Kalyanasundaram
சிறுகதை வரிசை எண்
# 230
அழுக்காறு
நிரஞ்சனாவின் வீடு முழுவதும் வெடி மருந்தின் நெடி பரவிக்கிடந்தது. வீட்டில் உள்ளவர்கள் மீது வீட்டில் இருக்கும் பொருள்களில் மீது, அவர்கள் சுவாசிக்கும் காற்று , உண்ணும் உணவு , உடுத்தும் உடை, உடல் வியர்வை எல்லாவற்றிலும் வெடி மருந்தின் நெடி. அவர்களின் நாசிகளுக்கு கூட வேறு வாசனையை பிரித்துப் பார்க்கும் திறன் கிடையது.
வீட்டில் சமையல் வேலைகளை முடித்துவிட்டு வேலைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் நிரஞ்சனா. ஒரு மூலையில் அம்மா சுருண்ட படி படுத்து கிடந்தாள். நிரஞ்சனா ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே அவளது அப்பா இறந்து விட்டார். பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் ஒரு மாதம் வலியால் அவதிப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறப்புக்கு பின்பும் கூட வாழ்கையை நகர்த்துவதற்காக நிரஞ்சனாவின் அம்மாவும் அதே பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்தாள். கடந்த இரண்டு ஆண்டுகளாக நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் செலவு செய்ய முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கிறாள் அம்மா.
அம்மாவிற்கு பின் குடும்ப பாரத்தை சுமப்பதற்காக கல்லூரி படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு பட்டாசு தொழிற்சாலையிலே வேலைக்குச் சேர்ந்தான் நிரஞ்சனாவின் அண்ணன் பிரவீன்.
அந்தக் குடும்பத்திற்கு மட்டுமில்லை அவர்களை சுற்றி இருக்கும் குடும்பங்களுக்கும் பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்வவதை தவிர வாழ்வாதாரம் வேறொன்றும் கிடையாது. அவர்களில் பெரும்பாலானோர் வெடி மருந்துகளை சுவாசித்து சுவாசித்து நோய்வாய்ப்பட்டு அதற்கான சிகிச்சை செய்ய முடியாமல் இறந்து போவது உண்டு.
நிரஞ்சனாவிற்கு அப்பா மருத்துவ சிகிச்சை செய்ய முடியாமல் இறந்து போனதும் அம்மா மற்றும் சுற்றத்தார்கள் பலரும் நோய்வாய்ப்பட்டு கிடப்பதும் சிறு வயது முதலே மனதில் குமுறலாக இருந்தது. இந்த மக்களுக்கு நல்ல மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று வைராக்கியத்தோடு பன்னிரண்டாம் வகுப்பில் படித்து வெற்றி பெற்றாள். மருத்துவ நுழைவு தேர்விலும் வெற்றி பெற்று இன்னும் இரண்டு மாதங்களில் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறாள்.
நிரஞ்சனா புறப்பட்டுக் கொண்டிருக்கும் சத்தத்தை கேட்டு மெல்ல எழுந்து அமர்ந்தாள் அம்மா. "கண்ணு, நேத்து தான் டாக்டராக போறேன்னு சொன்னாங்க. இன்னும் நீ வேலைக்கு போகணுமா?"
"ரெண்டு மாசம் சும்மா தானே இருக்க போறேன். காலேஜுக்கு ஃபீஸ் கவர்மெண்ட் தந்தாலும் புக் போயிட்டு வர செலவுன்னு நிறையா இருக்கு. அண்ணனுக்கு எவ்வளவு தான் கஷ்டம் கொடுக்குறது. அதான் ரெண்டு மாசம் மட்டும் வேலைக்கு போயிட்டு வர்றேன்."
"அதெல்லாம் ஒரு கஷ்டமும் இல்லை. நான் பாத்துக்குறேன். நீங்க படிக்கிற வேலையை மட்டும் பாருங்க" என்று சொல்லிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான் பிரவீன்.
"ஸ்கூல் லீவுல எல்லா வருஷமும் வேலைக்கு போறது தானே. இந்த ரெண்டு மாசம் சும்மா தான் இருக்கணும். அதனால நான் வேலைக்கு போறேன் டா."
"சரி சரி நான் சொன்னா நீ கேக்கவா போற. போய்ட்டு வா. அப்புறம் நம்ம கம்பெனில எந்த ரூல்ஸும் ஒழுங்கா ஃபாலோ பண்ணல. வேலை பாக்குறவங்களுக்கு இன்சூரன்ஸ் கிடையாது. எத்தனையோ தடவை சொல்லிட்டேன். கேட்க மாட்டேங்கிறாங்க முதலாளி அம்மா. அடுத்த வாரத்துக்குள்ள எல்லாம் செஞ்சு தர சொல்லி இருக்கோம். எதுவும் நடக்கலைன்னா அடுத்த வாரத்தில இருந்து வேலைக்கு போகாம ஸ்ட்ரைக் பண்ண போறோம்."
