Manjula Swaminathan
சிறுகதை வரிசை எண்
# 236
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்!
நந்தனம் புத்தக கண்காட்சியில் உஷா அவள் எழுதிய புத்தகங்களை ஏக்கத்துடன் பார்வையிட்டாள். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் மூன்று கட்டுரைத் தொகுப்புகள், உஷா சந்திரசேகர் என்ற பெயரில் அங்கு ஓர் புத்தக ஸ்டாலில் காட்சியளித்தது. அதனை வருடியபடி, அடுத்த கண்காட்சியிலாவது தனது புதினம் பிரசுரம் ஆகவேண்டும் என எண்ணி பெருமூச்சு விட்டாள். அவள் தோழி அமுதாவுடன் கண்காட்சியை ஓர் அவசர பார்வையிட்டு, சில புத்தகங்களை வாங்கி, மதியம தான் பணிபுரியும் வாரத் தமிழ் பத்திரிகை அலுவலகத்திற்கு சென்றாள் உஷா. அவள் ஓர் பத்திரிகையின் ஆசிரியை.
“ உஷா மூணாவது நாவல் எழுதிட்டேன் . இந்த வருஷம் கண்காட்சியில ரிலீஸ் ஆயிடுச்சு. உனக்கு ஒரு காபி அனுப்பறேன். உங்க இதழ்ல சின்னதா ஒரு செய்தி போடு பிளீஸ். அப்பறம் ஃப்ரெண்ட் விட்டு விமர்சனம் எழுத சொல்றேன் என்ன? ” என்றான் அவளுடைய எழுத்துலக ஸ்நேகிதன் வெங்கட்.
“ பாரக்கறேன் வெங்கட். இஷ்யு ரொம்ப டைட்டா இருக்கு. இல்ல அடுத்த வாரம் தான்,” என்றாள் உஷா.
“ முடிஞ்சா இந்த வாரமே போடு பிளீஸ் …” என்று கெஞ்சியவன், “சரி, உன் நாவல் எந்த லெவல்ல இருக்கு? இந்த வருஷமாவது முடிப்பியா ?” என்று மேலும் தொடர்ந்தான்.
“ தெரில வெங்கட், நாவல் ரிசர்சுக்காக ஊருக்கு போகணும்… பசங்க, ஃபேமிலி கமிட்மெண்ட்னு நெறையா பிரச்சனை… உனக்கென்னப்பா உன் பொண்டாட்டி கலா தயவுல அடிக்கடி ஃபீல்ட் விசிட் , ரிசர்ச்னு கெளம்பிடுவ, எனக்கென்ன அப்படியா?” என்று அவனிடம் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தவள், “ சரி! வேலை இருக்கு, அப்பறம் பேசறேன்,” என்று வெங்கட் அழைப்பை கட் செய்தாள்.
மின் அஞ்சல்களை சரி பாரத்து , அடுத்த இதழுக்கு தேவையாயனாதை ப்ரூஃப் பாரத்து, சாலை நெரிசலில் வீடு சென்று அடைய அவளுக்கு மணி ஏழு ஆயிற்று. உடனே இரவு டிபனுக்கான வேலைகளை ஆரம்பித்தாள் .
“உஷா, அந்த பிடி கொழுக்கட்டை முன்ன பண்ணுவியே, இப்போ ஏன் நீ அத செய்யறதே இல்ல?” என்றார் மாமனார்.
“அரிசி உப்புமாவ பிடிச்சா பிடி கொழுக்கட்டை,” என்றாள் உஷா.
“ஒரு சமையல் இணைப்பு இதழ எடுத்து வெச்சிருக்கேன் பாரு... அதுல, ஒரு பட்டாணி குருமாவும், இன்னும் சில அயிட்டங்களும் மார்க் பண்ணி வெச்சிருக்கேன், அத பார்த்தியா?”
“அப்பா, எங்க இதழ் ஓட இலவச இணைப்புல தான் வந்தது. நான் ப்ரூஃப் பார்க்காம பிரிண்டுக்கே போகாது.”
