logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

GAURI SANKAR

சிறுகதை வரிசை எண் # 228


“குரு தட்சிணை" அது ஒரு கிராமம். முப்பது அடி அகலமுள்ள அந்த சாலையின் இருபுறமும் புளிய மரங்கள், வேம்பு மரங்கள் போன்றவை அடர்ந்து வளர்ந்து சூரியனின் கதிர்களை சிறிதளவெனும் சாலையில் அண்டவிடாமல் காத்து வந்தன. சாலையில் செல்லும்போது, ஒரு மரத்தடியில் அமர்ந்து சிறிது கண்ணயர்ந்து விட்டு செல்லலாம் என்ற நினைவுகள் நடந்து செல்லும் பலரை ஆட்டிப்படைத்தன என்றால் அது மிகையாகாது. இயற்கையின் எழில் மிகுந்த ஆட்சி மனதிற்கு நெகிழ்ச்சியை தரும் அதே நேரத்தில், சாலையின் பெரும்பாலான பகுதிகள் குண்டும், குழியுமாக காட்சியளித்தன. கொஞ்சம் அசந்தாலும், இருசக்கரவாகனங்களை ஒட்டிக்கொண்டு செல்பவர்களை கீழே விழ வைத்து வேடிக்கை பார்ப்பதற்கென்றே குழிகளும், குண்டுகளும், பொத்தல்களும் வழி மீது விழி வைத்து காத்துக்கொண்டு இருந்தன போன்று தோன்றியது. மரங்களின் இடையிடையே காரை வீடுகளும், ஓட்டு வீடுகளும் இருபுறங்களிலும் காட்சியளித்துக்கொண்டு இருந்தன. தொலைவில் இருந்து பார்க்கும்போது அந்த ஓட்டு வீட்டின் கதவின் அருகில் ஒருவர் அமர்ந்திருப்பது போல தெரிந்தது. கண்டிப்பாக அவர் யாரையோ எதிர்பார்த்து அமர்ந்து கொண்டு இருக்கிறார் என்பது தெளிவாக தெரிந்தது. ஆனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் கவலையோடு அமர்ந்திருக்கிறாரா அல்லது அழுது கொண்டு இருக்கிறாரா என்பதை அறியமுடியவில்லை - நெருங்கி சென்று பார்த்ததால் தான் தெரியும் என்ற நிலை தான் மிஞ்சியது. ……… கோவில்பட்டியில் இருந்து பசுவந்தனை செல்லும் சாலையில் இருந்தது தீத்தாம்பட்டி என்ற ஒரு சிறிய கிராமம். அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் சென்றால் வந்து விடும், செல்லம்பட்டி. செல்லம்பட்டிக்கும் பசுவந்தனைக்கும் இடைப்பட்ட தூரம் இரண்டு கிலோமீட்டர்கள் தான். பசுவந்தனை வளர்ந்து வரும் ஒரு சிறிய நகரம். அங்கு பல கோவில்கள் உள்ளன. உயர்நிலை பள்ளிகள் உள்ளன. அருகில் உள்ள கிராமங்களில் இருந்து படிப்பில் ஆர்வம் உள்ள மாணவர்களும், மாணவிகளும் இந்த சிறிய நகரத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் தான் படிக்க வருவார்கள். தற்போது அருகிலேயே பல பொறியியல் கல்லூரிகள் வந்து விட்டன. கலைக்கல்லூரிகளும் ஆரம்பித்து விட்டார்கள். செல்லம்பட்டியில் அதிக பட்சம் 200 வீடுகள் மட்டுமே இருந்தன. ஒரு சில வீடுகள் மட்டுமே கான்கிரீட் கட்டிடங்கள். மற்றவை அனைத்தும் ஓட்டு வீடுகள். கூரை வீடுகள் தற்போது அரிதாகி விட்டன. கிராமத்தின் ஊர்க்கோடியில் இருந்தது அந்த சிறிய காரை வீடு. 