"என்னடா சொல்ற? என்னதான் இருந்தாலும் நமக்கு சாப்பாடு போட்டது அந்த ஐயாவும் கம்பெனியும். அவங்க கிட்ட இப்படி பண்ணலாமா?" என்று பதட்டம் அடைந்தாள் அம்மா.
"என்னம்மா எப்ப பார்த்தாலும் சாப்பாடு போட்டாங்க. சாப்பாடு போட்டாங்கன்னு சொல்ற. நம்ம என்ன ஓசிலையா சாப்பிட்டோம். வேலை செஞ்சோம் காசு கொடுத்தாங்க. சொல்லப்போனா நாம தான் அவங்களுக்கு சாப்பாடு போட்டு இருக்கோம்."
"இருந்தாலும் நீ போராட்டம் அது இதுன்னு பண்ணினா கம்பெனிய நம்பி இருக்குற மக்கள் எல்லாம் என்ன பண்ணுவாங்க. பாவம்."
"அம்மா அவங்களுக்காக தான் இந்தப் போராட்டமே. கம்பெனிய பழி வாங்கணும்னு எனக்கு மட்டும் என்ன ஆசையா?"
"அவங்க உன்ன ஏதாவது பண்ணிட போறாங்க டா."
"அதுக்கெல்லாம் பயந்தா முடியுமா. சரி போராட்டத்த நான் பாத்துக்குறேன். நீ மருந்தா சாப்பிட்டு கொஞ்சம் வெளியில உட்காரு."
"சரிடா நான் புறப்படுறேன். நீ கம்பெனியை மூடுற வரைக்கும் தான் வேலைக்கு போக முடியும்" என்று சொல்லி சிரித்துக் கொண்டே வேலைக்குப் புறப்பட்டாள் நிரஞ்சனா. அவள் அணிந்திருந்த ஊதா நிற சுடிதார் அதன் நிறத்தை பாதி இழந்திருந்தது. ஆனால் அவளது அம்மாவிற்கும் அண்ணனுக்கும் வெள்ளை நிற உடை அணிந்து தன் சிறகுகளை விரித்து பறக்கும் தேவதை போல் தெரிந்தாள்.
பட்டாசு தொழிற்சாலையில் முன்புறத்தில் முதலாளியின் வீடு. வீட்டை ஒட்டிய சிறிய குறுகலான பாதை. அதைக் கடந்த சென்றால் சிறிய திறந்த வெளியிடம். அதையும் கடந்து சென்றால் பட்டாசு தொழிற்சாலை அதற்கு பின்னால் வெடி மருந்து கிடங்கு இருக்கும்.
பட்டாசு தொழிற்சாலையில் உள்ளே நுழையும் பொழுது காவலாளி நிரஞ்சனாவிடம், வீட்டிற்கு வந்து சந்திக்க முதலாளி சொன்னதாக கூறினார்.
நிரஞ்சனா அந்த வீட்டுக்குள் நுழைந்தாள்.
"வாமா.. டாக்டர் அம்மா வேலைக்கு வர மாட்டேன்னு நினைச்சேன். வந்துட்டியே. காலேஜ் போகலையா?"
"இல்லங்க. இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு தான் காலேஜ் ஆரம்பிக்கும் அதுவரைக்கும் வேலைக்கு வரலாம்னு இருக்கேன்."
"சரி மா நல்லா படி. ஏதாவது உதவி வேண்ணும்னா என்கிட்ட கேளு." என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அறையில் இருந்து வெளியே வந்தாள் அவரது மனைவி.
"ஆமா ஆமா வேலை பார்க்கட்டும். வேலை பார்த்தால் தானே காசு கிடைக்கும்." என்று அலுத்துக் கொண்டே வந்து நாற்காலியில் அமர்ந்தாள்.
நிரஞ்சனாவை பார்த்து," டாக்டர் ஆகிறது ரொம்ப ஈஸி தான் போல. உனக்கும் நல்ல அதிர்ஷ்டம் வேற இருக்கு. அதான் உனக்கு டாக்டர் சீட்டு கிடைச்சிருக்கு " என்று ஆதங்கப்பட்டு கொண்டாள். அவளது வார்த்தைகளில் பொறாமை வழிந்து ஓடியது.
