்டிற்கு சென்றனர். அவர்களை வரவேற்பதற்காக அருணின் குடும்பம் காத்திருந்தது. காரை விட்டு இறங்கியதும் அருணின் அக்கா மகள் ஓடி வந்து கலையின் கால்களை ஆசையாக கட்டிக் கொண்டாள். அவளை தூக்கி கொஞ்சியவாறு கலை உள்ளே சென்றான்.
சிறிது நேர ஓய்வுக்குப் பின் அருணின் குடும்பத்தோடு கலை உரையாட தொடங்கினான். அப்போது அருணின் அக்கா, "எப்போ தம்பி உனக்கு ஆர்ட் மேல கிரேஸ் வந்துச்சு" என்று கேட்க, "சரியா தெரியல அக்கா, ஆனா சின்ன வயசுல இருந்தே கலர்ஸ் மேலயும் பைண்டிங்க்ஸ் மேலயும் எனக்கு ஒரு அடிக்ஷன் இருந்துச்சு" என்றான். பர்பிள் நிற உடை உடுத்தி தன் மடியில் அமர்ந்திருந்த அருணின் அக்கா மகளிடம், "நீ என்ன கலர் டிரஸ் போட்ருக்க?" என்று கலை கேட்க, "பர்பிள்" என்று சத்தமாக சொன்னாள் அந்த குழந்தை. "பர்பிள் கலர் பத்தி ஒரு குட்டி ஃபாக்ட் சொல்லட்டா?" என்று கேட்டான். "ம்ம்" என்றபடி தலையசைத்த குழந்தையிடம், "இந்த உலகத்துல இருக்குற எந்த நாட்டோட கொடிலையும் பர்பிள் இருக்காது அது ஏன் தெரியுமா" என்று வினவ, "ஏன் தம்பி?" என்று பதில் கேள்வி கேட்டார் அருணின் அப்பா. "ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் ஒரு வகையான கடல் நத்தைல மட்டும் தான் பர்பிள் கலர் கிடச்சுச்சு. அதனால பர்பிள் கலர் ரொம்ப காஸ்லியா இருந்துச்சு. அதனால தான் எந்த நாட்டோட கொடிலையும் பர்பிள் கலர் பயன்படுத்தல" என்று சொல்லி முடித்ததும் குழந்தை வியந்து கைதட்டியது. இதை கேட்டதும் அருணின் குடும்பமும் ஆச்சரியப்பட்டது.
இரண்டு நாட்கள் கழித்து, சென்னையில் அந்த ஆர்ட் காம்படிஷன் நடந்தது. அதில் கலையின் பிரத்யேக வண்ணம் பூசப்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அங்கு கலையின் கவனத்தை ஈர்க்கும் மற்றொரு ஓவியமும் இருந்தது. அந்த ஓவியம் முழுக்க வண்ணங்களால் நிரப்பப்பட்டிருந்தன. அந்த ஓவியத்தில் உள்ள நீர்நிலைகள் மேகங்கள் என அனைத்தும் வானவில்லின் வண்ணங்களை கடன் வாங்கி வார்த்தெடுத்ததைப் போல இருந்தது. ஆனால் அதில் இருந்த மனிதர்கள் மட்டும் கருப்பு வெள்ளையாக இருந்தனர். இதை கவனித்த கலைக்கு அந்த ஓவியம் என்ன சொல்ல வருகிறது என்பது தெளிவாக புலப்படவில்லை. ஆனால் அந்த ஓவியம் அவனிடம் ஏதோ ஒன்றை சொல்ல வருவது போன்ற உணர்வு அவனுக்குள் இருந்தது. அந்த ஓவியத்தை பல மணி நேரம் உன்னிப்பாக கவனித்தான். ஆனாலும் அதன் அர்த்தம் விளங்கவில்லை. போட்டி முடிந்ததும் அந்த ஓவியரிடமே இதற்கான காரணத்தை கேட்டுவிட வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.