2400 சதுர அடி நிலப்பரப்பில், கால்வாசியில் வீடு கட்டப்பட்டு இருந்தது. வீட்டின் பின்புறம் ஒரு கிணறு மற்றும் தோட்டங்கள் இருந்தன. தக்காளி, மிளகாய், வெண்டிக்காய் போன்ற காய்கனிகள் பயிரிடப்பட்டு இருந்தன. ஒட்டு வீட்டின் நிலைமை பார்ப்பவர்களுக்கு பயத்தை தருவதாக இருந்தது. பல இடங்களில் ஓடுகள் பெயர்ந்து துருத்திக்கொண்டு நின்றன. ஜன்னல் கம்பிகள் பெயர்ந்து எந்த நேரமும் கீழே விழுந்து விடலாம் என்றளவில் ஊசலாடுவது போல தோன்றியது. வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்து வருடங்கள் ஆகியிருக்கலாம் என்று தோன்றியது. வீட்டின் உள்ளே ஒரு ஹால், ஒரு அடுக்களை மற்றும் குளியலறை இருந்தன. இரண்டு நபர்கள் தங்குவதற்கான வசதிகள் இருந்தன. ஆனால் அங்கு தற்போது வசித்துக்கொண்டு இருந்தவரோ ஒருவர் தான். அவர் தான் மீனாட்சி. பத்து வருடங்களுக்கு முன்பு வரை – “எனக்கு நீ - உனக்கு நான்” என்று சொல்லிக்கொண்டு, கணவனும் மனைவியுமாக வாழ்ந்து கொண்டு இருந்தனர் கனகராஜும், மீனாட்சியும். கணவர் கனகராஜ் இறந்த பின்னர் மீனாட்சி தனியாக விடப்பட்டார். பல வருடங்களாக வாழ்ந்து வந்த வீட்டையும், அந்த கிராமத்தையும் விட்டு விடத்தயாராக இல்லை மீனாட்சி. சில கால கட்டங்களில் சில நினைவுகளின் ஆக்கிரமிப்பில் இருந்து மனதை விடுவிப்பது என்பதே ஒரு போராட்டம் தான். மீனாட்சிக்கு வீடு உற்ற துணையாக இருந்தது என்றும் சொல்லிக்கொள்ளலாம். பலர் சொல்லி விட்டனர். கோவில்பட்டி போன்ற வளர்ந்து வரும் நகரங்களுக்கு சென்றால் மருத்துவ வசதிகள் கிடைக்கும் என்று சொல்லி பார்த்தும், மீனாட்சி செல்லம்பட்டியை விட்டு செல்வதாக இல்லை. அவருக்கு அந்த கிராமம் பிடித்து இருந்தது. சிறிது தூரத்தில் தெரியும் அந்த கண்மாயும் அதை சுற்றி வளர்ந்து இருந்த நான்கு ஆலமரங்களும் அவருக்கு மிகவும் பிடிக்கும். கனகராஜ் உயிரோடு இருந்த நாட்களில், இருவரும் மாலை நேரங்களில், மெதுவாக நடந்து சென்று, ஆலமரத்தின் நிழலில் இருந்த படிக்கட்டுகளில் ஒன்றில் மணிக்கணக்காக அமர்ந்து கொண்டு தண்ணீரில் குதித்து விளையாடும் சிறுவர்கள், சிறுமிகளை கண்டு கழிப்பது வழக்கம். கணவர் மறைவிற்கு பிறகு, அங்கு சென்றால், அவர் நினைவு மீண்டு வருவது போல தோன்றவே, அவர் அதிகம் செல்வதில்லை. கண்மாயில் குளித்து முடித்து ஓய்வு எடுக்கும் வேளைகளில், குழந்தைகள் இவரை வந்து கொஞ்ச ஆரம்பிக்கும். "பாட்டி இன்னெய்க்கு என்ன கொண்டு வந்திருக்கீங்க?" "இன்னெய்க்கு உங்களுக்கு பருப்பு வடை சுட்டுக்கொண்டு வந்திருக்கிறேன்." பத்துக்கு மேற்பட்ட சிறுவர்களும், சிறுமிகளும், இவரை சுற்றிக்கொண்டு, வடையை வாங்குவதற்கு பிடிக்கும் அந்த செல்ல சண்டைகளை பார்ப்பதில் அவருக்கு அளவு கடந்த ஆனந்தம். வடையையும், இனிப்புகளையும் வாங்கி தின்னும் குழந்தைகள் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழாக்களில் பள்ளிகளில் கிடைக்கும் இனிப்புகளில் ஒரு