“ அப்பா கூட கூட பேசாத! சரிப்பானு சொன்னா கொரஞ்சு போயிடுவியா?” என்று திருமணம் ஆகி 15 வருடம் கழித்தும் அதட்டினான் உஷாவின் கணவன் சந்திரு.
“இவருக்கு சமச்சு சமச்சே எனக்கு முட்டி வலி வந்துடுச்சு,” என்று சமையலறை வந்து மெல்லமாக முணுமுணுத்தார் உஷாவின் மாமியார்.
யூனிஃபார்ம், சாக்ஸ், தோய்த்து, லஞ்ச் டப்பா அலம்பி, மேடையை துடைத்து, அடுத்த நாளிற்க்கான கறிகாய் நறுக்கி, சமயலறை விளக்கை உஷா அனைத்த போது மணி ஒன்பதரை.
கையில் புக் ஸ்டாலில் வாங்கிய ‘ஸ்ரீரங்கத்துக் கதைகள்’ புத்தகத்தை எடுத்து படிக்கலாம் என உஷா துவங்கிய சமயம், நித்திரா தேவி அவளை பரிபூரணமாக ஆட்க்கொண்டாள்.
காலை ஐந்து மணிக்கு அலாரம் அடிக்க, அதனை அமுக்கிவிட்டு மறுபடியும் தூங்கும் படி அவளது உடல் கெஞ்சியது. அதுவும் வெள்ளிக்கிழமை என்றால் இன்னும் மோசம், அயர்ச்சியின் உச்சியில் உஷா படுத்திருந்தாள் . ஐந்தரை மணிக்கு வலுக்கட்டாயமாக எழுந்து, குளித்து, சமையல் அறைக்குச் சென்றால்......“ அம்மா... என் பெல்ட் காணல, ஹோம்வொர்க் பண்ணல, ரெகார்ட் நோட் எங்க?” என்று பல இத்தியாதி வேலைகள் வந்து தலையில் விழுந்தது .
“உஷா, இந்த கண்ணம்மாவ வெள்ளிக் கிழமையாவது சீக்கிரம் வரச் சொல்லு. கார்த்தால கோயில் போகணும். சரியா கெளம்பற நேரத்துக்கு வந்து நிப்பா. போன வாரம் கூட நட சாத்திட்டாங்க,” என்றாள் உஷாவின் மாமியார்.
ஒன்பது மணிக்கு அரக்கப் பறக்க ஓடி வந்த கண்ணம்மாவிடம், “ கொஞ்சம் சீக்கிரம் வர பாருங்க, அம்மா ரொம்ப டென்ஷன் ஆகறாங்க,” என்றாள் உஷா பரிவாக.
“கெளம்ப கொஞ்சம் லேட் ஆச்சு, ஒடனே என் வூட்டுகாரரு வுட்டுட்டு போயிட்டாரு. ஏதுடா காலைல இருந்து இவ இம்மாம் வேலை செய்யுறாளே, கொஞ்சம் வெயிட் பண்ணி அத இத்தாரலாமேனு மனுசனுக்கு தோணலியே. பஸ் புடிச்சி வர லேட் ஆயிடுச்சு கா,” என்று அலுத்துக் கொண்டாள் கண்ணம்மா. அவளை பார்க்க பாவமாக இருந்தது உஷாவிற்கு. நன்கு படித்து, ஓர் அலுவலகத்தில் நல்ல பொறுப்பில் இருக்கும் தனக்கே ஓர் பெண்ணாக இவ்வளவு சிரமம் என்றால், படிப்பறிவு அதிகம் இன்றி, சொற்ப ஊதியத்திற்கு வீட்டு வேலை, கூலி வேலை செய்யும் கண்ணம்மா போன்ற பெண்களின் நிலை இன்னும் மோசம் தான் என்று மனதில் எண்ணிக்கொண்டாள்.