போட்டி முடிந்து முடிவுகள் அறிவிக்கும் தருணம் வரை அந்த ஓவியம் வரைந்தவரை அவனால் பார்க்க முடியவில்லை. "யாரது? இந்த ஓவியம் நம்மிடம் என்ன சொல்ல வருகிறது?" என்று பல கேள்விகளை அவன் மனதுக்குள் கேட்டுக் கொண்டிருந்தான். போட்டி முடிவுகளை அறிவிக்க தேர்வுக் குழுவினர் மேடைக்கு வந்தனர். சில நிமிடங்களில் பரிசுகள் அறிவிக்கப்பட்டது. "முதல் பரிசு, இலக்கியா, திருப்பூர் மாவட்டம்" என்றதும் அரங்கமே திரும்பி பார்த்தது. அங்கு ஊதா நிறத்தில் வெள்ளை பூக்கள் போட்ட ஒரு காட்டன் புடவையை நேர்த்தியாக உடுத்திய ஒரு இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண் மேடைக்கு வந்தாள். கலை வெகு நேரமாக பார்க்க வேண்டும் என்று காத்திருந்த அந்த ஓவியர் அவள் தான். அரங்கம் அதிரும் கைத்தட்டல்களுக்கு இடையே இலக்கியாவும் அவள் வரைந்த ஓவியமும் மிளிர்ந்தது. அந்த போட்டியில் கலைக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. ஆனால் அதில் அவனுக்கு துளியும் வருத்தமில்லை.
இலக்கியாவின் ஓவியம் முதல் பரிசு பெறுவதற்கு தகுதியானது என்று அவன் ஆணித்தனமாக நம்பினான். பரிசுகள் வழங்கப்பட்ட பிறகு, கலை இலக்கியாவை சந்தித்தான். "ஹாய் ஐ ஆம்…" என்று அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு முன்பாகவே, "கலை, கலை வரதராஜன் தி வேர்ல்ட்'ஸ் ஃபேமஸ் ஆர்டிஸ்ட்" என்று கூறி, ஐ ஆம் இலக்கியா, ஃபேஷன் டிசைனர்" என்று கூறினாள். "ஓஓஓ கிரேட் ஃபேஷன் ப்ரொஃபஷன் ஆர்ட் பேஷனா?" என்று அவன் கேட்க, "ரெண்டுமே சர்வீஸ் தான்" என்றாள். அவன் புரியாதவாறு விழித்தான். அவள் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தாள். பிறகு அவனே தொடங்கினான். "உங்க ஆர்ட் என்கிட்ட ஏதோ சொல்ல வருது ஆனா அத என்னால முழுமையா உள்வாங்கிக்க முடியல அது என்னனு கொஞ்சம் விளக்க முடியுமா? ஏன் உங்க ஆர்ட்ல இருக்க எல்லா மனிதர்களையும் பிளாக் அன்ட் வொயிட்ல வரஞ்சிருக்கீங்க?" என்று அவன் தன் சந்தேகத்தை கேட்டான். "என் கண்கள் எத பாத்துச்சோ அத தான் நா வரஞ்சேன். ஊரே வண்ண மயமா இருக்குறப்போ மனிதர்கள் மட்டும் ஒளியில்லாம இருந்தா எப்படி இருக்கும். அப்படி ஒரு சூழ்நிலைல தான் நா வளர்ந்தேன். என் அனுபவம் தான் இந்த ஓவியம்" என்றாள். "கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?" என்று அவன் கேட்க, "இது சொன்னா புரியாது நேர்ல பார்த்து தான் புரியும்" என்றாள்.
"சரி, உங்க ஊருக்கு நானும் வரலாமா" என்று அவன் தயக்கத்தோடு கேட்க, சரி என்று அனுமதித்தாள் இலக்கியா. இருவரும் திருப்பூர் மாவட்டத்தை நோக்கி பயணித்தனர். வழியெங்கும் நிறைந்திருந்த நூல் தொழிற்சாலைகளையும் சாய தொழிற்சாலைகளையும் அவன் பார்த்துக் கொண்டே வந்தான். "திருப்பூர்ல இவ்வளோ இன்டஸ்ட்ரீஸ் இருக்கா? பரவால இந்தியா இஸ் க்ரோயிங்" என்றான். அவன் சொன்னதை கண்டுக்காதது போல் இருந்தாள் இலக்கியா.