பகுதியை தவறாமல் இவர் வீடு தேடி வந்து தந்து விட்டு தங்களுடைய வீட்டிற்கு செல்லுவார்கள். இது பல வருடங்களாக நடந்து கொண்டு இருக்கும் சம்பிரதாயங்கள். குழந்தைகளுக்கும், மீனாட்சி பாட்டிக்கும் உள்ள பாசப்பிணைப்பு கிராமத்தில் வசிக்கும் அத்தனை நபர்களுக்கும் அத்துப்படி. தீபாவளி, பொங்கல், பிறந்த நாள், ஆயுத பூஜை போன்ற தினங்களில் வீடுகளில் பெற்றோர்கள் செய்து தரும் பலகாரங்களில் ஒரு சில இவருக்கும் வந்து விடும். இன்றைக்கு பாட்டி என்று அழைக்கப்படும், மீனாட்சி, பல வருடங்களுக்கு முன்பு ஒரு ஆசிரியை. ………. வீட்டு வாசலின் வெளிக்கதவை அணைத்துக்கொண்டு அவர் அமர்ந்து இருந்தார். அத்தனையும் கூட்டி கழித்து பார்க்கும்போது தெரிந்தது. மீனாட்சிக்கு - 80 வயது இருக்கலாம்; ஓரளவு ஆரோக்கியம் உள்ளவராகவே தோன்றினார். இருந்தாலும், வீட்டு வேலைகளை அதிக பிரயத்தினால் தான் அவர் செய்து வந்தார். ஓடுகளால் வேயப்பட்டு இருந்த வீட்டின் உள்புறம் இங்கும் அங்கும் ஊசலாடிக்கொண்டு இருந்த சிலந்தி வலைகள் சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தன வீட்டின் நிலைமையை. - “பெண்மணி தனியாக துணையில்லாமல் இருக்கிறார் மற்றும் தனியாக கடினமான காரியங்களை செய்யமுடியாமல் தவிக்கிறார்” என்று. அன்றைய தினம் - குடியரசு தினம். கால்களின் ஓட்டத்தை கட்டுப்படுத்த தெரிந்த அவருக்கு, எல்லோரையும் போல நினைவுகளை கட்டுப்படுத்த முடியாமல் போனது. நினைவுகள் பின்னோக்கி சென்றன. …… பள்ளிகளில் காலை எட்டு மணிக்கு தேசிய கொடியேற்றுவார்கள். அந்த வைபவத்தின் பொருட்டு, மாணவர்கள் மற்றும் மாணவிகள் வரிசையாக கொடிக்கம்பத்தின் முன்பாக நின்று கொண்டு இருப்பார்கள். விருந்தினர் ஒருவர் கொடி ஏற்றுவார். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் வணக்கம் செலுத்துவர். கம்பத்தின் உச்சியில் கொடி ஏற்றப்பட்டு, அது பட்டொளி வீசி பறக்க ஆரம்பிக்கும்போது, “ஜெயஹிந்த்” என்ற கோஷம் வானை பிளக்கும். குழந்தைகளின் அந்த கோஷம், காடுகளில் மேய்ந்து கொண்டு இருக்கும் ஆடுகள், மாடுகள் போன்றவற்றையும் ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்க்க வைக்கும். அது ஒரு அற்புதமான நிகழ்வு. குழந்தைகள் தங்கள் சட்டைகளின் இடது பாக்கெட்டுகளில், தேசிய கொடியை குத்தி வைத்து விட்டு, நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நடந்து செல்லும் காட்சி மனதை நெகிழச் செய்யும். சிறுவயதிலேயே குழந்தைகள் மனங்களில் தேசப்பற்றை வளர்க்கும் இது போன்ற விழாக்களை நடத்துவதில் பல பள்ளிகள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். கொடி ஏற்றும் வைபவம் முடிந்தவுடன், இனிப்புகளை பெற்றுக்கொண்டு, அப்படியே வீர நடை போட்டுக்கொண்டு கிராமத்து சாலைகளில் வலம் வருவார்கள். வயல்களில் நாற்று