logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

D. KUPPUSAMY

சிறுகதை வரிசை எண் # 231


முட்டை அன்று ஊரிலிருந்து வீட்டுக்காரரோடு வந்திருந்த மாமியார் மரகதம், மருமகள் மாலதியை வறுத்தெடுத்துவிட்டாள். தன் பிள்ளை அருண் வேலைக்குச் செல்லும் வரை, ‘‘என்னம்மா அப்பார்ட்மெண்ட் வீடு வசதியா இருக்கா? பொருள்கள் வாங்கக்கொள்ள கடைகண்ணியெல்லாம் பக்கத்தில் இருக்குல்ல? மூனாவது மாடியில இருக்கீங்க, லிஃட் ஒழுங்கா வேலை செய்யுதா?’’ என்றெல்லாம் அன்பு மழை பொழிந்தவள் அவன் வெளியே சென்றுவிட்டானா என எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே வந்தவுடன் ஆரம்பித்தாள், ‘‘என்னங்க, இன்றைக்கு சாயுங்காலம் ஊருக்குக் கிளம்பிடலாங்க,’’ நெற்றியைச் சுறுக்கிய கணவர், ‘‘என்னம்மா ஒரு வாரம் தங்கலாமுன்னு சொல்லிட்டு வந்த...’’ ‘‘ஆமாம், இங்க பேரன் பேத்தின்னு வீடு நெறைய குழந்தைக் குட்டிங்க இருக்கு பாருங்க, அதுங்கக்கூட விளையாடிக்கிட்டே நேரத்தை ஓட்டப்போறீங்களாக்கும்...’’ மரகதம் சத்தமாகப் பேச, ஓடிப்போய் அவள் வாயை மூடி, ‘‘மருமகள் காதுல விழப்போவுது!’’ எச்சரித்தார், அவர். அதற்குப் பிறகு இன்னும் உச்ச ஸ்தாயில் பொரிந்தாள், அவள். ‘‘பின்ன என்னங்க, கல்யாணம் ஆகி வருஷம் அஞ்சு ஆகல? இன்னும் ஒரு புழு பூச்சி வைக்கலன்னா எப்படி? ஊருல, நம்ம புள்ளக்கூட கல்யாணம் பண்ணவங்கல்லாம் ரெண்டு மூனுன்னு பெத்துக்கிட்டு குடும்பக் கட்டுப்பாடே செஞ்சிக்கிட்டாங்க தெரியுமா?’’ என்ற அவளைக் கையமர்த்திவர், ‘‘அம்மா, ஒரு டீச்சரா இருந்துக்கிட்டு நீ இப்படிப் பேசலாமா? ரெண்டுபேருக்கும் இன்னும் வயசிருக்கு... நடக்கும்போது நடக்கும். அந்தக் கதையை விடு!’’ ‘‘இன்னும் பத்து வருஷம் கழிச்சியா? கேட்கறவங்களுக்கு பதில் சொல்ல முடியலங்க என்னால. அப்பவே எனக்கு மனசுலப் பட்டுது. எலும்புந்தோலுமா... இது வேணாமுன்னு எவ்வளவோ சொன்னேன்; யார் கேட்டீங்க?’’ என்று கூச்சலிட்டவளுக்கு, பதில் சொன்னால் மேலும் பேசுவாள் என்பதால் கண்களை மூடி சோஃபாவில் சாய்ந்துகொண்டார், அவர். எல்லாவற்றையும் காதில் வாங்கிக்கொண்டு அமைதியாக சமையலறையிலிருந்து காப்பிக் குவளைகளுடன் வெளிப்பட்டாள் மாலதி, ‘‘மாமா, காபி எடுத்துக்கோங்க. அத்தை, காபி ஆறிடப்போவுது...’’ என்று டீப்பாயில் வைத்துவிட்டு மதிய சமையலைத் தொடரச் சென்றாள். கண்விழித்த மாமனார், உள்ளே செல்லும்வரை ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்துக்கொண்டேயிருந்தார். 