இலக்கியாவின் வீட்டை அடைந்ததும், ஊர் மக்கள் அவளுக்காக காத்திருந்தனர். அவள் பரிசாக பெற்று வந்த அந்த பத்து லட்சம் ரூபாயை ஊர் தலைவரிடம் ஒப்படைத்தாள். அதை வாங்கிய அவர், அவளை வாழ்த்தி, "வர்ணாவோட மேம்பாட்டுக்கு தான் இந்த பத்து லட்சம்" என்றார். ஊரே கைத்தட்டியது. அங்கு நடப்பவை ஏதும் புரியாமல் நின்ற கலை இலக்கியாவிடம், "வர்ணானா என்ன?" என்று வினவினான். "போக போக நீங்களே தெரிஞ்சுப்பிங்க" என்றாள். கலையை தன் குடும்பத்தினருக்கும் ஊர் மக்களுக்கும் இலக்கியா அறிமுகப்படுத்தி வைத்தாள். அவனை அனைவரும் பாசமாக வரவேற்று உபசரித்தனர்.
சிறிது நேரம் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தான். அப்போது "இந்த ஊர பத்தி ஏதாச்சும் சொல்லுங்க" என்றான். இலக்கியாவின் அப்பா தொடர்ந்தார். அவர் ஒரு ஆசிரியர். "எங்க ஊர் திருப்பூர் மாவட்டத்தில இருக்கு. இங்க ஓடுற நொய்யல் ஆறு பத்தி நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களானு தெரியாது. மேற்கு தொடர்ச்சி மலைல இருக்குற வெள்ளியங்கிரில தான் இந்த ஆறு தொடங்குது. ஒரு காலத்துல ரொம்ப தூய்மையா ஓடிட்டு இருந்த இந்த ஆறு இப்போ வானவில்ல கரைச்சு ஊத்துன மாதிரி கலர் கலரா ஓடுது. இதுக்கு காரணம் இங்க இருக்க தொழிற்சாலைகள் தான். அதுல இருந்து வர கழிவுகள் அப்படியே தண்ணீல கலக்குற நால தான் இங்க இருக்க தண்ணீர் பச்சை, சிவப்பு, ஊதானு கலர் கலரா இருக்கு. இது குடிக்கிறதுக்கு உகந்தது இல்ல. இத விவசாயத்துக்கும் பயன்படுத்த முடியல. ஆத்துல மீனெல்லாம் செத்து மிதக்கும். மனுஷங்க நமக்கே இப்படினா அது என்னயா பண்ணும்? இதனால நெறைய பேருக்கு புதுசு புதுசா நோய் வருது. வாய்ல நுழையாத பேரெல்லாம் வச்சுட்டு ஏதேதோ டாக்டர்ங்க சொல்றாங்க. பஞ்சத்துலயும் நோய்லயும் சிக்கி இருக்கிற இந்த ஊர விட்டே நெறைய குடும்பம் பொழப்ப தேடி வெளில போயிருச்சு. அப்படி போனவங்க யாரும் இந்த ஊருக்கு திரும்பி வரல" என்று முடித்தார்.
"மாசம் மாசம் அரசாங்க அதிகாரிங்க வந்து பார்த்துட்டு போவாங்க. ஏதோ இப்போ தான் இந்த சாயப்பட்டறைலாம் கொஞ்சம் திருந்திருக்கு. அதுக்கு காரணம் இந்த ஊர்ல இருக்குற இளவட்டங்க தான். அதுல இலக்கியாவும் ஒருத்தி. அவங்கெல்லாம் சேர்ந்து ஆரம்பிச்சது தான் இந்த வர்ணா. இதுல தயாரிக்கிற துணில இயற்கை முறையில உருவாக்கப்பட்ட, எந்த ரசாயனமும் கலக்காத சாயங்கள பயன்படுத்துறாங்க. இவங்க மட்டும் இல்லனா மழை கூட கலரா தான் தம்பி பெய்யும்" என்றார் ஊர்த் தலைவர்.
