Winston Mario
சிறுகதை வரிசை எண்
# 234
தலைப்பு - "திரவியம் தேடி"
அலைபேசி அடித்தது.
‘ டேய் கொழந்த பொறந்திருச்சு டா, மூணு கண்ணோட பொறந்துருக்கு, சீக்கிரம் வாடா எனக்கு பயமா இருக்கு’
என்றபின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ராகவன் பேருந்தின் கடைசி சீட்டின் நடுவே வேர்வையை கைக்குட்டையால் துடைத்தவாறு ஒரு பெரிய அமைதியை கண்ணில் ஏந்தியபடி அமர்ந்திருந்தான். மதியம் மணி 1.30 இருக்கும். பாலம் கட்டும் பணியினால் போக்குவரத்து நெரிசல். மதிய சாப்பாட்டிற்காக வீடு அல்லது உயர்தர உணவகம் செல்பவர்கள், வித விதமான கார்களில் சௌகரியமான ஏசி காற்றில் முகத்தை சொரிந்துக் கொண்டு ஒரு ஒருவராக ஹாரனை அழுத்தியபடியும், கருப்பு ஆர்ம் சிலீவ் போட்டு மதிய சாப்பாட்டை கொண்டுசெல்லும் டெலிவரி பாய்கள் பைக்கில் கட் அடித்துக்கொண்டு முன்னேறியும், அந்த மதிய வேளையில் பேருந்தில் யார் பயணிப்பார்கள் என்பது போல மர்ம நபர்கள் குடைகளுடன் பேருந்திலும், அவ்வப்போது அளரிக் கொண்டு இரண்டு மூன்று ஆம்புலன்ஸ்கள் ஓடியும், பாஸ்போர்ட் அலுவலக சாலையை கடக்க மக்கள் தடுப்புகளை தாண்டியும், அந்த மதிய வேளை உழைத்துக் கொண்டிருந்தது. அனைத்தையும் நோட்டம் விட்ட ராகவன், தனக்கு அலைபேசி வழியாக வந்த செய்தியை கேட்ட பின்னரும் பரபரப்பு இன்றி அமைதியாக காணப்பட்டான்.
ராகவன் ஒசூரைச் சேர்ந்தவன். அவன் அப்பா நஞ்சன் பல வேலைகள் செய்து கடைசியில் ஒரு சிகரெட் தொழிற்சாலையில் வேலைப் பார்த்து குடியினால் இறந்தவர். அம்மா அஞ்சலை சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு உதவி செய்து சிறிது சம்பாரித்தவள். ராகவன் திருச்சி துணிக்கடையில் வேலை பார்க்கையில் தன்னுடன் பணியாற்றிய தேவியை காதலித்து, பின் அவள் வீட்டார் சம்மதிக்காததால் நண்பன் சிபாரிசில் கோவை வந்து அம்மாவின் ஆசியோடு திருமணம் செய்துக்கொண்டான். இருவரும் இப்போது ஒரு நகை கடையில் நான்கு வருடமாக சேல்ஸ் வேலை பார்க்கிறார்கள். தேவி இரண்டு மாதமாக மகப்பேறு விடுப்பில் இருக்கிறாள். அஞ்சலை உடல்நலம் சுகம் இல்லாததால் வீட்டை மட்டும் பார்த்துக்கொள்கிறாள். நகர வாழ்க்கை மாதம் இருவருக்கும் சேர்ந்து கணிசமாக முப்பதாயிரம் ரூபாய் சம்பளமாக தருகிறது. வீட்டு வாடகை, சலுகையில் மால் பர்ச்சேஸ், ஞாயிறு விருந்து, இ.