RAVICHANDRAN K R
சிறுகதை வரிசை எண்
# 233
உரசல்…
- புதுச்சேரி லெனின்பாரதி
தன் இடுப்பின் மேலே இருந்த குட்டிப்பெண் கலாவின் காலை மெல்ல தூக்கி அவள் பக்கத்திலேயே போட்டு விட்டு ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள் ரம்யா. கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. மணி என்னவாக இருக்கும் என்று எண்ணி மேலே சுவற்றில் மணியைப் பார்த்தாள். அது ஆறு மணியோடு நின்று போயிருந்தது. பதினைந்து வருடங்களுக்கு முன் கடலூர் பாடலீசுவரர் கோயிலில் நடந்த தன்னுடைய திருமணத்திற்கு பரிசாக ஆத்தூர் மாமா சாமிப்பிள்ளை கொடுத்தது. இத்தனை வருஷமாக மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. இனி மேலும் என்னால் முடியாது என்று நினைத்ததோ என்னவோ மூச்சை நிறுத்திக் கொண்டு விட்டது. வேறு சுவர்கடிகாரம் வாங்க வேண்டும். என்ன செய்வது வரவுக்கும செலவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறதே.. அடுத்த மாதம் பார்க்கலாம். என நினைத்துக் கொண்டு செல்போனை கையில் எடுத்து மணியைப் பார்த்தாள். மணி ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது. ‘அய்யய்யோ’ என்று அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தாள்.
பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த கலா அரைகுறை தூக்கத்தில் இவள் மேல் கையைப் போட்டு “அம்மா .. இன்னும் கொஞ்சம் நேரம் படும்மா..” என்று செல்லமாக கெஞ்சினாள்.
“இல்லடா செல்லம்.. மணி ஏழு ஆகியிருச்சு.. இப்பவே லேட்டு.. அப்புறம் வேலைக்கு டயத்துக்குப் போக முடியாது.. இன்னும் சமைக்கவே ஆரம்பிக்கலே.. “ என்று சொல்லிக் கொண்டு நெட்டி முறித்து வேகமாக எழுந்தவள் தலைமுடியை சுருட்டி முடிந்து கொண்டு புருஷனைத் தேடினாள். அறையின் இன்னொரு மூலையில் படுத்துக் கிடந்தான். அவன் ஒரு பக்கமும் பாய் இன்னொரு பக்கமும் கிடந்தார்கள். அவனுக்குப் பக்கத்தில் ஒரு காலி பாட்டில் கிடந்தது.
அடப்பாவி மனுஷா.. குடிக்க எங்க காசு கிடைத்தது என்று எண்ணிக் கொண்டாள். பதறிக் கொண்டு சமையலறைக்குப் போனவள் அரிசி மூட்டைக்குள் கையை விட்டு சின்ன டப்பாவை எடுத்து உள்ளே வைத்த பணம் சரியாக இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்தாள். ஐம்பது ரூபாய் குறைந்தது. பணத்தை எங்க மறைச்சு வச்சாலும் கண்டுபிடிச்சுடறானே மனுசன் என்று மனதிற்குள் புலம்பினாள்.
அவள் புருஷன் ராமன் நெல்லிக்குப்பத்தில் இருக்கும் தாமஸோடு சேர்ந்து ஆசாரி வேலை பார்த்து வந்தான் தொடர்ச்சியாக வேலை கிடைக்காது. திடீரென ஒரு மாசம் வேலை இருக்கும். அப்புறம் ரெண்டு மூணு நாள் வேலை இருக்காது. கையில் காசு இருந்தால் மனுசன கையில் பிடிக்க முடியாது. ஆனால் இந்த பாழாப் போன குடியை எங்கேயோ கத்துக்கிட்டு வந்து செலவுக்கு சரியாக காசு கொடுக்காமல் தினமும் உயிரை எடுக்கிறான். ராமன் இப்படி ஊதாரித்தனமாக இருப்பதால தான் ரம்யா வேலைக்கு போக வேண்டி வந்தது.