இலக்கியாவின் ஓவியத்திற்கான அர்த்தம் இப்போது அவனுக்கு நன்கு விளங்கியிருந்தது. அவள் வரைந்தது ஓவியம் அல்ல ஒட்டு மொத்த மக்களின் வலி என்பதை அவன் புரிந்துக் கொண்டான். வர்ணா கூடத்திற்குள் நின்றிருந்த இலக்கியாவை தேடி அவன் சென்றான். அவன் வருவதை பார்த்தவள், "இந்த உலகத்துல இருக்குற பிரத்தியேகமான வண்ணங்கள தேடி அது நீங்களே ஆர்டிஃபிஷியலா உருவாக்கி உங்க ஓவியத்துல பயன்படுத்திருங்க கரக்டா? என்றாள். அவனும் சரி என்பது போல் தலையசைக்க, அவள் தொடர்ந்தாள். "தனிமனிதனின் ஆசைகளும் விருப்பங்களும் சகமனிதனை பாதிக்கக்கூடாது. ஆரம்பத்தில இங்க சாயப்பட்டறை வந்தப்போ எல்லாம் இயற்கையா தான் சாயங்கள உருவாக்கிட்டு இருந்தாங்க. நாளடைவில யார் பெரியவன்ற போட்டி வந்துச்சு. அங்க தான் எல்லாம் ஆரம்பிச்சுச்சு. அதிக லாபத்துக்கு துணிய விக்க அவங்க பயன்படுத்துன யுக்தி தான் இந்த இரசாயனம் கலந்த கலர்ஸ்" என்று அவள் முடித்தாள். என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாக அங்கிருந்து நகர்ந்தான் கலை.
அன்று மாலை இலக்கியாவின் வீட்டிலிருந்து சென்னைக்கு கிளம்ப கலை தயாராகிக் கொண்டிருந்தான். அப்போது அவனிடம் இலக்கியாவின் தந்தை "இன்னும் ஒரு நாள் இருந்துட்டு போ பா" என்று கேட்க, அவனும் ஆமோதித்தான். அன்றிரவு ஊரைப் பற்றியும் அங்கு வாழ்ந்த மக்களை பற்றியும் ஊர் தலைவர் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது ஊர்த் தலைவரின் மனைவி பழைய நொய்யல் ஆற்றை காண்பிப்பதற்காக ஒரு பழைய ஆல்பம் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தாள். அதில் உள்ள ஒரு ஃபோட்டோவை காண்பித்து, "இவ என் சிநேகிதி. நாங்க ரெண்டு பேரும் ஒன்னா தான் வளர்ந்தோம். அப்புறம் இவ கல்யாணம் கட்டிக்கிட்டு அமெரிக்கா போயிட்டா. போன இடத்துல அவளுக்கு தீராத வயிறு வலி இருந்துருக்கு. என்னென்னவோ வைத்தியம் பார்த்தும் ஒன்னும் சரி ஆகல. சின்ன வயசுலயே போய் சேர்ந்துட்டா. எல்லாம் இந்த தண்ணியால வந்தது. அவளுக்கு அப்பவே இரண்டு வயசுல ஒரு பையன் இருந்தான். இப்போ அவனுக்கு உன் வயசு இருக்கும்" என்று சொல்லி முடித்ததும். அவன் போட்டோவை வாங்கி பார்த்தான். அவன் கண்களில் நீர்க் கோர்த்தது. அவன் பார்த்தது அவன் அம்மா சிவகாமியின் முகம். அவன் அம்மா குடற் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனார். அவனுக்கு துக்கம் தொண்டையடைத்தது. அவன் அம்மாவை கொன்றது அந்த சாயக் கழிவுகள் கலந்த நீர் என்பது அவன் அறிவுக்கு அப்போது எட்டி இருந்தது. அவனின் பரிதாப நிலையை பார்த்தவர்கள் காரணம் புரியாமல் விழித்தனர். "அம்மா" என்று அவன் வாய் திறந்து சொன்ன போது அங்கிருந்தவர்களின் வாயில் வார்த்தை தழுதழுத்தது. அவனை ஆசுவாசப்படுத்திவிட்டு, "அப்பா எங்க பா இருக்காரு" என்று ஊர் தலைவர் கேட்க, "அவருக்கு கிட்னில ப்ராப்ளம். டையாலிஸிஸ் பண்ணிட்டு இருந்தோம் ஆனா அவர காப்பாத்த முடியல. போன வருஷம் இறந்துட்டாரு" என்று கூற அவனுக்கு ஆறுதல் கூற முடியாமல் அங்கிருந்தவர்கள் தவித்தனர். "கவலப்படாத பா நீயும் எனக்கு புள்ள மாதிரி தான். உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம் நீ எப்போ வேணாலும் இங்க வரலாம்" என்று அவனை அரவணைத்தார் ஊர்த் தலைவர். அன்று இரவெல்லாம் அவனுக்கு தூக்கம் வரவில்லை. அவனுக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவருக்கும் தான். அடுத்த நாள் காலை, அவன் ஒரு முடிவெடுத்தான். ஊர்த் தலைவரிடமும் இலக்கியாவின் தந்தையிடமும், "நானும் வர்ணால சேர்த்துக்கலாமா" என்று கேட்க, "நாங்களும் இத தான் தம்பி உன்கிட்ட கேட்கலாம்னு இருந்தோம். நீயும் எங்க கூடவே தங்கிரு" என்றார் ஊர்த் தலைவரின் மனைவி. "ஆமா பா நானும் அதான் நெனச்சேன்" என்று இலக்கியாவின் அப்பாவும் கூறினார். அவனுக்குள் இருந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. இலக்கியாவை தேடி ஓடினான்.