ஆனால், அதற்கு மேல் யாருடனும் உரையாடவோ, அவர்கள் குறைகளை கேட்கவோ உஷாவிற்கு ஏது நேரம்? சிட்டாக விரைந்தாள் தனது அலுவலகத்திற்கு காரில். உஷாவிற்கு ஸ்லோகம் சொல்வது, கடவுளை நினைப்பது எல்லாம் காரில் தான் நடைபெறும். சென்னை வாகன நெரிசலில் அந்த முக்கால் மணி நேர பயணம் அவளுக்கு மிகவும் இன்பமாக இருக்கும். முன்பெல்லாம் அந்த பயணம் அவளுக்கு பதற்றத்தை கொடுத்தது, இப்போது அவளுக்கு அந்த தனிமையான பயணம் மன ஆறுதலை கொடுக்கிறது. எங்கும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் மக்கள், அவர்கள் வாழ்க்கை, என்று சுற்றி பரபரப்பாக இருக்கும் சாலையில் காரின் உள் அமர்ந்து ஒருவித மன அமைதியை அடைவாள் உஷா. அந்த பயணம் அவளை அலுவலகத்தில் உன்னிப்பாக வேலை செய்யத் தயார் படுத்தியது.
அன்று இரவு, “ நாளைக்கு பசங்களுக்கு ஸ்கூல்ல பேரன்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங் இருக்கு. நம்ம போகணும்,” என்றான் சந்திரு உஷாவிடம்.
“சந்திரு ப்ளீஸ் நீங்க மட்டும் போயிட்டு வரீங்களா? நா சாய்ந்தரம் ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு தலைமை தாங்கணும். கார்த்தால நெறையா வேல வேற இருக்கு,” என்றாள் கெஞ்சலாக உஷா.
“என்ன உஷா இப்படி பேசற? உனக்கு புத்தக வெளியீட்டு விழான்னா போக முடியுது, பசங்களுக்காக கொஞ்சம் நேரம் செலவழிக்க முடியாதா உன்னால?” என்று எரிந்துவிழுந்தான் சந்திரு.
சந்திருவின் இந்த வரிகள் உஷாவிற்கு கோபத்தைக் காட்டிலும் வருத்ததையே அளித்தது. திருமணமாகி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் சந்திரு தன்னை சரிவர புரிந்துகொள்ளவில்லையே? என்று ஆதங்கப்பட்டாள். வெளி உலகத்திற்கு தான் அவள் ஒரு பத்திரிகை ஆசிரியை, ஆனால், வீட்டில் அவள் ஏற்கும் பதவிகளும், பொறுப்புகளும் எத்தனை, எத்தனை? இத்தனைக்கும் அவை அனைத்தும் சம்பளம் இல்லாத வேலைகள். சரி சம்பளம் வேண்டாம், குறைந்தபட்சம் கரிசனையாவவது வேண்டாமா? பாரதிக்கு ஒரு செல்லம்மாவைப் போல, ரங்கராஜனுக்கு ஒரு சுஜாதாவைப் போல , வெங்கட்டுக்கு ஒரு கலாவைப் போல, பெயரில் உஷா சந்திரசேகர் என்று உறுதுணையாக இருக்கும் சந்திரு, வீட்டு வேலைகள் செய்வதிலும், தனது எழுத்துலக வாழ்க்கையிலும் அதிக அக்கறை செலுத்தி உறுதுணையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினாள்.
“அம்மா, பெண் முன்னேற்றம் பற்றி உங்க வீட்டு பெண்கள் கிட்ட டிஸ்கஸ் பண்ணி ஒரு கட்டுரை எழுதுங்கன்னு எங்க தமிழ் மேம் சொல்லியிருக்காங்க,” என்றாள் உஷாவின் பதிமூன்று வயது மகள் தீபிகா.
“ அந்த காலத்துல எல்லாம் பெண்களுக்கு படிப்பறிவு கிடையாது. வீட்டு வேலை செய்யறது, கொழந்தைகள பார்த்துக்கறது என்று பெண்கள சின்ன வயசுல இருந்தே தயார் படுத்தினாங்க. நான் வளர்ந்த காலத்துல கூட டிகிரி என்பதே அதிகம் தான். ஆனால், வீட்லயே எழுத படிக்க சொல்லித் தருவாங்க, நெறையா கதைகள் சொல்லுவாங்க,” என்றாள் தீபிகாவின் பாட்டி.