பஸ் பிடித்து கூத்தப்பாக்கம் விஜியலட்சுமி நகருக்குப் போய் இரண்டு வீடுகளில் காலை பத்து பாத்திரம் தேய்த்துக் கொடுத்து வீட்டை கூட்டி சுத்தம் செய்து விட்டு பஸ்ஸைப் பிடித்து வீட்டுக்கு வர வேண்டும். மீண்டும் சாயங்காலம் ஒன்னரை கிலோமீட்டர் நடந்தே போய் மஞ்சக்குப்பம் காமராசர் நகரில் மூணு வீட்ல காலையில செஞ்ச அதே வேலய செய்யணும். கையெல்லாம் பூத்துப் போயி ராத்திரி பூராவும் ஒரே எரிச்சலா இருக்கும். தேங்கா எண்ண தடவிகிட்டு படுத்துக் கொள்வாள். குட்டிப் பொண்ணு கலா அவ பக்கத்தில வந்து “கையெல்லாம் எரியுதாம்மா ..” என்று கேட்டுக் கொண்டு தன் பிஞ்சு விரலால் தடவிக் கொடுப்பாள். இதமாக இருக்கும்.
மொத்தமா எல்லாமா சேத்து மாசத்துக்கு பத்தாயிரம் கிடைக்கும். அதுவும் ஒரே நேரத்தில கிடைக்காது. அவங்க அவங்க அவங்களுக்கு காசு கெடைக்கும் போது கொடுப்பாங்க.. பஸ்ஸுக்கும் டெம்போவுக்கும் கொடுத்தது போக கையில் எழாயிரம் நிக்கும். வாடகை கொடுத்து, வீட்டுக்குத் தேவையான அரிசி, பருப்பு எல்லாம் நெருக்கி பிடிச்சு வாங்கிப் போடணும்… இதுல்ல கலாவோட ஸ்கூல் பீசு சேர்ந்துட்டா கண்ணா முழி பிதுங்கிப் போகும். நாம படற கஷ்டத்த நம்ம குழந்தை படக்கூடாதுங்கற நல்ல எண்ணம்.. இந்த பாழாப்போன மனுஷன் குடிச்சு குடிச்சு காச அழிக்காம இருந்தா கொஞ்சம் காச சேர்த்து வச்சு கலாவுக்கு ஏதாவது நகை நட்டு வாங்கலாம்.. ஆனா என்ன பண்ணறது என்று சிந்தித்துக் கொண்டே அடுப்பில் அரிசிக்கு உலை வைத்தாள்.
எட்டு மணிக்கு டவுன் பஸ் வந்து விடும் அதற்குள் குளித்து ரெடியாக வேண்டும். அவசர அவசரமாக புடவை, உள்பாவாடை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குப் போனாள். தண்ணி வேற எப்ப நிக்கும்னு சொல்ல முடியாது.
குளித்து விட்டு வந்து கொதித்துக் கொண்டிருந்த உலையில் அரிசியைக் கொட்டி விட்டு வேகவேகமாக கத்தரிக்காயை நறுக்கி கறிக்கு தயார் செய்துவிட்டு முருங்கைக் காயை நறுக்கி சாம்பாருக்கு பாத்திரத்தில் தண்ணீரை அடுப்பில் வைத்தாள்…
பத்து நிமிஷத்தில் எல்லாம் ரெடியானது. வேக வேகமாக தட்டை எடுத்து சாதத்தைப் போட்டு சாம்பாரை ஊற்றி பிசைந்து வாயில் மென்றும் மெல்லாமலும் போட்டுக் கொண்டு தண்ணீரை எடுத்து வாயில் ஊற்றிக் கொண்டாள்.. சுவற்றில் ஆணியில் மாட்டியிருந்த பேக்கை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள்.
“கலா.. கலா..”
கலா நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தாள்.
“அம்மா வேலக்கு போயிட்டு வர்ரேன்.. ஜாக்கிரதையா இருடி..”