நிரஞ்சனா சிறிய புன்முறுவலோடு ஆம் என்பது போல் தலையசைத்தாள்.
நிரஞ்சனா வயதுடைய அவர்களது மகனும் பன்னிரெண்டாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தான். தனது மகனால் முடியாதது தங்களிடம் வேலை செய்பவரின் மகளுக்கு கிடைத்ததால் ஆத்திரமும் அகங்காரமும் கொண்டவளாய் இருந்தாள்.
"நீங்க என்ன காசு கொடுக்க போறீங்க. எல்லாம் ஃப்ரீ தான் அவளுக்கு. இதுக்கு மேல பணத்தை எதுக்கு கொடுக்க போறீங்க. ஏற்கனவே அவளோட அண்ணன் வேற ஸ்ட்ரைக் பண்ண போறேன்னு சொல்லிட்டு இருக்கான். நாமளே கம்பெனி இழுத்து மூட வேண்டியது தான். இதுல அடுத்தவங்களுக்கு எங்க பணம் கொடுக்கிறது "
"சும்மா இருடி. அவங்க அப்பா அம்மா நம்ம கம்பெனில எத்தனை வருஷம் வேலை பார்த்து இருக்காங்க. அந்த பையன் தான் புரிஞ்சுக்க மாட்டேங்கிறான். இந்த பொண்ணு என்ன பண்ணும். நீ போய் வேலையை பாருமா என்று அனுப்பி வைத்தார்."
அவள் சென்றவுடன்,
"ஏண்டி கிறுக்கி நான் எது பண்ணாலும் காரியத்தோடு தான் பண்ணுவேன். அந்த பொண்ணுக்கு ஆயிரமும் ரெண்டாயிரம் கொடுத்தா அதை வாங்கிட்டு பேசாம இருப்பாங்க. அந்த பையனும் நம்ம வம்புக்கு ஏதும் வராமல் பேசாம இருப்பான்."
"அதுக்காக பணம் எல்லாம் கொடுக்க வேண்டாம். பேசாம பாண்டி அண்ணன் கம்பெனியில அவங்களுக்கு எதிரா போராட்டம் பண்ணவங்கள வெடி மருந்த திருடி ரவுடிகளுக்கு வித்ததா கேஸ் போட்டு மாட்டி விட்டாங்களே. அதே மாதிரி இந்த புள்ளயையும் அந்த பையனையும் உள்ள தூக்கி போடுங்க. அவன் பிரச்சனையும் முடிஞ்சிடும் இந்தப் புள்ளயும் டாக்டரா ஆகாது."
"சரி சரி நான் பாத்துக்குறேன. நீ கவலைப்படாத" என்று அமைதிப்படுத்தினார். இருந்தாலும் அவளுடைய மனது ஆத்திரத்தால் நிலை கொள்ளாமல் அலைந்தது.
நிரஞ்சனா அந்த வீட்டின் அருகில் இருந்த சந்து வழியாக நுழைந்து திறந்த வெளி மைதானத்தை கடந்து சென்று கொண்டிருந்தாள். அவளுக்காக அங்கு கம்பெனி முதலாளியின் மகன் பிரபுவும் அவனது நண்பனும் நின்று கொண்டிருந்தனர்.
"என்ன நீ டாக்டர் ஆயிட்டேன்னு ரொம்ப பண்றியா?"
"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை பிரபு."
என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக நடந்து தொழிற்சாலைக்குள் சென்றாள். அருகில் கிடந்த ஒரு பெரிய கம்பியை எடுத்து அவரது தலையில் அடித்து விடலாம் என்பது போல் ஆத்திரத்தோடு நின்று கொண்டிருந்தான் அந்த மிருகம்.
அவளை எப்படியாவது அவமானப் படுத்தி விட வேண்டும் என்று கடுகடுத்துக் கொண்டிருந்தான்.
அவன் நண்பனிடம்,
"மச்சான் ரெண்டு நாளா அவ பேரு பெப்பர் வாட்ஸ்அப் பேஸ்புக்னு வந்துட்டே இருக்கு. பட்டாசு கம்பெனியில வேலை பாக்குறவளோட பொண்ணு. லீவு நாள்ல அங்கேயே வேல பார்த்து படிச்சு டாக்டர் ஆயிட்டான்னு போட்டுட்டே இருக்காங்க. என்னால பார்க்க முடியல மச்சான். அதே டிவி பேஸ்புக் வாட்ஸ்அப்னு எல்லாத்துலயும் அவள அவமானப் படுத்தனும். அதுக்கு ஒரு வழி வச்சிருக்கேன். மத்தியானம் அவ குடோனுக்கு ஸ்டாக் செக் பண்ண போவா. அவ பின்னாடியே நானும் போயி குடோன சாத்திடுறேன். கொஞ்ச நேரம் கழிச்சு நாங்க ரெண்டு பேரும் வெளியில் வரும்போது நீ போட்டோ எடுத்து அதை எனக்கு அனுப்பு அதுக்கப்புறம் நான் பாத்துக்கிறேன்" என்றான்.
ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது நிரஞ்சனா தேசிய அளவில் நடந்த ஒரு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்று தினசரி நாளிதழ்களில் அவளுடைய புகைப்படம் வந்தது. ஊரார்கள் அனைவரும் அவளை வாழ்த்தினார்கள். ஆனால் தனது வயதுடைய பெண்ணொருத்தி பாராட்டு பெற்றதால் கோமடைந்த பிரபு அவன் மனதில் ஆத்திரத்தை வளர்த்துக் கொண்டே இருந்தான். ஒரு நாள் நிரஞ்சனா அவளுடைய அம்மாவை பார்ப்பதற்கு வந்த பொழுது தொழிற்சாலையில் ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்தான். நிரஞ்சனா கதறி அழுதாள். ஆனால் அவளுடைய குரல் யாருக்கும் கேட்கவில்லை.
காலையிலிருந்து அவளைக் காணாமல் அனைவரும் தேட ஆரம்பித்தார்கள். தொழிற்சாலையை விட்டு வெளியில் சென்று தேடினார்கள். மாலை ஆறு மணி அளவில் தொழிற்சாலையில் அறைக்கு வந்த ஒருவர் அழுகை குரல் கேட்டு கதவை திறந்தார். காலையிலிருந்து அழுததால் காய்ச்சல் வந்து இரண்டு நாட்கள் எழ முடியாமல் படுத்துவிட்டாள்.
பிரபு தான் அந்த செயலை செய்தான் என்று தெரிந்தும் அவனது பெற்றோர்கள் அவனை ஒன்றும் சொல்லாமல் விட்டு விட்டார்கள். நிரஞ்சனாவின் அம்மாவும் அதற்கு மேல் ஒன்றும் பேச முடியாது அமைதியாக இருந்து விட்டார்.
நிரஞ்சனாவின் மீது எப்பொழுதுமே முதலாளியம்மாவும் பிரபுவிற்கும் ஒரு பொறாமை இருந்து கொண்டே வந்தது. அவள் பிறந்த போது கூட குடிசை வீட்டில் இருக்கிறவங்களுக்கு என்ன நிரஞ்சனா என்று பெயர் என்று நிரஞ்சனா அப்பாவிடம் கிண்டல் செய்வாள் அந்த முதலாளியம்மா.
அவளை சுற்றி இத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அவளால் வேறு எங்கும் செல்ல முடியவில்லை. ஒவ்வொரு வருடமும் பள்ளியின் விடுமுறை போது அதே இடத்தில் தான் வந்து வேலை செய்து கொண்டிருந்தாள். வேலைக்கு வரும் நாட்களில் தொழிற்சாலையில் இருக்கும் போது அந்த அறையைப் பார்த்து பயந்து கொண்டே செல்வாள்
நிரஞ்சனா...
இன்றும் அந்த அறையைப் பார்த்துக் கொண்டு உள்ளே சென்றாள் நிரஞ்சனா.
மாலை மூன்று மணியளவில் நிரஞ்சனா வெடி மருந்துகளை கணக்கெடுப்பதற்காக கிடங்கிற்குச் சென்றாள். அவளுக்காக காத்துக் கொண்டிருந்த பிரபு வேகமாக கிடங்கை நோக்கி நடந்தான்..
வீட்டு வாசலில் போலீஸ் ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து பிரவீன் அழுது கொண்டு இறங்கினான். முகம் உடலெங்கும் பலத்த காயங்கள்.
"சார் என்னை எதுக்கு கூட்டிட்டு வரீங்க? நான் எந்த தப்பும் பண்ணல."
"அதெல்லாம் நீ வெடி மருந்து கொடுத்தியே அவனே ஒத்துக்கிட்டான். நீ ஒன்னும் எனக்கு சொல்லத் தேவையில்லை" என்று அவனை தர தரவென கம்பெனி முதலாளியின் வீட்டுக்கு அருகில் இழுத்து வந்தனர்.