2 ‘‘இப்பேர்ப்பட்ட நல்ல பொண்ணை...’’ மனதுக்குள் பொருமினார், அவர். இப்படியாக அங்கேயிருந்த நான்கு நாட்களும் மாலதியை உண்டு இல்லை என்று உதறிவிட்டாள், மரகதம். இறுதி நாளன்று அவளுக்கு எதிரிலேயே தன் பிள்ளையிடம், ‘‘ஏம்பா, இப்படியே இருந்தா எப்படி? அவளை ஏதாவது டாக்டர்கிட்டக் காட்டக்கூடாதா? இப்பல்லாம் ஏதோ கருத்தரிப்பு மையம் அது இதுன்னு சொல்றாங்களே...’’ இதைக் கேட்டவுடன் காதுகளைப் பொத்திக்கொண்டு படுக்கையறைக்கு ஓடினாள், மாலதி. பொறுமையிழந்த அருண், ‘‘அம்மா, வாய்யை மூடுங்க! எல்லாம் எனக்குத் தெரியும்,’’ என்று எரிந்துவிழுந்தான். ‘‘ஏங்க, கிளம்புங்க ஊருக்கு. நல்லதைச் சொன்னா பொல்லாப்புத்தான் வருது,’’ என்று அவள் முறுக்க, மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக்கொண்டார், அவர். இருவரையும் வண்டி ஏற்றிவிட்டு வந்த அருண், தேம்பியபடி படுக்கையில் கிடந்த மனைவியை வாரியணைத்துக்கொண்டு, ‘‘டியர், அம்மா சொன்னதை பெரிசா எடுத்துக்காதே! வயசானவங்க ஏதையாவது சொல்லுவாங்க, அதுக்காக வருத்தப்படக்கூடாது.’’ என்று நயமாகச் சொன்னான். ‘‘இல்லைங்க, நாம் டாக்டரையும் பாத்தாச்சு. அவுங்களும் உறுதியா எதையும் சொல்லல்ல. நானே சம்மதிக்கிறேன், நீங்க, நீங்க... வேற கல்யாணம் பண்ணிக்கோங்க!’’ சொல்லிவிட்டு கண்கள் கலங்க மீண்டும் படுக்கையில் விழுந்தாள், மாலதி. தானும் பக்கத்தில் படுத்து அவளை அணைத்துக்கொண்டவன், ‘‘என்ன சொல்ற மாலதி, உன்னால குழந்தை பெத்துக்க முடியலன்னா, நான் வேற ஒருத்தியைக் கட்டிக்கணுமா? அதே சிக்கல், ஒரு ஆண்கிட்ட இருந்தா அவளை வேறொருத்தரைக் கட்டிக்கன்னு எந்த ஆணாவது சொல்லுவானா? அப்படிச் சொன்னாலும், ஒரு பெண் கனவிலும் அதை ஏத்துக்கமாட்டா! பொறுத்துக்கிட்டு கடைசிவரைக்கும் அவனோடவே வாழ்ந்துட்டுப்போவாள். அப்படியிருக்க, ஒரு ஆண் மட்டும் ஏன் அந்தச் சிறு குறையைப் பெரிசுபடுத்தணும்? ஆணுக்கு ஒரு நியதி, பெண்ணுக்கு ஒன்னா?’’ அடிமனத்திலிருந்து ஒலித்த அவனுடைய ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டுப் பெருமிதம் கொண்டவள், வியர்த்திருந்த அவனுடைய நெற்றியைப் புடவைத் தலைப்பால் ஒத்திஎடுத்தாள்; தன்னுடைய கண்களையும் துடைத்துக்கொண்டு, ‘‘நேரமாச்சி, வாங்க சாப்பிடலாம்,’’ 3 என்று அவனைக் கையைப் பிடித்து அழைத்துப்போனாள். வார்த்தைகளால் அவளுக்கு இதத்தை ஏற்படுத்தியவன் அன்றிரவு உடலாலும் அவளை மகிழ்வித்துவிட்டு விரைவிலேயே உறங்கிப்போனான். ஆனால், மாலதியின் விழிகளோ மூட மறுத்து முரண்டுபிடித்தன. அவ்வேளையில், உள்மனம் அவளுடன் பேசியது, ‘‘அடியே, உன் மாமியார் அத்தனை வெறுப்பேற்றியும் உனக்கு ஏன் கோபமே வரவில்லை? அவ்வளவு நல்லவளா நீ? இல்லையில்லை, உன்பேரில் தப்பு இருக்கு. அதனால்தான் நீ பொறுத்துக்கொண்டாய். அது எனக்கு நன்றாகவே தெரியும்!’’ உள்ளிருந்து கேட்ட அக்குரலால் மூச்சிறைக்க எழுந்து உட்கார்ந்துகொண்டாள், மாலதி. அந்த இருட்டிலும், அன்றைய கல்லூரி நாட்கள் அவளது கண்முன்னே பளிச்செனக் காட்சிகளாய் விரிந்தன. மாலதி, ஒரு நடுத்தரத்துக்கும் குறைவான குடும்பத்தைச் சேர்ந்தவள். ஆட்டோ ஓட்டுநரான அவளுடைய தந்தை தன் குடும்பத்தில் யாரும் அதிகம் படிக்கவில்லை என்பதால் அவளை வெளியூரில் ஹாஸ்டல் வசதியுடன் ஒரு நல்ல கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைத்தார். அதற்கான செலவுகளுக்காக அவர் நேரம் காலம் பார்க்காமல் மாடாய் உழைத்தார்; போதாக்குறைக்கு கடன் வாங்கவும் செய்தார். தன் பொறுப்பையுணர்ந்து மாலதியும் நன்றாகவே படித்துவந்தாள். அப்பா அனுப்பிய பணத்தை வீணடிக்காமல் சிக்கனமாகவே இருந்தாள், அவள். ஆனால், ஹாஸ்டலில் அவளுடன் தங்கியிருந்த மாணவிகளும் பக்கத்து அறைத் தோழிகளும் அடிக்கடி ஒன்றுகூடிக் கும்மாளம் அடித்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்களுடைய ஸ்மார்ட் போன்களில் வரும் விடியோக்களை ஒருவர் மற்றவர்களிடம் காண்பித்து மகிழும் வேளைகளில் மாலதியும் ஆர்வக்கோளாறால் எட்டிப் பார்ப்பதுண்டு. அப்போதெல்லாம், மாலதியின் பழைய நோக்கியா போனைப் பற்றிக் கிண்டலடிப்பதும் அவர்களது வாடிக்கையாயிருந்தது. வார்டனை ஏமாற்றிவிட்டு அல்லது வேறுவிதமாகக் கவனித்துவிட்டு வெளியே செல்லும் தோழிகள் ஹோட்டல், பீச், மார்க்கெட் எனச்சுற்றிவிட்டு வந்து அந்த அனுபவங்களைச் சொல்லிக் குதூகலிப்பதும் வாங்கிவந்த துணிமணிகள் முதலான பொருள்களைக் காட்டிப் பீத்திக்கொள்வதும் மாலதிக்கு சில வேளைகளில் ஏக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஒரு நாள், மாலதியின் அறைத் தோழிகள் ‘பப்புக்குச்’ சென்று இரவெல்லாம் தண்ணி, டான்ஸ் என கூத்தடித்துவிட்டு வந்து மறுநாள் கல்லூரிக்கும் செல்லாமல் தூங்கிக்கொண்டிருந்தார்கள். மாலையில் எழுந்த அவர்கள், ‘‘வாட் எ மியூசிக்! வாட் எ டான்ஸ்! சச் எ மார்வலஸ் மோமண்ட்!’’ என்றெல்லாம் தங்களுக்குள் வியந்த வண்ணமிருக்க, புத்தகத்தைப் புரட்டியபடியே அவற்றைக் காதில் வாங்கிய மாலதிக்கு ஆச்சரியம்! இத்தனை ஆடம்பரச் 4 செலவுகளுக்கு இவர்களுக்கு ஏது பணம்? அப்படியொன்றும் பணக்காரப் பெண்கள் இல்லையே இவர்கள், என்றெல்லாம் தனக்குள் கேள்விகளை அடுக்கினாள், அவள். ஒரு நாள், அது பற்றி அவர்களைக் கேட்டேவிட்டாள், மாலதி. அந்த நிமிடந்தான் அவளுடைய எதிர்காலப் பிரச்சனைகளுக்கான பிள்ளையார் சுழி என்பது அன்று அவளுக்குத் தெரியாது! போய் கதவையும் சன்னலையும் சாத்திவிட்டு வந்த அவர்களில் ஒருத்தி, ‘‘ஏய் பணம் ஏதுன்னா கேக்கற... நம்ம உடம்பே பணம் காய்க்கற மரந்தான்டி!’’ இதைக் கேட்டு காதுகளைப் பொத்திக்கொண்ட மாலதி, ‘‘சீச்சீ! இப்படியெல்லாமா...’’ என்றதும் அடுத்தவள், ‘‘ஏய்! நீ அதுக்குள்ள அங்கேயே போயிட்டயா? எங்களைப் பாத்தா பிராஸ்ட்டுங்க மாதிரியா தெரியுது உனக்கு?’’ என்று நாக்கைக் கடித்தாள். ‘‘உடம்பை வச்சு சம்பாதிக்கறதுன்னா, வேற என்னவாம்?’’ என்ற மாலதியை நெருங்கிவந்த மாணவிகள், ‘‘பெண்கள், குழந்தை பெத்துக்கறவரைக்கும் மாசாமாசம் வந்து வீணாப்போகுதே...’’ ‘‘சீ...’’ என்று தலையில் கைவைத்துக்கொண்ட மாலதியை உலுக்கி, ‘‘அந்தக் கருமுட்டைகளுக்கு விலை, பதினஞ்சுலயிருந்து ஐம்பதாயிரம் வரை, தெரியுமா உனக்கு?’’ என்றனர். மாலதி, ‘‘அது எப்படி? எங்கே?’’ கேட்டவுடன் அவர்கள் தொடர்ந்தனர், ‘‘அதுக்கெல்லாம் புரோக்கர் இருக்காங்கக் கண்ணு. இந்த ஆஸ்பிட்டல், இந்த நாள், இந்த நேரமுன்னு சொல்லிடுவாங்க. நாம போயிடவேண்டியதுதான். ஒரு மணி நேரத்துல கையில பணத்தோட வந்துடலாம்.’’ ‘‘எதுக்காக அதை விலை கொடுத்து வாங்கறாங்க?’’ அம்மாஞ்சியாகக் கேட்டாள், மாலதி. ‘‘அதுவா, குழந்தைப்பேறு இல்லாதவங்க செயற்கைக் கருத்தரிப்பு மையத்துக்கு (IVF) வருவாங்க. நம்மக்கிட்ட எடுக்கற கருமுட்டையில ஆணின் விந்தணுவை செலுத்தி அந்தத் தாய் அல்லது வாடகைத் தாயின் வயித்துல வச்சு வளர்த்து குழந்தை பெறச் செய்வாங்க, அதுக்காகத்தான்.’’ விளக்கமாகச் சொன்னாள், ஒரு மாணவி. ‘‘அதுக்காக இவ்வளவு பணமா தருவாங்க?’’ 5 மீண்டும் கேட்டாள், மாலதி. ‘‘என்னடி, சாதாரணமாக் கேட்டுட்ட? இப்படிக் குழந்தையை உருவாக்கிக் தர, அந்த ஆஸ்பிட்டலுங்க இலட்சக் கணக்குல பணம் வாங்கறாங்க, தெரியுமா? நாடு முழுக்க இந்த வியாபாரம் லட்சோப லட்சம் கோடிகளில் புரளுதாம். அதனாலதான், ஊருக்கு ஊர், மூலைக்கு மூலை இந்த மையங்கள் பெருகிக்கிட்டே போவுது. இதற்காக உள்ள இடைத்தரகர்களே ஆயிரக்கணக்குல சம்பாதிக்கறாங்க தெரிஞ்சிக்கோ!’’ நீட்டி முழக்கினாள், வேறொருத்தி. ‘‘இருந்தாலும், எனக்கு இது சரியாப் படல. திருமணம் பண்ணிக்கிட்டு நம் கணவரோட சேரவேண்டிய இது, யாருன்னே தெரியாத ஒருத்தர்கூட... நினைக்கவே கூச்சமா இருக்குடி!’’ மாலதி இப்படி முகத்தைச் சுளித்தவுடன், ‘‘ஏய்! இவள், சரிப்பட்டு வரமாட்டா... அவள் அந்த நோக்கியாவையே கட்டிக்கிட்டு அழட்டும், வாங்கடி போகலாம்!’’ என்று உறுமிவிட்டு, கலைந்து செல்கிறார்கள். அந்தக் கல்லூரிப் பதுமைகளின் தொடர்ச்சியான ஆடம்பரங்களும் அவர்கள் அவிழ்த்துவிடும் ஆனந்த அனுபவங்களும் நாளடைவில் மாலதியின் மனத்தில் லேசான தாக்கத்தை விதைத்தன. ஒரு நாள் மாலை, அறையில் மாலதி மட்டும் படித்துக்கொண்டிருக்க மற்ற தோழிகள் அந்த வாரத்தில் வெளிவந்த ஏதோ ஒரு திரைப்படத்தைப் பற்றிய விவாதத்தில் இருந்தனர். அப்போது, ஒருத்தியின் செல்போன் ஒலிக்க, காதில் வைத்தவள் பிறகு சொல்வதாகக் கூறி வைத்துவிட்டு, ‘‘காசிதான், அதான்டீ நமக்குக் காசைக் கொட்டும் புரோக்கர் காசிநாதன் பேசறான். நாளைக்கு ஆஸ்பிட்டலுக்கு வரச்சொல்றான், யாருக்காவது வசதிப்படுமா?’’ சொல்லிவிட்டு ஒவ்வொருத்தராக நோக்குகிறாள். ஒருவள் கையைவிரிக்க மற்றவள் உதட்டைப் பிதுக்க அடுத்தவள் இல்லையெனத் தலையை ஆட்ட இப்படியாக எல்லாருமே மறுத்துவிடுகிறார்கள். அதில் ஒருத்தி, மாலதியைக் காட்டி, ‘‘இவதான் முழுகி ரெண்டு நாள் ஆச்சி,’’ என்றவுடன் மற்றவர்கள், ‘‘ஏய்! ஏய்! கிளம்பு...’’ ‘‘எங்கே? அதுக்கெல்லாம் நான் வரல. என்னை விட்டுடுங்கடி!’’ மாலதி மறுக்க, மற்றவர்கள், ‘‘அடியே, பயப்படாதே. நாங்க கூட்டிக்கிட்டுப் போறோம்,’’ சொல்லிவிட்டு மாலதிக்கு ஆடைகளை மாற்றி வலுக்கட்டாயமாக ரம்யா என்ற மாணவியுடன் அனுப்பிவைக்கிறார்கள். 6 ஆட்டோவில் தோழியுடன் வந்து இறங்கிய மாலதி நிமிர்ந்து பார்க்கிறாள். ஏதோ புரியாத பெயரில் செயற்கைக் கருத்தரிப்பு மையம் என்று ஒரு பெரிய பெயர்ப்பலகை. வாசலிலேயே காத்திருந்த காசிநாதன் அவர்களை மருத்துவமனைக்கு உள்ளே அழைத்துப்போகிறான். உள்ளே, தனியறையில் ஏதேதோ அச்சிட்டத் தாள்களில் மாலதியைக் கையெழுத்துப் போடச்சொல்கிறார்கள். அதில் அவள் பெயரும் வயதும் மாற்றி எழுதப்பட்டிருக்கிறது. என்னவென்று மாலதி கேட்க, ‘‘அது அப்படித்தான். அதையே கையெழுத்தாப் போடு. ஹாஸ்டலுக்குப் போய்ச் சொல்றேன்,’’ என்று ரம்யா சமாதானப்படுத்த, கையொப்பம் வாங்கியபின் ஆப்பரேஷன் தியேட்டருக்கு அழைத்துப்போய் வேலையை முடித்துவிட்டு அனுப்பிவிடுகிறார்கள். வெளியே காத்திருந்த காசி பதினைந்தாயிரத்தை அவர்கள் கையில் திணித்துவிட்டு, ‘‘என்ன ரம்யா, புதுக்கேசை கூட்டியாந்திருக்க... எனக்கு ஒன்னும் இல்லையா?’’ என்று பல்லிளிக்கிறான். ‘‘போய்யா, இதுக்கு நீ எவ்ளோ கமிஷன் வாங்கறன்னு எனக்குத் தெரியாதா...’’ என்று சொல்லிவிட்டு மாலதியை ஹாஸ்டலுக்குக் கூட்டிச் செல்கிறாள், ரம்யா. மிகுந்த சோர்வோடு காணப்பட்ட மாலதியை அறையில் படுக்கவைத்துவிட்டு பணத்தைத் தலையணைக்கு அடியில் செருகிவிட்டுச் செல்கிறாள். மாலையில் கண்விழித்த மாலதி, மற்ற எல்லாரும் அவளருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறாள். ஒருத்தி, ‘‘என்னடீ, நல்ல வருமானமா... முதல்ல ஒரு ஸ்மார்ட் போன் வாங்கற வழியப்பாரு,’’ அடுத்தவள், ‘‘அடுத்த மாசம் புதுத் துணிமணியா?’’ இன்னொருத்தி, ‘‘புது போன்! புது டிரெஸ்! அசத்தப்போறாடீ, நம்ம மாலதி,’’ என்று கேலிபேச, எல்லாரும் சிரிக்கிறார்கள். வயிற்றைப் பிடித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்த மாலதி, ‘‘அந்தப் பேப்பர்ல, பெயர், வயசு... மாறியிருந்ததே? ரம்யா, ‘‘அதுவா, கருமுட்டை தானம் செய்ய இருபத்தோரு வயசு முடிஞ்சிருக்கணும். அதுக்காகத்தான் இந்த கோல்மால். மாலதி, ‘‘ஏதோ... ஐம்பதாயிரம் அது இதுன்னு சொன்னீங்க?’’ என்றதும் ஒரு தோழி, 7 ‘‘அதுக்கு நீ ஹார்மோன் ஊசிப் போட்டுக்கணும். அப்பத்தான், அதிகக் கரு முட்டை அவுங்களுக்கு, அதிக பணம் உனக்கு!’’ என்கிறாள். இப்படியாக, அந்த ஜோதியில் தானும் கலந்துந்துவிடுகிறாள், மாலதி. அவர்களுடனேயே, எங்கும் செல்வது. அவர்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாமல் ஆடம்பரச் செலவு செய்வது என அவளுடைய வாழ்க்கை முறையே முற்றிலும் மாறிப்போய்விடுகிறது. வெவ்வேறு மருத்துவமனைகளில், மாதாமாதம் அவளுடைய தானமும் தொடர்கிறது. இப்போதெல்லாம் ஹார்மோன் ஊசி போட்டுக்கொள்வதால் அதிக வருவாய் ஈட்டி மற்றவர்களையும் மிஞ்சிவிடுகிறாள், மாலதி. இறுதியாக எட்டாவது முறை அவள் தானம் செய்துவிட்டு வந்தவுடன் வழக்கத்துக்கும் அதிகமாக அடிவயிற்றில் வலி; இரத்தப்போக்கு, வீக்கம் என பலவிதமாக தொந்தரவுகள். இதை தோழி ரம்யாவுடன் பகிர, அவள், ‘‘ஒரு பெண் அதிகபட்சம் அஞ்சு இல்ல ஆறு முறைதான் கொடுக்கணும். நீ என்னடான்னா... ஏழு எட்டுன்னு போய்க்கிட்டேயிருக்க! அதனால வர்ற ஒரு டிசீஸ்தான் இது. இதுக்கு ஒரு வாரமாவது ஆஸ்பிட்டல்ல இருக்கணும்; பத்தாயிரத்துக்கு மேல செலவும் ஆகும், தெரிஞ்சிக்கோ!’’ என்று சொல்ல, மனமுடைந்துபோகிறாள், மாலதி. தன்னிடம் பணம் இருந்தும் தேர்வு நெருங்குவதால் அதற்கான அவகாசம் இல்லையென்பதால் அப்படியே விட்டுவிட, சில நாட்களில் தானாகவே சரியாய்விட்டதாக அவள் நினைத்தாலும் எதிர்காலத்தில் அது எப்பேற்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அன்று அவள் உணரவில்லை. ஆனால், இன்று அதை அனுபவிக்கிறாள், மாலதி. இந்த அவளுடைய ‘ஃபிளாஷ் பேக்’ முடிந்தவுடன் அவளது உள் மனத்திலிருந்து வந்த ஒலியும் ஓய்ந்துபோகிறது. நல்ல தூக்கத்திலிருக்கும் தன் கணவனை திரும்பிப் பார்க்கிறாள், மாலதி. கள்ளம் கபடமில்லாத முகத்துக்குச் சொந்தக்காரனான அவனுக்குத் தன் கடந்தகால தவறால் விளையும் இன்னலை நினைத்து வெதுநேரம் வெதும்புகிறாள், அவள். தான் இல்லையென்றால் இவர் யாரையாவது மறுமணம் செய்துகொண்டு குழந்தைக் குட்டிகளுடன் இன்பமாக இருக்கலாமே என்ற எண்ணம் அவளுக்கு எழுகிறது. மெதுவாக எழுந்து கடிகாரத்தைப் பார்க்கிறாள், மாலதி. அது மணி மூன்றைக் காட்டுகிறது. அரவமில்லாமல் அறைக்கதவைத் திறந்துகொண்டு ஸ்டோர் ரூமுக்குச் செல்கிறாள். அங்கேயிருந்த பூச்சி மருந்தைத் தேடியெடுத்துக்கொண்டு சமையலறை நோக்கிப் போகிறாள். ஒரு குவளையில் நீரைப் பிடித்து அதில் மருந்தையிட்டுக் கலக்குகிறாள். சற்று நேரம் நிதானித்தவள், அதை வாயில் வைக்கப்போகும் நேரம்... ஒரு கை அவளது தோல்மேல் பதிகிறது. அவள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க, அது அருண்! 8 ‘‘அதில் பாதியை எனக்கும் கொடு. குறை கூறியே அடுத்தவரை துன்புறுத்தும் இந்த உலகத்தைவிட்டு ரெண்டுபேரும் நிம்மதியாய் போய்ச் சேர்ந்திடலாம்!’’ கண்கலங்கக் கூறுகிறான், அவன். டம்லரைக் கீழே போட்டுவிட்டு, அவனுடைய கால்களைக் கட்டிக்கொண்டு அழுகிறாள், மாலதி. அவளை கைத்தாங்களாக அறைக்கு அழைத்துப்போகிறான், அவன். அங்கே இருக்கையில் அமரவைத்து, ‘‘மாலதி, உன்பேர்ல ஒரு தப்பும் இல்லையே, ஏம்மா... ஏம்மா இந்த திடீர் முடிவு?’’ குமுறுகிறான், அருண். , ‘‘இல்லைங்க. என்பேர்ல தப்பு இருக்குங்க, இருக்கு!’’ என்று மூச்சிறைக்கக் கூறியவள், மூக்கை உறிஞ்சி, கண்களைத் துடைத்துக்கொண்டு, தனக்குக் மகப்பேறு இல்லாமல்போனதற்கான தன் கடந்தகால தவறுகளை ஒன்றுவிடாமல் அவனிடம் ஒப்புவிக்கிறாள். அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுமுடித்த அவன், ‘‘இந்த உலகத்துல தவறு செய்யாதவங்க யாரும்மா? நம்மப் படைச்ச கடவுளே தப்பு செஞ்சிருக்கறதாப் புராணங்கள் சொல்லுது,’’ என்று