யம்.ஐ வண்டி தவனை, ஓரியண்டல் யூடியூப் சமையல்கள், உடற்பயிற்சி யந்திரங்கள், பிரம்பு ஊஞ்சல் என பட்டையும் தீட்டி விடுகிறது. கொரோனா சமயத்தில் வாங்கிய கடனையே இப்போது தான் அடைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். திருச்சியில் காலையில் என்ட்ரி போட பேருந்தில் இருந்து இறங்கி என்.எஸ்.பி ரோடு வழியாக மூச்சு இரைக்க ஓடுவார்கள். பின்பு மாலை பேருந்தை பிடிக்க மீண்டும் ஓடியவர்கள். தேவி சேலம் தாரமங்கலத்தை சேர்ந்தவள். பஸ் ஸ்டாண்டு பெட்டிக்கடை வியாபாரி குடிகார சற்குணத்தின் மகள். இருவரும் வாழ்க்கையை நொந்தவர்கள். கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டு தனக்கான வாழ்க்கைக்கு உழைத்தவர்கள். தனி வாழ்க்கையில், பல வேலைகள் பார்த்து, பல காதல் வாழ்க்கை அனுபவித்து, காவல் நிலையம் சென்று, கல்லனையில் கூடி, ஏமாற்றி, திருடி, தழும்புகள் ஏற்று, செய்வினை வைத்து, கத்தி, அழுது, புரண்டு, ரத்த காயங்களாக காலை ஒப்பனையோடு வேலைக்கு ஓடியவர்கள். எப்படியோ இருவரும் சந்தித்து ஒத்துப் போய் காதலித்து விட்டார்கள். ஒரு பெரிய சண்டைக்கு பிறகு தனக்கானது கிடைத்துவிட்டது என்பதுபோல ஒட்டிப்போய் விட்டார்கள். இப்போது திருமணம் ஆகி இந்த நகரத்தின் வாயில் தினசரி விழுந்துக் கொண்டிருக்கிறார்கள்.
பேருந்து பிரிவு ரோட்டை பிடித்தது. போக்குவரத்து நெரிசல் பிரிந்தது. ராகவனின் எண்ணங்கள் ஓட ஆரம்பித்தன. மூன்று கண்களோடு ஒரு குழந்தை பிறந்தால் அடுத்தது என்ன நடக்கும்? முதலில் பத்திரிக்கையாளர்கள் வந்து பேட்டி எடுக்கலாம். மூன்று கண்களோடு பிறந்த அதிர்ஷ்ட குழந்தை என்று செய்தித்தாள்களில் புகைப்படத்துடன் வரும். செய்தியில் போடுவார்கள். தேவியிடம் பேட்டி எடுக்கலாம். அவள் களைப்பாக இருந்தால் என்னிடம் பேட்டி எடுக்கலாம். நகைக்கடை வேலைக்காக வாரம் மூன்று முறை சவரம் செய்யும் ராகவன் தடவாயை தடவிப் பார்த்தான். வலது பக்கம் இருந்த கம்பியில் தன் காதில் படர்ந்திருந்த முடிகளை பார்த்தான்.
“நா ரொம்ப அதிர்ஷ்டசாலி, அந்த கடவுளே எனக்கு கொழந்தையா பொறந்திருக்காரு”.
“ இனி ஏங்கஷ்டம்லா போய்டும்”.
மைக்கை பிடித்தவாறு “இந்த ஒலகத்த காப்பாத்த பொறந்துருக்காரு”.
“ அவருக்கு நா கோவில் கட்டுவ”.