புருஷனைப் பார்த்தாள். நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான்.
பெருமூச்சு விட்டுக் கொண்டு வாசலுக்கு வந்து காலில் செருப்பைப் போட்டுக் கொண்டாள்.
பக்கத்து வீட்டுக்கு முன்னால் போய் குரல் கொடுத்தாள்.
“ரமணிக்கா .. ரமணிக்கா..”
ரமணி உள்ளேயிருந்தே குரல் கொடுத்தாள்..
“ரம்யா .. வேலயா இருக்கேன்.. என்ன விஷயம்..”
“ஒண்ணுமில்லக்கா.. நான் வேலக்கி போறேன்.. கலா தூங்கிகிட்டு இருக்கா.. அந்த மனுஷனும் தூங்கிகிகிட்டு இருக்காரு.. கொஞ்சம் பாத்துக்க.. கலா வேற ஸ்கூலுக்கு போகனும்.. “
“ரம்யா .. ஸ்கூலுக்கு இன்னிக்கி லீவாம்.. “
“ஏதுக்குக்கா லீவு..?”
“சிதம்பரம் கோயில் தேரோட்டத்துக்கு தான்..”
“நல்லதா போச்சுக்கா.. நான் பதினொரு மணிக்கு வந்திடுவேங்கா .. வரட்டுமா..”
“போயிட்டு வா ரம்யா.. ஜாக்கிரதை..”
“சரிக்கா..”
சிரித்துக் கொண்டே ரம்யா பேருந்து நிற்கும் இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.. பஸ்ஸைப் பிடிக்க வேண்டும் எங்கிற சிந்ததனையோடு வேக வேகமாக எட்டு வைத்து நடக்க ஆரம்பித்தாள்.
தெருவே அவளைப் போலவே வேக வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது. சைக்கிளில் வேகமாகச் செல்பவர்களும், குழந்தையை கல்லூரிக்கு கொண்டு விட இரு சக்கர வாகனத்தில் அசுர வேகத்தில் சென்று கொண்டிருப்பவர்களும், வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் இவளைப் போன்ற பெண்களும், என்று எல்லாருமே இவளோடு போட்டி போட்டுக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தார்கள்.
தெரு முனை திரும்பும் போது தான் எதேச்சையாக எதிர்ப்புறம் கவனித்தாள். அங்கே அவன் நின்று கொண்டு புகை விட்டுக் கொண்டிருந்தான். இது தினமும் வழக்கமாக நடப்பது தான். அவன் தினமும் தெரு முனையில் நின்று இவள் அவனை கடந்து செல்லும் வரை பார்த்துக் கொண்டே இருப்பான். சில சமயங்களில் அசடு வழியச் சிரிப்பான். ரம்யா அதையெல்லாம் பெரிசாக எடுத்துக் கொள்ள மாட்டாள். வேகமாக பார்வையைத் திருப்பி பஸ் ஸ்டேண்டுக்கு சென்று விடுவாள். அன்றும் அப்படித்தான் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தன் வழியே நடக்க ஆரம்பித்தாள்.
நல்ல வேளை அவள் செல்ல வேண்டிய பஸ் இன்னும் வரவில்லை போல. இவளுடன் தினமும் வருபவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். பஸ் அடுத்த சில நிமிடங்களில் உடல் பெருத்து தள்ளாடி தள்ளாடி வந்தது. கூட்டம் நிரம்பி வழிந்தது. ரம்யாவுக்கு இது ஒன்றும் புதிதல்ல. தினமும் இந்த கூட்டத்தோடு நெருக்கடியடித்துத் தான் போய் வந்து கொண்டிருக்கிறாள்.