அவள் வர்ணா கூடத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தாள். "தாங்க்ஸ் இலக்கியா" என்று அவன் குரல் கேட்டதும் அவள் திரும்பி பார்த்தாள். "எதுக்கு தாங்க்ஸ்?" என்று அவள் கேட்க, "இப்படி ஒரு லைஃப் இருக்குனு காட்டுனதுக்கு. இவ்ளோ நாள் எங்க அம்மா ஆசிர்வாதத்துல தான் எல்லாம் நடக்குதுனு நெனச்சுட்டு இருந்தேன். ஆனா எங்க அம்மாவ பத்தி தெரிஞ்சுக்கிறதுக்காக தான் எல்லாம் நடந்துச்சுனு இப்போ புரிஞ்சுக்கிட்டேன்" என்றவனிடம் "நம்ம வாழ்க்கையில நடக்குற எல்லா விஷயத்துக்கு பின்னாடியும் ஒரு காரணம் இருக்கும்" என்றாள். "ஆமா உங்க ஓவியம் மாதிரி" என்றான். அவளுக்குள் மலர்ந்த புன்னகையை மறைத்துக் கொண்டு தன் வேலையை தொடர்ந்தாள்.
வர்ணாவில் தயாரித்த ஆடைகளை சரிபார்த்துக் கொண்டிருந்த இலக்கியாவிடம், "இங்க இருக்க டிசைன்ஸ் அன்ட் பேட்டன்ஸ் எல்லாம் ரொம்ப வித்தியாசமா இருக்கு. இதெல்லாம் யாரோட ஐடியா? என்று கேட்டான். "காலங்கள் கடந்து வாழும் அஜந்தா குகை ஓவியங்கள் தான் இதுக்கான பேஸ். அதுல எந்த இரசாயனம் கலந்த சாயங்களும் பூசப்படல ஆனாலும் அது காலம் கடந்து வாழுது. இயற்கை நமக்கு கெடச்ச மாபெரும் கொடை. அதை பாதுகாக்குறது நம்ம பொறுப்பு" என்றவளிடம், "நானும் வர்ணால சேர்த்துக்கலாமா?" என்று கேட்டான். "இயற்கையை விரும்புறவங்கள இயற்கை கண்டிப்பா அரவணச்சுக்கும்" என்றாள். "இனிமேல் என் ஓவியங்கள்ல ஆர்டிஃபிஷியல் கலர்ஸ் இருக்காது" என்றான். அதை கேட்டதும் அவளுக்குள் மகிழ்ச்சி பொங்கியது. அங்கிருந்த ஒரு வெள்ளை போர்டில், "மாற்றங்கள் நிகழ்வது அல்ல நிகழ்த்துவது" என்று எழுதினாள்.
"நீங்க உண்மையாவே சர்வீஸ் தான் பண்றீங்க" என்று கலை மனதுக்குள் சொல்லிக் கொண்டான். இலக்கியாவின் முகத்தில் ஒரு சிறு புன்னகை படர்ந்தது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்