“ஆனால், சங்க காலத்திலேயே பெண் புலவர்கள் இருந்திருக்காங்க. அதே மாதிரி பெண்களுக்கு சொத்தும், இலக்கிய அறிவும் ராஜா காலத்திலேயே இருந்ததுன்னு நாம கோயில் கல்வெட்டுகள்லயும், வரலாற்று புத்தகங்களிலும் படிசிருக்கோமே,” என்றாள் உஷா.
“ அய்யோ, உடனே ராஜா காலத்துக்கும், சங்க காலத்துக்கும் போய்டாதீங்க… எந்த காலத்துலயாவது ஆணுக்கு பெண் சமமாக இந்த சமூகம் இருந்திருக்கா? இருபதாம் நூற்றாண்டுல தானே பெண்களுக்கு ஓட்டுரிமை கெடைச்சிருக்கு? ஒரே வேலையில் இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியம் கூட இன்னும் நெறையா செக்டர்ஸ்ல கெடைக்கலியே? இத பத்தி உங்க கருத்துகள ஷேர் பண்ணுங்க,” என்றாள் தீபிகா.
“ மத்த செக்டர் பத்தி நான் சொல்ல விரும்பல, ஆனா, வீடுங்குற முக்கியமான செக்டர்ல இன்னும் சம உரிமை கெடைக்கல. உன் காலத்துயாவது ஒரு 60- 40 சதவிகிதம் வருதானு பார்ப்போம். 'எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை கணென்று கும்மியடி!'
என்று பாரதி ஒரு நூற்றாண்டு முன்னாடியே சொல்லிட்டு போயிட்டாரு, நமக்கு இன்னும் அது நடந்த பாடில்ல,” என்று வருத்தப்பட்டாள் உஷா.
-----
சில வருடங்கள் கழித்து, ஒரு சபையில் கிட்டத்தட்ட ஐம்பது பேர் அமர்ந்திருக்க அவர்களை மெதுவாக கடந்து சற்று முன்னோக்கி மேடையை கவனித்தால் அதில் ஐந்து சவுகரியமாக அமரக்கூடிய நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. அதில் நான்கில் மேதகு மக்களும், ஐந்தாவது நாற்காலி காலியாகவும் இருந்தது. சற்று நாம் கண்மணிகளை ஓடவிட்டால், மேடை ஓரத்தில், மைக்கில் உஷா ஓர் புத்தகத்திலிருந்து படித்துக்கொண்டிருந்தாள்.
வெற்றி என்பது நம் இலக்கை அடைவதாலோ, அல்லது பரிசுகள் பெறுவதாலோ நிர்ணயிக்கப் படுவதில்லை. நமது இலக்கை நோக்கி நாம் நகரும் ஒவ்வொரு அடியையும் நாம் வெற்றியாகத்தான் பார்க்க வேண்டும். காரணம், இலக்கு என்பது நிரந்தரமானது அல்ல. நமது ஒவ்வொரு முயற்சியையும் நாமே பாராட்டா விட்டால், வேறு யார் பாராட்டுவார்கள்?
“இந்த பத்தி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. என்னோட இந்த சுய முன்னேற்ற புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கும் அனைத்து இலக்கிய அன்பர்களுக்கும் நன்றி. கூடிய விரைவில் என்னோட புதினம் ஒன்றும் வெளியிடப் போறேன். இதே பதிப்பாளர் தான். அந்த விழாவுக்கும் நீங்க எல்லாரும் கண்டிப்பா வரணும்…”
உஷாவின் இந்த உரைக்கு முதல் வரிசையில் அமர்ந்திருந்த சந்திரசேகர், உஷாவின் இரண்டு குழந்தைகள், மாமியார், மாமனார் மற்றும் அவையோர் அனேகரும் பலத்த கரகோஷம் எழுப்பினர்.
ஒரு சின்ன குறை என்னவென்றால், உஷா திட்டமிட்ட காலத்தை விட ஒரு வருடம் அதிகமாக அந்த புதினத்தின் வெளியீட்டு விழா தாமதம் ஆகிவிட்டது !
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்