நாடுபவர்கள், களை பிடுங்குபவர்கள், மாடுகளை கண்மாயில் குளிப்பாட்டுபவர்கள் - இன்னும் பலர், தங்கள் வேலைகளை சிறிது நேரத்திற்கு தள்ளி வைத்து விட்டு, வீர நடை போடும் குழந்தைகளை பார்த்து பிரமிப்பில் நின்று விடுவார்கள். அவர்களின் செல்ல குழந்தைகளும், அவர்களில் ஒருவராக இருக்கும் பட்சத்தில், மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்திற்கு செல்லும் அவர்களுக்கு அன்றைய தினத்தில், அவர்கள் படும் சிரமங்கள் காணாமல் போய்விடும். ----------- செல்லம்பட்டி அருகில் உள்ள சிறிய நகரத்தில் இருந்த உயர்நிலைப்பள்ளியில், கனகராஜ் தலைமை ஆசிரியராக 30 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றார். மீனாட்சி, 25 வருடங்களாக தமிழ் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். ஒரே பள்ளியில் தான் இருவரும் பணியாற்றினார்கள். ஒரே மகன் - விஸ்வம் - தற்போது தனது குடும்பத்தோடு கனடாவில் வசித்து வருகிறான். மூன்று வருடங்களுக்கு ஒரு முறை செல்லம்பட்டி வருவது அவன் வழக்கம். கணவரின் மறைவிற்கு பிறகு கடந்த பத்து வருடங்களாக தனிமை தான் மீனாட்சிக்கு துணையாகி போனது. ஆசிரியை என்ற அந்தஸ்து இருந்தபடியால், செல்லம்பட்டி கிராமத்திலும், அருகில் உள்ள பட்டி தொட்டிகளிலும், இவருக்கு நல்ல மரியாதை இருந்தது. கடைகளுக்கு சென்றால் முன்னுரிமை தந்து பொருட்களை தருவார்கள். உள்ளூர்வாசிகள் ஒதுங்கி நின்று வழிவிடுவார்கள். எந்த பண்டிகையாக இருந்தாலும், சில பெண்கள் தவறாமல் தங்கள் வீடுகளில் தயார் செய்து வைத்திருக்கும் பலகாரங்களை மீனாட்சிக்கு கொடுத்து விட்டு செல்வது வழக்கம். இவருக்கு மக்களிடம் இருந்து உதவிகள் கிடைத்து கொண்டு இருந்தனவே ஒழிய, எந்த தொந்தரவுகளும் எவரும் தந்தது இல்லை. ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும், அவர்கள் ஒதுங்கியே இருந்தனர். பலமுறை மீனாட்சி வீட்டை சீரமைப்பது பற்றி பலரிடம் சொல்லியிருந்தாலும், எவரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. ஒருவேளை மீனாட்சிக்கு பணம் தரவேண்டியது வருமோ என்று கூட ஒதுங்கியிருந்திருக்கலாம். குறைந்த பட்சம் முதியோர்களுக்கு அரசு அறிவித்த திட்டங்களை பற்றி சொல்லி, வீடுகள் பெற்று தருவதற்கு எவராவது ஒருவர் ஏற்பாடுகள் செய்து இருந்திருக்கலாம். வயது அதிகம் என்ற காரணத்தாலும், எவரும் உதவி செய்ய முன்வராத நிலையிலும், சிதிலமடைந்த வீட்டில் வாழ்ந்து ஆகவேண்டிய கட்டாயத்திற்கு மீனாட்சி உள்ளாக்கப்பட்டார் என்பது மட்டுமே உண்மை. ------ நடந்து சென்று அருகில் உள்ள நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் நடைபெறும் கொடியேற்று விழாவை காண மீனாட்சிக்கு உள்ளூர ஆர்வம் இருந்தது. ஆர்வத்தை செயல்படுத்த தெம்பு குறைவாக