பீட்டர் இங்கிலாந்து கடையை பேருந்து தாண்ட, அதன் காட்சியில் இருந்த நீல சட்டை காக்கி பேண்ட்டை பார்த்த ராகவன் அதை அணிந்தவாறு பேட்டி குடுப்பதாக நினைத்துக்கொண்டான். அந்த நீல சட்டை காக்கி பேண்ட்டில் குழந்தைக்கு முத்தங்கள் கொடுத்தான். தேவிக்கும் கொடுத்தான். மருத்துவமனையில் இருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கினான். ஏன், துப்புரவாளர்களுக்கு புதிய பாத்திரங்கள், துணிகள் பரிசளித்தான். வெளியே மக்கள் கூட்டம் அலைமோதியது. மூன்று கண்களோடு ஈஸ்வரன் பிறந்திருக்கிறார் என்று மாலைகளோடு மக்கள் அடித்து தள்ளிக்கொண்டு வந்தனர். ஒரு பக்கம் பூஜை நடக்க மறுபக்கம் கோவில் கட்ட காணிக்கை பெட்டிகள் பகிரப்பட்டன. கின்னஸ் ரெகார்ட் காரர்கள் காசோலையோடு காத்திருந்தனர். காவல் துறை யாரையும் உள்ளே விடவில்லை. வெளியே வந்த ராகவன் குழந்தையை தூக்கி காட்டிவிட்டு சொகுசு காரில் ஏறி குடும்பத்துடன் காவல்துறை பாதுகாப்பில் சென்றான். வழியெல்லாம் பூக்கள் தூவப்பட்டது. ஓட்டுனர் குழந்தையின் காலை தன் மேல் வைக்குமாறு வற்புறுத்தினார். காரின் ஐன்னல் வழியாக மக்கள் பணத்தை உள்ளே துருத்தினர். முன் கண்ணாடி முழுவதும் காசுகளால் மறைந்தது. விண்ட்ஷீல்ட் பயன்படுத்தப்பட்டது. மக்கள் சாமியாடி, வண்டியின் முன் விழத் தொடங்கினர். செல்வந்தர்கள் பால் ஊற்றி ரோட்டில் உருண்டு கார் சென்றபின் அதை தலையில் தெளித்துக் கொண்டனர். ராகவன் குழந்தையின் கண்களை பார்த்தான். பேருந்து அடுத்த நிறுத்தத்திற்கு வந்திருந்தது. ராகவன் செருப்பை கழட்டி இருந்தான். வேர்க்க ஆரம்பித்திருந்தது.
ராகவனும் தேவியும் இடைவிடாமல் உழைத்து, சேமித்து, சேர்ந்து கொண்டாடி செலவு செய்வார்கள். பிளாஸ்டிக் தோடு, பிளாஸ்டிக் பூக்கள் செய்வது, கேட்டரிங் சர்வீஸ், மிலிட்டரி சரக்கு வாங்கி விற்பது, செகண்ட் ஹேண்ட் அலைபேசிகள் விற்பது என சம்பாதித்து கடைவீதியிலேயே செலவழிக்கும் ஆட்கள். நகரம் வருவதற்கு முன்பு அவர்களது வாடிக்கையாளர்கள் அவர்களைப் போலவேதான். ஆனால், நகர வாடிக்கையாளர்கள் அவர்களை விட ஏனோ அதிகமாக தெரிந்தார்கள். பளபளப்பாக தோன்றும் அவர்களில், சிலர் காரணமின்றி நகை வாங்குவதும், மாற்றுவதும் எப்படி என்ற கேள்வியே இவர்களை துளைத்தது. ஆரங்களும், வளையல்களும், சிறிய சாமி சிலைகளும், தடியான செயின்களும். அளவற்ற தங்க காசுகள் வாங்கும் இவர்கள் எடை போடும்போது அருகில் இல்லை, ஆசாரி தங்கத்தை உருக்குகையில் எட்டி பார்க்கிறார்கள் ஆவலால், அலைபேசி கால்குலேட்டரில் கணக்கும் பார்ப்பதில்லை, மேலும் ஐ.டி. கார்டு காண்பித்து சலுகை கேட்பதில்லை. கேவலமான டிஸைன் நகைகளிலும் அழகாக இருக்கிறார்கள். நகைகளை வாங்கியவாரே இருக்கிறார்களே யார் இவர்கள்? ஆனால் எப்படி காரணமின்றி, தேவையின்றி நகைகளை வாங்க இயலும்?. கொரோனா சமயத்திலும் இவர்கள் வராமல் இல்லை. இந்த வேலையும் ஒரு மெனக்கெடல் தான். சவரம் செய்து, கச்சிதமாக முடி வெட்டி, மேக்கப் போட்டு, புதிய கவரிங் நகைகளை எப்போதும் அணிந்து, களையாத சேலை மடிப்புகள், இஸ்திரி போட்ட மேட்சிங் சட்டை பேண்டுடன் டக் மற்றும் கப்ஃ செய்து வாசனை திரவியம், இருவருக்கும் கண் மை. பழுதான இஸ்திரி பெட்டிகளை போட்டு இரண்டு அலுமினிய குக்கர் வாங்கியாகிவிட்டது. ஏசியிலேயே இருந்து நிறம் வெளுத்தது எப்படியோ நகர வாசிக்கான நிறத்திற்கு மாற்றியது. யார் அவர்கள்? அவர்கள் வாழ்க்கை என்ன? அண்ணாசி சுவைத்துக் கொண்டே சொகுசு காரில் செல்கிறார்கள். அவர்கள் வீட்டில் திருட்டு நடக்குமா? நடக்க வேண்டுமா?என்று பல கேள்விகளோடு இருவரும் பார்த்தார்கள்.