சமாதானம் சொல்லி, விடியும்வரை அவளைத் தன் அரவணைப்பிலேயே வைத்திருக்கிறான். அடுத்தநாள், பழைய டாக்டரிடம் தன்னை அழைத்துப்போகச் சொன்ன மாலதி, அந்தப் பெண் மருத்துவரிடம் தன் கடந்தகாலக் கருமுட்டை விவகாரம் பற்றி அனைத்தையும் சொல்லிவிடுகிறாள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட அந்த மருத்துவர், ‘‘இதை நீ முன்கூட்டியே சொல்லியிருந்தால், அதற்குத் தகுந்த ட்ரீட்மெண்ட் எடுத்திருக்கலாமே...’’ எனக் கூறி, அவளைத் தன் மருத்துவமனையிலேயே சில வாரங்கள் தங்கவைத்து, நிறைய பணத்தை விழுங்கிவிட்ட அந்த சிகிச்சைக்குப் பின் தொடர்ந்து விழுங்கச் சொல்லி சில மாத்திரைகளையும் கொடுத்து வீட்டுக்கு அனுப்புகிறார். மருத்துவமனையிலிருந்து வந்த மாலதி சற்று சதைப்பிடித்து மேலும் அழகாக ஆகியிருப்பதைப் பார்க்கிறான், அருண். இயல்பு நிலைக்குத் திரும்பிய இருவரும் எப்போதும்போல தாம்பத்யத்தில் ஈடுபடுகிறார்கள். ஒரு மாறுதலுக்காக அவளை சில நாட்கள் சுற்றுலாவுக்கும் அழைத்துப்போகிறான், அருண். திரும்பி வந்தபின் ஒரு நாள், ‘‘ஏங்க, எனக்கு விலக்குத் தள்ளிப்போகுது. டாக்டர்கிட்டப் போகலாங்க,’’ அவள் சொல்ல, அவ்வாறே அழைத்துப்போகிறான், அருண். மருத்துவர் வெகுநேரம் தனியறையில் அவளைப் பரிசோதித்துவிட்டு வந்து, ‘‘எனக்கு என்ன கிஃட் தரப்போறீங்க, அருண்?’’ என்றவுடன் புரியாமல் விழிக்கிறான், அவன். மருத்துவர் சிரித்தபடி, 9 ‘‘ கன்கிராட்ஸ்! நீங்க அப்பாவாகப்போறீங்க...’’ என்று சொல்ல அளவில்லாத ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கிறான், அவன். தனக்கு ஒரு வாரிசு உருவாகிறதே என்பதாலா அந்த ஆனந்தம்? இல்லையில்லை, நிறைநிலவான தன் மனைவியிடம் உள்ள கலங்கம் விலகியதே, அதனால். வெளியே ஓடி வந்தவன், தன் அன்னைக்கு ஃபோன் போட்டு, ‘‘அம்மா, அம்மா, ஒரு நல்ல செய்தி. நீங்க பாட்டி ஆகப்போறீங்க! மாலதி முழுகாம இருக்கா...’’ என்கிறான். அடுத்த முனையிலிருந்து அவனுடைய தாயார், ‘‘எனக்குத் தெரியும்டா! என் மருமகளுக்கு, என் தங்கத்துக்கு, ஆண்டவன் எந்தக் குறையும் வைக்கமாட்டான்னு...’’ என்று நெகிழ்கிறார். ஆசிரியையானத் தன் அன்னையிடம், இதுவரை முட்டை மட்டுமே வாங்கிக்கொண்டிருந்த தன் மனைவி இன்று பாஸ் மார்க் வாங்கிவிட்ட மகிழ்ச்சியோடு அலைபேசியை அணைக்கிறான், அவன். ---------------------------------------------------------------------------------------

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.