இருந்தது. அவருக்கு ஒரு திருப்தி உண்டு. எப்படியாவது, கிராமத்தில் வசிக்கும் தனஞ்செயன், ராமன், முனியன், கார்த்திகேயன், ஹேமா, பத்மா போன்ற சிறுவர்களும் சிறுமிகளும் பள்ளிக்கு சென்று கொடியேற்றும் வைபவத்தில் கலந்து கொண்டு, இனிப்புகளை வாங்கிக்கொண்டு, தவறாமல் இனிப்புகளை மீனாட்சிக்கு தருவதற்கு இன்னும் சில நிமிடங்களில் வந்து விடுவார்கள். இந்த நினைப்பு தான் அவரை கதவருகில் காத்திருக்க வைத்தது. இதுவரை இந்த நினைப்பு பொய்த்தது இல்லை. அந்த குழந்தைகள் தரும் இனிப்புகளை விட, சிறிது நேரம் அவர்களை நெஞ்சொடு அணைத்து வைத்துக்கொள்ளும்போது கிடைக்கின்ற சுகத்திற்கு தான் மனது ஏங்கிக்கொண்டு இருக்கின்றது என்று அவருக்கு தெரியாமல் இல்லை. பள்ளி அலுவல்களில் புரையோடி ஊறிப்போன மீனாட்சிக்கு நினைவுகள் வந்த வண்ணம் இருந்தன. மீனாட்சியும் அவருடைய கணவர் கனகராஜும் நடத்திய கொடியேற்றும் வைபவங்களுக்கு கணக்கே இல்லை என்று சொல்லலாம். வருடத்திற்கு இரு முறை என்று எடுத்துக்கொண்டாலும், கனகராஜ் தலைமையாசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தினத்தில் இருந்து இருபது வருடங்களில் நாற்பது கொடியேற்றும் வைபவங்களை நடத்தியிருப்பார். மாவட்ட கலெக்டர்கள், மந்திரிகள், போன்ற பலர் விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்து சென்றிருக்கிறார்கள். …………. தேசியக்கொடிகள் அணிந்து கொண்டு உற்சாகமாக துள்ளிக்கொண்டு வரும் குழந்தைகளை எதிர்பார்த்து, சாலையை கவனித்து கொண்டு இருந்த மீனாட்சியை நோக்கி வந்தது ஒரு வாகனம். வாகனத்தில் வந்தது, நகரத்தில் உள்ள பள்ளியில் தற்போது தமிழ் ஆசிரியர் பொறுப்பை சுமந்து கொண்டு இருக்கும் ரங்கராஜன் வாத்தியார் தான். முதலில் உடல்நிலையை காரணம் காட்டி, மீனாட்சி பள்ளியில் நடக்கும் கொடியேற்றும் வைபவத்திற்கு வர முடியாது என்பதில் பிடிவாதம் காட்டினார். ஒரு வழியாக மீனாட்சியை சமாதானம் செய்து, அடுத்த பத்து நிமிடங்களில், அவரை காரில் ஏற்றிக்கொண்டு நகரில் உள்ள பள்ளிக்கு கூட்டிக்கொண்டு சென்றார் ரங்கராஜன். கொடியேற்றும் வைபவங்களை காண்பதில் மீனாட்சிக்கு உள்ள ஆர்வம் அவருக்கு தெரிந்தே இருந்தது. எப்படியாவது அவரை குடியரசு தினத்தன்று பள்ளிக்கு அழைத்து சென்று விடுவது என்ற முடிவை எடுத்த ரங்கராஜன் அதை தற்போது சாதித்தும் விட்டார். கொடிக்கம்பத்தின் முன்பாக வரிசையாக மாணவர்கள் மற்றும் மாணவிகள் சீருடைகள் அணிந்து நின்று கொண்டு இருந்தார்கள். ஆசிரியர்களும் ஆசிரியைகளும் தனி வரிசையில் நின்று கொண்டு இருக்க, விருந்தினர்கள் வேறு வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள். விருந்தினர்கள் வரிசையில் மீனாட்சி நின்று கொண்டு இருந்தார். அவரை தெரிந்து கொண்ட ஆசிரியர்களும், ஆசிரியைகளும் வணக்கம் தெரிவித்தனர். எதிர்பாராத ஒரு அழைப்பை பெற்றுக்கொண்ட மீனாட்சிக்கு அளவற்ற மகிழ்ச்சி புரையோடிக்கொண்டு இருந்தது. ........ அன்றைய விழாவில், இரு வாரங்களுக்கு முன்பு அந்த மாவட்ட கலெக்டராக பொறுப்பை ஏற்றுக்கொண்ட ராஜசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுவதாக இருந்தது. திடீர் என்று ஒரு சல சலப்பு தெரிந்தது. கலெக்டர் வந்து விட்டார் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவிக்க, அனைவரும் அமைதியாக நின்றனர். அடுத்த இரண்டு நிமிடங்களில் ராஜசேகர் மிடுக்காக நடந்து வந்தார். அவரை ஒருபுறம் தலைமையாசிரியர் அழைத்து வர, அவருக்கு அருகில் காவல் உயரதிகாரியும் வந்து கொண்டு இருந்தார். மாணவர்கள், மாணவிகள், ஆசிரிய பெருமக்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்த ராஜசேகர் சட்டென்று விருந்தினர் மத்தியில் நின்று கொண்டு இருந்த மீனாட்சியை பார்த்ததும் நின்றார். அடுத்த நொடியில், விறு விறுவென்று அவர் அருகில் சென்று மீனாட்சியின் கைகளை பிடித்துக்கொண்டு தன்னுடைய கண்களில் ஒற்றிக்கொண்டார். "டீச்சர், என்னை தெரியவில்லையா? நான் உங்கள் மாணவன் ராஜசேகர்". சில வினாடிகளில் தன்னிலை பெற்ற ராஜசேகர், கொடிக்கம்பத்தின் அருகில் சென்றார். அவருடன் மீனாட்சியையும் அழைத்துக்கொண்டு சென்றார். "நீங்களும் என்னுடன் வாருங்கள். இன்று நாம் இருவரும் இணைந்து கொடியேற்றுவோம்." கொடியேற்றும் வைபவம் முடிந்தது. மாவட்ட கலெக்டருடன் இணைந்து தேசியக்கொடியை கொடிக்கம்பத்தில் ஏற்றிவைத்த மீனாட்சிக்கு, பிரமிப்பு அடங்கவேயில்லை. நூற்றுக்கணக்கான மாணவர்களும் மாணவிகளும் மற்றும் ஆசிரியபெருமக்களும், ஊர் பெரியவர்களும், திகைப்பில் உச்சத்தில் அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டு இருந்தனர் என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்தது. ஆனால், வயோதிகத்தின் காரணமாக மீனாட்சியின் நினைவுகளில் ஏற்பட்ட தடுமாற்றம் நிற்கவேயில்லை - "யார் இந்த ராஜசேகர்?" தன்னுடைய உரையை ராஜசேகர் ஆரம்பித்தார். "முதலில் என்னை இந்த வைபவத்திற்கு அழைத்து கவுரவித்த தலைமை ஆசிரியர் மற்றும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறேன்." அடுத்த பத்து நிமிடங்களில் குடியரசு தினத்தை பற்றி சுருக்கமாக மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு புரியும் வகையிலும் மற்றும் தெரிந்து கொள்ளும் வகையிலும் உரையாற்றிய ராஜசேகர் பேச ஆரம்பித்தார். "இப்பொது நான் உங்களுக்கு ஒரு உண்மையான தகவலை சொல்ல விரும்புகிறேன். நான் இந்த பள்ளியின் பழைய மாணவன். தற்போது உங்கள் முன்பு எனக்கு அருகில் நின்று கொண்டு இருக்கும் மீனாட்சி ஆசிரியை அவர்களிடம் நான் கல்வி பயின்று இருக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எனது