பஸ் படியில் நின்று கொண்டிருந்த சிலர் கீழே இறங்கி நின்று கொண்டார்கள். பஸ்ஸிலிருந்து சிலர் இறங்கினார்கள். “ஏறும்மா.. ஏறும்மா” என்று குரல் பஸ் உள்ளேயிருந்து கேட்டது. கண்டக்டர் தான். கைப்பையை கெட்டியாக பிடித்துக் கொண்டு படிக்கட்டின் பக்கவாட்டில் இருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டு ஏற ஆரம்பித்தாள். ஒரு படிக்கட்டில் தான் கால் வைத்திருப்பாள். கண்டக்டர் விசில் கொடுக்க பஸ் நகர ஆரம்பித்தது. இவள் தன்னை சுதாரித்துக் கொண்டு அடுத்த படி ஏறுவதற்குள் நல்ல வாட்ட சாட்டமாக இருந்த ஒருவன் இவள் மேல் வேகமாக இடித்து விட்டு உரசியபடியே நின்றான். இவள் திரும்பி அவனை ஒரு முறை முறை முறைத்ததும் “கூட்டத்துல தெரியாம பட்டுச்சிருச்சும்மா.. வேணும்னே யாராவது இப்படி செய்வாங்களா ‘என்று சொல்லிவிட்டு ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.
இவள் பதிலேதும் சொல்லாமல் மேலே ஏறி நின்றாள். ஒரு நிமிடம் சென்றிருக்கும். ‘ டிக்கெட் .. டிக்கெட்..’ என்று சொல்லிக் கொண்டு கண்டக்டர் இவளை உரசிக் கொண்டு பக்கத்தில் வந்து நின்றான். அவன் மூச்சுக் காற்று இவள் முகத்தில் பட்டது. ‘என்ன ரம்யா .. நல்லா இருக்கியா’ என்று சொல்லிக் கொண்டே இவளைப் பார்த்து கண்ணைச் சிமிட்டினான். இதுவும் தினசரி நடப்பது தான். தினமும் ஏதே சொந்தக்காரர்களை விசாரிப்பது போலத் தான் விசாரிப்பான். இவள் பெரும்பாலும் ஒரு சின்ன புன்னகையை உதிர்த்து விட்டு நடந்து விடுவாள்.
இவனைப் போல பொறுக்கிகள் பல பேர் பெண்ணின் பச்சைக் கொடிக்குத்தான் எதிர்பார்க்கிறார்கள். இவளோடு வேலைக்கு வரும் பல பெண்கள் நிறைய இது போல கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள். இவர்களுக்கு பெண்கள் என்றாலே கிள்ளுக் கீரை தான். ஒரு மலரில் தேனை சாப்பிட்டுவிட்டு அடுத்த மலருக்கு தாவி விடுவார்கள். பெண் தான் ஜாக்கிரதையாக வாழ பழகிக் கொள்ள வேண்டும். இவளிடம் பச்சை சிக்னல் கிடைக்கவில்லையென்றால் உடனே இவள் மேலே உரசி விட்டு ‘டிக்கெட்..டிக்கெட்’ என்று கத்திக் கொண்டு நகர்ந்து விடுவான். அன்றும் அது போல கடந்து போனான்.
‘கான்வெண்ட் ஸ்டாப் எறங்குகுங்க’ என்று கண்டக்டர் கத்தியதும் நினைவு வந்தவளாய் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.
வேலை செய்யும் அபார்ட்மெண்ட் கேட்டை திறக்க அது மெல்லிய சத்தம் எழுப்பிக் கொண்டே திறந்தது. உள்ளே செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த வாட்ச்மேன் கோபால் இவளைப் பார்த்ததும் அசடு வழியச் சிரித்தான்.
‘ரம்யா.. என்ன இன்னிக்கு லேட்டா.. இத்தினி நேரம் நீ வருவேன்னுதான் கேட் கிட்ட நின்னுகிட்டு இருந்தேன். இப்பத் தான் தண்ணி ஊத்தப் போனேன்” .. ஒரு பொய் சிரிப்பை உதிர்த்து விட்டு இவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்பட்டமாக பொய் சொல்கிறான்னு தெரியும். இவனிடம் பேச்சு கொடுத்தால் அது வம்பில் போய் முடியும் என்று தெரியும். சில நேரம் இவள் வருவதற்காகவே காத்திருந்து விட்டு இவளுக்கு உதவி செய்வதாக பாவ்லா காட்டி கேட்டை கொஞ்சமாக திறந்து விட்டு இவள் உள்ளே நுழையும் போது மேலே உரசிய படி நிற்பான். இதுவும் தொடர் நிகழ்வு தான். ரம்யா பதில் ஏதும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே தான் வேலை பார்க்கும் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அந்த வீடு முதல் மாடியில் இருந்தது.