நிரஞ்சனா குடோனுக்குள் கணக்கு நோட்டை எடுத்தாள். வழக்கத்திற்கு மாறாக அத்தனை ஜன்னல் கதவுகளும் பூட்டப்பட்டிருந்தது. வாசல் கதவு மட்டும் திறந்து இருந்தது. ஜன்னல் கதவைகளை திறப்பதற்காக அவள் நகர்ந்த போது வாசல் கதவும் மூடப்பட்டு அந்த இடம் இருட்டானது. திடீரென்று கதவு அடைக்கப்பட்டவுடன் பதட்டத்தில் திரும்பி பார்த்தாள். சிறிய வெளிச்சத்தில் பிரபு நின்று கொண்டிருப்பதை பார்த்தாள்.
போலீஸ் வருவதை பார்த்தவுடன் தொழிற்சாலை முதலாளியும் அவரது மனைவியும் வெளியே வந்தார்கள். அவரிடம் காவலர்
"இந்த பையன் இங்கதான் வேலை பார்க்குறானா?"
"ஆமா இங்க தான் வேலை பார்க்கிறான். ஏன் என்னாச்சு?" என்றும் எதுவும் தெரியாதது போல் கேள்வி கேட்டார்.
"உங்களுக்கு தெரியாம வெடி மருந்து திருடி சமூக விரோதிகள் கிட்ட வித்துருக்கான். அந்த கும்பல் மெட்ராஸ்ல மாட்டிகிட்டாங்க. வெடி மருந்து எங்கிருந்து கிடைச்சுதுனு கேட்டதுக்கு இவனும் இவனோட தங்கச்சியும் சேர்ந்து யாருக்கும் தெரியாம மருந்து எடுத்து கொடுத்தாங்கன்னு உன்மையை ஒத்துக்கிட்டாங்க.
"ஐயா ஐயா சத்தியமா நான் இதுவரைக்கும் எந்த மருந்தும் எடுத்துட்டு போனதில்ல. இவங்க ஏதோ தப்பா நினைச்சுட்டு இருக்காங்க. வேற யாராவாது இருக்கும் நல்ல விசாரிக்க சொல்லுங்க ஐயா" என்று அழுது புலம்பினான்.
"அடப்பாவி உங்க ரெண்டு பேரையும் நம்பி வேலைக்கு வச்சா. உண்ட வீட்டுக்கு பாதகம் பண்ணிட்டீங்களே. அந்த திருட்டு காசு கொடுத்து தான் உன் தங்கச்சிக்கு டாக்டர் சீட்டு வாங்க போறியா ?"
"அம்மா சத்தியமா இல்லமா... அந்த மாதிரி எங்க அப்பா எங்களை வளர்க்கல." அவன் அழுதான். அவனுடைய அழுகை யாருடைய மனதையும் கரைப்பதாக தெரியவில்லை.
"பிரபு என்ன பண்ற? மரியாதையா கதவ திற"
"உனக்கு என்னடி மரியாதை. ஊரெல்லாம் உன்னை பாராட்டுறாங்க. இப்ப நம்ம ரெண்டு பேரும் வெளியே போகும் போது போட்டோ எடுத்து உலகத்துக்கே போடப் போறேன். அப்புறம் இருக்கு உனக்கு." என்று அவள் அருகில் வந்தான்.
அவன் செய்யும் காரியத்தை பார்த்து திடுக்கிட்டு போனாள் நிரஞ்சனா.
"பிரபு, பைத்தியம் மாதிரி பேசாத. குடோன்ல எல்லா கதவையும் சாத்தி வச்சேனா காத்து போகாம பிரஷர்ல மருந்து வெடிக்க சான்ஸ் இருக்கு. நம்ம ரெண்டு பேருக்கும் ஏதாவது ஆயிடும். தயவு செய்து கதவைத் திற"
"எனக்கே கம்பெனியை பத்தி சொல்லி தர்றயா. அதெல்லாம் ஒன்னும் ஆகாது."
என்று மெல்ல அவள் அருகில் வந்து அவளை தொடுவதற்காக கையை உயர்த்தினான்.
வீட்டு வாசலில் பிரவீனை காவலர்கள் பிடித்துக் கொண்டிருந்தனர். பிரவீன் அழுது கொண்டிருந்தான். திடீரென்று பலத்த சத்தம் கேட்டது. அந்த இடமும் முழுவதும் லேசாக அதிர்ந்தது. முதலாளி அவரது மனைவி போலீஸ்காரர்கள் பிரவீன் மற்றும் அனைவரும் வெடி சத்தம் கேட்டு திடுக்கிட்டு போனார்கள். அனைவரும் வேகமாக தொழிற்சாலையை நோக்கி ஓடினார்கள்.
மருந்து கிடங்கு வெடித்து சிதறி எரிந்து கொண்டிருந்தது...
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்