தந்தையார் ஒரு கொல்லர். கொல்லர்களின் தொழில் மாடுகளுக்கு லாடம் கட்டுவது, மாட்டு வண்டிகளுக்கு இரும்பு சக்கரங்கள் தயார் செய்வது போன்ற வேலைகள். வீடுகளில் இருந்து கொண்டு வரும் பழைய தகர பெட்டிகளை சரி செய்து தருவது, பாத்திரங்களில் உள்ள நெளிவுகளை சரி செய்வது - இப்படி பலவிதமான இரும்பு, மற்றும் பாத்திரங்களை சரி செய்வது தான் அவருடைய தொழிலாக இருந்தது. சிறு வயதில் பள்ளிக்கு சென்று திரும்பிய பிறகு நானும், அவருடைய கடைக்கு சென்று சில மணி நேரங்கள் அவருக்கு உதவி செய்வேன். எனக்கு அப்போது ஒன்பது வயது. நான் அப்போது நான்காம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன். திடீர் என்று எனது கண்முன்பாக சரிந்து விழுந்த என்னுடைய தகப்பனாரை, ஊர் மக்கள் சிலர் மருத்துவ மனையில் சேர்த்தனர். உடல் நலக்குறைவால் ஒரு வாரம் படுக்கையில் இருந்த எனது தந்தையார் மரணம் அடைந்தார். நான் அவருக்கு ஒரே மகன். வீட்டில் வருமானம் ஈட்டுவதற்கு எனது தாயாரை தவிர வேறு எவரும் இல்லை." "அந்த நிலையில் எனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. வயிற்றுக்கு உணவு வேண்டும். உடைகள் வாங்க பணம் வேண்டும்; அடுத்த இரண்டே நாட்களில் நான் பள்ளி செல்வதை நிறுத்திவிட்டு, அடுத்த கிராமத்தில் உள்ள கொல்லர் ஒருவரிடம் உதவியாளராக சேர்ந்தேன். ஐந்து நாட்கள் வேலை பார்த்தேன். இந்த விபரங்கள் மீனாட்சி டீச்சர் அவர்களுக்கு எப்படியோ தெரிந்து விட்டது. அவர்கள் உடனடியாக என்னுடைய வீட்டை தேடி வந்து என்னுடைய தாயாரை சமாதானம் செய்தார். என்னை பள்ளிக்கு மீண்டும் அனுப்ப ஏற்பாடு செய்தார். வீட்டிற்கு வருமானம் வந்தாக வேண்டிய நிலையில், எனது தாயாருக்கு அடுத்த சிறிய நகரத்தில் உள்ள வேறு ஒரு பள்ளியில் சுகாதார பணியாளர் வேலையில் அமர்த்தினார். என்னுடைய தாயாரின் வருமானம் எங்கள் இருவருக்கும் போதுமானதாக இருந்தது. இப்படியாக நான் வளர்ந்தேன். நான் எப்போதும் அனைத்து பாடங்களிலும் முதல் மாணவனாகவே வருவேன். அனைத்து போட்டிகளிலும் கலந்து கொள்ளுவேன். பல பரிசுகள் பெற்று இருக்கிறேன். மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பல பெற்று என்னுடைய பள்ளிக்கு பெருமை சேர்த்து இருக்கிறேன்." "பள்ளி இறுதி தேர்வில் பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றது மட்டும் அல்லாமல், மாகாணத்தில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றதால், எனக்கு அரசின் பிரத்யேக சலுகை கிடைத்து கல்லூரி படிப்பையும் முடித்தேன். நாட்டின் தலைநகர் டெல்லியில் மத்திய அரசு அலுவலகத்தில் நான்கு வருடங்கள் வேலை பார்த்தேன். எனக்கு கலெக்டர் ஆகவேண்டும் என்ற ஆசையில் தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்று மாவட்ட ஆட்சியாளராக ஒரிஸ்ஸா