அந்த அபார்ட்மெண்டே பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். கார்களும், இரு சக்கர வாகனகளும் அதனதன் இடத்தில் நிறுத்தப்பட்டிருக்கும். சத்தம் அதிகம் இருக்காது. சில குழந்தைகள் கைகளில் பந்து வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். இன்னும் சில குழந்தைகள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் விளையாடுவதற்காக சிறிய விளையாட்டு மைதானமும் அதில் சறுக்கு மரம், ஊஞ்சல் என்று சில விளையாட்டுக் கருவிகளை அமைத்திருந்தார்கள். பெரியவர்கள் நடை பயிற்சி செய்வதற்காக சிமெண்ட் போட்டு அமைக்கப்பட்ட நீண்ட பாதை.. அதில் பல வயதானவர்கள் நடந்து கொண்டும் சிலர் ஓடிக் கொண்டும் இருந்தார்கள். அந்த ரம்யமான சூழ்நிலையைப் பார்க்கவே மனது சந்தோசப்படும். ‘நமக்கு இங்கு ஒரு வீடு இருந்தால் எப்படியிருக்கும்’ என்று ரம்யாவின் மனசு நினைக்கும். நினைப்பத்தில் என்ன கஷ்டம் இருக்க போகிறது.. ஆனால் அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது… அங்கே உள்ள குழந்தைகள் தங்கள் தாய் தந்தை, தாத்தா, பாட்டியுடன் ஆங்கிலத்தில் சர்வசாதாரணமாக சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டு போவதை பொறாமையுடன் பார்ப்பாள். மனசு அந்த இடத்தில் கலாவை நிறுத்திப் பார்க்கும். கூடவே அவள் கணவனும் வருவான். யாரை குறை சொல்வது… பல வித எண்ணங்களுடன் மனம் ஏக்க பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும். தன் வாழ்க்கை இப்படி சிறப்பாக அமையாததற்கு யார் காரணம் என்ற ஒற்றைக் கேள்வி எப்போதும் நிழலாடிக் கொண்டேயிருக்கும். ஒரு பெருமூச்சு விட்டு விட்டு தனது வேலையைத் தொடர்வாள்.
எண்ணிக் கொண்டே அவள் வேலை பார்க்கும் வீட்டிற்கு வந்து விட்டாள். காலிங்க்பெல்லை அழுத்தினாள். கதவு திறந்தது. எஜமானியம்மாள் தான் கதவைத் திறந்தாள். ஐம்பது வயதிருக்கும். தலையின் முன்புறம் ஒன்றிரண்டு வெள்ளை முடிகள் தலை காட்டத் தொடங்கி இருந்தன.
“வா ரம்யா.. உன்னத்தான் எதிர்பார்த்துக் கிட்டிருந்தேன்.. நாங்க வெளியே கிளம்பிகிட்டு இருக்கோம். உடனே வேலய முடிச்சுகிட்டு நீ கெளம்பிடலாம்.. நீ வீட்டை கூட்டிகிட்டு இரு.. நான் போய் குளிச்சிட்டு வந்திடறேன்..” ரம்யாவின் மறு பேச்சிற்கு காத்திராமல் அவள் பாத்ரூமுக்கு சென்று விட்டாள்.