நிறுத்தத்தில் வயதான ஒரு பெண் பொக்கையும், தடியுமாக ஏறினாள். ராகவன் குழந்தையின் முகத்தை யோசித்தவாறு இருந்தான். அந்த கண் நெற்றியில் இல்லாவிட்டால்? இரண்டு கண்களுக்கும் நடுவில் இருந்தால்? குழந்தையின் பார்வை எப்படி இருக்கும் என்ற யோசனை ராகவனை அடித்தது. சுற்றி முற்றி கண்களை சுருக்கியும் விரித்தும் பார்த்தான். இரண்டு கண்களுக்கும் நடுவில் விழுந்திருந்த முடி ஒன்று இரண்டாக தெரிய அது குழந்தைக்கு மூன்றாக தெரியுமோ? ஒருவேலை மூன்றாவது கண் தெரியாமல் இருந்தால்? நெற்றியில் பட்டை போட முடியாது. தலையில் அடித்துக்கொள்ள முடியாதே. அழுதால் கண்ணீர் எப்படி வழியும்? அந்த கண்ணில் மட்டும் சக்தி இருந்தால்? அதில் மட்டும் பார்வை வேறு மாதிரி இருந்தால்? அந்த கண் கொண்டு கெட்டதை பார்த்திட முடியுமா? பொது கேஸ் பைப் லைனிற்காக தோண்டிய குழியினால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அடுத்த ஸ்டாப்பில் இறங்க வேண்டியவர்கள் இங்கேயே இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
முன்னும் பின்னும் சல்லிகளும் மணலும் ஏற்றிய லாரிகளும், போர் லாரிகளும் ஹாரனை அழுத்தினர். ஒருவேளை அந்த கண் தலைக்கு பின்னால் இருந்தால்? பின்னாடி நடப்பதும் தெரியும். எப்படி தெரியும்? முன்னேயும், பின்னேயும் ஒரே சமயத்தில் எப்படி பார்ப்பது? திரும்பி திரும்பி பார்த்தான். ஐயோ! சபிக்கப்பட்ட குழந்தையாக இருந்தால்? பேய் படங்களில் சாத்தானுக்கு கண் அங்கே தான் இருக்கும். உலகம் அழிய போகின்றதா? வாலும் இருக்குமோ? தேவியை அது கொல்ல முயன்றால்? என்னையும்? மாடியில் இருந்து தள்ளிவிட்டால்? ஐயோ! மசூதி கொண்டு செல்ல வேண்டும். இல்லை மூன்றாவது கண்ணை கத்தியினால் குத்த வேண்டும். அப்பா வேண்டாம் என்று அது நடிக்கலாம். என்ன செய்வது என் குழந்தையை. வெட்டப்பட்ட குழியில் மழை நீர் நிரம்பியிருந்தது. அதில் இருந்த பிளாஸ்டிக் பைகள் நகர்ந்தன. அந்த வேகம் கூட இல்லாமல் பேருந்து நகர பயணிகள் காய்ந்து கொண்டிருந்தனர். அனல் காற்று அடிக்க ராகவன் இரும்பியவாறு இருந்தான்.