மாகாணத்தில் உள்ள கட்டாக் என்ற மாவட்டத்தில் நான்கு வருடங்கள் பணியாற்றினேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு எனது சொந்த மாவட்டத்திற்கே நான் ஆட்சியாளராக வந்து சேர்ந்தேன்." "எனது சொந்த மாவட்டம் என்பதால், பழைய நண்பர்களை ஒன்று திரட்ட ஆரம்பித்தேன். அவர்களிடம் இருந்து பல தகவல்கள் பெற்றேன். அப்படியாக உங்கள் பள்ளி தமிழ் ஆசிரியர் ரங்கராஜன் மூலம் எனக்கு மீனாட்சி டீச்சரை பற்றிய தகவல்கள் கிடைத்தன. அவரை சந்திக்க வேண்டும் என்ற என்னுடைய ஆசையை தெரிவிக்கவும், கொடியேற்றும் வைபவத்திற்கு கண்டிப்பாக அவரை கூட்டிக்கொண்டு வருவதாக அவர் உறுதி அளித்தார். மேலும், சிதிலமடைந்த வீட்டில் சிரமங்களுக்கு மத்தியில் அவர் வசிப்பதாகவும் அவர் செய்திகள் சொன்னார்." "விரைவில் அதற்கான ஏற்பாடுகள் செய்து, முதியோர்களுக்கு தரப்படும் அரசு திட்டத்தின் அடிப்படையில், அவருக்கு ஒரு வீடு தருவதற்கும் ஏற்பாடுகள் முடிந்து வீடும் தயாராகிவிட்டது." மீனாட்சி டீச்சர் அன்று என்னுடைய தாயாரை சந்திக்கவில்லையென்றால், தற்போது நான் உங்கள் முன்பாக ஒரு மாவட்ட ஆட்சியாளராக நின்று கொண்டு இருக்க முடியாது. எங்கோ ஒரு குக்கிராமத்தில் கொல்லன் பட்டறையில் வேலை பார்த்துக்கொண்டோ அல்லது கொல்லராகவோ வேலை செய்து கொண்டு தான் இருந்திருப்பேன். என்னுடைய வளர்ச்சியில் தனிப்பட்ட அக்கறை எடுத்து வந்தவர் அவர். என்னை உருவாக்கிய அவருக்கு நான் செய்யவேண்டிய ஒரு கடமை ஒன்று உள்ளதாக எனது மனது சொல்லிக்கொண்டே இருந்தது. விதி வசத்தில் அந்த வாய்ப்பும் இன்று சரியாக அமைந்தது. அதை இன்று நான் உங்கள் அனைவரின் முன்பாக நிறைவேற்றி வைக்கிறேன்." "இந்த மேடையில் அவருக்கு வழங்கப்படும் வீட்டிற்கான அரசு ஆணையை உங்கள் முன்பாக வழங்குகிறேன்." அடுத்த நிமிடம், மீனாட்சி அவர்களிடம் அரசு ஆணை ஒன்றை ராஜசேகர் தர, கூடியிருந்த அனைவரும் கரகோஷம் செய்து மகிழ்ந்தனர். அங்கு குழுமியிருந்த ஆசிரிய பெருமக்கள், மீனாட்சி அவர்களுக்கு கிடைத்த பெருமை தங்களுக்கு கிடைத்த பெருமையாக நினைத்து மகிழ்ச்சியடைந்தனர். ஒரு சிலர் ஆனந்த கண்ணீரும் வடித்தனர். ஆனந்த கண்ணீருடன், ஆணையை பெற்றுக்கொண்ட மீனாட்சி, ராஜசேகரின் இரு கைகளையும் பிடித்து தன்னுடைய கண்களில் ஒற்றிக்கொண்டு அவருக்கு ஆசிகள் வழங்கினார். ஒரு தாய் தனது மகனை உச்சி முகர்ந்தது போன்றே இருந்தது அந்த தருணம். அதே நேரத்தில், பட்டொளி வீசி பறந்து கொண்டு இருந்த தேசிய கொடியில் ஒட்டிக்கொண்டு இருந்த ரோஜா மலர்களின் சிறு சிறு துகள்கள் அவர்கள் இருவரின் தலைகளை நனைத்து மகிழ்வித்து, தங்களுக்கு பெருமை தேடிக்கொண்டன என்பது அங்கு குழுமியிருந்த பலருக்கு தெரியவில்லை என்பது தான் உண்மை. ---::: :::---

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.