அந்த வீடு மிக அழகாக இருக்கும். பொம்மைகளும், பரிசுப் பொருட்களும் அதனதன் இடத்தில் அமர்ந்து ஒரு நேர்த்தியான அழகை தந்து கொண்டிருந்தன. எஜமானியம்மாளும் அவள் கணவன் மட்டுமே அங்கே இருந்தார்கள். ஒரு மகள்.. ஒரு மகன்.. அவர்கள் கல்யாணம் ஆகி வேறு வேறு ஊரிகளில் வசித்து வந்தார்கள். அப்போதாவது வருவார்கள். எல்லோருக்கும் ரம்யாவைத் தெரியும். அவர்கள் வரும் போது ரம்யாவுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கி வந்து தருவார்கள். சந்தோசமாக இருக்கும்.
‘அம்மா .. பால்..’
வாசலில் பால்காரன் குரல் கேட்டு ரம்யா துடைப்பத்தை கீழே போட்டு விட்டு சமையலறைக்குச் சென்று கையில் பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொண்டு வாசல் கதவைத் திறந்தாள்.
பால்காரன் ரம்யாவைப் பார்த்ததும் முகமெல்லாம் பல்லாக நின்றான்.
‘என்ன ரம்யா எப்படியிருக்க..?’
அடுத்த பச்சைக் கொடிக்காரர்.
‘நல்லாயிருக்கேன் அண்ணா..”
‘அண்ணா’ என்ற சொல்லை அவள் அழுத்திச் சொன்னது அவனுக்குக் கசந்தது. ‘என்ன ரம்யா .. என்ன போயி அண்ணான்னு சொல்லறே.. எனக்கு என்ன அவ்வளவு வயசாயிட்டுதா.. சும்மா ராமுன்னு பெயரச் சொல்லி கூப்பிடு’ என்று சொல்லி விட்டு பாலை அவள் கையில் இருந்த பாத்திரத்தில் ஊற்றும் சாக்கில் அவள் மேல் உரசி நின்றான். இவள் நாசூக்காக விலகிக் கொள்வாள். அவன் மீண்டும் இவளை நெருங்கி உரசி நிற்பான். அனலான அவனின் மூச்சுக் காற்று இவள் முகத்தில் படும்.
இவள் பேசாமல் பால் பாத்திரத்துடன் வீட்டிற்குள் நுழைந்து கதவை படார் என்று சாத்தினாள். ‘கிளம்புடா’ என்பது போல அந்த செயல் இருக்கும். சமையல் அறைக்குச் சென்று காலியாக மிச்சத்தில் கிடந்த பாத்திரங்களை எடுத்து வேகமாக விளக்க ஆரம்பித்தாள்.
எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ஹாலுக்கு வந்து ‘அம்மா’ என்று குரல் கொடுத்தாள்.
எஜமானியம்மா அறைக்கு உள்ளேயிருந்து வெளியே வந்தாள். புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது.
“ என்ன ரம்யா .. வேலையெல்லாம் முடிஞ்சுதா..”
“முடிஞ்சுரும்மா..”
“சரி .. ரம்யா.. நாங்க ஊருக்குப் போறோம்.. நாளைக்கி நீ வர வேண்டாம்.. நாளை மறுநாள் வந்தா போதும்.. சரியா ..”
“சரிம்மா..”
வாசல் கதவை திறந்து வெளியே வந்தாள்.
பஸ் ஸ்டேண்டில் இவளையும் இன்னொரு பெண்ணையும் தவிர வேறு யாரும் இல்லை. கால் மணி நேரமாக நின்று கொண்டிருப்பாள். ஆனால் பஸ் எதுவும் வரவில்லை. வெயில் வேறு வாட்டிக் கொண்டு இருந்தது. வியர்வை ஆறாக வழிந்தது. புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டே இருந்தாள். தண்ணீர் தாகம் வேறு வாட்டி எடுத்தது.