அஞ்சலை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாள். வார்டில் இரண்டு வாரம் சிகிச்சை பெற்று வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள். இருவருக்கும் வருமானம் இல்லாமல் நண்பர்களிடம் கடன் வாங்கினார்கள். இருப்பினும் சுறுசுறுப்பாக இயங்கினார்கள். அலைபேசி வழியாக இலவச பொருட்கள் தரும் இடம், இலவச பூஸ்டர் டோஸ் கிடைக்கும் இடம், எந்த கடை எப்போது திறக்கப்படும், எதை அதிகம் வாங்கி பதுக்க வேண்டும், எதையெல்லாம் சாப்பிடவேண்டும், முன் எச்சரிக்கைகான மாத்திரைகள் என அனைத்தும் விரைந்து செய்தார்கள். இதற்கிடையில் ராகவனுக்கு ஒட்டுக்குடல் ஆபரேஷனும் தடங்கல் இன்றி செய்து முடித்தார்கள். நகைக்கடையில் மூன்று முறை பணியாளர்களுக்கு தொற்று வந்து கடையை தற்காலிகமாக மூட, பின் உரிமையாளரின் மகன்கள் பிரான்சில் இருந்து வந்து, குடும்பம் முழுவதும் தொற்று பரவி, பல மாதங்கள் கடை திறக்கப்படவில்லை. இறந்தவர்களின் பட்டியலை பார்த்தும், பாதிக்கப்பட்ட அஞ்சலையின் நிலையை பார்த்தும் இருவருக்கும் பயம் அதிகரித்தது. செய்வதற்கு எதுவும் இல்லை, நேரத்தை எப்படி பார்ப்பது என்ற சிக்கலுக்குள் சென்று அவர்கள் காதல் வாழ்க்கைகுள்ளே மீண்டும் நுழைந்தார்கள். தங்கள் காதல் கதைகளை பற்றியே இரவு முழுவதும் பேசினார்கள். சண்டைகள் பற்றியும், முக்கொப்பூரில் நடந்த கொஞ்சல்கள், திட்டு திட்டாக அடித்த பவூடரை ராகவன் எச்சில் தொட்டு அழிப்பதும், புகாரி ஓட்டலில் நடந்த சம்பவம், இரவு கரூர் பயணங்கள், வானப்பட்டரை பிரியாணி அண்டாவில் பெயர் எழுதியது, தேவிக்கு ஒமட்டிய ஆரஞ்சு ஓட்கா என எதையும் விடாமல் பேசி, அடித்துக்கொண்டும் கட்டிக்கொண்டும் இருந்தனர். காலையில் ராகவனை வர்ணித்து கவிதையும் எழுதிக் கொடுத்தாள் தேவி. தேவிக்கு பழைய வாழ்க்கை திரும்பியதாக தோன்றியது. உற்சாகத்துடன் பழைய நண்பர்களிடம் உரையாடினாள், புகைப்படங்கள் பரிமாறினாள், முடிந்த சண்டைகளையும் பேசினாள். ராகவன் முடியையும் தாடியையும் வெட்டாமல் வளர்த்து இருந்தான். கடன் மட்டும் தான் சிக்கலாக இருந்தது. தேவி பட்டு நூலில் வளையல்களும் தோடுகளும் செய்து இணையத்தில் விற்று பார்த்தாள். டேட்டா என்ட்ரி வேலைக்கு சேர முயற்சி நடந்தது. ராகவன் வெளிநாட்டில் கற்கள் மட்டும் வைத்து கட்டும் வீடுகளின் வீடியோக்களையும் உடற்பயிற்சி வீடியோக்களையும் பார்த்துக் கொண்டிருந்தான். எதுவும் உதவவில்லை. எதற்கும் பணம் இல்லாததால் நகைக்கடை திறந்துவிடும் நம்பிக்கையில் இருந்தனர்.
தளர்வுகளுக்கு பின் லாக்-டவுன் நீக்கப்பட, மால்கள் முதற்கொண்டு அனைத்தும் திறக்கப்பட்டது. உற்சாகத்தோடும் பாதுகாப்போடும் மாலுக்குள் பொருட்கள் வாங்க சென்றார்கள். பொருட்கள் குறைவாக இருந்தும் அனைத்தையும் எடுக்க வேண்டும் போல் தோன்றியது. ட்ராலியை தள்ளியபடி செல்லும்போது ஒரு ஜோடி அவர்களை மறித்தது. கேமராவை கையில் ஏந்தி இருந்த அந்த பெண் மேக்கப்பில் அழகாக இருந்தாள். இவர்கள் பெயரை கேட்டுக் கொண்டு, மூன்று நிமிடத்தில் ஆயிரம் ரூபாய்க்கு சரியான அளவில் பொருட்கள் எடுத்தால் அந்த பொருட்களை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என்றார்கள். தேவியும் ராகவனும் திகைத்து உண்மையாகவா? என மூன்று முறை கேட்டுக் கொண்டார்கள். தேவி எம்.ஆர்.பி ஆ? இல்லை சலுகை விலையா? என்று தெளிவுபடுத்திக் கொண்டாள். வீட்டில் இருந்து கிளம்பும் முன்னரே அலைபேசி வழியாக இணையத்தில் விலை பார்த்து பட்டியல் போட்ட தேவி, ஓடி சென்று அனைத்தையும் சரியாக எடுத்துக் கொண்டு இறுதியில் கணக்கும் பார்த்துவிட்டாள். அந்த அனைத்து பொருட்களையும் இலவசமாக கொடுத்த அந்த இருவரும் தம்பதியினர். அவர்கள் யூடியூப் சேனல் பெயரை சொல்லி பார்க்க சொன்னார்கள். தன்மையாக பேசினார்கள்.