பஸ் ஸ்டேண்டைத் தாண்டிச் சென்ற ஒரு இரு சக்கர வாகனம் பத்தடி சென்றதும் நின்றது. அதில் ஹெல்மெட் போட்டிருந்த மனிதர் ஹெல்மெட்டை கழற்றி விட்டு ரம்யாவைப் பார்த்து “ரம்யா…” என்றார். ரம்யா யார் தன்னை பெயர் சொல்லி அழைப்பது என்று பார்த்தாள். அட சோமு அண்ணன்… இவள் வீட்டிற்கு பத்து வீடு தள்ளி அவர் வீடு.. எப்போது பார்த்தாலும் உடனே நின்று நலம் விசாரித்து விட்டுத் தான் செல்வார். கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் சாப்பாட்டுக்கே கஷடப்பட்ட போது இரண்டு மூன்று முறை ஐந்தாயிரம் ரூபாய் அளவிற்கு காய்கறி, மளிகை சாமான் வாங்கிக் கொடுத்தார். அதற்காக ஒரு முறை அவரிடம் ரம்யா பணம் கொடுக்க அவர் வீட்டிற்குச் சென்று கொடுத்த போது அன்போடு வாங்க மறுத்து விட்டார்.
“சோமு அண்ணே…” அழைத்துக் கொண்டே அவர் அருகில் வந்தாள்.
“என்னம்மா இந்தப் பக்கம்…?”
“வீட்டு வேல பாத்துட்டு வீட்டுக்குத் தான் போறேண்ணே..”
“வாம்மா .. நானும் வீட்டிற்குத் தான் போகிறேன்.. உன்ன உங்க வீட்டில இறக்கி விட்டுட்டு போறேன்..”
ஓரு நிமிடம் யோசித்தாள். “பரவாயில்லண்ணே.. பஸ் வந்துடும் .. அதில வர்றேன்..”
“எத்தன நேரம் நின்னுட்டு இருப்பா.. பரவாயில்ல வாம்மா”
இதற்கு மேலும் மறுப்பது சரியாக இருக்காது என்று எண்ணி பின்பக்க சீட்டில் ஏறி உட்கார்ந்தாள். உட்காரும்போது அவர் முதுகு மீது தெரியாமல் மோதி விட்டாள். அய்.. என்று நாக்கை மடித்து தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். அவர் ரம்யா உட்கார வசதியாக கொஞ்சம் முன் நோக்கி நகர்ந்து கொண்டு இருவருக்கும் கொஞ்சம் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொண்டார். இரு சக்கர வாகனத்தில் போய் ரம்யாவுக்கு பழக்கம் இல்லை. கொஞ்சம் கஷ்டப்பட்டு பக்கவாட்டில் இருந்த இரும்புப் பிடியை இறுக்கி பிடித்துக் கொண்டாள்..
“என்னம்மா .. உம் புருஷன் இன்னும் தண்ணி போட்டுட்டு தான் இருக்கானா..?”
“ஆமாண்ணா.. எத்தினியோ வாட்டி சொல்லியாச்சு.. மனுஷன் திருந்தற மாதிரி தெரியல்ல..”
“அவர் உன்னோட அன்பால தான் குணப்படுத்த முடியும். அவருகிட்ட மனம் விட்டு பேசு.. அவரோட வெளிய போயிட்டு வா.. உங்க பொண்ணயும் அவர் கிட்ட அன்பா பேசச் சொல்லு.. நீங்க விலகிப் போனா அவரும் உங்கள விட்டு விலகித் தான் போவாரு.. என்ன சொல்றது சரிதானே..?”
“சரிண்ணே…”
“உனக்கு எப்ப என்ன உதவி வேணும்னாலும் கேளு.. செய்யறேன்.. தயங்காம கேளு .. புரியுதா..?”
பேசிக் கொண்டே வந்ததில் அவள் வீடு வந்தது கூட தெரியவில்லை.
இவளை இறக்கி விட்டு விட்டு அவர் போக ஆரம்பித்தார்…
ரம்யா அவர் செல்லும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள்..
தெரு மனிதனும், பஸ் கண்டக்டரும், அபார்ட்மென்ட் வாட்ச்மேனும், பச்சைக் கொடிகளும் அவள் கண் முன்னே வந்து வந்து சென்றார்கள்.. *
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்