பேருந்து ஆடி அசைந்து மேடு பள்ளங்களில் ஏரி இறங்கி மெதுவாக சென்றது. லோடு வண்டிகள் தான் அதிகம். மூன்றே மாதங்களில் இந்த பகுதியில் இத்தனை வீடுகள். ரோடு முழுவதும் வண்டிகளில் இருந்து சரிந்து விழுந்த சல்லிகளும், மண்ணும் தான். ஆங்காங்கே ஜேசிபிகள் நின்றிருந்தன. மெயின் ரோட்டிற்கு முன்னூறு மீட்டார் தூரத்தில் கெமிக்கல் பேக்டரியும், சிமெண்ட் கலவை உற்பத்தி பிரிவுகளும், மெட்டல் வர்க்ஸ் கடைகளுமாக இருந்தது. கார்கள் நடமாட்டமும் அதிகரித்திருக்கிறது. அந்த பாலம் கட்டியிருந்தால் இந்த நெரிசலில் மாட்ட தேவையில்லை. நான்கு கிலோமீட்டரை கடக்க அரை மணி நேரம். இன்னும் நான்கு இருக்கிறது. ராகவன் இரும்பிக் கொண்டிருந்தான். கருப்பு புகையால் சாலை மறைக்கப் பட்டிருந்தது. ராகவன் கைபேசியை எடுத்து சைலண்ட்டில் போட்டான். ஆராய்ச்சிக்காக குழந்தையை கேட்கலாம். ஒரு பெரிய தண்ணீர் நிறைந்த டப்பாவில் குழந்தை மிதக்க ஆராய்ச்சி செய்வார்கள். அரசாங்கமே கேட்கலாம். ஒரு பெரிய பணத்தொகையை கொடுத்து கேட்பார்கள். பல கோடிகளாக இருக்கும். இல்லை பெரிய தனியார் கம்பனிகள் வரலாம். கருப்பு பணமாக தரலாம். எங்கள் அடையாளத்தையே அழித்துவிட்டு வெளிநாடு அனுப்பி விடலாம். என் மகன் என்னோடு தான் இருக்க வேண்டும். ரத்தம் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். உடலை வெட்டிப் பார்ப்பார்களா? நான் அனுமதிக்க மாட்டேன். பத்திரிகையாளர்களுக்கு செய்தி போகும் முன்பே எங்களை நாடுகடத்திவிட்டால்? இப்போது கூட என்னை வேவு பார்க்கலாம். பேருந்து நின்று இரண்டு பேர் கைலியுடன் ஏறினார்கள். இவர்களாக கூட இருக்கலாம். மாறுவேடத்தில். ஒருவேளை பேருந்தில் இருக்கும் அனைவருமா? அனைவரும் திரும்பி பார்த்தது போல இருந்தது. இப்போது என்ன செய்வது? இறங்கி ஓடினாலும் பிடித்துவிடலாம். துப்பாக்கியால் சுடலாம். நடத்துனர் பையில் கையை விட்டிருந்தார். யாரையும் பார்க்காமல் யோசனையோடு அமர்ந்திருந்தான். பேருந்தில் ஏர் எடுத்துவிட்ட சத்தத்தை கேட்டு முடிகள் சிலிர்க்க ராகவன் நடுங்கி விட்டான்.
லாக்-டவுன் முடிந்து ஒரு வருடம் ஆன பின்புதான் வேலை நிறுத்தமின்றி ஒழுங்கானது. அந்த தம்பதியினரின் சேனலை ராகவனும் தேவியும் தொடர்ந்து பார்த்து வந்தார்கள் வேலைக்கு இடையிலும். இவர்களைப் போலவே அவர்களும் காதல் திருமணம் செய்தவர்கள். அவர்கள் காதல் கதைகளை வீடியோவாக போடுவார்கள். அழுகையோடும், சிரிப்புடனும், கட்டிக்கொண்டும். வீட்டிற்கு தேவையான தேவையற்ற பொருட்கள், முகப்போலிவு அடைவதற்கு பயன்படுத்த க்ரீம்கள், அமேசான் இணையத்தில் விற்கும் தேவையற்ற பொருட்கள் ரிவ்யூ, ப்ராங்க்குகள், ஒருநாள் முழுவதும் கணவன் சொல்வதை மனைவியும் மறுநாள் மனைவி சொல்வதை கணவன் கேட்பது, முப்பது நாள் உடற்பயிற்சி சேலஞ்ச், நார்த் இந்தியன் ஸ்டைல் புடவை கட்டுவது எப்படி, கேமராவை துளைத்து விட்டோம், புதிய கார், புதிய வீடு, பண்டிகை கொண்டாட்டம் மற்றும் யூடியூப் வருமானம் பற்றியும் வீடியோக்கள் போடுவார்கள். ஒரே வருடத்தில் அவர்கள் சம்பாதித்தது, சரும போலிவு, உடை மாறியது, கார், மக்கள் கூட்டம் என்று ஒன்றும் புரியவில்லை. தன்மையான அவர்கள் கூறிய பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி இவர்கள் வீட்டில் குவித்தனர். அவர்கள் ஏமாந்த கதைகள் கூறுகையில் இவர்கள் கமெண்ட்டில் ஆறுதல் கூறுவார்கள். விளம்பரம் செய்து பொருளை கூப்பன் கோட் பயன்படுத்தி வாங்கினார்கள். க்ரீமினால் பளபளப்பு அதிகமானது. அவர்கள் சிபாரிசு செய்த சேனல்களையும் பார்த்தார்கள். இவர்களை போல இருக்கும் தம்பதியினர் சிலர் காரில் ஊர் சுற்றி வீடியோ போடுவார்கள், சிலர் அமேரிக்கா வாசிகள். ராகவன் தேவி வீட்டு ஓனரின் மகள் பள்ளியில் படித்துக் கொண்டே யூடியூப் சேனல் ஆரம்பித்து தான் காலை எழுவதிளிருந்து இரவு தூங்க போகும்வரை அனைத்தையும் வீடியோவாக போடுவதும், நடன வீடியோக்கள், நண்பர்களுடன் சாப்பாடு போட்டி, ரெஸ்டாரன்ட் உணவுகள் என அனைத்தும் போட்டு தனக்கென ஒரு ஸ்கூட்டர் வாங்கிவிட்டாள். ராகவனின் நண்பன் நாய் வளர்ப்பை பற்றிய வீடியோக்களைப் போட ஆரம்பித்து இப்போது வேலையை விடும் அளவு சம்பாத்தியம். தெரிந்தவர் தெரியாதவர், பூனை சமைப்பது, கைக்குழந்தைகள் நீச்சல் குளத்தில் நீந்துவது, குரங்குகளை சிங்க்கில் குளிப்பாட்டுவது என அனைத்து வீடியோக்களையும் பார்த்தார்கள். அதில் சிலர் இவர்கள் கடைக்கு நகை வாங்கவும் விளம்பரத்திற்கும் வந்தனர். நேரில் பார்க்க இன்னும் வெள்ளையாக இருந்தனர். மக்கள் கூட்டமும் அதிகம். வெளியே அன்னாசி பழம் வாங்கி சாப்பிட்டு மினரல் வாட்டரோடு காரில் சென்றனர். ராகவ்-தேவி ஃபேமிலி என சேனல் ஆரம்பித்து சைனீஸ் சாசுகளால் செய்யப்பட்ட உணவுகள் செய்தும், காதல் கதைகளை சொல்லியும், வீடு சுத்தம் செய்வதை வீடியோவாக போட்டு யாரும் பார்க்கவில்லை. எப்படி மக்களை பார்க்க வைப்பது என்பதற்கு வீடியோ பார்த்து குறிப்புகள் எடுத்தும் பயனில்லை. கார்கள், விலை உயர்ந்த அலைபேசிகள், சுற்றுலாக்கள், மேற்கத்திய உடைகள், பொலிவுகள், தானங்கள், விசிறிகள், மரியாதைகள், தன்மையான பேச்சுக்கள், அதிகாரங்கள், மரக் கட்டில்கள், சன் ஸ்கிரீன்கள், நல்லிரவு அரட்டைகள் என அனைத்தும் இவர்களை சுற்றி கொண்டே இருந்தது. தாங்கள் வேலை செய்யும் இடத்திலும், குடியிருப்பிலும், மால்களிலும், நாடகங்களிளும் இவை மட்டும் தான். அனைத்தும் மனதில் கொண்டே வேலை செய்து, வட்டி கட்டி, குழந்தை ஆசை கொண்டு, காதல் செய்து, மால் சென்று, வீடியோக்கள் பார்த்து, வீட்டை அலங்கரித்து வாழ்க்கை நடத்தினர்.
பேருந்து இறங்கும் இடத்தை நெருங்கியது. அரசு தொடக்கப்பள்ளி எதிரில் ஒரு இன்டர்நேஷனல் பள்ளி. வானவில் வடிவில் ஆர்ச்சுடன் குழந்தைகள் கோட்டு சூட்டில் படிப்பது போல புகைப்படங்கள் வெளியே. அரசு பள்ளி மாணவர்கள் கொய்யாக்காய் வாங்கியவாறு அதை பார்த்துக் கொண்டிருந்தனர். ராகவன் இறங்கினான். தேவியும் அஞ்சலையும் அவனை நோக்கி நடந்து வந்தனர்.
“ என்ன பறாக்கு பாத்துட்டு கனவு கண்ட்டு வரியா?”
ராகவன் அவர்களை பார்க்காமல் “ வண்டி நாளைக்குதா வருமா”.
“ கொழந்தைக்கு ரத்த ஓட்டம் கம்மியா இருக்காம், அத்தி பழம் சாப்புட சொன்னாங்க”. “ டெலிவரி டேட்டு அடுத்த செக்கப் ல சொல்லுவாங்கலாம்”.
ராகவன் பையை வாங்கிவிட்டு ஆட்டோவை நிறுத்தினான். வீடு சென்று இரவு அத்திபழம் ஜூஸ் போட்டு குடுத்து தேவியின் அருகில் அமர்ந்தான். தேவி முகத்திற்கு ஃபேஷியல் மாஸ்க் போட்டிருந்தாள். அஞ்சலை ஹாலில் தூங்கிவிட்டாள். ராகவனுக்கு தனக்கு பேருந்தில் தோன்றியதை எல்லாம் தேவியிடம் கூற வேண்டும் என்று இருந்தது. ஆனால் அவள் கோபித்துக் கொள்வாளோ, தன்னை வெறுத்திடுவாளோ என்ற பயமும் இருந்தது. ஆனால், அவனால் அடக்க முடியவில்லை. தேவியிடம் “நமக்கு மூனு கண்ணு இருந்தா எப்படி இருக்கும்?” என்று கேட்டான். அவள் அவனை திரும்பி பார்த்தாள். “இங்க இருந்தா?” என்று அவள் நெற்றியை தடவினான். தேவி வாயை திறந்தவாறு புருவத்தை தூக்கி அவள் நெற்றியை பார்க்க முயன்றாள். ராகவனும் முயற்சி செய்து பார்த்தான். இருவரும் அவரவர் நெற்றியை பார்த்துக் கொண்டிருக்க கரண்ட் போனது. வெளிச்சம் இல்லாமல் போக, பார்வை தடுமாறி ஏதோ ஒரு கண் போன்ற வடிவத்தில் ஒரு ஒளி, நிறங்கள் மாறியபடி அவர்கள் கண்முன் தோன்றியது. கண்களை மூடினாலும், தேய்த்தாலும் போகவில்லை. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்